M’Cheyne Bible Reading Plan
ஜனங்கள் மீண்டும் முறையிடுதல்
11 ஜனங்கள் தங்கள் துன்பங்களைப்பற்றி முறுமுறுக்க ஆரம்பித்தனர். கர்த்தர் அவர்களது முறுமுறுப்புகளைக் கேட்டு அதனால் கோபம் கொண்டார். கர்த்தரிடமிருந்து நெருப்பு தோன்றி, முகாமின் ஓரங்களில் உள்ள சில ஜனங்களை எரித்தது. 2 எனவே ஜனங்கள் மோசேயிடம் தம் மக்களைக் காப்பாற்றுமாறு கதறினார்கள். மோசே கர்த்தரிடம் வேண்டுதல் செய்ததினால் நெருப்பு அணைந்து போயிற்று. 3 எனவே அந்த இடம் தபேரா என்று அழைக்கப்பட்டது. கர்த்தர் நெருப்பின் மூலம் அவர்கள் முகாமை எரித்ததால் இந்தப் பெயர் அந்த இடத்திற்கு ஏற்பட்டது.
எழுபது முதிய தலைவர்கள்
4 இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்ந்த அயல் நாட்டுக்காரர்கள் மற்றப் பொருட்களை உண்ண ஆசைப்பட்டார்கள். எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் முறையிட ஆரம்பித்தனர். அந்த ஜனங்கள், “நாங்கள் இறைச்சியை உண்ண ஆசைப்படுகிறோம்! 5 நாங்கள் எகிப்தில் உண்ட மீன்களை எண்ணிப் பார்க்கிறோம். அவை எங்களுக்கு விலையில்லாதது. அங்கு எங்களுக்கு வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற நல்ல காய்கறிகளும் இருந்தன. 6 ஆனால் இப்போது நாங்கள், எங்கள் பலத்தை இழந்துவிட்டோம். இந்த மன்னாவை மட்டுமே உண்கிறோம், வேறு எதையும் புசிப்பதில்லை” என்றனர். 7 (இந்த மன்னா சிறிய கொத்தமல்லி விதை போன்று அளவிலும் மரப்பிசின் போன்று தோற்றத்திலும் இருக்கும். 8 ஜனங்கள் இந்த மன்னாவைப் பொறுக்கிக்கொண்டு வந்து அதனைக் கல்லால் அரைத்து பானையில் போட்டு சமைப்பார்கள். அல்லது அதனை எந்திரங்களில் அரைத்து மாவாக்கி அப்பங்களாகச் செய்வார்கள். இந்த அப்பங்கள் ஒலிவ எண்ணெயால் செய்யப்பட்ட இனிப்பு அப்பங்களைப்போல சுவையாக இருக்கும். 9 பூமி பனியால் நனைந்திருக்கும்போது ஒவ்வொரு இரவும் இந்த மன்னா தரையில் விழும்.)
10 மோசே ஜனங்களின் முறையீட்டைக் கேட்டான். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களும் தங்கள் தங்கள் கூடார வாசலில் இருந்துகொண்டு முறையிட்டார்கள். இதனால், கர்த்தர் பெருங்கோபம் கொண்டார். மோசேயும் இதனால் சஞ்சலப்பட்டான். 11 மோசே கர்த்தரிடம், “கர்த்தாவே, ஏன் எனக்கு இந்தத் தொல்லையைத் தந்தீர்? நான் உமது ஊழியன். நான் என்ன தவறு செய்தேன்? நான் உமக்கு என்ன பொல்லாப்பு செய்தேன்? இவ்வளவு மிகுதியான ஜனங்களுக்கான பொறுப்பினை ஏன் எனக்குக் கொடுத்தீர்? 12 நான் இவர்களின் தந்தை அல்ல என்பதையும், நான் இவர்களைப் பெற்றெடுக்கவில்லை என்பதையும் நீர் அறிவீர். ஆனால் ஒரு தாதி ஒரு குழந்தையைக் கைகளில் தாங்கிச் செல்வது போன்று நான் தாங்கிச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. ஏன் இதனை என்மேல் சுமத்தினீர்? என் முன்னோருக்குத் தருவதாகச் சொன்ன தேசத்திற்கு இவர்களை அழைத்துப் போகும் பொறுப்பை என்மேல் ஏன் சுமத்தினீர்? 13 இவர்கள் அனைவருக்கும் தேவையான இறைச்சி என்னிடம் இல்லை. அவர்கள் தொடர்ந்து முறையிட்டுக்கொண்டு ‘எங்களுக்கு இறைச்சியைத் தாரும்’ என்று கேட்கிறார்கள்! 14 நான் ஒருவனாக இவர்கள் அத்தனை பேரையும் கவனித்துக்கொள்ளமுடியாது. இந்தச் சுமை எனக்கு மிகவும் அதிகமாக உள்ளது. 15 இதுபோல் தொடர்ந்து நீர் எனக்கு அவர்களின் தொல்லைகளைக் கொடுப்பதாக இருந்தால், இப்போது என்னைக் கொன்றுவிடும். உமது ஊழியனாக என்னை ஏற்றுக்கொண்டால், இப்போது எனக்கு மரணத்தைத் தாரும். நான், என் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவேன்” என்றான்!
16 கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களில் 70 முதிய தலைவர்களை என்னிடம் அழைத்து வா. இவர்கள் இஸ்ரவேலர்களின் தலைவர்களாயிருக்கிறார்கள். அவர்களை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் அழைத்து வா. அவர்கள் உன்னோடு நிற்கட்டும். 17 பிறகு நான் இறங்கி வந்து உன்னோடு பேசுவேன். இப்போது ஆவியானவர் உன்மேல் உள்ளார். ஆனால் அவர்களுக்கும் ஆவியை அளிப்பேன். பிறகு இந்த ஜனங்களைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பில் அவர்கள் உனக்கு உதவுவார்கள். இவ்வகையில் நீ மட்டும் தனியாக இவர்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டியதிருக்காது.”
18 “இவற்றை ஜனங்களிடம் கூறு: நாளைக்காக உன்னைத் தயார் செய்துகொள்! நாளை நீங்கள் இறைச்சி உண்பீர்கள். நீங்கள் முறையிட்டபோது கர்த்தர் அதனைக் கேட்டார். ‘எங்களுக்கு உண்ண இறைச்சி வேண்டும், எகிப்து எங்களுக்கு நன்றாக இருந்தது!’ என்று நீங்கள் சொன்ன சொற்களை கர்த்தர் கேட்டார். எனவே, இப்போது கர்த்தர் உங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பார். 19 நீங்கள் ஒரு நாள் அல்லது, இரு நாள் அல்லது, ஐந்து நாள் அல்லது, பத்து நாள் அல்லது, இருபது நாட்களுக்கு மேலாக இறைச்சியை உண்பீர்கள்! 20 நீங்கள் இந்த மாதம் முழுவதும்கூட இறைச்சியை உண்பீர்கள். அது உங்களுக்குத் திகட்டும்வரைக்கும் உண்பீர்கள். நீங்கள் கர்த்தருக்கு எதிராக முறையிட்டதினால் இது உங்களுக்கு ஏற்படும். கர்த்தர் உங்களோடு வாழ்கிறார். உங்களது தேவைகளை அவர் அறிவார். ஆனால் நீங்கள் அழுதீர்கள்! அவரிடம் முறையிட்டீர்கள். நாங்கள் எகிப்தை விட்டு ஏன் வந்தோம்? என்று கூறுகிறீர்கள்” என்றார்.
21 மோசே, “கர்த்தாவே இங்கே 6,00,000 மனிதர்கள் உள்ளனர். ஆனால் நீர் ‘இவர்கள் ஒரு மாதத்திற்குப் போதுமானபடி உண்ண இறைச்சியைக் கொடுப்பேன்’ என்று கூறுகிறீர். 22 நாம் இங்குள்ள அத்தனை ஆடுகளையும், மாடுகளையும் கொன்றாலும் கூட அது போதுமானதாக இராது. கடலில் உள்ள அத்தனை மீன்களையும் பிடித்தாலும்கூட அவை போதுமானதாக இராது” என்றான்.
23 ஆனால் கர்த்தர் மோசேயிடம், “கர்த்தருடைய வல்லமையைக் குறைவாக எடை போடாதே! நான் சொன்னபடி என்னால் செய்யமுடியுமா? என்பதை இப்போது காண்பாய்” என்றார்.
24 எனவே, ஜனங்களோடு பேச மோசே வெளியே சென்றான். கர்த்தர் சொன்னவற்றையெல்லாம் மோசே ஜனங்களிடம் கூறினான். பின் 70 முதிய இஸ்ரவேல் தலைவர்களைக் கூட்டி அழைத்து வந்தான். ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றி நிற்குமாறு அவர்களிடம் கூறினான். 25 பிறகு கர்த்தர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார். மோசேயின் மேல் ஆவியானவர் இருந்தார். அதே ஆவியை 70 முதிய தலைவர்கள் மேலும் கர்த்தர் வைத்தார். அவர்கள்மேல் ஆவி வந்ததும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் மட்டுமே அவ்வாறு நடந்துகொண்டனர்.
26 அப்போது எல்தாத், மேதாத் எனும் இரு முதிய தலைவர்கள் மட்டும் கூடாரத்திற்கு வெளியே போகவில்லை. அவர்களின் பெயர் முதிய தலைவர்களின் பட்டியலில் இருந்தது. எனினும் அவர்கள் கூடாரத்திற்குள்ளேயே இருந்துவிட்டனர். எனினும் அவர்கள் மீதும் ஆவி வந்தது. அவர்கள் கூடாரத்திற்குள்ளிருந்தே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 27 ஒரு இளைஞன் மோசேயிடம் ஓடிப்போய், “எல்தாத்தும், மேதாத்தும் கூடாரத்திற்குள் தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள்” என்றான்.
28 நூனின் மகனாகிய யோசுவா மோசேயிடம், “மோசே ஐயா, நீங்கள் அவர்களைத் தடுக்கவேண்டும்” என்றான். (யோசுவா தன் சிறு வயதிலிருந்தே மோசேயிடம் உதவியாளனாக இருந்தான்.)
29 ஆனால் மோசே, “நான் இப்போது தலைவன் இல்லை என்று ஜனங்கள் நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறாயா? கர்த்தரின் ஜனங்கள் அனைவரும் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அவர்கள் அனைவர் மேலும் கர்த்தர் தன் பரிசுத்த ஆவியை வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான். 30 பிறகு மோசேயும் இஸ்ரவேல் தலைவர்களும் கூடாரத்திற்குள் சென்றனர்.
காடைகள் அனுப்பப்படுதல்
31 பிறகு கடலிலிருந்து பெருங்காற்று அடிக்குமாறு கர்த்தர் செய்தார். அக்காற்று காடைகளைக் கொண்டு வந்தது. காடைகள் கூடாரத்தைச் சுற்றிலும் பறந்து வந்து தரையில் விழுந்தன. தரையின் மேல் மூன்றடி உயரத்திற்கு அவை விழுந்துகிடந்தன. ஒரு மனிதன் எல்லா திசைகளிலும் ஒரு நாள் முழுவதும் நடக்கும் தூரம்வரை அக்காடைகள் கிடந்தன. 32 ஜனங்கள் மகிழ்ச்சியோடு சென்றனர்! அவர்கள் இரவும் பகலுமாக அவற்றைச் சேகரித்தனர். ஒவ்வொருவரும் மறுநாளும் அவற்றைச் சேகரித்தனர். அவர்கள் குறைந்தபட்சம் 60 மரக்கால் அளவு சேர்த்தனர். அவற்றை வெயிலில் காயும்படி முகாம்களைச் சுற்றிலும் பரப்பி வைத்தனர்.
33 ஜனங்கள் அந்த இறைச்சியை உண்ண ஆரம்பித்தனர். ஆனால் கர்த்தரோ பெருங்கோபம் கொண்டார். அவர்கள் வாயில் இறைச்சி இருக்கும்போதே, அவற்றை அவர்கள் தின்று முடிக்கும் முன்னரே அவர்கள் நோயுறும்படி கர்த்தர் செய்தார். அதனால் பலர் மரித்துப்போனார்கள். அங்கேயே புதைக்கப்பட்டனர். 34 எனவே ஜனங்கள் அந்த இடத்திற்கு “கிப்ரோத் அத்தாவா” என்று பெயர் வைத்தனர். இறைச்சி மேல் அதிக ஆசை கொண்டு மரித்தவர்கள் புதைக்கப்பட்ட இடம் என்று இதற்கு பொருள்.
35 கிப்ரோத் அத்தாவா என்ற இடத்திலிருந்து அவர்கள் பயணப்பட்டு ஆஸ்ரோத்துக்குப் போய் அங்கே தங்கினார்கள்.
கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்
48 கர்த்தர் மேன்மையானவர்.
தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
2 தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது.
அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும்.
சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை.
அதுவே பேரரசரின் நகரமாகும்.
3 அந்நகரத்து அரண்மனைகளில்
தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார்.
4 ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து,
இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள்.
அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
5 அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.
6 அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
7 தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால்
பெருங்கப்பல்களை உடைத்தீர்.
8 ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம்.
ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம்.
தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.
9 தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.
10 தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர்,
பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர்.
நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
11 தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது.
யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன.
12 சீயோனைச் சுற்றி நட.
நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.
13 அந்த உயர்ந்த சுவர்களைப் பார்.
சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார்.
வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
14 இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன்.
அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.
1 ஆமோத்சின் மகனான ஏசாயாவின் தரிசனம். தேவன் யூதேயாவுக்கும், எருசலேமுக்கும் என்ன நிகழப்போகிறது என்பதைப்பற்றி ஏசாயாவுக்குக் காட்டினார். யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா இவர்களின் காலங்களில் ஏசாயா இவற்றைப் பார்த்தான்.
தன் ஜனங்களுக்கு எதிரான தேவனுடைய வழக்கு
2 பரலோகமே, பூமியே, கர்த்தர் சொல்லுவதைக் கேளுங்கள்! கர்த்தர் கூறுகிறார்:
“நான் எனது பிள்ளைகளை வளர்த்தேன்.
நான் எனது பிள்ளைகள் வளர உதவினேன்.
ஆனால் எனது பிள்ளைகள் எனக்கு எதிரானார்கள்.
3 ஒரு பசு தன் எஜமானனை அறியும்.
ஒரு கழுதை தன் எஜமானன் தனக்கு உணவிடும் இடத்தையும் அறியும்.
ஆனால் எனது இஸ்ரவேல் ஜனங்கள் என்னை அறியார்கள்.
என் ஜனங்கள் என்னை புரிந்துகொள்ளவில்லை”.
4 இஸ்ரவேல் நாடு முழுவதும் குற்றங்களால் நிரம்பிற்று. இக்குற்றங்கள் ஜனங்கள் சுமக்கத்தக்க கனமிக்க பாரமாயிற்று. அந்த ஜனங்கள் பொல்லாத குடும்பத்தில் பிறந்த கெட்ட பிள்ளைகளைப்போல் இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான தேவனை அவமானப்படுத்திவிட்டனர். அவர்கள் அவரை விட்டுப்போய் அயலானைப்போல் நடந்துகொண்டார்கள்.
5 தேவன் கூறுகிறார்: ஏன் என் ஜனங்களாகிய உங்களைத் தொடர்ந்து தண்டித்து வருகிறேன்? நான் உங்களைத் தண்டித்தேன், ஆனால் நீங்களோ மாறவில்லை. நீங்கள் எனக்கு எதிராகத் தொடர்ந்து கலகம் செய்து வருகிறீர்கள். இப்பொழுது ஒவ்வொரு தலையும் இதயமும் நோயுற்றுவிட்டது. 6 உங்கள் காலடியில் இருந்து உச்சந்தலைவரை உங்களது உடலின் ஒவ்வொரு பாகமும் காயமடைந்திருக்கிறது, வெட்டுப்பட்டுள்ளது, புண்ணாகியுள்ளது. நீங்கள் உங்கள் புண்களுக்காகக் கவலைப்படப்படவில்லை. உங்கள் காயங்கள் சுத்தப்படுத்தப்படவில்லை, மூடிவைக்கப்படவில்லை.
7 உங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன. உங்கள் நகரங்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன. உங்கள் பகைவர்கள் உங்கள் நிலங்களைக் கைப்பற்றிக்கொண்டனர். படைகளால் அழிக்கப்பட்ட நாடு போன்று உங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன.
8 சீயோனின் மகள் (எருசலேம்), இப்பொழுது, திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்ட காலியான கூடாரம்போல் இருக்கின்றாள். அது வெள்ளரித் தோட்டத்தில் உள்ள ஒரு பழைய வீடு போலவும் காணப்படுகின்றது. அது பகைவர்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு நகரம்போல் உள்ளது.
9 இது உண்மையானாலும், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சில ஜனங்களைத் தொடர்ந்து வாழ அனுமதித்தார். நாம் சோதோம் மற்றும் கொமோராபோல முழுவதுமாக அழிக்கப்படவில்லை.
10 சோதோமின் தலைவர்களாகிய நீங்கள் கர்த்தர் சொல்லும் செய்தியைக் கேளுங்கள்! கொமோராவின் ஜனங்களாகிய நீங்கள், தேவன் சொல்லும் போதனைகளைக் கேளுங்கள். 11 தேவன் கூறுகிறார், “நீங்கள் ஏன் தொடர்ந்து எனக்கு இத்தனை பலி கொடுக்கிறீர்கள்? நான் போதுமான அளவிற்கு உங்களிடமிருந்து ஆடு, காளை, ஆட்டுக் குட்டிகள், கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பின் பலிகளையும் பெற்றுவிட்டேன். 12 என்னைச் சந்திக்க வரும்பொழுது சகலத்தையும் என் பிரகாரத்தில் மிதிக்கிறீர்கள். இப்படி செய்யும்படி உங்களுக்குச் சொன்னது யார்?
13 “தொடர்ந்து எனக்குப் பயனற்ற பலிகளைக் கொண்டுவர வேண்டாம். நீங்கள் எனக்குத் தருகிற நறுமணப் பொருட்களை நான் வெறுக்கிறேன். புது மாதப்பிறப்பின் நாளில், ஓய்வு நாளில், விடுமுறை நாட்களில் நீங்கள் கொடுக்கும் விருந்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பரிசுத்த கூட்டங்களில் நீங்கள் செய்யும் தீமைகளை நான் வெறுக்கிறேன். 14 நான் முழுமையாக உங்கள் மாதக்கூட்டங்களையும் பண்டிகைகளையும் வெறுக்கிறேன். அவை எனக்குப் பெரும் பாரமாக உள்ளன. அப்பாரங்களைத் தாங்கி நான் சோர்ந்து போனேன்.
15 “நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி என்னிடம் ஜெபம் செய்ய வருகிறீர்கள். ஆனால், நான் உங்களை பார்க்க மறுக்கிறேன். நீங்கள் அதிகமதிகமாய் ஜெபங்களை சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களைக் கவனிக்க மறுக்கிறேன். ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தால் கறைப்பட்டுள்ளன.
16 “உங்களைக் கழுவுங்கள். உங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தீய செயல்களை நிறுத்துங்கள். நான் அத்தீயச் செயல்களைப் பார்க்க விரும்பவில்லை. தவறுகளை நிறுத்துங்கள்! 17 நல்லவற்றைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவர்களோடு நேர்மையாக இருங்கள். மற்றவர்களைத் துன்புறுத்துகிறவர்களைத் தண்டியுங்கள். பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கு உதவுங்கள். கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு உதவுங்கள்”.
18 கர்த்தர் மேலும், “வாருங்கள், நாம் இதைப்பற்றி விவாதிப்போம். உங்களது பாவங்கள் இரத்தினக் கம்பளம்போல் சிவப்பாக இருக்கிறது. ஆனால், அவைகள் கழுவப்பட்டு நீங்கள் பனிபோன்று வெண்மையாகலாம். உங்கள் பாவங்கள் பிரகாசமான சிவப்பாக இருக்கின்றன. ஆனால், நீங்கள் வெள்ளை கம்பளியைப்போன்று வெண்மையாக முடியும்.
19 “நான் சொல்கிறவற்றை நீங்கள் கவனிப்பீர்களேயானால், இந்நாட்டிலிருந்து நன்மைகளைப் பெறுவீர்கள். 20 ஆனால் நீங்கள் கவனிக்க மறுத்தால் எனக்கு எதிராவீர்கள். உங்கள் பகைவர்கள் உங்களை அழிப்பார்கள்” என்றார். கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார்.
எருசலேம் தேவனுக்கு உண்மையாக இல்லை
21 “தேவன் கூறுகிறார். எருசலேமைப் பாருங்கள். அது என்னை நம்பி என்னைப் பின்பற்றிய நகரமாக இருந்தது. அது இன்று ஒரு வேசியைப்போன்று மாறக் காரணம் என்ன? இப்போது அவள் என்னைப் பின்பற்றவில்லை. எருசலேம் முழுவதும் நீதி குடியிருந்தது. எருசலேமில் வாழ்கின்ற ஜனங்கள் தேவனுடைய விருப்பம்போல வாழவேண்டும். ஆனால் இப்போது, அதில் கொலைக்காரர்கள் வாழ்கிறார்கள்.”
22 நன்மை என்பது வெள்ளியைப்போன்றது. ஆனால் உங்கள் வெள்ளி இப்போது பயனற்றதாகிவிட்டது. தண்ணீருடன் கலந்த திராட்சைரசத்தைப்போல உங்களுடைய நன்மை இப்போது பலன் குறைந்து போயிற்று. 23 உங்கள் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் கலகக்காரர்களாகவும் கள்ளர்களின் நண்பர்களாகவும் இருக்கின்றனர். உங்கள் அதிபதிகளும், நியாயாதிபதிகளும் இலஞ்சத்தை எதிர்ப்பார்க்கின்றனர். தீமை செய்வதற்குப் பணம் பெறுகிறார்கள். உங்கள் அதிபதிகளும், நியாயாதிபதிகளும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி செய்வதில்லை. உங்கள் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் கணவனை இழந்த விதவைகளின் தேவைகளுக்குச் செவிகொடுக்கவில்லை.
24 இத்தனையும் செய்ததால் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர், இஸ்ரவேலின் வல்லமை மிக்க தேவன் கூறுகிறதாவது: “என் பகைவர்களே, உங்களைத் தண்டிப்பேன். உங்களால் எனக்குத் தொல்லை கொடுக்கமுடியாது. 25 ஜனங்கள் வெள்ளியைச் சுத்தப்படுத்த புடமிடுவதுபோல உங்கள் தீமைகளை உங்களிடமிருந்து விலக்குவேன். உங்களிடமிருந்து பயனற்றவற்றை நீக்குவேன். 26 ஆரம்ப நாட்களில் உங்களிடமிருந்த நீதிபதிகளைப்போன்றவர்களை மீண்டும் கொண்டு வருவேன். உங்களது ஆலோசகர்கள் முன்பிருந்த ஆலோசகர்களைப்போல இருப்பார்கள். அப்போது நீங்கள் இதனை ‘நல்ல நம்பிக்கைக்குரிய நகரம்’ என்று அழைப்பீர்கள்” என்றார்.
27 தேவன் நல்லவர். அவர் நீதியானவற்றை மட்டுமே செய்வார். அவர் சீயோனையும் அதற்குத் திரும்பி வருகிறவர்களையும் மீட்பார்.
28 ஆனால் அனைத்து குற்றவாளிகளும் பாவிகளும் அழிக்கப்படுவார்கள். (அவர்கள் கர்த்தரைப் பின்பற்றாதவர்கள்.)
29 நீங்கள் தொழுதுகொள்வதற்கு தேர்ந்தெடுத்த கருவாலி மரங்களையும் தோப்புகளையும் கண்டு வருங்காலத்தவர்கள் அவமானப்படுவார்கள். 30 இது நிறைவேறும். ஏனென்றால் நீங்கள் காய்ந்துபோன கருவாலி மரங்களைப்போன்றும் தண்ணீரில்லாத சோலையைபோன்றும் அழிக்கப்படுவீர்கள். 31 வலிமையான ஜனங்கள் காய்ந்து சிறு மரத்துண்டுகளைப்போலாவார்கள். வல்லமையுள்ள ஜனங்களும் அவர்களின் தீய செயல்களும் எரிந்துபோகும். அவர்களுடைய தீய செயல்கள் தீப்பொறிகள் போன்று இருக்கும். அதை எவரும் அணைக்க முடியாது.
God’s Message to Judah and Jerusalem
பழைய உடன்படிக்கையின்படி வழிபாடு
9 முதலாம் உடன்படிக்கையானது வழிபாட்டிற்கான விதிகளை உடையது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டிற்கான இடத்தை உடையது. 2 இந்த இடம் ஒரு கூடாரத்துக்கு உள்ளே இருந்தது. கூடாரத்திற்குள் முன் பகுதி உள்ள இடம் பரிசுத்தமான இடம் என அழைக்கப்பட்டது. அந்தப் பரிசுத்தமான இடத்தில் ஒரு குத்துவிளக்கும், ஒரு மேஜையும், தேவனுக்குப் படைக்கப்பட்ட சிறப்பான அப்பங்களும் இருந்தன. 3 இரண்டாம் திரைக்குப் பின்னே மிகப் பரிசுத்தமானது என அழைக்கப்படும் இடம் இருந்தது. 4 அதில் பொன்னால் செய்த தூபகலசமும் பழைய உடன்படிக்கை வைக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டியும் [a] இருந்தன. அப்பெட்டி தங்கத் தகட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டிக்குள் மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரமும் துளிர்த்த இலைகளையுடைய ஆரோனின் கைத்தடியும் இருந்தன. மேலும் பத்துக் கட்டளைகள் பொறித்த உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. 5 அப்பெட்டியின் மேல் கிருபையாகிய இருக்கையை மறைத்தபடி தேவனுடைய விசேஷ தூதர்கள் இருந்தார்கள். (இப்பொழுது இவற்றைப் பற்றிய உண்மையான விபரங்களைச் சொல்லக் காலம் போதாது.)
6 இவ்விதத்தில் எல்லாப் பொருள்களும் ஆயத்தப்படுத்தப்பட்ட பிறகு, ஆராதனை சேவையை செய்யும் பொருட்டு ஆசாரியர்கள் முதலாம் பரிசுத்தக் கூடாரத்தில் நித்தமும் செல்லத் தொடங்குவார்கள். 7 ஆனால் பிரதான ஆசாரியர் மட்டுமே மிகப் பரிசுத்தமான இரண்டாம் அறைக்குள் பலியின் இரத்தத்தைச் சிந்தி நுழைய முடியும். அவர் முதலில் தான் செய்த பாவங்களுக்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அறியாமையால் மக்கள் செய்த பாவங்களுக்காக அவர் காணிக்கைகளை வழங்கவேண்டும்.
8 முதலாம் கூடாரம் நிற்கும் வரையிலும் மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போகும் வழியானது மூடப்பட்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்தவே பரிசுத்த ஆவியானவர் இவ்விரண்டு அறைகளையும் பயன்படுத்துகிறார். 9 எல்லாமே நிகழ் காலத்தின் ஒரு அடையாளமானது. தாம் செலுத்தும் காணிக்கையாலும், பலிகளாலும் வழிபடுகிறவனின் மனசாட்சியானது முழுமைப்படுத்தப்படுவதில்லை. 10 ஏனெனில் உண்ணுதல், பருகுதல், சடங்குக் குளியல்கள் ஆகிய புற விஷயங்களைப் பற்றிய காணிக்கைகளும் பலிகளுமாகவே இருக்கின்றன. இவ்விஷயங்கள் தேவனுடைய புதிய வழி உண்டாகும் வரைக்கும் பயன்படுகின்றன.
புதிய உடன்படிக்கையின்படி வழிபாடு
11 மேலும் இப்போது வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியனாகக் கிறிஸ்து வந்திருக்கிறார். (சாதாரண கூடாரத்தின் வழியே அவர் வரவில்லை). மனிதக் கைகளால் உருவாக்கப்படாத உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான கூடாரத்தின் வழியே வந்தார். அக்கூடாரமானது தேவன் உருவாக்கிய இவ்வுலகத்தின் பகுதியல்ல. 12 மேலும் மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் இயேசு நுழைந்தபோது, வெள்ளாட்டுக்கடாக்கள் மற்றும் காளைகளின் இரத்தத்தை அவர் பயன்படுத்தவில்லை. மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் நுழைய அவர் தன் சொந்த இரத்தத்தையே பயன்படுத்தினார். எல்லா காலத்திற்கும் போதுமென்கிற அளவிற்கு ஒரே ஒருமுறை தான் அவர் அதற்குள் சென்றார். இவ்வழியில் நமக்கு அவர் நித்திய விடுதலையைப் பெற்றுத்தந்தார்.
13 வெள்ளாட்டுக்கடா காளை ஆகியவற்றின் இரத்தமும் தீட்டுப்பட்ட மக்கள் மீது தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும் அவர்களைப் பரிசுத்தமாக்கிப் புறப்பரிசுத்தம் உடையவர்களாக்க முடியும். 14 இது உண்மை எனில், கிறிஸ்துவின் இரத்தம் இதிலும் மிக்க வல்லமை உள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனுக்கு இயேசு தன்னைத் தானே ஒரு முழுமையான பலியாக வழங்கினார். ஆகவே நமக்கு ஆன்மீக மரணத்தைக் கொண்டுவருகிற தீய செயல்களில் இருந்து அவர் இரத்தமானது நம் இதயத்தை சுத்தமாக்கும். ஜீவனுள்ள தேவனை வழிபடும் வண்ணம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம்.
15 கிறிஸ்து இறந்ததால், புதிய உடன்படிக்கையின் [b] நடுவராக அவர் ஆனார். இப்போது முதல் உடன்படிக்கையின் கீழ் செய்த தவறுகளில் இருந்து மக்களை விடுவிக்கும் கிறிஸ்துவின் மரணம் ஒன்றிருந்தது. அதனால், அழைக்கப்பட்டவர்கள் என்றென்றும் உரிமைகளைப் பெறுவர்.
16 ஒரு மனிதன் இறக்கும்போது அவன் தன் மரண சாசனத்தை விட்டுச்செல்கிறான். ஆனால் அம்மரண சாசனத்தை எழுதியவன் இறந்துபோனான் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். 17 மரண சாசனத்தை எழுதியவன் வாழ்கிறான் என்றால் அந்த சாசனத்திற்குப் பொருள் இல்லை. அந்த சாசனத்தை அவன் இறந்த பிறகே பயன்படுத்த முடியும். 18 தேவனுக்கும் அவரது மக்களுக்கும் ஏற்பட்ட முதல் உடன்படிக்கையும் இது போலாயிற்று. இதுவும் இரத்தமில்லாமல் நன்மையடையவில்லை. 19 முதலில் மோசே சட்டத்தில் உள்ள ஒவ்வொரு கட்டளையையும் அறிவித்தான். பிறகு இளங்காளைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு மயிரோடும் ஈசோப்போடும் [c] கூட எடுத்து சட்டப் புத்தகத்தின் மேலும் மக்கள் மீதும் தெளிக்கப் பயன்படுத்தினான். 20 “தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுதான்” என்று மோசே கூறினான். 21 இவ்வாறு பரிசுத்தக் கூடாரத்தின் மேலும் மோசே இரத்தத்தை தெளித்தான். அத்துடன் வழிபாட்டிற்குரிய அனைத்துப் பொருட்களின் மீதும் தெளித்தான். 22 அனைத்தையும் இரத்தத்தால் சுத்தப்படுத்த முடியும் என்று சட்டம் சொல்கிறது. இரத்தம் இல்லாமல் எவ்வித பாவங்களும் மன்னிக்கப்படமாட்டாது.
கிறிஸ்துவின் பலி பாவங்களை நீக்குகிறது
23 எனவே பரலோகத்தில் உள்ளவற்றின் சாயலாக உள்ள இவற்றை விலங்குகளைப் பலி கொடுத்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் பரலோகத்தில் உள்ளவற்றிற்கு இதைவிடச் சிறப்பான பலிகள் அவசியம் ஆகும். 24 கிறிஸ்து மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போனார். ஆனால் உண்மையானதின் சாயலாக மனிதக் கைகளால் செய்யப்பட்ட இடத்திற்குப் போகவில்லை. கிறிஸ்து பரலோகத்திற்கே சென்றார். இப்போது அங்கே நமக்காக தேவனுக்கு முன் தோன்றுகிறார்.
25 ஒவ்வொரு ஆண்டும் தனக்குச் சொந்தமற்ற இரத்தத்தோடு பிரதான ஆசாரியன் மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் கிறிஸ்து தன்னையே வழங்கிக்கொள்ள வேண்டியதில்லை. 26 அப்படியானால் உலகம் உண்டானது முதல் அவர் அநேகந்தரம் இதுபோல் பாடுபட வேண்டியது இருந்திருக்கும். அவர் தம்மை தாமே பலியிட வேண்டியிருந்தது. அதனால் அவர் இந்தக் கடைசி காலத்தில் ஒரே ஒருதரம் தம்மைப் பலியிட்டார். இதன் மூலம் அவர் அனைவரது பாவங்களையும் நீக்கிவிட்டார்.
27 ஒவ்வொரு மனிதனும் ஒருமுறை மட்டுமே சாகிறான். அதன் பிறகு நியாயந்தீர்க்கப்படுகிறான். 28 ஆகையால் ஒவ்வொருவரின் பாவங்களையும் தீர்க்கும்படி கிறிஸ்து ஒருமுறை மரித்தார். மேலும் கிறிஸ்து இரண்டாம் முறையும் வருவார். பாவங்களைத் தீர்க்கும்படி அல்ல. தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அளிக்க வருவார்.
2008 by World Bible Translation Center