Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
லேவியராகமம் 17

மிருகங்களைக் கொல்வது மற்றும் உண்பது பற்றிய விதிகள்

17 கர்த்தர் மோசேயிடம் “நீ ஆரோனுடனும், அவனது மகன்களோடும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசி, கர்த்தர் என்ன கட்டளையிட்டுள்ளார் என்பதைக் கூறு: ஒரு இஸ்ரவேலன் ஒரு காளையையோ, அல்லது ஒரு செம்மறியாட்டையோ அல்லது வெள்ளாட்டையோ முகாமுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கொல்லலாம். அவன் அந்த மிருகத்தை ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவன் அந்த மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக அளிக்க வேண்டும். கொல்லப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை அவன் சிந்தியவனாகிறான். எனவே, தனது அன்பளிப்பை கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவன் அம்மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக எடுத்துச் செல்லவில்லையெனில் அவன் தனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும். விதிகள் இவ்வாறு இருப்பதால் ஜனங்கள் தங்கள் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் வயல்களில் கொல்கிற மிருகங்களை ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். பிறகு ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின்மேல் கர்த்தருக்கு முன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும். கொழுப்பை நறுமணமிக்க வாசனையாக எரிக்க வேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். தாங்கள் தவறாகப் பின்பற்றிய பொய்த் தேவர்களுக்கு இனிமேல் அவர்கள் எவ்வித பலிகளும் இடாமல் இருக்க வேண்டும். அவர்கள் இத்தகைய பொய்த் தேவர்களைப் பின்பற்றினால் ஒரு வேசியைப் போன்று இருப்பார்கள். இவ்விதிகள் நிரந்தரமானவை.

“ஜனங்களிடம் சொல்லுங்கள், இஸ்ரவேல் குடிமக்களோ அல்லது உங்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களோ தகன பலியையோ அல்லது வேறு பலிகளையோ ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்கு கர்த்தருக்கு அளிக்க வரவேண்டும். இவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் மற்ற ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட்டுப் போவார்கள்.

10 “இரத்தத்தைச் சாப்பிடுகிற எவருக்கும் தேவனாகிய நான் எதிராக இருக்கிறேன். அவன் இஸ்ரவேல் குடிமகனாகவோ, அல்லது உங்களோடு குடியிருக்கும் அயல் நாட்டுக்காரனாகவோ இருக்கலாம். நான் அவர்களை மற்ற ஜனங்களிடம் இருந்து ஒதுக்கிவிடுவேன். 11 ஏனென்றால் சரீரத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. இரத்தத்தைப் பலிபீடத்தில் ஊற்றும்படி நான் விதிகளைக் கொடுத்திருக்கிறேன். உங்களைச் சுத்திகரித்துக்கொள்ள நீங்கள் இதனைச் செய்ய வேண்டும். இரத்தமே ஆத்துமாவை பாவ நிவிர்த்தி செய்கிறது. 12 உங்களில் எவரும், உங்களோடு வாழும் அயல் நாட்டுக்காரர்களும் இரத்தம் உண்ணக் கூடாது.

13 “எவராவது உண்ணத்தக்க பறவையையோ, மிருகத்தையோ பிடித்துக்கொன்றால் அதன் இரத்தத்தைத் தரையிலே ஊற்றி மண்ணால் மூட வேண்டும். 14 இறைச்சியில் இரத்தம் இருந்தால் இறைச்சியில் மிருகத்தின் உயிர் இருப்பதாகப் பொருள். இறைச்சியில் இரத்தம் இருந்தால் அதை உண்ணாதீர்கள். இரத்தத்தோடு உண்ணுகிற எவனும் தன் ஜனங்களிடம் இருந்து ஒதுக்கப்படுவான்.

15 “இஸ்ரவேலராகிய நீங்களும், உங்களோடு வசிக்கும் அயலார் எவரும் தானாக மரித்துப்போன மிருகத்தையோ, வேறு மிருகத்தாலே கொல்லப்பட்ட மிருகத்தையோ உண்ணக் கூடாது, அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும். அப்படி உண்பவன் மாலைவரை தீட்டாயிருப்பான். மாலையில் அவன் தன் உடையைத் துவைத்து தண்ணீரால் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். 16 அவன் தனது ஆடையைத் துவைக்காவிட்டாலோ, தண்ணீரால் உடலைக் கழுவாவிட்டாலோ அவன் குற்றமுள்ளவனாயிருப்பான்” என்று கூறினார்.

சங்கீதம் 20-21

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

20 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
    யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
    சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
    உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
    உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
    நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.

கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
    தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார்.
    அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
    மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
    அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
    அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
    நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.

கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்!
    தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

21 கர்த்தாவே, உமது பெலன் அரசனை மகிழ்விக்கிறது.
    நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.
நீர் அரசனுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர்.
    அரசன் சிலவற்றைக் கேட்டான்.
கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.

கர்த்தாவே, நீர் உண்மையாகவே அரசனை ஆசீர்வதித்தீர்.
    அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர்.
தேவனே அரசன் உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர்.
    நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர்.
வெற்றிக்கு நேராக நீர் அரசனை வழிநடத்தினீர்.
    அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர்.
    அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர்.
தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த அரசனை ஆசீர்வதித்தீர்.
    உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து அரசனைப் பாதுகாத்தீர்.
    அரசன் உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும்.
அரசன் கர்த்தரை நம்புகிறான்.
    உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.
தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர்.
    உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.
கர்த்தாவே, நீர் அரசனோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார்.
    அவர் தன் பகைவர்களை அழிப்பார்.
10 அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும்.
    அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.
11 ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள்.
    அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.
12 கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர்.
    நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர்.
அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர்.
    அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.

13 கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும்.
    கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!

நீதிமொழிகள் 31

லேமுவேல் என்னும் அரசனது ஞானமொழிகள்

31 இவை, லேமுவேல் அரசன் சொன்ன ஞானமொழிகள். இவற்றை அவனது தாய் அவனுக்குக் கற்பித்தாள்.

ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய மகன். உனது வல்லமையைப் பெண்களிடம் இழக்காதே. பெண்கள் அரசர்களை அழித்திருக்கிறார்கள். எனவே உன்னை அவர்களிடத்தில் தராதே. லேவமுவேலே, அரசர்கள் மதுவைக் குடிப்பது அறிவுள்ள செயல் அல்ல. ஆளுபவர்கள் மதுவை விரும்புவது அறிவுடையது அல்ல. அவர்கள் மிகுதியாகக் குடித்துவிட்டு சட்டங்களை மறந்துவிடுவார்கள். பின் அவர்கள் ஏழை ஜனங்களின் உரிமைகளை எடுத்துவிடக்கூடும். ஏழை ஜனங்களுக்கு மதுவைக்கொடு. திராட்சைரசத்தை துன்பப்படுகிற ஜனங்களுக்குக்கொடு. பிறகு அவர்கள் அதனைக் குடித்துவிட்டு தாம் ஏழை என்பதை மறக்கட்டும். அவர்கள் குடித்துவிட்டு தம் எல்லா துன்பங்களையும் மறக்கட்டும்.

ஒருவன் தனக்குத்தானே உதவிக்கொள்ள முடியாவிட்டால், நீ அவனுக்கு உதவவேண்டும். எவனால் பேசமுடியாதோ, அவனுக்காக பேசு. துன்பப்படுகிற அனைத்து ஜனங்களுக்கும் நீ உதவ வேண்டும். சரியென்று தெரிந்தவற்றின் பக்கம் நில். நேர்மையாக நியாயம்தீர்த்துவிடு. ஏழை ஜனங்களின் உரிமையைக் காப்பாற்று. தேவையிலிருக்கும் ஜனங்களுக்கு உதவு.

பரிபூரணமுள்ள மனைவி

10 [a] “பரிபூரணமுள்ள மனைவியைக்” கண்டுபிடிப்பது கடினம்.
    ஆனால் அவள் நகைகளைவிட அதிக விலைமதிப்புடையவள்.
11 அவள் கணவன் அவளைச் சார்ந்திருப்பான்.
    அவன் ஒருபோதும் ஏழையாகமாட்டான்.
12 தன் வாழ்வு முழுவதும் அவள் தன் கணவனுக்கு நன்மையே செய்வாள்.
    அவனுக்கு ஒருபோதும் துன்பம் உண்டாக்கமாட்டாள்.
13 அவள் எப்பொழுதும் ஆட்டு மயிரையும் சணல்நூலையும் சேகரிப்பாள்.
    தனது கைகளினாலேயே ஆடைகளை மகிழ்ச்சியோடு தயாரிப்பாள்.
14 அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப்போன்றவள்.
    எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள்.
15 அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள்.
    வேலைக்காரர்களுக்கு அவர்களுடைய பங்கைக்கொடுப்பாள்.
16 அவள் நிலத்தைப் பார்த்து வாங்குவாள்.
    அவள் பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்து திராட்சைக்கொடிகளை நடுவாள்.
17 அவள் கடினமாக உழைப்பாள்.
    அவள் தனது எல்லா வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள்.
18 தன் உழைப்பால் உருவான பொருட்களை விற்கும்போது எப்பொழுதும் அவள் லாபத்தை அடைவாள்.
    அவள் இரவில் அதிக நேரம் வேலைச் செய்த பிறகே ஓய்வெடுக்கிறாள்.
19 அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள்.
    தனக்குத் தேவையான ஆடைகளைத் தானே நெய்கிறாள்.
20 ஏழைகளுக்கு எப்போதும் அள்ளித் தருகிறாள்.
    தேவையானவர்களுக்கு உதவி செய்கிறாள்.
21 பனிக் காலத்தில் அவள் தன் குடும்பத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டாள்.
    ஏனென்றால் அனைவருக்கும் நல்ல வெப்பமான ஆடைகளை அவள் தந்துள்ளாள்.
22 அவள் கம்பளங்களைச் செய்து படுக்கையில் விரிக்கிறாள்.
    மிக அழகான புடவையை அணிகிறாள்.
23 ஜனங்கள் அவளது கணவனை மதிக்கின்றனர்.
    அவன் அந்நாட்டுத் தலைவர்களுள் ஒருவன்.
24 அவள் ஒரு நல்ல வியாபாரி.
    அவள் ஆடைகளையும் கச்சைகளையும் தயாரிக்கிறாள்.
    இவற்றை வியாபாரிகளிடம் விற்கிறாள்.
25 அவள் போற்றப்படுவாள். [b] ஜனங்கள் அவளை மதிக்கின்றனர்.
    அவள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குகிறாள்.
26 அவள் ஞானத்தோடு பேசுகிறாள்.
    ஜனங்கள் அன்போடும் கருணையோடும் இருக்கவேண்டும் என்று அவள் போதிக்கின்றாள்.
27 அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை.
    தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறாள்.
28 அவளது குழந்தைகள் அவளைப்பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள்.
    அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான்.
29 “எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள்.
    ஆனால் நீ தான் சிறந்தவள்” என்கிறான்.
30 ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம்.
    ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள்.
31 அவளுக்குப் பொருத்தமான பரிசைக்கொடு.
    எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு.

1 தீமோத்தேயு 2

ஆணுக்கும் பெண்ணுக்கும் சில விதிமுறைகள்

எல்லாருக்குமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்று முதலில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எல்லாரையும் பற்றி தேவனிடம் பேசுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைப்பற்றிக் கேளுங்கள். அவரிடம் நன்றியுணர்வுடன் இருங்கள். அரசர்களுக்காகவும், அதிகாரம் உள்ளவர்களுக்காகவும் நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். முழுக்க முழுக்க சேவையும், தேவனைக் குறித்த மரியாதையும் அமைதியும் சமாதானமும் உள்ள வாழ்வை நாம் பெறும்பொருட்டு அத்தலைவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். இது நன்று. நம் மீட்பரான தேவனுக்கு இது மிகவும் விருப்பமானது.

அனைத்து மக்களும் மீட்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அனைத்து மக்களும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தேவன் ஆசைப்படுகிறார். ஒரே ஒரு தேவனே இருக்கிறார். மனிதர்கள் தேவனை அடைவதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவ்வழி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவாகிய இயேசுவின் மூலம் உருவாகிறது. அனைத்து மக்களின் பாவங்களுக்காகவும் அவர் தன்னையே தந்துவிட்டார். தேவன் எல்லாரையும் மீட்க விரும்புகிறார் என்பதற்கு இயேசுவே சாட்சி. அவர் சரியான நேரத்தில் வந்தார். அதனால்தான் நற்செய்தியைப் பரப்புவதற்காக, நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால் தான் நான் அப்போஸ்தலானாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். (நான் உண்மையைத் தான் சொல்கிறேன். பொய் சொல்லவில்லை) யூதர் அல்லாதவர்களுக்கான போதகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அவர்கள் விசுவாசம் கொள்ளவும், உண்மையை அறிந்துகொள்ளவும் போதிக்கிறேன்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் விசேஷ விதிமுறைகள்

ஆண்கள் எல்லா இடத்திலும் பிரார்த்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கைகளை உயர்த்தி ஜெபம் செய்யும் இவர்கள் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். இவர்கள் கோபமும், தர்க்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆடைகளை அணியவேண்டுமென்று விரும்புகிறேன். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் ஆடைகள் இருக்கவேண்டும். எளிமையாகவும், சரியான சிந்தனை உடையவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் நவநாகரீகமான தலையலங்காரமும், பொன், முத்து நகையலங்காரங்களும், விலையுயர்ந்த ஆடை அலங்காரங்களும் இல்லாமல் இருப்பார்களாக. 10 ஆனால், அவர்கள் அழகானவர்களாகத் தோன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும். தேவனை வழிபடுகிற பெண்கள் அவ்விதத்திலேயே தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.

11 பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு கற்றுக்கொள்ள வேண்டும். 12 ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும். 13 ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள். 14 அதோடு, சாத்தானின் தந்திரத்துக்குள் ஆதாம் அகப்படவில்லை. பெண் தான் முதலில் தந்திரத்துக்குள் சிக்கி பாவியானாள். 15 தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center