Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 3-4

தாவீதின் மகன்கள்

தாவீதின் சில மகன்கள், எப்ரோன் என்னும் நகரத்திலே பிறந்தனர். இது தாவீதின் மகன்களின் விபரம்.

தாவீதின் முதல் மகன் அம்னோன். அம்னோனின் தாய் அகிநோவாம். அவள் யெஸ்ரேயேல் எனும் ஊரினள்.

இரண்டாவது மகனின் பெயர் தானியேல் ஆகும். இவனது தாயின் பெயர் அபிகாயேல். இவள் கர்மேல் யூதா எனும் ஊரினள்.

மூன்றாவது மகன் அப்சலோம். இவனது தாய் மாக்கா. இவள் தல்மாயின் மகள். தல்மாய் கேசூரின் அரசன்.

நான்காவது மகன் அதோனியா. இவனது தாய் ஆகீத்.

ஐந்தாவது மகன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தாள்.

ஆறாவது மகன் இத்ரேயாம். இவனது தாய் எக்லாள். இவளும் தாவீதின் மனைவி தான்.

இந்த ஆறு மகன்களும் எப்ரோனில் தாவீதிற்குப் பிறந்தவர்கள். தாவீது, எப்ரோனில் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் ஆண்டான். தாவீது எருசலேமில் 33 ஆண்டுகள் அரசாண்டான். கீழ்க்கண்டவர்கள் தாவீதிற்கு எருசலேமில் பிறந்த மகன்கள்:

பத்சுவாளுக்கு, நான்கு மகன்கள் பிறந்தனர். இவள் அம்மியேலின் மகள். சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் ஆகியோர் பத்சுவாளின் மகன்கள். 6-8 இப்கார், எலிசாமா, எலிப்பெலேத், நோகா, நேபேக், யப்பியா, எலிசாமா, எலியாதா, எலிபேலேத் ஆகிய ஒன்பது பேரும் தாவீதின் மகன்களே. தாவீது தனது பிற மகன்களைத் தனது வைப்பாட்டிகளிடம் பெற்றெடுத்தான். தாமார் தாவீதின் மகளாவாள்.

தாவீதின் காலத்திற்குப் பிறகு வந்த யூத அரசர்கள்

10 ரெகொபெயாம் சாலொமோனின் மகன். ரெகொபெயாமின் மகன் அபியா. அபியாவின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத். 11 யோசபாத்தின் மகன் யோராம். யோராமின் மகன் அகசியா, அகசியாவின் மகன் யோவாஸ். 12 யோவாஸின் மகன் அமத்சியா, அமத்சியாவின் மகன் அசரியா, அசரியாவின் மகன் யோதாம். 13 யோதாவின் மகன் ஆகாஸ், ஆகாஸின் மகன் எசேக்கியா, எசேக்கியாவின் மகன் மனாசே. 14 மனாசேயின் மகன் ஆமோன், ஆமோனின் மகன் யோசியா.

15 யோசியாவின் மகன்களின் பட்டியல் இது: முதல் மகன் யோகனான். இரண்டாம் மகன் யோயாக்கீம். மூன்றாம் மகன் சிதேக்கியா. நான்காம் மகன் சல்லூம்.

16 யோயாக்கீமின் மகன் எகொனியா. இவனது மகன் சிதேக்கியா. [a]

பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு தாவீதின் குடும்பம்

17 எகொனியா பாபிலோனியாவில் கைதியாக இருந்த பிறகு அவனுக்கு மகன்கள் பிறந்தனர். சாலாத்தியேல். 18 மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா ஆகியோர்கள் அவர்கள்.

19 செருபாபேல், சிமேயி ஆகியோர் பெதாயாவின் மகன்கள். மெசுல்லாம், அனனியா ஆகியோர் செருபாபேலின் மகன்கள். செலோமீத் இவர்களின் சகோதரி. 20 செருபாபேலுக்கு மேலும் ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசா பேசேத் ஆகியோராவர்.

21 அனனியாவின் மகன் பெலத்தியா. எசாயா இவனது மகன் ரெபாயா. ரெபாயாவின் மகன் அர்னான். இவனது மகன் ஒபதியா. ஒபதியாவின் மகன் செக்கனியா.

22 இது செக்கனியாவின் சந்ததியினரின் பட்டியல்: இவனது மகன் செமாயா. செமாயாவிற்கு அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் எனும் ஆறு மகன்கள் இருந்தனர்.

23 எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் எனும் மூன்றுபேரும் நெயாரியாவின் மகன்கள்.

24 ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி எனும் ஏழு பேரும் எலியோனாயின் மகன்கள்.

யூதாவின் மற்ற கோத்திரங்கள்

யூதாவின் மகன்களின் பட்டியல் பின் வருமாறு:

பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் ஆகியோர் யூதாவின் மகன்கள்.

சோபாலின் மகன் ராயா. இவன் யாகாத்தின் தந்தை. யாகாத் அகுமாயிக்கும் லாகாதுக்கும் தந்தை. இவர்களின் சந்ததிகளே சோரத்தியர்கள்.

யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் ஆகியோர் ஏதாமின் மகன்கள். அத்செலெல்போனி இவர்களின் சகோதரி.

பெனுவேல் கேதோருக்குத் தந்தை. எசேர் உஷாவிற்கு தந்தை. இவர்கள் ஊரின் மகன்கள். ஊர் எப்ராத்தாவின் முதல் மகன். எப்ராத்தோ பெத்லெகேமுக்குத் தந்தை.

அசூர் தெக்கோவாவுக்குத் தந்தை. தெக்கோவாவுக்கு ஏலாள், நாராள் என்ற இரு மனைவியர்கள். நாராள் அசூருக்கு அகுசாம், எப்பேர், தெமனி, ஆகாஸ்தாரி ஆகிய மகன்களைப் பெற்றாள். ஏலாளிக்கு சேரேத், எத்சோகார், எத்னான், கோஸ் எனும் மகன்கள் இருந்தனர். கோஸ், அனூப், சோபேபாக் எனும் இருவரின் தந்தை. கோஸ் அகர்கேல் கோத்திரத்திற்கும் தந்தையானான். அகர்கேல் ஆருமின் மகன்.

யாபேஸ் மிக நல்லவன். அவன் தனது சகோதரர்களைவிடச் சிறந்தவன். அவனது தாய், “நான் அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டேன். ஏனென்றால் நான் அவனைப் பெற்றபோது பெருந்துன்பம் அடைந்தேன்” என்றாள். 10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனிடம் ஜெபித்து, “நீர் என்னை உண்மையாகவே ஆசீர்வதிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நீர் எனக்கு மிகுதியான நிலத்தைத் தரவேண்டும் என்று விரும்புகிறேன். என்னோடு நெருக்கமாக இரும். என்னை எவரும் காயப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளும். அதனால் நான் துன்பம் இல்லாமல் இருக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். அவன் கேட்டதை தேவன் அவனுக்குக் கொடுத்தார்.

11 கேலூப் சூகாவின் சகோதரன். கேலூப் மேகீரின் தந்தை. மேகீர் எஸ்தோனின் தந்தை. 12 எஸ்தோன் பெத்ராபா, பசேயாக், தெகினாக் ஆகியோரின் தந்தை. தெகினாக் இர்நாகாஷின் தந்தை. இவர்கள் அனைவரும் ரேகாவைச் சேர்ந்தவர்கள்.

13 ஓத்னியேல், செராயா ஆகியோர் கேனாசின் மகன்கள். ஓத்னியேலின் மகன்கள் ஆத்தாத் மற்றும் மெயோனத்தாய் ஆகியோர். 14 மெயோனத்தாய் என்பவன் ஒபிராவுக்கு தந்தை ஆனான்.

செராயா யோவாபைப் பெற்றான். யோவாப் கராஷீமன் பள்ளத்தாக்குக்கு வித்திட்டவர். அவர்கள் திறமைமிக்க தொழிலாளிகளாக இருந்ததினால் ஜனங்கள் இந்தப் பெயரால் அவர்களை அழைத்தார்கள்.

15 காலேப் எப்புன்னேயின் மகன். ஈரு, ஏலா, நாகாம் ஆகியோர் காலேபின் மகன்கள். ஏலாவின் மகன் கேனாஸ்.

16 சீப், சீப்பா, திரியா, அசாரெயேல் ஆகியோர் எகலெலேலின் மகன்கள்.

17-18 யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன் ஆகியோர் எஸ்றாவின் மகன்கள், மேரேத், மிரியாமுக்கும் சம்மாயிக்கும் இஸ்பாவுக்கும் தந்தையானான். இஸ்பா எஸ்தெ மோவாவுக்குத் தந்தை ஆனான். மேரேத்திற்கு எகிப்திலுள்ள மனைவி ஒருத்தி உண்டு. அவளுக்கு யாரேது, ஏபேர், எக்குத்தியேல் எனும் மகன்கள் இருந்தனர். யாரேது கேதோரின் தந்தை. ஏபேர் சோக்கோவின் தந்தை. எக்குத்தியேல் சனோவாவிற்குத் தந்தை. இவர்கள் பித்தியாளின் மகன்கள். பித்தியாள் பார்வோனின் மகள். இவள் எகிப்திலிருந்து வந்த மேரேத்தின் மனைவி.

19 நாகாமின் சகோதரியும் மேரேத்தின் மனைவிதான். இவள் யூதாவிலிருந்து வந்தவள். இவளுடைய மகன்களே கேயிலாவிற்கும் எஸ்தேமோவாவிற்கும் தந்தையாவர். ஆபிகேயிலா கர்மியன் ஜனங்களிடமிருந்தும் எஸ்தேமோவா மாகாத்திய ஜனங்களிடமிருந்தும் வந்தவர்கள். 20 அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் ஆகியோர் ஷீமோனின் மகன்கள்.

சோகேதும் பென் சோகேதும் இஷியின் மகன்கள்.

21-22 யூதாவின் மகன் சேலாக். ஏர், லெகா, லாதா, யோக்கீம் ஆகியோரும் கோசேபாவின் ஆண்களும், யோவாஸும், சாராப்பும் சேலாக்கின் ஜனங்களாவர். ஏர்லேக்காவூரின் தந்தை. லாதா மரேசாவூரின் தந்தை. அஸ்பெயா வீட்டு கோத்திரத்தினர் மெல்லிய புடவை நெய்யும் தொழிலாளர் ஆயினர். யோவாஸும் சாராப்பும் மோவாபிய பெண்களை மணந்துகொண்டனர். பிறகு அவர்கள் பெத்லெகேமுக்குத் திரும்பிப்போயினர். இக்குடும்பத்தைப் பற்றிய எழுத்துக்கள் எல்லாம் பழையவை. 23 சேலாக்கின் பிள்ளைகள் அனைவரும் குயவரின் வேலையைச் செய்துவந்தனர். அவர்கள் நெத்தாயிமிலும் கெதேராவிலும் வாழ்ந்தனர். அவர்கள் அங்கு வாழ்ந்து அரசனுக்குப் பணி செய்துவந்தனர்.

சிமியோனின் பிள்ளைகள்

24 நெமுவேல், யாமின் யாரீப், சேரா, சவுல் ஆகியோர் சிமியோனின் மகன்கள். 25 சவுலின் மகன் சல்லூம், சல்லூமின் மகன் மிப்சாம், மிப்சாமின் மகன் மிஸ்மா.

26 மிஸ்மாவின் மகன் அம்முவேல், அம்முவேலின் மகன் சக்கூர், சக்கூரின் மகன் சீமேயி. 27 சீமேயிக்கு 16 மகன்களும் 6 மகள்களும் இருந்தனர். ஆனால் சீமேயியின் சகோதரர்களுக்கு அதிகப் பிள்ளைகள் இல்லை! அவர்களுக்குப் பெரியக் குடும்பமும் இல்லை. அது யூதாவின் மற்ற கோத்திரங்களைப் போல பெரிதாக வளரவில்லை.

28 சீமேயியின் சந்ததியினர் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும், 29 பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும், 30 பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும், 31 பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள். தாவீது அரசனாகும்வரை இவர்கள் இந்நகரங்களில் வாழ்ந்தனர். 32 இந்நகரங்களின் அருகில் ஐந்து கிராமங்கள் இருந்தன. அவை, ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் ஆகியவையாகும். 33 பாலாத்தைப் போன்று தொலைவில் மற்ற கிராமங்களும் இருந்தன. இவற்றில் இவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் தம் குடும்ப வரலாற்றையும் எழுதி வைத்தனர்.

34-38 இவர்களது கோத்திரங்களில் உள்ள தலைவர்களின் பட்டியல் இது. மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும், யோவேலும் ஆசியேலின் மகனான செராயாவும், செராயாவின் மகன் யோசிபியாவும், யோசிபியாவின் மகன் ஏகூவும், எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகொயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும், சீப்பியின் மகனான சீசாவும், அல்லோனின் மகனான சீப்பியும், யெதாயாவின் மகனான அல்லோனும், சிம்ரியின் மகனான யெதாயாவும், செமாயாவின் மகனான சிம்ரியும்.

அவர்களின் குடும்பங்கள் மிகப் பெரிதாக வளர்ந்தன. 39 இவர்கள் தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிவரை சென்றார்கள். தம் ஆடுமாடுகளுக்குரிய மேய்ச்சல் பூமியைத் தேடி இவ்வாறு சென்றார்கள். 40 அவர்கள் ஏராளமாகப் புல் உள்ள நல்ல வயல்வெளிகளைக் கண்டு பிடித்தனர். அப்பூமி சமாதானத்தோடும், சப்தமின்றியும் இருந்தது. பண்டைக்காலத்தில் அங்கு காமின் சந்ததியார் வாழ்ந்தார்கள். 41 யூதாவின் அரசனாக எசேக்கியா இருந்தபோது இது நிகழ்ந்தது. அவர்கள் கேதாருக்கு வந்து காமிய மக்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். அவர்கள் காமியரின் கூடாரங்களை அழித்தனர். அதோடு அங்கு வாழ்ந்த மௌனியர்களுக்கு எதிராகவும் சண்டையிட்டு அவர்களை அழித்தனர். இன்னும் அவர்களைச் சேர்ந்த எவரையும் அங்கு விட்டு வைக்கவில்லை. எனவே இவர்கள் அங்கு வாழத்தொடங்கினார்கள். காரணம் அந்நிலம் அவர்களின் ஆடுகளுக்கான புல் நிரம்பியிருந்தது.

42 சிமியோனின் கோத்திரத்திலிருந்து 500 ஜனங்கள் சேயீர் மலைநாட்டுக்குச் சென்றனர். இஷியின் மகன்கள் இவர்களை வழிநடத்தினர். அவர்கள், பெலத்தியா, நெகரியா, ரெப்பாயா, ஊசியேல் ஆகியோராகும். சிமியோர் ஜனங்கள் அங்கே வாழ்ந்தவர்களோடு சண்டையிட்டனர். 43 அங்கே சிறிது அமலேக்கியரே வாழ்ந்து வந்தனர். அவர்கள் இவர்களோடு சண்டையிட்டுக் கொன்றனர். அன்று முதல் இன்றுவரை இவர்கள் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

எபிரேயர் 9

பழைய உடன்படிக்கையின்படி வழிபாடு

முதலாம் உடன்படிக்கையானது வழிபாட்டிற்கான விதிகளை உடையது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டிற்கான இடத்தை உடையது. இந்த இடம் ஒரு கூடாரத்துக்கு உள்ளே இருந்தது. கூடாரத்திற்குள் முன் பகுதி உள்ள இடம் பரிசுத்தமான இடம் என அழைக்கப்பட்டது. அந்தப் பரிசுத்தமான இடத்தில் ஒரு குத்துவிளக்கும், ஒரு மேஜையும், தேவனுக்குப் படைக்கப்பட்ட சிறப்பான அப்பங்களும் இருந்தன. இரண்டாம் திரைக்குப் பின்னே மிகப் பரிசுத்தமானது என அழைக்கப்படும் இடம் இருந்தது. அதில் பொன்னால் செய்த தூபகலசமும் பழைய உடன்படிக்கை வைக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டியும் [a] இருந்தன. அப்பெட்டி தங்கத் தகட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டிக்குள் மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரமும் துளிர்த்த இலைகளையுடைய ஆரோனின் கைத்தடியும் இருந்தன. மேலும் பத்துக் கட்டளைகள் பொறித்த உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. அப்பெட்டியின் மேல் கிருபையாகிய இருக்கையை மறைத்தபடி தேவனுடைய விசேஷ தூதர்கள் இருந்தார்கள். (இப்பொழுது இவற்றைப் பற்றிய உண்மையான விபரங்களைச் சொல்லக் காலம் போதாது.)

இவ்விதத்தில் எல்லாப் பொருள்களும் ஆயத்தப்படுத்தப்பட்ட பிறகு, ஆராதனை சேவையை செய்யும் பொருட்டு ஆசாரியர்கள் முதலாம் பரிசுத்தக் கூடாரத்தில் நித்தமும் செல்லத் தொடங்குவார்கள். ஆனால் பிரதான ஆசாரியர் மட்டுமே மிகப் பரிசுத்தமான இரண்டாம் அறைக்குள் பலியின் இரத்தத்தைச் சிந்தி நுழைய முடியும். அவர் முதலில் தான் செய்த பாவங்களுக்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அறியாமையால் மக்கள் செய்த பாவங்களுக்காக அவர் காணிக்கைகளை வழங்கவேண்டும்.

முதலாம் கூடாரம் நிற்கும் வரையிலும் மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போகும் வழியானது மூடப்பட்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்தவே பரிசுத்த ஆவியானவர் இவ்விரண்டு அறைகளையும் பயன்படுத்துகிறார். எல்லாமே நிகழ் காலத்தின் ஒரு அடையாளமானது. தாம் செலுத்தும் காணிக்கையாலும், பலிகளாலும் வழிபடுகிறவனின் மனசாட்சியானது முழுமைப்படுத்தப்படுவதில்லை. 10 ஏனெனில் உண்ணுதல், பருகுதல், சடங்குக் குளியல்கள் ஆகிய புற விஷயங்களைப் பற்றிய காணிக்கைகளும் பலிகளுமாகவே இருக்கின்றன. இவ்விஷயங்கள் தேவனுடைய புதிய வழி உண்டாகும் வரைக்கும் பயன்படுகின்றன.

புதிய உடன்படிக்கையின்படி வழிபாடு

11 மேலும் இப்போது வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியனாகக் கிறிஸ்து வந்திருக்கிறார். (சாதாரண கூடாரத்தின் வழியே அவர் வரவில்லை). மனிதக் கைகளால் உருவாக்கப்படாத உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான கூடாரத்தின் வழியே வந்தார். அக்கூடாரமானது தேவன் உருவாக்கிய இவ்வுலகத்தின் பகுதியல்ல. 12 மேலும் மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் இயேசு நுழைந்தபோது, வெள்ளாட்டுக்கடாக்கள் மற்றும் காளைகளின் இரத்தத்தை அவர் பயன்படுத்தவில்லை. மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் நுழைய அவர் தன் சொந்த இரத்தத்தையே பயன்படுத்தினார். எல்லா காலத்திற்கும் போதுமென்கிற அளவிற்கு ஒரே ஒருமுறை தான் அவர் அதற்குள் சென்றார். இவ்வழியில் நமக்கு அவர் நித்திய விடுதலையைப் பெற்றுத்தந்தார்.

13 வெள்ளாட்டுக்கடா காளை ஆகியவற்றின் இரத்தமும் தீட்டுப்பட்ட மக்கள் மீது தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும் அவர்களைப் பரிசுத்தமாக்கிப் புறப்பரிசுத்தம் உடையவர்களாக்க முடியும். 14 இது உண்மை எனில், கிறிஸ்துவின் இரத்தம் இதிலும் மிக்க வல்லமை உள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனுக்கு இயேசு தன்னைத் தானே ஒரு முழுமையான பலியாக வழங்கினார். ஆகவே நமக்கு ஆன்மீக மரணத்தைக் கொண்டுவருகிற தீய செயல்களில் இருந்து அவர் இரத்தமானது நம் இதயத்தை சுத்தமாக்கும். ஜீவனுள்ள தேவனை வழிபடும் வண்ணம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம்.

15 கிறிஸ்து இறந்ததால், புதிய உடன்படிக்கையின் [b] நடுவராக அவர் ஆனார். இப்போது முதல் உடன்படிக்கையின் கீழ் செய்த தவறுகளில் இருந்து மக்களை விடுவிக்கும் கிறிஸ்துவின் மரணம் ஒன்றிருந்தது. அதனால், அழைக்கப்பட்டவர்கள் என்றென்றும் உரிமைகளைப் பெறுவர்.

16 ஒரு மனிதன் இறக்கும்போது அவன் தன் மரண சாசனத்தை விட்டுச்செல்கிறான். ஆனால் அம்மரண சாசனத்தை எழுதியவன் இறந்துபோனான் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். 17 மரண சாசனத்தை எழுதியவன் வாழ்கிறான் என்றால் அந்த சாசனத்திற்குப் பொருள் இல்லை. அந்த சாசனத்தை அவன் இறந்த பிறகே பயன்படுத்த முடியும். 18 தேவனுக்கும் அவரது மக்களுக்கும் ஏற்பட்ட முதல் உடன்படிக்கையும் இது போலாயிற்று. இதுவும் இரத்தமில்லாமல் நன்மையடையவில்லை. 19 முதலில் மோசே சட்டத்தில் உள்ள ஒவ்வொரு கட்டளையையும் அறிவித்தான். பிறகு இளங்காளைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு மயிரோடும் ஈசோப்போடும் [c] கூட எடுத்து சட்டப் புத்தகத்தின் மேலும் மக்கள் மீதும் தெளிக்கப் பயன்படுத்தினான். 20 “தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுதான்” என்று மோசே கூறினான். 21 இவ்வாறு பரிசுத்தக் கூடாரத்தின் மேலும் மோசே இரத்தத்தை தெளித்தான். அத்துடன் வழிபாட்டிற்குரிய அனைத்துப் பொருட்களின் மீதும் தெளித்தான். 22 அனைத்தையும் இரத்தத்தால் சுத்தப்படுத்த முடியும் என்று சட்டம் சொல்கிறது. இரத்தம் இல்லாமல் எவ்வித பாவங்களும் மன்னிக்கப்படமாட்டாது.

கிறிஸ்துவின் பலி பாவங்களை நீக்குகிறது

23 எனவே பரலோகத்தில் உள்ளவற்றின் சாயலாக உள்ள இவற்றை விலங்குகளைப் பலி கொடுத்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் பரலோகத்தில் உள்ளவற்றிற்கு இதைவிடச் சிறப்பான பலிகள் அவசியம் ஆகும். 24 கிறிஸ்து மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போனார். ஆனால் உண்மையானதின் சாயலாக மனிதக் கைகளால் செய்யப்பட்ட இடத்திற்குப் போகவில்லை. கிறிஸ்து பரலோகத்திற்கே சென்றார். இப்போது அங்கே நமக்காக தேவனுக்கு முன் தோன்றுகிறார்.

25 ஒவ்வொரு ஆண்டும் தனக்குச் சொந்தமற்ற இரத்தத்தோடு பிரதான ஆசாரியன் மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் கிறிஸ்து தன்னையே வழங்கிக்கொள்ள வேண்டியதில்லை. 26 அப்படியானால் உலகம் உண்டானது முதல் அவர் அநேகந்தரம் இதுபோல் பாடுபட வேண்டியது இருந்திருக்கும். அவர் தம்மை தாமே பலியிட வேண்டியிருந்தது. அதனால் அவர் இந்தக் கடைசி காலத்தில் ஒரே ஒருதரம் தம்மைப் பலியிட்டார். இதன் மூலம் அவர் அனைவரது பாவங்களையும் நீக்கிவிட்டார்.

27 ஒவ்வொரு மனிதனும் ஒருமுறை மட்டுமே சாகிறான். அதன் பிறகு நியாயந்தீர்க்கப்படுகிறான். 28 ஆகையால் ஒவ்வொருவரின் பாவங்களையும் தீர்க்கும்படி கிறிஸ்து ஒருமுறை மரித்தார். மேலும் கிறிஸ்து இரண்டாம் முறையும் வருவார். பாவங்களைத் தீர்க்கும்படி அல்ல. தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அளிக்க வருவார்.

ஆமோஸ் 3

இஸ்ரவேலுக்கான எச்சரிக்கை

இஸ்ரவேல் ஜனங்களே, இந்தச் செய்தியைக் கவனியுங்கள். இஸ்ரவேலே உங்களைபற்றி கர்த்தர் இவற்றைக் கூறினார். இந்த செய்தி நான் எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த எல்லாக் குடும்பங்களையும் (இஸ்ரவேல்) பற்றியது. “பூமியில் அநேகக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் உன்னுடைய ஒரே குடும்பத்தைதான் சிறப்பான வழியில் அறிந்துகொள்ள நான் தேர்ந்தெடுத்தேன். நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, நான் உனது எல்லா பாவங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன்.”

இஸ்ரவேலின் தண்டனைக்கான காரணம்

இரண்டு பேர் ஒத்துப்போனாலொழிய
    ஒரே வழியில் நடக்க முடியாது.
காட்டிலுள்ள சிங்கம்,
    ஒரு மிருகத்தைப் பிடித்த பிறகுதான் கெர்ச்சிக்கும்.
ஒரு இளஞ்சிங்கம் தன் குகையில் கெர்ச்சிக்கிறது என்றால்,
    அது ஏதோ ஒன்றைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம்.
கண்ணிக்குள்ளே உணவு இல்லாவிட்டால்
    ஒரு பறவை தரையிலுள்ள கண்ணிக்குள் பறக்காது.
கண்ணி மூடினால்
    அது பறவையைப் பிடிக்கும்.
எக்காளம் எச்சரிக்கையாக ஊதினால்,
    ஜனங்கள் நிச்சயம் பயத்தால் நடுங்குவார்கள்.
நகரத்திற்கு துன்பம் வந்தால்,
    அதற்கு கர்த்தர் காரணமாவார்.

எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.

9-10 நீங்கள் அஸ்தோத்தின் கோபுரங்களுக்கும், எகிப்துக்கும் போய் இச்செய்தியைக் கூறுங்கள். “சமாரியாவின் மலைகளுக்கு வாருங்கள். நீங்கள் அங்கே பெருங்குழப்பத்தைக் காண்பீர்கள். ஏனென்றால் ஜனங்களுக்குச் சரியாக வாழ்வது எப்படி என்று தெரியாது. அந்த ஜனங்கள் மற்ற ஜனங்களிடம் கொடூரமாக இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பொருட்களை எடுத்துத் தங்கள் கோபுரங்களில் ஒளித்து வைத்தார்கள். அவர்கள் போரில் எடுத்தப் பொருட்களால் அவர்களது கருவூலங்கள் நிறைந்திருக்கின்றன.”

11 எனவே கர்த்தர் சொல்கிறார்: “ஒரு பகைவன் அந்த நாட்டிற்கு வருவான். அந்தப் பகைவன் உன் பலத்தை எடுத்துப்போடுவான். நீ உயர்ந்த கோபுரங்களில் ஒளித்து வைத்த பொருட்களை அவன் எடுப்பான்.”

12 கர்த்தர் கூறுகிறார்,

“ஒரு சிங்கம் ஒரு ஆட்டுக் குட்டியை தாக்கலாம்.
    மேய்ப்பன் அந்த ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம்.
ஆனால் மேய்ப்பன் ஆட்டுக்குட்டியின் ஒரு பகுதியைத்தான் காப்பாற்றுவான்.
    அவன் சிங்கத்தின் வாயிலிருந்து இரண்டு கால்கள்
அல்லது காதின் ஒரு பகுதியை மட்டும் பிடுங்க முடியும்.
    அவ்வாறே இஸ்ரவேலின் பெரும் பாலான ஜனங்கள் காப்பாற்றப்படமாட்டார்கள்.
சமாரியாவில் வாழ்கிற ஜனங்கள் படுக்கையின் ஒரு மூலையையோ
    அல்லது ஒரு மஞ்சத்தின் மேலிருக்கும் துணியின் ஒரு துண்டையோ காப்பாற்றிக்கொள்வார்கள்.”

13 என் ஆண்டவரும், சர்வ வல்லமையுள்ள தேவனுமாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார் “யாக்கோபின் குடும்பத்தை (இஸ்ரவேல்) எச்சரிக்கை செய். 14 இஸ்ரவேல் பாவம் செய்தது. நான் அவர்களைத் தங்களுடைய பாவங்களுக்காகத் தண்டிப்பேன். நான் பெத்தேலில் உள்ள பலிபீடங்களையும் அழிப்பேன். பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டு தரையில் கிடக்கும். 15 நான் மழைக்கால வீட்டைக் கோடைகால வீட்டோடு அழிப்பேன். தந்தத்தால் ஆன வீடுகள் அழிக்கப்படும். பல வீடுகள் அழிக்கப்படும்” என்று கர்த்தர் கூறுகிறார்.

சங்கீதம் 146-147

146 கர்த்தரை துதி!
    என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
    என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
    ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
    அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
    தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
    குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
    கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
    விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
    ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
    சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!

கர்த்தரைத் துதியுங்கள்!

147 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    எங்கள் தேவனுக்கு துதிகளைப் பாடுங்கள்.
    அவரைத் துதிப்பது நல்லதும் களிப்புமானது.
கர்த்தர் எருசலேமைக் கட்டினார்.
    சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலரை தேவன் மீண்டும் அழைத்து வந்தார்.
தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி,
    அவர்கள் காயங்களைக் கட்டுகிறார்.
தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார்.
    ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார்.
நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர்.
    அவர் மிகவும் வல்லமையுள்ளவர்.
    அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை.
கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார்.
    ஆனால் அவர் தீயோரை அவமானப்படுத்துகிறார்.
கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.
    கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள்.
தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார்.
    தேவன் பூமிக்காக மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
    தேவன் மலைகளின் மேல் புல் வளரும்படி செய்கிறார்.
தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார்.
    தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார்.
10 போர்க் குதிரைகளும்
    வல்லமையுள்ள வீரர்களும் அவரை மகிழ்ச்சிப்படுத்தமாட்டார்கள்.
11 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள்.
    அவரது உண்மை அன்பை நம்புகிற ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷமடைகிறார்.
12 எருசலேமே, கர்த்தரைத் துதி!
    சீயோனே, உன் தேவனைத் துதி!
13 எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதியாக்குகிறார்.
    தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்.
14 உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார்.
    எனவே பகைவர்கள் போரில் உன் நாட்டுத் தானியத்தைக் கவர்ந்து செல்லவில்லை.
    உனக்கு உணவிற்குத் தேவையான தானியம் மிகுதியாக இருக்கிறது.
15 பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார்.
    அது உடனே கீழ்ப்படிகிறது.
16 நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார்.
    உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார்.
17 தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார்.
    அவர் அனுப்பும் குளிரைத் தாங்கிக்கொள்ள ஒருவனாலும் ஆகாது.
18 அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது.
    பனி உருகுகிறது, தண்ணீர் பாய்ந்தோடத் தொடங்குகிறது.

19 தேவன் யாக்கோபிற்குத் தமது கட்டளைகளைக் கொடுத்தார்.
    தேவன் இஸ்ரவேலுக்கு அவரது சட்டங்களைக் கொடுத்தார்.
20 தேவன் வேறெந்த தேசத்திற்கும் இதைச் செய்யவில்லை.
    தேவன் வேறெந்த ஜனங்களுக்கும் தனது சட்டங்களைப் போதிக்கவில்லை.

கர்த்தரைத் துதியுங்கள்!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center