M’Cheyne Bible Reading Plan
யோசுவா புதிய தலைவனாக இருப்பான்
31 பிறகு மோசே போய் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களிடம் இவற்றைப் பேசினான். 2 மோசே அவர்களிடம், “நான் இன்று 120 வயதுள்ளவன். இனிமேல் என்னால் உங்களை வழிநடத்த முடியாது. கர்த்தர் என்னிடம்: ‘நீ யோர்தானைக் கடந்து போகமாட்டாய்’ என்று சொன்னார். 3 ஆனால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை அந்த நாட்டிற்குள் வழிநடத்திச் செல்வார். உனக்காக கர்த்தர் இந்த ஜாதிகளை அழிப்பார். நீ அவர்களது நாட்டை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வாய், ஆனால், யோசுவா உங்களை வழி நடத்த வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்.
4 “கர்த்தர் சீகோனையும், ஓகையும் அழித்தார். கர்த்தர் அந்த எமோரிய ராஜாக்களையும் அழித்தார். கர்த்தர் உனக்காக மீண்டும் அதனைச் செய்வார். 5 அந்த ஜாதிகளைத் தோற்கடிக்க கர்த்தர் உதவி செய்வார். ஆனால் நான் உங்களுக்குச் சொன்னபடி எல்லாவற்றையும் நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டும். 6 பலமுள்ளவர்களாகவும் தைரியம் உள்ளவர்களாகவும் இருங்கள். அந்த ஜனங்களுக்குப் பயப்பட வேண்டாம். ஏனென்றால், உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்றான்.
7 பின்பு மோசே யோசுவாவை அழைத்தான். மோசே யோசுவாவிடம் சொல்வதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தனர். அவன் “பலமாகவும் தைரியமாகவும் இரு. அவர்களது முற்பிதாக்களுக்கு தருவதாக கர்த்தர் வாக்களித்த நாட்டிற்கு நீதான் இவர்களை வழி நடத்தவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ உதவ வேண்டும். 8 கர்த்தர் உன்னை வழிநடத்துவார். அவர் தாமே உன்னுடன் இருக்கிறார். அவர் உன்னைக் கைவிடமாட்டார். உன்னை விட்டு விலகமாட்டார். கவலைப்படாதே. பயப்படாதே” என்றான்.
மோசே போதனைகளை எழுதுகிறான்
9 பிறகு மோசே போதனைகளை எழுதி ஆசாரியர்களிடம் கொடுத்தான். அந்த ஆசாரியர்கள் அனைவரும் லேவியர் கோத்திரத்தினர். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் வேலையை உடையவர்கள். மோசே போதனைகளை இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அனைவருக்கும் கொடுத்தான். 10 பிறகு, மோசே தலைவர்களிடம் பேசினான். அவன், “ஒவ்வொரு ஏழு ஆண்டின் முடிவிலும் விடுதலைக்கான ஆண்டில் அடைக்கல கூடாரப் பண்டிகையில், இந்தப் போதனைகளை ஜனங்களுக்கு வாசியுங்கள். 11 அப்பொழுது, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் கூடி வருவார்கள். அவர்கள் உன் தேவனாகிய கர்த்தர் குறிப்பிடும் சிறப்பான இடத்தில் அவரைச் சந்திக்க வருவார்கள். பிறகு நீ ஜனங்களுக்கு போதனைகளை வாசிக்க வேண்டும். அப்பொழுது அவற்றை அவர்கள் கேட்க முடியும். 12 அனைத்து ஜனங்களையும் ஒன்று கூட்டு. ஆண்கள், பெண்கள், சிறுகுழந்தைகள், உங்கள் நகரங்களில் வாழும் அயல்நாட்டுக்குடிகள் என அனைவரையும் கூட்டு. போதனைகளை அவர்கள் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். போதனைகளில் உள்ளவற்றுக்குக் கீழ்ப்படிவார்கள். 13 அவர்களது சந்ததிகள் போதனைகளை அறிந்திராவிட்டால், பிறகு அவர்கள் அவற்றைக் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நீ உனது நாட்டில் வாழும் காலம்வரை அவர்கள் அவரை மதிப்பார்கள். நீ விரைவில் யோர்தானை கடந்துபோய் அந்த நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வாய்” என்றான்.
கர்த்தர் மோசேயையும் யோசுவாவையும் அழைக்கிறார்
14 கர்த்தர் மோசேயிடம், “இப்பொழுது நீ மரணமடைவதற்குரிய நேரம் நெருங்கியுள்ளது. பரிசுத்தக் கூடாரத்திற்குள் வரும்படி யோசுவாவிடம் சொல். அவன் செய்ய வேண்டியவற்றை நான் யோசுவாவிடம் கூறுவேன்” என்றார். எனவே மோசேயும் யோசுவாவும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் சென்றார்கள்.
15 கர்த்தர் கூடாரத்திலே உயரமான மேகத் தூணில் தோன்றினார். உயரமான அந்த மேகத்தூண் கூடாரத்தின் வாசலுக்கு மேல் நின்றது! 16 கர்த்தர் மோசேயிடம், “நீ விரைவில் மரணமடைவாய். நீ உனது முற்பிதாக்களோடு போய்ச் சேர்ந்தபிறகு இந்த ஜனங்கள் என் மீதுள்ள நம்பிக்கையில் தொடரமாட்டார்கள். நான் அவர்களோடு செய்த உடன்படிக்கையை அவர்கள் முறிப்பார்கள். அவர்கள் என்னைவிட்டு விலகி வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் போகிற நாட்டில் உள்ள பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வார்கள். 17 அந்த நேரத்தில் நான் அவர்கள் மேல் மிகவும் கோபங்கொள்வேன். நான் அவர்களை விட்டு விலகுவேன். அவர்களுக்கு உதவ நான் மறுப்பேன். அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். பிறகு அவர்கள், ‘இத்தீமைகள் எல்லாம் எங்களுக்கு ஏற்படுகின்றன. ஏனென்றால், தேவன் எங்களோடு இல்லை’ என்பார்கள். 18 நான் அவர்களுக்கு உதவ மறுப்பேன். ஏனென்றால், அவர்கள் தீமை செய்திருக்கின்றனர். மற்ற தெய்வங்களை வணங்கினார்கள்.
19 “எனவே, இப்பாடலை எழுது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதனைக் கற்றுக்கொடு. இப்பாடலைப் பாட அவர்களுக்குக் கற்றுக்கொடு. பிறகு இப்பாடல் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக எனக்குச் சாட்சியாக இருக்கும். 20 நான் அவர்களது முற்பிதாக்களுக்கு கொடுப்பதாக வாக்களித்த பல நன்மைகள் நிறைந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். அவர்கள் உண்ண விரும்புகின்றவற்றை எல்லாம் பெறுவார்கள். அவர்கள் வளமான வாழ்வைப் பெறுவார்கள். ஆனால், பின்னர் அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பி அவர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலகி எனது உடன்படிக்கையை உடைப்பார்கள். 21 பிறகு பல பயங்கரமானவை அவர்களுக்கு நிகழும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். அப்போது, அவர்களின் ஜனங்கள் இப்பாடலை நினைவு வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த அளவு தவறியுள்ளனர் என்பதை இப்பாடல் காட்டும். நான் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அதுவரை அழைத்துப் போயிருக்கமாட்டேன். ஆனால் ஏற்கெனவே அவர்கள் அங்கே என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன்” என்று கூறினார்.
22 எனவே அதே நாளில் மோசே அப்பாடலை எழுதினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அந்தப் பாட்டைக் கற்றுத்தந்தான்.
23 பின்னர், கர்த்தர் நூனின் குமாரனான யோசுவாவிடம் பேசி, “பலமுள்ளவனாகவும், தைரியமுள்ளவனாகவும் இரு. நான் வாக்களித்த நாட்டிற்கு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்வாய். நான் உன்னோடு இருப்பேன்” என்று கூறினார்.
மோசே இஸ்ரவேல் ஜனங்களை எச்சரிக்கிறான்
24 மோசே கவனமாக இப்போதனைகள் எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுதி முடித்தபோது, 25 அவன் லேவியர்களுக்கு ஒரு ஆணை கொடுத்தான். (இவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லுகிறவர்கள்.) மோசே, 26 “இந்த போதனைகளின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, இதனை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு எதிரான சாட்சியாக அங்கே இருக்கும். 27 நீங்கள் கடினமானவர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் உங்கள் சொந்த வழியில் வாழ விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன். பாருங்கள், நான் உங்களோடு இருக்கும்போதே நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள். நான் மரித்தபிறகும் நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுப்பீர்கள். 28 எல்லா அதிகாரிகளையும், கோத்திரங்களின் தலைவர்களையும் ஒன்று கூட்டுங்கள். நான் அவர்களிடம் இவற்றைச் சொல்வேன். நான் பரலோகத்தையும், பூமியையும் அவர்களுக்கு எதிராக சாட்சியாக அழைப்பேன். 29 எனது மரணத்திற்குப் பிறகு நீங்கள் கெட்டவர்களாவீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் பின்பற்றுவதற்காக நான் கட்டளையிட்ட வழிகளை விட்டு விலகுவீர்கள். ஆகையால், எதிர்காலத்தில் உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். ஏனென்றால், கர்த்தர் தீங்கு என்று சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் செய்த தீமைகளினால் அவரைக் கோபமடையச் செய்கிறீர்கள்” என்று சொன்னான்.
மோசேயின் பாடல்
30 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூட்டப்பட்டனர். மோசே அவர்களுக்காக இந்தப் பாடலைப் பாடினான். மோசே முழுப்பாடலையும் பாடினான்:
மேம்
97 கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
98 கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.
உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
99 உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்
ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
100 நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,
முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
101 வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.
எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
102 கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.
ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
103 என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
104 உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.
எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.
நூன்
105 கர்த்தாவே, உமது வார்த்தைகள்
என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.
106 உமது சட்டங்கள் நல்லவை.
நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன்.
நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
107 கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன்.
தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.
108 கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
109 என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது.
ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
110 தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்.
ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.
111 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன்.
அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
112 உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.
சாமெக்
113 கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன்.
ஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
114 என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும்.
கர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன்.
115 கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும்.
நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
116 கர்த்தாவே, நீர் வாக்குறுதியளித்தபடியே என்னைத் தாங்கி உதவும். நானும் வாழ்வேன்.
நான் உம்மை நம்புகிறேன், நான் ஏமாற்றமடையாதபடிச் செய்யும்.
117 கர்த்தாவே, எனக்கு உதவும், நான் காப்பாற்றப்படுவேன்.
நான் உமது கட்டளைகளை என்றென்றைக்கும் கற்பேன்.
118 கர்த்தாவே, உமது சட்டங்களை மீறுகிற ஒவ்வொருவரையும் நீர் தள்ளிவிடுகிறீர்.
ஏனெனில் அந்த ஜனங்கள் உம்மைப் பின்பற்ற சம்மதித்தபோது பொய் கூறினார்கள்.
119 கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர்.
எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.
120 கர்த்தாவே, நான் உம்மைக் கண்டு பயப்படுகிறேன்.
நான் உமது சட்டங்களுக்குப் பயந்து அவற்றை மதிக்கிறேன்.
தேவனைப் பின்பற்றுமாறு ஜனங்களுக்குச் சொல்லப்பட வேண்டும்
58 உன்னால் முடிந்தவரை சத்தமிடு!
நீயாக நிறுத்தாதே! எக்காளம் போன்று உரக்கச் சத்தமிடு!
ஜனங்கள் செய்த தவறுகளைப்பற்றி அவர்களுக்குக் கூறு!
யாக்கோபின் குடும்பத்திற்கு அவர்களின் பாவத்தைப்பற்றிக் கூறு!
2 பிறகு அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள ஒவ்வொரு நாளும் வருவார்கள்.
எனது வழிகளை அந்த ஜனங்கள் கற்றுக்கொள்ள விரும்புவார்கள்.
அவர்கள் நேர்மையாக வாழும் தேசமாவார்கள்.
தேவனுடைய நல்ல கட்டளைகளைப் பின்பற்றுவதை அவர்கள் விடமாட்டார்கள்.
அவர்களை நேர்மையாக நியாயந்தீர்க்குமாறு என்னைக் கேட்பார்கள்.
அவர்கள் தேவனிடம் அவர் கொடுக்கும் நேர்மையான முடிவுகளுக்காகப்போக விரும்புவார்கள்.
3 இப்போது, அந்த ஜனங்கள், “உமக்கு மரியாதை செலுத்துவதற்காக நாங்கள் சாப்பிடுவதை நிறுத்துகிறோம். எங்களை ஏன் பார்க்கவில்லை? நாங்கள் உமக்கு மரியாதை செலுத்த எங்கள் உடலைக் காயப்படுத்துகிறோம். நீர் ஏன் எங்களைக் கண்டுகொள்ளவில்லை?” என்று கூறுகின்றனர்.
ஆனால் கர்த்தர் கூறுகிறார்: “நீங்கள் உங்களையே திருப்திப்படுத்திக்கொள்ள சிறப்பு நாட்களில் சாப்பிடாமல் இருக்கிறீர்கள். நீங்கள் சொந்த உடல்களை அல்ல, உங்கள் வேலைக்காரர்களையே தண்டிக்கிறீர்கள். 4 நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள். ஆனால், உணவுக்காக அன்று. நீங்கள் வாதம் செய்யவும் சண்டை செய்யவும் பசியாய் இருக்கிறீர்கள், அப்பத்துக்காக அல்ல. உங்கள் தீய கைகளால் ஜனங்களை அடிக்கப் பசியாய் இருக்கிறீர்கள். நீங்கள் உணவு உண்டதை நிறுத்துவது, எனக்காக அல்ல. நீங்கள் உங்கள் குரலைப் பயன்படுத்தி என்னைத் துதிக்க விரும்புவதில்லை. 5 அந்தச் சிறப்பான நாட்களில் சாப்பிடாமல் இருந்து ஜனங்கள் தம் உடலை வருத்திக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஜனங்கள் சோகமாகத் தோற்றமளிப்பதை விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஜனங்கள் வாடிய செடிகளைப்போன்று தலை குனிந்து துக்கத்துக்கான ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஜனங்கள் தம் துக்கத்தைக் காட்ட சாம்பலில் உட்கார்ந்திருப்பதை நான் விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? இதையே உங்கள் சிறப்பான உபவாச நாட்களில் நீங்கள் செய்கிறீர்கள். கர்த்தர் இதைத்தான் விரும்புகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
6 “நான் விரும்புகின்ற சிறப்பான ஒரு நாளை உங்களுக்குச் சொல்வேன். ஜனங்களை விடுதலை பெறச்செய்யும் நாள். ஜனங்களின் சுமைகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு நாளை நான் விரும்புகிறேன். துன்பப்படுகிற ஜனங்களை நீங்கள் விடுதலை செய்யும் நாளை சிறப்பானதாக விரும்புகிறேன். அவர்களின் தோள்களிலிருந்து சுமையை எடுத்துவிடும் ஒரு நாளை நான் விரும்புகிறேன். 7 நீங்கள் உங்கள் உணவை பசித்தவர்களோடு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் வீடற்ற ஏழை ஜனங்களைக் கண்டுபிடித்து, அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதை நான் விரும்புகிறேன். ஆடையில்லாத ஒரு மனிதனை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் ஆடைகளை அவனுக்குக் கொடுங்கள். அவர்களுக்கு உதவாமல் ஒளிந்துகொள்ளாதீர்கள். அவர்கள் உங்களைப்போன்றவர்களே.”
8 நீங்கள் இவற்றைச் செய்தால், உங்களது வெளிச்சம் விடியற்கால சூரியனைப்போன்று ஒளிவீசத் தொடங்கும். பிறகு, உங்கள் காயங்கள் குணமாகும். உங்கள் நன்மை (தேவன்) உங்களுக்கு முன்னால் நடந்து செல்லும். கர்த்தருடைய மகிமை உங்களைப் பின்தொடர்ந்துவரும். 9 பிறகு நீங்கள் கர்த்தரை அழைப்பீர்கள். கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்வார். நீ கர்த்தரிடம் சத்தமிடுவாய். அவர் “நான் இங்கே இருக்கிறேன்!” என்பார்.
ஜனங்களுக்குத் துன்பங்களையும், சுமைகளையும் கொடுப்பதை நிறுத்தவேண்டும். நீங்கள் அநியாயமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், மற்றவர்களைக் குறைசொல்வதையும் நிறுத்த வேண்டும். 10 பசியாயிருக்கிற ஜனங்களைப் பார்த்து நீ வருத்தப்படவேண்டும். அவர்களுக்கு உணவு தர வேண்டும். துன்பப்படுகிறவர்களுக்கு நீ உதவ வேண்டும். அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அப்போது உனது வெளிச்சம் இருளில் பிரகாசிக்கும். உனக்கும் துக்கம் இருக்காது. நீ நண்பகலில் உள்ள சூரியனைப்போன்று பிரகாசமாக இருப்பாய்.
11 கர்த்தர் எப்பொழுதும் உன்னை வழிநடத்துவார். வறண்ட நிலங்களில் அவர் உனது ஆத்துமாவைத் திருப்திப்படுத்துவார். உனது எலும்புகளுக்கு கர்த்தர் பெலன் தருவார். அதிகத் தண்ணீருள்ள தோட்டத்தைப்போன்று நீ இருப்பாய். எப்பொழுதும் தண்ணீருள்ள ஊற்றினைப்போன்று நீ இருப்பாய்.
12 உனது நகரங்கள் பல ஆண்டுகளுக்கு அழிக்கப்பட்டிருக்கும். ஆனால், புதிய நகரங்கள் கட்டப்படும். இந்நகரங்களின் அஸ்திபாரங்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இருக்கும். நீ, “வேலிகளை கட்டுகிற ஒருவன்” என்று அழைக்கப்படுவாய். நீ, “சாலைகளையும் வீடுகளையும் கட்டுபவன்” என்றும் அழைக்கப்படுவாய்.
13 ஓய்வுநாளில் தேவனுடைய சட்டத்திற்கு எதிராகப் பாவம் செய்வதை எப்பொழுது நீ நிறுத்துகிறாயோ அப்போது இது நிகழும். அந்தச் சிறப்பு நாளில் உன்னை நீயே திருப்திபடுத்திக்கொள்ளும் செயல்கள் செய்வதை எப்பொழுது நிறுத்துவாயோ, அப்போது இது நடக்கும். ஓய்வுநாளை மகிழ்ச்சியான நாள் என்றும் நீ எண்ணவேண்டும். கர்த்தருடைய சிறப்பான நாளை நீ மகிமைப்படுத்த வேண்டும். மற்ற நாட்களில் நீ சொல்வதையும், செய்வதையும் அந்தச் சிறப்புநாளில் செய்யாமல் நீ அதனை மகிமைப்படுத்தவேண்டும்.
14 பின் நீ கர்த்தரை உன்னிடம் தயவாயிருக்குமாறு கேட்கலாம். அவர் உன்னைப் பூமிக்கு மேலுள்ள உயரமான இடங்களுக்கு எடுத்துச்செல்வார். உனது தந்தை யாக்கோபிற்குரிய அனைத்தையும் அவர் தருவார். கர்த்தர்தாமே இவற்றைச் சொன்னார். எனவே இவை நடக்கும்.
தர்மம் செய்வதைப் பற்றிய போதனை
6 “நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது.
2 “நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது, நீங்கள் உதவுவதை விளம்பரம் செய்யாதீர்கள். நல்லவர்களைப் போல நடிக்கும் மனிதர்களைப் போல் நீங்கள் செய்யாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன்னர் குழல் ஊதி அறிவிப்பார்கள். அவர்கள் யூத ஆலயங்களிலும் தெருக்களிலும் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். 3 எனவே, நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது மிக இரகசியமாக உதவுங்கள். மற்றவர் எவரும் அறியாதவாறு உதவுங்கள். 4 உங்கள் உதவி இரகசியமாகச் செய்யப்படவேண்டும். உங்கள் பிதாவாகிய தேவன் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். எனவே அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
பிரார்த்தனை பற்றி போதித்தல்
(லூக்கா 11:2-4)
5 “நீங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுது, நல்லவர்களைப்போல நடிக்கும் தீயவர்களைப் போல் நடக்காதீர்கள். போலியான மனிதர்கள் ஜெப ஆலயங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த குரலில் பிராத்தனை செய்ய விரும்புகிறார்கள். தாம் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் காண அவர்கள் விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள். 6 நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
7 “நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு பிரார்த்திக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 8 அவர்களைப் போல இருக்காதீர்கள். உங்கள் பிதா நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களின் தேவைகளை அறிவார். 9 நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது கீழ்க்கண்டவாறு பிரார்த்திக்க வேண்டும்:
“‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே,
உமது பெயர் என்றென்றும் புனிதமாயிருக்கப் பிரார்த்திக்கிறோம்.
10 உமது இராஜ்யம் வரவும் பரலோகத்தில் உள்ளது போலவே
பூமியிலும் நீர் விரும்பியவை செய்யப்படவும் பிரார்த்திக்கிறோம்.
11 ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.
12 மற்றவர் செய்த தீமைகளை நாங்கள் மன்னித்தது போலவே
எங்கள் குற்றங்களையும் மன்னியும்.
13 எங்களைச் சோதனைக்கு உட்படப் பண்ணாமல்
பிசாசினிடமிருந்து காப்பாற்றும்.’[a]
14 நீங்கள் மற்றவர் செய்யும் தீயவைகளை மன்னித்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவானவரும் உங்கள் தீயசெயல்களையும் மன்னிப்பார். 15 ஆனால், மற்றவர்கள் உங்களுக்குச் செய்யும் தீமைகளை நீங்கள் மன்னிக்காவிட்டால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் தீமைகளை மன்னிக்கமாட்டார்.
உபவாசத்தைப் பற்றிய போதனை
16 “நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, சோகமாகக் காட்சியளிக்காதீர்கள். மாயக்காரர்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். நீங்களும் அவர்களைப்போல நடிக்காதீர்கள். தாங்கள் உபவாசம் இருப்பதை மற்றவர்கள் காண்பதற்காகத் தங்கள் முகத்தை விநோதமாக வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு பலனை அடைந்துவிட்டார்கள். 17 எனவே, நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, மகிழ்ச்சியாகக் காணப்படுங்கள். முகம் கழுவிக்கொள்ளுங்கள். 18 எனவே, நீங்கள் உபவாசம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் காண முடியாத உங்கள் பிதாவானவர் உங்களைக் காண்பார். உங்கள் பிதாவானவர் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். மேலும் அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
பணமும் தேவனும்
(லூக்கா 12:33-34; 11:34-36; 16:13)
19 “உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள். 20 எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது. 21 உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
22 “உடலுக்கு ஒளி தருவது கண். உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியுடன் திகழும். 23 ஆனால், உங்கள் கண்கள் கெட்டுப் போனால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியிழந்து போகும். உங்களிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால் அவ்விருள் எவ்வளவு கொடியதாயிருக்கும்.
24 “எந்த மனிதனாலும் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது. அவன் ஒரு முதலாளியை நேசித்து மற்ற முதலாளியை வெறுக்க நேரிடும். அல்லது ஒரு முதலாளியின் பேச்சைக் கேட்டும் மற்ற முதலாளியின் பேச்சை மறுக்கவும் நேரிடும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது.
தேவ இராஜ்யத்திற்கு முதலிடம்
(லூக்கா 12:22-34)
25 “எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம். 26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். 27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.
28 “உடைகளுக்காக ஏன் கவலை கொள்கிறீர்கள்? தோட்டத்தில் உள்ள மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பாருங்கள். அவைகள் வேலை செய்வதுமில்லை. தங்களுக்கான உடைகளைத் தயார் செய்வதுமில்லை. 29 ஆனால் நான் சொல்கிறேன் மாபெரும் பணக்கார மன்னனான சாலமோன் கூட இந்தப் பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடை அணியவில்லை. 30 அவ்வாறே தேவன் வயல்களிலுள்ள புற்களுக்கும் உடை அணிவிக்கிறார். இன்றைக்கு உயிருடன் இருக்கும் புல், நாளைக்கு தீயிலிடப்பட்டு எரிக்கப்படும். எனவே, தேவன் உங்களுக்குச் சிறப்பாக உடையணிவிப்பார் என்பதை அறியுங்கள். தேவனிடம் சாதாரணமான நம்பிக்கை வைக்காதீர்கள்.
31 “‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள். 32 தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார். 33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார். 34 எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு.
2008 by World Bible Translation Center