Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 16

சில தலைவர்கள் மோசேக்கு எதிராகத் திரும்புதல்

16 கோராகு, தாத்தான், அபிராம், ஓன் ஆகியோர் மோசேக்கு எதிராகக் கிளம்பினார்கள். (கோராகு இத்சேயாரின் மகன். இத்சேயார் கோகாத்தின் மகன். கோகாத் லேவியின் மகன். தாத்தானும், அபிராமும் சகோதரர்கள். இவர்கள் எலியாபின் பிள்ளைகள். ஓன் பேலேத்தின் மகன். இவர்கள் அனைவரும் ரூபன் சந்ததியைச் சேர்ந்தவர்கள்.) இவர்கள் நான்கு பேரும் 250 இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்து மோசேக்கு எதிராக நின்றனர். இவர்கள் அனைவரும் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவர்கள். அவர்களை அனைவருக்கும் தெரியும். அவர்கள் அனைவரும் ஒரு குழுவாகி மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராகப் பேச வந்தனர். அவர்கள் மோசேயிடமும், ஆரோனிடமும் வந்து, “நீங்கள் அளவை மிஞ்சிப் போய் விட்டீர்கள். நீங்கள் தவறானவர்கள்! இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள். அவர்கள் மத்தியில் கர்த்தர் வாழ்கிறார்! கர்த்தரின் மற்ற ஜனங்களைவிட, நீங்கள் உங்களை மட்டும் மிக முக்கிமானவர்களாக்கிக் கொண்டீர்கள்” என்றனர்.

இதைக் கேள்விப்பட்டதும் மோசே தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கி, தான் பெருமை இல்லாதவன் என்பதை வெளிப்படுத்தினான். பிறகு மோசே, கோராகிடமும் அவனைப் பின்பற்றி வந்தவர்களிடமும்: “நாளை காலையில் கர்த்தர், தனது உண்மையான ஊழியன் யாரென்றும் உண்மையில் யார் பரிசுத்தமானவன் என்பதையும் காட்டுவார். அந்த மனிதனை அவர் தன்னருகில் அழைப்பார். அந்த மனிதனைத் தேர்ந்தெடுத்து, கர்த்தர் தன்னருகே சேர்த்துக்கொள்வார். எனவே, கோராகே! நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நாளை தூபகலசங்களில் நெருப்பை உண்டாக்கி, அதில் நறுமணப் பொருட்களையிட்டு, அவற்றை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வாருங்கள். உண்மையில் பரிசுத்தமானவன் யார் என்பதை கர்த்தர் தேர்ந்தெடுப்பார். லேவியர்களாகிய நீங்கள்தான் மிதமிஞ்சி போகிறீர்கள். நீங்கள் தவறானவர்கள்” என்றான்.

மேலும் மோசே கோராகிடம், “லேவியர்களாகிய நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் உங்களைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்திருப்பதால், நீங்கள் மேலும் மகிழ்ச்சி அடையவேண்டும், இல்லையா? மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டவர்கள். பரிசுத்தக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காக கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் தம்மருகே உங்களை வரச்செய்திருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனைக்கு நீங்கள் உதவ வேண்டும். இது போதாதா? 10 ஆசாரியர்களுக்கு உதவும்படி லேவியர்களாகிய உங்களை கர்த்தர் தன்னருகே அனுமதித்திருக்கிறார். ஆனால் நீங்கள் இப்போது ஆசாரியர்களாக மாறப் பார்க்கிறீர்கள். 11 நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் சேர்ந்து கர்த்தருக்கு எதிராக நிற்கிறீர்கள். ஆரோன் ஏதாவது தவறு செய்தானா? இல்லையே! அவ்வாறு இருக்க அவனுக்கு எதிராக ஏன் முறையிடுகிறீர்கள்?” என்றான்.

12 பிறகு மோசே எலியாப்பின் மகன்களான தாத்தானையும், அபிராமையும் அழைத்தான். ஆனால் அவர்களோ, “நாங்கள் வரமாட்டோம்! 13 நீர் ஏராளமான நன்மைகள் நிறைந்த நாட்டிலிருந்து வெளியேற்றி எங்களை கொல்வதற்காக இப்பாலைவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறீர். இப்போது எங்களை விட உம்மை திறமை மிக்கவராக காட்ட விரும்புகிறீர். 14 நாங்கள் ஏன் உம்மை பின்பற்ற வேண்டும்? தேவன் வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குள் நீர் எங்களைக் கொண்டு வரவில்லை. நீர் எங்களுக்கு வயல்களோ, திராட்சை தோட்டங்களோ கொடுக்கவில்லை. இந்த ஜனங்களையெல்லாம் உங்கள் அடிமைகளாக்குவதுதான் உங்கள் எண்ணமா? முடியாது. நாங்கள் அங்கே வரமாட்டோம்” என்றனர்.

15 எனவே, மோசே மிகவும் கோபம் கொண்டான். அவன் மீண்டும் கர்த்தரிடம், “நான் இந்த ஜனங்களுக்கு எதிராக எந்தத் தவறும் செய்யவில்லை. நான் அவர்களிடமிருந்து எதையும், ஏன் ஒரு கழுதையையும் கூட எடுத்துக்கொள்ளவில்லை! கர்த்தாவே, இவர்களது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளாதிரும்” என்றான்.

16 பிறகு மோசே கோராகிடம், “நாளை கர்த்தருக்கு முன்னால் நீயும், உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நிற்கவேண்டும். அங்கே உங்களோடு ஆரோனும் நிற்பான். 17 நீங்கள் ஒவ்வொருவரும் நறுமணப் பொருட்களை இடுகின்ற தூபகலசத்தைக் கொண்டு வந்து அவற்றை கர்த்தருக்கு முன்பு வைக்க வேண்டும். மூப்பர்களுக்குரிய 250 தூபகலசத்தோடு உனக்கும், ஆரோனுக்குமாக இரண்டு தூப கலசங்கள் இருக்கும்” என்றான்.

18 எனவே, ஒவ்வொரு தலைவரும் தனக்கென்று தூபகலசமும், அதில் இடுவதற்கு நறுமணப் பொருட்களும் கொண்டு வந்தனர். ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் அவர்கள் வந்து நின்றனர். மோசேயும் ஆரோனும் அங்கே நின்றனர். 19 கோராகும் அனைத்து ஜனங்களையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடுமாறு செய்தான். பிறகு அங்குள்ள ழுழு சபையினருக்கும் கர்த்தரின் மகிமை காணப்பட்டது.

20 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 21 “இந்த ஜனங்களிடமிருந்து விலகி நில்லுங்கள். அவர்களை இப்போதே அழிக்கப் போகிறேன்!” என்றார்.

22 ஆனால் மோசேயும், ஆரோனும் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கிக் கதறினார்கள், “தேவனே! நீர் மாம்சமான எல்லாருடைய ஆவிகளுக்கும் தேவன். ஒரே ஒருவன் மட்டும் பாவம் செய்தால் நீர் முழு சபையினர் மீதும் கோபங்கொள்ளலாமா?” என்றனர்.

23 பிறகு கர்த்தர் மோசேயிடம், 24 “கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப்போகும்படி ஜனங்களிடம் கூறு” என்று கேட்டுக்கொண்டார்.

25 மோசே எழுந்து, தாத்தானிடமும், அபிராமிடமும் சென்றான். எல்லா மூப்பர்களும் அவனைப் பின்பற்றினர். 26 மோசே, ஜனங்களை எச்சரித்து. “அந்தத் தீய மனிதர்களின் கூடாரங்களை விட்டு விலகிப் போங்கள், அவர்களுக்குரிய எதையும் தொடாதீர்கள், நீங்கள் இவ்வாறு செய்தால் அவர்களது பாவத்தின் காரணமாக அழிக்கப்படுவீர்கள்” என்றான்.

27 எனவே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப் போனார்கள். தாத்தானும் அபிராமும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே வந்து, தங்கள் கூடார வாசல்களில், தங்கள் மனைவி, குழந்தைகளோடு நின்று கொண்டிருந்தனர்.

28 பிறகு மோசே, “இவை எல்லாவற்றையும் செய்யுமாறு கர்த்தர் என்னை அனுப்பினார் என்று ஏற்கெனவே நான் கூறியுள்ளேன். இதுதான் அதற்கான சாட்சி. இவை எனது சொந்த எண்ணங்கள் அல்ல என்பதை இவை உங்களுக்குக் காட்டும். 29 இங்குள்ள மனிதர்கள் மரித்துப்போவார்கள். அவர்கள் சாதாரண ஜனங்களைப் போன்று மரிப்பார்களேயானால் பிறகு கர்த்தர் உண்மையில் என்னை அனுப்பவில்லை என்று தெரிந்துக்கொள்ளுங்கள். 30 ஆனால் கர்த்தர் இவர்களை அசாதாரணமான முறையில் மரிக்க செய்வாரானால், இவர்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். பூமி பிளந்து இந்த மனிதர்களை அப்படியே விழுங்கிவிடும். இதுதான் அதற்கு சான்று, இவர்கள் உயிரோடு தங்கள் கல்லறைக்குள் புதைக்கப்படுவார்கள். இவர்களுக்குரிய அனைத்தும், இவர்களோடேயே போய்ச்சேரும்” என்றான்.

31 மோசே இவற்றைச் சொல்லி முடித்ததும், அவர்கள் நின்ற இடத்தில் பூமி பிளந்தது. 32 பூமி தன் வாயைத் திறந்து, அவர்களை விழுங்கியது போல் இருந்தது. கோரகின் ஜனங்களும் அவர்களின் குடும்பங்களும் அவர்களுக்குரிய அனைத்தும் பூமிக்குள் சென்றுவிட்டன. 33 அவர்கள் தங்கள் கல்லறைக்குள் உயிரோடு சென்றனர். அவர்களுக்குரிய பொருட்களும், அவர்களோடு சென்றன. பிறகு பூமி மூடிக்கொண்டது. அவர்கள் முகாமிலிருந்து மூடப்பட்டு மடிந்தனர்!

34 இஸ்ரவேல் ஜனங்கள் அழிந்து போனவர்களின் அழுகுரல்களைக் கேட்டனர், அவர்கள் பல திசைகளிலும் ஓடிப்போய், “இந்தப் பூமி எங்களையும் விழுங்கிக் கொன்றுவிடும்” என்று கதறினர்.

35 பிறகு கர்த்தரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபதீபம் காட்டிய 250 தலைவர்களையும் அழித்துப் போட்டது.

36 கர்த்தர் மோசேயிடம் 37-38 “ஆசாரியனான ஆரோனின் மகனான எலெயாசாரிடம் நெருப்புக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவற்றிலுள்ள கரியையும், சாம்பலையும் கொட்டிவிடச் சொல். அவர்கள் எனக்கெதிராகப் பாவம் செய்தார்கள். அவர்களது பாவம் அவர்களின் உயிரைப் போக்கிவிட்டது. ஆனால், அக்கலசங்கள் இப்போதும் பரிசுத்தமானவை. அவற்றை கர்த்தருக்குக் கொண்டுவந்ததால் பரிசுத்தமடைந்தன. அவற்றைத் தகடுகளாக அடித்து, பலிபீடத்தைச் சுற்றிலும் மூடிவைக்கவும். இது எல்லா இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்று கூறினார்.

39 எனவே, ஆசாரியனாகிய எலெயாசார் அனைத்து வெண்கலத் தூபகலசங்களையும் சேகரித்தான். அவற்றைக் கொண்டு வந்த மனிதர்கள் மரித்துப்போனார்கள். ஆனால், கலசங்கள் இருந்தன. அவன் அவற்றை அடித்து, தகடாக்கும்படி செய்து, பின் அத்தகடுகளைப் பலிபீடத்தைச் சுற்றி மாட்டி வைத்தான். 40 மோசே மூலமாக கர்த்தர் எலெயாசாருக்குக் கட்டளையிட்டபடிச் செய்து முடித்தான். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு அடையாளம் ஆயிற்று. ஆரோன் ஜனங்களைத் தவிர வேறு யாரேனும் நறுமணப் பொருள் கொண்டு வரக் கூடாது என்பதற்கு இது நினைவூட்டல் ஆயிற்று. யாராவது கர்த்தருக்கு நறுமணப் பொருள் கொண்டுவந்தால், கோராகும் அவனைப் பின்பற்றியவர்களும் மரித்துப் போனதுபோல் மரித்துப்போவார்கள்.

ஆரோன் ஜனங்களைக் காப்பாற்றுதல்

41 மறுநாள் இஸ்ரவேல் ஜனங்கள், மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டு, “நீங்கள் கர்த்தருடைய ஜனங்களைக் கொன்று விட்டீர்கள்” எனக் கூறினர்.

42 மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்று கொண்டு இருந்தனர். ஜனங்கள் அங்கே கூடி அவர்களுக்கு எதிராக முறையிட்டனர். ஆனால் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தை நோக்கியபோது அதை மேகம் சூழ்ந்தது. அங்கே கர்த்தரின் மகிமை காணப்பட்டது. 43 பிறகு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பாக வந்தனர்.

44 மோசேயிடம் கர்த்தர், 45 “இந்த ஜனங்களிடமிருந்து விலகி நில்லுங்கள். நான் இவர்களை உடனே அழிக்கப்போகிறேன்” என்றார். எனவே மோசேயும் ஆரோனும் தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கினார்கள்.

46 பிறகு மோசே ஆரோனிடம், “உனது வெண்கலத் தூபகலசத்தை எடுத்துக்கொள், பலிபீடத்திலுள்ள நெருப்பை அதில் இடு, பின் நறுமணப் பொருளைப்போடு, அவற்றை ஜனங்களிடம் கொண்டு போய் காட்டு, அது அவர்களைத் சுத்தமாக்கும். அவர்கள் மேல் கர்த்தர் கோபமாக உள்ளார். அவர்களுக்கு துன்பம் ஏற்கெனவே தொடங்கி விட்டது” என்றான்.

47-48 ஆரோன் மோசே சொன்னபடி தூபகலசமும், நெருப்பும், நறுமணப் பொருட்களும் எடுத்துக்கொண்டு ஜனங்கள் மத்தியில் ஓடினான். ஆனால், ஏற்கெனவே நோய் அவர்களிடையே துவங்கிவிட்டது. எனவே ஆரோன் மரித்துப் போனவர்களுக்கும், இன்னும் உயிரோடு இருந்தவர்களுக்கும் இடையே நின்று அவர்களைத் சுத்தப்படுத்தவதற்குரியவற்றைச் செய்தான். நோயும் நிறுத்தப்பட்டது. 49 ஆனால் 14,700 பேர் நோயால் மரித்துப்போனார்கள். கோரகினால் மரித்தவர்கள் இதில் கணக்கிடப்படவில்லை. 50 எனவே நோய் நிறுத்தப்பட்டது. பின் ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்ற மோசேயிடம் திரும்பி வந்தான்.

சங்கீதம் 52-54

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல்.

52 பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்?
    நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய்.
நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய்.
    உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது.
    நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய்.
நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய்.
    உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.

நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும்.
எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்!
    அவர் உன்னை உனது வீட்டிலிருந்து [a] இழுத்து எறிவார்.
    அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.
நல்லோர் இதனைக் காண்பார்கள்.
    தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள்.
அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
    “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள்.
    அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.

ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன்.
    தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.
தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன்.
    நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன்.
    ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.

மகலாத் என்னும் கருவியை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு மஸ்கீல் என்னும் பாடல்.

53 தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான்.
    அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள்.
    அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை.
தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று
    பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள்.
    ஒவ்வொரு மனிதனும் தீயவன்.
நன்மையான காரியத்தைச் செய்பவன்
    ஒருவன் கூட இல்லை.

தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்!
    ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப்பதில்லை.
    தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார்.
ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள்.
    அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள்.
அத்தீயோரை தேவன் தள்ளிவிட்டார்.
    எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள்.
அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப்பார்.

சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக.
    தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார்.
அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான்.
    இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சிகொள்வான்.

இசைக் கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்களுள் ஒன்று. சீப்பூரார் சவுலிடம் வந்து, “எங்கள் ஜனங்கள் மத்தியில் தாவீது ஒளிந்திருக்கிறார்” எனக் கூறிய காலத்தில் பாடியது.

54 தேவனே, உமது வல்லமையான நாமத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும்.
    உமது வல்லமையை பயன்படுத்தி என்னை விடுதலையாக்கும்.
தேவன், என் ஜெபத்தைக்கேளும்.
    நான் கூறும் காரியங்களைக் கேளும்.
தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர்கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள்.
    அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.

பாருங்கள், என் தேவன் எனக்கு உதவுவார்.
    என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.
எனக்கு எதிராகத் திரும்பியுள்ள ஜனங்களை என் தேவன் தண்டிப்பார்.
    தேவன் எனக்கு உண்மையானவராக இருப்பார்.
    அவர் அந்த ஜனங்களை அறவே அழிப்பார்.

தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக்கைகளை உமக்குத் தருவேன்.
    கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண்டுகிறேன்.
    எனது பகைவர்கள் தோற்கடிக்கப்படுவதை நான் பார்க்கட்டும்.

ஏசாயா 6

தேவன் ஏசாயாவைத் தீர்க்கதரிசியின் ஊழியத்திற்கு அழைக்கிறார்

உசியா அரசன் மரித்த ஆண்டிலே, நான் எனது ஆண்டவரைப் பார்த்தேன். அவர் மிகவும் உயரமான ஆச்சரியகரமான சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருந்தார். அவரது நீண்ட அங்கியானது ஆலயத்தை நிறைத்தது.

சேராபீன்கள் [a] கர்த்தரைச் சுற்றி நின்றார்கள். ஒவ்வொரு சேராபீனுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவர்கள் இரு சிறகுகளால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டனர். இன்னும் இரு சிறகுகளால் தம் பாதங்களை மூடிக்கொண்டனர். அவர்கள் இரண்டு சிறகுகளைப் பறப்பதற்குப் பயன்படுத்தினார்கள். ஒருவரை ஒருவர் அழைத்து, அவர்கள்: “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மகா பரிசுத்தமானவர். அவரது மகிமை பூமியை நிரப்பியது” என்றனர். அவர்களின் சத்தம் மிகவும் பலமாக இருந்தது. அவர்களின் சத்தம் கதவின் நிலைகளை அசையப்பண்ணிற்று. பிறகு ஆலயமானது புகையால் நிரம்பியது.

நான் மிகவும் பயந்துவிட்டேன், நான்: “ஓ! நான் அழிக்கப்படுவேன். நான் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவன் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களும் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவர்கள் இல்லை. எனினும், நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய நமது அரசரைப் பார்த்தேன்” என்றேன்.

பலிபீடத்தின்மேல் நெருப்பு இருந்தது. ஒரு சேராபீன் பலிபீடத்திலிருந்து தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்தான். அவன் என்னிடத்தில் நெருப்புத்தழலோடு பறந்து வந்தான். அந்த தனது நெருப்புத் தழலால் என் வாயைத் தொட்டான். பிறகு அவன், “பார் இது உன் உதடுகளைத் தொட்டதால் உன் தீய செயல்கள் எல்லாம் மறைந்தன. உனது பாவங்கள் துடைக்கப்பட்டன” என்றான்.

பிறகு நான் என் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டேன். கர்த்தர், “நான் யாரை அனுப்புவேன்? நமக்காக யார் போவார்?” என்று சொன்னார்.

எனவே நான், “நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்றேன்.

பிறகு கர்த்தர் சொன்னார்: “போ, இதனை ஜனங்களிடம் சொல்: ‘கவனமாகக் கேளுங்கள்! ஆனால் புரிந்துகொள்ளாமல் இருங்கள்! கவனமாகப் பாருங்கள். ஆனால் அறிந்துகொள்ளாமல் இருங்கள்!’ 10 ஜனங்களைக் குழப்பமடைய செய். ஜனங்கள் தாங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் புரிந்துகொள்ளாதபடிக்குச் செய். நீ அவ்வாறு செய்யாவிட்டால், ஜனங்கள் தங்கள் காதால் கேட்பவற்றையும் புரிந்துகொள்வார்கள். அவர்கள் மனதில் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். இவற்றை அவர்கள் செய்தால், பிறகு அந்த ஜனங்கள் என்னிடம் திரும்பி வந்து குணமாவார்கள்” என்றார்.

11 பிறகு நான், “ஆண்டவரே, நான் எவ்வளவு காலம் இதனைச் செய்ய வேண்டும்?” எனக் கேட்டேன்.

அதற்கு கர்த்தர், “நகரங்கள் அழிந்துபோகும்வரை இதனைச் செய். ஜனங்கள் போகும்வரை செய். வீடுகளில் எவரும் வாழாத நிலைவரும்வரை செய். பூமி அழிந்து காலியாகும்வரை செய்”, என்றார்.

12 கர்த்தர் அந்த ஜனங்களை வெகு தூரத்திற்குப்போகச்செய்வார். நாட்டில் காலியான இடங்கள் அதிகமாக இருக்கும். 13 ஆனால் பத்தில் ஒரு பாகமான ஜனங்கள் மட்டும் இந்நாட்டில் வாழ அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அழிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் கர்த்தரிடம் திரும்பி வருவார்கள். இவர்கள் கர்வாலிமரம் போன்றவர்கள். இது வெட்டுண்டு போனபிறகு அடிமரம் மட்டும் நிற்கும் இந்த அடிமரம் (மீதியான ஜனங்கள்) மகா விசேஷித்த ஒரு வித்தாக இருக்கும்.

எபிரேயர் 13

தேவனை பிரியப்படுத்தும் வழிபாடு

13 கிறிஸ்துவுக்குள் நீங்கள் சகோதர சகோதரிகளாவீர்கள். தொடர்ந்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள். மக்களை உங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்யுங்கள். இதனால் சிலர் அறியாமலேயே தேவ தூதர்களையும் உபசரிப்பதுண்டு. நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோல் சிறையிலுள்ள மக்களை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்களே துன்பமுறுவதைப்போல், துன்பமுற்றுக் கொண்டிருப்பவர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்.

திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார். பண ஆசையில் இருந்து உனது வாழ்வை விலக்கிவை. உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்துகொள். தேவன்,

“நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்.
நான் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கூறியிருக்கிறார். (A)

எனவே,

“கர்த்தர் எனக்கு உதவுபவர்.
    நான் அச்சப்படத் தேவையில்லை.
எவரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக நீங்கள் சொல்லலாம். (B)

உங்கள் தலைவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைக் கற்றுத்தந்தார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்ந்து மடிந்தார்கள் என எண்ணுங்கள். அவர்களின் விசுவாசத்தைக் கடைப்பிடியுங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், நாளையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பவர். எல்லா வகையான தவறான உபதேசங்களும் உங்களைத் தவறான வழியில் செலுத்தாதபடிக்குக் கவனமாக இருங்கள். உங்கள் இதயம் தேவனுடைய கிருபையால் பலம் பெறட்டும். அது உணவு பற்றிய சட்டங்களால் நிறையாமல் இருக்கட்டும். அது உங்களுக்குப் பயன் தராது.

10 பரிசுத்த கூடாரத்தில் சேவை செய்கிற அந்த யூத ஆசாரியர்கள் இருந்து சாப்பிடும் உரிமையற்ற ஒரு பலி நம்மிடம் உண்டு. 11 பிரதான ஆசாரியர் மிருக இரத்தத்தை எடுத்துக்கொண்டு மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்லுகிறார். அவர் பாவங்களுக்காக அதனைச் செலுத்துகிறார். ஆனால் அந்த மிருகங்களின் சரீரம் வெளியே எரிக்கப்படுகிறது. 12 எனவே, இயேசுவும் நகரத்திற்கு வெளியே துன்பப்பட்டார். அவர் தன் இரத்தத்தைப் பாவத்துக்காகவே சிந்தினார். தன் மக்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காக இரத்தம் சிந்தி மரித்தார். 13 எனவே, நாம் கூடாரத்துக்கு வெளியே சென்று அவருடைய அவமானத்தில் பகிர்ந்துகொள்வோம். இயேசுவுக்கு நேர்ந்த அதே அவமானத்தை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 14 இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு நகரம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகிற என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நகரத்திற்காகக் காத்திருக்கிறோம். 15 எனவே, அவர் மூலமாக நம் தினசரி துதி காணிக்கையை நாம் தேவனுக்கு வழங்குவோம். அது அவர் பெயரைத் துதிக்கும் உதடுகளின் கனியாகும். 16 மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், பகிர்ந்துகொள்ளவும் மறக்காதீர்கள். இவையே தேவன் விரும்பும் பலியாகும்.

17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்களின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். அவர்கள் உங்கள் மேல் பொறுப்புள்ளவர்கள். அவர்கள் உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் துக்கத்தோடு அல்ல சந்தோஷத்தோடு அவற்றைச் செய்பவர்கள். நீங்கள் அவர்களுக்குப் பணியாமல் அவர்களின் பணியை கடினப்படுத்தினால் அது எவ்வகையிலும் உங்களுக்கு உதவாது.

18 எங்களுக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். சுத்தமான மனசாட்சி உடையவர்களாய் நாங்கள் இருக்கிறோம். என்றும், எப்போதும் நல்ல செயல்களையே செய்ய விரும்புகிறோம் என்றும் நாங்கள் உறுதி கூறுகிறோம். 19 உங்களிடத்தில் நான் மிக விரைவில் வருவதற்கு வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் மற்ற அனைத்தையும் விட இதனையே பெரிதும் விரும்புகிறேன்.

20-21 சமாதானத்தின் தேவன் எல்லா நன்மைகளையும் உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். எனவே அவர் விரும்புகிறபடி நீங்கள் செய்யுங்கள். தேவன் ஒருவரே தம் மந்தையின் பெரிய மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினால் எழுப்பினார். அவர் விரும்புவதை நீங்கள் செய்யும்படிக்கு ஒவ்வொரு விதமான நன்மையையும் செய்யும் திறமையை உங்களுக்கு வழங்கவேண்டும் என நான் வேண்டுகிறேன். இயேசுவுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

22 என் சகோதர சகோதரிகளே! உங்களை உற்சாகப்படுத்த நான் எழுதிய சிறு செய்தியை நீங்கள் பொறுமையுடன் கேட்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவை உங்களை பலப்படுத்தும். இது நீண்ட நிருபம் அன்று. 23 நம் சகோதரன் தீமோத்தேயு சிறைக்கு வெளியே உள்ளான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவன் மிக விரைவில் வந்து சேர்ந்தால், நாங்கள் இருவருமே சேர்ந்து உங்களைப் பார்ப்போம்.

24 உங்கள் தலைவர்களுக்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லுங்கள். இத்தாலியில் உள்ள தேவனுடைய பிள்ளைகள் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.

25 உங்கள் அனைவரோடும் தேனுடைய கிருபை இருப்பதாக.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center