M’Cheyne Bible Reading Plan
ஜனங்கள் மீண்டும் முறையிடுதல்
14 அன்று இரவு, முகாம்களில் உள்ள அனைவரும் கூக்கூரலிட்டுப் புலம்பினார்கள். 2 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டனர். அவர்கள் அனைவரும் கூடி மோசேயிடமும், ஆரோனிடமும், “நாம் எகிப்து நாட்டிலோ பலைவனங்களிலோ மரித்துப்போயிருக்கலாம், இவ்வாறு புதிய நாட்டில் கொல்லப்படுவதைவிட அது மேலானது. 3 நாம் இப்புதிய நாட்டில் போரில் கொல்லப்படுவதற்காகத்தான், கர்த்தர் இங்கே அழைத்து வந்தாரா? எதிரிகள் நம்மைக் கொன்றுவிட்டு, நமது மனைவியரையும், பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்வார்கள். இதைவிட நாம் எகிப்துக்குத் திரும்பிப் போவது நல்லது” என்றனர்.
4 பிறகு ஜனங்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குத் திரும்பிப் போவோம்” எனப் பேசிக்கொண்டனர்.
5 அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களின் முன்பும், மோசேயும், ஆரோனும் தரையில் பணிந்து வணங்கினார்கள். 6 யோசுவாவும் காலேப்பும் மிகவும் மனமுறிவடைந்தனர். (யோசுவா நூனின் மகன். காலேப் எப்புன்னேயின் மகன். இருவரும் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தவர்கள்.) 7 அங்கே கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களிடம் அந்த இருவரும், “நாங்கள் பார்த்த அந்த நாடு நன்றாக இருக்கிறது. 8 அது நல்ல பொருட்கள் பலவற்றால் நிறைந்த நாடு. கர்த்தர் நம்மீது விருப்பம் உடையவராக இருந்தால், அவர் அந்த நாட்டுக்குள் நம்மை வழி நடத்திச் செல்லுவார். அந்த நாட்டை கர்த்தர் நமக்குத் தருவார். 9 எனவே கர்த்தருக்கு எதிராக திரும்பாதீர்கள். அந்த நாட்டின் ஜனங்களுக்குப் பயப்படாதீர்கள்! நாம் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, எதுவும் அவர்களைக் காப்பாற்றாது. ஆனால், நம்மோடு கர்த்தர் இருக்கிறார். எனவே, பயப்படவேண்டாம்” என்றனர்.
10 அனைத்து ஜனங்களும் யோசுவாவையும் கலேபையும் கல்லெறிந்து கொன்றுவிட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கர்த்தரின் மகிமை, ஆசரிப்புக் கூடாரத்தின் மேலே அவர்கள் அனைவரும் காணும்படி தோன்றியது. 11 கர்த்தர் மோசேயுடன் பேசினார். அவர், “எவ்வளவு காலத்திற்கு இந்த ஜனங்கள் எனக்கெதிராக இருப்பார்கள்? என் மீது நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறார்கள், என் வல்லமையின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறார்கள். நான் எத்தனையோ அடையாளங்களை அவர்களுக்கு காட்டியிருக்கிறேன். எனினும் என்னை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். நான் அவர்களுக்கிடையில் பலப் பெருங்காரியங்களைச் செய்திருக்கிறேன். 12 அவர்கள் அனைவரையும் பெருநோயால் கொன்றுவிடுவேன். அவர்களை அழிப்பேன். நான் இவர்களை விட உங்கள் ஜனத்தை பெரியதாகவும் பலமிக்கதாகவும் பண்ணுவேன்” என்றார்.
13 பிறகு மோசே கர்த்தரிடம், “நீர் இதனைச் செய்துவிட்டால், எகிப்தியர்கள் இதனைப் பற்றி கேள்விப்படுவார்கள். நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி உமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே மீட்டுவந்தீர், என்பதை அவர்கள் அறிவார்கள். 14 எகிப்திய ஜனங்கள் கானான் ஜனங்களிடம் இதைப்பற்றி கூறினார்கள். நீரே கர்த்தர் என்பதை ஏற்கெனவே அவர்கள் அறிந்திருக்கின்றனர். நீர் உமது ஜனங்களோடு இருப்பதையும், ஜனங்கள் உம்மைப் பார்த்தனர் என்பதையும் அறிந்திருக்கின்றனர். அவர்களுக்குத் தனிச்சிறப்புடைய மேகத்தைப் பற்றி தெரியும். பகல் பொழுதில் நீர் மேகத்தின் மூலம் வழிநடத்திச் சென்றதையும், இரவில் அம்மேகம் நெருப்பாகி ஜனங்களுக்கு வெளிச்சம் தந்ததையும் அவர்கள் அறிவார்கள். 15 எனவே இப்போது நீர் இந்த ஜனங்களை அழிக்கக்கூடாது. நீர் இவர்களை அழித்தால், உமது வல்லமையைப்பற்றி அறிந்த அனைத்து ஜனங்களும், 16 ‘கர்த்தர் தான் வாக்களித்தபடி தன் ஜனங்களுக்கு நாட்டை அளிக்க முடியவில்லை. எனவே, அவர் அவர்களை பாலைவனத்தில் கொன்றுவிட்டார் என்று பேசுவார்கள்’
17 “இப்போதும், ஆண்டவரே, உமது பலத்தைக் காட்டும்! உம்மைப்பற்றி நீரே சொல்லியிருக்கிறபடி செய்யும்! 18 ‘நீர் கர்த்தர் கோபப்படுகிறதற்கு தாமதம் பண்ணுகிறார். கர்த்தர் பேரன்பு கொண்டவர். சட்டங்களை மீறி குற்றம் செய்கின்றவர்களை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் அக்கிரமக்காரர்களையும், அவர்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், அவர்களின் பிள்ளைகளையும் தண்டிப்பார்’ என்று உம்மைப்பற்றி சொல்லியிருக்கிறபடியால், 19 இப்போது உமது பேரன்பை இந்த ஜனங்களிடம் காண்பித்து, இவர்களின் பாவத்தை மன்னித்தருளும், எகிப்தை விட்டுப் புறப்பட்ட நாள்முதல் நீர் மன்னித்து வருவது போலவே, இப்போதும் மன்னித்துவிடும்” என்றான்.
20 இதற்கு கர்த்தர், “ஆம்! நீ கேட்டுக்கொண்டபடியே இந்த ஜனங்களை மன்னித்துவிடுகிறேன். 21 ஆனால் உனக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். நான் இந்த பூமியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதுபோலவே எனது மகிமையும் பூமியில் நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும். 22 எகிப்திலிருந்து என்னால் அழைத்து வரப்பட்டவர்கள் எவரும் கானான் நாட்டைக் காணமாட்டார்கள். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும் நான் பாலைவனத்தில் செய்த பெருஞ்செயல்களையும், அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. என்னைப் பத்துமுறை சோதித்திருக்கிறார்கள். 23 நான் அவர்களின் முற்பிதாக்களிடம் அவர்களுக்கு ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்தேன். ஆனால் எனக்கு எதிராக உள்ள எவரும் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது. 24 ஆனால் எனது ஊழியனான காலேப் வேறுபட்டவன். என்னை அவன் முழுமையாகப் பின்பற்றினான். எனவே அவனை ஏற்கெனவே அவன் பார்வையிட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்வேன். அவனது ஜனங்கள் அந்நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். 25 அமலேக்கியரும், கானானியரும் இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, நாளை இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு செங்கடலுக்குச் செல்லும் சாலையின் மேலுள்ள பாலைவனத்துக்குச் செல்லுங்கள்” என்றார்.
கர்த்தர் ஜனங்களைத் தண்டித்தல்
26 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 27 “இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தீய ஜனங்கள் எனக்கு எதிராக முறையிடுவார்கள்? நான் இவர்களின் முறையீடுகளையும், புலம்பல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன். 28 நீங்கள் முறையிட்டபடியே கர்த்தர் நிச்சயம் உங்களுக்குச் செய்வார் என்று அவர்களிடம் சொல். இதுதான் உங்களுக்கு நடை பெறப்போகிறது: 29 நீங்கள் பாலைவனத்தில் மரித்துப்போவீர்கள். இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள, எண்ணி கணக்கிடப்பட்ட ஜனங்கள் மரிப்பார்கள். கர்த்தராகிய எனக்கு எதிராக முறையிட்டீர்கள். 30 எனவே, நான் வாக்களித்திருந்த நாட்டிற்குள் எப்புன்னேயின் மகனான காலேபும், நூனின் மகனான யோசுவாவும் தவிர வேறு எவரும் நுழைய முடியாது. 31 அந்நாட்டிலுள்ள உங்களது பகைவர்கள், உங்கள் பிள்ளைகளை அபகரித்துக்கொள்வார்கள் என்று அஞ்சி முறையிட்டீர்கள். ஆனால், நான் உங்களுக்குக் கூறுகிறேன், அந்தப் பிள்ளைகள் அந்நாட்டிற்குள் செல்வார்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பார்கள். 32 உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் இந்தப் பாலைவனத்திலேயே மரித்துப் போவீர்கள்.
33 “உங்கள் பிள்ளைகள் இந்தப் பாலைவனத்தில் மேய்ப்பர்களாக 40 ஆண்டுகள் அலைந்து திரிவார்கள், நீங்கள் எனக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால், அவர்கள் துன்பப்படுவார்கள். நீங்கள் அனைவரும் இப்பாலைவனத்தில் மரித்து விழும்வரை அவர்கள் துன்பப்படுவார்கள். 34 40 ஆண்டுகள் உங்கள் பாவங்களுக்காக நீங்கள் துன்பப்படுவீர்கள். (நீங்கள் கானான் நாட்டைச் சுற்றி பார்த்தது 40 நாட்கள். ஒரு நாளுக்கு ஒரு ஆண்டு வீதம் 40 ஆண்டுகள்.) உங்களுக்கு எதிராக என்னை நிறுத்தி வைப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
35 “நானே கர்த்தர். நான் சொல்லியிருக்கிறேன், தீய ஜனங்கள் அனைவருக்கும் நான் சொன்னபடியே செய்வேன் என்று உறுதியாய்க் கூறுகிறேன். இந்த ஜனங்கள் அனைவரும் எனக்கு எதிராக ஒன்று சேர்ந்தார்கள். எனவே அனைவரும் இப்பாலைவனத்திலேயே மரித்துப்போவார்கள்” என்றார்.
36 புதிய நாட்டைப் பார்வையிட்டு வருமாறு மோசே அனுப்பி வைத்தவர்களில் சிலர் இஸ்ரவேல் ஜனங்களிடம் வதந்தியைப் பரப்பினார்கள். அந்நாட்டிற்குள் நுழைகிற அளவிற்குத் தமக்குப் பலமில்லை என்றனர். 37 இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அவநம்பிக்கையைப் பரப்பியதற்கு இவர்களே பொறுப்பாகும். எனவே கர்த்தர் அந்த ஜனங்களை கொல்லும்படி நோயைக் கொண்டு வந்தார். 38 ஆனால் நூனின் மகனான யோசுவாவும், எப்புன்னேயின் மகனான காலேபும் கானான் நாட்டை பார்வையிட்டவர்களில் இந்த இருவரையும் கர்த்தர் காப்பாற்றினார். மற்றவர்களைச் சாகடித்த அந்நோய் இவர்களுக்கு வரவில்லை.
கானான் நாட்டிற்குள் ஜனங்கள் நுழைய முயலுதல்
39 இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே இவை அனைத்தையும் சொன்னான். அவர்கள் மிகவும் துக்கப்பட்டு மனங்கசந்து அழுதனர். 40 மறுநாள் அதிகாலையில் அவர்கள் உயரமான மலைநாட்டிற்குள் பிரவேசிக்கப் புறப்பட்டனர். அவர்கள்: “நாங்கள் பாவம் செய்துவிட்டோம். நாங்கள் கர்த்தரை நம்பாமல் போனதற்காக வருத்தப்படுகிறோம். கர்த்தர் வாக்களித்த நாட்டிற்குள் நாங்கள் போவோம்” என்றனர்.
41 ஆனால் மோசே, “கர்த்தரின் கட்டளைக்கு ஏன் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள். நீங்கள் வெற்றியடையப் போவதில்லை. 42 அந்த நாட்டிற்குள் போகாதீர்கள். கர்த்தர் இப்போது உங்களோடு இல்லை. எனவே, உங்கள் பகைவர்கள் உங்களை எளிதில் வென்றுவிடுவார்கள். 43 அமலேக்கியரும், கானானியரும் உங்களுக்கு முன்னே அங்கே இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சண்டையிடுவார்கள். நீங்கள் கர்த்தரிடமிருந்து விலகிவிட்டீர்கள். எனவே நீங்கள் அவர்களோடு சண்டையிடும்போது கர்த்தர் உங்களோடு இருக்கமாட்டார். எனவே நீங்கள் அனைவரும் போரில் கொல்லப்படுவீர்கள்” என்றான்.
44 ஆனால் மோசேயின் வார்த்தைகளை ஜனங்கள் நம்பவில்லை. அவர்கள் மலை நாட்டை நோக்கிச் சென்றனர். ஆனால் மோசேயும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் அவர்களோடு போகவில்லை. 45 மலைநாட்டில் வாழ்ந்த அமலேக்கியரும், கானானியரும் கீழே இறங்கி வந்து அவர்களைத் தாக்கி, அவர்களை எளிதில் தோற்கடித்தனர். அவர்களை ஓர்மா வரை துரத்தி அடித்தனர்.
ஆசாபின் பாடல்களில் ஒன்று
50 தெய்வங்களுக்கெல்லாம் தேவனாகிய கர்த்தர் பேசுகிறார்.
சூரியன் உதிக்குமிடத்திலிருந்து அது மறைகிற இடம் வரைக்குமுள்ள பூமியின் எல்லா ஜனங்களையும் அழைக்கிறார்.
2 சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவன் அழகானவர்.
3 நம் தேவன் வருகிறார், அவர் அமைதியாக இரார்.
அவருக்கு முன்னே நெருப்பு எரியும். அவரைச் சூழ்ந்து புயல் வீசும்.
4 தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு
நமது தேவன் பூமியையும் வானத்தையும் அழைக்கிறார்.
5 தேவன் கூறுகிறதாவது, “என்னைப் பின்பற்றுகிறவர்களே,
என்னைச் சூழ்ந்து நில்லுங்கள், என்னைச் சூழ்ந்து நில்லுங்கள்.
என்னை வணங்குகிறவர்களே, வாருங்கள்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம்.”
6 தேவனே நியாயாதிபதி,
வானங்கள் அவரது நன்மைகளைக் கூறும்.
7 “எனது ஜனங்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்!
இஸ்ரவேலின் ஜனங்களே, உங்களுக்கு எதிரான எனது சாட்சியைக் காட்டுவேன்.
நானே உங்கள் தேவன்.
8 உங்கள் பலிகளைக் குறித்து நான் குறை கூறமாட்டேன்.
எப்போதும் இஸ்ரவேலராகிய நீங்கள் உங்கள் தகனபலிகளை என்னிடம் கொண்டுவந்தீர்கள்.
ஒவ்வொரு நாளும் அவற்றை எனக்கு கொடுக்கிறீர்கள்.
9 உங்கள் வீட்டின் எருதுகளையோ
உங்கள் மந்தையின் ஆடுகளையோ நான் எடுத்துக்கொள்வதில்லை.
10 எனக்கு அம்மிருகங்கள் தேவையில்லை.
காட்டின் மிருகங்கள் எனக்குச் சொந்தமானவை.
மலைகளிலுள்ள பல்லாயிரம் மிருகங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமானவை.
11 உயர்ந்த மலையின் ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்.
மலையின்மேல் அசையும் பொருட்களெல்லாம் என்னுடையவை.
12 எனக்குப் பசியில்லை! எனக்குப் பசித்தாலும் உணவுக்காக உன்னைக் கேட்கமாட்டேன்.
உலகமும் அதன் அனைத்துப் பொருள்களும் எனக்குச் சொந்தமானவை.
13 எருதுகளின் மாமிசத்தை நான் புசிப்பதில்லை.
ஆடுகளின் இரத்தத்தை நான் குடிக்கமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார்.
14 எனவே ஸ்தோத்திர பலிகளை தேவனுக்குக் கொண்டுவந்து அவரோடு இருக்கும்படி வாருங்கள்.
நீங்கள் மிக உன்னதமான தேவனுக்கு வாக்குறுதி பண்ணினீர்கள்.
எனவே வாக்களித்த பொருள்களை அவருக்குக் கொடுங்கள்.
15 தேவன், “இஸ்ரவேலரே, துன்பம் நேர்கையில் என்னிடம் விண்ணப்பம் செய்யுங்கள்!
நான் உங்களுக்கு உதவுவேன்.
நீங்கள் அப்போது என்னை மகிமைப்படுத்த முடியும்” என்று கூறுகிறார்.
16 தேவன் தீயோரைப் பார்த்து, “நீங்கள் எனது சட்டங்களைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
எனது உடன்படிக்கையைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
17 ஆனால் நான் உங்களைத் திருத்தும்போது அதை ஏன் வெறுக்கிறீர்கள்?
நான் கூறும் காரியங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
18 நீங்கள் ஒரு திருடனைப் பார்க்கிறீர்கள், அவனோடு சேர்வதற்காக ஓடுகிறீர்கள்.
விபச்சாரமாகிய பாவத்தைச் செய்கிறவர்களோடு நீங்களும் படுக்கையில் குதிக்கிறீர்கள்.
19 நீங்கள் தீயவற்றைப் பேசிப் பொய்களைச் சொல்கிறீர்கள்.
20 உங்கள் சொந்த சகோதரரையும் பிறரையும் குறித்து எப்போதும் தீயவற்றையே சொல்கிறீர்கள்.
21 நீங்கள் இத்தீய செயல்களைச் செய்கிறீர்கள், நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
நீங்கள் எதையும் சொல்லாதிருக்கிறீர்கள், நானும் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
ஆனால் நான் அமைதியாக இரேன்!
நீங்கள் அதைத் தெளிவாக உணரும்படி நான் செய்வேன்.
உங்கள் முகத்திற்கெதிராக உங்களை விமர்சிப்பேன்!
22 நீங்கள் தேவனை மறந்திருக்கிறீர்கள்.
உங்களைக் கிழித்தெறியும் முன்னர்
நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்!
அது நிகழ்ந்தால் உங்களை மீட்பவர் எவருமில்லை!
23 எனவே ஒருவன் ஸ்தோத்திர காணிக்கை செலுத்தினால் அவன் என்னை உண்மையிலேயே மகிமைப்படுத்துகிறான்.
ஒருவன் அவனது வாழ்க்கையை மாற்றியமைத்தால் அப்போது நான் அவனுக்கு தேவனுடைய காக்கும் வல்லமையைக் காட்டுவேன்” என்கிறார்.
3 நான் சொல்லுவதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர், யூதாவும் எருசலேமும் நம்பியிருக்கும் அனைத்தையும் விலக்குவார். தேவன் அங்குள்ள உணவுப் பொருட்களையும் தண்ணீரையும் விலக்கிவிடுவார். 2 தேவன், அங்குள்ள தலைவர்களையும், வீரர்களையும், நீதிபதிகளையும், தீர்க்கதரிசிகளையும், மந்திரவாதிகளையும், மூப்பர்களையும் விலக்கிவிடுவார். 3 தேவன், அங்குள்ள படைத் தலைவர்களையும் ஆட்சித் தலைவர்களையும், திறமையுள்ள ஆலோசகர்களையும், மந்திரம் செய்கிற புத்திசாலிகளையும் வருங்காலம்பற்றிக் கூறுபவர்களையும் விலக்கிவிடுவார்.
4 தேவன் கூறுகிறார், “இளஞ்சிறுவர்கள் உங்கள் தலைவர்களாகும்படி செய்வேன். 5 ஒவ்வொருவனும் இன்னொருவனுக்கு எதிராவான். இளைஞர்கள் முதியவர்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள். பொது ஜனங்கள் முக்கியமான ஜனங்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள்”. 6 அப்போது, ஒருவன் தன் சொந்த குடும்பத்திலுள்ள சகோதரனைப் பிடிப்பான். அவன் தன் சகோதரனிடம், “உன்னிடம் மேலாடை உள்ளது. எனவே, நீதான் எங்களது தலைவர், நீயே இந்த எல்லா சீர்கேட்டுக்கும், இக்கட்டுக்கும் மேலான தலைவனாக இரு” என்பான்.
7 ஆனால் சகோதரனோ: “என்னால் உனக்கு உதவ முடியாது. எனது வீட்டில் போதுமான அளவு உணவும் உடையும் இல்லை. நான் உங்கள் தலைவனாக முடியாது” என்பான்.
8 எருசலேம் விழுந்து தீமைசெய்ததால் இவ்வாறு நடைபெறும். யூதா விழுந்துவிட்டது. அது தேவனைப் பின்பற்றுவதை விட்டுவிட்டது. அவர்கள் சொல்லுகிறவையும், செய்கிறவையும் கர்த்தருக்கு எதிரானவை. கர்த்தருடைய மகிமையான கண்கள் இவை அனைத்தையும் காண்கின்றது.
9 தாங்கள் குற்றவாளிகள் என்றும் தாங்கள் செய்வது தவறு என்றும், அவர்களின் முகங்கள் காட்டும். அவர்கள் தங்கள் பாவங்களுக்காகப் பெருமை அடைகிறார்கள். அவர்கள் சோதோம் நகர ஜனங்களைப்போன்று தங்கள் பாவங்களை யார் கவனிக்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இது அவர்களுக்கு மிகக் கேடுதரும். அவர்கள் தமக்கே பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
10 நல்லவர்களுக்கு நன்மை ஏற்படும் என்று சொல்லுங்கள். அவர்கள் தாங்கள் செய்யும் நன்மைகளுக்குப் பரிசுபெறுவார்கள். 11 ஆனால் தீமை செய்பவர்களுக்குத் கேடு ஏற்படும். அவர்களுக்குப் பெரும் தொந்தரவுகள் ஏற்படும். அவர்கள் செய்த தீமைகளுக்குத் தண்டனை பெறுவார்கள். 12 என் ஜனங்களைச் சிறுபிள்ளைகள் தோற்கடிப்பார்கள். அவர்களைப் பெண்கள் ஆளுவார்கள். உங்கள் வாழிகாட்டிகள் தவறான வழியைக் காட்டிவிட்டார்கள். அவர்கள் நல்ல வழியில் இருந்து திருப்பி விட்டுவிட்டார்கள்.
அவரது ஜனங்களைப்பற்றிய தேவனுடைய முடிவு
13 ஜனங்களை நியாயம்தீர்க்க கர்த்தர் எழுந்து நிற்பார். 14 கர்த்தர் தலைவர்களையும் மூப்பர்களையும் அவர்களின் செயல்களுக்காக நியாயம் தீர்ப்பார்.
கர்த்தர் கூறுகிறார்: “நீங்கள் யூதாவாகிய இந்தத் திராட்சைத் தோட்டத்தை எரித்துப்போட்டீர்கள். ஏழைகளின் பொருட்களை எடுத்துக்கொண்டீர்கள். அவை உங்கள் வீடுகளில் இருக்கின்றன. 15 என் ஜனங்களைத் துன்புறுத்தும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? ஏழைகளின் முகங்களைப் புழுதிக்குள் தள்ளும் உரிமையை உங்களுக்கு அளித்தது யார்?” என்னிடம், எங்கள் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
16 கர்த்தர்: “சீயோனில் உள்ள பெண்கள் பெருமிதம் கொண்டிருந்தனர். அவர்கள் காற்றில் தம் தலைகளைத் தூக்கிய வண்ணம் நடந்தனர். மற்றவர்களைவிடச் சிறந்தவர்களைப்போன்று நடித்தனர். அவர்கள் கண்ணடித்து, தம் கால் தண்டைகள் ஒலிக்க ஒய்யாரமாக நடந்து திரிந்தனர்” என்றார்.
17 சீயோனிலுள்ள பெண்களின் உச்சந்தலையை என் ஆண்டவர் புண்ணாக்குவார். அவர்களின் முடிகளெல்லாம் உதிர்ந்து மொட்டையாகும்படிச் செய்வார். 18 அப்போது, பெருமைக்காரர்களிடம் உள்ள பொருட்களை கர்த்தர் எடுத்துக்கொள்வார். அழகான தண்டைகளையும், சுட்டிகளையும், சூரியனும், பிறையும் போன்ற சிந்தாக்குகளையும் எடுத்துக்கொள்வார். 19 ஆரங்களையும், அஸ்தகடகங்களையும் தலைமுக்காடுகளையும், 20 தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்த பரணிகளையும், 21 தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும், 22 விநோத ஆடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும், 23 கண்ணாடிகளையும், சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துப்போடுவார்.
24 இப்பொழுது அப்பெண்களிடம் சுகந்த நறு மணம் வீசுகிறது. ஆனால் அப்பொழுது அவர்களிடம் துர்மணமும் அழுகியவாசமும் வீசும். இப்பொழுது அவர்கள் கச்சைகளை அணிந்திருக்கின்றனர். ஆனால் அப்போது வெறும் கயிறுகளைக் கட்டியிருப்பார்கள். இப்பொழுது அவர்கள் தலை மயிரை அலங்காரமாக வைத்திருக்கின்றனர். ஆனால் அப்போது மொட்டையாக இருப்பார்கள். இப்பொழுது அவர்கள் ஆடம்பரமான ஆடைகளை அணிந்துள்ளனர். ஆனால் அப்பொழுது, துக்கத்துக்குரிய ஆடைகளையே அணிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்களின் முகங்களில் அழகான அடையாளங்கள் உள்ளன. ஆனால் அப்பொழுது அவர்களின் முகத்தில் கருகிய தீ வடு போடப்படும்.
25 அப்போது, உங்கள் ஆட்கள் வாளால் கொல்லப்படுவார்கள். உங்கள் வீரர்கள் போரில் மரிப்பார்கள். 26 நகர வாசல்களின் சந்திகளில் அழுகை ஒலியும், துக்கமும் நிறைந்திருக்கும். எருசலேமோ, கள்ளர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் அனைத்தையும் இழந்துவிட்ட பெண்ணைப்போன்று இருப்பாள். அவள் தரையில் அமர்ந்து அழுவாள்.
4 அப்போது, ஏழு பெண்கள் ஒருவனை பற்றிக்கொள்வார்கள். அவர்கள், “நாங்கள் எங்கள் சொந்த உணவை உண்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த ஆடைகளை அணிந்துகொள்கிறோம். இவை அனைத்தையும் நாங்களே எங்களுக்குச் செய்துகொள்கிறோம். எங்களை நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதை மட்டுமே உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நாங்கள் உன் பெயரை மட்டும் வைத்துக்கொள்வோம். எங்கள் அவமானத்தை நீக்கு” என்று சொல்வார்கள்.
2 அப்போது, கர்த்தருடைய செடியானது (யூதா) அழகாகவும் உயர்வாகவும் இருக்கும். இஸ்ரவேலில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்கள் தம் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைவார்கள். 3 அப்போது, சீயோனிலும் எருசலேமிலும் வாழ்கின்ற மீதியான ஜனங்கள் பரிசுத்தமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். சிறப்புப் பெயர் பட்டியலில் தம் பெயருள்ள அனைவருக்கும் இது நிகழும். பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.
4 சீயோன் பெண்களின் இரத்தத்தை கர்த்தர் கழுவிவிடுவார். எருசலேமில் உள்ள அனைத்து இரத்தக் கறைகளையும் கர்த்தர் கழுவி போக்குவார். தேவன் நீதியின் ஆவியினால் நியாயம்தீர்ப்பார். சுட்டெரிப்பின் ஆவியினால் அனைத்தையும் சுத்தப்படுத்துவார்.
5 அப்போது, தேவன் தன் ஜனங்களோடு இருப்பதை நிரூபிப்பார். அந்நாளின் பகலில், தேவன் புகை மேகத்தை தோன்றச் செய்வார். இரவில், தேவன் ஒளிரும் நெருப்புச்சுடரையும் தோன்றச் செய்வார். இச்சாட்சிகள் வானத்தில் ஒவ்வொரு கட்டிடத்தின் மேலும் சீயோன் மலையில் நடைபெறும் ஒவ்வொரு ஜனங்கள் கூட்டத்தின் மேலும் தோன்றும், ஒவ்வொருவரைச் சுற்றிலும் அவர்களைப் பாதுகாக்க ஒரு மூடி அமையும். 6 இம்மூடியானது பாதுகாப்புக்கான இடம். இது ஜனங்களை சூரியனின் வெப்பத்திலிருந்து காக்கும். இம்மூடி வெள்ளம் மற்றும் மழையிலிருந்து காத்துக்கொள்ள உதவும்.
விசுவாசம்
11 நாம் நம்புகிறவற்றின் மீது கொண்டுள்ள உறுதிதான் விசுவாசம் ஆகும். நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் கூட உண்மையான ஒன்றை நம்புவது தான் விசுவாசம். 2 முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள்.
3 தேவன் தமது ஆணையால் இந்த முழு உலகையும் படைத்தார் என்று நாம் நம்ப விசுவாசம் உதவுகிறது. அதாவது நாம் பார்க்கின்ற பொருட்கள் எல்லாம் பார்க்கப்படாத ஒன்றால் உருவாக்கப்பட்டதை உணர்ந்துகொள்கிறோம்.
4 காயீனும் ஆபேலும் தேவனுக்குப் பலி கொடுத்தார்கள். ஆனால் ஆபேலின் பலி, அவனது விசுவாசம் காரணமாக உயர்வாகக் கருதப்பட்டது. தேவனும் அதையே விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே அவனை நல்லவன் என்று அழைத்தார். அவன் இறந்து போனான். எனினும் அவன் தன் விசுவாசத்தின் வழியே இன்னும் பேசிக்கொண்டிருக்கிறான்.
5 ஏனோக்கு இறக்கவில்லை. இந்த பூமியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் தேவனுக்கு விருப்பமானவனாக இருந்தான். தேவன் அவனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டார். அதனால் மக்கள் அதன் பிறகு அவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. இது அவனது விசுவாசத்தினாலேயே ஆயிற்று. 6 விசுவாசம் இல்லாமல் எவனும் தேவனுக்கு விருப்பமானவனாக இருக்கமுடியாது. தேவனிடத்தில் வருகிறவன் அவர் உண்மையாகவே இருக்கிறார் என நம்பிக்கை கொள்கிறான். அதோடு தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுப்பார் என்றும் நம்பிக்கை கொள்ளவேண்டும்.
7 நோவா, இதுவரை அவன் காணாததைப் பற்றி தேவனால் எச்சரிக்கை செய்யப்பட்டான். ஆனால் நோவா தேவன் மீது விசுவாசமும், மரியாதையும் கொண்டிருந்தான். எனவே அவன் பெரிய கப்பலைச் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொண்டான். தனது விசுவாசத்தின் மூலமாக இந்த உலகம் தவறானது என்பதை நோவா நிரூபித்தான். இதனால் விசுவாசத்தின் வழியாக தேவனுக்கு முன் நீதிமான்களாகக் கருதப்பட்ட சிலருள் ஒருவனானான்.
8 தேவன் ஆபிரகாமை அழைத்தார். அவர் வாக்களித்தப்படி ஒரு இடத்துக்குப் பயணம் போகச் சொன்னார். அவனுக்கு அந்த இடம் எங்கே உள்ளது என்று தெரியாது. எனினும் அவனுக்கு விசுவாசம் இருந்ததால், தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவர் சொன்னபடி பயணம் செய்தான். 9 தேவன் தருவதாக வாக்களித்த நாட்டில் ஆபிரகாம் வாழ்ந்தான். அங்கே ஒரு பரதேசியைப் போல அலைந்தான். எனினும் அவன் விசுவாசம் வைத்திருந்தான். ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரோடு கூடாரத்தில் குடியிருந்தான். அவர்களும் தேவனுடைய வாக்குறுதியைப் பெற்றார்கள். 10 ஆபிரகாம், உண்மையான அஸ்திபாரம் இடப்பட்ட தேவனுடைய நகரத்துக்காகக் [a] காத்திருந்தான்.
11 ஆபிரகாம் மிகவும் முதியவன். குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு இல்லாதவன். சாராளும் அப்படியே. ஆபிரகாம் தேவனிடம் விசுவாசம் வைத்ததால் அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. 12 அவன் ஏறக்குறைய இறந்து போகின்றவனைப் போன்று இருந்தான். ஆனால் அவனிடமிருந்து முதுமைப் பருவத்தில் ஒரு பரம்பரை தோன்றி வானத்து நட்சத்திரங்களைப் போன்று விளங்கியது. கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமான மக்கள் அவனிடமிருந்து வெளிப்பட்டனர்.
13 இந்த மாபெரும் மனிதர்கள் அனைவரும் இறுதிவரை தங்கள் விசுவாசத்துடனேயே வாழ்ந்தனர். இவர்கள் வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக்கொள்ளாமல், வெகுதூரத்திலே அவற்றைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டனர். பூலோகத்தில் தாம் அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் இருந்ததை அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொண்டனர். 14 அவர்கள் தம் சொந்த தேசத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே இத்தகைய விஷயங்களைப் பேசுகிறவர்கள் உணர்த்துகிறார்கள். 15 அவர்கள் தாங்கள் விட்டுவந்த நாட்டைப் பற்றி நினைத்திருந்தார்களேயானால் அவர்கள் அதற்குத் திரும்பிப் போக சமயம் கிடைத்திருக்குமே. 16 ஆனால் அவர்கள் பரலோகம் என்னும் சிறப்பான நாட்டிற்குப் போகக் காத்திருக்கிறார்கள். எனவே தேவன் தன்னை அவர்களது தேவன் என்று அழைத்துக்கொள்வதில் வெட்கப்படுவதில்லை. தேவன் அவர்களுக்காக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்.
17-18 தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை சோதித்தார். ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலி கொடுக்கும்படி தேவன் சொன்னார். ஆபிரகாமும் விசுவாசத்தின் காரணமாக அந்தக் கட்டளையைப் பின்பற்றினான், ஏனென்றால் ஏற்கெனவே தேவன் ஆபிரகாமுக்கு வாக்களித்துள்ளார். “ஈசாக்கு மூலம் உன் பரம்பரை வளரும்” என்றும் கூறியுள்ளார். ஆனாலும் ஒரே மகனான அந்த ஈசாக்கைப் பலிகொடுக்க ஆபிரகாம் முன் வந்தான். 19 தேவன் மக்களை மரணத்திலிருந்து எழுப்புவார் என ஆபிரகாம் நம்பினான். உண்மையில் அதுபோன்றே ஆபிரகாம் அவன் மகனைக் கொல்லாதபடி தேவன் தடுத்துவிட்டார். இதுவும் மரணத்திலிருந்து எழுப்பியது போலாயிற்று.
20 யாக்கோபையும் ஏசாவையும் ஈசாக்கு ஆசீர்வதித்தான். ஈசாக்கு இதனை விசுவாசத்தின் அடிப்டையில் செய்தான். 21 யாக்கோபு யோசேப்பின் மகன்களில் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் இறந்துகொண்டிருக்கும்போது இதனைச் செய்தான். அவன் தனது கோலின் முனையில் சாய்ந்துகொண்டு தொழுதான். யாக்கோபு இப்படிச் செய்ததற்கும் அவனது விசுவாசமே காரணமாகும்.
22 யோசேப்பு இறந்துகொண்டிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டுப் போவதைப் பற்றி பேசினான். அவன் இதனை விசுவாசத்தால் சொன்னான். தனது சரீரத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களிடம் சொன்னான்.
23 மோசே பிறந்த பிறகு, அவன் அழகாக இருந்ததை அவன் பெற்றோர்கள் கண்டு மூன்று மாத காலத்திற்கு மறைத்து வைத்தார்கள். விசுவாசத்தின் அடிப்படையிலேயே இதைச் செய்தனர். அரச கட்டளைக்குப் பயப்படாமல் இதை செய்தனர்.
24 மோசே வளர்ந்து பெரியவன் ஆனான். பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை மறுத்தான். 25 பாவத்துக்குரிய தற்காலிக சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட தேவனுடய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே அவன் தேர்ந்தெடுத்தான். 26 எகிப்தின் கருவூலத்தைவிட கிறிஸ்துவுக்காகத் தாங்கிக்கொண்ட பாடுகளை மதிப்புமிக்கதாக அவன் நினைத்தான். ஏனெனில் வர இருக்கிற பலனுக்காக அவன் பார்த்திருந்தான்.
27 மோசே எகிப்திலிருந்து வெளியேறினான். தன் விசுவாசத்தின் அடிப்படையில் அப்படிச் செய்தான். அவன் அரசனின் கோபத்துக்கும் அஞ்சவில்லை. அவன் தொடர்ந்து உறுதியாக இருந்தான். ஒருவராலும் பார்க்க இயலாத தேவனை அவனால் பார்க்க முடிந்தது. 28 அவன் பஸ்காவைத் தயார் செய்தான். கதவின் மீது இரத்தத்தைப் பூசினான். யூதமக்களின் முதல் ஆண் குழந்தையை மரண தூதன் [b] கொல்லாதபடிக்கு இதைச் செய்தான். மோசே இதனை விசுவாசத்தோடு செய்தான்.
29 மோசே தன் மக்களை அழைத்துக்கொண்டு போனான். அப்போது செங்கடல் காய்ந்த தரையைப் போலாயிற்று. அவர்களின் விசுவாசமே இதற்குக் காரணமாகும். எகிப்தியர்களும் அவ்வாறே கடலைக் கடக்க முனைந்து அமிழ்ந்துபோனார்கள்.
30 எரிகோவின் சுவர்கள், தேவனது மக்களின் விசுவாசத்தினால் விழுந்துபோனது. அவர்கள் ஏழு நாட்கள் அந்தச் சுவர்களைச் சுற்றி வந்தனர். அப்புறம் அச்சுவர்கள் விழுந்தன.
31 ராகாப் என்னும் விலைமாதும் இஸ்ரவேல் ஒற்றர்களை நண்பர்களைப்போல வரவேற்றாள். அவளது விசுவாசத்தின் காரணமாகக் கீழ்ப்படியாதவர்கள் கொல்லப்பட்டபோது அவள் தன் வீட்டாருடன் சேதமடையாமல் தப்பினாள்.
32 பின்னும் வேறு எடுத்துக்காட்டுகளை நான் சொல்லவேண்டுமா! கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும் தீர்க்கதரிசிகளையும் குறித்து விளக்கிச் சொல்லக் காலம் போதாது. 33 விசுவாசத்தாலேயே அவர்கள் அரசுகளை வெற்றிகொண்டார்கள். நீதியை வலியுறுத்தினார்கள். தேவனுடைய வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டார்கள். சிலர் சிங்கங்களின் வாய்களை மூடினார்கள். 34 சிலர் நெருப்பின் உக்கிரத்தைக் குறைத்தார்கள். வாளின் சாவிலிருந்து தப்பினார்கள். பலவீனத்திலிருந்து அவர்கள் பலம் பெற்று அந்நியப் படைகளைத் தோற்கடித்து யுத்தத்தில் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். 35 இறந்துபோன தங்களுடையவர்களை பெண்கள் மீண்டும் அடைந்தார்கள். மற்றவர்கள் வாதைக்குள்ளானபோதும் விடுபட மறுத்தார்கள். மரணத்திலிருந்து ஒரு சிறந்த வாழ்விற்கென உயிரோடு எழுப்பப்படுவதற்காக இதனைச் செய்தார்கள். 36 வேறு சிலர் கேலிசெய்யப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; கட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். 37 சிலர் கல்லால் எறியப்பட்டார்கள்; வாள்களினால் இரண்டு துண்டாகக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். சிலர் செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு திரிந்து ஏழ்மையையும், துன்பத்தையும், கசப்புகளையும் அனுபவித்தனர். 38 உலகம் அந்த உத்தமர்களுக்கு உகந்ததாக இல்லை. அவர்கள் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தனர். மலைக் குகைகளிலும் பூமியில் உள்ள பொந்துகளிலும் வாழ்ந்தார்கள்.
39 தம் விசுவாசத்தாலேயே அவர்கள் புகழப்படுகின்றனர். ஆனால் இவர்களில் எவரும் தேவனுடைய வாக்குறுதியை அடையவில்லை. 40 தேவன் நமக்குச் சிறந்த சிலவற்றைத் தரத் திட்டமிட்டிருந்தார். பிறகு நம்மோடு சேர்ந்து மட்டுமே அவர்களும் முழுமைபடுத்தப்படுவார்கள்.
2008 by World Bible Translation Center