Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 22

பிலேயாமும் மோவாபின் அரசனும்

22 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்குக்குப் பயணம் செய்தனர். எரிகோவின் அருகிலுள்ள யோர்தானுக்கு இக்கரையில் தங்கள் முகாம்களை அமைத்தனர்.

2-3 சிப்போரின் மகனான பாலாக் எமோரியர்களுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் செய்த எல்லாவற்றையும் அறிந்திருந்தான். அதினால் மோவாபின் அரசன் மிகவும் பயந்தான். ஏனென்றால் இஸ்ரவேலரின் எண்ணிக்கை மிகுதியானது. மோவாப் உண்மையில் கலங்கிப்போனான்.

மீதியானின் தலைவர்களிடம் மோவாபின் அரசன், “பசுவானது ஒரு நிலத்தின் புல்லை மேய்ந்துபோடுவது போல, இஸ்ரவேல் ஜனங்களின் கூட்டம் நம்மைச் சுற்றிலும் உள்ளவற்றை அழித்துப்போடும்” என்றான்.

அந்த நேரத்தில் சிப்போரின் மகனான பாலாக் மோவாபின் அரசனாக இருந்தான். அவன் பேயோரின் மகனான பிலேயாமை அழைத்துவர சிலரை அனுப்பினான். பிலேயாம் ஐபிராத்து ஆற்றின் அருகிலுள்ள பெத்தூரில் இருந்தான். அவனது ஜனங்களும் அங்கேயே வாழ்ந்தனர். பாலாக்,

“எகிப்திலிருந்து புதிய ஜனங்கள் கூட்டம் வந்திருக்கிறது. முழு நாட்டையும் ஆக்கிரமித்துக்கொள்வது போன்று அவர்கள் எண்ணிக்கையில் மிகுதியாக இருக்கின்றனர். எங்களை அடுத்து அவர்கள் கூடாரங்களை அமைத்துக்கொண்டு முகாமிட்டிருக்கிறார்கள். நீ வந்து எனக்கு உதவிசெய். எங்களைவிட அவர்கள் பலமிக்கவர்களாக உள்ளனர். உனக்குப் பெரும் வல்லமை உண்டு என்பதை நான் அறிவேன். நீ ஒருவனை ஆசீர்வதித்தால் அவனுக்கு நன்மைகள் ஏற்படும். நீ ஒருவனுக்கு எதிராகப் பேசினால் அவனுக்குத் தீமை ஏற்படும். எனவே நீ வந்து அவர்களுக்கு எதிராகப் பேசு. ஒரு வேளை அதனால் நான் இவர்களைத் தோற்கடித்துவிடலாம். பின் அவர்களை இந்நாட்டைவிட்டுத் துரத்திவிடலாம்” என்று செய்தி அனுப்பினான்.

மோவாப் மற்றும் மீதியானின் மூப்பர்கள் பிலேயாமிடம் பேசச் சென்றார்கள். அவனது சேவைக்குப் பரிசுக் கொடுக்கப் பணமும் கொண்டு சென்றார்கள். அவர்கள் அங்கு பாலாக் சொன்னதைச் சொன்னார்கள்.

பிலேயாம் அவர்களிடம், “இரவு இங்கே தங்கியிருங்கள். நான் கர்த்தரோடு பேசி அவர் எனக்குச் சொல்லும் பதிலைக் கூறுவேன்” என்றான். எனவே அன்று இரவு மோவாபின் தலைவர்கள் பிலேயாமோடு அங்கே தங்கியிருந்தனர்.

தேவன் வந்து பிலேயாமிடம், “உன்னோடு இருக்கும் இவர்கள் யார்?” என்று கேட்டார்.

10 தேவனிடம் பிலேயாம், “இவர்கள் மோவாபின் அரசனும் சிப்போரின் மகனுமான பாலாக் அனுப்பிய தலைவர்கள். அவன் ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறான். 11 எகிப்திலிருந்து ஒரு புது ஜனங்கள் கூட்டம் இங்கே வந்திருக்கிறது. அவர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு முழுவதும் நிறைந்துவிட்டனர். அவர்களுக்கு எதிராக நீ வந்து பேசவேண்டும். பிறகு என்னால் அவர்களோடுச் சண்டையிட்டு அவர்களைத் தோற்கடித்து விரட்ட முடியும் என்று கருதுகிறான்” என்றான்.

12 ஆனால் தேவன் பிலேயாமிடம், “அவர்களோடு போக வேண்டாம். அந்த ஜனங்களுக்கு எதிராகப் பேசவேண்டாம். அவர்கள் எனது ஜனங்கள்” என்று கூறினார்.

13 மறுநாள் காலையில் எழுந்து பிலேயாம், பாலக்கின் தலைவர்களிடம், “உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்களோடு வர கர்த்தர் என்னை அனுமதிக்கவில்லை” என்றான்.

14 எனவே மோவாபின் தலைவர்கள் பாலாக்கிடம் திரும்பினார்கள், “எங்களோடு வர பிலேயாம் மறுத்துவிட்டான்” என்றனர்.

15 எனவே பாலாக் வேறு சில தலைவர்களை பிலேயாமிடம் அனுப்பினான். இந்த முறை அவன் போன முறையைவிட மிகுதியான ஆட்களை அனுப்பினான். இவர்கள் முன்பு சென்றவர்களைவிட முக்கியமானவர்கள். 16 இவர்கள் பிலேயாமிடம் போய், “சிப்போரின் மகனான பாலாக் சொன்னது இதுதான்: நீர் எங்களிடம் வர தடைப்பட வேண்டாம். 17 நான் கேட்டுக்கொண்டபடி நீ செய்தால் உனக்கு மிகுதியாகப் பணம் கொடுப்பேன். எனக்காக இங்கு வந்து இந்த ஜனங்களுக்கு எதிராகப் பேசு” என்று சொல்லச் சொன்னார் என்றனர்.

18 பிலேயாம் பாலாக்கின் அதிகாரிகளிடம், “என் தேவனாகிய கர்த்தருக்கு நான் அடிபணிய வேண்டும். அவரது ஆணைக்கு எதிராக நான் எதையும் செய்ய முடியாது. சிறியதோ பெரியதோ கர்த்தருடைய ஆணையில்லாமல் நான் எதையும் செய்யமாட்டேன். பாலாக் அரசன் ஒரு அழகான மாளிகையுடன் தங்கமும் வெள்ளியும் நிறைத்துக் கொடுப்பதாக இருந்தாலும் கர்த்தருடைய கட்டளைக்கு எதிராக நான் ஒன்றும் செய்யமாட்டேன். 19 ஆனாலும் நீங்களும் இன்று இரவு இங்கே தங்குங்கள்; இரவு நேரத்தில் கர்த்தர் என்ன சொல்கிறார் என்பதையும் அறிந்துகொள்வேன்” என்றான்.

20 அன்று இரவு தேவன் பிலேயாமை நோக்கி, “மீண்டும் தங்களோடு வரும்படி உன்னை அழைக்க அந்த மனிதர்கள் வந்திருக்கிறார்கள். நீ அவர்களோடு போகலாம். ஆனால் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்” என்றார்.

பிலேயாமும் அவனது கழுதையும்

21 மறுநாள் காலை பிலேயாம் எழுந்து தன் கழுதையைத் தயார் செய்துகொண்டு மோவாபின் தலைவர்களோடு சென்றான். 22 பிலேயாம் தனது கழுதைமேல் சவாரி செய்தான். அவனோடு இரு வேலைக்காரர்களும் இருந்தனர். பிலேயாம் பயணம் செய்யும்போது, தேவன் கோபங்கொண்டார். எனவே கர்த்தருடைய தூதன் சாலையில் பிலேயாமின் முன்னால் நின்றான். தேவதூதன் பிலேயாமைத் தடுத்து நிறுத்தப் போனான்.

23 பிலேயாமின் கழுதை கர்த்தருடைய தூதன் சாலையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது. அத்தேவதூதன் தன் கையில் வாள் ஒன்றை வைத்திருந்தான். எனவே கழுதை சாலையிலிருந்து திரும்பி வயலில் இறங்கியது. பிலேயாமால் தேவதூதனைக் காணமுடியவில்லை; எனவே அவன் கழுதை மீது மிகுந்த கோபங்கொண்டான். அவன் கழுதையை அடித்து சாலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தினான்.

24 பிறகு கர்த்தருடைய தூதன் சாலை குறுகலாகும் இடத்தில் நின்றான். இது இரண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே உள்ள இடம். சாலையின் இரு பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன. 25 மீண்டும் அந்தக் கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. எனவே ஒரு சுவரை ஒட்டி நெருக்கமாகச் சென்றது. இதனால் பிலேயாமின் கால் சுவரோடு தேய்த்து உரசியது. ஆகையால் பிலேயாம் மீண்டும் கழுதையை அடித்தான்.

26 பிறகு கர்த்தருடைய தூதன் இன்னொரு இடத்தில் நின்றான். இது சாலை குறுகலாகும் இன்னொரு இடம். தேவதூதனைச் சுற்றிக்கொண்டு செல்ல சாலையில் போதுமான இடம் இல்லை. அந்தக் கழுதையால் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்ப முடியவில்லை. 27 கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. எனவே, கழுதை பிலேயாம் தன்மேல் இருக்கும்போதே தரையில் படுத்துவிட்டது. இதனால் பிலேயாமுக்கு கழுதை மேல் மிகுந்த கோபம் வந்தது. எனவே அதனைத் தனது கைத்தடியால் அடித்தான்.

28 பிறகு கர்த்தர் கழுதையைப் பேசுமாறு செய்தார். அது பிலேயாமிடம், “என் மீது ஏன் கோபம் கொள்கிறீர்! நான் உமக்கு என்ன செய்துவிட்டேன்? என்னை மூன்று முறை அடித்துவிட்டீரே!” என்றது.

29 பிலேயாம் கழுதையிடம், “என்னை நீ முட்டாளாக்குகின்றாய். இப்போது என் கையில் ஒரு வாள் இருந்தால் இந்த வேளையிலேயே உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று பதில் சொன்னான்.

30 ஆனால் கழுதையோ பிலேயாமிடம், “பாரும்! நான் உமக்குச் சொந்தமான கழுதை! பல ஆண்டுகளாக என்மீது சவாரிசெய்து வருகிறீர். நான் இதற்கு முன்னால் இதுபோல் நடந்துகொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியும்!” என்றது.

இதற்குப் பிலேயாம், “இது உண்மைதான்” என்றான்.

31 பிறகு தேவன் பிலேயாமின் கண்களைத் திறந்து தூதனைப் பார்க்கும்படிச் செய்தார். கர்த்தருடைய தூதன் சாலையின் மேல் நின்றுகொண்டிருந்தான். அவன் தனது கையில் வாளை ஏந்தியிருந்தான். பிலேயாம் தரையில் பணிந்து வணங்கினான்.

32 பிறகு கர்த்தருடைய தூதன் பிலேயாமிடம், “ஏன் மூன்று முறை கழுதையை அடித்தாய்? நான்தான் உன்னைத் தடுத்து நிறுத்துவதற்காக வந்தேன். ஏனெனில் எனக்கு முன்பாக உனது போக்கு சீர்கெட்டதாய் இருக்கிறது. 33 ஆனால் சரியான நேரத்தில் கழுதை என்னைப் பார்த்து என்னிடமிருந்து திரும்பிவிட்டது. இது மூன்றுமுறை நடைபெற்றது. கழுதை அவ்வாறு திரும்பாமல் இருந்திருந்தால் நான் அப்பொழுதே உன்னைக் கொன்றிருப்பேன். நான் உன் கழுதையை உயிர் பிழைக்க வைத்திருப்பேன்” என்றார்.

34 பிறகு பிலேயாம் கர்த்தருடைய தூதனிடம், “நான் பாவம் செய்திருக்கிறேன். நீர் சாலையில் நின்றுக்கொண்டிருந்ததை நான் அறிந்துகொள்ளவில்லை. நான் குற்றம் செய்திருந்தால் நான் திரும்பி வீட்டிற்குப் போகிறேன்” என்றான்.

35 பிறகு கர்த்தருடைய தூதன் பிலேயாமிடம், “இல்லை! நீ இந்த மனிதர்களோடு செல்லலாம். ஆனால் கவனமாக இரு. நான் எதைச் சொல்லச் சொல்லுகிறேனோ அதையே சொல்லவேண்டும்” என்றார். எனவே பிலேயாம் பாலாக் அனுப்பிய மனிதர்களோடு சென்றான்.

36 பிலேயாம் வருவதைப் பற்றி பாலாக் கேள்விப்பட்டான். எனவே பாலாக் அவனைச் சந்திப்பதற்குப் புறப்பட்டு ஆர்னோன் ஆற்றின் அருகிலுள்ள மோவாப்பின் நகரத்திற்குப் போனான். இது நாட்டின் வட எல்லையில் இருந்தது. 37 பாலாக் பிலேயாமை பார்த்தான். அவன் இவனிடம், “நான் வரச்சொல்லி முன்பே கேட்டேனே. அப்போது ஏன் வரவில்லை? இது மிக மிக முக்கியமானது என்று சொல்லி இருந்தேன். நீர் ஏன் என்னிடம் வரவில்லை? நான் உமக்கு மரியாதைத் தராமல் போய்விடுவேனா?” என்றான்.

38 பிலேயாம் அவனிடம் “நான் இப்போது இங்கே இருக்கிறேன். ஆனால் நீர் கேட்டபடி என்னால் உதவ முடியாமல் போகலாம். தேவனாகிய கர்த்தர் என்னிடம் எதைச் சொல்லச் சொல்கிறாரோ அதனையே நான் சொல்வேன்” என்றான்.

39 பிலேயாம் பாலாக்குடன் கீரியாத் ஊசோத்திற்குச் சென்றான். 40 பாலாக் சில ஆடுகளையும் மாடுகளையும் பலியாகக் கொடுத்தான். அவன் கொஞ்சம் இறைச்சியைப் பிலேயாமுக்கும் தன்னோடு இருந்த சில தலைவர்களுக்கும் கொடுத்தான்.

41 மறுநாள் காலையில் பாலாக் பிலேயாமை பமோத்பால் நகரத்தின் மேடுகளுக்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்து இஸ்ரவேல் பாளையங்களின் ஒரு பகுதியை அவர்களால் காண முடிந்தது.

சங்கீதம் 62-63

எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

62 என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது.
    என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது.
எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள்.
    ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
    உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
    பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.

எத்தனை காலம் என்னைத் தாக்குவீர்.
    நானோ சாய்ந்த சுவரைப் போலவும், வீழும் நிலையிலுள்ள வேலியைப் போலவும் இருக்கிறேன்.
மேன்மையான என் நிலையை எண்ணி
    அந்த ஜனங்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
    வெளிப்படையாக அவர்கள் என்னைப்பற்றி நல்லவற்றைப் பேசினாலும் இரகசியமாக என்னை சபிக்கிறார்கள்.

தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது.
    தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
தேவனே என் அரண்.
    தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
    உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது.
    அவர் எனக்குப் பலமான அரண்.
    தேவன் எனக்குப் பாதுகாவலான இடம்.
ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்!
    தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்!
    தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.
மனிதர்கள் உண்மையாகவே உதவ முடியாது.
    உண்மையான உதவிக்கு நீங்கள் அவர்களை நம்பமுடியாது.
தேவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் லேசான காற்றைப்போல்
    ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
10 கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள்.
    திருடுவதால் பொருளைப்பெற முடியுமென நினைக்காதீர்கள்.
நீங்கள் செல்வந்தரானால்
    அச்செல்வங்கள் உங்களுக்கு உதவுமென நம்பாதீர்கள்.
11 நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார்.
    வல்லமை தேவனிடமிருந்து வருகிறது.

12 என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது.
    ஒருவன் செய்யும் காரியங்களுக்கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.

யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய ஒரு பாடல்

63 தேவனே, நீரே என் தேவன்.
    நீர் எனக்கு மிகவும் தேவையானவர்.
நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று
    என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது.
உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன்.
    நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன்.
ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது.
    என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன்.
    உமது நாமத்தைக் கூறி ஜெபத்தோடு என் கைகளை உயர்த்துவேன்.
சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன்.
    மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும்.
என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன்.
    நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன்.
நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்!
    நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.
என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது.
    நீர் என் கைகளைப் பிடித்துக்கொள்கிறீர்.

சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்கள் தங்கள் கல்லறைக்குள்ளேபோவார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள்.
    அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.
11 ஆனால் அரசனோ அவரது தேவனோடு மகிழ்ச்சியாயிருப்பார்.
    அவருக்குக் கீழ்ப்படிவதாக உறுதி தந்த ஜனங்கள் தேவனைத் துதிப்பார்கள்.
    ஏனெனில் அவர் எல்லாப் பொய்யர்களையும் தோற்கடித்தார்.

ஏசாயா 11-12

சமாதானத்தின் அரசர் வந்துகொண்டிருக்கிறார்

11 ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து ஒரு குழந்தை துளிர் தோன்றி வளரத் தொடங்கியது. அந்தக் கிளையானது ஈசாயின் குடும்பத்தில் வேரிலிருந்து தோன்றி வளரும். கர்த்தருடைய ஆவி அந்தச் சிறு (பிள்ளையின்) துளிர்மேல் இருக்கும். ஆவியானவர் ஞானம், புரிந்துகொள்ளுதல், வழிநடத்துதல், வல்லமை போன்றவற்றைத் தருகிறார். ஆவியானவர் அந்த பிள்ளைக்கு கர்த்தரைத் தெரிந்துகொள்ளவும், அவரை மதிக்கவும் உதவுவார். இந்தப் பிள்ளை கர்த்தருக்கு மரியாதை கொடுக்கும். பிள்ளையை இது மகிழ்ச்சி உடையதாகச் செய்யும்.

அவர் தமது கண்கண்டபடி நியாயம்தீர்க்கமாட்டார். அவர் தமது காதில் கேட்டபடி தீர்ப்பு அளிக்கமாட்டார். - அவர் ஏழை ஜனங்களை நீதியுடனும் பொறுமையுடனும் நியாயம்தீர்ப்பார். இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களுக்குச் சரியாகத் தீர்ப்பு செய்து காரியங்களைச் செய்வார். அவர் ஜனங்களை அடிக்கவேண்டும் என்று முடிவு செய்தால், பிறகு அவர் கட்டளையிடுவார், அந்த ஜனங்கள் அடிக்கப்படுவார்கள். ஜனங்கள் மரிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தால், அவர் கட்டளையிட, பாவிகள் கொல்லப்படுவார்கள். நன்மையும் நீதியும் இந்தக் குழந்தைக்குப் பலத்தைக் கொடுக்கும். அவை அவருக்கு இடுப்பைச்சுற்றிக் கட்டப்படும் கச்சையைப்போல இருக்கும்.

அப்போது, ஓநாய்கள் ஆட்டுக்குட்டிகளோடு சமாதானமாய் வாழும், புலிகள் வெள்ளாட்டுக் குட்டிகளோடு சமாதானமாய் படுத்துக்கொள்ளும். கன்றுக்குட்டியும் இளஞ்சிங்கமும் காளையும் சமாதானமாக ஒரே இடத்தில் வாழும். ஒரு சிறு பிள்ளை அவைகளை வழிநடத்துவான். பசுக்களும் கரடியும் சமாதானமாக சேர்ந்து மேயும். அவற்றின் குட்டிகள் ஒன்றையொன்று காயப்படுத்தாமல் சேர்ந்து படுத்துக்கொள்ளும். சிங்கமானது, பசுவைப்போன்று புல்லைத் தின்னும். பாம்புகளும் கூட ஜனங்களைக் கடிக்காது. ஒரு குழந்தை நல்லபாம்பின் புற்றினருகில் விளையாட முடியும். ஒரு குழந்தை ஒரு விஷமிக்க பாம்பின் துளையில் கையை விடமுடியும்.

இவையனைத்தும் சமாதானத்தைக் காட்டும். ஒருவரும் மற்றவரைத் துன்புறுத்தமாட்டார்கள். எனது பரிசுத்தமான மலையிலுள்ள ஜனங்கள் பொருட்களை அழிக்க விரும்பமாட்டார்கள். ஏனென்றால், ஜனங்கள் உண்மையிலேயே கர்த்தரை அறிந்திருக்கின்றனர். கடல் நிறைய தண்ணீர் இருப்பது போன்று அவர்களிடம் கர்த்தரைப்பற்றிய அறிவு நிறைந்திருக்கும்.

10 அப்போது, ஈசாயின் குடும்பத்தில் இருந்து ஒருவர் வருவார். அவர் ஒரு கொடியைப்போல இருப்பார்.

“அக்கொடி” அனைத்து நாடுகளையும் காட்டி அவரைச் சுற்றிவரும். நாடுகளெல்லாம் தான் செய்ய வேண்டியதைப்பற்றி அவரிடம் கேட்கும். அவர் இருக்கின்ற இடமெல்லாம் மகிமை நிறைந்திருக்கும்.

11 அப்போது, என் ஆண்டவரான தேவன், மீண்டும் தமது கையை உயர்த்தி மீதியான ஜனங்களை அழைத்துக்கொள்வார். இதனை தேவன் இரண்டாம் முறையாகச் செய்கின்றார். (இவர்கள் தேவனுடைய ஜனங்கள். இவர்கள் அசீரியா, வட எகிப்து, தென் எகிப்து, எத்தியோப்பியா, ஏலாம், பாபிலோனியா, ஆமாத், மற்றும் தூர நாடுகளிலும் மீதியாயிருந்தவர்கள்). 12 தேவன் இந்தக் “கொடியை” அனைத்து ஜனங்களுக்கும் அடையாளமாக ஏற்றுவார். யூதா மற்றும் இஸ்ரவேலில் உள்ள ஜனங்கள் தம் நாட்டைவிட்டுப்போகும்படி பலவந்தப்படுத்தப்படுவார்கள். ஜனங்கள் பூமியில் உள்ள தூரநாடுகளுக்கெல்லாம் சிதறிப்போனார்கள். ஆனால் தேவன் அனைவரையும் ஒன்று சேர்ப்பார்.

13 அப்போது, எப்பிராயீம் யூதாவின் மீது பொறாமைகொள்ளாது. யூதாவில் எந்தப் பகைவரும் விடுபடமாட்டார்கள். யூதா எப்பிராயீமுக்கு எவ்விதத் துன்பமும் கொடுக்காது.

14 ஆனால் எப்பிராயீமும் யூதாவும் பெலிஸ்தர்களைத் தாக்குவார்கள். இந்த இரு நாடுகளும் சிறு மிருகங்களைப் பிடிக்கும் பறவைகளைப்போன்று சேர்ந்து பறக்கும். அவர்கள் இருவரும் கிழக்கு நாட்டு ஜனங்களின் ஐசுவரியத்தை கொள்ளையிடுவார்கள். எப்பிராயீமும் யூதாவும் ஏதோம், மோவாப் மற்றும் அம்மோன் ஜனங்களைக் கட்டுப்படுத்துவார்கள்.

15 கர்த்தர் கோபங்கொண்டு எகிப்திலுள்ள கடலை இரண்டாகப் பிளந்தார். இதுபோல, கர்த்தர் தனது கையை ஐபிராத்து ஆற்றின் மேல் அசைப்பார். அவர் ஆற்றை அடித்ததும் அது ஏழு சிறு ஆறுகளாகப் பிரியும். இந்தச் சிறு ஆறுகள் ஆழம் குறைந்தவை. இவற்றில் ஜனங்கள் தம் பாதரட்சைச் கால்களோடு எளிதாக நடந்துபோகலாம். 16 தேவனுடைய ஜனங்கள் அசீரியாவை விட்டுச் செல்ல ஒரு பாதை கிடைக்கும். இது தேவன் எகிப்தை விட்டு ஜனங்களை வெளியே கொண்டுவந்ததுபோல இருக்கும்.

தேவனைத் துதிக்கும் பாடல்

12 அப்போது நீ கூறுவாய்,
“கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்
    நீர் என் மீது கோபமாக இருந்தீர்.
ஆனால் இப்போது கோபமாக இருக்க வேண்டாம்!
    என் மீது உமது அன்பைக் காட்டும்”.
என்னை தேவன் காப்பாற்றுகிறார்.
    நான் அவரை நம்புகிறேன். நான் அஞ்சவில்லை.
அவர் என்னைக் காப்பாற்றுகிறார்.
கர்த்தராகிய யேகோவா எனது பெலம்.
    அவர் என்னைக் காப்பாற்றுகிறார்.
    நான் அவரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுகிறேன்.

உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள்.
    பிறகு நீ மகிழ்ச்சியாய் இருப்பாய்.
பிறகு நீ கூறுவாய்:
    “கர்த்தரைத் துதியுங்கள்! அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்
அவர் செய்தவற்றை அனைத்து ஜனங்களிடமும் கூறுங்கள்!”
கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்!
    ஏனென்றால், அவர் பெரிய செயல்களைச் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் தேவனுடைய செயல்களைக் குறித்த செய்தியைப் பரப்புங்கள்.
    எல்லா ஜனங்களும் இதனை அறியும்படி செய்யுங்கள்.
சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப்பற்றிச் சத்தமிடுங்கள்!
    இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்!

யாக்கோபு 5

சுய நலமிக்க பணக்காரர்கள் தண்டிக்கப்படுவர்

பணக்காரர்களே! கவனியுங்கள், கதறுங்கள், துக்கமாயிருங்கள். ஏனென்றால் பெரும் துன்பம் உங்களுக்கு வரப்போகிறது. உங்கள் செல்வம் அழுகியது, எதற்கும் பயனற்றது. உங்கள் ஆடைகள் செல்லரித்துப் போகும். உங்கள் தங்கமும் வெள்ளியும் துருப்பிடித்துப் போகும். அந்தத் துருவே நீங்கள் தவறானவர்கள் என்பதை நிரூபிக்கும். அது உங்கள் சரீரத்தை நெருப்பு போல எரித்துவிடும். உங்கள் கடைசி நாட்களில் செல்வத்தைச் சேர்த்தீர்கள். மக்கள் உங்கள் வயல்களில் வேலை செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் கூலி கொடுக்கவில்லை. அவர்கள் கூலிகளை நீங்கள் வைத்துக்கொண்டீர்கள். இப்போது அவர்கள் மீண்டும் உங்களைப் பார்த்து கூக்குரலிடுகிறார்கள். கூலிக்காரர்களின் கதறல்களை அனைத்து அதிகாரமுமுள்ள கர்த்தர் கேட்டார்.

பூமியில் உங்கள் வாழ்வானது செல்வமிக்கது. உங்கள் விருப்பத்தின்படி கிடைப்பதைக்கொண்டு திருப்தி அடைகிறீர்கள். உங்களை நீங்கள் கொழுக்க வைத்து வெட்டப்படப்போகிற மிருகங்களைப்போல் ஆகிறீர்கள். நல்ல மக்களுக்கு நீங்கள் இரக்கம் காட்டவில்லை. உங்களை எதிர்த்து நிற்காத நல்ல மக்களை நீங்கள் தண்டித்துக் கொலை செய்தீர்கள்.

பொறுமையாய் இருங்கள்

சகோதர சகோதரிகளே, பொறுமையாக இருங்கள். கர்த்தராகிய இயேசு வருவார். காலம் வரும்வரை பொறுமையாக இருங்கள். ஒரு விவசாயி தன் பயிர் வளர்ந்து அறுவடையாகும்வரை காத்திருக்கிறான். தன் பயிருக்காக வேண்டி முதல் மழைக்கும் இறுதி மழைக்கும் அவன் மிகப் பொறுமையாக காத்திருக்கிறான். நீங்களும் கூடப் பொறுமையாக இருக்க வேண்டும். நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். கர்த்தராகிய இயேசு சீக்கிரம் வருவார். சகோதர சகோதரிகளே, உங்களை நீங்களே குற்றவாளியாக நியாயம் தீர்த்துக்கொள்ளாதபடிக்கு ஒருவரை ஒருவர் எதிர்த்து புகார்கள் செய்வதை நிறுத்துங்கள். பாருங்கள், கதவுக்கு வெளியே நீதிபதி நின்றுகொண்டிருக்கிறார்.

10 துன்பப்படுதலுக்கும் பொறுமைக்கும் ஒரு உதாரணமாகக் கர்த்தரின் பெயரில் பேசிய தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். 11 சகித்துக்கொண்டதால் இப்போது நாம் அவர்களை “ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று அழைக்கிறோம். நீங்கள் யோபின் பொறுமையைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவரது அனைத்துத் துன்பங்களுக்கும் பிறகு கர்த்தர் உதவினார். இது, தேவன் கிருபையும், இரக்கமும் உடையவர் என்பதைக் காட்டும்.

நீங்கள் சொல்வதைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

12 எனது சகோதர சகோதரிகளே, இது மிகவும் முக்கியமானது. பரலோகம் அல்லது பூமியின் பெயரைப் பயன்படுத்தி ஆணையிடுவதை நிறுத்துங்கள். உண்மையில் எந்த ஆணையுமே இடாதீர்கள். உங்கள் “ஆமாம்” என்பது “ஆமாமாகவே” இருக்க வேண்டும். மேலும் உங்கள் “இல்லை” என்பது “இல்லை” யாகவே இருக்கவேண்டும். நீங்கள் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு இதை மட்டுமே சொல்லுங்கள்.

பிரார்த்தனையின் அதிகாரம்

13 உங்களில் எவருக்கேனும் துன்பம் வந்தால் அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களில் யாரேனும் மகிழ்ச்சியுடன் இருந்தால் அவர்கள் பாடவேண்டும். 14 உங்களில் எவருக்கேனும் நோய் வந்தால் ஆலயத்தில் உள்ள மூப்பர்களை அழைக்கவேண்டும். அவர்கள் கர்த்தரின் பெயரால் எண்ணெயைத் தடவிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 15 விசுவாசத்தோடு செய்யப்படுகிற எந்தப் பிரார்த்தனையும் பயன் தரும். அது நோயைக் குணமாக்கும்.

16 நீங்கள் செய்த தவறுகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு ஒருவருக்காக ஒருவர் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் தேவன் குணப்படுத்துவார். நல்லவர்கள் பிரார்த்தனை செய்தால் நன்மைகள் நிகழும். 17 எலியாவும் நம்மைப்போன்ற ஒருவன் தான். மழை பெய்யக் கூடாது என்று பிரார்த்தனை செய்தான். எனவே மூன்றரை வருடங்களாக மழை இல்லாமல் இருந்தது. மழை வேண்டுமென எலியா பிரார்த்தனை செய்தான். 18 எலியாவின் பிரார்த்தனைக்குப்பின் மழை வந்தது. பயிர்கள் செழித்தன.

ஆன்மாவைக் காப்பாற்றுதல்

19 எனது சகோதர சகோதரிகளே, உங்களில் ஒருவன் உண்மையிலிருந்து விலகிப் போகலாம். இன்னொருவன் அவனைத் திரும்பவும் அழைத்து வரலாம். 20 இதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். தவறான வழியிலிருந்து ஒரு பாவியைத் திருப்புகிற ஒருவன் அம்மனிதனின் ஆன்மாவைக் காப்பாற்றிப் பல பாவங்களை அழிக்கிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center