M’Cheyne Bible Reading Plan
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குரியவர்கள்
19 கர்த்தர் மோசேயிடம், 2 “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நீ கூற வேண்டியதாவது: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர். எனவே, நீங்களும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும்.
3 “உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தாய் தந்தைக்கு மரியாதை செய்யவேண்டும். என் ஓய்வு நாட்களை [a] ஆசரிக்கவேண்டும். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்!
4 “விக்கிரகங்களை வணங்காதீர்கள். வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உருவாக்காதீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5 “நீங்கள் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொடுக்கும்போது அது அங்கீகரிக்கப்படத்தக்க சரியான வழியிலேயே செய்யவேண்டும். 6 நீங்கள் பலிகொடுத்த நாளிலும், மறுநாளும் அதனை உண்ணலாம். ஆனால் அந்த உணவில் மீதியானது மூன்றாவது நாளும் இருந்தால் அதனை நெருப்பில் போட்டு எரித்துவிட வேண்டும். 7 மூன்றாவது நாள் பலியின் மீதியான எதையும் நீங்கள் உண்ணக் கூடாது. இது தீட்டானது, இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. 8 இதனை எவராவது செய்தால் அது பாவமாயிருக்கும். ஏனென்றால் அவர்கள் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றை மதிக்கவில்லை. இத்தகைய மனிதர்கள் தம் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள்.
9 “அறுவடைக் காலத்தில் நீங்கள் விளைந்த பயிரை அறுவடை செய்யும்போது வயலின் எல்லாப் பகுதிகளையும் மூலைகளையும் சேர்த்து அறுக்காதீர்கள். தானியங்கள் தரையில் சிதறுமானால் அவற்றைச் சேகரித்து அள்ளிக்கொள்ளாதீர்கள். 10 உங்கள் திராட்சைக் கொடியில் உள்ள அனைத்து திராட்சைப் பழங்களையும் பறிக்காதீர்கள். தரையில் விழும் திராட்சைப் பழங்களையும் பொறுக்கிக்கொள்ளாதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும் பயணிகளுக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
11 “நீங்கள் திருடக்கூடாது. நீங்கள் ஜனங்களை ஏமாற்றவும் கூடாது. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். 12 எனது பெயரைப் பயன்படுத்தி பொய் சத்தியம் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் தேவனின் பெயரை மதிக்காமல் இருக்கிறீர்கள். நானே கர்த்தர்.
13 “உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்குத் தீமை செய்யாதீர்கள். அவனிடம் திருடாதீர்கள். வேலைக்காரனின் கூலியை விடியும்வரை இரவு முழுக்க நிறுத்தி வைக்காதீர்கள்.
14 “செவிடர்களை நீங்கள் சபிக்காதீர்கள். குருடன் விழுந்துவிடும்படி அவன் எதிரே எதுவும் போடாதீர்கள். உங்கள் தேவனுக்கு மரியாதைச் செலுத்த வேண்டும். நானே கர்த்தர்!
15 “நீங்கள் நியாயத்தீர்ப்பில் நடுநிலையுடன் இருங்கள். ஒருவன் ஏழை என்பதினால் சிறப்பான சலுகையோ அல்லது ஒருவர் முக்கியமான மனிதர் என்பதினால் விசேஷ சலுகையோ செய்யக் கூடாது. உனது அயலானுக்குத் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையில் இருந்து சொல்ல வேண்டும். 16 மற்றவர்களைப்பற்றிய பொய்க் கதைகளைப் பரப்பிக்கொண்டு திரியக் கூடாது. அயலானின் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படும்படி நீ எதுவும் செய்யக்கூடாது. நானே கர்த்தர்!
17 “உன் மனதில் உன் சகோதரனை நீ வெறுக்கக் கூடாது. உனது அயலான் உனக்குக் கெடுதல் செய்தால் அதைப்பற்றி அவனிடம் பேசு, பின் அவனை மன்னித்துவிடு. 18 உனக்கு ஜனங்கள் செய்த தீமைகளை மறந்துவிடு. பழிவாங்க முயற்சி செய்யாதே. உனது அயலானையும் உன்னைப்போல நேசி. நானே கர்த்தர்!
19 “நீங்கள் என்னுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இருவிதமான மிருகங்களைச் சேர்த்து இனப்பெருக்கம் செய்யக்கூடாது. உங்களது வயலில் இரண்டுவிதமான விதைகளை விதைக்கக்கூடாது. இரண்டு விதமான நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது.
20 “அடுத்தவனிடம் அடிமையாய் இருக்கிற ஒரு பெண்ணுடன் ஒருவன் பாலியல் உறவுகொள்ள நேரிடலாம். ஆனால் அவளை வாங்கவோ அவளுக்குச் சுதந்திரம் அளிக்கவோ முடியாது. இவ்வாறு நடந்தால் இது தண்டனைக்குரியது. ஆனால் இது மரணத்திற்குரியது அல்ல. ஏனென்றால் அவள் சுதந்திரமானவள் அல்ல. 21 அவன் குற்றபரிகார பலியாக ஆட்டுக்கடா ஒன்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவரவேண்டும். 22 அவன் சுத்திகரிக்கப்படும்படி ஆசாரியன் பாவ நிவிர்த்தி செய்வான். கர்த்தருக்கு முன்பாக ஆசாரியன் ஆட்டுக்கடாவை குற்றபரிகார பலியாகச் செலுத்த வேண்டும், அப்போது அவன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
23 “வருங்காலத்தில் உங்கள் நாட்டுக்குள் நுழைந்த பின்பு உணவுக்காகப் பலவிதமான மரங்களை நீங்கள் நடுவீர்கள். ஒரு மரத்தை நட்டபிறகு மூன்று வருடத்திற்கு அதிலுள்ள பழங்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். 24 நான்காவது ஆண்டில் கிடைக்கும் பழங்கள் கர்த்தருக்குரியவை. அவற்றப் பரிசுத்தக் காணிக்கையாக கர்த்தரைத் துதிப்பதற்காகக் கொடுக்க வேண்டும். 25 ஐந்தாவது ஆண்டில் அம்மரத்திலுள்ள கனியை நீங்கள் உண்ணலாம். அம்மரம் உங்களுக்காக மேலும் மேலும் பழங்களைத் தரும். உனது தேவனாகிய கர்த்தர் நானே.
26 “இரத்தம் இருக்கிற இறைச்சியை நீங்கள் உண்ணக் கூடாது.
“மாயவேலைகளைப் பயன்படுத்தவோ, அல்லது எதிர்காலத்தைப்பற்றி அறிய மந்திர, தந்திர வழிகளில் முயற்சி செய்யவோ கூடாது.
27 “உன் முகத்தில் வளருகிற முடியையும், தாடியையும் மழிக்கக் கூடாது. 28 மரித்து போனவர்களின் நினைவாக உன் உடலில் கீறி அடையாளம் உருவாக்காதே. உன் உடம்பில் பச்சை குத்திக்கொள்ளாதே. நானே கர்த்தர்.
29 “உனது மகள் வேசியாகும்படி விடாதே. அவளை நீ மதிக்கவில்லை என்பதையே அது காட்டும். உன் நாட்டில் ஜனங்கள் வேசிகளாகும்படி விடாதே. இத்தகைய பாவம் உன் நாட்டில் காணப்படக்கூடாது.
30 “எனது ஓய்வு நாளில் நீங்கள் வேலை செய்யக்கூடாது. என் பரிசுத்தமான இடத்தை நீங்கள் மதிக்க வேண்டும். நானே கர்த்தர்.
31 “மந்திரவாதிகளிடமும் செத்தவர்களிடமும் தொடர்புகொள்வதாகக் கூறுபவர்களிடமும் புத்திமதி கேட்டு செல்லாதீர்கள். அவர்கள் உங்களைத் தீட்டுப்படுத்துவார்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
32 “முதியவர்களுக்கு மரியாதை கொடு. அவர்கள் அறைக்குள் வரும்போது எழுந்து நில். உங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துங்கள். நானே கர்த்தர்.
33 “உனது நாட்டில் வாழும் அயல்நாட்டுக்காரர்களுக்குக் கெடுதல் செய்யாதே. 34 நீ உனது நாட்டாரை மதிப்பதுபோலவே அந்நியர்களையும் மதிக்க வேண்டும். நீ உன்னையே நேசிப்பது போல அந்நியர்களையும் நேசிக்க வேண்டும். ஏனென்றால் நீங்களும் முன்பு எகிப்தில் அந்நியராயிருந்தீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
35 “நியாய விசாரணையின்போது நடு நிலமையில் இருங்கள். அளக்கும்போதும், நிறுக்கும்போதும் நேர்மையாக இருங்கள். 36 உங்கள் கூடைகளும், ஜாடிகளும் சரியான அளவுள்ளவையாக இருக்கட்டும். உங்கள் எடைக் கற்களும், தராசும் பொருட்களைச் சரியாக எடை போடட்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எகிப்திலிருந்து உங்களை நானே வெளியே அழைத்து வந்தேன்.
37 “எனது கட்டளைகளையும், எனது விதிகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நானே கர்த்தர்” என்று கூறினார்.
தாவீதின் பாடல்
23 கர்த்தர் என் மேய்ப்பர்.
எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.
2 அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார்.
3 அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.
அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார்.
4 மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.
ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும்.
5 கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர்.
என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6 என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும்.
நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.
தாவீதின் பாடல்
24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.
3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
யார் அங்கு வழிபட முடியும்?
4 தீயவை செய்யாத ஜனங்களும்,
பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப் [a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.
5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.
7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
மகிமை வாய்ந்த அரசர் உள்ளே வருவார்.
8 யார் இந்த மகிமைமிக்க அரசர்?
கர்த்தரே அந்த அரசர். அவரே வல்லமையுள்ள வீரர்.
கர்த்தரே அந்த அரசர். அவரே போரின் நாயகன்.
9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
மகிமை மிக்க அரசர் உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க அரசர்?
சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த அரசர்.
அவரே மகிமை மிக்க அரசர்.
கேளிக்கைகளை அனுபவிப்பது மகிழ்ச்சியைக்கொண்டுவருமா?
2 நான் எனக்குள்: “நான் வேடிக்கை செய்வேன். என்னால் முடிந்தவரை எல்லாவற்றிலும் மகிழ்ச்சி அடைவேன்” என்று சொன்னேன். ஆனால் நான் இவையும் பயனற்றவை என்று கற்றுக்கொண்டேன். 2 எல்லா நேரத்திலும் சிரித்துக்கொண்டிருப்பது முட்டாள்தனமானது. கேளிக்கையை அனுபவிப்பது எந்த நன்மையையும் செய்யாது.
3 எனவே என் மனதை ஞானத்தால் நிரப்பும்போது என் உடலை திராட்சைரசத்தால் நிரப்ப முடிவு செய்தேன். இந்த முட்டாள்தனத்தை நான் முயற்சி செய்தேன். ஏனென்றால் நான் மகிழ்ச்சியடைவதற்குரிய வழியைக் கண்டுபிடிக்க எண்ணினேன். ஜனங்களின் குறுகிய வாழ்வில் அவர்கள் என்ன நன்மை செய்யக்கூடும் என்று பார்க்க விரும்பினேன்.
கடின உழைப்பு மகிழ்ச்சியைத் தருமா?
4 பிறகு நான் பெரிய செயல்களைச் செய்யத் துவங்கினேன். வீடுகளைக் கட்டினேன். திராட்சைத் தோட்டங்களை எனக்காக நட்டேன். 5 நான் தோட்டங்களை அமைத்தேன், பூங்காவனங்களை உருவாக்கினேன். எல்லாவகையான பழமரங்களையும் நட்டேன். 6 நான் எனக்காக குளங்களை அமைத்தேன். அதன் மூலம் பழமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினேன். 7 நான் ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினேன். என் வீட்டிலும் அடிமைகள் பிறந்தனர். பல பெருஞ்செல்வங்கள் எனக்குச் சொந்தமாயின. எனக்கு மாட்டுமந்தையும் ஆட்டுமந்தையும் இருந்தன. எருசலேமில் மற்றவர்களைவிட எனக்கு ஏராளமான செல்வங்கள் இருந்தன.
8 நான் எனக்காகப் பொன்னையும் வெள்ளியையும் சேகரித்தேன். அரசர்களிடமிருந்தும் அவர்களின் நாடுகளிலிருந்தும் பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டேன். எனக்காகப் பாடிட ஆண்களும் பெண்களும் இருந்தனர். எவரும் விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களும் என்னிடம் இருந்தன.
9 நான் செல்வந்தனாகவும் புகழுடையவனாகவும் ஆனேன். எனக்குமுன் எருசலேமில் வாழ்ந்த எந்த மனிதரையும்விட நான் பெரிய ஆளாக இருந்தேன். எப்பொழுதும் எனது ஞானம் எனக்கு உதவுவதாக இருந்தது. 10 என் கண்கள் பார்த்து நான் விரும்பியதை எல்லாம் பெற்றேன். நான் செய்தவற்றிலெல்லாம் மனநிறைவு பெற்றேன். என் இதயம் பூரித்தது, இம்மகிழ்ச்சியே எனது அனைத்து கடின உழைப்பிற்கும் கிடைத்த வெகுமதி.
11 ஆனால் பின்னர் நான் செய்த அனைத்தையும் கவனித்தேன். நான் செய்த கடின உழைப்பை எல்லாம் நினைத்துப் பார்த்தேன். அவை அனைத்தும் காலவிரயம் என்று முடிவுசெய்தேன். இது காற்றைப் பிடிப்பதுபோன்றது. நம் வாழ்க்கையில் நாம் செய்த அனைத்திலிருந்தும் இலாபகரமானது எதுவுமில்லை.
ஒருவேளை ஞானமே பதிலாயிருக்கலாம்
12 ஒரு அரசனால் செய்ய முடிந்ததைவிட ஒரு மனிதனால் அதிகமாகச் செய்யமுடியாது. சில அரசர்கள் ஏற்கெனவே நீங்கள் செய்ய விரும்புவதையே செய்திருக்கிறார்கள். அந்த அரசர்கள் செய்தவையும் காலவிரயம் என்று நான் கற்றுக்கொண்டேன். எனவே மீண்டும் நான் ஞானமுள்ளவனாக இருப்பதைப்பற்றியும், அறிவற்றவனாக இருப்பதைப்பற்றியும் பைத்தியக்காரத்தனமான செயல்களைப்பற்றியும் எண்ணினேன். 13 இருட்டைவிட ஒளி சிறந்தது. அது போலவே முட்டாள்தனத்தைவிட ஞானம் சிறந்தது என்று கண்டேன். 14 ஞானமுள்ளவன் தான் செல்லுமிடத்தை அறிய சிந்தனையைக் கண்களாகப் பயன்படுத்துகிறான். ஆனால் முட்டாளோ, இருட்டில் நடப்பவனைப் போன்றுள்ளான்.
ஆனால் ஞானமுள்ளவனுக்கும் முட்டாளுக்கும் ஒரே வழியிலேயே முடிவு ஏற்படுகிறது என்பதைக் கண்டேன். இருவரும் மரித்துப்போகின்றனர். நான் எனக்குள், 15 “ஒரு முட்டாளுக்கு எற்படுவதே எனக்கும் எற்படுகின்றது. எனவே நான் ஞானம்பெற ஏன் இவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன்” என்று எண்ணினேன். நான் எனக்குள், “ஞானமுள்ளவனாக இருப்பதும் பயனற்றதே” என்று சொன்னேன். 16 ஞானமுள்ளவனும் முட்டாளும் மரித்துப்போகின்றனர். ஜனங்கள் ஞானவான்களையும், முட்டாள்களையும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில் தாங்கள் செய்தவற்றையெல்லாம் ஜனங்கள் மறந்துபோகிறார்கள். எனவே ஞானமுள்ளவனும் முட்டாளும் உண்மையில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி உண்டா?
17 இது என்னை வாழ்வை வெறுக்கும்படி செய்தது. இவ்வாழ்வில் உள்ள அனைத்துமே பயனற்றது என்ற எண்ணம் எனக்கு வருத்தத்தைத் தந்தது. இது காற்றைப் பிடிப்பதுபோன்ற முயற்சி.
18 நான் செய்த கடினமான உழைப்பு அனைத்தையும் வெறுத்தேன். நான் கடினமாக உழைத்திருக்கிறேன். ஆனால் நான் உழைத்தவற்றுக்கான பலனை எனக்குப் பின்னால் வாழ்பவர்களுக்கு வைத்துப் போக வேண்டும். நான் அவற்றை என்னோடு எடுத்துச் செல்ல இயலாது. 19 வேறு ஒருவன் நான் உழைத்ததும், கற்றதுமான அனைத்தையும் ஆளுவான். அவன் ஞானமுள்ளவனா முட்டாளா என்பதை நான் அறியேன். இதுவும் அறிவற்றதுதான்.
20 எனவே, நான் செய்த அனைத்து உழைப்பைப்பற்றியும் வருத்தம் அடைந்தேன். 21 ஒருவனால் தனது ஞானம், அறிவு, திறமை ஆகியவற்றைப் பயன்படுத்தி உழைக்கமுடியும். ஆனால் அவன் இறந்ததும், அவனது உழைப்பை மற்றவர்கள் பெறுகின்றனர். அவர்கள் எந்த உழைப்பையும் செய்வதில்லை. ஆனால் அனைத்தையும் பெறுகின்றனர். இது எனக்குச் சோர்வுண்டாக்குகிறது. இது நேர்மையற்றதாகவும் அர்த்தமற்றதாகவும் உள்ளது. 22 ஒருவனது அனைத்து உழைப்புக்கும் போராட்டங்களுக்கும் பிறகு வாழ்வில் அவனுக்கு என்ன கிடைக்கிறது? 23 அவனது வாழ்வு முழுவதும் வலியும், சலிப்பும், கடின உழைப்புமே மிஞ்சுகிறது. இரவிலும்கூட அவனது மனம் ஓய்வு பெறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதுதான்.
24-25 என்னைவிட வேறு எவராது வாழ்வில் மகிழ்ச்சிபெற முயற்சி செய்ததுண்டா? எனவே ஒரு மனிதன் செய்யவேண்டியது என்னவென்றால் நன்றாக உண்பது, குடிப்பது, செய்யவேண்டியவற்றை மட்டும் மகிழ்ச்சியாக செய்வதுதான். இதையே நான் கற்றுக்கொண்டேன். இவை தேவனிடமிருந்து வருகிறது என்பதையும் நான் பார்த்தேன். 26 ஒருவன் நன்மையைச் செய்து தேவனைப் பிரியப்படுத்தினால், தேவன் அவனுக்கு ஞானம், அறிவு, மகிழ்ச்சி ஆகியவற்றைக்கொடுக்கிறார். ஆனால் பாவம் செய்கிறவனுக்கு கூட்டுகிற வேலையையும், சுமக்கிற வேலையையும் தருகிறார். தேவன் கெட்டவர்களிடம் உள்ளவற்றை எடுத்து நல்லவர்களுக்குக்கொடுக்கிறார். ஆனால் இவை அனைத்தும் பயனற்றவை. இது காற்றைப் பிடிக்கும் முயற்சிதான்.
தவறான போதகர்களைப் பற்றி எச்சரிக்கை
4 வருங்காலத்தில் சிலர் உண்மையான போதனையை நம்புவதை நிறுத்திவிடுவார்கள் என்று தூய ஆவியானவர் கூறி இருக்கிறார். அவர்கள் பொய் சொல்லும் ஆவிகளுக்குத் தலைவணங்குவார்கள். அவர்கள் பிசாசுகளின் போதனைகளைப் பின்பற்றுவார்கள். 2 பொய்யும், தந்திரமும் உடையவர்கள் மூலம் அத்தீய போதனைகள் வருகிறது. அந்த மக்கள் சரி எது, தவறு எது என்று பார்க்கமாட்டார்கள். அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மை, சூடு போடப்பட்டு, அழிக்கப்பட்டதைப் போன்றது. 3 அவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்கின்றனர். சில உணவு வகைகளை உண்ணக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் அந்த உணவுகளை தேவனே படைத்திருக்கிறார். நம்புகிறவர்களும், உண்மையை அறிந்தவர்களும் அவற்றை நன்றியோடு உண்ணலாம். 4 தேவனால் படைக்கப்பட்ட அனைத்துமே நல்லதுதான். நன்றிக் கடனாகப் பெறுகிறவரையில் தேவனால் உருவாக்கப்பட்ட எதையும் மறுக்கக்கூடாது. 5 தேவனால் படைக்கப்பட்டவை எல்லாம் தேவனுடைய வார்த்தையாலும் பிரார்த்தனைகளாலும் தூய்மையாக்கப்படும்.
கிறிஸ்துவின் நல்ல வேலையாளாக இரு
6 அங்குள்ள சகோதர சகோதரிகளிடமும் இவற்றைக் கூறு. இவை நீ இயேசு கிறிஸ்துவின் நல்ல வேலையாள் என்பதைக் காட்டும். விசுவாசமான வார்த்தைகளாலும், பின்பற்றப்படுகிற நல்ல போதனையாலும் நீ பலப்படுத்தப்படுகிறாய் என்றும் காட்டுவாய். 7 மக்கள் சொல்கிற அர்த்தமற்ற கதைகள் தேவனுடைய உண்மையோடு சற்றும் பொருந்தாதவை. அவற்றின் கூற்றுக்களைப் பின்பற்றாதே. தேவனுக்கு உண்மையான சேவையைச் செய்ய கற்றுக்கொள். 8 உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது. ஆனால் தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும். 9 நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். 10 இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.
11 கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய். 12 நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு.
13 மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய். 14 உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய். 15 இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர். 16 உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.
2008 by World Bible Translation Center