M’Cheyne Bible Reading Plan
ஆசாரியர்களான ஆரோனின் குடும்பத்தினர்
3 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடு பேசிக்கொண்டிருந்தபோது, ஆசாரியனாகிய ஆரோன், மற்றும் மோசேயின் வம்ச வரலாறு கீழ்க்கண்டவாறு இருந்தது:
2 ஆரோனுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நாதாப் முதல் மகன். அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள் இளையவர்கள். 3 இவர்கள் ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கர்த்தருக்கு ஊழியம் செய்யும் பொறுப்பைப் பெற்றிருந்தனர். 4 ஆனால் நாதாபும் அபியூவும் தங்கள் பாவத்தின் காரணமாக, கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போதே, மரித்துப்போனார்கள். கர்த்தருக்குக் காணிக்கைப் பலி செலுத்தும்போது கர்த்தரால் அங்கீகரிக்கப்படாத நெருப்பை அவர்கள் பயன்படுத்தினர். எனவே, நாதாப்பும், அபியூவும் சீனாய் பாலைவனத்திலேயே மடிந்தார்கள். அவர்களுக்கு மகன்கள் இல்லை. எனவே, அவர்களின் இடத்தில் எலெயாசாரும், இத்தாமாரும் ஆசாரியர்களாக கர்த்தருக்கு ஊழியம் செய்தனர். அவர்களின் தந்தையான ஆரோன் உயிரோடு இருக்கும்போதே இது நிகழ்ந்தது.
ஆசாரியர்களின் உதவியாட்களான லேவியர்கள்
5 கர்த்தர் மோசேயிடம், 6 “லேவியர்களின் கோத்திரத்திலிருந்து அனைவரையும், ஆசாரியனாகிய ஆரோனிடம் அழைத்துக் கொண்டு வா. அவர்கள் ஆரோனின் உதவியாட்களாக இருப்பார்கள். 7 ஆசரிப்புக் கூடாரத்தில் ஆரோன் ஊழியம் செய்யும்போது, அவனுக்கு லேவியர்கள் உதவுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்தக் கூடாரத்திற்கு தொழுதுகொள்ள வரும்போதும், லேவியர்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள். 8 ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பது இஸ்ரவேல் ஜனங்களின் கடமையாகும். ஆனால் லேவியர்கள் இவற்றைச் சுமந்து இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சேவை செய்யவேண்டும். பரிசுத்தக் கூடாரத்தில் தொழுதுகொள்ள வேண்டிய முறை இதுவேயாகும்.
9 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் லேவியர்களை ஒப்படையுங்கள். அவர்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உதவி செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
10 “ஆரோனையும் அவனது மகன்களையும், ஆசாரியர்களாக ஊழியம் செய்ய நியமனம் செய். அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். இப்பரிசுத்தமான பொருட்களின் அருகில் வேறு எவராவது வர முயன்றால் அவர்கள் கொல்லப்பட வேண்டும்” என்றார்.
11 மேலும் கர்த்தர் மோசேயிடம், 12 “இஸ்ரவேல் ஜனங்களின் குடும்பம் ஒவ்வொன்றிலும் முதலில் பிறக்கும் மகனை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது எனக்கு ஊழியம் செய்வதற்காக லேவியர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவர்கள் எனக்குரியவர்களாக இருப்பார்கள்; எனவே இனி இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முதல் பிள்ளையை எனக்குக் கொடுக்க வேண்டாம். 13 நீங்கள் எகிப்தில் இருந்தபோது நான் எகிப்திலுள்ள முதலில் பிறந்த அனைத்தையும் கொன்றேன். அந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு முதல் குழந்தையையும் எனக்குரியதாக நான் எடுத்துக்கொண்டேன். முதலில் பிறந்த அனைத்து குழந்தைகளும், அனைத்து மிருகங்களும் எனக்குரியது. ஆனால் இப்போது உங்களுக்கு முதலில் பிறக்கும் குழந்தைகளை உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். லேவியர்களை எனக்குச் சொந்தமாக்கிக்கொண்டேன். நானே கர்த்தர்” என்றார்.
14 கர்த்தர் மீண்டும் சீனாய் பாலைவனத்தில் மோசேயோடு பேசி, 15 “லேவியின் எல்லாக் குடும்பங்களையும், கோத்திரங்களையும் ஒருமாத வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் மற்றும் ஆண் குழந்தைகளைக் கணக்கிடு” என்றார். 16 மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவர்களை கணக்கிட்டான்.
17 லேவிக்கு கெர்சோன், கோகாத், மெராரி என்று மூன்று மகன்கள் இருந்தனர்.
18 ஒவ்வொருவரும் பல கோத்திரங்களுக்குத் தலைவர்கள்.
கெர்சோன் கோத்திரத்தில் லிப்னீயும், சீமேயியும் இருந்தனர்.
19 கோகாத் கோத்திரத்தில் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் இருந்தனர்.
20 மெராரி கோத்திரத்தில் மகேலியும், மூசியும் இருந்தனர்.
இந்த அனைத்துக் குடும்பங்களும் லேவியின் கோத்திரத்தில் இருந்தனர்.
21 லிப்னீ, சீமேயி ஆகியோரின் குடும்பங்கள், கெர்சோனின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். 22 அவர்கள் இரு கோத்திரங்களிலும் ஆண்களும், ஒரு மாத வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளுமாக 7,500 பேர் இருந்தனர். 23 மேற்குப்பக்கத்தில் முகாமை அமைத்துக்கொள்ளுமாறு கெர்சோனியர் கோத்திரங்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தின் பின் பகுதியில் தங்கள் முகாமை அமைத்தனர். 24 லாயேலின் மகனாகிய எலியாசாப் என்பவன் கெர்சோனிய கோத்திரத்தினருக்கு தலைவன் ஆனான். 25 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலோடு பரிசுத்தக் கூடாரத்தையும், வெளிக் கூடாரத்தையும் அதன் மூடியையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கெர்சோனியருக்கு இருந்தது. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள தொங்கு திரையையும் இவர்களே கவனித்துக்கொண்டனர். 26 மேலும் பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பிரகாரத்தின் மூடு திரைகளையும் அவர்கள் கவனித்துக்கொண்டனர். பிரகாரமானது பரிசுத்தக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றியிருந்தது. திரைகளுக்குத் தேவையான கயிறு மற்றும் மற்ற பொருட்களுக்கும் அவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்தனர்.
27 அம்ராம், இத்சேயர் எப்ரோன், ஊசியேல் ஆகிய குடும்பங்கள் கோகாத்தின் கோத்திரத்தில் இருந்தன. 28 இக்கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேலான ஆண் குழந்தைகளுமாக 8,300 [a] பேர் இருந்தனர். கோகாத்தியர்கள் பரிசுத்தமான இடத்திலுள்ள பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வகித்தார்கள். 29 பரிசுத்தக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் கோகாத்தின் கோத்திரங்கள் தங்கள் முகாமை அமைத்திருந்தனர். 30 ஊசியேலின் மகனான எல்சாபான் கோகாத்தியரின் கோத்திரங்களுக்குத் தலைவன் ஆனான். 31 அவர்கள் பரிசுத்தப் பெட்டி, மேஜை, குத்து விளக்கு, பீடங்கள், பரிசுத்த இடத்தின் பொருட்கள், தொங்கு திரை, அங்குள்ள அனைத்து வேலைகளுக்கும் உரிய பொருட்களையும் காத்து வந்தனர்.
32 ஆரோனின் மகனாகிய ஆசாரியன் எலெயாசார் லேவியர்களின் தலைவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்தான். இவன் பரிசுத்தப் பொருட்களை காவல் காப்பவர்களுக்கெல்லாம் பொறுப்பாளியாய் இருந்தான்.
33-34 மகேலி, மூசி ஆகியோரின் கோத்திரங்கள் மெராரியின் குடும்பத்தோடு சேர்ந்தது. மகேலியின் கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் குழந்தைகளும் 6,200 பேர் இருந்தனர். 35 அபியாயேலின் மகனாகிய சூரியேல், மெராரி கோத்திரத்தின் தலைவனாய் இருந்தான். பரிசுத்தக் கூடாரத்தின் வடக்கு பக்கத்தில் இவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் அவர்கள் தங்கள் முகாமை அமைத்திருந்தனர். 36 மெராரி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசுத்தக் கூடாரத்தின் சட்டங்கள், பலகைகள், தாழ்ப்பாள், தூண்கள், பாதங்கள் மற்றும் அதற்குரிய பொருள்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. 37 பரிசுத்தக் கூடாரத்தின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள தூண்கள், பாதங்கள், முளைகள், கயிறுகள் அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொண்டனர்.
38 மோசே, ஆரோன், அவனது மகன்கள் எல்லோரும் ஆசாரிப்புக் கூடாரத்திற்கு எதிரில் பரிசுத்தக் கூடாரத்தின் கிழக்கில் முகாமிட்டனர். பரிசுத்த இடத்தை கவனிக்கும் பொறுப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் அவர்கள் இதனைச் செய்தனர். வேறு யாராவது பரிசுத்த இடத்தின் அருகில் வந்தால், அவர்கள் கொல்லப்பட்டனர்.
39 லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களையும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளையும் கணக்கிடுமாறு கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டார். அவர்களின் மொத்த எண்ணிக்கை 22,000.
முதல் மகன்களின் இடத்தை லேவியர்கள் எடுத்துக்கொள்ளுதல்
40 கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேலில் முதலில் பிறந்த எல்லா ஆண்களையும், குறைந்தது ஒரு மாதமாவது ஆன ஆண் குழந்தைகளையும் கணக்கிடு. அவர்களின் பெயரையும் எழுதி பட்டியலிடு. 41 கடந்த காலத்தில் நான், இஸ்ரவேலில் முதலில் பிறக்கும் ஆண் மக்களையெல்லாம் எனக்குரியவர்கள் என்று கூறியிருந்தேன். கர்த்தராகிய நான் இப்போது லேவியர்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். இஸ்ரவேலில் முதலில் பிறக்கும் அனைத்து மிருகங்களையும் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, லேவியர்களுக்குரிய முதலில் பிறந்த மிருகங்களை மட்டும் எடுத்துக்கொள்வேன்” என்றார்.
42 எனவே மோசே, கர்த்தருடைய கட்டளைப்படி செய்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறந்த குழந்தைகளைக் கணக்கெடுத்தான். 43 முதலாவதாக பிறந்த ஆண்களையும், ஒரு மாதமும் அதற்கு மேலுமுள்ள ஆண் குழந்தைகளையும், மோசே பட்டியலிட்டான். அதில் மொத்தம் 22,273 பெயர்கள் இருந்தன.
44 மேலும் கர்த்தர் மோசேயிடம், “கர்த்தராகிய நான் இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்: ‘இஸ்ரவேலில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலுமுள்ள முதலில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பதிலாக லேவியர்வம்சத்திலுள்ள முதலில் பிறக்கும் ஆண்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். 45 மற்ற இஸ்ரவேலில் முதலில் பிறந்த மிருகங்களுக்குப் பதிலாக லேவியர்களிடமுள்ள முதலில் பிறக்கும் மிருகங்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். லேவியர்கள் எனக்கு உரியவர்கள். 46 மொத்தம் 22,000 லேவியர்கள் இருந்தனர். ஆனால் மற்ற குடும்பங்களில் 22,273 முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் இருந்தனர். லேவியர்களை விட, முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் 273 பேர் மற்ற குடும்பங்களில் இருந்தனர். 47 அதிகாரப் பூர்வமான அளவை அடிப்படையாய் வைத்துக்கொண்டு, தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாக 273 பேர்களிடமிருந்தும் வாங்கு. (ஒரு சேக்கல் என்பது இருபது கேரா இருக்கும்.) 48 இஸ்ரவேல் ஜனங்களிடம் இருந்து வெள்ளியையும் வசூல் செய். இவற்றை ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் கொடுப்பாயாக. இது 273 இஸ்ரவேல் ஜனங்களுக்கான சம்பளத் தொகையாகும்’” என்றார்.
49 மற்ற கோத்திரங்களில் இருந்து வந்த 273 பேர்களின் இடத்தை ஈடுசெய்ய போதுமான அளவில் லேவியர்கள் இல்லாமல் இருந்தனர். எனவே மோசே அந்த 273 பேர்களுக்காக பணம் வசூல் செய்தான். 50 மோசே இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளிடமிருந்து வெள்ளியை வசூல் செய்தான். அதிகாரப் பூர்வமான அளவை வைத்துக்கொண்டு, அவன் 1,365 சேக்கல் வெள்ளியை வசூலித்தான். 51 மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான். வெள்ளியை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.
தாவீதின் பாடல்
37 தீயோரைக் கண்டு கலங்காதே,
தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.
2 விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று
தீயோர் காணப்படுகிறார்கள்.
3 கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால்,
பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள்.
4 கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள்.
அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.
5 கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள்,
செய்யவேண்டியதை அவர் செய்வார்.
6 நண்பகல் சூரியனைப்போன்று
உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.
7 கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு.
தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே.
தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே.
8 கோபமடையாதே!
மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!
9 ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள்.
10 இன்னும் சில காலத்திற்குப்பின் தீயோர் இரார்.
அந்த ஜனங்களைத் தேடிப் பார்க்கையில் அவர்கள் அழிந்துபோயிருப்பார்கள்.
11 தேவன் வாக்களித்த தேசத்தை தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள்.
அவர்கள் சமாதானத்தை அனுபவிப்பார்கள்.
12 தீயோர் நல்லோருக்கெதிராக தீய காரியங்களைத் திட்டமிடுவார்கள்.
நல்லோரை நோக்கிப் பற்கடித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
13 ஆனால் நம் ஆண்டவர் அத்தீயோரைக் கண்டு நகைப்பார்.
அவர்களுக்கு நேரிடவிருப்பதை அவர் காண்கிறார்.
14 தீயோர் வாளை எடுக்கிறார்கள், வில்லைக் குறிபார்க்கிறார்கள்,
இயலாத ஏழைகளையும், நேர்மையானவர்களையும் கொல்ல விரும்புகிறார்கள்.
15 அவர்கள் வில் முறியும்.
அவர்கள் வாள்கள் அவர்கள் இதயங்களையே துளைக்கும்.
16 ஒரு கூட்டம் தீயோரைக்காட்டிலும்
நல்லோர் சிலரே சிறந்தோராவர்.
17 ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
கர்த்தர் நல்லோரைத் தாங்குகிறார்.
18 தூய்மையுள்ளோரின் வாழ்நாள் முழுவதையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.
கர்த்தர் அவர்களுக்குத் தரும் பரிசு என்றென்றும் தொடரும்.
19 தொல்லை நெருங்குகையில் நல்லோர் அழிக்கப்படுவதில்லை.
பஞ்ச காலத்தில் நல்லோருக்கு மிகுதியான உணவு கிடைக்கும்.
20 ஆனால் தீயோர் கர்த்தருடைய பகைவர்கள்.
அவர்களின் பள்ளத்தாக்குகள் வறண்டு எரிந்து போகும்.
அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.
21 தீய மனிதன் பணத்தைக் கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்துவதில்லை.
ஆனால் ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
22 நல்லவன் ஒருவன் பிறரை ஆசீர்வதித்தால் தேவன் வாக்களித்த நிலத்தை அவர்கள் பெறுவார்கள்.
ஆனால் அவன் தீமை நிகழும்படி கேட்டால் அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
23 ஒரு வீரன் கவனமாக நடப்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
அவன் விழாதபடி கர்த்தர் வழி நடத்துகிறார்.
24 வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால்
கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார்.
25 நான் இளைஞனாக இருந்தேன்.
இப்போது வயது முதிர்ந்தவன்.
நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை.
நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.
26 ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள்.
27 தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால்
என்றென்றும் நீ வாழ்வாய்.
28 கர்த்தர் நீதியை விரும்புகிறார்.
அவரைப் பின்பற்றுவோரை உதவியின்றிக் கைவிட்டதில்லை.
கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை எப்போதும் பாதுகாக்கிறார்.
ஆனால் கெட்ட ஜனங்களை அவர் அழித்துவிடுவார்.
29 தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள்.
அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள்.
30 ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான்.
அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள்.
31 கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும்.
அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான்.
32 தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள்.
தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள்.
33 அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார்.
நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார்.
34 கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள்.
தீயோர் அழிக்கப்படுவார்கள்.
ஆனால் கர்த்தர் உனக்கு முக்கியத்துவமளிப்பார், தேவன் வாக்களித்த தேசத்தை நீ பெறுவாய்.
35 வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன்.
அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான்.
36 ஆனால் அவன் மடிந்தான்,
அவனை நான் தேடியபோது அவன் காணப்படவில்லை.
37 தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும்.
சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள்.
38 சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.
39 கர்த்தர் நல்லோரை மீட்கிறார்.
நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார்.
40 கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார்.
நல்லோர் கர்த்தரைச் சார்ந்திருப்பார்கள்.
அவர் அவர்களைத் தீயோரிடமிருந்து காக்கிறார்.
1 இது சாலொமோனின் மிகவும் அற்புதமான பாடல்
பெண் தான் நேசிக்கிற மனிதனுக்கு
2 என்னை முத்தங்களால் மூடிவிடும்.
திராட்சைரசத்தைவிட உமது அன்பு சிறந்தது.
3 உமது வாசனைத் திரவியங்கள் அற்புதமானவை,
ஆனால் உமது நாமம் சிறந்த வாசனைப் பொருட்களைவிட இனிமையானது.
அதனால்தான் இளம் பெண்கள் உம்மை விரும்புகின்றனர்.
4 என்னை உம்மோடு சேர்த்துக்கொள்ளும்.
நாம் ஓடிவிடுவோம்.
அரசன் என்னைத் தன் அறைக்கு எடுத்துச்சென்றார்.
எருசலேமின் பெண்கள் மனிதனுக்கு
நாங்கள் உம்மில் களிப்படைந்து மகிழ்வோம்.
திராட்சைரசத்தைவிட உமது அன்பு சிறந்தது என்பதை மனதில்கொள்ளும். நல்ல காரணங்களுக்காகவே இளம்பெண்கள் உம்மை விரும்புகின்றனர்.
அவள் பெண்களோடு பேசுகிறாள்
5 எருசலேமின் மகள்களே, கேதார் மற்றும் சாலொமோனின் கூடாரங்களைப்போல நான் கறுப்பாகவும்,
அழகாகவும் இருக்கிறேன்.
6 நான் எவ்வளவு கறுப்பென்று பார்க்கவேண்டாம்.
வெய்யில் என்னை இவ்வளவு கறுப்பாக்கிவிட்டது.
என் சகோதரர்கள் என் மீது கோபம் அடைந்தார்கள்.
அவர்களின் திராட்சைத் தோட்டங்களைக் கவனிக்கும்படி என்னைக் கட்டாயப்படுத்தினர்.
எனவே என்னை நானே கவனித்துக்கொள்ள முடியவில்லை.
அவள் அவனிடம் பேசுகிறாள்
7 நான் என் முழு ஆத்துமாவோடும் உம்மை நேசிக்கிறேன்.
எனக்குச் சொல்லும்; உமது மந்தையை எங்கே மேயவிடுகிறீர்?
மதியானத்தில் அதனை எங்கே இளைப்பாறச் செய்வீர்?
நான் உம்மோடு இருக்க வரவேண்டும்.
அல்லது உமது நண்பர்களின் மந்தைகளைப் பராமரிப்பதற்கு அமர்ந்தப்பட்ட பெண்ணைப்போல் இருப்பேன்.
அவன் அவளோடு பேசுகிறான்
8 நீ எவ்வளவு அழகான பெண்
என்ன செய்ய வேண்டுமென்று உனக்கு நிச்சயமாய் தெரியும்.
மந்தையைப் பின்தொடர்ந்து போ.
மேய்ப்பர்களின் கூடாரத்தினருகே இளம் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
9 என் அன்பே! பார்வோனின் இரதங்களில் பூண்டிய
ஆண்குதிரைகளுக்குக் கிளர்ச்சியூட்டும் பெண் குதிரையைவிட நீ என்னைக் கிளர்ச்சியூட்டி மகிழ்விக்கிறாய்.
அக்குதிரைகள் தங்கள் முகத்தின் பக்கவாட்டிலும் கழுத்தை சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
10-11 பொன்னாலான தலையணியும் வெள்ளியாலான கழுத்துமாலையும் உனக்குரிய அலங்காரங்களாயிருக்கின்றன.
உனது கன்னங்கள் மிக அழகானவை.
அவை பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
உனது கழுத்தும் மிக அழகானது.
அது வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அவள் பேசுகிறாள்
12 எனது வாசனைப்பொருளின் மணமானது
கட்டிலின்மேல் இருக்கும் அரசனையும் சென்றடைகிறது.
13 என் நேசர் என் கழுத்தை சுற்றிலும் கிடந்து இரவில் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் வெள்ளைப்போளப் பையைப் போன்றவர்.
14 என் நேசர் எனக்கு எங்கேதி திராட்சைத் தோட்டங்களில் முளைத்துள்ள மருதோன்றிப் பூங்கொத்துப் போன்றவர்.
அவன் பேசுகிறான்
15 என் அன்பே, நீ மிகவும் அழகானவள்.
ஓ...நீ மிக அழகானவள் உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றவை.
அவள் பேசுகிறாள்
16 என் நேசரே! நீரும் மிக அழகானவர்
நீர் மிகவும் கவர்ச்சியானவர்.
நமது படுக்கை புதியதாகவும், மனதை மகிழ்விப்பதாகவும் உள்ளது.
17 நமது வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரங்களாலானவை.
நமது மேல்வீடு தேவதாரு மரத்தாலானவை.
தேவன் தன் குமாரன் மூலமாகப் பேசியிருக்கிறார்
1 கடந்த காலத்தில் தேவன், தீர்க்கதரிசிகள் மூலம் நமது மக்களிடம் பேசியிருக்கிறார். அவர், பல வேறுபட்ட வழிகளிலும் பல சமயங்களிலும் பேசினார். 2 இப்போது இந்த இறுதி நாட்களில் மீண்டும் தேவன் நம்மோடு பேசியிருக்கிறார். அவர் தன் குமாரன் மூலம் நம்மோடு பேசி இருக்கிறார். அவர் தன் குமாரன் மூலமாக இந்த முழு உலகையும் படைத்தார். எல்லாவற்றிற்கும் உரிமையாளராக தேவன் தன் குமாரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். 3 அந்தக் குமாரன் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய தன்மையை முழுவதுமாக வெளிக்காட்டும் உருவமாக அவர் இருக்கிறார். அவர் தனது வலிமைமிக்க கட்டளைகளினால் ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார். குமாரனானவர் மக்களைப் பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்தினார். பிறகு அவர் தேவனுடைய வலது பக்கத்தில் பரலோகத்தில் அமர்ந்தார். 4 அவர் தேவதூதர்களைவிட மிகச் சிறந்த பெயரை தேவனிடமிருந்து பெற்றார். அவர் தேவதூதர்களை விட மிகவும் சிறப்புக்குரியவரானார்.
5 கீழ்க்கண்டவற்றை தேவன் ஒருபோதும் தேவதூதர்களிடம் சொன்னதில்லை,
“நீர் எனது குமாரன்,
இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்.” (A)
அதோடு எந்த தேவதூதனிடமும் தேவன் இவ்வாறு சொன்னதில்லை,
“நான் அவரது பிதாவாக இருப்பேன்.
அவர் எனது குமாரனாக இருப்பார்.” (B)
6 மேலும் தனது முதற்பேறான குமாரனை பூமிக்கு அனுப்புகிறபோது,
“தேவதூதர்கள் எல்லோரும் அந்தக் குமாரனைத் தொழுதுகொள்ளக்கடவர்கள்” (C)
என்று கூறினார்.
7 தேவன் தேவதூதர்களைப் பற்றிக் கூறும்போது,
“தேவன் தன் தேவதூதர்களைக் காற்றைப் போன்றும் தன் ஊழியர்களை நெருப்பு
ஜூவாலைகளைப் போன்றும் செய்கிறார்” (D)
எனக் குறிப்பிடுகிறார்.
8 ஆனால் தேவன் தம் குமாரனைப் பற்றிச் சொல்லும்போது,
“தேவனே! உமது சிம்மாசனம் என்றென்றைக்கும் உள்ளது.
சரியான தீர்ப்புகளால் உமது இராஜ்யத்தை நீர் ஆள்வீர்.
9 நீர் நீதியை விரும்புகிறீர். அநீதியை வெறுக்கின்றீர்.
ஆகையால் தேவனே, உமது தேவன் உம்மோடு இருப்பவர்களுக்குக்
கொடுத்ததைக் காட்டிலும் பெருமகிழ்ச்சியை உமக்குத் தந்திருக்கிறார்.” (E)
10 மேலும் தேவன்,
“கர்த்தாவே, ஆரம்பத்தில் நீர் பூமியைப் படைத்தீர்.
மேலும் உமது கைகள் ஆகாயத்தைப் படைத்தன.
11 இவை மறைந்து போகலாம். ஆனால் நீரோ நிலைத்திருப்பீர்.
ஆடைகளைப் போன்று அனைத்தும் பழசாகிப் போகும்.
12 நீர் அவற்றை ஒரு சால்வையைப் போல மடித்துவிடுவீர்.
அவை ஓர் ஆடையைப் போன்று மாறும்.
ஆனால் நீரோ மாறவேமாட்டீர்.
உமது ஜீவன் ஒருபோதும் அழியாது” (F)
என்றும் கூறுகிறார்.
13 தேவன் எந்த தேவ தூதனிடமும்,
“உமது பகைவர்களை உம்முடைய அதிகாரத்துக்குக் கீழ்க்கொண்டு வரும்வரை
எனது வலது பக்கத்தில் உட்காரும்” (G)
என்று என்றைக்கும் சொன்னதில்லை.
14 தேவதூதர்கள் எல்லாரும், தேவனுக்கு சேவை செய்துகொண்டிருக்கிற ஆவிகள் ஆவார்கள். இரட்சிப்பைப் பெறப் போகிறவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
2008 by World Bible Translation Center