M’Cheyne Bible Reading Plan
ஆசாரியர்களுக்கான விதிகள்
21 கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் குமாரர்களான ஆசாரியர்களிடம் பின் வருபவைகளைக் கூறு: ஒரு ஆசாரியன் மரித்த ஒருவனின் உடலைத்தொட்டு தீட்டுள்ளவனாகக் கூடாது. 2 ஆனால் மரித்தவன் அவனது நெருங்கிய உறவினனாக இருந்தால் அவன் அந்தப் பிணத்தைத் தொடலாம். மரித்துபோனவர்கள் அவரது தாய் அல்லது தந்தை, குமாரன் அல்லது குமாரத்தி, சகோதரன் அல்லது 3 திருமணமாகாத கன்னித் தன்மையுள்ள சகோதரி எனும் உறவினராக இருந்தால் ஆசாரியன் தீட்டு உள்ளவனாகலாம். திருமணம் ஆகாத சகோதரி என்றால் அவளுக்குக் கணவன் இல்லை. எனவே அவன் அவளுக்கு நெருக்கமானவனாகிறான். அவள் மரித்துப்போனால் அவன் தீட்டுள்ளவனாகலாம். 4 ஆனால் ஆசாரியனின் அடிமைகளுள் ஒருவன் மரித்து போனால் அதற்காக ஆசாரியன் தீட்டுள்ளவனாகக் கூடாது.
5 “ஆசாரியர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்கவோ, தங்கள் தாடியின் ஓரங்களை மழிக்கவோ கூடாது. தங்கள் உடலில் வெட்டி எவ்வித அடையாளக் குறிகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 6 இவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இவர்கள் தேவனின் பெயருக்கு மரியாதை செலுத்த வேண்டும், ஏனென்றால் இவர்கள் கர்த்தரின் தகன பலியையும் அப்பத்தையும் செலுத்துகிறவர்கள். எனவே, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
7 “விசேஷ வழியில் ஒரு ஆசாரியன் தேவனுக்குச் சேவை செய்கிறான். எனவே அவர்கள் வேசியையோ, கற்ப்பிழந்தவளையோ திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. 8 ஒரு ஆசாரியன் தேவனுக்கு விசேஷ வழியில் சேவை செய்கிறான். ஆகையால் நீங்கள் அவனை விசேஷமாக நடத்த வேண்டும். ஏனென்றால் அவன் பரிசுத்தமான பொருட்களை ஏந்திச் செல்பவன். பரிசுத்தமான அப்பத்தை கர்த்தருக்கு எடுத்து வருபவன். நான் பரிசுத்தமானவர்! நானே கர்த்தர். நான் உன்னையும் பரிசுத்தப்படுத்துவேன்.
9 “ஒரு ஆசாரியனின் குமாரத்தி வேசியானால் அவள் தனது பரிசுத்தத்தைக் குலைத்துகொள்வதுடன், தன் தந்தைக்கும் அவமானத்தைத் தேடித்தருகிறாள். அவளைச் சுட்டெரிக்க வேண்டும்.
10 “தலைமை ஆசாரியன் தன் சகோதரர்களுக்கிடையில் இருந்து தலைமை சிறப்பு பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவன், சிறப்பான உடைகளை அணிவதற்காக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அவன் தலையில் அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கும். அவன் தனது துன்பங்களைப் பொது ஜனங்களிடம் வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது. அவன் தன் தலை முடியை அதிகமாக வளரும்படிவிடவோ, தன் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது. 11 அவன் பிணத்தைத் தொட்டு தன்னைத் தீட்டுப் பண்ணிக்கொள்ளக் கூடாது. மரித்து போனது அவனது தாயாகவோ தந்தையாகவோ இருந்தாலும் பிணத்தின் அருகில் போகக்கூடாது. 12 தலைமை ஆசாரியன் தேவனின் பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போகக் கூடாது. அவன் அதனால் தீட்டாவதுடன், தேவனின் பரிசுத்தமான இடத்தையும் தீட்டாக்கிவிடுகிறான். அபிஷேக எண்ணெயானது தலைமை ஆசாரியனின் தலைமீது ஊற்றப்பட்டிருக்கிறபடியால், இது அவனை மற்றவர்களிடமிருந்து தனியே பிரித்துக் காட்டும். நானே கர்த்தர்!
13 “கன்னியான ஒரு பெண்ணை தலைமை ஆசாரியன் மணந்துகொள்ள வேண்டும். 14 விபச்சாரியான பெண்ணையோ, வேசியையோ, விதவையையோ, விவாகரத்து செய்யப்பட்டவளையோ மணந்துகொள்ளக் கூடாது. அவன் தன் சொந்த ஜனங்களிடமிருந்து ஒரு கன்னியான பெண்ணை மணந்துகொள்ள வேண்டும். 15 அப்பொழுது அவனது பிள்ளைகளை ஜனங்கள் மதிப்பார்கள்.[a] கர்த்தராகிய நான் தலைமை ஆசாரியனை அவனது சிறப்புப் பணிகளுக்காகத் தனியாக வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.
16 கர்த்தர் மோசேயிடம், 17 “ஆரோனிடம் சொல்! உனது சந்ததியில் எவராவது அங்கக் குறைவுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் தேவனுக்கு சிறப்பு அப்பத்தை எடுத்துச் செல்ல தகுதியற்றவர்களாகிறார்கள். 18 உடல் உறுப்புகளிலே குறைவுள்ள யாரும் ஆசாரியனாகப் பணிச்செய்யக் கூடாது. எனக்குப் பலிசெலுத்தும் பொருள்களையும் கொண்டுவரக்கூடாது. குருடர், சப்பாணி, முகத்திலே வெட்டுக்காயங்கள் உள்ளவர்கள், கைகளும் கால்களும் அதிக நீளமாய் இருக்கிறவர்கள், 19 உடைந்த கைகளும், கால்களும் உடையவர்கள், 20 கூனர்கள், குள்ளர்கள், பூ விழுந்த கண்ணுள்ளவர்கள், சொறியர்கள், அசறு உள்ளவர்கள், விதை நசுங்கினவர்கள் ஆகியோர் ஆசாரியனாகத் தகுதியில்லாதவர்கள்.
21 “ஆரோனின் சந்ததியில் எவராவது இத்தகைய உடல்குறை உடையவர்களாக இருந்தால் அவர்கள் கர்த்தருக்கு எந்த பலிகளையும் கொடுக்க தகுதியற்றுப் போகிறார்கள். அவன் தேவனுக்கு சிறப்பான அப்பத்தை எடுத்துச் செல்ல முடியாது. 22 அவன் ஆசாரியர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதினால் பரிசுத்தமான அப்பத்தையும், மிகப்பரிசுத்தமான அப்பங்களையும் அவன் உண்ணலாம். 23 ஆனால் அவன் மிகவும் பரிசுத்தமான இடத்துக்குத் திரையைக் கடந்து போகமுடியாது. பலிபீடத்தின் அருகிலும் செல்ல முடியாது. ஏனென்றால் அவனிடம் குறையுள்ளது. அவன் எனது பரிசுத்தமான இடத்தை அசுத்தப்படுத்தக் கூடாது. கர்த்தராகிய நான் அந்த இடங்களை பரிசுத்தப்படுத்துகிறேன்!” என்று கூறினார்.
24 ஆகவே இவ்விதிமுறைகள் அனைத்தையும் ஆரோனுக்கும், ஆரோனின் பிள்ளைகளுக்கும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மோசே சொன்னான்.
தாவீதின் பாடல்.
26 கர்த்தாவே, என்னை நியாயந்தீரும்.
நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும்.
கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை.
2 கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும்.
என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும்.
3 நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன்.
உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.
4 நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை.
அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.
5 அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன்.
தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன்.
6 கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க
என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன்.
7 கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன்.
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன்.
8 கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன்.
மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன்.
9 கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும்.
அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும்.
10 அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும்.
தீமை செய்வதற்கு அவர்கள் பணம் பெறக்கூடும்.
11 ஆனால் நான் களங்கமற்றவன்.
எனவே, தேவனே, என்னிடம் தயவாயிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
12 நேர்மையான வழியில் நான் தொடர்கிறேன்.
கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் சந்திக்கையில் நான் உம்மைத் துதிக்கிறேன்.
தாவீதின் பாடல்.
27 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.
எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
2 தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.
என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
3 ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.
போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன்.
ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.
4 எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.
இதுவே என் கோரிக்கை:
“என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி
கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”
5 ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.
அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார்.
அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
6 என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
அவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார்.
அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.
மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன்.
கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.
7 கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
8 கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன்.
என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன்.
கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன்.
9 கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்!
உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்!
எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும்.
என்னை விட்டு விடாதிரும்!
என் தேவனே, நீரே என் இரட்சகர்!
10 என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர்.
ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
11 கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு.
எனவே உமது வழிகளை எனக்குப் போதியும்.
சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும்.
12 எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள்.
என்னைப்பற்றி பொய்யுரைத்தனர்.
என்னைத் துன்புறுத்த பொய் கூறினர்.
13 நான் மரிக்கும் முன்னர்
கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
14 கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு.
பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.
மரித்துப்போவது நல்லதா?
4 ஏராளமான ஜனங்கள் மோசமாக நடத்தப்படுவதை மீண்டும் நான் பார்த்தேன். அவர்களது கண்ணீரைப் பார்த்தேன். துக்கப்படும் அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் அங்கே நான் பார்த்தேன். கொடுமையானவர்களிடம் எல்லா அதிகாரங்களும் இருப்பதைப் பார்த்தேன். புண்பட்ட அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் நான் பார்த்தேன். 2 இன்னும் உயிரோடிருப்பவர்களைவிட மரித்துப்போனவர்கள் பாக்கியசாலிகள் என்று முடிவுசெய்தேன். 3 பிறப்பிலேயே மரிப்பவர்கள் இன்னும் பாக்கியசாலிகள். ஏனென்றால் அவர்கள் இவ்வுலகில் நடைபெறும் தீமைகளைப் பார்க்காமலேயே போவார்கள்.
ஏன் இவ்வளவு கடினமாக வேலை செய்யவேண்டும்?
4 பிறகு நான் “ஏன் ஜனங்கள் இவ்வளவு கடினமாக வேலை செய்கிறார்கள்?” என்று நினைத்தேன். ஜனங்கள் வெற்றிபெறவும் மற்றவர்களை விடச் சிறப்புபெறவும் முயற்சி செய்வதை நான் பார்த்தேன். ஏனென்றால் ஜனங்கள் அனைவரும் பொறாமை உடையவர்கள். அவர்கள் தம்மைவிட மற்றவர் அதிகம் பெறுவதை விரும்பமாட்டார்கள். இது அர்த்தமற்றது. இது காற்றைப் பிடிக்க முயற்சி செய்வதைப்போன்றது என எண்ணினேன்.
5 சிலர், “கையைக் கட்டிக்கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம். நீ உழைக்காவிட்டால் பட்டினிகிடந்து மரிப்பாய்” என்று கூறுகிறார்கள். 6 அது உண்மையாக இருக்கலாம். எப்பொழுதும் அதிகமானவற்றைப் பெறுவதற்குப் போராடிக்கொண்டிருப்பதைவிட இருக்கின்றவற்றை வைத்து திருப்தி அடைவது நல்லது என்று நான் சொல்லுவேன்.
7 மீண்டும், அர்த்தமில்லாத சிலவற்றை நான் பார்த்தேன். 8 ஒருவனுக்குக் குடும்பம் இல்லாமல் இருக்கலாம். அவனுக்கு ஒரு மகனோ அல்லது சகோதரனோகூட இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் அவன் தொடர்ந்து கடினமாக உழைக்கிறான். அவன் தன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதில்லை. அவன் மிகுதியாக உழைக்கிறான். அவன் வேலைசெய்வதை நிறுத்தி, “நான் யாருக்காகக் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். நான் ஏன் வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது?” என்று தன்னைத்தான் கேட்பதில்லை. இதுவும் மிக மோசமானதும், அர்த்தமற்றதுமான ஒன்றாகும்.
நண்பர்களும் குடும்பமும் பலம் கொடுக்கிறது
9 ஒருவனாக இருப்பதைவிட இரண்டு பேராக இருப்பது நல்லது. இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்தால், அவர்கள் தங்கள் வேலையிலிருந்து அதிகம் பெறலாம்.
10 ஒருவன் விழுந்தால், இன்னொருவன் அவனுக்கு உதவலாம். ஆனால் ஒருவன் தனியாக இருந்து விழும்போது உதவுவதற்கு யாரும் இல்லாமல் கிடப்பது மிகவும் மோசமானது.
11 இரண்டு பேர் சேர்ந்து படுப்பது கதகதப்பாக இருக்கும். தனியாக படுத்திருப்பது கதகதப்பாக இராது. 12 ஒருவனாக இருப்பவனைப் பகைவன் எளிதில் தோற்கடித்துவிடுவான். அவனால் இருவரைத் தோற்கடிப்பது கடினம். மூன்று பேராய் இருப்பது இன்னும் பலம். அவர்கள் மூன்று புரிகளை உடைய கயிறு அறுப்பதற்குக் கடினமாய் இருப்பதைப் போன்றவர்கள்.
ஜனங்கள், அரசியல் மற்றும் புகழ்
13 ஏழையாகவும் ஆனால் ஞானமுள்ளவனாகவும் உள்ள இளைய தலைவன், முதியவனாகவும் முட்டாளாகவும் உள்ள ராஜாவைவிடச் சிறந்தவன். முதிய ராஜா எச்சரிக்கைகளைக் கவனிக்கமாட்டான். 14 இந்த ஆட்சியில் அந்த இளைய ராஜா ஏழ்மையில் பிறந்திருக்கலாம். ஒருவேளை அவன் சிறையிலிருந்து நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கலாம். 15 ஆனால் இந்த வாழ்க்கையில் ஜனங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான் இதனை அறிவேன். ஜனங்கள் அந்த இளைய தலைவனைப் பின்பற்றுகிறார்கள். அவன் புதிய ராஜாவாக வருவான். 16 ஏராளமான ஜனங்கள் அவனைப் பின்பற்றுவார்கள். ஆனால் பிறகு, அதே ஜனங்கள் அவனை விரும்பமாட்டார்கள். இதுவும் அர்த்தமற்றது. இது காற்றைப் பிடிக்க முயற்சி செய்வதைப் போன்றது.
அடிமைகளுக்கான விதிமுறைகள்
6 அடிமைகளாய் இருக்கிற அனைவரும் தங்கள் எஜமானர்களுக்கு மரியாதை காட்டவேண்டும். அவர்கள் இதனைச் செய்யும்பொழுது தேவனுடைய பெயரும், நம் போதனையும் விமர்சிக்கப்படாமல் இருக்கும். 2 சில அடிமைகளின் எஜமானர்கள் விசுவாசம் உடையவர்களாய் இருப்பார்கள். அதனால் அவர்கள் இருவரும் சகோதரர்களாய் இருப்பார்கள். எனினும் அந்த அடிமைகள் தங்கள் மரியாதையைக் குறைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் மேலும் சிறப்பான முறையில் தங்கள் வேலையைத் தங்கள் எஜமானர்களுக்காகச் செய்யவேண்டும். ஏனென்றால் தாம் நேசிக்கும் விசுவாசிகளுக்கு அந்த அடிமைகள் உதவிக்கொண்டும் பயன் விளைவித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
இக்காரியங்களைச் செய்ய நீ அவர்களுக்கு இதனைப் போதிக்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டும்.
தவறான போதனையும் உண்மையான செல்வமும்
3 சிலர் தவறான போதனைகளைச் செய்துவருகிறார்கள். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான போதனையை அவர்கள் பின்பற்றுவதில்லை. தேவனுக்குச் சேவை செய்கிற உண்மையான வழியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 4 தவறான போதகன் தற்பெருமையை உடையவன். அவனுக்கு எதுவும் புரியாது. வாக்குவாதங்களின் மேல் ஒரு நோய் கொண்ட உற்சாகத்தை உடையவனாக இருக்கிறான். அது பொறாமையையும், சண்டையையும், அவதூறுகளையும், பொல்லாத ஐயங்களையும் உண்டாக்குகின்றன. 5 உக்கிரமான தீயமனம் உடையவர்கள் வெறும் வாக்குவாதங்களையே முடிவில் உருவாக்குகிறார்கள். அவர்கள் உண்மையைத் தொலைத்துவிட்டார்கள். தேவனை சேவிப்பது செல்வந்தனாகும் வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
6 தன்னிடம் இருப்பதே போதும் என்று ஒருவன் திருப்தி அடைகிறானெனில் அத்துடன் அவனுக்குள்ள தேவபக்தியானது மிகுந்த இலாபமாயிருக்கும், என்பது உண்மை. 7 நாம் இந்த உலகத்துக்கு வரும்போது எதையும் நம்மோடு கொண்டு வரவில்லை. நாம் இறக்கும்போதும் எதையும் கொண்டு போகப் போவதில்லை. 8 எனவே, நம்மிடம் உள்ள உணவு, ஆடை ஆகியவற்றோடு திருப்தி அடையவேண்டும். 9 மேலும் செல்வந்தராக விரும்புகிறவர்கள் சோதனைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் கண்ணிகளில் மாட்டிக்கொள்கிறார்கள். முட்டாள்தனமானதும் ஆபத்தானதுமான ஆசைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். அவை அவர்களைப் பாதித்து, அழிக்கும். 10 பண ஆசையானது எல்லாவிதமான பாவங்களுக்கும் வழி வகுக்கும். சிலர் மேலும், மேலும் பணத்தை விரும்பி உண்மையான போதனையை விட்டுவிட்டார்கள். அதனால் தம் துன்பத்துக்குத் தாமே காரணமாகிறார்கள்.
நினைவுகொள்ளவேண்டிய விஷயங்கள்
11 நீயோ தேவனுடைய மனிதன். எனவே நீ இவற்றில் இருந்து விலகி இருக்கவேண்டும். சரியான வழியில் வாழ முயற்சி செய். தேவனுக்கு சேவை செய். விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தம் ஆகியவற்றை வைத்துக்கொள். 12 விசுவாசம் வைத்தல் பந்தயத்தில் ஓடுவது போன்றது. அதில் வெற்றி பெறக் கடுமையாகப் பாடுபடு. நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அத்தகைய வாழ்க்கைக்காகவே நீ அழைக்கப்பட்டாய், அநேக மக்களுக்கு முன்னிலையில் கிறிஸ்துவின் பேருண்மையை நீ அறிக்கை பண்ணியுமிருக்கிறாய். 13 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் முன்பாக நான் ஒரு ஆணையை இடுகிறேன். பொந்தியு பிலாத்துவின் முன்னால் நிற்கும்போது அவர் பேருண்மைக்கு சாட்சியம் வழங்கினவர். கிறிஸ்து இயேசு ஒருவரே எல்லாவற்றிற்கும் வாழ்வளிக்கிறார். 14 அதனால் இப்பொழுது உனக்குக் கூறுகிறேன், உனக்கு ஆணையிட்டுள்ளபடி செய். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வரும்வரை குற்றம் இல்லாமலும் பிழை இல்லாமலும் சரியாகச் செய். 15 தேவன் அதனைச் சரியான நேரத்தில் நிகழும்படி செய்வார். தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், ஏக சக்கரவர்த்தியாகவும் இருக்கிறார். அவரே ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும், கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தராகவும் விளங்குகிறார். 16 அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென்.
17 இந்த ஆணைகளைச் செல்வர்களிடம் கூறு. பெருமிதம் கொள்ளவேண்டாம் என அவர்களுக்குச் சொல். செல்வத்தின் மீது விசுவாசம் நிரந்தரமாக வைக்கவேண்டாம் என்றும், தேவன் மீது விசுவாசம் வைக்குமாறும் கூறு. செல்வம் விசுவாசிப்பதற்கு உரியதன்று. ஆனால் தேவன் நம்மை செழிப்பாகப் பாதுகாக்கிறார். அவற்றை நாம் சந்தோஷமாக அனுபவிக்க அவர் கொடுக்கிறார். 18 நல்ல செயல்களைச் செய்யுமாறு செல்வர்களிடம் கூறு. வள்ளல்களாகவும், பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்களாகவும் இருக்கக் கூறு. 19 இவற்றைச் செய்வதன் மூலம் அவர்கள் பரலோகத்தில் ஒரு பொக்கிஷத்தைச் சேமித்து வைக்கிறார்கள். அது அவர்களுக்குப் பலமான அஸ்திபாரமாக எதிர்கால வாழ்வைக் கட்ட உதவியாக இருக்கும். அதனால் உண்மையான வாழ்வைப் பெறுவர்.
20 தீமோத்தேயுவே, தேவன் உன்னிடம் நம்பிக்கையுடன் பல நல்ல காரியங்களைத் தந்திருக்கிறார். அவற்றைப் பாதுகாத்துக்கொள். தேவனிடமிருந்து வராத முட்டாள்தனமான காரியங்களைப் பேசுகிறவர்களிடமிருந்து விலகு. உண்மைக்கு எதிராக வாதம் செய்கிறவர்களிடமிருந்தும் விலகிப் போ. அவர்கள் “ஞானம்” என்று அழைப்பதெல்லாம் தவறான “ஞானம்” ஆகும். 21 சிலர் தங்களிடம் அந்த “ஞானம்” உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையான போதனையில் இருந்து விலகிப்போனார்கள்.
தேவனுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
2008 by World Bible Translation Center