M’Cheyne Bible Reading Plan
கோகாத் குடும்பத்தின் வேலைகள்
4 கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “கோகாத்தின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் மொத்த ஆண்களின் தொகையை எண்ணிக் கணக்கிடு. (கோகாத்தின் கோத்திரமானது லேவியர் கோத்திரத்தின் ஒரு பகுதியாகும்.) 3 30 வயது முதல் 50 வயது வரையுள்ள, படையில் பணியாற்றக்கூடிய ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்வார்கள். 4 ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள மிகப் பரிசுத்தமானப் பொருட்களைக் கவனித்துக்கொள்வதே இவர்களின் வேலை.
5 “இஸ்ரவேல் ஜனங்கள் புதிய இடங்களுக்குப் பயணம் செய்யும்போது, ஆரோனும் அவனது மகன்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளேச் செல்லவேண்டும். அவர்கள் திரையை கீழே எடுத்து, அதனால் பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியை மூட வேண்டும். 6 அதன்மேல் அழகான தோலினாலான மூடியால் மூடவேண்டும். அதன் மேல் கெட்டியான நீலத்துணியை விரித்து, தண்டுகளை வளையத்தினுள் செலுத்தி, பரிசுத்தப்பெட்டியை மூட வேண்டும்.
7 “பிறகு ஒரு நீலத்துணியைப் பரிசுத்த மேஜையின்மேல் விரிக்க வேண்டும். அதன் மேல் தட்டுக்களை வைத்து, கரண்டி, கோப்பை, மற்றும் பானங்களின் காணிக்கைக்கான ஜாடியை வைக்க வேண்டும். அதோடு சிறப்பான அப்பத்தையும் அதன் மேல் வைக்க வேண்டும். 8 பின் அதன்மேல் சிவப்புத் துணியை வைத்து, அதனை மெல்லிய தோல் மூடியால் மூடவேண்டும். பிறகு மேஜை தண்டுகளையும் வளையத்தினுள் கட்டிவிட வேண்டும்.
9 “குத்து விளக்குத் தண்டையும் அதிலுள்ள அகல்களையும் நீலத் துணியால் மூட வேண்டும். விளக்கு எரிவதற்கு உதவுகின்ற அனைத்துப் பொருட்களையும், எண்ணெய் பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும். 10 பிறகு இவை அனைத்தையும் மெல்லிய தோலால் மூடிக்கட்டி, ஒரு தண்டோடு இணைக்க வேண்டும். இது இவற்றைத் தூக்கிச் செல்ல உதவியாக இருக்கும்.
11 “அவர்கள் தங்க பலிபீடத்தின் மேல் நீலத் துணியை மூடி, அதன் மேல் மெல்லிய தோலை மூடவேண்டும். அதில் தண்டுகளை வளையத்தோடு இணைத்துக் கட்ட வேண்டும்.
12 “பிறகு பரிசுத்த இடத்தில் தொழுதுகொள்வதற்குப் பயன்படும், அனைத்து சிறப்புப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். அவற்றை நீலத்துணியில் சுருட்ட வேண்டும். பிறகு அதனை மெல்லியத் தோலால் மூடிக்கட்டவேண்டும். இவற்றைத் தூக்கிச் செல்வதற்கு வசதியாக ஒரு தண்டோடு கட்டிக்கொள்ள வேண்டும்.
13 “வெண்கலத்தாலான பலீபீடத்தில் உள்ள சாம்பலை சுத்தப்படுத்த வேண்டும். பிறகு அதனை நீலத் துணியால் மூட வேண்டும். 14 பின் தொழுதுகொள்வதற்கான அனைத்துப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். நெருப்புத்தட்டு, குறடு, சாம்பல் எடுக்கும் கரண்டி, கலசங்கள் போன்றவைகளை அவர்கள் வெண்கலத்தாலான பலிபீடத்தின் மேல் வைக்க வேண்டும். பின் மெல்லியத் தோலால் பலிபீடத்தை மூடவேண்டும். இவற்றைத் தூக்கிச் செல்ல வசதியாக தண்டுகளை வளையங்களில் மாட்டிக்கொள்ளவேண்டும்.
15 “ஆரோனும் அவனது மகன்களும், பரிசுத்த இடத்திலுள்ள பரிசுத்தமான பொருட்களையெல்லாம் மூடிவைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோகாத் கோத்திரத்தில் உள்ளவர்கள், இவற்றைத் தூக்கிச் செல்ல வேண்டும். இம்முறையில் இவர்கள் மரிக்காதபடிக்கு பரிசுத்தமான இடத்தைத் தொடாதிருக்கக்கடவர்கள்.
16 “ஆசாரியன் ஆரோனின் மகனான எலெயாசார் பரிசுத்தக் கூடாரத்தின் பொறுப்புக்குரியவன். பரிசுத்த இடத்திற்கும், அதிலுள்ள பொருட்களுக்கும் அவனே பொறுப்பானவன். விளக்குக்குரிய எண்ணெய்க்கும், நறுமணப் பொருட்களுக்கும், தினந்தோறும் செலுத்தப்படும் பலிகளுக்கும், அபிஷேக எண்ணெய்க்கும் அவனே பொறுப்பானவன்” என்றார்.
17 மேலும் கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 18 “கவனமாக இருங்கள். கோகாத் கோத்திரம் அழிந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 19 அவர்கள் மகா பரிசுத்த இடத்தின் அருகில் செல்லும்போது மரிக்காமல் இருப்பதற்காக, நீங்கள் அவர்களுக்காக இவற்றைச் செய்யவேண்டும். ஆரோனும் அவனது மகன்களும் உள்ளே போய்க் கோகாத்தியர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஒவ்வொரு ஆணுக்கும் அவனது வேலையும், அவன் சுமக்க வேண்டியவற்றையும் நியமிக்க வேண்டும். 20 நீங்கள் இவற்றைச் செய்யாவிட்டால் கோகாத்தியர்கள் உள்ளே போய் பரிசுத்த பொருட்களை ஒரு வேளை பார்த்துவிடலாம். அவ்வாறு ஒரு வினாடி பார்த்தாலும், அவர்கள் மரிக்க நேரிடும்” என்று கூறினார்.
கெர்சோன் குடும்பத்தாருக்குரிய வேலைகள்
21 கர்த்தர் மோசேயிடம், 22 “கெர்சோன் குடும்பத்தில் உள்ள அனைத்துԔ ஜனங்களையும் எண்ணிக் கணக்கிடு. அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்களாகவும் பட்டியலிடு. 23 படையில் பணியாற்றக் கூடிய 30 வயது முதல் 50 வயது வரையுள்ள ஆண்களையும் கணக்கிடுக. இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தைக் கவனிக்கும் வேலையுண்டு.
24 “இவைதான் கெர்சோன் வம்சத்தாரின் வேலைகள். அவர்கள் கீழ்க்கண்டவற்றைச் சுமக்க வேண்டும்: 25 பரிசுத்த கூடாரத்தின் திரைகளையும், அதோடு ஆசாரிப்புக் கூடாரத்தையும், அதன் மூடியையும், அவற்றைப் போர்த்தியுள்ள மெல்லியத் தோல் மூடியையும், ஆசாரிப்புக் கூடார வாசல் திரையையும் சுமந்து செல்ல வேண்டும். 26 அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பலிபீடத்தின் திரையையும், பிரகாரத்ததின் வாசல் திரையையும், அதோடு கயிறுகளையும், திரைக்குப் பயன்படும் மற்ற பொருட்களையும் சுமக்க வேண்டும். இவற்றுக்காகச் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கெர்சோனியர்கள் செய்யவேண்டும். 27 கெர்சோனியர்கள் சுமத்தல் மற்றும் மற்ற வேலைகளையும் செய்யும்போது ஆரோனும் அவனது மகன்களும் இவ்வேலைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சுமக்க வேண்டிய பொருட்களைப்பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 28 ஆசரிப்புக் கூடாரத்துக்காக கெர்சோனிய கோத்திரம் செய்ய வேண்டிய பணிகள் இவைதான். ஆசாரியனான ஆரோனின் மகனான இத்தாமார் இந்த வேலைகளுக்குப் பொறுப்பானவன்.
மெராரி குடும்பத்தின் வேலைகள்
29 “மெராரி கோத்திரத்தில் உள்ள எல்லாக் கோத்திரங்களையும், எண்ணிக் கணக்கெடுக்க வேண்டும். 30 படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்காக, ஒரு சிறப்பான பணியைச் செய்ய வேண்டும். 31 நீங்கள் பயணம் செய்யும்போது, ஆசரிப்புக் கூடாரத்திற்கான மரச் சட்டங்களை, இவர்களே சுமந்து செல்ல வேண்டும். அதோடு பாதங்களையும், தாழ்ப்பாள்களையும், தூண்களையும். 32 பிரகாரத் தூண்களையும் சுமக்க வேண்டும். பிரகாரத்திலுள்ள மற்ற பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான சகல கருவிகள் ஆகியவற்றையும் சுமக்க வேண்டும். அதோடு, அதைச் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அவர்களின் பெயரைப் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் அவர்கள் எதைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதையும் சொல்லுங்கள். 33 இவைதான் மெராரி வம்சத்தினர் ஆசரிப்புக் கூடாரத்திற்காகச் செய்ய வேண்டிய பணிகளாகும். ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமார் இதற்கான பொறுப்புடையவன்” என்றார்.
லேவியர் குடும்பங்கள்
34 கோகாத்தியர்களையும், மற்ற இஸ்ரவேல் தலைவர்களையும் மோசேயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்கள் வாரியாகவும் கணக்கிட்டனர். 35 படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் கணக்கிட்டனர். இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்யும்படி நியமிக்கப்பட்டனர்.
36 கோகாத்திய கோத்திரத்தில் 2,750 ஆண்கள் இவ்வேலையைச் செய்ய தகுதியுடையவர்களாக இருந்தனர். 37 எனவே, ஆசரிப்புக் கூடாரத்திற்க்கான சிறப்பு வேலைகளைச் செய்ய கோகாத்திய கோத்திரத்தினர் நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடியே, மோசேயும், ஆரோனும் இதனைச் செய்தனர்.
38 கெர்சோனிய கோத்திரத்தினரும் எண்ணி கணக்கிடப்பட்டனர். 39 படையில் பணியாற்றும் தகுதியுடைய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்கள் எண்ணப்பட்டனர். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். 40 கெர்சோன் கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 2,630 ஆண்கள் இருந்தனர். 41 எனவே, கெர்சோன் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, ஆசரிப்புக் கூடாரத்தின் சிறப்பு வேலைகள் கொடுக்கப்பட்டன. கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும், ஆரோனும் செய்து முடித்தனர்.
42 மெராரி குடும்பத்திலும், கோத்திரங்களிலும் உள்ள ஆண்கள் கணக்கிடப்பட்டனர். 43 அவர்களில் படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரும் எண்ணப்பட்டனர். அந்த ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். 44 மெராரி கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 3,200 ஆண்கள் இருந்தனர். 45 எனவே, மெராரி கோத்திரத்தில் உள்ள இந்த ஆண்கள், இச்சிறப்பு வேலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும் ஆரோனும் செய்து முடித்தனர்.
46 எனவே மோசே, ஆரோன், இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் ஆகியோர் லேவியரின் கோத்திரத்தில் உள்ளவர்களையும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பவாரியாகவும், கோத்திர வாரியாகவும் கணக்கிடப்பட்டனர். 47 படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தின், சிறப்பு வேலைகள் தரப்பட்டன. அவர்கள் தங்கள் பயணத்தின்போது, ஆசரிப்புக் கூடாரத்தைச் சுமக்கும் வேலையைச் செய்தனர். 48 அவர்களின் மொத்த எண்ணிக்கை 8,580. 49 எனவே, கர்த்தர் மோசேயிடம் சொன்னப்படி, ஒவ்வொரு ஆண்மகனும், கணக்கிடப்பட்டான். ஒவ்வொருவனுக்கும் அவன் செய்யவேண்டிய வேலை ஒதுக்கப்பட்டது. அவன் எதனைச் சுமந்து செல்லவேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. இவை யாவும் கர்த்தர் கட்டளையிட்டபடியே நடைபெற்றது.
நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல்.
38 கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும்.
என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
2 கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர்.
உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
3 நீர் என்னைத் தண்டித்தீர்.
இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன.
நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர்.
என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.
4 தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன்.
என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.
5 நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன்.
இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
6 நான் குனிந்து வளைந்தேன்.
நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன்.
7 காய்ச்சலினாலும் வலியினாலும்
என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
8 நான் பெரிதும் தளர்ந்து போகிறேன்.
வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.
9 என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர்.
என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
10 என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது.
என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று.
11 என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை.
என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.
12 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள்.
பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள்.
என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள்.
13 நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன்.
நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.
14 நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன்.
என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை.
15 கர்த்தாவே எனக்கு ஆதரவளியும்.
எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.
16 நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள்.
நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள்.
செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன்.
என் நோவை என்னால் மறக்க இயலாது.
18 கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன்.
என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன்.
19 என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள்.
அவர்கள் பல பல பொய்களைக் கூறியுள்ளார்கள்.
20 என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர்.
ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன்.
நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்.
21 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
22 விரைந்து வந்து எனக்கு உதவும்!
என் தேவனே, என்னை மீட்டருளும்.
2 நான் சரோனில் பூத்த ரோஜா.
பள்ளத்தாக்குகளில் மலர்ந்த லீலிபுஷ்பம்!
அவன் பேசுகிறான்
2 எனது அன்பே! முட்களுக்கு இடையில் லீலி புஷ்பம்போல்
நீ மற்ற பெண்களுக்கிடையில் இருக்கிறாய்.
அவள் பேசுகிறாள்
3 என் அன்பரே! காட்டு மரங்களுக்கிடையில்
கிச்சிலி மரத்தைப்போல் மற்ற ஆண்களுக்கிடையில் நீர் இருக்கிறீர்.
அவள் பெண்களுடன் பேசுகிறாள்
எனது நேசரின் நிழலில் உட்கார்ந்துகொண்டு நான் மகிழ்கிறேன்.
அவரின் கனி எனது சுவைக்கு இனிப்பாக உள்ளது.
4 என் நேசர் என்னை விருந்து சாலைக்கு அழைத்துப்போனார்.
என்மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்துவதே அவரது நோக்கம்.
5 காய்ந்த திராட்சையினால் செய்யப்பட்ட பலகாரத்தால் என்னைப் பலப்படுத்துங்கள்.
கிச்சிலிப் பழங்களால் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுங்கள்.
ஏனென்றால் நான் நேசத்தினிமித்தம் பலவீனமாகியுள்ளேன்.
6 என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது.
அவரது வலது கை என்னை அணைத்துக்கொள்கிறது.
7 எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை,
நீங்கள் என் அன்பை விழிக்கச் செய்யாமலும், அல்லது எழுப்பாமலும் இருக்க மான்கள் மீதும் காட்டு மான்கள் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.
அவள் மீண்டும் பேசுகிறாள்
8 நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்.
இங்கே அது வந்தது.
மலைகளுக்கு மேல் துள்ளி வந்தது.
குன்றுகளுக்குமேல் சறுக்கி வந்தது.
9 என் நேசர் வெளிமான்
அல்லது குட்டி மானைப் போன்றவர்.
அவர் எங்கள் சுவற்றுக்குப் பின்னால் நிற்பதையும்,
ஜன்னல் திரையின் வழியாகப் பார்ப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
10 என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே!
வெளியே போகலாம்.
11 பார், மழைக்காலம் போய்விட்டது.
மழை வந்து போனது.
12 பூமியில் பூக்கள் மலர்ந்துள்ளன.
இது பாடுவதற்குரிய காலம்.
கவனி, புறாக்கள் திரும்பிவிட்டன.
13 அத்தி மரங்களில் காய்கள் தோன்றியுள்ளன.
திராட்சைக் கொடிகள் மணம் வீசுவதை நுகர்ந்துபார்.
எழுந்திரு என் அன்பே, அழகே,
நாம் வெளியே போகலாம்.
அவன் பேசுகிறான்
14 என் புறாவே நீ கன்மலையின் வெடிப்புகளிலும்
மலைகளின் மறைவிடங்களிலும் மறைந்துள்ளாய்.
உன்னைப் பார்க்கவிடு,
உன் குரலைக் கேட்கவிடு,
உன் குரல் மிக இனிமையானது.
நீ மிக அழகானவள்” என்று கூறுகிறார்.
அவள் பெண்களுடன் பேசுகிறாள்
15 திராட்சை தோட்டங்களை அழிக்கிற சிறு நரிகளையும்,
குழிநரிகளை எங்களுக்காக பிடியுங்கள்.
நம் திராட்சைத் தோட்டங்கள் இப்போது பூத்துள்ளன.
16 என் நேசர் எனக்குரியவர்.
நான் அவருக்குரியவள்.
17 பகல் தனது கடைசி மூச்சை சுவாசிக்கும்போதும்,
நிழல் சாயும்போதும், அவர் லீலி மலர்களுக்கிடையில் மேய்கிறார்.
என் அன்பரே திரும்பும்,
இரட்டைக் குன்றுகளின் பகுதிகளிலுள்ள வெளிமான்களைப் போலவும்,
குட்டி மான்களைப் போலவும் இரும்.
நமது இரட்சிப்பானது சட்டங்களைவிடப் பெரியது
2 ஆகையால், நமக்குச் சொல்லித்தரப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுவதில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் உண்மை வழியில் இருந்து விலகாமல் இருப்போம். 2 தேவ தூதர்கள் மூலமாக தேவனால் சொல்லப்பட்ட அப்போதனைக்கு எதிராக யூதர்கள் செயல்பட்டபோதும், அதற்கு கீழ்ப்படியாமல் போனபோதும், ஒவ்வொரு முறையும் அதற்காக தண்டிக்கப்பட்டனர். 3 நமக்கு அளிக்கப்பட்ட இரட்சிப்பு மிக உயர்ந்தது. எனவே நாம் இந்த இரட்சிப்பை முக்கியமானதாகக் கருதாமல் வாழும் பட்சத்தில் நாமும் தண்டிக்கப்படுவோம். இந்த இரட்சிப்பு கர்த்தராலேயே முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. இந்த இரட்சிப்பு உண்மையானது என்பதை அவரிடத்தில் கேட்டவர்கள் நிரூபித்துள்ளனர். 4 அதிசயங்கள், பெரிய அடையாளங்கள், பலவகையான அற்புதங்கள் மூலம் தேவனும் கூட அதை நிரூபித்துள்ளார். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து மக்களுக்கு வரங்களைக் கொடுப்பதன் மூலமும் நிரூபித்துள்ளார். அவர் விரும்பிய விதத்திலேயே அந்த வரங்களை அவர் கொடுத்தார்.
மனிதர்களை இரட்சிக்க மனிதர்களைப் போலானார் கிறிஸ்து
5 வரப்போகிற புதிய உலகத்தை ஆள்பவர்களாக தேவன் தேவதூதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கிற உலகம் அதுதான். 6 சில இடத்தில்
“தேவனே! நீர் ஏன் மனிதரைப் பற்றி அக்கறை கொள்கிறீர்?
மனிதகுமாரனைப் பற்றியும்
ஏன் அக்கறை கொள்கிறீர்?
அவர் அவ்வளவு முக்கியமானவரா?
7 கொஞ்ச நேரத்திற்கு தேவ தூதர்களைவிடஅவரைச் சிறியவர் ஆக்கிவிட்டீர்.
அவரை மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டினீர்.
8 நீர் எல்லாவற்றையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தீர்” (A)
என்று எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அனைத்தையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் தேவன் கொண்டு வந்துவிட்டதால் அவருக்குக் கட்டுப்படாதது எதுவுமில்லை எனலாம். ஆனால் அவர் அனைத்தையும் ஆள்வதை நாம் இன்னும் பார்க்கவில்லை. 9 சிறிது காலத்திற்கு இயேசு தேவதூதர்களுக்கும் தாழ்ந்தவராக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது துன்பப்பட்டு மரித்ததால் மகிமையாலும், கனத்தாலும் முடிசூடிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்தார்.
10 தேவனே அனைத்தையும் படைத்தவர். அனைத்தும் அவரது மகிமைக்காகவே உள்ளன. தன் மகிமையைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான மக்களை அவர் விரும்பினார். எனவே, தமக்குத் தேவையானவற்றை அவர் செய்தார். மக்களை இரட்சிப்புக்கு வழி நடத்திச் செல்ல பூரணமானவராக தேவன் இயேசுவை ஏற்படுத்தினார். இயேசு தன் துன்பத்தால் ஒரு பூரண இரட்சகரானார்.
11 மக்களைப் பரிசுத்தமாக்குகிறவரும் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே அவர்களைத் தம் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் அழைக்க இயேசு வெட்கம் கொள்ளவில்லை.
12 “தேவனே உம்மைப்பற்றி நான் என் சகோதர சகோதரிகளிடம் கூறுவேன்.
உம்முடைய மக்கள் கூட்டத்தின் நடுவில் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்” (B)
என்று அவர் கூறுகிறார்.
என்றும் அவர் சொல்கிறார்.
“தேவன் எனக்களித்த பிள்ளைகளோடு நான் இங்கே இருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். (D)
14 மாம்சீகமான உடலைக்கொண்ட மக்களே அந்தப் பிள்ளைகள். ஆகவே இயேசுவும், அவர்களைப் போன்றே மாறி அவர்களைப் போன்றே அனுபவத்தையும் பெற்றார். மரண அதிகாரத்தைத் தன்னோடு வைத்திருக்கிற பிசாசை தனது மரணத்தின் மூலம் அழிக்கும்பொருட்டு இயேசு இப்படிச் செய்தார். 15 அவர்களை விடுதலை செய்யும் பொருட்டே இயேசு தம் பிள்ளைகளைப் போலாகி மரித்தார். மரண பயத்தின் காரணமாக தம் வாழ்க்கை முழுக்க அவர்கள் அடிமையாக இருந்தார்கள். 16 இயேசு தேவதூதர்களுக்கு உதவி செய்ய வரவில்லை என்பது வெளிப்படை. அவர் ஆபிரகாமின் வழிவந்த மக்களுக்கே உதவ வந்தார். 17 இதனால் இயேசு, எல்லா வகையிலும் அவர்களுக்கு சகோதரரைப் போல் இருப்பது அவருக்கு முக்கியமாக இருந்தது. இவ்வழியில் தேவனுக்கான சேவையில் அவர்களுடைய இரக்கமும் நம்பிக்கையும் உள்ள பெரிய போதகராக இருக்கவும், மக்களின் பாவங்களுக்கு மன்னிப்பை வழங்கவும் அவரால் முடிந்தது. 18 இப்போது சோதனைகளை எதிர்கொள்கிற மக்களுக்கு இயேசுவால் உதவி செய்ய முடியும். இயேசுவும் துன்பங்களுக்கு உள்ளாகி சோதனைகளுக்கு ஆட்பட்டவர் என்பதால், அவரால் உதவி செய்ய முடியும்.
2008 by World Bible Translation Center