M’Cheyne Bible Reading Plan
மூன்று பார்வையாளர்கள்
18 பிறகு, கர்த்தர் மீண்டும் ஆபிரகாமுக்குக் காட்சியளித்தார். ஆபிரகாம் மம்ரேயிலுள்ள ஓக் மரங்களுக்கு அருகில் வாழ்ந்தான். ஒரு நாள், வெப்பம் அதிகமான நேரத்தில் ஆபிரகாம் தனது கூடாரத்தின் வாசலுக்கருகில் இருந்தான். 2 ஆபிரகாம் மேலே ஏறிட்டுப் பார்த்தபோது முன்றுபேர் அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். ஆபிரகாம் அவர்களைப் பார்த்ததும் குனிந்து வணங்கினான். 3 ஆபிரகாம், “ஐயா, உங்கள் பணியாளாகிய என்னோடு தயவுசெய்து தங்கியிருங்கள். 4 உங்கள் பாதங்களைக் கழுவ தண்ணீர் கொண்டு வருகிறேன். நீங்கள் மரங்களுக்கடியில் ஓய்வுகொள்ளுங்கள். 5 நான் உங்களுக்கு உணவைக் கொண்டுவருவேன். நீங்கள் விரும்புகிற அளவிற்குச் சாப்பிடலாம். பிறகு உங்களது பயணத்தைத் தொடரலாம்” என்றான்.
அந்த மூன்று மனிதர்களும், “அது நல்லது. நீ சொன்னபடி நாங்கள் செய்கிறோம்” என்றனர்.
6 ஆபிரகாம் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவன் சாராளிடம், “சீக்கிரம் மூன்றுபடி கோதுமை மாவை எடுத்து ரொட்டிகள் தயார் செய்” என்றான். 7 பிறகு ஆபிரகாம் தனது தொழுவத்துக்கு ஓடி இளமையான கன்றுக் குட்டியைத் தேர்ந்தெடுத்து, அதனை வேலைக்காரனிடம் கொடுத்தான். அதனை விரைவில் கொன்று உணவு தயாரிக்கும்படி கூறினான். 8 ஆபிரகாம் இறைச்சியும், கொஞ்சம் பாலும், வெண்ணெயும் கொண்டு வந்து மூன்று பார்வையாளர்கள் முன்பு வைத்து அவர்கள் அருகில் பரிமாறுவதற்குத் தயாராக நின்றான். அவர்கள் மரத்தடியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.
9 பிறகு அவர்கள் ஆபிரகாமிடம், “உனது மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டனர்.
அதற்கு ஆபிரகாம், “அவள் அங்கே கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான்.
10 பிறகு கர்த்தர், “நான் மீண்டும் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் திரும்பி வருவேன். அப்போது உன் மனைவி சாராள் ஒரு மகனோடு இருப்பாள்” என்றார்.
சாராள் கூடாரத்திலிருந்து இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 11 ஆபிரகாமும் சாராளும் மிகவும் முதியவர்களாக இருந்தனர். சாதாரணமாக பெண்கள் குழந்தை பெறுவதற்கான வயதை சாராள் கடந்திருந்தாள். 12 எனவே, சாராள் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. அவள் தனக்குள், “நானும் முதியவள். என் கணவனும் முதியவர். நான் குழந்தை பெறமுடியாதபடி முதியவளாகிவிட்டேன்” என்றாள்.
13 கர்த்தர் ஆபிரகாமிடம், “சாராள், குழந்தை பெறமுடியாத அளவுக்கு முதியவளானதாகக் கூறிச் சிரிக்கிறாள். 14 கர்த்தருக்கு கடினமான காரியம் ஏதாவது இருக்கிறதா? இல்லை. நான் வசந்த காலத்தில் மீண்டும் வருவேன். அப்போது நான் சொன்னது நடக்கும். உனது மனைவி சாராள் மகனோடு இருப்பாள்” என்றார்.
15 ஆனால் சாராளோ, “நான் சிரிக்கவில்லையே” என்றாள். (அவள் அச்சத்தால் இவ்வாறு சொன்னாள்)
ஆனால் கர்த்தரோ, “இல்லை. நீ சொல்வது உண்மையன்று என எனக்குத் தெரியும், நீ சிரித்தாய்” என்றார்.
16 பிறகு அந்த மனிதர்கள் எழுந்து சென்றனர். அவர்கள் சோதோம் இருந்த திசை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடு கொஞ்சம் தூரம் சென்று அவர்களை அனுப்பி வைத்தான்.
ஆபிரகாம் தேவனோடு பரிந்து பேசுதல்
17 கர்த்தர் தனக்குள், “நான் செய்யப்போகிறவற்றை ஆபிரகாமிற்கு மறைக்கமாட்டேன். 18 ஆபிரகாம் ஒரு மகத்தான பலமிக்க தேசமாவான். அவனால் பூமியிலுள்ள ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். 19 நான் ஆபிரகாமோடு சிறந்த உடன்படிக்கை ஒன்றைச் செய்து வைத்திருக்கிறேன். நான் இதைச் செய்ததால் அவன் தன் பிள்ளைகளையும், சந்ததிகளையும் எனது விருப்பப்படி வாழ கட்டளையிடுவான். அவர்கள் நீதியோடும், நேர்மையோடும் வாழும்படி அவர்களுக்குப் போதனை செய்வான் என அறிவேன். கர்த்தராகிய நான் வாக்குறுதியளித்தபடியே அவனுக்குச் செய்வேன்” என்று சொல்லிக்கொண்டார்.
20 மேலும் கர்த்தர், “சோதோம், கொமோரா ஜனங்கள் மிகவும் பாவிகள் என்று நான் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன். 21 எனவே நான் சோதோமின் உண்மை நிலை என்னவென்று போய்ப் பார்ப்பேன்” என்றார்.
22 ஆகையால், அந்த மனிதர்கள் திரும்பி சோதோமை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். ஆனால் ஆபிரகாம் கர்த்தருக்கு முன்னால் நின்றான். 23 பிறகு ஆபிரகாம் கர்த்தரிடம் நெருங்கி வந்து, “கர்த்தாவே! நீர் தீயவர்களை அழிக்கும்போதே நல்லவர்களையும் அழிக்கப்போகிறீரா? 24 அந்த நகரத்தில் 50 நல்ல மனிதர்கள் இருந்தால் என்ன செய்வீர்? அழித்துவிடுவீரா? உறுதியாக நீர் அந்த 50 நல்ல மனிதர்களுக்காக அந்நகரத்தைக் காப்பாற்றத்தான் வேண்டும். 25 உம்மால் உறுதியாக அந்நகரத்தை அழிக்க முடியாது. தீயவர்களை அழிப்பதற்காக அந்த 50 நல்ல மனிதர்களையும் உம்மால் அழிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் பிறகு நல்ல மனிதர்களும் தீய மனிதர்களும் ஒரே மாதிரி ஆகிவிடுவார்கள். இருவருமே தண்டிக்கப்பட்டுவிடுவார்கள். பூமி முழுவதற்கும் நீரே நீதிபதி. நீர் நியாயமானவற்றையே செய்வீர் என்று எனக்குத் தெரியும்” என்றான்.
26 பிறகு கர்த்தர், “என்னால் சோதோம் நகரத்தில் நல்லவர்கள் 50 பேரைக் காண முடியுமானால் நான் அந்த நகரத்தைக் காப்பாற்றுவேன்” என்றார்.
27 பிறகு ஆபிரகாம், “கர்த்தாவே, உம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் வெறும் தூசியாகவும், சாம்பலாகவும் இருக்கிறேன். என்றாலும் இன்னும் ஒரு கேள்வியைக் கேட்க அனுமதியும். 28 அந்நகரத்தில் 45 நல்ல மனிதர்கள் மட்டுமே இருந்தால் என்ன செய்வீர்? அந்த முழு நகரத்தையும் அழித்துவிடுவீரா?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “நான் அங்கு 45 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.
29 ஆபிரகாம் மீண்டும் பேசினான். அவன், “நீர் 40 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் அப்போது அந்நகரத்தை அழிப்பீரா?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “நான் 40 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்று சொன்னார்.
30 மேலும் ஆபிரகாம், “கர்த்தாவே தயவு செய்து என்மீது கோபம் கொள்ளாதிரும். இதையும் கேட்க அனுமதியும், அந்நகரத்தில் 30 நல்ல மனிதர்கள் மட்டும் இருந்தால், அந்நகரத்தை அழித்துவிடுவீரா?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “நான் 30 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.
31 பிறகு ஆபிரகாம், “கர்த்தாவே மேலும் உம்மிடம் ஒன்று கேட்கலாமா? அந்நகரத்தில் 20 நல்ல மனிதர்கள் மட்டும் இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “நான் அங்கே 20 நல்ல மனிதர்களை மட்டும் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.
32 மேலும் ஆபிரகாம், “கர்த்தாவே என் மீது கோபம்கொள்ள வேண்டாம். இறுதியாக இன்னொன்றைக் கேட்க அனுமதி தாரும். நீர் அங்கே 10 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் என்ன செய்வீர்?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “நான் 10 நல்ல மனிதர்களைக் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.
33 கர்த்தர் ஆபிரகாமுடன் தன் பேச்சை முடித்து விட்டுப் போனார். ஆபிரகாமும் தன் வீட்டிற்குத் திரும்பினான்.
இயேசு மோசேயோடும் எலியாவோடும் காணப்படுதல்
(மாற்கு 9:2-13; லூக்கா 9:28-36)
17 ஆறு நாட்கள் கழித்து, பேதுரு, யாக்கோபு, மற்றும் யாக்கோபின் சகோதரன் யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு இயேசு ஓர் உயரமான மலைக்குச் சென்றார். அங்கு அவர்கள் மட்டும் தனியே இருந்தார்கள். 2 சீஷர்கள் பார்த்துக்கொண்டிருந்தபொழுதே இயேசுவின் ரூபம் மாறியது. அவரது முகம் சூரியனைப்போலப் பிரகாசமானது. அவரது உடைகள் ஒளியைப் போன்று வெண்மையாயின. 3 பின்பு, இருவர் வந்து பேசினார்கள். அவர்கள் மோசேயும் எலியாவும் ஆவார்கள்.
4 பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே நாம் இங்கு வந்தது நல்லதாயிற்று. நீர் விரும்பினால், நான் இங்கு மூன்று கூடாரங்களை அமைக்கிறேன். உமக்கு ஒன்று, மோசேக்கு ஒன்று, எலியாவிற்கு ஒன்று” என்று கூறினான்.
5 பேதுரு பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர்களுக்கு மேலாக ஒரு பிரகாசமான மேகம் வந்தது. மேகத்தினின்று ஒரு குரல் எழும்பி, “இவர் (இயேசு) எனது குமாரன். இவரிடம் நான் அன்பு செலுத்துகிறேன். நான் இவரிடம் பிரியமாக இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று சொன்னது.
6 இயேசுவுடன் இருந்த சீஷர்கள் இதைக் கேட்டனர். மிகவும் பயந்து போன அவர்கள், தரையில் வீழ்ந்தார்கள். 7 இயேசு அவர்களுக்கருகில் வந்து, அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள். பயப்படாதீர்கள்” எனக் கூறினார். 8 தலையை உயர்த்திப் பார்த்த சீஷர்கள், இயேசு மட்டும் தனியே இருப்பதைக் கண்டார்கள்.
9 இயேசுவும் சீஷர்களும் மலையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்தார்கள், “மலை மீது கண்டவற்றை யாரிடமும் கூறாதீர்கள். மரணத்திலிருந்து மனிதகுமாரன் உயிர்த்தெழும்வரைப் பொறுத்திருங்கள். பின்னர் நீங்கள் கண்டவற்றை மக்களிடம் கூறலாம்” என்று இயேசு சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
10 சீஷர்கள் இயேசுவிடம், “கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே, எலியா வருகை புரிய வேண்டுமென ஏன் வேதபாரகர் கூறுகிறார்கள்!” என்று கேட்டார்கள்.
11 அதற்கு இயேசு, “எலியாவின் வருகை குறித்து அவர்கள் கூறுவது சரியே. மேலும், எவை எல்லாம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியே எலியா அவற்றை ஆயத்தம் செய்து வைப்பான். 12 ஆனால், எலியா ஏற்கெனவே வந்துள்ளான். ஆனால், அவன் யாரென்பதை மக்கள் அறியவில்லை. மக்கள் பலவகையான துன்பங்களை அவனுக்குத் தந்தனர். மனித குமாரனுக்கும் அவ்வாறே அவர்களால் துன்பங்கள் ஏற்படும்” என்று பதிலளித்தார். 13 யோவான் ஸ்நானகனே உண்மையில் எலியா என்பதை பிற்பாடு சீஷர்கள் உணர்ந்தார்கள்.
இயேசு ஒரு நோயாளிச் சிறுவனைக் குணமாக்குதல்
(மாற்கு 9:14-29; லூக்கா 9:37-43)
14 இயேசுவும் சீஷர்களும் கூடியிருந்த மக்களிடம் திரும்பிச் சென்றார்கள். அப்போது ஒரு மனிதன் இயேசுவின் முன் வந்து குனிந்து வணங்கினான். 15 அவன், “ஆண்டவரே! என் மகனுக்குக் கருணை காட்டும். வலிப்பு நோயினால் மிகவும் துன்புறுகிறான். அடிக்கடி என் மகன் தண்ணீரிலோ அல்லது நெருப்பிலோ வீழ்ந்து விடுகிறான். 16 உமது சீஷர்களிடம் என் மகனை அழைத்து வந்தேன். ஆனால், அவர்களால் அவனைக் குணப்படுத்த இயலவில்லை” என்றான்.
17 இயேசு, “உங்களுக்கெல்லாம் விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை முறையே தவறானது. இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடன் இருக்க முடியும்? உங்களுடன் எத்தனை நாட்கள் பொறுமையுடன் காலந்தள்ள முடியும்? உன் மகனை இங்கு அழைத்து வா” என்று பதில் சொன்னார். 18 இயேசு அப்பையனின் உடலுக்குள் இருந்த பிசாசுக்கு கண்டிப்பான கட்டளையிட்டார். பின் அப்பையனுக்குள்ளிருந்த பிசாசு வெளியேறியது. உடனே பையன் குணமடைந்தான்.
19 பிறகு இயேசுவிடம் அவரது சீஷர்கள் தனித்து வந்தார்கள், “பையனிடமிருந்து பிசாசை நாங்கள் விரட்ட முயன்றோம். ஆனால் எங்களால் இயலவில்லை. ஏன் எங்களால் பிசாசை விரட்ட இயலவில்லை?” என்று இயேசுவிடம் கேட்டார்கள்.
20 அதற்கு இயேசு, “உங்களால் பிசாசை விரட்ட முடியவில்லை, ஏனென்றால் உங்கள் நம்பிக்கை மிகவும் சிறிய அளவிலானது. உங்களுக்கு ஒரு கடுகளவேனும் நம்பிக்கை இருந்து இம்மலையை நோக்கி, ‘இங்கிருந்து அங்கே நகர்ந்து செல்’ எனக் கூறினால், இம்மலையும் நகரும். 21 உங்களுக்கு அனைத்தும் சாத்தியமாகும் என்று உங்களுக்கு சொல்லுகிறேன்”[a] என்று கூறினார்.
இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்
(மாற்கு 9:30-32; லூக்கா 9:43-45)
22 பின்னர், இயேசுவின் சீஷர்கள் கலிலேயாவில் சந்தித்தார்கள். இயேசு சீஷர்களிடம் சொன்னார், “மனித குமாரன் மனிதர்களின் வசம் ஒப்புவிக்கப்படுவார். 23 அவர்கள் தேவ குமாரனைக் கொல்லுவார்கள். ஆனால் மூன்றாம் நாள் தேவ குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவார்” என்று சொன்னார். இயேசு கொலையாவார் என்பதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையுற்றனர்.
வரி கொடுப்பதைப்பற்றிப் போதனை
24 இயேசுவும் சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். யூதர்கள் தேவாலயத்துக்குச் செலுத்தவேண்டிய வரியை வசூலிக்கும் ஆட்கள் சிலர், கப்பர்நகூமில் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் சீஷர்களிடம், “உங்கள் போதகர் ஆலயத்திற்குக் செலுத்தவேண்டிய வரியை செலுத்துகிறாரா?” என்று கேட்டனர்.
25 அதற்குப் பேதுரு, “ஆம், அவர் அந்த வரியைச் செலுத்துகிறார்” எனப் பதிலளித்தான்.
இயேசு தங்கியிருந்த வீட்டிற்குள் பேதுரு சென்றான். அவன் வாயைத் திறக்கும் முன்னமே, இயேசு, “மண்ணுலகில் இருக்கும் ராஜாக்கள் பலவகையான வரிகளை மக்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். வரி செலுத்துகிறவர்கள் யார்? ராஜாவின் பிள்ளைகள் வரி செலுத்துகிறார்களா? அல்லது மற்றவர்கள் வரி செலுத்துகிறார்களா? நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
26 அதற்கு பேதுரு, “மன்னனின் பிள்ளைகள் அல்ல, மற்றவர்களே வரி செலுத்துகிறார்கள்” என்று பதில் உரைத்தான்.
பிறகு இயேசு, “மன்னனின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியதில்லை. 27 ஆனால், வரி வசூல் செய்யும் இவர்களை நாம் கோபமூட்ட வேண்டாம். எனவே, நான் கூறுகிறபடி வரியை செலுத்திவிடு. ஏரிக்குச் சென்று மீன் பிடி. நீ பிடிக்கும் முதலாவது மீனின் வாயைத் திறந்துபார். அதன் வாயினுள் நான்கு நாணயங்கள் கிடைக்கும். அந்நாணயங்களை எனக்கும் உனக்குமான வரியாக வரி வசூலிப்பவர்களிடம் செலுத்திவிடு” என்று சொன்னார்.
7 எனவே, நாங்கள் சுவர் கட்டுவதை முடித்தோம். பிறகு வாசல்களுக்குக் கதவுகளைப் போட்டோம். பின்னர் அவ்வாசல்களைக் காக்க ஆட்களைத் தேர்ந் தெடுத்தோம். ஆலயத்தில் பாடவும் ஆசாரியர்களுக்கு உதவவும் தேவையான ஆட்களைத் தேர்ந்தெடுத்தோம். 2 அடுத்து, நான் எனது சகோதரனான ஆனானியைத் எருசலேமின் பொறுப்பாளனாக நியமித்தேன். கோட்டையின் தலைவனாக அனனியாவைத் தேர்ந்தெடுத்தேன், ஏனென்றால் அவன் மிகவும் நேர்மையானவனாக இருந்தான். அநேக மனிதர்கள் செய்வதைவிட அவன் அதிகமாக தேவனுக்கு பயந்தான். 3 பிறகு நான் ஆனானியிடமும் அனனியாவிடமும், “ஒவ்வொரு நாளும் சூரியன் மேலே ஏறும்வரை எருசலேமின் வாசல் கதவுகளைத் திறக்க காத்திருக்க வேண்டும். சூரியன் அடைவதற்கு முன்னால் வாசல் கதவை மூடித் தாழ்ப்பாளிடவேண்டும். எருசலேமில் வாழ்கின்றவர்களைக் காவலர்களாகத் தேர்ந்தெடு. நகரத்தைக் காவல் செய்ய முக்கியமான இடங்களில் அந்த ஜனங்களில் சிலரை நிறுத்து. மற்ற மனிதர்களை அவர்களது வீட்டின் அருகில் நிறுத்து” என்று கூறினேன்.
திரும்பி வந்த கைதிகளின் பட்டியல்
4 இப்பொழுது நகரம் பெரியதாய் இருந்தது. அங்கு அதிக இடம் இருந்தது. ஆனால் அந்த நகரத்தில் மிகக்குறைவான ஜனங்களே வசித்தனர். வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை. 5 எனவே என்னுடைய தேவன் என் இதயத்தில் அனைத்து ஜனங்களும் கூடவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கினார். முக்கியமான ஜனங்களையும் அதிகாரிகளையும் பொது ஜனங்களையும் கூட்டத்திற்கு நான் அழைத்தேன். நான் இதனைச் செய்தேன். அதனால் அனைத்து குடும்பங்களையும் பற்றி ஒரு பட்டியல் செய்ய என்னால் முடிந்தது. முன்னால் வந்தவர்களின் வம்ச பட்டியல் எனக்கு அப்பொழுது கிடைத்தது. இதுதான் நான் கண்ட எழுத்துக்கள்:
6 அதில் கைதிகளாக இருந்து திரும்பி வந்த அம்மாகாணத்தார்கள் இருந்தார்கள். கடந்த காலத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்த ஜனங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டு போனான். அந்த ஜனங்கள் எருசலேமிற்கும் யூதாவிற்கும் திரும்பி வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நகரத்திற்குச் சென்றனர். 7 இந்த ஜனங்கள் செருபாபேலோடு திரும்பியவர்கள். யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா ஆகியோர். நாடு கடத்தலிலிருந்து திரும்பிய இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையும் பெயர்களும் கொண்ட பட்டியல்:
8 பாரோஷின் சந்ததியினர் | 2,172 |
9 செபத்தியாவின் சந்ததியினர் | 372 |
10 ஆராகின் சந்ததியினர் | 652 |
11 யெசுவா, யோவாப் என்பவர்களின் குடும்பத்திலிருந்த பாகாத்மோவாபின் சந்ததியினர் | 2,818 |
12 ஏலாமின் சந்ததியினர் | 1,254 |
13 சத்தூவின் சந்ததியினர் | 845 |
14 சக்காயின் சந்ததியினர் | 760 |
15 பின்னூவின் சந்ததியினர் | 648 |
16 பெபாயின் சந்ததியினர் | 628 |
17 அஸ்காதின் சந்ததியினர் | 2,322 |
18 அதோனிகாமின் சந்ததியினர் | 667 |
19 பிக்வாயின் சந்ததியினர் | 2,067 |
20 ஆதீனின் சந்ததியினர் | 655 |
21 எசேக்கியாவின் குடும்பத்தின் வழியாக ஆதேரின் சந்ததியினர் | 98 |
22 ஆசூமின் சந்ததியினர் | 328 |
23 பேசாயின் சந்ததியினர் | 324 |
24 ஆரீப்பின் சந்ததியினர் | 112 |
25 கிபியோனின் சந்ததியினர் | 95 |
26 பெத்லகேம் ஊராரும் நெத்தோபா ஊராரும் | 188 |
27 ஆனதோத்தூர் மனிதர்கள் | 128 |
28 பெத்அஸ்மாவேத் ஊரார்கள் | 42 |
29 கீரியாத்யாரீம், கெபிரா பேரோத் ஊரார்கள் | 743 |
30 ராமா, காபா ஊரார்கள் | 621 |
31 மிக்மாஸ் ஊரார்கள் | 122 |
32 பெத்தேல், ஆயி ஊரார்கள் | 123 |
33 வேறொரு நேபோ ஊரார்கள் | 52 |
34 மற்றொரு ஏலாம் ஊரார்கள் | 1,254 |
35 ஆரீம் ஊரார்கள் | 320 |
36 எரிகோ ஊரார்கள் | 345 |
37 லோத், ஆதீத், ஓனோ ஊரார்கள் | 721 |
38 செனாகா ஊரார்கள் | 3,930 |
39 ஆசாரியரானவர்கள்:
யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததியினர் | 973 |
40 இம்மேரின் சந்ததியினர் | 1,052 |
41 பஸ்கூரின் சந்ததியினர் | 1,247 |
42 ஆரீமின் சந்ததியினர் | 1,017 |
43 லேவியின் கோத்திரத்தினர்:
ஓதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேல் குமாரனாகிய யெசுவாவின் சந்ததியினர் | 74 |
44 பாடகரானவர்கள்:
ஆசாபின் சந்ததியினர் | 148 |
45 வாசல் காவலாளரானவர்கள்:
சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபா ஆகியோரின் சந்ததியினர் | 138 |
46 இவர்கள் ஆலய பணியாளர்கள்:
சீகா, அசுபா, தபாகோத்தின் சந்ததியினர்
47 கேரோஸ், சீயா, பாதோன்,
48 லெபனா, அகாபா, சல்மா,
49 ஆனான், கித்தேல், காகார்,
50 ராயாக், ரேத்சீன், நெகோதா,
51 காசாம், ஊசா, பாசெயாக்,
52 பேசாய், மெயுநீம், நெபிஷசீம்,
53 பக்பூக், அகுபா, அர்கூர்,
54 பஸ்லீ, மெகிதா, அர்ஷா,
55 பர்கோஷ், சிசெரா, தாமா,
56 நெத்சியா, அதிபா.
57 சாலொமோனது வேலைக்காரர்களின் சந்ததியினர்:
சோதா, சொபெரேத், பெரிதா,
58 யாலா, தர்கோன், கித்தேல்,
59 செபத்தியா, அத்தீல், பொகெரேத், ஆமோன்.
60 ஆலய வேலைக்காரர்களும், சாலொமோனின் வேலைக்காரர்களின் சந்ததியினர் | 392 |
61 தெல்மெலாக், தெல்அர்சா, கேருபில், ஆதோன், இம்மேர் ஆகிய ஊர்களில் இருந்து சில ஜனங்கள் எருசலேமிற்கு வந்தனர். ஆனால் இந்த ஜனங்கள் தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் தந்தைகளின் வம்சத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருந்தார்கள்.
62 தெலாயா, தொபியா, நெகேதா ஆகியோரின் சந்ததியினர் | 642 |
63 ஆசாரியர்களின் குடும்பத்திலிருந்து
அபாயா, கோசு, பர்சில்லாய் சந்ததியினர் (கிலேயாவைச் சேர்ந்த பர்சில்லாயின் குமாரத்தி ஒருத்தியை ஒரு மனிதன் மணந்ததால், அந்த மனிதன் பர்சில்லாயின் சந்ததியானாக எண்ணப்பட்டான்.)
64 இந்த ஜனங்கள் தமது வம்சவரலாற்றைத் தேடினார்கள். ஆனால் அவர்கள் அவற்றைக் கண்டு பிடிக்கவில்லை. அவர்களால் தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தனர். எனவே அவர்களால் ஆசாரியர்களாகச் சேவைச் செய்ய முடியவில்லை. அவர்களின் பெயர்களும் ஆசாரியர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. 65 இந்த ஜனங்கள் மிகவும் பரிசுத்தமான உணவை உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஊரீம், தும்மீம் என்பவைகளை உபயோகித்து தலைமை ஆசாரியன் தேவனிடம் என்ன செய்யலாம் என்று கேட்கும்வரை இவ்வகையான எந்த உணவையும் அவர்களால் உண்ணமுடியவில்லை.
66-67 எல்லோரும் சேர்த்து, திரும்பி வந்த குழுவில் மொத்தம் 42,360 பேர் இருந்தனர். இதைத் தவிர எண்ணப்படாமல் 7,337 ஆண் மற்றும் பெண் வேலைக்காரர்களும் இருந்தனர். அதோடு 245 ஆண் மற்றும் பெண் பாடகர்களும் இருந்தனர். 68-69 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் அவர்களுக்கு இருந்தன.
70 வம்சத் தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய ஆடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான். 71 வம்சத் தலைவர்களில் சிலர் வேலையின் கரூவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள். 72 மற்ற ஜனங்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தனர்.
73 ஆசாரியரும், லேவியின் கோத்திரத்தாரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஆலய வேலைக்காரர்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். இஸ்ரவேலின் மற்ற ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஆண்டில் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறி இருந்தனர்.
தெசலோனிக்கேயில் பவுலும் சீலாவும்
17 அம்பிபோலி, அப்போலோனியா நகரங்கள் வழியாகப் பவுலும் சீலாவும் பிரயாணம் செய்தனர். அவர்கள் தெசலோனிக்கே நகரத்திற்கு வந்தனர். அந்நகரில் யூதர்களின் ஜெப ஆலயம் ஒன்று இருந்தது. 2 யூதர்களைப் பார்க்கும்படியாகப் பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்றான். இதையே அவன் எப்போதும் செய்தான். மூன்று வாரங்கள் ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களைக் குறித்துப் பவுல் யூதர்களோடு பேசினான். 3 வேதவாக்கியங்களை யூதர்களுக்கு பவுல் விவரித்தான். கிறிஸ்து இறக்க வேண்டும் என்பதையும், மரணத்திலிருந்து எழ வேண்டும் என்பதையும் காட்டினான். பவுல் “நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற மனிதனாகிய இயேசுவே கிறிஸ்து ஆவார்” என்றான். அவர்களில் சிலர் ஒப்புக்கொண்டு பவுலுடனும் சீலாவுடனும் இணைந்தார்கள். 4 ஜெப ஆலயத்தில் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்க மனிதர்கள் இருந்தனர். அங்கு முக்கியமான பெண்மணிகள் பலரும் இருந்தனர். இவர்களில் பலரும் பவுலோடும் சீலாவோடும் சேர்ந்துகொண்டனர்.
5 ஆனால் விசுவாசியாத யூதர்கள் பொறாமை கொண்டனர். நகரத்திலிருந்து சில தீய மனிதர்களை கூலிக்காக அமர்த்திக்கொண்டனர். இத்தீய மனிதர்கள் பல மக்களைச் சேர்த்துக்கொண்டு நகரத்தில் கலகம் விளைவித்தனர். பவுலையும் சீலாவையும் தேடிக்கொண்டு இந்த மனிதர்கள் யாசோனின் வீட்டிற்குச் சென்றனர். பவுலையும் சீலாவையும் நகர சபையின் முன்பாக அழைத்து வரவேண்டுமென்று அம்மனிதர்கள் கேட்டனர். 6 ஆனால் அவர்கள் பவுலையும் சீலாவையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே மக்கள் யாசோனையும், வேறு சில விசுவாசிகளையும் நகரின் தலைவர்கள் முன்பாக இழுத்து வந்தனர். மக்கள் எல்லோரும், “இம்மனிதர்கள் உலகத்தின் எல்லா இடங்களிலும் கலகமுண்டாக்கினார்கள். இப்போது இவர்கள் இங்கும் வந்துவிட்டனர்! 7 யாசோன் அவர்களைத் தனது வீட்டில் வைத்திருக்கிறான். இராயரின் சட்டங்களுக்கு எதிரான செயல்களை அவர்களெல்லாம் செய்கின்றனர். இயேசு என்னும் இன்னொரு மன்னன் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்” என்று கூக்குரலிட்டனர்.
8 நகரத்தின் தலைவர்களும் பிற மக்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் கலக்கமடைந்தார்கள். 9 யாசோனும் பிற விசுவாசிகளும் தண்டனைப் பணம் செலுத்தும்படியாகச் செய்தனர். பின் விசுவாசிகளை விடுதலை செய்து போகும்படி அனுமதித்தனர்.
பெரேயாவில் ஊழியம்
10 அதே இரவில் விசுவாசிகள் பவுலையும் சீலாவையும் பெரேயா எனப்பட்ட மற்றொரு நகரத்திற்கு அனுப்பினர். பெரேயாவில் பவுலும் சீலாவும் யூதர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். 11 தெசலோனிக்கேயின் யூதர்களைக் காட்டிலும் இந்த யூதர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். பவுலும் சீலாவும் கூறியவற்றை இந்த யூதர்கள் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றார்கள். பெரேயாவின் யூதர்கள் ஒவ்வொருநாளும் வேதவாக்கியங்களைக் கற்றார்கள். இக்காரியங்கள் உண்மையானவையா என்று அறிய இந்த யூதர்கள் விரும்பினார்கள். 12 இந்த யூதர்களில் பலர் நம்பிக்கை கொண்டனர். உயர்நிலையிலிருந்த பல கிரேக்கப் பெண்களும் ஆண்களைப் போலவே நம்பிக்கை கொண்டனர்.
13 தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவில் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசித்தான் என்பதை அறிந்தபோது அவர்கள் பெரேயாவுக்கும் வந்தனர். தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவின் மக்களைக் கலக்கமுறச் செய்து கலகம் உண்டாக்கினர். 14 எனவே விசுவாசிகள் விரைந்து பவுலைக் கடற்கரை வழியாக அனுப்பி வைத்தனர், ஆனால் சீலாவும் தீமோத்தேயுவும் பெரேயாவில் தங்கினர். 15 பவுலோடு சென்ற விசுவாசிகள் அவனை அத்தேனே நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். பவுலிடமிருந்து அந்தச் சகோதரர்கள் சீலாவுக்கும் தீமோத்தேயுவுக்கும் குறிப்புகளை எடுத்துச் சென்றனர். அக்குறிப்புகள், “எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் என்னிடம் வாருங்கள்” என்றன.
அத்தேனேயில் பவுல்
16 அத்தேனேயில் பவுல் சீலாவுக்காகவும் தீமோத்தேயுவுக்காகவும் காத்துக்கொண்டிருந்தான். நகரம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பதைக் கண்டு பவுல் மனக்கலக்கமடைந்திருந்தான். 17 ஜெப ஆலயத்தில் பவுல் யூதர்களோடும் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்கரோடும் பேசினான். நகரத்தின் சந்தை வெளிகளில் நேரம் போக்கிக்கொண்டிருந்த சில மக்களோடும் பவுல் பேசினான். ஒவ்வொரு நாளும் பவுல் இதைச் செய்தான். 18 எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் தத்துவவாதிகளில் சிலர் அவனோடு விவாதித்தார்கள்.
அவர்களில் சிலர், “தான் கூறிக்கொண்டிருப்பதைப் பற்றி இந்த மனிதனுக்கு உண்மையாகவே தெரியாது. அவன் என்ன சொல்ல முயன்றுகொண்டிருக்கிறான்?” என்றார்கள். இயேசு மரணத்திலிருந்து எழுப்பப்பட்ட நற்செய்தியைப் பவுல் அவர்களுக்குக் கூறிக்கொண்டிருந்தான். எனவே அவர்கள், “வேறு ஏதோ சில தேவர்களைக் குறித்து அவன் நமக்குச் சொல்லிக்கொண்டிருப்பதாகப் படுகிறது” என்றனர்.
19 அவர்கள் பவுலைக் கண்டுபிடித்து அரியோபாகஸ்[a] சங்கத்தின் கூட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அவர்கள், “நீங்கள் போதிக்கிற இப்புதிய கருத்தை எங்களுக்கு விளக்குங்கள். 20 நீங்கள் சொல்லுபவை எங்களுக்குப் புதியவை. இவற்றைக் குறித்து நாங்கள் முன்னர் கேள்விப்பட்டதில்லை. இப்போதனையின் பொருள் என்ன என்று நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றனர். 21 (அத்தேனேயின் மக்கள் அனைவரும் அங்கே வாழ்ந்துகொண்டிருந்த பிற நாட்டு மக்களும் இந்தப் புத்தம்புதிய கருத்துக்களைப் பற்றிப் பேசிப் பேசியே பொழுதைக் கழித்தனர்.)
22 அரியோபாகஸ் சங்கத்தின் கூட்டத்தில் பவுல் எழுந்து நின்றான். பவுல், “அத்தேனேயின் மனிதர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் பக்தியில் மிக்கவர்களாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. 23 நான் உங்கள் நகரத்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்தேன். நீங்கள் வழிபடுகின்ற பொருட்களைப் பார்த்தேன். ‘அறியப்படாத தேவனுக்கு’ என்று எழுதப்பட்ட ஒரு பீடத்தையும் கண்டேன். நீங்கள் அறியாத ஒரு தேவனை வழிபடுகின்றீர்கள். நான் உங்களுக்குக் கூறுகின்ற தேவன் அவரே!
24 “அவரே உலகம் முழுவதையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் உண்டாக்கின தேவன். அவரே வானம் பூமி ஆகியவற்றின் கர்த்தர். மனிதன் கட்டுகிற ஆலயங்களில் அவர் வசிப்பதில்லை. 25 உயிர், மூச்சு, பிற அனைத்தையும் மக்களுக்குக் கொடுப்பவர் இந்த தேவனே, அவருக்கு மக்களிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை. தேவனுக்குத் தேவையான எல்லாம் அவரிடம் இருக்கின்றன. 26 ஒரு மனிதனை உருவாக்குவதிலிருந்து தேவன் ஆரம்பித்தார். அவனிலிருந்து தேவன் வெவ்வேறான மக்களை உருவாக்கினார். தேவன் அவர்களை உலகின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கச் செய்தார். எப்போது, எங்கு அவர்கள் வசிக்க வேண்டுமென்பதை தேவன் மிகச் சரியாகத் தீர்மானித்தார்.
27 “மக்கள் தன்னைத் தேடவேண்டுமென்று தேவன் விரும்பினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடி அவரைக் கண்டுகொள்ளக்கூடும். ஆனால் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தொலைவில் இல்லை.
28 “நாம் அவரோடு வாழ்கிறோம். நாம் அவரோடு நடக்கிறோம். நாம் அவரோடு இருக்கிறோம். உங்கள் கவிஞர்கள் சிலர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஏனென்றால் நாம் அவரது பிள்ளைகள்.’
29 “நாம் தேவனின் பிள்ளைகள். மக்கள் கற்பனை செய்கிற அல்லது உண்டாக்குகிற பொருளைப் போன்றவர் தேவன் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர் பொன், வெள்ளி அல்லது கல்லால் செய்யப்பட்ட பொருளைப் போன்றவர் அல்ல. 30 கடந்த காலத்தில் மக்கள் தேவனைப் புரிந்துகொள்ளவில்லை. தேவனும் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் அவனது இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக எல்லா இடங்களிலும் கூறுகிறார். 31 தேவன் உலகிலுள்ள எல்லா மக்களையும் நியாயம்தீர்ப்பதற்கு ஒரு நாளைக் குறித்து வைத்துள்ளார். அவர் சரியான தீர்ப்பு வழங்குவார். அவர் ஒரு மனிதனைப் பயன்படுத்துவார். தேவன் பல காலத்திற்கு முன்னரேயே இம்மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அம்மனிதனை மரணத்தினின்று எழுப்பியதன் மூலம் தேவன் இதற்கான உறுதியை அனைவருக்கும் அளித்தார்” என்றான்.
32 இயேசு மரணத்தினின்று எழுதல் என்பதைக் கேள்விப்பட்டபோது அவர்களில் சிலர் கேலி செய்தார்கள். மற்றவர்கள், “உங்களிடம் இதைக் குறித்து மேலும் பின்னர் கேட்போம்” என்றனர். 33 எனவே பவுல் அவர்களுக்கிடையிலிருந்து சென்றான். 34 ஆனால் மக்களில் சிலர் பவுலை நம்பி அவனோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவன் தியொனீசியு, அவன் அரியோபாகஸ் சங்கத்தின் உறுப்பினன். வேறொருத்தி தாமரி என்று அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி. இன்னும் சில மக்களும் அவர்களுடன் விசுவாசிகளாக மாறினர்.
2008 by World Bible Translation Center