M’Cheyne Bible Reading Plan
எலியாவை அழைத்துக்கொள்ள கர்த்தருடைய திட்டம்
2 சுழல் காற்றின் மூலம் எலியாவைக் கர்த்தர் பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபொழுது, எலியா எலிசாவுடன் கில்காலுக்கு போய்க்கொண்டிருந்தார்கள்.
2 எலியா எலிசாவிடம், “நீ இங்கே இரு. கர்த்தர் என்னைப் பெத்தேலுக்குப் போகச்சொன்னார்” என்றான்.
ஆனால் எலிசாவோ, “நான் உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் உங்கள் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்றான். எனவே இருவரும் பெத்தேலுக்குச் சென்றார்கள்.
3 சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம் வந்து, “இன்று உங்கள் எஜமானனான எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்போகும் செய்தி தெரியுமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவன், “ஆமாம், எனக்குத் தெரியும். அது பற்றி பேசவேண்டாம்” என்று பதிலளித்தான்.
4 அங்கே எலியா எலிசாவிடம், “நீ இங்கேயே இரு. கர்த்தர் என்னிடம் எரிகோவிற்குப் போகச் சொன்னார்” என்றான்.
ஆனால் எலிசாவோ, “நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டு கூறுகிறேன்” என்றான். எனவே அவர்கள் இருவருமாக எரிகோவிற்குச் சென்றனர். 5 எரிகோவில் சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம், “இன்று உனது எஜமான் எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறாராமே?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவன், “ஆமாம், அது தெரியும். அதைப் பற்றி பேசவேண்டாம்” என்றான்.
6 எலியா எலிசாவிடம், “நீ தயவுசெய்து இங்கேயே இரு. யோர்தான் ஆற்றுக்குப் போகுமாறு என்னிடம் கர்த்தர் சொன்னார்” என்றான்.
அதற்கு அவன், “நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்றான். எனவே இருவரும் சென்றனர்.
7 அங்கே 50 பேர்கள் அடங்கிய தீர்க்கதரிசி குழு அவர்களைப் பின்தொடர்ந்து வந்தது. எலியாவும் எலிசாவும் யோர்தான் ஆற்றின் அருகில் நின்றார்கள். அவர்கள் நின்ற இடத்தை நோக்கியபடி மற்ற 50 பேர்களும் அவர்களிடம் இருந்து விலகி தூரத்தில் நின்றார்கள். 8 எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கி தண்ணீரில் அடிக்க தண்ணீர் இரண்டு பாகமாகி விலகிப்போயிற்று. அவர்கள் உலர்ந்த தரையில் நடந்து அக்கரைக்குக் கடந்து போனார்கள்.
9 பின்னர் எலியா எலிசாவிடம், “என்னை உன்னிடத்திலிருந்து தேவன் எடுத்துக்கொள்வதற்கு முன் உனது விருப்பம் என்ன?” என்று கேட்டான்.
அதற்கு எலிசா, “உங்களிடம் உள்ள ஆவி எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்கவேண்டும்” என்றான்.
10 எலியா, “கஷ்டமானதையே கேட்டிருக்கிறாய். நான் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் பொழுது நீ என்னைப் பார்ப்பாயானால், இது நடக்கும். ஆனால் நான் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தில் என்னை உன்னால் பார்க்க முடியாமல் போகுமேயானால் இது நடக்காது” என்றான்.
தேவன் எலியாவை பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டது
11 எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டே நடந்துச் சென்றார்கள். திடீரென்று இரதமும் குதிரைகளும் வந்து இருவரையும் பிரித்தன. அவை நெருப்பாகத் தோன்றின! எலியா சுழற்காற்றால் வானுலகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்.
12 எலிசா இதனைப் பார்த்து, “என் தந்தையே! என் தந்தையே! இஸ்ரவேலின் இரதமும் குதிரை வீரருமானவரே!” என்று சத்தமிட்டான்.
இதற்குப் பிறகு எலியாவை எலிசா பார்க்கவில்லை. அவன் தனது ஆடையைக் கிழித்து தன் சோகத்தை வெளிப்படுத்தினான். 13 எலியாவின் மேலாடை தரையிலே விழுந்து கிடந்தது. அதனை எலிசா எடுத்துக்கொண்டு யோர்தான் கரைக்குப் போனான். மேலாடையை தண்ணீரில் அடித்து, “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்று கேட்டான்.
14 மேலாடையால் தண்ணீரை அடித்த உடனே தண்ணீர் வலதுபுறமாகவும் இடது புறமாகவும் பிரிந்துபோயிற்று! எலிசா ஆற்றைக் கடந்து போனான்.
தீர்க்கதரிசிகள் எலியாவைப்பற்றி கேட்டது
15 இவர்களைக் கவனித்துக்கொண்டிருந்த எரிகோவின் தீர்க்கதரிசிகள் எலிசாவைப் பார்த்து, “எலியாவின் ஆவி இப்பொழுது எலிசாவின் மேல் உள்ளது!” என்றார்கள். அவர்கள் எலிசாவை சந்திக்க வந்தார்கள். அவர்கள் அவனுக்கு முன்பாகத் தரையில் குனிந்து வணங்கினார்கள். 16 அவர்கள் எலிசாவிடம், “பாருங்கள், எங்களிடம் தகுதியான 50 பேர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து நாங்கள் சென்று உங்கள் எஜமானைத் தேட எங்களை அனுமதியுங்கள். ஒரு வேளை தேவனுடைய ஆவி அவரைத் தூக்கிச்சென்று எங்காவது மலையிலோ, அல்லது பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கலாம்!” என்றார்கள்.
அதற்கு எலிசா, “இல்லை, எலியாவைத் தேட ஆட்களை அனுப்பாதீர்கள்!” என்றான்.
17 எலிசா குழப்பமடையும்வரை தீர்க்கதரிசி குழு அவனைக் கெஞ்சியது. பின் எலிசா, “நல்லது, எலியாவைத் தேட ஆட்களை அனுப்புங்கள்” என்றான்.
எலியாவைத் தேட தீர்க்கதரிசி குழு 50 ஆட்களை அனுப்பியது. மூன்று நாட்கள் தேடியும், அவர்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 18 எனவே அந்த ஆட்கள் எலிசா தங்கியிருந்த எரிகோவிற்குச் சென்றார்கள். அவர்கள் எலிசாவிடம் தங்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடிய வில்லை என்றார்கள். எலிசா அவர்களிடம், “நான் உங்களிடம் போகவேண்டாம் என்று கூறினேன்” என்றான்.
எலிசா தண்ணீரை சுத்தமாக்கியது
19 நகர ஜனங்கள் எலிசாவிடம் வந்து, “ஐயா, இந்த நகரம் நல்ல இடத்தில் அமைந்துள்ளதை நீங்கள் பார்க்கமுடியும். ஆனால் தண்ணீரோ மிகவும் மோசம். அதனால் இங்கு நல்ல விளைச்சல் இல்லை” என்றனர்.
20 எலிசாவோ, “ஒரு புதிய தோண்டியில் உப்பைப் போட்டுக்கொண்டு வாருங்கள்” என்றான்.
அவர்கள் அப்பாத்திரத்தை எலிசாவிடம் கொண்டு வந்தனர். 21 அவன் தண்ணீர் பாய்கிற இடத்திற்கு போனான். அதில் உப்பைப் போட்டான். “அவன், ‘நான் இந்த தண்ணீரை சுத்தமாக்குகிறேன்! இப்பொழுதிலிருந்து இந்த தண்ணீர் எவ்வித மரணத்துக்கும் காரணமாக இருக்காது. விளை நிலங்களில் தொடர்ந்து நல்ல விளைச்சலைத் தரும்’ என்று கர்த்தர் சொல்கிறார்” என்றான்.
22 எலிசா சொன்னதுபோல் தண்ணீர் பரிசுத்தமானது. இன்றளவும் அத்தண்ணீர் சுத்தமாக இருக்கிறது. அனைத்துமே எலிசா சொன்னதுபோல் நடந்தது.
சில சிறுவர்கள் எலிசாவைக் கேலிச் செய்கிறார்கள்
23 எலிசா அங்கிருந்து பெத்தேல்வரை சென்றான். அவன் மலைமீது ஏறிக்கொண்டிருந்தபொழுது, சில சிறுவர்கள் நகரத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். அவர்கள் அவனை கேலிச்செய்தார்கள். அவர்கள், “வழுக்கைத் தலையனே மேலே போ! வழுக்கைத் தலையனே மேலே போ” என்றனர்.
24 எலிசா திரும்பி அவர்களைப் பார்த்தான். அவர்களுக்குத் தீமை ஏற்படுமாறு கர்த்தரை வேண்டினான். உடனே இரண்டு கரடிகள் காட்டிலிருந்து வந்து அவர்களைத் தாக்கி 42 சிறுவர்களைக் கொன்றுபோட்டன.
25 எலிசா பெத்தேலிலிருந்து கர்மேல் மலைக்குச் சென்றான். பின்னர் அங்கிருந்து சமாரியாவிற்குத் திரும்பிச்சென்றான்.
தீயசெயல்கள் நிகழும்
2 சகோதர, சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவது பற்றிச் சில காரியங்கள் சொல்ல வேண்டியது உள்ளன. நாம் எப்போது அவரோடு ஒன்று சேருவோம் என்பது பற்றிப் பேச நாங்கள் விரும்புகிறோம். 2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். சிலர் இதனைத் தீர்க்கதரிசனமாகவோ, செய்தியாகவோ சொல்லலாம், அல்லது ஒருவன் எங்களிடத்தில் இருந்து கூட ஒரு கடிதம் வந்ததாகக் கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கலாம். 3 எவரும் உங்களை எவ்விதத்திலும் முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் விசுவாச மறுதலிப்பும், அழிவின் மகனாகிய பாவமனிதனும் தோன்றும் வரை அந்த நாள் வராது. பாவமனிதன் நரகத்துக்கு உரியவன். 4 அவன் தேவனுக்கும் மனிதர்களின் வழிபாடுகளுக்கும் எதிரானவன். அவன் தேவனுடைய ஆலயத்திற்கும் சென்று அங்கே உட்காருவான். பிறகு, தன்னை தேவனைவிட உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்வான்.
5 இக்காரியங்கள் நிகழும் என்பது பற்றி முன்னரே நான் உங்களிடம் கூறினேன், ஞாபகம் இருக்கிறதா? 6 அவனை இப்போது தடுத்து நிறுத்தி இருப்பது யாரென்று உங்களுக்குத் தெரியும். அவன் இப்போது தடுக்கப்பட்டிருப்பது சரியான நேரத்தில் வெளிப்படும் பொருட்டுத்தான். 7 பாவத்தின் இரகசிய சக்தி ஏற்கெனவே உலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை உடையவர் ஒருவரே! அவன் முழுமையாகத் தன் வழியில் இருந்து விலக்கப்படும்வரை அவனைத் தடுத்து நிறுத்துவார் அவர். 8 பிறகு அந்தப் பாவ மனிதன் வெளிப்படுவான். கர்த்தராகிய இயேசு தன் வாயில் இருந்து வரும் சுவாசத்தினால் அவனைக் கொல்வார். அவர் தன் பெருமைமிகு வருகையின் மூலமே அந்தப் பாவமனிதனை அழிப்பார்.
9 சாத்தானின் சக்தியாலேயே பாவமனிதன் வருவான். அவனுக்குப் பெரும் சக்தி இருக்கும். அதனால் போலி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வான். 10 பாவ மனிதன் எல்லாவிதமான பாவங்களையும் செய்து ஆன்மீக அளவில் தான் வஞ்சிக்கும் மக்களை ஏமாற்ற பல தந்திரங்கள் செய்வான். உண்மையை நேசிக்க மறுத்ததால் அம்மக்கள் ஆன்மீக அளவில் தொலைந்துபோனவர்கள் ஆகிறார்கள். (உண்மையை நேசித்திருந்தால் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்.) 11 ஆனால் அவர்கள் உண்மையை நேசிக்க மறுத்தார்கள். எனவே, அவர்கள் பொய்யை நம்பத்தக்கதாகப் போலி நம்பிக்கை என்னும் ஆற்றலை அவர்களுக்குள் தேவன் அனுப்புகிறார். 12 எனவே, உண்மையை நம்பாத மக்கள் எல்லாரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் உண்மையை நம்பவில்லை. பாவச் செயல்கள் செய்வதிலே மகிழ்ந்தார்கள்.
மீட்கப்படுவதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்
13 சகோதர, சகோதரிகளே! கர்த்தர் உங்களிடம் அன்புடன் இருக்கிறார். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே தேவன் ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார். ஆகவே, உங்களுக்காக எப்பொழுதும் நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற பரிசுத்த ஆவியானவராலும், உண்மையின் மீது நீங்கள் வைக்கும் விசுவாசத்தாலும் இரட்சிக்கப்படுகிறீர்கள். 14 அந்த இரட்சிப்பை அடைய உங்களை தேவன் அழைத்தார். நாங்கள் பரப்புகிற நற்செய்தியைப் பயன்படுத்தி நீங்கள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டு தேவன் உங்களை அழைத்தார். 15 சகோதர சகோதரிகளே! ஆகையால் உறுதியாய் நில்லுங்கள். எங்கள் போதனைகளில் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். அவற்றை நாங்கள் பிரசங்கங்கள் மூலமும், நிருபங்களின் மூலமும் உங்களுக்குப் போதித்திருக்கிறோம்.
16-17 நம்மை நேசித்தும், நமக்கு நல்ல விசுவாசத்தைக் கொடுத்தும், எக்காலத்திலும் தொடர்கிற ஆறுதலை வழங்கியும் வருகிற இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தரும், நம் பிதாவாகிய தேவனும் தொடர்ந்து உங்களை ஆறுதல்படுத்தவும், நீங்கள் சொல்கிற, மற்றும் செய்கிற ஒவ்வொரு நற்செயலிலும் உங்களை வலிமையுறச் செய்யவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.
தானியேலும் சிங்கங்களும்
6 தரியு தனது இராஜ்யம் முழுவதையும் ஆளுவதற்கு 120 தேசாதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல திட்டமென்று எண்ணினான். 2 அவன் அந்த 120 தேசாதிபதிகளையும் கட்டுப்படுத்த மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தான். இந்த மூன்று மேற்பார்வையாளர்களில் தானியேலும் ஒருவன். அரசன் இவ்வாறு ஓர் ஏற்பாடு செய்துவிட்டதால் எவரும் அவனை ஏமாற்ற முடியாது. அதோடு அவன் தனது இராஜ்யத்தில் எதையும் இழக்கமாட்டான். 3 தானியேல் தன்னை மற்ற மேற்பார்வையாளர்களைவிடச் சிறந்தவனாகக் காட்டினான். தானியேல் இதனைத் தனது நற்குணங்கள் மூலமும், நல்ல திறமைகள் மூலமும் செய்தான். அரசன் தானியேலின்மேல் மிகவும் வியப்படைந்தான். அவன் தானியேலை இராஜ்யம் முழுவதற்கும் ஆளுநாரக்கிவிடலாம் என்று திட்டமிட்டான். 4 ஆனால் மற்ற மேற்பார்வையளர்களும், மற்ற தேசாதிபதிகளும் இதனை அறிந்ததும் மிகவும் பொறாமைகொண்டனர். அவர்கள் தானியேலை குற்றஞ்சாட்ட காரணங்களைத் தேடினர். எனவே அவர்கள் தானியேல் அரசு பணிகளைச் செய்யும்போது மிகக் கவனமாகக் கவனித்தனர். ஆனால் அவர்களால் தானியேலிடம் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தானியேல் நேர்மையாளனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தான். அவன் அரசனை ஏமாற்றாமல் மிகக் கடுமையாக வேலை செய்து வந்தான்.
5 இறுதியாக அந்த ஆட்கள், “நாம் தானியேலை குற்றம் கண்டுபிடிக்கும்படி தவறான எதையும் அவன் செய்யமாட்டான். எனவே நாம் அவனது தேவனுடைய சட்ட விஷயத்தில் குற்றம் காண வேண்டும்” என்று பேசிக்கொண்டனர்.
6 எனவே, அந்த மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும் ஒரு குழுவாக அரசனிடம் சென்றனர். அவர்கள் அரசரை நோக்கி, “தரியு அரசரே, என்றென்றும் வாழ்வீராக. 7 மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டார்கள். அதாவது நாங்கள் அரசர் ஒரு சட்டத்தைச் இயற்றவேண்டும் என்று எண்ணுகிறோம். எல்லோரும் அதற்கு அடி பணியவேண்டும். இதுதான் அந்தச் சட்டம், எவராவது இன்னும் 30 நாட்களுக்கு அரசராகிய உம்மைத் தவிர வேறெந்த தேவனையோ, மனிதரையோ நோக்கி எந்த ஒரு காரியத்திற்கும் ஜெபம் செய்தால் அவன் சிங்கக்கூண்டிலே போடப்படுவான். 8 இப்பொழுது இதனைச் சட்டமாக்கி இந்தத் தாளிலே கையெழுத்துப் போடும். இவ்வாறு இந்தச் சட்டம் மாற்ற முடியாதபடி இருக்கும். ஏனென்றால் மேதியர்கள் மற்றும் பெர்சியர்களின் சட்டங்கள் விலக்கவோ மாற்றவோ முடியாதவை” என்றனர். 9 அவர்கள் சொன்னபடி அரசரான தரியு இச்சட்டத்தை இயற்றி கையெழுத்துப் போட்டான்.
10 தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வான். தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை முழங்காலில் நின்று தேவனிடம் ஜெபித்து அவரைப் போற்றுவான். தானியேல் இப்புதிய சட்டத்தைக் கேள்விப்பட்டதும் தனது வீட்டிற்குப் போய் தனது அறையில் உள்ள மாடியின்மீது ஏறினான். தானியேல் எருசலேமை நோக்கியிருக்கிற ஜன்னல் அருகில் போய் முழங்காலிட்டு எப்பொழுதும் செய்வதுபோன்று ஜெபித்தான்.
11 அந்த ஆட்கள் குழுவாகச் சென்று தானியேலைக் கண்டுபிடித்தனர். அவர்கள் தானியேல் தேவனிடம் உதவிகேட்டு ஜெபிப்பதைக் கண்டனர். 12 எனவே அந்த ஆட்கள் அரசனிடம் சென்றனர். அவர்கள் அவனிடம் அவன் இயற்றிய சட்டத்தைப்பற்றி பேசினர். அவர்கள், “தரியு அரசே, எந்த மனிதனும் 30 நாள்வரையிலும் அரசராகிய உம்மைத் தவிர வேறு எந்தத் தேவனையும், ஆளையும் நோக்கி யாதொரு காரியத்தைக் குறித்தும் ஜெபம் செய்தால் அவனைச் சிங்கக்கூண்டிலே போடவேண்டும் என்று நீர் கட்டளைப் பத்திரத்திலே கையெழுத்திட்டீர் அல்லவா?” என்றனர்.
அதற்கு அரசன், “ஆமாம். நான் அந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டேன். அதோடு மேதியர்கள் மற்றும் பெர்சியர்களுக்கு இருக்கும் மாறாத சட்டத்தின்படி அது ரத்து செய்யப்படவோ அல்லது மாற்றப்படவோ கூடாது” என்றான்.
13 அந்த ஆட்கள் அரசனிடம், “தானியேல் என்ற பெயருடைய அந்த மனிதன் உமக்கு மரியாதை செலுத்துவதில்லை. தானியேல் யூதாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கைதிகளில் ஒருவன். தானியேல் நீர் கையெழுத்திட்ட சட்டத்தைப்பற்றி கவலைப்படவில்லை. தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்று முறை தன் தேவனிடத்தில் ஜெபம் பண்ணி உதவிக்காக மன்றாடுகிறான்” என்றனர்.
14 அரசன் இதனைக் கேள்விப்பட்டதும் மிக வருத்தப்பட்டு கலக்கமடைந்தான். அரசன் தானியேலைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தான். அவன் மாலைவரை இதற்கான ஒரு திட்டத்தைப்பற்றியே எண்ணினான். 15 பிறகு அந்த ஆட்கள் ஒரு குழுவாக அரசனிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், “அரசே, நினைத்துப்பாரும். மேதியர் மற்றும் பெர்சியரின் சட்டமானது, அரசனால் கையெழுத்திடப்பட்ட கட்டளையோ அல்லது சட்டமோ விலக்கப்படவோ மாற்றப்படவோ முடியாது என்று கூறுகிறது” என்றார்கள்.
16 எனவே, தரியு அரசன் கட்டளையிட்டான். அவர்கள் தானியேலை அழைத்து வந்து சிங்கங்களின் கூண்டில் போட்டனர். அரசன் தானியேலிடம், “நீ தொழுதுகொள்ளும் தேவன் உன்னைக் காப்பாற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று சொன்னான். 17 ஒரு பெரிய பாறங்கல்லைக் கொண்டு வந்து சிங்கக்குகையின் வாசலை மூடினார்கள். பிறகு அரசன் தனது மோதிரத்தைப் பயன்படுத்தி பாறையின்மேல் முத்திரையிட்டான். பிறகு அவன் தன் அதிகாரிகளின் மோதிரங்களாலும் பாறையின்மேல் முத்திரையிட்டான். இது, எவராலும் பாறாங்கல்லைத் திறந்து தானியேலை கூண்டிலிருந்து வெளியே கொண்டுவர முடியாது என்று காட்டியது. 18 பிறகு அரசனான தரியு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். அரசன் அன்றிரவு உணவு உண்ணவில்லை, அவன் யாரும் வந்து வேடிக்கை செய்து மகிழ்வூட்டுவதை விரும்பவில்லை. அரசனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.
19 மறுநாள் காலையில் கிழக்கு வெளுக்கும்போது அரசனான தரியு எழுந்து சிங்கங்களின் குகைக்கு ஓடினான். 20 அரசன் மிகத்துயரமாக இருந்தான். அவன் சிங்கங்களின் குகைக்கருகில் போய், தானியேலைக் கூப்பிட்டான். அரசன், “தானியேலே ஜீவனுள்ள தேவனுடைய ஊழியனே, நீ எப்பொழுதும் உன் தேவனுக்குச் சேவைசெய்கிறாயே, உனது தேவனால் உன்னைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?” என்றான்.
21 தானியேல் அதற்குப் பதிலாக, “அரசே, நீர் என்றென்றும் வாழ்க. 22 தேவன் என்னைக் காக்கத் தூதனை அனுப்பினார். தூதன் சிங்கங்களின் வாயை அடைத்தான். சிங்கங்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஏனென்றால், நான் குற்றமறியாதவன் என்று தேவன் அறிவார். அரசே நான் உமக்கு எதிராக எந்தக் கேடும் செய்யவில்லை” என்றான்.
23 அரசனான தரியு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன் தனது வேலைக்காரர்களிடம் சிங்ககுகையிலிருந்து தானியேலை வெளியேற்றும்படிச் சொன்னான். தானியேலைச் சிங்கக்குகையிலிருந்து வெளியே அழைத்தபோது அவர்கள் அவன் உடலில் எவ்வித காயத்தையும் காணவில்லை. தானியேல் சிங்கங்களால் காயப்படுத்தப்படவில்லை, ஏனென்றால் அவன் தேவனிடம் விசுவாசம் வைத்தான்.
24 பிறகு அரசன், தானியேல்மீது குற்றம் சாட்டி அவனைச் சிங்கக்குகைக்குள் அனுப்பியவர்களைக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டான். அம்மனிதர்களும் அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் சிங்கக்குகைக்குள் தள்ளப்பட்டனர். அவர்கள் குகையின் தரைக்குள் விழுவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள் மேல் பாய்ந்து, அவர்களது உடல்களைக் கிழித்து எலும்புகளை மென்று உண்டன.
25 பிறகு அரசனான தரியு பின்வரும் கடிதத்தை உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழி பேசுகிற அனைத்து ஜனங்களுக்கும் எழுதினான்:
26 வாழ்த்துக்கள்:
நான் ஒரு புதிய சட்டத்தை இயற்றியிருக்கிறேன். இச்சட்டம் என் இராஜ்யத்தில் உள்ள எல்லாப் பகுதி ஜனங்களுக்கும் உரியது. நீங்கள் எல்லோரும் தானியேலின் தேவனுக்கு அஞ்சி மரியாதை செய்ய வேண்டும்.
தானியேலின் தேவன் ஜீவனுள்ள தேவன்,
தேவன் என்றென்றும் இருக்கிறார்.
அவரது இராஜ்யம் என்றென்றும் அழியாதது.
அவரது ஆட்சி முடிவில்லாதது.
27 தேவன் ஜனங்களுக்கு உதவிசெய்து காப்பாற்றுகிறார்.
தேவன் பரலோகத்திலும் பூமியிலும் அற்புதங்களைச் செய்கிறார்.
ஆண்டவர் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்.
28 எனவே தானியேல், தரியு அரசனாக இருந்த காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ஆட்சியிலும் வெற்றிகரமாக வாழ்ந்தான்.
112 கர்த்தரை துதியுங்கள்!
கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான்.
அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான்.
2 அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள்.
நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
3 அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும்.
அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும்.
4 தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர்.
தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர்.
5 தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது.
தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது.
6 அவன் விழமாட்டான்,
ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான்.
7 அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான்.
அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான்.
8 அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான்.
அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான்.
9 அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான்.
அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும்.
10 தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள்.
அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள்.
பின்பு அவர்கள் மறைந்து போவார்கள்.
தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை.
113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
2008 by World Bible Translation Center