M’Cheyne Bible Reading Plan
முதல் குடும்பம்
4 ஆதாமும் அவன் மனைவியும் பாலின உறவு கொண்டனர். அவள் கர்ப்பமுற்று காயீன் என்ற ஒரு குமாரனைப் பெற்றெடுத்து, நான், “கர்த்தரின் உதவியால் ஒரு மனிதனைப் பெற்றுள்ளேன்” என்றாள்.
2 அதன் பிறகு ஏவாள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவன் காயீனின் சகோதரனான ஆபேல். ஆபேல் ஒரு மேய்ப்பனாகவும், காயீன் ஒரு விவசாயியாகவும் வளர்ந்தனர்.
முதல் கொலை
3-4 அறுவடைக் காலத்தில் காயீன் தன் வயலில் விளைந்த தானியங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு போனான். ஆனால் ஆபேல் தன் மந்தையிலிருந்து சில சிறந்த ஆடுகளைக் கொண்டு போனான்.
கர்த்தர் ஆபேலையும், அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டார். 5 ஆனால் கர்த்தர் காயீனையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் துக்கமும் கோபமும் கொண்டான். 6 கர்த்தர் அவனிடம், “ஏன் நீ கோபமாயிருக்கிறாய்? ஏன் உன் முகத்தில் கவலை தெரிகிறது. 7 நீ நன்மை செய்திருந்தால் எனக்கு விருப்பமானவனாக இருந்திருப்பாய். நானும் உன்னை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் நீ தீமை செய்தால் பிறகு அந்தப் பாவம் உன் வாழ்வில் இருக்கும். உனது பாவம் உன்னை அடக்கி ஆள விரும்பும். நீயோ உன் பாவத்தை அடக்கி ஆளவேண்டும்”[a] என்றார்.
8 காயீன் தனது சகோதரன் ஆபேலிடம். “வயலுக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலுக்குப் போனார்கள். அங்கே காயீன் தன் தம்பியைத் தாக்கிக் கொலை செய்துவிட்டான்.
9 பிறகு கர்த்தர் காயீனிடம், “உனது சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. என் தம்பியைக் காவல் செய்வது என் வேலையில்லை” என்றான்.
10-11 அதற்குக் கர்த்தர், “நீ என்ன காரியம் செய்தாய்? நீ உன் சகோதரனைக் கொன்றுவிட்டாய். பூமியிலிருந்து அவனது இரத்தம் என்னைக் கூப்பிடுகிறதே. இப்பொழுது அவனது இரத்தத்தை உன் கைகளிலிருந்து வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த, இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். 12 கடந்த காலத்தில் நீ பயிர் செய்தவை நன்றாக விளைந்தன. ஆனால் இனிமேல் நீ பயிரிடுபவை விளையாதவாறு இந்த பூமி தடை செய்யும். இந்தப் பூமியில் நிலையில்லாமல் ஒவ்வொரு இடமாக அலைந்துகொண்டிருப்பாய்” என்றார்.
13 பிறகு காயீன், “என்னால் தாங்கிக்கொள்ள இயலாதவாறு இந்தத் தண்டனை அதிகமாக இருக்கிறது. 14 எனது பூமியை விட்டுப் போகுமாறு நீர் என்னை வற்புறுத்துகின்றீர். நான் உமது பார்வையிலிருந்து மறைவேன். எனக்கென்று ஒரு வீடு இருக்காது. பூமியில் ஒவ்வொரு இடமாக அலையும்படி நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறேன். என்னைப் பார்க்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான்.
15 பிறகு கர்த்தர் காயீனிடம், “அவ்வாறு நடக்குமாறு நான் விடமாட்டேன். எவராவது உன்னைக் கொன்றால் நான் அவர்களை மிகுதியாகத் தண்டிப்பேன்” என்றார். ஆகையால் கர்த்தர் காயீன்மீது ஒரு அடையாளம் இட்டார். அதனால் எவரும் அவனைக் கொல்லமாட்டார்கள் என்றார்.
காயீன் குடும்பம்
16 காயீன் கர்த்தரைவிட்டு விலகிப்போய் ஏதேனின் கிழக்கிலிருந்த நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
17 காயீன் தன் மனைவியுடன் பாலின உறவு கொண்டபோது அவள் ஏனோக் என்னும் பெயருள்ள குமாரனைப் பெற்றாள். காயீன் ஒரு நகரத்தை உருவாக்கி அதற்குத் தன் குமாரனின் பெயரை வைத்தான்.
18 ஏனோக்குக்கு ஈராத் என்னும் குமாரன் பிறந்தான். ஈராத்துக்கு மெகுயவேல் என்ற குமாரன் பிறந்தான். மெகுயவேலுக்கு மெத்தூசவேல் என்ற குமாரன் பிறந்தான். மெத்தூசவேலுக்கு லாமேக் என்ற குமாரன் பிறந்தான்.
19 லாமேக் இரண்டு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதாள், இன்னொருத்தியின் பெயர் சில்லாள். 20 ஆதாள் யாபாலைப் பெற்றாள். யாபால் கூடாரத்தில் வாழ்பவர்களுக்கும், மந்தையை மேய்க்கிறவர்களுக்கும் தந்தை ஆனான். 21 ஆதாளுக்கு யூபால் என்று இன்னொரு குமாரன் இருந்தான். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் போன்றோருக்குத் தந்தை ஆனான். 22 சில்லாள் தூபால்-காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் தந்தை ஆனான். தூபால் காயீனுக்கு, நாமாள் என்ற சகோதரி இருந்தாள்.
23 லாமேக்கு தன் மனைவிகளிடம்,
“ஆதாளே, சில்லாளே என் பேச்சைக் கேளுங்கள்.
நீங்கள் லாமேக்கின் மனைவியர், நான் சொல்வதைக் கவனியுங்கள்.
என்னை ஒருவன் துன்புறுத்தினான், அவனை நான் கொன்றேன்.
என்னுடன் இளைஞன் மோதினான், எனவே அவனையும் கொன்றேன்.
24 காயீனின் கொலைக்காக கொடுக்கப்பட்ட தண்டனை மிகப்பெரியது.
என்னைக் கொல்வதால் கிடைக்கும் தண்டனையும் மிக அதிகமாகவே இருக்கும்” என்றான்.
ஆதாம்-ஏவாளுக்கு புதிய குமாரன் பிறந்தது
25 ஆதாம் ஏவாளோடு பாலின் உறவு கொண்டான். ஏவாள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்குச் சேத் என்று பெயரிட்டனர். ஏவாள், “தேவன் எனக்கு இன்னொரு குமாரனைக் கொடுத்திருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றான். ஆனால் நான் சேத்தைப் பெற்றேன்” என்றாள். 26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பெயர் வைத்தான். அப்பொழுது மனிதர்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தனர்.[b]
இயேசுவுக்குண்டான சோதனைகள்
(மாற்கு 1:12-13; லூக்கா 4:1-13)
4 பின்னர் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்துக்கு அழைத்துச் சென்றார். பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக இயேசு அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். 2 அங்கு நாற்பது நாள் இரவும் பகலும் இயேசு உணவேதும் உட்கொள்ளவில்லை. அதன் பின், இயேசுவுக்கு மிகுந்த பசியுண்டாயிற்று. 3 அப்போது அவரை சோதிக்கப் பிசாசு வந்து, அவரிடம், “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இந்தக் கற்களை அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான்.
4 அதற்கு இயேசு, “‘மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல. மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது’(A) என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார்.
5 பின்பு பிசாசு இயேசுவைப் பரிசுத்த நகரமான எருசலேமுக்கு அழைத்துச் சென்றான். பிசாசு இயேசுவை தேவாலயத்தின் மிக உயரமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தி, 6 “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இங்கிருந்து கீழே குதியும். ஏனென்றால்,
“‘தேவன் உமக்காகத் தன் தூதர்களுக்குக் கட்டளையிடுவார்,
தூதர்களின் கரங்கள் உன்னைப் பற்றும்.
ஆகவே உன் கால்கள் பாறைகளில் மோதாது’(B)
என்று வேதவாக்கியங்களில் எழுதியிருக்கிறது” எனக் கூறினான்.
7 அதற்கு இயேசு, “‘தேவனாகிய உன் கர்த்தரை சோதிக்கக் கூடாது’(C) என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதில் சொன்னார்.
8 பிசாசு பின்னர் இயேசுவை மிக உயரமான ஒரு மலைச் சிகரத்திற்கு அழைத்துச் சென்று, உலகின் எல்லா நாடுகளையும் அவற்றின் மகிமைகளையும் பொருட்களையும் காட்டினான். 9 பிறகு பிசாசு இயேசுவிடம், “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் நான் உமக்குத் தருவேன்” என்றான்.
10 இயேசு பிசாசை நோக்கி, “சாத்தானே, என்னை விட்டு விலகிச் செல்! “‘நீ உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்!’(D) என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார்.
11 எனவே பிசாசு இயேசுவை விட்டு விலகினான். அதன் பிறகு சில தூதர்கள் வந்து அவருக்குச் சேவை செய்தனர்.
கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்
(மாற்கு 1:14-15; மத்தேயு 4:14-15)
12 யோவான் சிறையிலடைக்கப்பட்டதை இயேசு கேள்வியுற்றார். எனவே, இயேசு கலிலேயாவிற்குத் திரும்பிச் சென்றார். 13 இயேசு நாசரேத்தில் தங்கவில்லை. அவர் கலிலேயா ஏரிக்கு அருகிலிருந்த கப்பர்நகூம் நகருக்குச் சென்று வசித்தார். செபுலோனுக்கும் நப்தலிக்கும் அருகில் உள்ளது கப்பர்நகூம். 14 தீர்க்கதரிசி ஏசாயா கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறும்படி இயேசு இவ்வாறு செய்தார்:
15 “செபுலோன் என்னும் இடமும் நப்தலி என்னும் இடமும்
யோர்தான் நதியைக் கடந்து கடலுக்குப் போகும் சாலையில்
16 யூதர்கள் அல்லாத பிற இனத்தவர் வாழும் இடமாக உள்ளது கலிலேயா.
பாவ இருளில் வாழ்ந்த அவர்கள் மிகப் பெரிய வெளிச்சமொன்றைக் கண்டனர்.
ஒரு சுடுகாட்டைப் போல இருளடைந்து கிடக்கும்
அப்பூமியில் வாழும் மக்களை நோக்கி அந்த வெளிச்சம் வந்தது.”(E)
17 அச்சமயத்திலிருந்து இயேசு, “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார்.
சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்
(மாற்கு 1:16-20; லூக்கா 5:1-11)
18 இயேசு கலிலேயா ஏரிக்கரையோரம் நடந்துகொண்டிருந்தார். பேதுரு என்றழைக்கப்பட்ட சீமோனையும் அவன் சகோதரன் அந்திரேயாவையும் அவர் கண்டார். மீனவர்களான அச்சகோதரர்கள் இருவரும் ஏரியில் வலைவிரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 19 இயேசு அவர்களிடம், “என்னைத் தொடர்ந்து வாருங்கள். உங்களை மாறுபட்ட மீனவர்களாக்குவேன். மீன்களை அல்ல மனிதர்களை சேகரிக்கும் வேலையைச் செய்வீர்கள்” என்று சொன்னார். 20 சீமோனும் அந்திரேயாவும் தங்கள் வலைகளை விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.
21 இயேசு கலிலேயா ஏரிக்கரையோரம் தொடர்ந்து நடந்து செல்லும்போது செபெதேயுவின் புதல்வர்களான யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய சகோதரர்களைக் கண்டார். அவர்கள் இருவரும் ஒரு படகில் தம் தந்தையோடு இருந்தனர். அவர்கள் மீன் பிடிப்பதற்காகத் தங்களது வலையைத் தயார் செய்து கொண்டிருந்தனர். இயேசு அந்தச் சகோதரர்களைத் தம்முடன் வருமாறு அழைத்தார். 22 எனவே, அச்சகோதரர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
போதனையும் குணமாக்குதலும்
(லூக்கா 6:17-19)
23 இயேசு கலிலேயா நாடு முழுவதும் உள்ள இடங்களுக்குச் சென்றார். அவர்கள் ஜெப ஆலயங்களில் இயேசு தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்திகளைப் போதித்தார். மேலும், மக்களின் அனைத்து விதமான நோய்களையும் வியாதிகளையும் இயேசு குணப்படுத்தினார். 24 இயேசுவைப் பற்றிய செய்தி சீரியா தேசம் முழுவதும் பரவியது. நோயுற்ற மக்கள் அனைவரையும் இயேசுவிடம் அழைத்து வந்தனர். நோயுற்ற அம்மக்கள் பலவிதமான வியாதிகளாலும் வலியினாலும் அவதியுற்றனர். சிலர் மிகுந்த வலியினாலும், சிலர் பிசாசு பிடித்தும், சிலர் வலிப்புநோயினாலும், சிலர் பாரிச வியாதியாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். இயேசு அவர்கள் அனைவரையும் குணமாக்கினார். 25 பற்பல மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். அம்மக்கள் கலிலேயா, பத்துநகரங்கள், எருசலேம், யூதேயா மற்றும் யோர்தான் நதியின் அக்கரை முதலான பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.
மீண்டும் ஆலயத்தைக் கட்டுவதற்கு எதிராக வந்த விரோதிகள்
4 1-2 அப்பகுதியில் வாழ்ந்த பலரும், யூதா மற்றும் பென்யமீன் ஜனங்களுக்கு எதிராக இருந்தனர். அந்த விரோதிகள் அடிமைத்தனத்திலிருந்து திரும்ப வந்தவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுவதைக் கேள்விப்பட்டார்கள். எனவே அவர்கள் செருபாபேலிடமும், குடும்பத் தலைவர்களிடமும் வந்து, “நாங்கள் உங்களுக்கு ஆலயம் கட்ட உதவட்டுமா? நாங்களும் உங்களைப் போன்றவர்களே, உங்கள் தேவனிடம் உதவி வேண்டுகிறோம். அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் எங்களை இங்கு அழைத்து வந்த நாள் முதலாக நாங்கள் உங்கள் தேவனுக்குப் பலிகொடுத்து வருகிறோம்” என்றனர்.
3 ஆனால், செருபாபேல், யெசுவா, மற்றும் மற்ற குடும்பத் தலைவர்கள், “இல்லை, எங்கள் தேவனுக்கு ஆலயம் கட்ட உங்களால் உதவ முடியாது. நாங்கள் மட்டுமே கர்த்தருக்கு ஆலயம் கட்ட முடியும். அவர் இஸ்ரவேலின் தேவன். இதனையே, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசு எங்களுக்கு கட்டளையிட்டது” என்றனர்.
4 இது அவர்களுக்குக் கோபத்தை வரவழைத்தது. எனவே அவர்கள் யூதர்களுக்குத் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தனர். அவர்களை உற்சாகமிழக்கச் செய்து, ஆலயத்தைக் கட்டவிடாமல் தடுக்க முயன்றனர். 5 அந்த விரோதிகள் அரசு அதிகாரிகளை விலைக்கு வாங்கி யூதர்களுக்கு எதிராக வேலை செய்யவைத்தனர். யூதர்களின் ஆலயம் கட்டும் திட்டத்தைத் தடுப்பதற்கான செயல்களைத் தொடர்ந்து செய்தார்கள். இது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலம் முழுவதும் தொடர்ந்தது. பெர்சியாவின் ராஜாவாக தரியு ஆகும்வரைக்கும் இது தொடர்ந்து இருந்தது.
6 அந்த விரோதிகள் ராஜாவுக்குக் கடிதங்கள் எழுதி யூதர்களைத் தடுக்க முயன்றனர். பெர்சியாவின் ராஜாவாக அகாஸ்வேரு இருந்தபோது எழுதினார்கள்.
எருசலேமை மீண்டும் கட்டுவதை எதிர்த்தவர்கள்
7 பிறகு, பெர்சியாவின் புதிய ராஜாவாகிய அர்தசஷ்டாவுக்கு, அந்த எதிரிகள் யூதர்களைக் குறைக்கூறி கடிதம் எழுதினார்கள். பிஸ்லாம், மித்திரேதாத், தாபெயேல், மற்றும் அவர்கள் குழுக்களில் உள்ள மற்ற அனைவரும் சேர்ந்து இக்கடிதத்தை எழுதினார்கள். ராஜா அர்தசஷ்டாவுக்கு எழுதப்பட்ட இக்கடிதம் அரமாய்க் மொழியிலும், அரமாய்க் எழுத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுமிருந்தது. (பாபிலோன் பிரதேசத்தில் ஆட்சி மொழியாக அரமாய்க் இருந்தது).
8 பிறகு ஆணை அதிகாரியான ரெகூமும், செயலாளரான சிம்சாவும் எருசலேம் ஜனங்களுக்கு எதிராகக் கடிதம் எழுதினார்கள். ராஜாவாகிய அர்தசஷ்டாவிற்கு அவர்கள் இக்கடிதத்தை எழுதினார்கள். கடிதத்தில் எழுதப்பட்ட விபரம் பின்வருமாறு:
9 தலைமை அதிகாரி ரெகூம் மற்றும் செயலாளரான சிம்சாவிடமிருந்தும் தீனாவியர், அபற்சாத்தினர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஆகியோர்களின் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்தும், சூசாவிலிருந்து வந்த ஏலாமியர்களிடமிருந்தும், 10 மகத்தானவனும், வலிமை மிக்கவனுமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து சமாரியா நகருக்கும் ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், நகர்த்தப்பட்ட மற்ற ஜனங்களிடமிருந்தும்,
11 அர்தசஷ்டா ராஜாவுக்கு,
ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பக்கம் வாழும் உங்கள் சேவகர்களாகிய ஜனங்கள் எழுதிக்கொள்வது:
12 அர்தசஷ்டா ராஜாவே, உங்களால் அனுப்பப்பட்ட யூதர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்ட முயல்கிறார்கள். எருசலேம் ஒரு எதிர்ப்பு தெரிவிக்கின்ற நகரம். இந்நகரிலுள்ள ஜனங்கள் எப்பொழுதும் ராஜாக்களுக்கு எதிராகக் கலகம் செய்திருக்கின்றார்கள். இப்போது அந்த யூதர்கள் அஸ்திபாரங்களைப் போட்டு சுவர்களைக் கட்டி கொண்டிருக்கிறார்கள்.
13 மேலும் ராஜா அர்தசஷ்டாவே, எருசலேமும் அதன் சுவர்களும் எழுப்பப்பட்டால், எருசலேம் ஜனங்கள் வரிக் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள் என்பதை நீர் அறிய வேண்டும். உங்களுக்குக் கொடுக்கிற காணிக்கைகளையும் நிறுத்திவிடுவார்கள். அவர்கள் கடமை வரிகளையும் கட்டமாட்டார்கள். ராஜா அந்தப் பணம் முழுவதையும் இழந்துவிடுவீர்கள்.
14 நாங்கள் ராஜாவுக்குப் பொறுப்பு உள்ளவர்கள். இவ்வாறு நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதை ராஜாவுக்குத் தெரிவிக்கும் பொருட்டே இந்தக் கடிதத்தை அனுப்புகிறோம்.
15 ராஜா அர்தசஷ்டாவே, உங்களுக்கு முன்னால் அரசாண்ட ராஜாக்கள் எழுதி வைத்தவற்றை நீங்கள் தேடி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவற்றில் எருசலேம் எப்பொழுதும் ராஜாக்களுக்கு எதிராகக் கலகம் செய்திருப்பதை நீங்கள் காண முடியும். இதனால் பல நாடுகளுக்கும் ராஜாக்களுக்கும் தொல்லைகள் ஏற்பட்டன. ஆரம்ப காலம் முதலே பல கலகங்கள் இங்கே நடந்திருக்கின்றன. அதனால்தான் எருசலேம் அழிக்கப்பட்டது.
16 ராஜா அர்தசஷ்டாவே, இந்த நகரமும் இதன் சுவர்களும் மீண்டும் எழுப்பப்பட்டால், ஐபிராத்து ஆற்றுக்கு மேற்கு பகுதியில் உள்ள உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழப்பீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் விரும்புகிறோம், என்று எழுதியிருந்தார்கள்.
17 பிறகு ராஜா அர்தசஷ்டா இந்தப் பதிலை எழுதினான்:
தலைமை அதிகாரியான ரெகூமுக்கும், செயலாளரான சிம்சாயிக்கும், சமாரியாவில் வாழ்கின்ற மற்ற ஜனங்களுக்கும் ஐபிராத்து ஆற்றின் மேற்கு பகுதியில் வாழ்கின்ற ஜனங்களுக்கும்,
வாழ்த்துக்கள்.
18 நீங்கள் எனக்கு அனுப்பியக் கடிதம் மொழி பெயர்க்கப்பட்டு எனக்கு வாசிக்கப்பட்டது. 19 எனக்கு முன்னால் இருந்த ராஜாக்கள் எழுதி வைத்ததை எல்லாம் தேடிட கட்டளையிட்டேன். எழுதப்பட்டவற்றை வாசித்தேன். எருசலேமில் ராஜாக்களுக்கு எதிரான ஒரு நீண்ட கலக வரலாறு இருப்பதை அறிந்தேன். அடிக்கடி அங்கு கலகக்காரர்கள் கலகம் செய்வதற்கான இடமாக உள்ளது. 20 ஐபிராத்து ஆற்றுக்கு மேற்கிலுள்ள பகுதி முழுவதையும் ஆட்சி செய்த வலிமைமிக்க ராஜாக்களை எருசலேம் பெற்றிருந்திருக்கிறது. ராஜாக்களைக் கௌரவிக்க வரிகளும், பணமும் செலுத்தப்பட்டன மேலும் அவ்வரசர்களுக்குக் கப்பங்களும் கட்டப்பட்டன.
21 இப்போது, நீங்கள் அவர்களின் வேலையை நிறுத்தும்படி கட்டளையிட வேண்டும். நான் மீண்டும் கூறும்வரை வேலைகள் நிறுத்தப்பட வேண்டும். 22 இந்த காரியத்தில் அசட்டையாய் இருக்காதீர்கள். எருசலேம் வேலைகள் தொடரக் கூடாது. அது தொடர்ந்தால், நான் எருசலேமில் இருந்து எவ்விதப் பணமும் பெற முடியாது.
23 எனவே இக்கடிதத்தின் பிரதி ஒன்று ரெகூமுக்கும், காரியக்காரனான சிம்சாயிக்கும், அவனோடு உள்ள மற்ற ஜனங்களுக்கும் வாசித்து காட்டப்பட்டது. பின் அவர்கள் விரைவாக யூதர்களிடம் சென்று அவர்களது கட்டிடவேலையை நிறுத்தினார்கள்.
ஆலயத்தின் வேலை நிறுத்தப்படுகிறது
24 எனவே எருசலேமில் தேவனுடைய ஆலய வேலை நிறுத்தப்பட்டது. பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ஆட்சிச் செய்த இரண்டாவது ஆண்டுவரை வேலை தொடரப்படவில்லை.
யூத ஆலோசனைச் சங்கத்தின் முன்
4 பேதுருவும், யோவானும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சில மனிதர்கள் அவர்களிடம் வந்தார்கள். யூத ஆசாரியர்களும், ஆலயத்தைப் பாதுகாக்கும் வீரர்களுக்குத் தலைவனும், சில சதுசேயரும் அவர்களோடு வந்திருந்தனர். 2 பேதுருவும், யோவானும் மக்களிடம் போதித்தவற்றைக் குறித்து அவர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். அப்போஸ்தலர்கள் இயேசுவைக் குறித்து மக்களுக்குக் கூறும்போது, மக்கள் மரணத்திலிருந்து இயேசுவின் வல்லமையால் உயிர்த்தெழுவார் என்பதையும் போதித்தார்கள். 3 யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அது ஏற்கெனவே இரவு நேரமாயிருந்தது. எனவே அடுத்த நாள்வரைக்கும் பேதுருவையும் யோவானையும் சிறையில் வைத்திருந்தார்கள். 4 ஆனால் பேதுருவும் யோவானும் செய்த போதனைகளைக் கேட்ட மக்களில் பலரும் அவர்கள் கூறியவற்றை விசுவாசித்தனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம் பேராக இருந்தது.
5 மறுநாள் யூதத் தலைவர்களும், அதிகாரிகளும், வேதபாரகரும் எருசலேமில் சந்தித்தனர். 6 அன்னா, காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோரும் அங்கிருந்தனர். தலைமை ஆசாரியனின் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர். 7 எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் பேதுருவையும் யோவானையும் அவர்கள் நிறுத்தினர். யூத அதிகாரிகள் பல முறை அவர்களிடம், “ஊனமுற்ற இந்த மனிதனை எவ்வாறு குணப்படுத்தினீர்கள்? எந்த வல்லமையைப் பயன்படுத்தினீர்கள்? யாருடைய அதிகாரத்தினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.
8 அப்போது பேதுரு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அவன் அவர்களை நோக்கி, “மக்களின் அதிகாரிகளே, முதிய தலைவர்களே, 9 ஊனமுற்ற மனிதனுக்கு ஏற்பட்ட நல்ல காரியத்தைக் குறித்து எங்களை வினவுகிறீர்களா? அவனைக் குணப்படுத்தியது யார் என்று எங்களை வினவுகிறீர்களா? 10 நீங்கள் யாவரும், யூத மக்கள் அனைவரும், இம்மனிதன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் குணம் ஆக்கப்பட்டான் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். இந்த மனிதன் ஊனமுற்றவனாயிருந்தான். ஆனால் இப்போது இயேசுவின் வல்லமையால் குணம் பெற்று உங்களுக்கு முன்பாக எழுந்து நிற்கிறான்.
11 “‘கட்டிடம் கட்டுபவர்களாகிய நீங்கள் இயேசுவை முக்கியமற்ற கல்லைப் போன்று கருதினீர்கள்.
ஆனால் இந்தக் கல்லோ மூலைக்கல்லாயிற்று.’(A)
12 மக்களை இரட்சிக்கக் கூடியவர் இயேசு ஒருவரே. உலகத்தில் மக்களை இரட்சிக்கும் வல்லமையுடன் தரப்பட்ட நாமம் இயேசுவினுடையது மட்டுமே. இயேசுவின் மூலமாகவே நாம் இரட்சிக்கப்படவேண்டும்!” என்றான்.
13 பேதுருவும் யோவானும் வேறு சிறப்பான பயிற்சியோ கல்வியோ பெறவில்லை என்பதை யூதத் தலைவர்கள் புரிந்துகொண்டனர். பேதுருவும் யோவானும் பேசுவதற்கு அஞ்சவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். அதனால் அதிகாரிகள் வியப்புற்றனர். பேதுருவும் யோவானும் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பதை உணர்ந்தனர். 14 இரண்டு அப்போஸ்தலர்களுடன் ஊனமாயிருந்த அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அம்மனிதன் குணமடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். எனவே அப்போஸ்தலருக்கு எதிராக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை.
15 அக்கூட்டத்திலிருந்து போகுமாறு யூதத் தலைவர்கள் அவர்களுக்குக் கூறினர். அதன் பின்பு தாங்கள் செய்ய வேண்டியது என்னவென்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 16 அவர்கள், “இம்மனிதர்களை நாம் என்ன செய்வோம்? அவர்கள் பேரதிசயம் ஒன்றைச் செய்துள்ளார்கள் என்பதை எருசலேமின் ஒவ்வொரு மனிதனும் அறிவான். இது தெளிவு. இது உண்மையல்லவென்று நம்மால் சொல்ல முடியாது. 17 ஆனால் இம்மனிதனைக் குறித்து இவர்கள் மக்களுக்குச் சொல்வதற்கு அஞ்சும்படி செய்யவேண்டும். அப்போது மக்களிடம் இச்செய்தி மேலும் பரவாது” என்றனர்.
18 எனவே யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் மீண்டும் உள்ளே அழைத்தனர். இயேசுவின் பெயரில் எதையும் கூறாதபடியும் போதிக்காதபடியும் அவர்கள் அப்போஸ்தலர்களுக்குக் கூறினர். 19 ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் எதைச் சரியென்று நினைக்கிறீர்கள்? தேவன் எதை விரும்புவார்? நாங்கள் கீழ்ப்படியவேண்டுவது உங்களுக்கா அல்லது தேவனுக்கா? 20 நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்குக் கண்டிப்பாகக் கூற வேண்டும்” என்றார்கள்.
21-22 நடந்ததற்காக எல்லா மக்களும் தேவனை வாழ்த்திக்கொண்டிருந்தபடியால் யூதத் தலைவர்கள் அப்போஸ்தலரைத் தண்டிப்பதற்கு ஒரு வழியும் காண முடியவில்லை. (இந்த அதிசயம் தேவனிடமிருந்து வந்த ஒரு சான்று. குணமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவனாயிருந்தான்!) எனவே யூத அதிகாரிகள் மீண்டும் அப்போஸ்தலரை எச்சரித்து விடுவித்தனர்.
விசுவாசிகளின் பிரார்த்தனை
23 பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர். 24 விசுவாசிகள் இதனைக் கேட்டபோது, அவர்கள் ஒரே மனதுடன் தேவனிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உணர்ந்தனர். 25 அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான்.
“‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்?
அவர்கள் செய்வது வீணானது.
26 “‘பூமியின் ராஜாக்கள் போருக்குத் தயாராகின்றனர்.
தலைவர்கள் அனைவரும் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக ஒருமித்துக் கூடுகின்றனர்.’(B)
27 ஏரோதும் பொந்தியு பிலாத்துவும் தேசங்களும், எல்லா யூத ஜனங்களும் சேர்ந்து எருசலேமில் இயேசுவுக்கு எதிராகக் கூடினபோது இவை அனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்தன. இயேசு உமது தூய ஊழியர். அவரே கிறிஸ்துவாகும்படி நீர் உண்டாக்கியவர். 28 கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது. 29 கர்த்தாவே, இப்போதும் அவர்கள் கூறுவதைக் கவனியும். அவர்கள் எங்களை அச்சமடையும்படியாகச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் உமக்கு ஊழியம் செய்பவர்கள். 30 நீர் விரும்புகிறவற்றை நாங்கள் தைரியமாகக் கூறுவதற்கு எங்களுக்கு உதவும். நோயுற்றோரைக் குணப்படுத்தும். சான்றுகள் கொடும். உம் தூய பணியாளராகிய இயேசுவின் வல்லமையால் அதிசயங்கள் நடக்கும்படிச் செய்யும்” என்று பிரார்த்தனை செய்தனர்.
31 விசுவாசிகள் பிரார்த்தனை செய்த பிறகு அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அச்சமின்றி தேவனுடைய செய்தியைத் தொடர்ந்து கூறினர்.
விசுவாசிகளின் ஒருமித்த வாழ்வு
32 விசுவாசிகள் அனைவரும் இருதயத்தில் ஒருமனமுள்ளவர்களாக ஒரே ஊக்கமுடையோராக இருந்தனர். அவர்களில் ஒருவரும் தன்னிடமிருந்த பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவை எனக் கூறவில்லை. மாறாக அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 33 மிகுந்த வல்லமையோடு, அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு மரணத்தினின்று உண்மையாகவே எழுப்பப்பட்டார் என்பதை மக்களுக்குக் கூறினர். 34 விசுவாசிகளை தேவன் அதிகமாக ஆசீர்வதித்தார். அவர்கள் அனைவரும் தேவையான பொருட்களைப் பெற்றனர். வயல்களையோ, வீடுகளையோ உடைய ஒவ்வொருவரும் அவற்றை விற்றனர். அப்பணத்தைக் கொண்டு வந்து 35 அதனை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தனர். பின்பு ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன.
36 விசுவாசிகளில் ஒருவன் யோசேப்பு என அழைக்கப்பட்டான். அப்போஸ்தலர்கள் அவனை பர்னபாஸ் என்று அழைத்தனர். (இந்தப் பெயர், “பிறருக்கு உதவுகின்ற மனிதன்” எனப் பொருள்படும்) அவன் சீப்புருவில் பிறந்த லேவியன். 37 அவனுக்குச் சிறிது நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தை விற்று பணத்தைக் கொண்டுவந்து, அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.
2008 by World Bible Translation Center