M’Cheyne Bible Reading Plan
கடன்களை ரத்து செய்யும் விசேஷ ஆண்டு
15 “ஏழு ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும். 2 நீங்கள் செய்யவேண்டிய முறையாவது: ஒவ்வொருவரும் தான் மற்ற இஸ்ரவேலருக்குக் கடனாகக் கொடுத்த பணத்தை ரத்து செய்துவிட வேண்டும். அவன் மற்ற இஸ்ரவேல் சகோதரனிடம் அந்தப் பணத்தை திரும்ப தன்னிடம் செலுத்துமாறு கேட்கக்கூடாது. ஏனென்றால், கர்த்தர் உங்களுக்குக் கூறியதின்படி அந்தக் கடனை அவ்வாண்டிலேயே ரத்து செய்திட வேண்டும். 3 நீங்கள் அந்நியர்களுக்குக் கொடுத்த கடனை திரும்பச் செலுத்துமாறு கேட்கலாம். ஆனால், உன் இஸ்ரவேல் சகோதரனிடம் அவ்வாறு கேட்கக்கூடாது. 4 உங்கள் நாட்டில் ஏழை ஜனங்கள் யாரும் இருக்கக் கூடாது. ஏனென்றால், கர்த்தர் இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றார். கர்த்தர் உங்களை வெகுவாய் ஆசீர்வதிப்பார். 5 ஆனால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால் மாத்திரம் இது நடக்கும். நான் இன்று உங்களுக்குச் சொன்ன தேவனுடைய ஒவ்வொரு கட்டளையையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும். 6 பின்பு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி உங்களை ஆசீர்வதிப்பார். அதனால், நீங்கள் பல ஜாதிகளுக்கு கடன் கொடுப்பீர்கள். ஆனால், நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்கும் அவசியம் உங்களுக்கு இருக்காது. நீங்கள் அவர்களை ஆளலாம். அவர்கள் யாரும் உங்களை ஆள இயலாது.
7 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும், இந்த தேசத்தில் உங்களில் யாராவது ஒருவன் ஏழை எளியவனாக இருந்தால், அவர்கள் மத்தியில் நீங்கள் யாரும் சுயநலமுள்ளவர்களாக இருந்துவிடக்கூடாது. நீங்கள் அந்த ஏழை எளியவனுக்குக் கைகொடுத்து உதவ மறுத்துவிடக் கூடாது. 8 நீங்கள் அவனுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டவேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கடன் கொடுத்து உதவவேண்டும்.
9 “கடன்களை ரத்து செய்யும் ஏழாவது ஆண்டு சமீபமாக வந்துவிட்டது என்பதால், ஏழைக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. இப்படிப்பட்ட ஒரு கெட்ட சிந்தை உன் மனதில் நுழைய இடம் கொடாதே. தேவை உள்ள ஏழையைக் குறித்து ஒருபோதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே. அவனுக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. அப்படி நீங்கள் உதவவில்லையென்றால், அவன் உங்களுக்கு எதிராக கர்த்தரிடத்தில் முறையிடுவான். அப்போது கர்த்தர் அதை உங்கள் மேல் குற்றமாகச் சுமத்துவார்.
10 “அந்த ஏழை நபருக்குத் தாராளமாகக் கொடுங்கள். அவர்களுக்குக் கொடுப்பதை இழிவாகக் கருதாதீர்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், நீங்கள் இந்த நற்செயலைச் செய்வதால் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர் ஆசீர்வதிப்பார். 11 தேசத்திலே ஏழை எளியவர்கள் எப்போதும் இருப்பார்கள். அதனால் தான் உன் தேசத்தில் உள்ள ஏழை எளிய சகோதரனுக்கு நீங்கள் உதவத் தயாராக இருக்கவேண்டுமென நான் கட்டளையிடுகிறேன். அவர்களுக்குத் தேவைப்படும்போது கொடுங்கள்.
அடிமைகள் விடுதலை பெற அனுமதித்தல்
12 “எபிரெய ஆணையோ, பெண்ணையோ நீங்கள் அடிமைகளாக விலை கொடுத்து வாங்கியிருந்தால், நீங்கள் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு உங்களுக்கு சேவை செய்ய வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஏழாவது ஆண்டு அவர்களை உங்களிடமிருந்து விடுதலை பெற்றுச் செல்ல அனுமதிக்க வேண்டும். 13 அவ்வாறு அவர்கள் உங்களிடமிருந்து விடுதலையாகிச் செல்லும்போது, அவர்களை ஒன்றுமில்லாதவர்களாய் அனுப்பிவிடாதீர்கள். 14 நீங்கள் அவர்களுக்கு உங்களது ஆடு மாடுகளில் சிலவற்றையும், கொஞ்சம் தானியத்தையும், கொஞ்சம் திராட்சை ரசத்தையும் கொடுத்து அனுப்ப வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் தாராளமாகக் கொடுக்குமளவு ஏராளமான நன்மைகளால் உங்களை ஆசீர்வதித்தார். அதே போல் நீங்களும் உங்களது அடிமைகளுக்குத் தாராளமாகக் கொடுங்கள். 15 நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை அங்கிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். அதை நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளீர்கள். அதனால்தான் நான் இன்று உங்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கின்றேன்.
16 “ஆனால், உங்களது அடிமைகளுள் ஒருவன், ‘நான் உங்களை விட்டுப் பிரியமாட்டேன்’ என்று உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நேசித்து உங்களுடன் நல்லதொரு வாழ்வைப்பெற்றதனால், கூறிடலாம். 17 நீங்கள் அந்த அடிமையை உங்கள் வீட்டுக் கதவுக்கு எதிராக நிறுத்தி, ஒரு கூர்மையான சிறிய கம்பியினால் அந்த அடிமையின் காதில் ஒரு துளை போடவேண்டும். அவன் உங்களுக்கு என்றைக்கும் அடிமையாயிருப்பான் என்பதை இது காட்டும், உங்களோடு இருக்க விரும்பும் உங்களின் பெண் அடிமைக்கும் இவ்வாறே செய்ய வேண்டும்.
18 “உங்கள் அடிமைகளை விடுதலையாக்கி அனுப்பிவிடுவதை தவறாக எண்ண வேண்டாம். ஆறு ஆண்டுகளாக ஒரு வேலையாளுக்குரிய சம்பளத்தில் பாதிக் கூலிக்கு அவர்கள் உங்களுக்கு சேவை செய்ததை எண்ணிப்பாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார்.
மந்தைகளின் தலையீற்றுகளைப் பற்றிய விதிகள்
19 “உங்கள் மந்தைகளில் உள்ள ஆடு மாடுகளின் தலையீற்று ஆண்களையெல்லாம் கர்த்தருக்குரியதாக்குங்கள். அவற்றை உங்கள் பணிகளுக்காகப் பயன்படுத்தாதீர்கள். அவற்றில் உள்ள தலையீற்று ஆட்டினை மயிர் கத்தரியாமல் இருக்க வேண்டும். 20 ஆண்டுதோறும் அவற்றை நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்திற்கு எடுத்துச்சென்று, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உண்ணுங்கள்.
21 “ஆனால், அந்தக் கால்நடைகளுக்கு முடம், குருடு முதலான எந்த ஒரு பழுது இருந்தாலும் அவற்றை உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம். 22 நீங்கள் உங்கள் வீடுகளிலேயே அவற்றின் இறைச்சியை உண்ணலாம். யார் வேண்டுமானாலும், அசுத்தமானவனும் சுத்தமானவனும் அதை உண்ணலாம். வெளிமான்களையும், கலைமான்களையும் புசிக்கும்படி கொடுக்கப்பட்ட கட்டளையின்படியே இந்த இறைச்சியையும் புசிக்கவேண்டும். 23 ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் உண்ணாமல், அதைத் தண்ணீரைப்போன்று தரையிலே ஊற்றிவிட வேண்டும்.
துன்பப்படும் ஒரு மனிதனின் ஜெபம். அவன் சோர்வடையும்போது தனது குறைகளை கர்த்தரிடம் சொல்லிக் கொள்வதாக உள்ளது.
102 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
உதவிக்காக நான் கதறும்போது கவனியும்.
2 கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும்.
உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும்.
3 என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது.
எரிந்துபோகும் நெருப்பைப்போல் என் வாழ்க்கை உள்ளது.
4 என் வலிமை போயிற்று.
நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன்.
நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன்.
5 என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.
6 பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன்.
பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன்.
7 என்னால் தூங்க இயலவில்லை.
கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன்.
8 என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள்.
அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள்.
9 என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது.
என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.
10 ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர்.
நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர்.
11 பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது.
நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன்.
12 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்!
உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!
13 நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர்.
நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
14 உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள்.
அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள்.
15 ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்.
தேவனே, பூமியின் எல்லா அரசர்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள்.
16 கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார்.
ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள்.
17 தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார்.
தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார்.
18 வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது.
எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.
19 மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார்.
பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார்.
20 சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார்.
மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார்.
21 அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள்.
அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.
22 தேசங்கள் ஒருமித்துச் சேரும்.
அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.
23 என் ஆற்றல் என்னை விட்டகன்றது.
என் ஆயுள் குறைந்தது.
24 எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும்.
தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.
25 பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர்.
உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்!
26 உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர்.
அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும்.
ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர்.
அவையெல்லாம் மாறிப்போகும்.
27 ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை.
நீர் என்றென்றும் வாழ்வீர்!
28 நாங்கள் இன்று உமது பணியாட்கள்.
நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள்.
அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன்.
கர்த்தருடைய விசேஷ ஊழியன்
42 “என் தாசனைப் பாருங்கள்!
அவரை நான் ஆதரிக்கிறேன்.
நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே.
நான் அவரை மிகவும் விரும்புகிறேன்.
அவரில் எனது ஆவியை வைக்கிறேன்.
அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதி வழங்குவார்.
2 அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார்.
அவர் கூக்குரலிடவும்மாட்டார்.
3 அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார்.
அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார்.
அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார்.
4 உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை.
ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்”.
கர்த்தரே ஆளுகிறார் உலகத்தை உருவாக்கினார்
5 உண்மையான தேவனாகிய கர்த்தர் இவற்றைச் சொன்னார். (கர்த்தர் வானங்களை உருவாக்கினார். கர்த்தர் பூமியின்மேல் வானத்தை விரித்தார். அவர் பூமியின்மேல் எல்லாவற்றையும் செய்தார். கர்த்தர் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் சுவாசத்தைக் கொடுக்கிறார். கர்த்தர் பூமியில் நடமாடுகிற ஒவ்வொரு மனிதருக்கும் ஆவியைக் கொடுக்கிறார்).
6 “கர்த்தராகிய நான், சரியானதைச் செய்ய உன்னை அழைத்தேன்.
நான் உன் கையைப் பற்றிக்கொள்வேன். நான் உன்னைப் பாதுகாப்பேன்.
நான் ஜனங்களோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை பிறருக்குக் காட்டுவதற்கு வெளிப்புற அடையாளமாக நீ இருப்பாய்.
அனைத்து ஜனங்களுக்கும் ஒளி வீசும் விளக்காக நீ இருப்பாய்.
7 குருடர்களின் கண்களை நீ திறப்பாய், அவர்களால் பார்வையைப் பெறமுடியும்.
சிறையில் இருக்கிறவர்களை நீ விடுவிப்பாய்.
பலர் இருளில் இருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருவாய்.
8 “நானே கர்த்தர்! எனது நாமம் யேகோவா!
நான் எனது மகிமையை வேறு ஒருவனுக்கும் கொடேன்.
நான் எனக்குரிய பாராட்டை சிலைகளுக்கு (பொய்த் தெய்வங்களுக்கு) கொடேன்.
9 தொடக்கத்தில் சில காரியம் நடைபெறும் என்று சொன்னேன். அவை நடந்தன.
இப்போது, இது நடக்கும் முன்னால்!
நான் சிலவற்றைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.”
இவை எதிர்காலத்தில் நடைபெறும்.
தேவனைத் துதிக்கும் ஒரு பாடல்
10 ஒரு புதிய பாடலை கர்த்தருக்குப் பாடுங்கள்.
தொலைதூர நாடுகளில் உள்ள ஜனங்களே, கடலில் பயணம் செய்கிற ஜனங்களே, கடலில் உள்ள மிருகங்களே, தொலைதூர இடங்களில் உள்ள ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
11 வனாந்திரங்களே, நகரங்களே, கேதாரியரின் வயல்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
சீலோவில் வாழுகின்ற ஜனங்களே!
மகிழ்ச்சியோடு பாடுங்கள்.
உங்கள் மலை உச்சியில் இருந்து பாடுங்கள்.
12 கர்த்தருக்கு மகிமையைக் கொடுங்கள்.
தொலை தூர நாடுகளில் உள்ள ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
13 கர்த்தர் ஒரு பலம் பொருந்திய வீரனைப்போல வெளியே போவார்.
அவர் போர் செய்யத் தயாராக உள்ள வீரனைப்போன்றிருப்பார்.
அவர் மிகுந்த கிளர்ச்சியுள்ளவராக இருப்பார்.
அவர் உரத்த குரலில் சத்தமிடுவார். அவரது பகைவரைத் தோற்கடிப்பார்.
தேவன் மிகவும் பொறுமையானவர்
14 “நீண்ட காலமாக நான் எதையும் சொல்லவில்லை.
என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். நான் எதுவும் சொல்லவில்லை.
ஆனால், இப்போது நான் அலறுகிறேன், ஒரு பெண் பிள்ளை பெறும்போது கதறுவதுபோல,
நான் கடினமாகவும் உரக்கவும் மூச்சுவிடுகிறேன்.
15 நான் மலைகளையும் குன்றுகளையும் அழிப்பேன்.
நான் அங்கே வளருகின்ற தாவரங்களை வாடச் செய்வேன்.
நான் ஆறுகளை வறண்ட நிலமாக்குவேன்.
நான் தண்ணீருள்ள குளங்களையும் வறளச் செய்வேன்.
16 பிறகு, நான் குருடர்களை அவர்கள் அதுவரை அறியாத வழிகளில் நடத்திச் செல்வேன்.
நான் குருடர்களை அவர்கள் அதுவரை சென்றிராத இடங்களுக்கு அழைத்துச் செல்வேன்.
நான் அவர்களுக்காக இருளை வெளிச்சமாக்குவேன்.
நான் கரடு முரடான பாதையை மென்மையாக்குவேன்.
நான் வாக்களித்ததைச் செய்வேன்!
நான் எனது ஜனங்களை விட்டுவிடமாட்டேன்.
17 ஆனால், சிலர் என்னைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள்.
அவர்களிடம் பொன்னால் மூடப்பட்ட சிலைகள், இருக்கின்றன.
‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று அவர்கள் அந்தச் சிலைகளிடம் கூறுகின்றனர்.
அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை நம்புகின்றனர்.
ஆனால் அந்த ஜனங்கள் ஏமாற்றப்படுவார்கள்.
தேவனுக்குச் செவிசாய்க்க இஸ்ரவேலர்கள் மறுத்தார்கள்
18 செவிடர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்!
குருடர்களே என்னைப் பாருங்கள், உங்களால் காணமுடியும்!
19 உலகத்தில் என் தாசனே மிகவும் குருடன்.
இந்த உலகத்திற்கு நான் அனுப்பிய தூதுவனே செவிடன்.
நான் உடன்படிக்கை செய்துக்கொண்ட ‘கர்த்தருடைய தாசனே’ மிகவும் குருடனாயிருக்கின்றான்.
20 எனது தாசன் அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்கின்றான்.
ஆனால் அவன் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
அவன் தனது காதுகளால் கேட்க முடியும்.
ஆனால் அவன் நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறான்”.
21 கர்த்தர் தமது தாசன் நல்லவனாக இருக்க விரும்புகிறார்.
கர்த்தர் தமது அற்புதமான போதனைகளை மகிமைப்படுத்த விரும்புகிறார்.
22 ஆனால் ஜனங்களைப் பாருங்கள்.
மற்ற ஜனங்கள் அவர்களைத் தோற்கடித்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பொருட்களைத் திருடியிருக்கிறார்கள்.
இளைஞர்களெல்லாம் பயப்படுகிறார்கள்.
அவர்கள் சிறைகளுக்குள் அடைப்பட்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் அவர்களிடமிருந்து பணத்தை எடுத்திருக்கிறார்கள்.
அவர்களைக் காப்பாற்ற அங்கே எவருமில்லை.
மற்ற ஜனங்கள் அவர்களின் பணத்தை எடுத்தார்கள்.
“அதனைத் திருப்பிக் கொடு” என்று சொல்ல அங்கே எவருமில்லை.
23 தேவனுடைய வார்த்தைகளை உங்களில் எவரும் கவனித்தீர்களா? இல்லை! ஆனால், நீங்கள் அவரது வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். என்ன நடந்தது என்று சிந்திக்க வேண்டும். 24 யாக்கோபு மற்றும் இஸ்ரவேலிடமிருந்து செல்வத்தை எடுத்துக்கொள்ள ஜனங்களை அனுமதித்தது யார்? கர்த்தர் அவர்களை அனுமதித்தார். நாம் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தோம். எனவே கர்த்தர் நமது செல்வங்களை எடுத்துக்கொள்ளும்படி அனுமதித்துள்ளார். கர்த்தர் விரும்பிய வழியில் இஸ்ரவேல் ஜனங்கள் வாழவில்லை. அவரது போதனைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கவனிக்கவில்லை. 25 எனவே, கர்த்தர் அவர்கள்மீது கோபங்கொண்டார். கர்த்தர் அவர்களுக்கு எதிராக வலிமைமிக்கப்போர்களை உண்டாக்கினார். இஸ்ரவேல் ஜனங்களைச் சுற்றி நெருப்பு சூழ்ந்ததுபோல் இருந்தது. ஆனால் அவர்கள் நிகழ்வதை அறியாமல் இருந்தார்கள். அவர்கள் எரிந்துகொண்டிருப்பதுபோல் இருந்தனர். ஆனால் அவர்கள் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை.
ஒரு பெண்ணும், இராட்சச பாம்பும்
12 அத்துடன் பரலோகத்தில் ஓர் அதிசயம் காணப்பட்டது: ஒரு பெண் சூரியனை அணிந்திருந்தாள். அவளது பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது. அவளது தலையின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்கள் உள்ள கிரீடம் இருந்தது. 2 அவள் கருவுற்றிருந்தாள். அவள் வலியால் கதறினாள். ஏனெனில் அவள் குழந்தை பெறுகிற நிலையில் இருந்தாள். 3 பிறகு இன்னொரு அதிசயமும் பரலோகத்தில் காணப்பட்டது. மிகப் பெரிய சிவப்பு வண்ணமுடைய இராட்சசப் பாம்பு தோன்றியது. அதற்கு ஏழு தலைகளிருந்தன. ஏழு தலைகளிலும் ஏழு கிரீடங்கள் இருந்தன. அத்துடன் பத்துக் கொம்புகளும் அதற்கு இருந்தன. 4 அதன் வால் உயர்ந்து வானில் உள்ள நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து அவற்றைத் தரையில் வீசி எறிந்தன. பிள்ளை பெறுகிற நிலையில் இருந்த அப்பெண்ணின் முன்பு அந்தப் பாம்பு எழுந்து நின்றது. அவளுக்குக் குழந்தை பிறந்ததும் அதைத் தின்ன அப்பாம்பு தயாராக இருந்தது. 5 அப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவன் எல்லா தேசங்களையும் இரும்புக் கோலால் ஆட்சி செய்வான். பிறகு அக்குழந்தை தேவனுடைய முன்னிலையிலும் சிம்மாசனத்தின் முன்னிலையிலும் எடுத்துச்செல்லப்பட்டது. 6 அப்பெண் தேவனால் தயார் செய்யப்பட்ட இடமான பாலைவனத்திற்குள் ஓடினாள். அங்கே 1,260 நாட்கள் கவனித்துக்கொள்ளப்படுவாள்.
7 பின்பு பரலோகத்தில் ஒரு போர் உருவாயிற்று. அந்த இராட்சசப் பாம்புடன் மிகாவேலும் [a] அவனைச் சார்ந்த தேவ தூதர்களும் போரிட்டார்கள். பாம்பும், அதன் தூதர்களும் திரும்பித் தாக்கினார்கள். 8 பாம்பு போதுமான வல்லமை உடையதாய் இல்லை. இராட்சசப் பாம்பும், அதன் தூதர்களும் பரலோகத்தில் தம் இடத்தை இழந்தார்கள். 9 அப்பாம்பு பரலோகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டது. (பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகின்ற பழைய பாம்பு தான் இந்த இராட்சசப் பாம்பு ஆகும். அவன் உலகம் முழுவதையும் தவறான வழிக்குள் நடத்துகிறான்) பாம்பும் அதன் தூதர்களும் பூமியில் வீசி எறியப்பட்டார்கள்.
10 அப்போது நான் பரலோகத்தில் ஓர் உரத்த குரலைக் கேட்டேன். அது, “வெற்றியும் வல்லமையும் நம் தேவனுடைய இராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் இப்போது வந்திருக்கின்றன. ஏனெனில் நமது சகோதரர்கள்மேல் குற்றம் சுமத்தியவன் புறந்தள்ளப்பட்டான். நம் தேவனுக்கு முன்பாக இரவும் பகலும் நம் சகோதரர்கள் மேல் குற்றம் சுமத்தியவன் அவனே ஆவான். 11 நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை. 12 எனவே, பரலோகங்களே! அவற்றில் வாழ்பவர்களே! மகிழ்ச்சி அடையுங்கள். ஆனால் பூமிக்கும் கடலுக்கும் ஆபத்தாகும். ஏனெனில் சாத்தான் உங்களிடம் வந்துவிட்டான். அவன் கோபத்தோடு இருக்கின்றான். அவனது காலம் அதிகம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும்” என்றது.
13 இராட்சசப் பாம்பானது தான் பூமியில் வீசி எறியப்பட்டதை அறிந்துகொண்டது. ஆகையால் அது ஆண்பிள்ளையைப் பெற்ற அந்தப் பெண்ணைத் துரத்தியது. 14 ஆனால் அப்பெண்ணுக்குப் பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டன. அவற்றால் அவள் பாலைவனத்தில் தனக்காக தயார் செய்யப்பட்ட இடத்துக்குப் பறந்து செல்ல முடிந்தது. பாம்பிடமிருந்து அவள் அங்கே மூன்றரை வருட காலத்திற்கு கவனித்துக்கொள்ளப்பட்டாள். 15 பிறகு அப்பாம்பு தன் வாயில் இருந்து நதியைப் போன்று நீரை வெளியிட்டது. வெள்ளம் அப்பெண்ணை இழுத்துப்போக ஏதுவாக அந்நீர் அவளை நோக்கிச் சென்றது. 16 ஆனால் பூமி அப்பெண்ணுக்கு உதவியது. பூமி தன் வாயைத் திறந்து இராட்சசப் பாம்பின் வாயில் இருந்து வெளிவரும் வெள்ளத்தை விழுங்கியது.
17 பின்னும் அப்பாம்புக்கு அப்பெண்ணின்மீது மிகுந்த கோபம் இருந்தது. அவளது மற்ற பிள்ளைகளோடு போரிட அப்பாம்பு புறப்பட்டுப் போயிற்று. தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்களும், இயேசு போதித்த உண்மையைக் கொண்டிருப்பவர்களுமே அவளுடைய மற்ற பிள்ளைகள் ஆவார்கள்.
18 அந்த இராட்சசப் பாம்பு கடற்கரையில் நின்றது.
2008 by World Bible Translation Center