M’Cheyne Bible Reading Plan
விளக்குத் தண்டு
8 கர்த்தர் மோசேயிடம், 2 “நான் காட்டிய இடத்தில் ஏழு விளக்குகளையும் வைக்க வேண்டும் என்று ஆரோனிடம் சொல். ஏழு விளக்குகளும் விளக்குத் தண்டுக்கு நேரே எரிய வேண்டும்” என்று கூறினார்.
3 ஆரோன் அவ்வாறே விளக்குகளைச் சரியான இடத்தில் வைத்தான். விளக்குத் தண்டுக்கு எதிரேயுள்ள பகுதியில் ஒளி வீசுமாறு விளக்குகள் இருந்தன. கர்த்தர் மோசேக்கு இட்ட கட்டளைக்கு ஆரோன் கீழ்ப்படிந்தான். 4 விளக்குத் தண்டு கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டது. இது அடித்த பொன்னால் செய்யப்பட்டது. அடிப்பாகம் முதல் உச்சிவரை பொன்னால் பூ வேலைகள் செய்யப்பட்டிருந்தது. மோசேயிடம் கர்த்தர் சொன்னபடியே விளக்கு அமைக்கப்பட்டிருந்தது.
லேவியர்களை அர்ப்பணித்தல்
5 கர்த்தர் மோசேயிடம், 6 “மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து லேவியர்களைப் பிரித்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக. 7 கீழ்க்கண்டவாறு அவர்களைச் சுத்தப்படுத்த வேண்டும். அவர்கள் மீது பாவப் பரிகாரத்திற்குரிய சிறப்பான தண்ணீரைத் தெளிக்க வேண்டும். பின் அவர்கள் உடல் முழுவதிலும் சவரம் பண்ணிக் கொண்டு ஆடைகளைச் சலவை செய்ய வேண்டும். இது அவர்களின் உடலைச் சுத்தமாக்கும்.
8 “லேவியர்களில் ஆண்கள் ஒரு இளங்காளையையும், தானியக் காணிக்கையையும் எடுத்து வரவேண்டும். அப்பலியானது எண்ணெயோடு கலக்கப்பட்ட மெல்லிய மாவாக இருக்கும். பின் இன்னொரு இளங்காளையைப் பாவப் பரிகார பலியாகக் கொண்டு வரவேண்டும். 9 லேவியர்களை ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிரேயுள்ள இடத்தில் கூட்டவேண்டும். பின் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அங்கே கூட்டவேண்டும். 10 பின் லேவியரை கர்த்தருக்கு முன்னால் அழைத்து வாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்கள்மீது தம் கைகளை வைக்க வேண்டும். 11 பிறகு ஆரோன் லேவியர்களை கர்த்தருக்கு அர்ப்பணிக்க வேண்டும். அவர்கள் தேவனுக்கு அளிக்கப்படும் காணிக்கையைப் போன்று இருப்பார்கள். இம்முறையில் லேவியர்கள் கர்த்தருக்குத் தாங்கள் செய்ய வேண்டிய சிறப்பு வேலைகளுக்காகத் தயாராயிருப்பார்கள்.
12 “தங்கள் கைகளை காளைகளின் தலை மீது வைக்குமாறு லேவியர்களுக்குக் கூறுங்கள். ஒரு காளை, கர்த்தருக்குரிய பாவப்பரிகார பலியாகும். இன்னொரு காளை, கர்த்தருக்குரிய தகன பலியாகும். இப்பலிகளினால் லேவியர்கள் சுத்தம் செய்யப்படுகின்றனர். 13 ஆரோன் மற்றும் அவனது மகன்களின் முன்னிலையில் நிற்குமாறு லேவியர்களிடம் கூறு. பிறகு லேவியர்களை கர்த்தருக்கு அர்ப்பணித்துவிடு அவர்கள் அசைவாட்டும் பலியைப் போன்றவர்கள். 14 இது லேவியர்களைப் பரிசுத்தமாக்கும். அவர்கள் தேவனுக்காக ஒரு சிறப்பான முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைக் காட்டும். இவர்கள் மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். லேவியர்கள் எனக்குரியவர்கள்.
15 “எனவே லேவியர்களை சுத்தமாக்குங்கள். அவர்களை கர்த்தருக்குக் கொடுங்கள். அவர்கள் அசைவாட்டும் பலியைப் போன்றவர்கள். நீங்கள் இவ்வாறு செய்த பிறகு அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வந்து தம் பணியைச் செய்யலாம். 16 இஸ்ரவேலர்கள் லேவியர்களை எனக்குக் கொடுப்பார்கள். அவர்கள் எனக்கு உரியவர்கள். ஒவ்வொரு இஸ்ரவேல் குடும்பமும் தனக்கு முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகளை எனக்குத் தர வேண்டும் என்று கடந்த காலத்தில் கூறியிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பதிலாக லேவியர்களை நான் இப்போது எடுத்துக்கொண்டேன். 17 இஸ்ரவேலர்களில் முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகள் ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். அது மனிதர்களா, அல்லது மிருகங்களா என்பது ஒரு பொருட்டல்ல. அவை எனக்குரியதாகும். ஏனென்றால் நான் எகிப்திலே, முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகளையும் மிருகங்களையும் கொன்றேன். அதோடு இஸ்ரவேலில் முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகளை எனக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். 18 ஆனால் இப்போது இவர்களின் இடத்தில் லேவியர்களை எடுத்துக்கொண்டேன். இஸ்ரவேலில் உள்ள மற்ற குடும்பங்களில் முதலாவதாகப் பிறந்த ஆண் மகன்களுக்குப் பதிலாக லேவியர்களை எடுத்துக்கொண்டேன். 19 இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களிலிருந்தும் லேவியர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் தத்தமாகக் கொடுத்தேன். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்காவும் சேவை செய்வார்கள். இஸ்ரவேல் ஜனங்களை சுத்தப்படுத்தும் பலிகளைச் செலுத்த உதவி செய்வார்கள். இதனால் பெருநோய்களும், துன்பங்களும் இஸ்ரவேலர்கள் பரிசுத்தமான இடத்திற்குள் வரும்போது ஏற்படுவதில்லை” என்றார்.
20 எனவே மோசே, ஆரோன், இஸ்ரேவேல் ஜனங்கள் அனைவரும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தனர். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் லேவியரோடு சேர்ந்து செயல்பட்டனர். 21 லேவியர்கள் தங்களையும், தங்கள் ஆடைகளையும் சுத்தப்படுத்திக்கொண்டனர். ஆரோன் லேவியர்களை அசைவாட்டும் பலிபோன்று கர்த்தருக்கு அர்ப்பணித்தான். ஆரோன் பலிகளைக் கொடுத்ததின் மூலம் அவர்களின் பாவங்கள் நீக்கப்பட்டு, அவர்கள் பரிசுத்தம் அடைந்தனர். 22 அதன் பிறகு லேவியர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் தங்கள் பணியைச் செய்ய வந்தனர். ஆரோனும் அவனது மகன்களும் அவர்களைக் கண்காணித்தனர். லேவியர்களின் பணிகளுக்கு இவர்களே பொறுப்பானவர்கள். மோசேயிடம் கர்த்தர் சொன்னபடியே ஆரோனும் அவனது மகன்களும் செயல்பட்டனர்.
23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 24 “இது லேவியர்களுக்கான சிறப்புக் கட்டளைகள் ஆகும். ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள வேலைகளை லேவியர்களில் 25 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்டவர்கள் வந்து பங்கிட்டுச் செய்ய வேண்டும். 25 ஆனால், ஒருவனுக்கு 50 வயதாகும்போது அவன் தன் பணியிலிருந்து ஓய்வுபெற வேண்டும். அவன் மேலும் வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை. 26 இப்படிப்பட்ட 50 வயதும் அதற்கு மேலும் ஆன ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் சகோதரர்களின் வேலைக்கு உதவியாக இருக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வேலைகளைத் தாமாகவே செய்யக் கூடாது. நீங்கள் லேவியர்களை அவர்களின் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும்போது இவற்றைச் செய்யவேண்டும்” என்றார்.
கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ‘மஸ்கீல்’ என்னும் பாடல்
44 தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
2 தேவனே, உமது மிகுந்த வல்லமையினால்
பிறரிடமிருந்து இந்த தேசத்தை எடுத்து எங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அந்நியர்களை அழித்தீர்.
இத்தேசத்தினின்று அவர்களைத் துரத்தி விலக்கினீர்.
3 எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை.
அவர்களின் பலமான கரங்கள் அவர்களை வெற்றி வீரர்களாக்கவில்லை.
நீர் எங்கள் முன்னோரோடிருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது.
தேவனே, உமது பெரிய வல்லமை எங்கள் முற்பிதாக்களைக் காத்தது. ஏனெனில் நீர் அவர்களை நேசித்தீர்.
4 என் தேவனே, நீர் என் அரசர்.
நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.
5 என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம்.
உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம்.
6 நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன்.
என் வாள் என்னைக் காப்பாற்றாது.
7 தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர்.
எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர்.
8 தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம்.
உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்!
9 ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர்.
நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர்.
யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை.
10 எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர்.
எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர்.
11 உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர்.
தேசங்களில் எல்லாம் எங்களைச் சிதறடித்தீர்.
12 தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர்.
நீர் எங்களை விலை பேசவுமில்லை.
13 எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர்.
அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள்.
14 ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம்.
தங்களுக்கென நாடற்ற ஜனங்கள் கூட எங்களைப் பார்த்து நகைத்துத் தலையைக் குலுக்குகிறார்கள்.
15 நான் நாணத்தால் மூடப்பட்டேன்.
நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன்.
16 என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர்.
என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.
17 தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை.
ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர்.
உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை.
18 தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை.
உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
19 ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர்.
மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர்.
20 தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா?
பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை!
21 உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார்.
எங்கள் ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.
22 தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்.
கொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போலானோம்.
23 என் ஆண்டவரே, எழுந்திரும்!
ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்!
எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும்.
24 தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்?
எங்கள் வேதனைகளையும், தொல்லைகளையும் நீர் மறந்து விட்டீரா?
25 நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம்,
தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம்.
26 தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும்.
உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும்.
எருசலேம் பெண்கள் அவளிடம் பேசுகிறார்கள்
6 அழகான பெண்ணே
உன் நேசர் எங்கே போனார்?
உன் நேசர் எந்த வழியாகப் போனார்?
எங்களிடம் சொல். அவரைத் தேட உனக்கு உதவி செய்வோம்.
அவள் எருசலேம் பெண்களுக்கு பதிலளிக்கிறாள்
2 என் நேசர் கந்தவர்க்கப் பூக்களுக்காக தோட்டத்தில் மேய
லீலி மலர்களைக் கொய்ய தன் தோட்டத்திற்குப் போனார்.
3 நான் அவருக்குரியவள். அவர் எனக்குரியவர்.
அவர் லீலிகளை மேய்பவர்.
அவன் அவளிடம் பேசுகிறான்
4 என் அன்பே நீ திர்சாவைப்போன்று அழகானவள்.
எருசலேமைப்போன்று இனிமையானவள்.
நீ கம்பீரமான நகரங்களைப் போன்றவள்.
5 என்னைப் பாராதே உன் கண்கள் என்னை வென்றுவிட்டன.
உன் கூந்தல் கீலேயாத் மலைச் சரிவில் நடனமாடும்
வெள்ளாட்டு மந்தையைப் போல் அசைந்துகொண்டிருக்கிறது.
6 உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போலுள்ளன.
அவை இரட்டைக் குட்டிகள் போட்டு,
எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப் போலுள்ளது.
7 உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டிவைக்கப்பட்ட
மாதளம் பழங்களைப் போன்றுள்ளன.
8 அறுபது ராணிகள் இருக்கலாம்
எண்பது மறுமனையாட்டிகள் இருக்கலாம்.
எண்ண முடியாத அளவிற்கு இளம் பெண்கள் இருக்கலாம்.
9 ஆனால் எனக்காக ஒரே ஒரு பெண்ணே இருக்கிறாள்.
எனது புறாவே நீயே எனது பரிபூரணமானவள்.
அவளே தன் தாய்க்கு மிகவும் பிரியமான மகள்.
அவளே தன்னைப் பெற்றவளால் மிகவும் நேசிக்கப்படுபவள்.
இளம் பெண்கள் அவளைப் பார்த்து பாராட்டுகிறார்கள்.
ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் பாராட்டுகிறார்கள்.
பெண்கள் அவளைப் பாராட்டுகிறார்கள்
10 யார் இந்த இளம் பெண்?
விடியலின் வானம்போல் பிரகாசிக்கிறாள்.
நிலவைப்போல் அழகாக இருக்கிறாள்.
சூரியனைப்போல் ஒளி வீசுகிறாள்.
வானத்தில் உள்ள படைகளைப்போல்
கம்பீரமாக விளங்குகிறாள்.
அவள் பேசுகிறாள்
11 பள்ளத்தாக்குகளில் பழுத்த கனிகளையும்,
திராட்சைத் தோட்டத்தில் தோன்றிய துளிர்களையும்
மதளஞ்செடிகளால் மலர்ந்த பூக்களையும் காண,
நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.
12 நான் உணர்ந்துகொள்வதற்கு முன்பே,
என் ஆத்துமா என்னை அரசர்களின் இரதங்களுக்குள் அமரச்செய்கிறது.
எருசலேம் பெண்கள் அவளை அழைக்கிறார்கள்
13 திரும்பிவா சூலமித்தியே திரும்பிவா,
திரும்பி வா, திரும்பிவா அப்பொழுதுதான் உன்னைப் பார்க்கமுடியும்
சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்?
அவள் மகானனம் நடனம் ஆடுகிறாள்.
6 ஆகையால் நாம் கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளிலிருந்து முன்னேறிச்சென்று பூரணமடைய வேண்டும். செத்த செயல்களிலிருந்து விலகுதல் பற்றியும், தேவனில் விசுவாசம் வைப்பது பற்றியும் உள்ள அடிப்படை போதனைகளையே மீண்டும் மீண்டும் நாம் போதிக்க வேண்டாம். 2 ஞானஸ்நானம் பற்றியும், கைகளைத் தலை மேல் வைப்பதுபற்றியும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் பற்றியும், என்றென்றைக்குமான நியாயத்தீர்ப்பு பற்றியும் ஏற்கெனவே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, இதற்கு மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம்கொண்டவர்களாக நாம் முன்னேற வேண்டும். 3 தேவன் விரும்பினால் நாம் இதைச் செய்வோம்.
4-6 கிறிஸ்துவின் வழியிலிருந்து விலகிய மக்களை மீண்டும் அவ்வாழ்க்கைக்குக் கொண்டுவர முடியுமா? உண்மையைக் கற்றுக்கொண்டவர்களைப் பற்றி நான் பேசுகிறேன். அவர்கள் தேவனுடைய நன்மைகளைப் பெற்றுக்கொண்டனர். பரிசுத்த ஆவியானவரில் பங்குபெற்று தேவனுடைய செய்தியையும் வர இருக்கிற காலத்தின் வல்லமையையும் அவர்கள் ருசித்திருக்கிறார்கள். மேலும் அவை மிக நல்லவை என அவர்கள் தமக்குத்தாமே கண்டுகொண்டனர். ஆனால் பிறகு அவர்கள் கிறிஸ்துவின் வழியை விட்டு விலகினார்கள். மீண்டும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் வருவது கடினம். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறைந்து விட்டனர். அவர்கள் கிறிஸ்துவுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்.
7 அவர்கள் ஒரு வயலைப் போன்றவர்கள். அந்நிலம் மழை நீரை உறிஞ்சி தன்னை உழுகிறவர்களுக்கு நல்விளைச்சலைக் கொடுத்தால், பிறகு அதைப் பற்றி மக்கள் நல்ல வார்த்தைகளைச் சொல்கிறார்கள். ஆனால் முள்செடிகளையும் களைகளையும் தவிர வேறு எதையும் கொடுக்காத நிலத்தை மக்கள் சபிப்பார்கள். மேலும், பிறகு அது எரியூட்டப்படும். 8 ஆனால் அந்த நிலம் முட்களையும் பூண்டுகளையும் வளர்த்தால் அது பயனற்றதாகும். அந்நிலம் அபாயகரமானது. தேவன் அதனை சபிப்பார். அது நெருப்பால் அழிக்கப்படும்.
9 அன்பான நண்பர்களே, நாங்கள் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறோம். ஆனால் உண்மையில் உங்களிடமிருந்து சிறப்பானவற்றை எதிர்பார்க்கிறோம். இரட்சிப்பிற்குரியதை நீங்கள் செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். 10 தேவன் நீதியுள்ளவர். தேவன் நீங்கள் செய்த காரியங்களையும் நீங்கள் அவருடைய மக்களுக்கு உதவி செய்தபோதும், தொடர்ந்து உதவி செய்கிறபோதும் உங்கள் அன்பையும் உங்கள் செயல்களையும் அவர் மறக்கமாட்டார். 11 நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிற இரட்சிப்பை அடையும் பொருட்டு உங்கள் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் ஆகும். 12 நீங்கள் சோம்பேறியாவதை நாங்கள் விரும்பவில்லை. தேவனால் வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் பெறப்போகிற மக்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களிடம் பொறுமையும் விடாமுயற்சியும் இருப்பதால் அவர்கள் தேவனுடைய வாக்குறுதியைப் பெறுவார்கள்.
13 தேவன் ஆபிரகாமிடம் ஒரு ஆணையிட்டார். மேலும் ஆணையிட்டுச் சொல்ல தேவனைவிட மிகப் பெரியவர் யாரும் இல்லாததால், 14 “நான் உன்மையாகவே உன்னை ஆசீர்வதிக்கிறேன். நான் உனக்கு ஏராளமான சந்ததிகளைக் கொடுப்பேன்” [a]என்று தன் பெயரிலேயே ஆணையிட்டுச் சொன்னார். 15 இது நிகழும் வரை ஆபிரகாம் பொறுமையாகக் காத்திருந்தான். இறுதியில் அவன் தேவனுடைய வாக்குறுதியின்படியே பெற்றுக்கொண்டான்.
16 மக்கள் தங்களைவிடப் பெரியவர்கள் பேரில் ஆணையிடுவார்கள். அவர்கள் சொல்வது உண்மை என்பதை இந்த ஆணை நிரூபித்து, மேலும் விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. 17 தேவன் தன் வாக்குறுதியை உண்மையென்று நிரூபிக்க விரும்பினார். தன் ஆணையால் அதனை உறுதிப்படுத்தினார். தனது நோக்கம் மாறாதது என்று காண்பிக்க தேவன் விரும்பினார். அதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். 18 அந்த இரண்டும் எப்பொழுதும் மாறாதவை. தேவன் பொய் சொல்லமாட்டார்.
ஆணையிட்ட பிறகு அது பொய்க்காது. அது நமக்கு ஆறுதலாய் இருக்கும். நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும். 19 நமக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது. இது நங்கூரம் போன்றது. அது உறுதியும் வலிமையும் உடையது. அது நமது ஆன்மாவைக் காப்பாற்றும். மிகவும் பரிசுத்தமான இடங்களுக்கு அது போகிறது. பரலோகத்து ஆலயத்தின் திரைக்குப் பின்னாலும் போகிறது. 20 இயேசு ஏற்கெனவே அங்கே நுழைந்திருக்கிறார். நமக்காக அங்கே வழியைத் திறந்திருக்கிறார். இயேசு பிரதான ஆசாரியராகி மெல்கிசேதேக்கைப்போல் நிலைத்திருக்கிறார்.
2008 by World Bible Translation Center