M’Cheyne Bible Reading Plan
தேவனுக்குக் கீழ்ப்படிபவர்களுக்குரிய பலன்கள்
26 “உங்களுக்காக விக்கிரகங்களை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் நாடுகளில் சிலைகளையோ நினைவுச் சின்னங்களையோ வணங்குவதற்காக ஏற்படுத்தாதீர்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!
2 “எனது சிறப்பான ஓய்வு நாட்களை நினைவில் கொள்ளுங்கள். எனது பரிசுத்தமான இடங்களைப் பெருமைப்படுத்துங்கள். நானே கர்த்தர்!
3 “எனது சட்டங்களையும் கட்டளைகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படியுங்கள்! 4 நீங்கள் இவற்றைச் செய்தால் நான் உரிய பருவத்தில் மழையைத் தருவேன். நிலம் நன்றாக விளையும். மரங்கள் நல்ல பழங்களைத் தரும். 5 திராட்சைப் பழம் பறிக்கும் காலம்வரை உங்கள் போரடிப்புக் காலம் இருக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும். நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு உங்கள் நாட்டில் சுகமாய் குடியிருப்பீர்கள். 6 உங்கள் நாட்டில் சமாதானத்தை உருவாக்குவேன். நீங்கள் பாதுகாப்புடன் இருப்பீர்கள். எவரும் வந்து உங்களை நெருங்கி அச்சுறுத்த முடியாது. தீமை செய்யும் மிருகங்களை நாட்டுக்கு வெளியே வைத்திருப்பேன். வேறு படைகளும் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்லாது.
7 “நீங்கள் உங்களது பகைவர்களைத் துரத்தி சென்று தோற்கடிப்பீர்கள். உங்கள் வாளால் அவர்களைக் கொல்வீர்கள். 8 ஐந்து பேரான நீங்கள் நூறு பேரை விரட்டிச் செல்வீர்கள், நூறு பேராக இருந்தாலும் நீங்கள் பத்தாயிரம் பேரை விரட்டிச்சென்று அவர்களை வாளால் வெட்டிக் கொல்லுவீர்கள்.
9 “நான் உங்கள்மேல் கவனமாயிருந்து நிறைய குழந்தைகளை நீங்கள் பெறும்படி செய்வேன். நான் எனது உடன்படிக்கையை பாதுகாப்பேன். 10 நீங்கள் ஒரு ஆண்டு விளைச்சலைப் போதுமான அளவிற்கு மேல் பெற்றிருப்பீர்கள். புதிய விளைச்சலும் பெறுவீர்கள். புதியதை வைக்க இடமில்லாமல் பழையதை எறிவீர்கள். 11 உங்கள் நடுவே எனது ஆராதனைக் கூடாரத்தை அமைப்பேன். நான் உங்களிடமிருந்து விலகிச் செல்லமாட்டேன். 12 நான் உங்களோடு நடந்து உங்கள் தேவனாக இருப்பேன். நீங்களே எனது ஜனங்கள். 13 நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். நான் உங்களை அங்கிருந்து மீட்டு வந்தேன். அடிமைகளாக நீங்கள் சுமந்த பாரத்தால் முதுகு வளைந்துபோனீர்கள். நான் உங்கள் நுகத்தடிகளை உடைத்து உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்தேன்!
தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்குரிய தண்டனை
14 “நீங்கள் எனக்கு கீழ்ப்படியாவிட்டாலோ அல்லது என் கட்டளையை பின்பற்றாவிட்டாலோ கீழ்க்கண்ட தீமைகள் உங்களுக்கு ஏற்படும். 15 நீங்கள் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய மறுத்தால் எனது உடன்படிக்கையை மீறினவர்களாக மாறுகிறீர்கள். 16 நீங்கள் அவ்வாறு செய்தால் நான் உங்களுக்கு மோசமான தீமைகளை உருவாக்குவேன். நோய்களையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரச் செய்வேன். அவை உங்கள் கண்களையும் ஜீவனையும் கெடுக்கும். நீங்கள் செய்யும் பயிர் விளைச்சலில் நீங்கள் வெற்றி பெற முடியாது. உங்கள் பகைவர்கள் உங்களது விளைச்சலை உண்பார்கள். 17 நான் உங்களுக்கு எதிராக இருப்பேன். எனவே உங்களை உங்கள் எதிரிகள் வெல்வார்கள். அவர்கள் உங்களை வெறுத்து ஆட்சி செலுத்துவார்கள். உங்களை எவரும் துரத்தாவிட்டாலும் நீங்கள் பயந்து ஓடுவீர்கள்.
18 “இவற்றுக்குப் பிறகும் நீங்கள் கீழ்ப்படியாவிட்டால் உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன். 19 உங்கள் பெருமைக்குரிய பெரிய நகரங்களையெல்லாம் அழிப்பேன். வானம் உங்களுக்கு மழையைத் தராது. நிலம் விளைச்சலைத் தராது. 20 நீங்கள் கடினப்பட்டு உழைப்பீர்கள், ஆனால் விளைச்சல் கிடைக்காது. உங்கள் மரங்களும் பழங்களைத் தராது.
21 “அல்லது இத்தனைக்குப் பிறகும் எனக்கு எதிராகவே நீங்கள் மாறி கீழ்ப்படிய மறுத்தால் உங்களை ஏழு மடங்கு கடுமையாக தண்டிப்பேன். உங்களது பாவங்கள் அதிகரிக்கும்போது தண்டனைகளும் அதிகமாகும். 22 நான் உங்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன். உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து அவை பிரித்துக் கொண்டு போகும். அவை உங்கள் மிருகங்களைக் கொல்லும். அவை உங்கள் ஜனங்களை அழிக்கும். ஜனங்கள் பயணம் செய்ய அஞ்சுவார்கள். சாலைகள் வெறுமையாகும்!
23 “இவை அனைத்தும் நடந்த பிறகும் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலோ மேலும் எனக்கு எதிராக இருந்தாலோ, 24 நானும் உங்களுக்கு எதிராக மாறுவேன். ஆம் கர்த்தராகிய நானே உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன். 25 நீங்கள் எனது உடன்படிக்கையை மீறியிருப்பதினால் நான் உங்களைத் தண்டிப்பேன். உங்களுக்கெதிராக நான் படைகளைக் கொண்டு வருவேன். நீங்கள் பாதுகாப்புக்காக உங்கள் நகரங்களுக்கு ஓடுவீர்கள். ஆனால், உங்களுக்கிடையில் நோய்களைப் பரவச் செய்வேன். மேலும் உங்கள் எதிரிகள் உங்களைத் தோற்கடிப்பார்கள். 26 அந்த நகரத்தில் உண்பதற்குக் குறைவான அளவிலேயே தானியங்கள் இருக்கும். ஒரே அடுப்பில் பத்துப் பெண்கள் அவர்களது எல்லா உணவையும் சமைக்க முடியும். நீங்கள் அதை உண்ட பிறகும் பசியோடிருப்பீர்கள்!
27 “நீங்கள் அதற்கு மேலும் என்னைக் கவனிக்காவிட்டாலோ, எனக்கு எதிராகத் திரும்பினாலோ, 28 நான் உண்மையாகவே எனது கோபத்தைக் காட்டுவேன். ஆம், கர்த்தராகிய நான் உங்கள் பாவங்களுக்காக உங்களை ஏழு மடங்கு தண்டிப்பேன். 29 நீங்கள் மிகவும் பசியாவதினால் உங்கள் மகன்களையும். மகள்களையும் தின்பீர்கள். 30 நான் உங்களது உயர்ந்த மேடைகளை அழிப்பேன். உங்களது நறுமணப்புகைப் [a] பலிபீடங்களை உடைப்பேன். உங்களது பிணங்களை உங்களது உயிரற்ற விக்கிரகங்களின்மேல் போடுவேன். நீங்கள் எனது வெறுப்புக்கு ஆளாவீர்கள். 31 நான் உங்கள் நகரங்களை அழிப்பேன். உங்கள் பரிசுத்தமான இடங்களை வெறுமையாக்குவேன். உங்கள் பலிகளின் மணத்தை நுகரமாட்டேன். 32 உங்கள் நிலங்களை வெறுமையாக்குவேன். அதிலே குடியிருக்கும் உங்கள் பகைவர்கள் அதிர்ச்சியடைவார்கள். 33 தேசங்களெங்கும் உங்களைச் சிதறடிப்பேன். நான் எனது வாளை உருவி உங்களை அழிப்பேன். உங்கள் வயல்கள் பாழாகும், உங்கள் நகரங்கள் அழிந்துபோகும்.
34 “நீங்கள் உங்களது பகைவரின் நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். உங்கள் நாடு வெறுமையடையும். இறுதியில் உங்கள் வயல்கள் ஓய்வுபெறும். அவை ஓய்வு காலத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும். 35 வயல்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறவேண்டும் என்று சட்டம் கூறுகின்றன. நீங்கள் அங்கு குடியிருந்தபோது ஓய்வுபெறாத அந்த நிலங்கள் பாழாய்க் கிடந்து ஓய்வுபெறும். 36 உங்களில் உயிரோடு இருப்பவர்களைப் பகைவரின் நாடுகளில் தைரியம் இழந்து தவிக்கச் செய்வேன். அசைகிற இலைகளின் சத்தமும் அவர்களை அச்சுறுத்தி விரட்டும். அவர்கள் எதற்கெடுத்தாலும் அஞ்சுவார்கள். யாரும் துரத்தாவிட்டாலும் யாரோ அவர்களை வாளெடுத்துக் கொண்டு துரத்துவது போன்று ஓடிக்கொண்டிருப்பார்கள். 37 யாரும் துரத்தாவிட்டாலும் கூட அவர்கள் ஓடி ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள்.
“எதிரிகளை எதிர்த்து நிற்கிற பலம் உங்களிடம் இல்லாமல் போகும். 38 வேறு நாடுகளில் நீங்கள் காணாமல் போவீர்கள். உங்கள் பகைவரின் நாடுகளில் மறைந்து போவீர்கள். 39 உங்களில் உயிரோடு இருப்பவர்கள் தங்கள் பாவங்களால் பகைவர்கள் நாட்டில் அழிவார்கள். அவர்கள் தம் முற்பிதாக்கள் செய்ததுபோலவே தங்கள் பாவங்களால் அழிவார்கள்.
எப்பொழுதும் நம்பிக்கை இருக்கிறது
40 “ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு, அவர்கள் எனக்கு எதிராக நடந்துக்கொண்டு, பாவம் செய்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ளலாம். 41 அவர்கள் எனக்கு எதிராக நடந்துகொண்டதால் நானும் அவர்களுக்கு எதிராக நடந்துகொண்டேன். அவர்களைப் பகைவரின் நாடுகளுக்கு அனுப்பி வைத்தேன். இதனையும் அவர்கள் அறிக்கையிடலாம். அவர்கள் எனக்கு அந்நியர்களாவார்கள். அவர்கள் அடக்கமாக தங்கள் பாவங்களுக்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். 42 இவ்வாறு செய்தால் நான் யாக்கோபோடு செய்த உடன்படிக்கையையும், நான் ஈசாக்கோடு செய்த உடன்படிக்கையையும் நான் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையையும் நினைவுப்படுத்திக்கொள்வேன். நான் அந்த தேசத்தை நினைவுகூருவேன்.
43 “நிலம் வெறுமையாக இருக்கும். அது தனது ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும். பின் உயிரோடு இருக்கிறவர்கள் தங்கள் பாவங்களுக்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் எனது சட்டங்களையும், விதிகளையும் வெறுத்து கீழ்ப்படிய மறுத்ததால் இந்தத் தண்டனை பெற்றதாக உணர்ந்துகொள்வார்கள். 44 அவர்கள் உண்மையில் பாவம் செய்தவர்கள். ஆனால் அவர்கள் என்னிடம் உதவிக்கு வந்தால் நான் அவர்களை விட்டு விலகிப் போகமாட்டேன். நான் அவர்கள் சொல்வதைக் கேட்பேன். அவர்கள் தங்கள் பகைவரின் நாட்டிலே இருந்தாலும் முழுவதுமாக அழித்துவிடமாட்டேன். நான் அவர்களோடு செய்த உடன்படிக்கையை உடைக்கமாட்டேன். ஏனென்றால் நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர். 45 அவர்களுக்காக, நான் அவர்களின் முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுபடுத்திக்கொள்வேன். நான் அவர்களின் முற்பிதாக்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து, அவர்களின் தேவன் ஆனேன். மற்ற நாடுகளும் இதனைக் கவனித்தன. நான் கர்த்தர்!” என்று கூறினார்.
46 இவையே இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் கொடுத்த சட்டங்களும், விதிகளும், போதனைகளுமாகும். கர்த்தருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் சட்டங்களும் இவை தான். இச்சட்டங்களை கர்த்தர் சீனாய் மலையில் மோசேயிடம் கொடுத்தார். மோசே இவற்றை ஜனங்களிடம் கொடுத்தான்.
33 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்!
நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்!
2 சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்!
பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள்.
3 புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்!
மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.
4 தேவனுடைய வாக்கு உண்மையானது!
அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்!
5 நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார்.
கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார்.
6 கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று.
தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று.
7 கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார்.
அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்.
8 பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும்.
உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும்.
9 ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது.
அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும்.
10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும்.
அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும்.
11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது.
தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.
12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
13 பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து,
எல்லா ஜனங்களையும் கண்டார்.
14 அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து
பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார்.
15 ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார்.
ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார்.
16 அரசன் தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை.
ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை.
17 போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை.
அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை.
18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார்.
அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.
19 தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார்.
அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.
20 எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம்.
அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார்.
21 தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார்.
அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன்.
22 கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்!
உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.
மரணம் நியாயமானதா?
9 நான் இவை அனைத்தையும்பற்றி வெகு கவனமாகச் சிந்தித்தேன். தேவன், நல்லவர்களும் ஞானவான்களும் செய்வதையும் அவர்களுக்கு ஏற்படுவதையும் கட்டுப்படுத்துவதை நான் பார்த்தேன். அவர்கள் அன்பு செலுத்தப்படுவார்களா அல்லது வெறுக்கப்படுவார்களா என்று அவர்களுக்குத் தெரியாது. எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
2 ஆனால், நாம் அனைவரும் மரிக்கிறோம். இது அனைவருக்கும் நிகழ்கிற ஒன்று. மரணம் நல்லவர்கள் தீயவர்கள் என அனைவருக்கும் ஏற்படுகின்றது. சுத்தமானவர்கள் சுத்தமில்லாதவர்கள் என அனைத்து ஜனங்களுக்கும் மரணம் ஏற்படுகின்றது. பலி கொடுப்பவர்கள் பலிகொடுக்காதவர்கள் என அனைவருக்கும் மரணம் ஏற்படுகின்றது. பாவியைப் போன்றே நல்லவனும் மரித்துப்போகிறான். தேவனுக்குச் சிறப்பான பொருத்தனைகள் செய்கிறவனைப் போன்றே தேவனுக்குப் பொருத்தனை செய்யப் பயப்படுகிறவனும் மரித்துப்போகிறான்.
3 நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து காரியங்களிலும் மிக மோசமான காரியம் அனைத்து ஜனங்களும் ஒரே வழியில் முடிந்து போவதுதான். ஜனங்கள் எப்பொழுதும் பாவங்களையும் முட்டாள்தனங்களையும் சிந்தித்துக்கொண்டிருப்பதும் கெட்டதுதான். அவ்வகை எண்ணங்கள் மரணத்திற்கே அழைத்துச் செல்லுகின்றன. 4 வாழ்ந்துகொண்டிருக்கிற எவருக்கும் நம்பிக்கையுண்டு. அவன் யார் என்பது அக்கறையில்லை.
ஆனால் “மரித்துப்போன சிங்கத்தைவிட உயிரோடு உள்ள நாய் சிறந்தது”
என்னும் கூற்று உண்மையானது.
5 உயிரோடுள்ளவர்கள் தாம் மரித்துப்போவோம் என்பதை அறிந்தவர்கள். ஆனால் மரித்துப்போனவர்கள் எதையும் அறியமாட்டார்கள். மரித்துப் போனவர்களுக்கு எந்த விருதும் இல்லை. ஜனங்கள் அவர்களை விரைவில் மறந்துவிடுவார்கள். 6 ஒருவன் மரித்த பிறகு, அவனது அன்பு, வெறுப்பு, பொறாமை அனைத்தும் போய்விடுகின்றது. மரித்துப்போனவர்களுக்குப் பூமியில் நிகழ்ந்த இத்தனையிலும் பங்கில்லை.
முடியும்போது வாழ்க்கையை அனுபவி
7 இப்போது போய் உனது உணவை உண்டு மகிழ்ச்சியைப் பெறு. உனது திராட்சைரசத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைவாய். நீ இவற்றைச் செய்வது தேவனுக்கு உடன்பாடானதுதான். 8 சிறந்த ஆடைகளை அணிந்து அழகாகக் காட்சியளி. 9 நீ விரும்புகிற மனைவியோடு வாழ்க்கையை அனுபவி. குறுகிய உனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் அனுபவி. பூமியில் குறுகிய இந்த வாழ்வை தேவன் உனக்குக்கொடுத்திருக்கிறார். உனக்குரியது எல்லாம் இதுதான். எனவே இவ்வாழ்வில் நீ செய்யவேண்டிய வேலைகளுக்கு மகிழ்ச்சி அடைவாய். 10 எப்பொழுதெல்லாம் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ, அதை எவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியுமோ, அதனைச் செய். கல்லறையில் உனக்கு வேலையில்லை. அங்கு சிந்தனையும் அறிவும் ஞானமும் இல்லை. நாம் அனைவரும் மரணம் என்ற இடத்துக்கே போய்க்கொண்டிருக்கிறோம்.
அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? நாம் என்ன செய்யலாம்?
11 நான் வாழ்க்கையில் நியாயமற்ற சிலவற்றைப் பார்த்தேன். வேகமாக ஓடுகிறவன் பந்தயத்தில் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை. வலுமிக்க படை போரில் எப்பொழுதும் வெற்றிபெறுவதில்லை. ஞானத்தில் சிறந்தவன் எப்பொழுதும் அதிகமாகச் சம்பாதிப்பதில்லை. அறிவுக் கூர்மைமிக்கவன் எப்பொழுதும் செல்வத்தைப் பெறுவதில்லை. கல்வி அறிவுமிக்கவன் எப்பொழுதும் தனக்குரிய பாராட்டுகளைப் பெறுவதில்லை; நேரம் வரும்போது ஒவ்வொருவருக்கும் தீமையே ஏற்படுகின்றன.
12 அடுத்து என்ன நடக்கும் என்று ஒருவனால் என்றைக்கும் அறிய முடியாது. அவன் வலைக்குள் அகப்பட்ட மீனைப்போன்று இருக்கிறான். அம்மீனுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. அவன் கண்ணியில் அகப்பட்ட பறவையைப் போன்றவன். அப்பறவை அடுத்து நடக்கப்போவதை அறியாது. இதுபோலவே, ஒருவன் தீயவற்றால் கண்ணியில் அகப்படுகிறான். அது திடீரென்று அவனுக்கு ஏற்படுகின்றது.
ஞானத்தின் வல்லமை
13 இந்த வாழ்வில் ஒருவன் ஞானமுள்ளவற்றைச் செய்வதை நான் பார்த்தேன். எனக்கு அது மிக முக்கியமாகப்பட்டது. 14 மிகக் குறைந்த எண்ணிக்கைக்கொண்ட ஜனங்களையுடைய நகரம் இருந்தது. ஒரு அரசன் அதனைச் சுற்றி தன் படை வீரர்களை நிறுத்தி அதற்கு எதிராகப் போரிட்டான். 15 ஆனால் அந்நகரில் ஒரு ஞானி இருந்தான். அவன் ஏழை. ஆனால் அந்நகரைக் காப்பாற்ற தனது ஞானத்தைப் பயன்படுத்தினான். எல்லாம் நடந்து முடிந்தபிறகு, அந்த ஏழையை ஜனங்கள் மறந்துவிட்டார்கள். 16 எனினும் நான் இப்பொழுதும் ஞானம் பலத்தைவிட சிறந்தது என்பேன். அந்த ஜனங்கள் ஏழையின் ஞானத்தை மறந்துவிட்டார்கள். அவன் சொன்னதைக் கவனிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஞானமே சிறந்தது என்று நான் இன்னமும் நம்புகிறேன்.
17 ஒரு முட்டாள் அரசனால் மிகச் சத்தமாகச் சொல்லப்படுகிற வார்த்தைகளைவிட
ஒரு ஞானியின் மென்மையான வார்த்தைகள் சிறந்தவை.
18 போரில் ஞானமானது வாள்களையும் ஈட்டிகளையும்விடச் சிறந்தவை.
ஆனால் ஒரு முட்டாளால் பல நல்லவற்றை அழிக்க முடியும்.
1 தேவனுடைய ஒரு ஊழியனும், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமான பவுல் எழுதிக்கொள்வது: தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் விசுவாசத்துக்கு உதவும் பொருட்டு நான் அனுப்பப்பட்டேன். மக்கள் உண்மையை அறிந்துகொள்ள உதவுவதற்கே நான் அனுப்பப்பட்டேன். எவ்வாறு தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை அந்த உண்மை நமக்குக் காட்டுகிறது. 2 அந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வுக்கான நம்பிக்கையின் மூலமே வருகின்றது. அவ்வாழ்க்கையை நமக்குத் தருவதாக தேவன் வாக்குறுதி அளித்திருக்கிறார். தேவன் பொய் சொல்வதில்லை. 3 சரியான நேரத்தில் உலகம் அவ்வாழ்வை அறிந்துகொள்ளுமாறு தேவன் செய்தார். தேவன் தம் போதனைகள் மூலம் இதனைச் செய்தார். அப்பணியில் என்னை நம்பியிருக்கிறார். அவற்றை நான் போதித்து வருகிறேன். ஏனென்றால், நமது இரட்சகராக இருக்கிற தேவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
4 தீத்துவுக்கு எழுதிக்கொள்வது: நாம் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிற விசுவாசத்தில் நீ எனக்கு உண்மையான மகனைப் போன்றவன்.
கிருபையும், சமாதானமும் பிதாவாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உண்டாவதாக.
கிரேத்தாவில் தீத்துவின் பணி
5 இன்னும் செய்யவேண்டிய பல செயல்களை நீ செய்யும்பொருட்டும் உன்னை நான் கிரேத்தாவில் ஏற்கெனவே உன்னிடம் சொன்னபடி ஒவ்வொரு நகரத்திலும் மூப்பர்களை நியமிக்கும் பொருட்டும் உன்னை அங்கே விட்டுவந்தேன். 6 மூப்பராக இருக்கிறவன் எந்தத் தவறுகளையும் செய்யாத குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாக இருக்க வேண்டும். அவனது பிள்ளைகள் விசுவாசிகளாக இருக்கவேண்டும். கொடுமைக்காரர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் அவர்கள் இருக்கக் கூடாது. 7 ஒரு மூப்பர் தேவனுடைய பணியைக் கவனிக்கும் கடமையை உடையவர். எனவே, அவருக்குத் தவறு செய்தோம் என்ற குற்ற உணர்வு இருக்கக் கூடாது. தற்பெருமையும், சுயநலமும், முன் கோபமும் இல்லாதவராக இருக்கவேண்டும். அவர் குடிகாரனாக இருக்கக் கூடாது. சண்டைப் பிரியனாக இருக்கக் கூடாது. பிறரை ஏமாற்றிச் செல்வம் சேர்ப்பவராகவும் இருக்கக்கூடாது. 8 தம் வீட்டில் அந்நிய மக்களை வரவேற்று உபசரிக்கிறவராகவும், நல்லவற்றின் மீது அன்புடையவராகவும் மூப்பர்கள் இருக்க வேண்டும். ஞானமும், நேர்மையுமாய் வாழ்பவராகவும், தூய்மையும், சுய கட்டுப்பாடும் உடையவராகவும் அவர் இருக்க வேண்டும். 9 நாம் போதிக்கின்றவற்றை மூப்பர் உண்மையிலேயே பின்பற்றுபவராக இருக்கவேண்டும். உண்மையான போதனையின் மூலம் மக்களை உற்சாகப்படுத்த முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். உண்மையான போதனைகளுக்கு எதிரானவர்களை அவர்கள் எங்கே தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வல்லமையும் வேண்டும்.
10 பலர் பணிய மறுக்கிறார்கள். அவர்கள் வீணான வார்த்தைகளைப் பேசி மக்களைத் தவறான வழியில் நடத்திச்செல்கிறார்கள். குறிப்பாக யூதரல்லாதவர்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டுமென்று சொல்கிற யூதர்களை நான் குறிப்பிடுகிறேன். 11 இத்தகையவர்களின் பேச்சு தவறானது என மக்களுக்குச் சுட்டிக்காட்டும் திறமையுடையவராக மூப்பர் இருத்தல் வேண்டும். பயனற்ற இத்தகு பேச்சுக்களைப் பேசுவதை நிறுத்த வேண்டும். எதைப் போதிக்கக் கூடாதோ அதையெல்லாம் போதித்து எல்லாக் குடும்பங்களையும் அவர்கள் அழிக்கிறார்கள். மக்களை ஏமாற்றிச் செல்வம் சேர்க்கவே அவர்கள் இவ்வாறு போதிக்கிறார்கள். 12 கிரேத்தாவில் வசிக்கும் அவர்களின் சொந்த தீர்க்கதரிசி ஒருவர் கூட, “கிரேத்தா மக்கள் பொய்யர்கள், கெட்ட மிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்” என்று கூறி இருக்கிறார். 13 அந்தத் தீர்க்கதரிசி சொன்னதெல்லாம் உண்மைதான். எனவே அவர்கள் தவறானவர்கள் என்று கூறு. அவர்களிடம் நீ கண்டிப்பாக இரு. பிறகே அவர்கள் விசுவாசத்தில் பலம் பெறுவர். 14 இவ்விதம் யூதக் கதைகளைக் கவனித்துக் கேட்பதை அவர்கள் நிறுத்துவார்கள். உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிற அவர்களின் கட்டளைகளையும் பின்பற்றுவதையும் நிறுத்துவார்கள்.
15 தூய்மையானவர்களுக்கு அனைத்தும் தூய்மையாக இருக்கும். பாவம் நிறைந்தவர்களுக்கும், நம்பிக்கை அற்றவர்களுக்கும் எதுவும் தூய்மையாக இராது. உண்மையில் அவர்களின் எண்ணங்கள் பாவம் உடையதாகும். அவர்களின் மனசாட்சி அழிக்கப்பட்டது. 16 தேவனை அறிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்களைப் பார்த்தால் அவர்கள் தேவனை ஏற்றுக்கொள்ளாதது தெரியும். அவர்கள் பயங்கரமானவர்கள். அவர்கள் அடக்கமில்லாதவர்கள், அவர்களால் நன்மை செய்ய இயலாது.
2008 by World Bible Translation Center