M’Cheyne Bible Reading Plan
கானானியர்களோடு போர்
21 கானானிய ஜனங்களுக்கு ஆராத் என்ற அரசன் இருந்தான். அவன் பாலைவனத்தின் தென் பகுதியில் குடி இருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அத்தாரீம் சாலைவழியாக வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டான். உடனே அவன் படைவீரர்களை அனுப்பி இஸ்ரவேல் ஜனங்களைத் தாக்கினான். ஆராத் சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தான். 2 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடம் ஒரு விசேஷ வேண்டுதல் செய்தனர். அவர்கள், “கர்த்தாவே! இந்த ஜனங்களை வெல்ல எங்களுக்கு உதவும். நீர் இவ்வாறு செய்தால் அவர்களின் நகரங்களை உமக்கு அர்ப்பணிப்போம். நாங்கள் அவர்களை முழுமையாக அழித்துவிடுவோம்” என்று கூறினார்கள்.
3 இஸ்ரவேல் ஜனங்களின் வேண்டுதலை கர்த்தர் கேட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை வெல்வதற்கு கர்த்தர் உதவி செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை முழுமையாக அழித்தனர். அவர்களின் நகரங்களும் அழிக்கப்பட்டன. எனவே அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டனர்.
வெண்கலப் பாம்பு
4 ஓர் என்ற மலையை விட்டு இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பயணம் செய்தனர். ஏதோம் நாட்டைச் சுற்றிக்கொண்டு அவர்கள் சென்றனர். இதனால் ஜனங்கள் பொறுமை இழந்தனர். 5 அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் எதிராக முறுமுறுக்கத் துவங்கினார்கள். அவர்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்கள் இங்கே பாலைவனத்தில் மரித்துக்கொண்டிருக்கிறோம்! உண்ண அப்பம் இல்லை! தண்ணீர் இல்லை! இந்த அற்பமான உணவை நாங்கள் வெறுக்கிறோம்!” என்றனர்.
6 எனவே, கர்த்தர் விஷமுள்ள பாம்புகளை அனுப்பினார். அவை அவர்களைக் கடித்தன. அநேக இஸ்ரவேல் ஜனங்கள் மரணமடைந்தனர். 7 ஜனங்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் உமக்கும் கர்த்தருக்கும் எதிராகப் பேசும்போதெல்லாம் பாவம் செய்வதாக அறிகிறோம். கர்த்தரிடம் ஜெபம் செய்யும். இப்பாம்புகள் அகலும்படி கர்த்தரிடம் வேண்டுதல் செய்யும்” என்றனர். மோசே ஜனங்களுக்காக வேண்டினான்.
8 கர்த்தர் மோசேயிடம், “வெண்கலத்தால் ஒரு பாம்பு செய்து அதனைக் கம்பத்தின் மேல் வை. பாம்பால் கடிக்கப்பட்ட எவனும் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்தால் மரிக்கமாட்டான்” என்றார். 9 எனவே மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டுபண்ணி அதனைக் கம்பத்தில் வைத்தான். பாம்பால் கடிக்கப்பட்டவர்கள் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்து உயிர்பிழைத்தனர்.
மோவாபுக்குப் பயணம்
10 இஸ்ரவேல் ஜனங்கள் அவ்விடத்தை விட்டுப் பயணம் செய்து ஓபோத்தில் கூடாரம் போட்டனர். 11 பிறகு அவர்கள் அதனை விட்டுப்போய் மோவாபுக்குக் கிழக்கே பாலைவனத்தில் அய் அபாரீமினில் தங்கினார்கள். 12 பிறகு அங்கிருந்து பயணம் செய்து சாரோத் பள்ளத்தாக்கில் கூடாரம் போட்டனர். 13 பின்னர் அங்கிருந்து சென்று, அர்னோன் ஆற்றைக் கடந்து கூடாரம் போட்டனர், இந்த ஆறு அம்மோனியர்களின் எல்லையிலிருந்து புறப்படுகிறது. அந்தப் பள்ளத்தாக்கானது மோவாபியருக்கும் எமோரியருக்கும் எல்லையாக இருந்தது. 14 இதனால்தான் கர்த்தருடைய யுத்தங்கள் என்ற நூலில்:
“சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றின் பள்ளத்தாக்குகளும் 15 ஓர் எனும் இடத்துக்குப் போகும் பள்ளத்தாக்குகளும், மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது” என்று எழுதப்பட்டிருக்கிறது.
16 இஸ்ரவேல் ஜனங்கள் அந்த இடத்தையும் விட்டு பேயீருக்குப் போனார்கள். அங்கே கிணறு இருந்தது. இந்த இடத்தில்தான் கர்த்தர் மோசேயிடம், “ஜனங்களை இங்கே கூட்டிவா அவர்களுக்கு தண்ணீர் வழங்குவேன்” என்றார்.
17 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் இந்தப் பாடலைப் பாடினார்கள்:
“கிணறு, தண்ணீரால் நிரம்பி வழிகிறது!
இதைப் பற்றி பாடுங்கள்!
18 பெரிய மனிதர்கள் இந்தக் கிணற்றைத் தோண்டினார்கள்.
முக்கிய தலைவர்களால் தோண்டப்பட்ட கிணறு இது.
அவர்கள் தங்கள் ஆயுதங்களாலும் தடிகளாலும் அதைத் தோண்டினார்கள்.
பாலைவனத்தில் இது ஒரு அன்பளிப்பாகும்.”
எனவே, அவர்கள் அந்தக் கிணற்றை “மாத்தனா” என்று அழைத்தனர். 19 ஜனங்கள் மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், பிறகு நகாலியேலிலிருந்து பாமோத்துக்குப் பயணம் செய்தனர். 20 ஜனங்கள் பாமோத்திலிருந்து மேவாப் பள்ளத்தாக்குக்குப் பயணம் செய்தனர். அங்கே பிஸ்கா மலை உச்சியானது பாலைவனத்துக்கு மேலே தெரிந்தது.
சீகோனும் ஓகும்
21 இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியரின் அரசனாகிய, சீகோனிடம் சில மனிதர்களை அனுப்பினர். அவர்கள் அரசனிடம்,
22 “உங்கள் நாட்டின் வழியாகப் பயணம் செய்ய அனுமதி தாருங்கள். நாங்கள் வயல் வழியாகவோ திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம். உங்கள் கிணறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமாட்டோம். நாங்கள் ராஜபாதையின் வழியாக மட்டுமே செல்வோம். உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை நாங்கள் சாலையிலேயே தங்குவோம்” என்றனர்.
23 ஆனால் சீகோன் அரசனோ, இஸ்ரவேல் ஜனங்களைத் தன் நாட்டின் வழியாகப் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. அந்த அரசன் தன் படைகளைத் திரட்டி பாலை வனத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போரிடப் புறப்பட்டான். யாகாஸ் எனும் இடத்தில் அவன் இஸ்ரவேல் ஜனங்களோடு போரிட்டான்.
24 இஸ்ரவேல் ஜனங்கள் அந்த அரசனைக் கொன்றனர். பிறகு அவர்கள் அவனுடைய நாட்டை அர்னோன் நதி முதல் யாப்போக் நதிவரை எடுத்துக்கொண்டனர். அவர்கள் எடுத்துக்கொண்ட நாடானது அன்று வரை அம்மோனியர்களின் எல்லையாக இருந்தது. அம்மோனிய ஜனங்களால் பலமாக பாதுகாக்கப்பட்டதால் அவர்கள் எல்லை வரை நிறுத்திக்கொண்டார்கள். 25 இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியரின் அனைத்து நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டு அதில் வாழத் துவங்கினார்கள். அவர்கள் எஸ்போன் நகரத்தையும் இன்னும் பல நகரங்களையும்கூட வென்றனர். 26 எஸ்போன் நகரத்தில்தான் எமோரியரின் அரசனான சீகோன் வசித்து வந்தான். கடந்த காலத்தில் சீகோன், மோவாப் அரசனோடு சண்டை செய்திருக்கிறான். சீகோன் அர்னோன் ஆறுவரையுள்ள நிலத்தைக் கைப்பற்றிக்கொண்டான். 27 இதனால்தான் பாடகர்கள் கீழ்க் கண்டவாறு பாடினார்கள்:
“எஸ்போனே, நீ மீண்டும் கட்டப்பட வேண்டும்!
சீகோனின் நகரமும் பலமுள்ளதாக வேண்டும்.
28 எஸ்போனில் நெருப்பு தோன்றியது.
சீகோனின் நகரத்திலும் நெருப்பு தோன்றியது.
மோவாபிலுள்ள ஒரு நகரத்தையும் நெருப்பு அழித்தது.
அது அர்னோன் ஆற்றுக்கு மேலேயுள்ள குன்றுகளையும் எரித்தது.
29 மோவாபே உனக்கு ஐயோ!
கேமோஷ் ஜனங்களை இழந்தாய்.
அவனது மகன்கள் ஓடிவிட்டனர்.
அவனது மகள்கள் எமோரிய அரசனான சீகோனால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
30 ஆனால் நாங்கள் அத்தகைய எமோரியர்களைத் தோற்கடித்தோம்.
அவர்களின் நகரங்களை அழித்தோம். எஸ்போன் முதல் திபோன்வரையும் மேதேபாவுக்கு அருகிலுள்ள நோப்பாவரை அழித்தோம்”
31 பின்னர், இஸ்ரவேல் ஜனங்கள், எமோரியரின் நாட்டில் தங்கள் முகாம்களை அமைத்தனர்.
32 மோசே யாசேர் பட்டணத்தைப் பார்வையிடும்படி சிலரை அனுப்பி வைத்தான். மோசே இவ்வாறு செய்தபிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள சிறு பட்டணங்களையும் கைப்பற்றினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியர்களை விரட்டியடித்தனர்.
33 பிறகு அவர்கள் பாசானுக்குப் போகும் சாலையில் பயணம் செய்தனர். பாசானின் அரசனான ஓக் என்பவன் தனது படைகளோடு இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்து வந்து, எத்ரே என்னும் இடத்தில் அவன் இவர்களோடு சண்டையிட்டான்.
34 ஆனால் கர்த்தர் மோசேயிடம், “அந்த அரசனுக்குப் பயப்பட வேண்டாம். அவர்களைத் தோற்கடிக்கும்படி செய்வேன். நீங்கள் அவனது படைகளையும், நாட்டையும் கைப்பற்றிக்கொள்வீர்கள். எஸ்போனில் இருந்த எமோரியரின் அரசனான சீகோனுக்கு நீங்கள் செய்தது போன்று இங்கேயும் செய்வீர்கள்” என்றார்.
35 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் ஓக் அரசனையும் அவனது படைகளையும் தோற்கடித்து, அவனையும் அவனது பிள்ளைகளையும் படைகளையும் கொன்றதுடன் அவனது நாட்டையும் கைப்பற்றிக்கொண்டனர்.
“உடன்படிக்கையின் லில்லி” என்ற பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த பாடல். இது போதிப்பதற்குரியது. தாவீது ஆராம் நகராயீம், ஆராம் சோபா ஆகிய நாட்டினரோடு யுத்தம் பண்ணிய காலத்தில், யோவாப் திரும்பிவந்து 12,000 ஏதோமிய வீரர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வெட்டிக் கொன்றபோது பாடியது.
60 தேவனே, எங்களோடு சினங்கொண்டீர், எனவே எங்களை நிராகரித்து அழித்தீர்.
தயவாய் எங்களிடம் திரும்பி வாரும்.
2 நீர் பூமியை அசைத்து அதைப் பிளக்கப் பண்ணினீர்.
நம் உலகம் பிரிந்து விழுந்தது.
அருள் கூர்ந்து அவற்றை ஒன்றாக இணைத்து விடும்.
3 நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர்.
நாங்களோ தள்ளாடி விழுகின்ற குடிவெறியர்களைப் போலானோம்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்களை நீர் எச்சரித்தீர்.
அவர்கள் இப்போது பகைவனிடமிருந்து தப்பிச்செல்ல முடியும்.
5 உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி எங்களைக் காப்பாற்றும்!
என் ஜெபத்திற்குப் பதில் தாரும், நீர் நேசிக்கிற ஜனங்களைக் காப்பாற்றும்.
6 தேவன் அவரது ஆலயத்தில் பேசினார்:
“நான் யுத்தத்தில் வென்று, அவ்வெற்றியால் மகிழ்வேன்!
இந்நாட்டை எனது ஜனங்களோடு பகிர்ந்துகொள்வேன்.
அவர்களுக்கு சீகேமைக் கொடுப்பேன்.
அவர்களுக்கு சுக்கோத் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.
7 கீலேயாத்தும், மனாசேயும் என்னுடையவை.
எப்பிராயீம் எனது தலைக்குப் பெலன்.
யூதா என் நியாயத்தின் கோல்.
8 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்.
ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை.
நான் பெலிஸ்தரை வென்று என் வெற்றியை முழக்கமிடுவேன்!”
9-10 தேவனே நீர் எங்களை விட்டு விலகினீர்!
வலிய, பாதுகாவலான நகரத்திற்குள் யார் என்னை அழைத்துச் செல்வார்?
ஏதோமிற்கு எதிராகப் போர் செய்ய யார் என்னை வழி நடத்துவார்?
தேவனே, நீர் மட்டுமே எனக்கு உதவக்கூடும்.
ஆனால் நீரோ எங்களை விட்டு விலகினீர்!
நீர் எங்கள் சேனையோடு செல்லவில்லை.
11 தேவனே, எங்கள் பகைவரை வெல்ல எங்களுக்கு உதவும்!
மனிதர்கள் எங்களுக்கு உதவ முடியாது!
12 தேவன் மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும்.
தேவன் எங்கள் பகைவர்களை வெல்ல முடியும்.
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
61 தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும்.
என் ஜெபத்தைக் கேளும்.
2 நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன்.
எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.
3 நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்!
நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம்.
4 நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன்.
நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.
5 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர்.
உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும்.
6 அரசனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும்.
அவர் என்றென்றும் வாழட்டும்!
7 அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்!
உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
8 நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன்.
நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.
G o d W ill P u n is h A s s y ria’s P rid e
5 தேவன், நான் அசீரியாவை ஒரு தடியைப்போன்று பயன்படுத்துவேன். கோபத்தில் நான் இஸ்ரவேலைத் தண்டிக்க அசீரியாவைப் பயன்படுத்துவேன். 6 நான் அசீரியாவை அனுப்பி தீமை செய்கிற என் ஜனங்களுக்கு எதிராகப்போராடச் சொல்லுவேன். நான் அந்த ஜனங்கள் மேல் கோபமாக இருக்கிறேன். அவர்களை எதிர்த்துப்போரிடுமாறு அசீரியாவிற்குக் கட்டளையிட்டேன். அசீரியா அவர்களைத் தோற்கடிக்கும். அவர்களது செல்வங்களை அசீரியா எடுத்துக்கொள்ளும். இஸ்ரவேல் அசீரியாவிற்கு மிதிக்கப்படுகிற அழுக்கைப்போலிருக்கும்.
7 “ஆனால் நான்தான் அதனைக் பயன்படுத்துகிறேன் என்பது அசீரியாவிற்குத் தெரியாது. எனக்கு அது ஒரு கருவி என்பது அசீரியாவிற்கு புரியாது. மற்றவர்களை அழிக்கவேண்டும் என்று மட்டுமே அசீரியா விரும்புகிறது. அசீரியா பல நாடுகளை அழிக்கவேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறது. 8 அசீரியா தனக்குள், ‘எனது தலைவர்களெல்லாம் அரசர்களைப்போன்றவர்கள்!’ 9 கல்னோ நகரமானது கர்கேமிசைப்போன்றது. ஆமாத் நகர் அர்பாத்தை போன்றது. சமாரியா தமஸ்குவைப்போன்றது. 10 நான் அந்தத் தீமையான அரசுகளைத் தோற்கடித்தேன், இப்போது அவற்றை நான் கட்டுப்படுத்துகிறேன். அவர்களால் தொழுதுகொள்ளப்படுகிற விக்கிரகங்கள் எருசலேம் மற்றும் சமாரியாவில் உள்ள விக்கிரகங்களைவிட எண்ணிக்கையில் மிகுந்தவை. 11 நான் சமாரியாவையும் அதிலுள்ள விக்கிரகங்களையும் தோற்கடித்தேன். நான் எருசலேமையும் அந்த ஜனங்கள் செய்த விக்கிரகங்களையும் தோற்கடிப்பேன் என்றனர்” என்பார்.
12 எனது ஆண்டவர், எருசலேமில் சீயோன் மலையிலும் செய்யவேண்டுமென்று திட்டமிட்டவற்றைச் செய்து முடிப்பார். பிறகு கர்த்தர் அசீரியாவைத் தண்டிப்பார். அசீரியாவின் அரசன் வீண் பெருமைகொண்டவன். அவனது பெருமை அவனைப் பல தீய செயல்களைச் செய்ய வைத்தது. எனவே, தேவன் அவனைத் தண்டிப்பார்.
13 அசீரியாவின் அரசன், “நான் ஞானமுள்ளவன். எனது சொந்த ஞானத்தாலும் பெலத்தாலும் நான் பல பெரியக் காரியங்களைச் செய்திருக்கிறேன். நான் பல நாடுகளைத் தோற்கடித்துள்ளேன். நான் அவற்றின் செல்வங்களைப் பறித்துள்ளேன். அங்குள்ள ஜனங்களை நான் அடிமைகளாக எடுத்துள்ளேன். நான் மிகவும் பெலமுள்ளவன். 14 எனது சொந்தக் கைகளால் அனைத்து ஜனங்களின் செல்வங்களையும் ஒருவன் ஒரு பறவையின் முட்டைகளையெல்லாம், எடுத்துக்கொள்வதுபோல் எடுத்துக்கொண்டேன். பறவை தன் கூட்டையும் முட்டைகளையும் விட்டுவிட்டுப்போகும். அக்கூட்டைக் காப்பாற்ற எதுவுமில்லை. எந்தப் பறவையும் தன் அலகாலும் இறக்கைகளாலும் எதிர்த்துப்போரிடாது. எனவே, ஜனங்கள் முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அதைப்போலவே, பூமியில் உள்ள ஜனங்களையெல்லாம் நான் எடுத்துக்கொள்வதை, எவரும் தடுக்க முடியாது” என்றார்.
15 ஒரு கோடரி அதைப் பயன்படுத்தி வெட்டுகிற வனைவிடச் சிறந்ததல்ல. அரிவாளானது அதை வைத்திருப்பவனைவிடச் சிறந்ததல்ல. ஆனால் அசீரியாவோ தன்னை தேவனைவிட முக்கியமானதாகவும் பெலமுடையதாகவும் நினைக்கிறது. தடியானது தன்னைப் பயன்படுத்தி தண்டிப்பவனைவிட பெலமுள்ளதாகவும், முக்கியமானதாகவும் நினைப்பது போன்றதாகும். 16 அசீரியா தன்னைப் பெரிதாக நினைத்துகொள்ளும். ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவிற்கு எதிராக மிகப் பயங்கரமான நோயை அனுப்புவார். நோயுற்றவன் தன் எடையை இழப்பது போன்று அசீரியா தனது செல்வத்தையும் பெலத்தையும் இழக்கும். பிறகு அசீரியாவின் மகிமையும் அழியும். எல்லாம் அழியும்வரை நெருப்பு எரிவதுபோல் அது இருக்கும். 17 இஸ்ரவேலின் வெளிச்சமானவர் (தேவன்) ஒரு நெருப்பைப்போன்றவர். பரிசுத்தமானவர் ஜுவாலையைப்போன்றவர். அது ஒரு நெருப்பைப்போன்று முதலில் முட்களையும் நெருஞ்சிகளையும் எரிக்கும். 18 பிறகு, அது பெரிய மரங்களையும், திராட்சைச் தோட்டங்களையும் எரிக்கும், இறுதியாக, ஜனங்கள் உட்பட எல்லாமே அழிக்கப்படும். தேவன் அசீரியாவை அழிக்கும்போது அப்படி இருக்கும். அசீரியா அழுகிய தடியைபோன்றிருக்கும். 19 காட்டில் சில மரங்கள் மட்டும் அவனுக்காக விடப்பட்டிருக்கும். ஒரு சிறுபிள்ளைகூட அவற்றை எண்ண முடியும்.
20 அப்போது, இஸ்ரவேலில் மீதியுள்ள ஜனங்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும் தம்மை அடித்தவர்களைச் சார்ந்திருக்கமாட்டார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தரை உண்மையாகவே சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வார்கள். 21 யாக்கோபின் குடும்பத்தில் மீதியுள்ள ஜனங்கள் மீண்டும் வல்லமைமிக்க தேவனைப் பின்பற்றுவார்கள்.
22 உங்கள் ஜனங்கள் மிகுதியானவர்கள். அவர்கள் கடற்கரையின் மணலைப்போன்றவர்கள். ஆனால் கொஞ்சம் ஜனங்களே தேவனிடம் திரும்பி வருவார்கள். ஆனால் முதலில் உனது நாடு அழிக்கப்படும். நாட்டை அழித்துவிடுவதாக தேவன் அறிவித்திருக்கிறார். பிறகே, நாட்டுக்கு நன்மை வந்து சேரும். இது ஆறு நிரம்பிவருவது போன்றது. 23 சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர், நிச்சயமாக இந்த நாட்டை அழிப்பார்.
24 எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “சீயோன் மலையில் வாழும் என் ஜனங்களே, அசீரியாவுக்கு அஞ்சவேண்டாம்! முன்பு உங்களை எகிப்து அடித்ததுபோன்று அது அடிக்கும். உங்களைக் காயப்படுத்த அசீரியா தடியைப் பயன்படுத்தியது போன்று அது இருக்கும். 25 ஆனால் சிறிது காலத்தில் என் கோபம் நிறுத்தப்படும். அசீரியா உங்களைப்போதுமான அளவிற்குத் தண்டித்துவிட்டது என்று நான் திருப்தி அடைவேன்” என்றார். 26 பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவை ஒரு சவுக்கால் அடிப்பார். கடந்த காலத்தில், கர்த்தர் மீதியானியர்களை காகத்தின் பாறை அருகில் தோற்கடித்தார். கர்த்தர் அசீரியாவைத் தாக்குவதுப்போல் இருக்கும். முன்பு கர்த்தர் எகிப்தைத் தண்டித்தார். அவர் தன் தடியைக் கடலுக்குமேல் ஓங்கினார். தம் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார். அது அசீரியாவிலிருந்து கர்த்தர் தம் ஜனங்களைக் காப்பாற்றியது போலவே இருக்கும்.
27 உங்களுக்கு அசீரியா துன்பங்களைக் கொண்டுவரும். அந்தத் துன்பங்கள் உங்கள் தோளில் நுகம் வைத்துத் தாங்குகிற அளவிற்கு இருக்கும். ஆனால், அந்த நுகமானது உங்கள் தோளில் இருந்து விலக்கப்படும். அந்நுகம் தேவனால் உடைக்கப்படும்.
இஸ்ரவேலுக்குள் அசீரியப் படைகள் நுழைதல்
28 படையானது “ஆயாத்து” அருகில் நுழையும். அப்படை மிக்ரோன்வரை கடந்துசெல்லும். அப்படை மிக்மாசிலே தன் உணவுப் பொருட்களை வைத்திருக்கும். 29 அப்படை ஆற்றை மாபாலில் “கடக்கும்” அது கேபாவில் தூங்கும். ராமா அதைப் பார்த்து அஞ்சும், சவுலின் ஊராகிய கிபியாவின் ஜனங்கள் ஓடிச்செல்வார்கள்.
30 பாத் காலீமே சத்தமிட்டு அழு! லாயீஷா கவனி. ஆனதோத்தே பதில் சொல்! 31 மத்மேனாலின் ஜனங்கள் ஓடிப்போனார்கள். கேபிமின் ஜனங்கள் ஒளிந்துகொண்டார்கள். 32 இந்நாளில், படையானது நோபிலே நிறுத்தப்படும். அப்படையானது எருசலேம் மலையான சீயோனுக்கு எதிராகப்போரிடத் தயார் செய்யும்.
33 கவனி! சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய எனது ஆண்டவர், அசீரியா என்னும் மரத்தை வெட்டித் தள்ளுவார். கர்த்தர் தமது பெரும் பலத்தால் இதனைச் செய்துமுடிப்பார். பெரிய முக்கிய ஜனங்கள் வெட்டி வீசப்படுவார்கள். அவர்கள் முக்கியம் இல்லாமல் போவார்கள். 34 கர்த்தர் அக்காட்டினைத் தனது கோடரியால் வெட்டுவார். லீபனோனில் உள்ள (முக்கிய ஜனங்களான) பெரிய மரங்களும் விழும்.
தேவனுக்கு உங்களையே கொடுங்கள்
4 உங்களுக்குள்ளே சண்டைகளும், வாக்குவாதங்களும் எங்கிருந்து வருகின்றன? உங்கள் சரீர உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்ளக் காரணமாக இருக்கிற உங்கள் உள் ஆசைகளில் இருந்து இவை வரவில்லையா? 2 நீங்கள் சிலவற்றை விரும்புகிறீர்கள். ஆனால் அவை கிடைப்பதில்லை. எனவே கொலைக்காரராகவும் பொறாமை உள்ளவர்களாகவும் மாறுகிறீர்கள். அப்படியும் நீங்கள் விரும்புகிறவற்றை அடைய முடியாமல் போகிறது. நீங்கள் அதனால் சண்டையும் சச்சரவும் செய்கிறீர்கள். நீங்கள் தேவனிடம் கேட்டுக்கொள்ளாததால் எதையும் பெறுவதில்லை. 3 மேலும் தவறான நோக்கங்களோடு நீங்கள் கேட்பதால், நீங்கள் கேட்கிறபோது எதையும் பெறுவதில்லை. சொந்த இன்பத்தில் திளைக்கும் வகையில் நீங்கள் கேட்கிறீர்கள்.
4 தன் கணவனின் நம்பிக்கைக்கு உரியவளாக இல்லாத ஒரு பெண்ணைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். உலகின் பகுதியாக இருக்க விரும்புதல் என்பது தேவனை வெறுப்பது போல் என்று நீங்கள் அறியமாட்டீர்களா? 5 அல்லது “தேவன் நமக்குள் வசிக்க வைத்த ஆவியானவர் நம்மில் வைராக்கியத்தோடு இருக்கிறார்” [a] என்று வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பொருளற்றது என நீங்கள் எண்ணுகிறீர்களா? 6 ஆனால் நம்மீதான அவரது கிருபை மிகவும் உயர்ந்தது. வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பது போல், “பெருமை பாராட்டுபவர்களுக்கு எதிராக தேவன் இருக்கிறார். ஆனால் அவர் பணிவான மக்களுக்குக் கிருபையை வழங்குகிறார்.” [b]
7 எனவே, உங்களையே தேவனிடம் ஒப்படையுங்கள். சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். அவன் ஓடிவிடுவான். 8 தேவனை நெருங்கி வாருங்கள். தேவன் உங்களிடம் நெருங்கி வருவார். நீங்கள் பாவிகள். எனவே, உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் தேவனையும் உலகத்தையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முயல்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 9 சோகமாயிருங்கள்; வருத்தமாய் இருங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாக மாற்றுங்கள். உங்கள் மகிழ்ச்சியை சோகமாக மாற்றுங்கள். 10 தேவனின் முன் பணிவோடு வணங்குங்கள். அவர் உங்களை உயர்த்துவார்.
நீங்கள் நியாயாதிபதி அல்ல
11 சகோதர சகோதரிகளே, தீயகாரியங்களைப் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். கிறிஸ்துவில் உன் சகோதரனை அவமானப்படுத்துவது அல்லது அவனை நியாயம் தீர்ப்பது என்பது அவன் பின்பற்றுகிற சட்டத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். உன் சகோதரனை நியாயம் தீர்த்தால் அவன் பின்பற்றிக்கொண்டிருந்த சட்டத்தையே நியாயம் தீர்க்கிறாய் என்பதே அதன் பொருளாகும். 12 சட்டத்தை உருவாக்கியவர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவர் தேவனாவார். சட்டத்தையே கேள்விக்குட்படுத்தினால், சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாக இருப்பதை விட்டு நீ நீதிபதியாகிறாய் என்பது பொருளாகும். சட்டத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் அதிகாரம் கொண்டவர் அவர் ஒருவரே. எனவே உன் சகோதரனையும் சகோதரியையும் நீ தான் நியாயம் தீர்க்க வேண்டும் என நினைக்க நீ யார்?
தேவன் உன் வாழ்வைத் தீர்மானிக்கட்டும்
13 “இன்று அல்லது நாளை நாம் ஒரு நகரத்திற்குப் போவோம். அங்கே ஓராண்டு தங்குவோம். வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று உங்களில் சிலர் கூறுகிறார்கள். கவனியுங்கள். 14 "நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை பனி புகையைப் போன்றது. கொஞ்ச காலத்திற்கே உங்களால் பார்க்கமுடியும். ஆனால் பிறகு மறைந்துவிடும் என்பதை நினைத்துப்பாருங்கள். 15 எனவே, "தேவனின் விருப்பம் இருந்தால் நாம் வாழ்வோம். இதை அல்லது அதைச் செய்வோம்" என்று எண்ணுங்கள். 16 ஆனால், இப்போது நீங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கிற பெரிய காரியங்கள் எல்லாவற்றைப்பற்றியும் பெருமை பாராட்டிக்கொள்கிறீர்கள். அது தவறாகும். 17 எனவே இப்போது கவனம் செலுத்துங்கள். ஒருவனுக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாமல் போனால், அவன் ஒரு பாவியாகிறான்.
2008 by World Bible Translation Center