M’Cheyne Bible Reading Plan
தேவன் நாதாபையும் அபியூவையும் அழித்தல்
10 பின் ஆரோனின் மகன்களாகிய நாதாபும் அபியூவும் பாவம் செய்தனர். ஒவ்வொருவனும் ஒரு நறுமண கலசத்தை எடுத்து, அதில் தேவன் அங்கீகரியாத நெருப்பைப் பயன்படுத்தி அதில் நறுமணப் பொருளைப் போட்டனர். மோசே கட்டளையிட்டுச் சொல்லியிருந்த நெருப்பை அவர்கள் பயன்படுத்தவில்லை. 2 எனவே கர்த்தரின் சந்நிதியிலிருந்து நெருப்பு கிளம்பி நாதாபையும் அபியூவையும் அழித்தது. அவர்கள் கர்த்தரின் சந்நிதானத்திலேயே மரித்துப் போனார்கள்.
3 பிறகு மோசே ஆரோனிடம், “‘என் அருகிலே வருகிற ஆசாரியர்கள் என்னை மதிக்க வேண்டும். நான் அவர்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் பரிசுத்தமாக விளங்க வேண்டும்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான். ஆகையால் ஆரோன் தன் மகன்கள் மரணமடைந்ததை குறித்து எதுவும் சொல்லவில்லை.
4 ஆரோனின் சிறிய தந்தையான ஊசியேலுக்கு மிஷாயேல், எல்சாபான் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். மோசே அவர்களிடம், “பரிசுத்த இடத்தின் முற்பகுதிக்குப் போய் உங்கள் சகோதரர்களின் உடல்களை அங்கிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டு போங்கள்” என்றான்.
5 மிஷாயேலும் எல்சாபானும் மோசே சொன்னபடியே அவர்களின் உடல்களை முகாமுக்கு வெளியே கொண்டு போனார்கள். நாதாப், அபியூவின் உடல்களில் ஆசாரியர்களுக்குரிய சிறப்பான உடைகள் இன்னும் இருந்தன.
6 பிறகு மோசே ஆரோனின் வேறு இரு மகன்களான எலெயாசரிடமும், இத்தாமாரிடமும்:, “உங்கள் சோகத்தை வெளியே காண்பிக்கவோ, உங்கள் ஆடைகளை கிழிக்கவோ, உங்கள் தலை முடியை கலைக்கவோ வேண்டாம். அப்பொழுது நீங்கள் கொல்லப்படமாட்டீர்கள். கர்த்தர் நம் எல்லா ஜனங்கள் மீதும் கோபம் கொள்ளமாட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் உங்கள் உறவினர். எனவே அவர்கள் நாதாபும் அபியூவும் மரித்ததற்காக அழட்டும். 7 ஆனால் நீங்கள் இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலை விட்டு கூட வெளியே போகக்கூடாது. நீங்கள் இதைவிட்டுப் போனால் மரித்துப்போவீர்கள். ஏனென்றால் கர்த்தரின் அபிஷேக எண்ணெய் உங்கள் மேல் உள்ளது” என்றான். ஆகவே ஆரோனும், எலெயாசரும், இத்தாமாரும், மோசேக்குக் கீழ்ப்படிந்தனர்.
8 பிறகு கர்த்தர் ஆரோனிடம், 9 “நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போது திராட்சை ரசத்தையோ அல்லது மதுவையோ அருந்திவிட்டு வரக்கூடாது. நீங்கள் அவற்றைக் குடித்தால் மரித்துப்போவீர்கள். இந்தச் சட்டமானது என்றென்றைக்கும் உங்கள் தலைமுறைகளுக்கெல்லாம் தொடரும். 10 நீங்கள் பரிசுத்தமான பொருட்களுக்கும் பரிசுத்தமற்ற பொருட்களுக்கும், தீட்டுள்ள பொருட்களுக்கும், தீட்டில்லாத பொருட்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாட்டினை உருவாக்க வேண்டும். 11 கர்த்தர் தம் சட்டங்களை மோசேயிடம் கொடுத்தார். மோசே அந்த சட்டங்களை ஜனங்களிடம் கொடுத்தான். ஆரோனாகிய நீ ஜனங்களுக்கு அந்த சட்டங்களைக் கற்பிக்க வேண்டும்” என்றார்.
12 ஆரோனின் மற்ற இரண்டு மகன்களான எலெயாசரும், இத்தாமாரும் உயிரோடு இருந்தனர். மோசே ஆரோனிடமும் அவனது இரு மகன்களிடமும், “பலிக்காகக் கொண்டு வந்த பலியில் இன்னும் கொஞ்சம் தானியக் காணிக்கை மிஞ்சியுள்ளது. அதில் புளிப்பு எதுவும் சேர்க்காமல் பலிபீடத்தின் அருகில் இருந்து அதை உண்ண வேண்டும், ஏனென்றால், அக்காணிக்கையானது மிக பரிசுத்தமானதாகும். 13 இது கர்த்தருக்காகச் செலுத்தப்பட்ட தகன பலியாகும். நான் உங்களுக்குக் கொடுத்த சட்டத்தின்படி இதன் ஒரு பகுதி உனக்கும் உன் மகன்களுக்கும் சொந்தமாகும். ஆனால் அவற்றைப் பரிசுத்தமான ஒரு இடத்தில் வைத்து உண்ண வேண்டும்.
14 “நீங்களும் உங்கள் மகன்களும் மகள்களும் அசைவாட்டும் பலியில் உள்ள மார்புக்கண்டத்தை உண்ண வேண்டும். நீங்கள் இதனைப் பரிசுத்தமான இடத்தில் வைத்து உண்ண வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் அவற்றைத் தீட்டில்லாத இடத்தில் வைத்து உண்ண வேண்டும். ஏனென்றால் இவை சமாதானப் பலியில் இருந்து பெறப்பட்டவை. இஸ்ரவேலின் ஜனங்கள் இதனை தேவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர். அந்த ஜனங்கள் அம்மிருகத்தின் ஒரு பாகத்தை உண்பார்கள். ஆனால் அதன் மார்புக்கண்டம் உங்களுக்கு உரியது. 15 ஜனங்கள் தங்கள் மிருகங்களின் கொழுப்பைப் பலியின் ஒரு பாகமாகக் கொண்டு வந்து பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். அவர்கள் சமாதானப் பலிக்குரிய தொடையையும் அசைவாட்டும் பலிக்குரிய மார்புக்கண்டத்தையும் கொண்டு வர வேண்டும். அவை கர்த்தரின் சந்நிதானத்தில் அசைவாட்டப்படும். பின் அவை உங்களுக்கு உரிய பாகமாகக் கருதப்படும். கர்த்தர் சொன்னபடி பலியின் இப்பங்கானது என்றென்றைக்கும் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உரியதாகும்” என்றான்.
16 மோசே பாவப்பரிகார பலிக்காகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டைத் தேடினான். ஆனால் அது ஏற்கெனவே எரிக்கப்பட்டிருந்தது. அதனால் மோசேக்கு ஆரோனின் மகன்கள் எலெயாசரிடமும், இத்தாமாரிடமும் மிகுந்த கோபம் ஏற்பட்டது. 17 மோசே, “நீங்கள் அந்த வெள்ளாட்டை பரிசுத்தமான இடத்தில் வைத்து உண்டிருக்க வேண்டும். அது மிகவும் பரிசுத்தமானது. ஏன் அதனை கர்த்தரின் சந்நிதானத்தில் வைத்து உண்ணாமற் போனீர்கள்? கர்த்தர் அதனை உங்களிடம், ஜனங்களின் குற்றங்களைப் போக்கி அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காகவே கொடுத்துள்ளார். 18 அந்த வெள்ளாட்டின் இரத்தமானது பரிசுத்தமான இடத்திற்குள் கொண்டுவரப்படவில்லையே. நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதனைப் பரிசுத்த இடத்தில் வைத்து உண்டிருக்க வேண்டும்!” என்றான்.
19 ஆனால் ஆரோன் மோசேயிடம், “இன்றைக்கு அவர்கள் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் கர்த்தருக்கு முன்னால் கொண்டு வந்தார்கள். ஆனால் எனக்கு இன்று என்ன ஏற்பட்டதென்று உங்களுக்குத் தெரியும்! பாவப்பரிகார பலிக்குரிய பாகத்தை நான் இன்று உண்டிருந்தால் கர்த்தர் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று எண்ணுகிறீரா?” என்றான்.
20 மோசே இவற்றைக் கேட்டதும் அமைதியாகிவிட்டான்.
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
11 கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன்.
ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்?
நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.
2 தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள்.
அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள்.
நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள்.
3 நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்?
நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?
4 கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.
பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார்.
நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார்.
கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும்.
5 கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார்.
கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார்.
6 தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார்.
வெப்பமான எரியும் காற்றைமட்டுமே அத்தீயோர் அனுபவிப்பார்கள்.
7 ஆனால் கர்த்தர் நல்லவர்.
நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார்.
நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள்.
செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
12 கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்.
நல்லோர் மடிந்துபோயினர்.
பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை.
2 அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள்.
பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
3 பொய் கூறும் நாவை கர்த்தர் அறுத்தெறிவார்.
தங்களையே புகழ்வோரின் நாக்குகளை கர்த்தர் துண்டித்தெறிவார்.
4 அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம்.
யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள்.
5 ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள்.
உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள்.
களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார்.
6 கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை.
நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை.
ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை.
7 கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும்.
இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக.
8 அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள்.
உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள்.
அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.
சாலொமோனிடமிருந்து மேலும் ஞானமொழிகள்
25 இது சாலொமோன் சொன்ன மேலும் சில ஞானமொழிகள். இவ்வார்த்தைகள் யூதாவின் அரசனான எசேக்கியா என்பவனின் வேலைக்காரர்கள் பார்த்து எழுதியவை.
2 நாம் அறிந்துகொள்ளக்கூடாது என்று தேவன் எண்ணும் காரியங்களை மறைத்து வைக்கும் உரிமை தேவனுக்கு உண்டு. ஆனால் தான் சொல்லும் காரியங்களுக்காக ஒரு அரசன் பெருமைக்குரியவன் ஆகிறான்.
3 வானம் நமக்கு மேலே மிகவும் உயரத்தில் உள்ளது. பூமியில் ஆழங்கள் உள்ளன. இது போலவே அரசனுடைய மனமும் உள்ளது. இவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.
4 நீ வெள்ளியிலிருந்து கசடுகளையும் அசுத்தங்களையும் நீக்கிவிட்டால், அதைக்கொண்டு ஒரு தொழிலாளியால் நல்ல அழகான பொருட்களைச் செய்யமுடியும். 5 இதுபோலவே, ஒரு அரசனிடமிருந்து தீய ஆலோசகர்களை நீக்கிவிட்டால், நன்மை அவனது ஆட்சியை வலிமையுள்ளதாக்கும்.
6 அரசனுக்கு முன்னால் உன்னைப்பற்றிப் பெருமை பேசாதே. நீ புகழ்பெற்றவன் என்றும் கூறாதே. 7 அரசன் உன்னை அவனாக வரவழைப்பதுதான் மிக நல்லது. ஆனால் நீயாகப் போனால் மற்றவர்கள் முன்பு நீ அவமானப்பட்டுப் போவாய்
8 நீ உன் கண்ணால் பார்த்ததை நீதிபதியிடம் சொல்ல அவசரப்படாதே. வேறு ஒருவன் நீ சொல்வது தவறென்று நிரூபித்துவிட்டால் பிறகு நீ அவமானப்படுவாய்.
9 நீயும் இன்னொருவனும் ஒத்துப்போகாவிட்டால் இனி என்ன செய்யலாம் என்பதை உங்களுக்குள் பேசி முடிவுசெய். அடுத்தவனின் இரகசியத்தை வெளியில் கூறாதே. 10 நீ அவ்வாறு செய்தால், பிறகு அவமானப்படுவாய். அதற்குப் பிறகு உன் அவப்பெயர் எப்போதும் நீங்காது.
11 நீ சரியான நேரத்தில் சரியானதைக் கூறுவது, தங்க ஆப்பிளை வெள்ளித் தட்டில் வைப்பதுபோன்றது. 12 ஞானமுள்ளவன் உன்னை எச்சரித்தால், அது தங்க மோதிரங்களைவிடவும், சுத்தமான தங்கத்தால் செய்த நகைகளைவிடவும் மதிப்புள்ளது.
13 நம்பிக்கைக்குரிய தூதுவன் அவனை அனுப்பியவனுக்குப் பயனுள்ளவனாக இருப்பான். அவன் வேனிற்கால அறுவடையின்போது கிடைக்கும் குளிர்ந்த தண்ணீரைப் போன்றவன்.
14 சிலர் அன்பளிப்பு கொடுப்பதாக வாக்குறுதி தருவார்கள். ஆனால் அவற்றைத் தரமாட்டார்கள். இவர்கள் மழை தராத மேகமும் காற்றும் போன்றவர்கள்.
15 பொறுமையான பேச்சு யாருடைய சிந்தனையையும் மாற்ற வல்லது. அது அரசனையும் மாற்றும் மென்மையான பேச்சு மிகுந்த வலிமை உடையது.
16 தேன் நல்லது. ஆனால் அதை அதிகம் உண்ணாதே. அவ்வாறு செய்தால் நீ வியாதிக்குள்ளாவாய். 17 இதுபோலவே உனது அயலான் வீட்டிற்கு அடிக்கடிப் போகாதே. அவ்வாறு செய்தால் அவன் உன்னை வெறுக்கத் துவங்குவான்.
18 உண்மையைச் சொல்லாதவன் ஆபத்தானவன். அவன் தண்டாயுதத்திற்கும் வாளுக்கும் கூர்மையான அம்புக்கும் சமமானவன். 19 துன்ப காலத்தில் பொய் சொல்பவனை நம்பி இருக்காதே. வலி கொடுக்கும் பல்லைப் போன்றும், வாதத்தால் சூம்பிய காலைப் போன்றும் அவன் இருப்பான். அவனது தேவை வரும்போது துன்புறுத்துவான்.
20 வருத்தத்தோடு இருக்கிறவன் முன்னால் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடுவது ஒருவன் குளிரால் வருந்தும்போது ஆடையைப் பறிப்பது போன்றதாகும். அது வெடிப்பின் மேல் காடியைக் கலப்பது போன்றது ஆகும்.
21 உன் எதிரி பசியோடு இருந்தால் அவனுக்கு உணவு கொடு. உன் எதிரி தாகமாக இருந்தால் குடிக்க தண்ணீரைக்கொடு. 22 இவ்வாறு செய்வதின்மூலம் நீ அவனை வெட்கப்படுத்த முடியும். இது எரிகிற நெருப்புத் தழல்களை அவன் தலையின்மேல் போடுவதற்குச் சமமாகும். உன் எதிரிக்கு நீ நல்லதைச் செய்தபடியால் கர்த்தர் உனக்கு நற்பலனைத் தருவார்.
23 வடக்கே இருந்து வரும் காற்று மழையைக்கொண்டுவரும். இதுபோலவே வம்பானது கோபத்தைக்கொண்டுவரும்.
24 உன்னோடு ஓயாமல் வாக்குவாதம் செய்கிற மனைவியோடு வீட்டிற்குள் வாழ்வதைவிட கூரை மேல் வாழ்வது நல்லது.
25 தூரமான இடத்திலிருந்து வரும் நல்ல செய்தி வெப்பமாகவும் தாகமாகவும் இருக்கும்போது கிடைக்கும், குளிர்ந்த தண்ணீரைப் போன்றதாகும்.
26 ஒரு நல்ல மனிதன் பலவீனமாகி கெட்டவன் பின்னால் போவது என்பது நல்ல தண்ணீர் அழுக்காவதைப் போன்றதாகும்.
27 நீ தேனை மிகுதியாகப் பருகினால் அது உனக்கு நல்லதல்ல. இதுபோலவே உனக்கு மிக அதிகளவு பெருமையைத் தேடிக்கொள்ள முயலாதே.
28 ஒருவன் தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவன் மதில் உடைந்துப்போன நகரைப்போன்று இருப்பான்
தேவனை மகிழ்வூட்டும் வாழ்க்கை
4 சகோதர சகோதரிகளே! நான் உங்களுக்கு வேறு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். தேவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்குக் கற்பித்தோம். நீங்கள் அத்தகைய விதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மென்மெலும் அவ்வாறு வாழ கர்த்தராகிய இயேசுவின் பேரில் உங்களைக் கேட்டுக்கொள்வதோடு ஊக்கப்படுத்தவும் செய்கிறோம். 2 நாங்கள் செய்யச் சொன்னவற்றை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தால் சொன்னோம். 3 நீங்கள் பரிசுத்தமுடன் இருக்க தேவன் விரும்புகிறார். நீங்கள் பாலியல் குற்றத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். 4 உங்கள் சரீரத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் சரீரத்தைத் தூய்மையாய் வைத்துக்கொள்ளுங்கள். அது தேவனுக்குப் பெருமை சேர்க்கும். 5 உங்கள் சரீரத்தை வெறித்தனமான உணர்வுகளுக்கு ஒப்படைக்காதீர்கள். தேவனை அறிந்துகொள்ளாதவர்கள்தான் அதனை அதற்குப் பயன்படுத்துவார்கள். 6 உங்களில் எவரும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்கள் சகோதரர்களை இக்காரியத்தில் ஏமாற்றவோ, கெடுதல் செய்யவோ முயற்சி செய்யாதீர்கள். அவ்வாறு செய்பவர்களை கர்த்தர் தண்டிப்பார். இதைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி எச்சரித்திருக்கிறோம். 7 நாம் பரிசுத்தமாய் இருக்கும்படி தேவன் அழைத்தார். நாம் பாவங்களில் வாழ்வதை அவர் விரும்பவில்லை. 8 எனவே இந்தப் போதனைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறவன், மனிதருக்கு அல்ல, தேவனுக்கே கீழ்ப்படிய மறுக்கிறான். அவர் ஒருவரே நமக்கு பரிசுத்த ஆவியானவரைத் தர வல்லவர்.
9 கிறிஸ்துவுக்குள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் அன்பாய் இருங்கள் என்று உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் நேசிக்க தேவன் ஏற்கெனவே உங்களுக்குப் போதித்திருக்கிறார். 10 மக்கதோனியாவில் உள்ள எல்லா சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும் அன்பு செலுத்துகிறீர்கள். மேலும் மேலும் அன்பு செய்யுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.
11 சமாதானத்துக்குரிய வாழ்க்கையை வாழ நீங்கள் எல்லா செயல்களையும் செய்யுங்கள். உங்கள் சொந்தக் காரியங்களில் கவனமாய் இருங்கள், சொந்த வேலைகளைச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்யுமாறு ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். 12 இவற்றை எல்லாம் நீங்கள் செய்யும்போது விசுவாசமற்ற மக்கள் உங்கள் வாழ்வு முறையை மதிப்பார்கள். உங்கள் தேவைக்கு வேறு எவரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கும்.
கர்த்தரின் வருகை
13 சகோதர சகோதரிகளே! இறந்து போனவர்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனைய நம்பிக்கையற்ற மக்களைப் போன்று நீங்கள் வருத்தம் கொள்வதை நாங்கள் விரும்புவதில்லை. 14 இயேசு இறந்தார், ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறோம். ஆகையால் இயேசுவை விசுவாசித்து மரித்துப்போன எல்லாரையும் தேவன் இயேசுவோடுகூட ஒன்று சேர்ப்பார்.
15 கர்த்தரின் செய்தியையே நாங்கள் இப்போது உங்களுக்குக் கூறுகிறோம். இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் கர்த்தர் வரும்போதும் ஒருவேளை வாழ்ந்துகொண்டிருப்போம். ஏற்கெனவே மரித்தவர்கள் கர்த்தரோடு இருப்பார்கள். உயிரோடிருக்கிற நாமும் அவரோடிருப்போம். ஆனால் நாம் அவர்களுக்கு (ஏற்கெனவே இறந்தவர்களுக்கு) முந்திக்கொள்வதில்லை. 16 கர்த்தர் அவராகவே பரலோகத்தில் இருந்து வருவார். அங்கே உரத்த கட்டளை இருக்கும். அக்கட்டளை பிரதான தேவ தூதனுடையதாக இருக்கும். தேவ எக்காளமும் கேட்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் இறந்து போனவர்கள் முதலில் உயிர்த்தெழுவார்கள். 17 அதற்குப் பிறகு, அவர்களோடு அப்பொழுது வாழும் நாமும் எடுத்துச்செல்லப்படுவோம். கர்த்தரை வான வெளியில் சந்திப்போம். அதன் பின் எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம். 18 ஆகவே இவ்வார்த்தைகளால் ஒருவரையொருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.
2008 by World Bible Translation Center