M’Cheyne Bible Reading Plan
வெள்ளி எக்காளங்கள்
10 கர்த்தர் மோசேயிடம், 2 “வெள்ளியைப் பயன்படுத்தி அடிப்பு வேலையினால் இரண்டு எக்காளங்களை செய்துகொள்ளுங்கள். இந்த எக்காளங்கள் ஜனங்களை கூப்பிட்டு எப்போது நகர வேண்டும் என்பதை அறிவிப்பதற்காகப் பயன்படும். 3 இரண்டு எக்காளங்களையும் தொடர்ச்சியாக பெருந்தொனியாக ஊதினால் இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட வேண்டும். 4 ஆனால் ஒரே ஒரு எக்காளத்தை மட்டும் பெருந்தொனியாகத் தொடர்ந்து ஊதினால், தலைவர்கள் மட்டும், உன்னைச் சந்திக்க கூடிவர வேண்டும். (தலைவர்கள் என்பது 12 இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் ஆகும்.)
5 “எக்காளங்களை குறைந்த நேரம் ஊதினால், ஜனங்கள் தங்கும் இடங்களைக் கலைத்து விட்டுப் புறப்படவேண்டும் என்று அர்த்தமாகும். முதல்முறை குறைந்த நேரம் ஊதும்போது ஆசரிப்புக் கூடாரத்தின் கிழக்குப் பக்கத்தில் தங்கி இருக்கும் குடும்பங்கள் புறப்பட வேண்டும். 6 இரண்டாவது முறை குறைந்த நேரம் ஊதினால், ஆசரிப்புக் கூடாரத்தின் தென் பக்கத்தில் பாளையமிட்ட குடும்பங்கள் நகர வேண்டும். 7 ஆனால் நீ ஜனங்கள் அனைவரையும் கூட்ட வேண்டும் என்று விரும்பினால் எக்காளங்களை சற்று வித்தியாசமாக ஓயாமல் நெடுநேரம் ஊத வேண்டும். 8 ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் மாத்திரமே எக்காளங்களை ஊத வேண்டும். இதுவே என்றென்றும் வரும் தலைமுறைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய சட்டமாகும்.
9 “நீங்கள் உங்கள் சொந்த பூமியில் பகைவர்களோடு சண்டையிட வேண்டி வந்தால் எக்காளத்தை மிகச் சத்தமாகப் போருக்கு முன் ஊதுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அதனைக் கேட்டு உங்கள் பகைவரிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார். 10 உங்களது சிறப்புக் கூட்டங்களுக்கும், மாதப் பிறப்பு நாட்களிலும், மகிழ்ச்சிக் காலங்களிலும் எக்காளங்களை ஊதுங்கள். நீங்கள் தகன பலியும், சமாதான பலியும் கொடுக்கும்போதெல்லாம் எக்காளங்களை ஊதுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை நினைவுகூருவதற்கு இந்த எக்காளச் சத்தம் உதவும். இவ்வாறு செய்யுமாறு நான் கட்டளையிடுகிறேன், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.
இஸ்ரவேல் ஜனங்கள் முகாமோடு புறப்படுதல்
11 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாவது மாதத்தின் 20 ஆம் நாளில், உடன்படிக்கைக் கூடாரத்தின் மேல் இருந்த மேகமானது எழும்பிற்று. 12 எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் சீனாய் பாலைவனத்தைக் கடந்து பாரான் பாலைவனத்தில் நிற்கும்வரை பயணம் செய்தனர். 13 இதுவே இஸ்ரவேல் ஜனங்கள் தம் முகாமை கலைத்துவிட்டு, முதல் முதலாக புறப்பட்ட சம்பவம் ஆகும். மோசேயிடம் கர்த்தர் ஆணையிட்டபடியே அவர்கள் நகர்ந்து சென்றனர்.
14 யூதாவின் முகாமில் உள்ள மூன்று குழுக்களும் முதலில் சென்றன. அவர்கள் தங்கள் கொடியோடு பயணம் செய்தனர். முதல் குழுவானது யூதாவின் கோத்திரமாகும். அம்மினதாபின் மகனான நகசோன் அக்குழுவின் தலைவனாக இருந்தான். 15 அடுத்து இசக்காரின் கோத்திரம் வந்தது. சூவாரின் மகனான நெதனெயேல் இதற்குத் தலைவனாக இருந்தான். 16 அதற்கு அடுத்து செபுலோனின் கோத்திரம் வந்தது. ஏலோனின் மகனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான்.
17 பிறகு, பரிசுத்தக் கூடாரம் இறக்கி வைக்கப்பட்டது.பரிசுத்தக் கூடாரத்தைக் கெர்சோன் மற்றும் மெராரி குடும்பத்தில் உள்ளவர்கள் சுமந்துகொண்டு வந்தனர். எனவே, இக்குடும்பத்தவர்கள் இவ்வரிசையில் அடுத்ததாக வந்தனர்.
18 பிறகு ரூபனின் முகாமைச் சேர்ந்த மூன்று குழுக்களும் வந்தன, அவர்கள் தம் கொடியோடு பயணம் செய்தனர். முதலில் ரூபனின் கோத்திரம் வந்தது. சேதேயூரின் மகன் எலிசூர் இதற்குத் தலைவனாக இருந்தான். 19 அடுத்து சிமியோனின் கோத்திரம் வந்தது. சூரிஷதாயின் மகனான செலூமியேல் இதற்குத் தலைவனாயிருந்தான். 20 அதற்கு அடுத்து காத் கோத்திரம் வந்தது, தேகுவேலின் மகனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான், 21 பிறகு கோகாத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரிசுத்த இடத்தில் இருக்கும் பரிசுத்தப் பொருட்களைச் சுமந்துவந்தனர். இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் பரிசுத்த கூடாரத்தை அமைத்து முடிப்பார்கள்.
22 அதற்குப் பிறகு எப்பிராயீம் கோத்திரத்தின் முகாமில் இருந்து மூன்று குழுக்கள் தங்கள் கொடிகளோடு பயணம் செய்தனர். முதலில் எப்பிராயீமின் கோத்திரம் வந்தது. அம்மியூதின் மகனான எலிஷாமா அதற்குத் தலைவனாக இருந்தான். 23 அடுத்து மனாசேயின் கோத்திரம் வந்தது. பெதாசூரின் மகனான கமாலியேல் அதற்குத் தலைவனாக இருந்தான். 24 அடுத்து பென்யமீன் கோத்திரம் வந்தது. கீதெயோனின் மகனான அபீதான் அதற்குத் தலைவனாக இருந்தான்.
25 இவ்வரிசையில் உள்ள கடைசி மூன்று கோத்திரங்களும் மற்றக் கோத்திரங்களுக்குப் பாதுகாவலாக இருந்தது. அது தாண் கோத்திரத்தின் பிரிவுகள் ஆகும். அவர்கள் தங்கள் கொடியோடு பயணம் செய்தனர். முதலில் தாணின் கோத்திரம் வந்தது. அம்மிஷதாயின் மகனான அகியேசேர் அதற்குத் தலைவனாக இருந்தான். 26 அடுத்து ஆசேர் கோத்திரம் வந்தது. ஓகிரானின் மகனான பாகியேல் அதற்குத் தலைவனாக இருந்தான். 27 நப்தலியின் கோத்திரம் அதற்கு அடுத்து வந்தது. ஏனானின் மகனான அகிரா அதற்குத் தலைவனாக இருந்தான். 28 இவ்வாறுதான் இஸ்ரவேல் ஜனங்கள் ஓரிடத்தை விட்டு இன்னொரு இடத்துக்குப் போகும்போது வரிசை முறையைக் கைக்கொண்டனர்.
29 ஓபாப், மீதியானியனான ரெகுவேலின் மகன். (ரெகுவேல் மோசேயின் மாமனார்.) மோசே ஓபாபிடம், “தேவன் எங்களுக்கு தருவதாக வாக்களித்துள்ள நாட்டிற்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம். எங்களோடு வாரும், உமக்கு நாங்கள் நல்லவர்களாக இருப்போம். இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் நன்மை செய்வதாக வாக்களித்துள்ளார்” என்று கூறினார்.
30 ஆனால் ஓபாப், “இல்லை நான் உங்களோடு வரமாட்டேன். நான் எனது தாய் நாட்டிற்குத் திரும்பிப் போகிறேன். அங்கே என் சொந்த ஜனங்கள் இருக்கின்றனர்” என்றான்.
31 பிறகு மோசே, “தயவுசெய்து எங்களைவிட்டுப் போகாதிரும், எங்களைவிட இந்தப் பாலைவனத்தைப்பற்றி உமக்கு நன்றாகத் தெரியும். நீர் எங்களுக்கு வழிகாட்டியாக இரும். 32 நீர் எங்களோடு வந்தால், கர்த்தர் எங்களுக்கு அளிக்கும் நன்மையை உம்மோடு பகிர்ந்துகொள்வோம்” என்றான்.
33 எனவே, ஓபாப் ஒப்புக்கொண்டான். பிறகு அவர்கள் கர்த்தரின் மலையிலிருந்து பயணம் செய்தனர். ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு முன்னே சென்றார்கள். மூன்று நாட்கள் அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து பயணம் செய்து முகாம் அமைப்பதற்காக இடம் பார்த்தனர். 34 கர்த்தரின் மேகமானது தினமும் அவர்களுக்கு மேல் சென்றது. ஒவ்வொரு நாள் காலையிலும் அது வழிகாட்டிய வண்ணம் சென்றது.
35 ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு நகரும்போதெல்லாம் மோசே:
“கர்த்தாவே எழுந்திரும்!
உமது பகைவர்கள் சிதறடிக்கப்படட்டும்.
உமது பகைவர்கள் உம்மைவிட்டு ஓடட்டும்” என்று சொன்னான்.
36 பரிசுத்தப் பெட்டியை அவர்கள் கீழே வைக்கும்போதெல்லாம் மோசே எப்பொழுதும்,
“கர்த்தாவே, அநேக ஆயிரங்களான இஸ்ரவேல் ஜனங்களிடம் திரும்பி வாரும்” என்று சொன்னான்.
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்
46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
2 எனவே பூமி நடுங்கினாலும்,
மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
3 கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.
4 உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
5 அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
6 தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
8 கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
9 பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.
10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.
11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்
47 சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள்,
தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள்.
2 உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர்.
பூமியெங்கும் அவர் பேரரசர்.
3 பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார்.
அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார்.
4 தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார்.
தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார்.
5 எக்காளமும் கொம்பும் முழங்க,
கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார்.
6 தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
7 அகில உலகத்திற்கும் தேவனே அரசர்.
துதிப் பாடல்களைப் பாடுங்கள்.
8 பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார்.
எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார்.
9 ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத்
தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள்.
எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள்.
தேவனே எல்லோரிலும் மேன்மையானவர்.
8 நீர் என் தாயிடம் பால் குடித்த என் இளைய சகோதரனைப்போன்று
இருந்தால்
நான் உம்மை வெளியில் சந்திக்கும்போது உம்மை முத்தமிட முடியும்.
இதனைத் தவறு என்று எவரும் சொல்லமாட்டார்கள்.
2 நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்.
என் தாய் எனக்குக் கற்பித்த அறைக்கும் அழைத்துச் செல்வேன்.
நான் உமக்கு மாதளம் பழரசத்தைக் குடிக்கக் கொடுப்பேன்.
கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும் கொடுப்பேன்.
அவள் பெண்களிடம் பேசுகிறாள்
3 அவரது இடதுகை என் தலைக்குக்கீழ் இருக்கும்.
அவரது வலதுகை என்னை அணைத்துக்கொள்ளும்.
4 எருசலேம் பெண்களே! வாக்குறுதி கொடுங்கள்.
நான் தயாராகும்வரை என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பவேண்டாம்.
எருசலேம் பெண்கள் பேசுகிறார்கள்
5 இந்த பெண் யார்?
தன் நேசரின்மேல் சார்ந்து கொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிறாள்.
அவள் அவனிடம் பேசுகிறாள்
கிச்சிலி மரத்தடியில் உம்மை எழுப்பினேன்.
அங்கே உம்மை உமது தாய் பெற்றாள்.
அங்கே உம் தாய் உம்மை துன்பப்பட்டுப் பெற்றாள்.
6 என்னை உமதருகில் வைத்துக்கொள்ளும்.
உம் இதயத்தின்மேல் ஒரு முத்திரையைப்போல் கையில் அணிந்துகொள்ளும்.
நேசமானது மரணத்தைப்போன்று வலிமையானது.
நேச ஆசையானது கல்லறையைப்போன்று வலிமையானது.
அதன் பொறிகள் சுவாலை ஆகின்றன.
பின் அது பெரிய நெருப்பாக வளர்கின்றது.
7 ஒரு வெள்ளம் அன்பை அழிக்க முடியாது.
ஒரு ஆறு அன்பை இழுத்துச் செல்லமுடியாது.
ஒருவன் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் அன்பிற்காகக் கொடுத்துவிட்டால்
ஜனங்கள் அவனை இழிவாகவோ அல்லது மட்டமாகவோ கருதுவார்களா?
அவளது சகோதரர்கள் பேசுகிறார்கள்
8 எங்களுக்கு ஒரு சிறிய சகோதரி இருக்கிறாள்
அவளது மார்பகங்கள் இன்னும் வளரவில்லை.
ஒருவன் அவளை மணக்க வரும்போது
எங்கள் சகோதரிக்காக நாங்கள் என்ன செய்வோம்?
9 அவள் ஒரு மதில் சுவராக இருந்தால்
நாங்கள் அதைச்சுற்றி வெள்ளிக் கோட்டையைக் கட்டுவோம்.
அவள் ஒரு கதவாக இருந்தால்
அவளைச் சுற்றி கேதுருமரப் பலகைகளை இணைப்போம்.
அவள் சகோதரர்களுக்குப் பதில் கூறுகிறாள்
10 நான் ஒரு சுவர்.
எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள்.
அவர் என்னில் திருப்தி அடைகிறார்.
அவன் பேசுகிறான்
11 சாலொமோனுக்குப் பாகால் ஆமோனில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
அத்தோட்டத்தின் காவலுக்காக அவன் சிலரை நியமித்தான்.
ஒவ்வொருவரும்
1,000 வெள்ளிகாசு பெறுமான திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்தான்.
12 சாலொமோனே, நீர் உமது 1,000 வெள்ளி காசுகளையும் வைத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொருவனுக்கும் அவன் கொண்டுவந்த திராட்சைகளுக்காக 200 வெள்ளிகள் கொடும்.
ஆனால் எனது சொந்தத் திராட்சைத் தோட்டத்தை நானே கவனித்துக்கொள்வேன்.
அவன் அவளிடம் பேசுகிறான்
13 தோட்டத்தில் அமர்ந்திருக்கிறவளே,
உன் குரலை நண்பர்கள் கேட்கின்றார்கள்
நானும் அதைக் கேட்கவிடு.
அவள் அவனிடம் பேசுகிறாள்
14 என் நேசரே வேகமாக வாரும்.
மணப் பொருட்கள் நிறைந்த மலைகளின்மேல் திரியும் வெளிமானைப்போலவும்,
மரைகளின் குட்டிகளைப்போலவும் இரும்.
இயேசுவே நமது பிரதான ஆசாரியர்
8 பரலோகத்தில் தேவனுடைய சிம்மாசனத்திற்கு வலதுபக்கமாய் வீற்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார் என்பதையே நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். 2 மேலும், பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்லாமல் தேவனால் ஸ்தாபிக்கப்பட்ட பரிசுத்தக் கூடாரத்திலும் அவர் ஆசாரியராக சேவை செய்துகொண்டிருக்கிறார்.
3 காணிக்கைகளையும் பலிகளையும் கொடுக்கும் பொருட்டு ஒரு பிரதான ஆசாரியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆதலால் வழங்குவதற்கு ஏதோ ஒன்று இயேசுவுக்கும் தேவையாயிருக்கிறது. 4 நமது பிரதான ஆசாரியனும் இப்போது பூமியில் இருந்திருந்தால், ஆசாரியனாக இருக்கமாட்டார். ஏனெனில் சட்டம் விவரிக்கிற காணிக்கைகளை வழங்குகிற ஆசாரியர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். 5 அவர்கள் புரியும் சேவையானது பரலோகத்தில் உள்ள சேவையின் சாயலாகவும், நிழலாகவும் மட்டுமே இருக்கிறது. அதனால்தான் பரிசுத்தக் கூடாரத்தை மோசே ஸ்தாபிக்கப் போகும்போது தேவன் எச்சரித்தார். “மலையிலே உனக்கு நான் காட்டிய மாதிரியின்படியே நீ ஒவ்வொன்றையும் செய்ய உறுதியாய் இரு” என்று தேவன் சொன்னார். 6 மிக உயர்ந்த கடமையானது இயேசுவுக்குத் தரப்பட்டது என்பதே இதன் பொருள் ஆகும். மேலும் இதே முறையில் அவர் நடுவராக இருக்கிற உடன்படிக்கையும் உயர்வானதாகும். ஏனெனில், நல்ல வாக்குறுதிகளால் இந்த உடன்படிக்கை நிறுவப்பட்டது.
7 பழைய உடன்படிக்கையில் எவ்விதக் குறையும் இல்லாவிட்டால் இரண்டாவது உடன்படிக்கைக்குத் தேவையில்லாமல் போயிருக்கும். 8 ஆனால் தேவன் மக்களிடம் சில பிழைகளைக் கண்டுபிடித்து அவர்களிடம்,
“இஸ்ரவேல் [a] மக்களோடும் யூதா மக்களோடும்
ஒரு புதிய உடன்படிக்கையை நான் ஏற்படுத்தும் காலம் வந்துகொண்டிருக்கிறது.
9 அவர்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று எகிப்துக்கு வெளியே வழி நடத்தியபோது அவர்களுடைய முன்னோர்களோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கைபோல் அது இருக்காது.
அது வித்தியாசமாக இருக்கும், ஏனெனில், அந்த உடன்படிக்கைக்கு அவர்கள்
உண்மையுள்ளவர்களாகத் தொடர்ந்து இருக்கவில்லை என்பதால் நான் அவர்களிடமிருந்து விலகினேன்.”
அக்காரியங்களைக் கர்த்தர் சொன்னார்.
10 “அந்த நாட்களுக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களோடு நான் செய்துகொள்ளும் புதிய உடன்படிக்கையாகும் இது.
நான் எனது சட்டங்களை அவர்கள் மனங்களில் பதித்து அவர்கள் இதயங்களின் மேல் எழுதுவேன்.
நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.
அவர்கள் எனது பிள்ளைகளாக இருப்பார்கள்.
11 அதற்குப் பின்பு கூடவாழும் குடிமகனுக்கோ அல்லது தேசத்தவனுக்கோ கர்த்தரை அறிந்துகொள் எனப் போதிக்கவேண்டிய அவசியம் ஒருவனுக்கும் இருக்காது.
ஏனெனில் சிறியவன் முதற் கொண்டு பெரியவன் வரைக்கும் அவர்கள் எல்லாரும் என்னை அறிவார்கள்.
12 ஏனெனில் நான் அவர்கள் எனக்கெதிராகச் செய்த தவறுகளை மன்னித்து விடுவேன்.
அவர்களின் பாவங்களை இனிமேல் நினையாது இருப்பேன்.” (A)
13 தேவன் இதனைப் புதிய உடன்படிக்கை என்று அழைத்தபோது முதல் உடன்படிக்கையை பழசாக்கினார். இப்போது பழமையானதும் நாள்பட்டிருக்கிறதுமான அந்த உடன்படிக்கை விரைவில் மறைந்துபோகும்.
2008 by World Bible Translation Center