M’Cheyne Bible Reading Plan
ஆலயம் கட்டுவதற்கான அன்பளிப்புகள்
29 அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமும் தாவீது,
“என் குமாரன் சாலொமோனை தேவன் தேர்ந்தெடுத்துள்ளார். அவன் இளைஞன். இந்த வேலையைச் செய்து முடிக்கும் தேவைகளைப் பற்றிய அறிவு இல்லாதவன். ஆனால் இந்த வேலையோ மிகவும் முக்கியமானது. இது ஜனங்களுக்கான வீடு அன்று. இது தேவனாகிய கர்த்தருக்கான வீடு. 2 எனது தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான திட்டங்களை என்னால் முடிந்தவரை செய்துள்ளேன். நான் தங்கப் பொருட்கள் செய்வதற்கான தங்கத்தைக் கொடுத்துள்ளேன். வெள்ளிப் பொருட்களைச் செய்வதற்கான வெள்ளியையும் நான் கொடுத்துள்ளேன். வெண்கலப் பொருட்களைச் செய்வதற்கான வெண்கலத்தையும் நான் கொடுத்துள்ளேன். இரும்பு பொருட்களைச் செய்வதற்கான இரும்பையும் நான் கொடுத்துள்ளேன். மரப் பொருட்கள் செய்வதற்கான மரத்தையும் நான் கொடுத்துள்ளேன். பதிப்பதற்குத் தகுந்த ஒளிமிக்க கற்களையும், பலவண்ண கற்களையும், வெண்கற்பாளங்களையும், விலையுயர்ந்த சகல வித இரத்தினங்களையும், கோமேதகம் போன்ற கற்களையும் நான் கொடுத்துள்ளேன். இது போல் பலவிதமான பொருட்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்காக நான் கொடுத்திருக்கிறேன். 3 எனக்குச் சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். இதனை நான் எதற்காகச் செய்தேன் என்றால் என் தேவனுடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அதனால் அனைத்து பொருட்களையும் பரிசுத்த ஆலயத்திற்கு கொடுத்துவிட்டேன். 4 110 டன் சுத்தமான பொன்னை நான் ஓபிரிலிருந்து கொடுத்தேன். 260 டன் சுத்தமான வெள்ளியையும் நான் கொடுத்திருக்கிறேன். இவ்வெள்ளி ஆலயச் சுவர்களை மூடிட பயன்படும். 5 தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன பொருட்களுக்குத் தேவையான தங்கத்தையும், வெள்ளியையும் கொடுத்திருக்கிறேன். இந்த பொன்னினாலும் வெள்ளியாலும் திறமையுடையவர்கள் ஆலயத்திற்குத் தேவையான பல்வேறு வகை பொருட்களைச் செய்யலாம். இப்போது இஸ்ரவேலர்களில் எத்தனை பேர் ஆலயப் பணிக்காக, உங்களைக் கர்த்தருக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
6 குடும்பத் தலைவர்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களும், ஆயிரம் பேருக்கான அதிபதிகளும், நூறுபேருக்கான அதிபதிகளும், ராஜாவின் மந்திரிகளான தலைவர்களும் ஒப்புக் கொண்டு தங்களது மதிப்பு வாய்ந்த பொருட்களைக் கொடுக்க முன்வந்தனர். 7 அவர்கள், தேவாலயத்திற்குக் கொடுத்த பொருட்களின் பட்டியல் இது: 190 டன் தங்கம், 375 டன் வெள்ளி, 675 டன் வெண்கலம், 3,750 டன் இரும்பு, 8 ஜனங்கள் விலையுயர்ந்த கற்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொடுத்தனர். யெகியேல் இக்கற்களைக் காக்கும் பொறுப்பாளி ஆனான். இவன் கெர்சோன் குடும்பத்தவன். 9 தலைவர்கள் மகிழ்ச்சியோடு இவ்வாறு பொருட்களைக் கொடுத்ததால் ஜனங்களும் மகிழ்ச்சியடைந்தனர். தலைவர்கள் நல்ல மனதோடு கொடுத்தனர். தாவீது ராஜாவும் மகிழ்ந்தான்.
தாவீதின் அழகான ஜெபம்
10 பிறகு தாவீது அனைத்து ஜனங்களின் முன்பாக கர்த்தரை துதித்தான். தாவீது:
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எங்கள் தந்தையே,
எல்லா காலங்களிலும் உமக்கு துதி உண்டாவதாக!
11 மாட்சிமை, வல்லமை, மகிமை, வெற்றி, மகத்துவம் அனைத்தும் உமக்குரியவை.
ஏனென்றால் மண்ணிலும், விண்ணிலும் உள்ள அனைத்தும் உமக்குரியவை.
கர்த்தாவே இராஜ்யம் உமக்குரியது.
நீரே தலைவர், எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர் நீரே.
12 செல்வமும், மகத்துவமும் உம்மிடம் இருந்து வரும்.
நீர் எல்லாவற்றையும் ஆளுகிறீர்.
உமது கையில் வல்லமையும் அதிகாரமும் உள்ளது!
எவரையும் வல்லமையும், அதிகாரமும் உள்ளவனாக்கும் வல்லமையும் உமது கையில் உள்ளது!
13 இப்போது எங்கள் தேவனே, உமக்கு நன்றி.
நாங்கள் உமது பெருமைக்குரிய நாமத்தைத் துதிப்போம்!
14 இந்தப் பொருட்கள் அனைத்தும் என்னிடமும், என் ஜனங்களிடமும் இருந்து வந்ததல்ல!
அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தன.
நாங்கள் அவற்றை உமக்குத் திருப்பித் தருகிறோம்.
15 நாங்கள் எங்கள் முற்பிதாக்களைப் போன்று
உலகமெங்கும் பயணம் செய்துகொண்டு பரதேசிகளாக இருக்கிறோம்.
இவ்வுலகில் எங்கள் வாழ்வு கடந்து செல்லும் நிழல் போன்றுள்ளது.
இதனை நிறுத்த முடியவில்லை.
16 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் இவ்வளவு பொருட்களையும் ஆலயத்திற்காக சேகரித்துள்ளோம்.
உமது பெயரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்டுகிறோம்.
ஆனால் அனைத்தும் உம்மிடம் இருந்து வந்தன.
எல்லாம் உமக்குரியன.
17 எனது தேவனே, நீர் ஜனங்களை சோதிப்பதை நான் அறிவேன்.
ஜனங்கள் நன்மை செய்தால் நீர் மகிழ்ச்சி அடைவீர்.
நான் மகிழ்ச்சியோடு சுத்தமான, நேர்மையான மனதோடு இவற்றைத் தருவேன்.
நான் உமது ஜனங்கள் கூட்டியுள்ளதை பார்த்தேன். இப்பொருட்களை உமக்குக் கொடுப்பதில், அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
18 கர்த்தாவே, எங்கள் முற்பிதாக்களான, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் ஆகியோரின் தேவன்,
சரியானவற்றைத் திட்டமிடுவதில் உம் ஜனங்களுக்கு தயவுசெய்து உதவும்!
உம்மிடம் உண்மையாகவும், தாழ்மையாகவும் இருக்க உதவும்.
19 என் குமாரன் சாலொமோன் உமக்கு உண்மையாக இருக்கவும்,
உமது ஆணைகளுக்கும், சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கூட கீழ்ப்படிய உதவும். இவற்றைச் செய்ய சாலொமோனுக்கு உதவும்.
நான் திட்டமிட்டபடி இத்தலைநகரைக் கட்ட அவனுக்கு உதவும்” என்றான்.
20 பிறகு தாவீது அனைத்து குழு ஜனங்களிடமும், இப்போது உங்கள், “தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்” என்றான். எனவே அனைத்து ஜனங்களும் துதித்தனர். தரையில் குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் வணங்கினார்கள்.
சாலொமோன் ராஜாவாகிறான்
21 மறுநாள் ஜனங்கள் கர்த்தருக்கு பலிகள் இட்டனர். தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் 1,000 காளைகள், 1,000 ஆட்டுக் கடாக்கள், 1,000 ஆட்டுக் குட்டிகள், போன்றவற்றையும் பானங்களின் காணிக்கைகளையும் செலுத்தினர். அவர்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் பலவற்றையும் பலியிட்டனர். 22 அன்று ஜனங்கள் மகிழ்ச்சியோடு கர்த்தருடன் உண்பதும் குடிப்பதுவுமாய் இருந்தனர்.
அவர்கள் தாவீதின் குமாரனான சாலொமோனை இரண்டாம் முறையாக ராஜாவாக்கினார்கள். அவர்கள் சாலொமோனை ராஜாவாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும், அபிஷேகம் செய்தனர். கர்த்தர் இருக்கிற இடத்திலேயே அவர்கள் இதைச் செய்தார்கள்.
23 பிறகு சாலொமோன் கர்த்தருடைய சிங்காசனத்தின் மேல் அமர்ந்தான். அவன் தனது தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். அவன் வெற்றியுள்ளவனாயிருந்தான். இஸ்ரவேலர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர். 24 அனைத்து தலைவர்களும், வீரர்களும் தாவீதின் குமாரனான சாலொமோனை ராஜாவாக ஏற்றுக்கொண்டனர். அனைவரும் சாலொமோனுக்குக் கீழ்ப்படிந்தனர். 25 கர்த்தர் சாலொமோனை மிகப் பெரியவனாக்கினார். கர்த்தர் சாலொமோனைப் பெரியவராக்கிவிட்டார் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தெரிந்துக்கொண்டனர். ஒரு ராஜாவுக்குரிய பெருமையைக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். வேறு எந்த ராஜாவுக்கும் இஸ்ரவேலில் இவ்வளவு ராஜரீக மகத்துவம் கிடைத்ததில்லை.
தாவீதின் மரணம்
26-27 ஈசாயின் குமாரனான தாவீது 40 ஆண்டுகள் இஸ்ரவேல் முழுவதற்கும் ராஜாவாக இருந்தான். எப்ரோன் நகரில் தாவீது 7 ஆண்டுகளுக்கு ராஜாவாக இருந்தான். பிறகு தாவீது எருசலேம் நகரில் 33 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். 28 தாவீது முதுமையடைந்ததும் மரித்தான். தாவீது ஒரு நீண்ட நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான். தாவீது பல செல்வங்களையும் பெருமைகளையும் பெற்றான். அவனுக்குப் பிறகு அவனது குமாரனான சாலொமோன் புதிய ராஜா ஆனான்.
29 தொடக்கமுதல், இறுதிவரை தாவீது செய்தவற்றையெல்லாம் தீர்க்கதரிசியான நாத்தனும், ஞானதிருஷ்டிக்காரனான சாமுவேலும், ஞானதிருஷ்டிக்காரனான காத்தும் தங்கள் புத்தகங்களில் எழுதியுள்ளனர். 30 தாவீது இஸ்ரவேலின் ராஜாவாகச் செய்தவற்றையெல்லாம் அந்த எழுத்துக்கள் கூறுகின்றன. அவை தாவீதின் வலிமையையும், அவனுக்கு நேர்ந்தவற்றையும் கூறுகின்றன. அவை இஸ்ரவேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரசுகளுக்கும் ஏற்பட்டவற்றையும் கூறும்.
இயேசு திரும்பவும் வருவார்
3 எனது நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் இரண்டாம் நிருபம் இது. உங்கள் நேர்மையான மனங்கள் சிலவற்றை நினைவுபடுத்திக்கொள்ளும் வகையில் நான் உங்களுக்கு இரண்டு நிருபங்களை எழுதினேன். 2 கடந்த காலத்தில் பரிசுத்த தீர்க்கதரிசிகள் கூறிய வார்த்தைகளை நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நமது கர்த்தரும் இரட்சகரும் நமக்கு அளித்த கட்டளையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போஸ்தலர்கள் மூலமாக அக்கட்டளையை அவர் நமக்கு அளித்தார்.
3 கடைசி நாட்களில் நடக்கவிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பது முக்கியம். மக்கள் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். அவர்கள் செய்ய விரும்புகிற தீய காரியங்களைப் பின்பற்றி அம்மக்கள் வாழ்வார்கள். 4 அம்மக்கள், “அவர், மீண்டும் வருவதாக வாக்களித்துள்ளார். அவர் எங்கே? நம் தந்தையர் மரித்திருக்கிறார்கள். ஆனால் படைப்பின் ஆரம்பத்திலிருந்து உலகம் இந்த வகையிலேயே தொடர்கிறது” என்பார்கள்.
5 ஆனால் அவர்கள் இந்த எண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்போது, நெடுங்காலத்திற்கு முன் நடந்ததை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். நெடுங்காலத்திற்கு முன்பு வானங்கள் இருந்தன. பூமி இருந்தது, தண்ணீருக்கு வெளியே, தண்ணீரின் மூலமாகவே, பூமி வெளிப்படும்படி தேவன் உருவாக்கினார். 6 இவையாவும் தேவனுடைய வார்த்தையாலே உண்டாயின. பிற்காலத்தில் இந்த உலகம் வெள்ளத்தால் நிரப்பப்பட்டு அழிக்கப்பட்டது. 7 ஆனால் தேவனுடைய அந்த வார்த்தையாலேயே இன்றைய வானமும் பூமியும் நெருப்பால் அழிபடும் பொருட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. தேவனுக்கு எதிரான மக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு அழிக்கப்படும் நாளுக்காக அவை வைக்கப்பட்டுள்ளன.
8 ஆனால் அன்பான நண்பர்களே, இந்த ஒரு காரியத்தை நீங்கள் மறவாதீர்கள். கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகளைப் போன்றது. ஆயிரம் ஆண்டுகளோ ஒரு நாளைப்போன்றவை. 9 கர்த்தர் வாக்குறுதி அளித்ததைச் செய்வதில் சில மக்கள் நிதானத்தைப் பற்றி கருதுவதைப் போன்று உங்களோடு மிகவும் பொறுமையாக இருக்கிறார். எந்த மனிதனும் இழக்கப்படுவதை கர்த்தர் விரும்பவில்லை. ஒவ்வொருவனும் அவனது இதயத்தை மாற்றி, பாவம் செய்வதை விட்டுவிட வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.
10 திருடன் வருவதைப் போன்று கர்த்தர் மீண்டும் வருகிற நாளும் ஆச்சரியமானதாக இருக்கும். மிகுந்த சத்தத்தோடு வானம் மறையும். வானிலுள்ள எல்லாப் பொருள்களும் நெருப்பால் அழிக்கப்படும். பூமியும் அதிலுள்ள மக்களும் அதிலுள்ள சகலமும் நெருப்பிலிடப்பட்டது போலாகும். 11 நான் உங்களுக்குக் கூறியபடியே எல்லாப் பொருட்களும் அழியும். எனவே நீங்கள் எந்த வகையான மனிதர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, தேவனுக்கு சேவை செய்யவேண்டும். 12 தேவனுடைய நாளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருங்கள். அந்த நாள் வருகிறபோது, வானம் நெருப்பால் அழிக்கப்படும். வானிலுள்ள பொருள்கள் அனைத்தும் வெப்பத்தால் உருகும். 13 ஆனால் தேவன் நமக்கு ஒரு வாக்குறுதியைத் தந்தார். அவர் தந்த வாக்குறுதிக்காகவே காத்திருக்கிறோம். நன்மை நிலைபெற்றிருக்கும் இடமாகக் காணப்படும் ஒரு புதிய வானம், ஒரு புதிய பூமி பற்றியதே அவ்வாக்குறுதியாகும்.
14 எனவே அன்பான நண்பர்களே இவ்விஷயங்களுக்காக நீங்கள் காத்துக்கொண்டிருப்பதால், தேவனுடைய பார்வையில் கறை இல்லாமலும் குற்றம் இல்லாமலும் இருக்க உங்களால் முடிந்தவரைக்கும் உழைக்க வேண்டும். தேவனோடு சமாதானமாக இருக்க முயலுங்கள். 15 நம் கர்த்தரின் பொறுமையை இரட்சிப்பாக எண்ணுங்கள். தேவன் அளித்த ஞானத்தினால் நமது அன்பான சகோதரர் பவுல் உங்களுக்கு எழுதியபோது இதையே உங்களுக்குக் கூறினார். 16 பவுல் அவரது எல்லா நிருபங்களிலும் இக்காரியங்களைக் குறித்து இவ்வாறே எழுதுகிறார். புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் சில சமயங்களில் அவருடைய நிருபங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அறியாமை உள்ளவர்களும், விசுவாசத்தில் நிரந்தரமற்றவர்களும் அவ்விஷயங்களைத் தவறான முறையில் எடுத்துரைக்கிறார்கள். இதே முறையில் மற்ற வேதவாக்கியங்களையும் அவர்கள் தவறாக எடுத்துரைக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அவர்கள் தங்களையே அழித்துக்கொண்டிருக்கின்றனர்.
17 அன்பான நண்பர்களே, உங்களுக்கு ஏற்கெனவே இதைப் பற்றித் தெரியும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். தாங்கள் செய்கிற தவறான காரியங்களால் அத்தீய மக்கள் உங்களைத் தவறாக வழி நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உறுதியான நிலையிலிருந்து விழுந்து விடாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். 18 கிருபையிலும், நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும், வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்போதும் எப்போதும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
கர்த்தருடைய முறையீடு
6 இப்பொழுது கர்த்தர் என்ன சொல்கிறார் எனக் கேளுங்கள்.
உனது வழக்கை மலைகளுக்கு முன் சொல்.
அம்மலைகள் உங்களது வழக்கைக் கேட்க்கட்டும்.
2 கர்த்தர் தமது ஜனங்களுக்கு எதிராக முறையிடுகிறார்.
மலைகளே, கர்த்தருடைய முறையீட்டைக் கேளுங்கள்
பூமியின் அஸ்திபாரங்களே, கர்த்தர் சொல்கிறதைக் கேளுங்கள்.
இஸ்ரவேல் தவறானது என்று அவர் நிரூபிப்பார்.
3 கர்த்தர் கூறுகிறார், “என் ஜனங்களே, நான் செய்தவற்றைச் சொல்லுங்கள்.
நான் உங்களுக்கு எதிராக ஏதாவது செய்தேனா?
நான் உங்களது வாழ்வைக் கடினமானதாக்கினேனா?
4 நான் செய்தவற்றை உங்களிடம் சொல்லுவேன்.
நான் உங்களிடம் மோசே, ஆரோன், மீரியாம் ஆகியோரை அனுப்பினேன்.
நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டு வந்தேன்,
நான் உங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்தேன்.
5 என் ஜனங்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக்கினுடைய தீயத் திட்டங்களை நினைத்துப் பாருங்கள்.
பேயோரின் குமாரனான பிலேயம் பாலாக்கிடம் சொன்னவற்றை நினைத்துப்பாருங்கள்.
அகாசியாவிலிருந்து கில்கால்வரை நடந்தவற்றை நினைத்துப் பாருங்கள்.
அவற்றை நினைத்துப் பாருங்கள். கர்த்தர் சரியானவர் என்று அறிவீர்கள்.”
நம்மிடமிருந்து தேவன் என்ன விரும்புகிறார்
6 நான் கர்த்தரை சந்திக்க வரும்போது என்ன கொண்டு வரவேண்டும்.
நான் தேவனைப் பணியும்போது என்ன செய்ய வேண்டும்.
நான் கர்த்தருக்கு,
தகன பலியும் ஓராண்டு நிறைந்தக் கன்றுக்குட்டியையும் கொண்டு வரவேண்டுமா?
7 கர்த்தர் 1,000 ஆட்டுக்குட்டிகளாலும்
10,000 ஆறுகளில் ஓடும் எண்ணெயாலும் திருப்தி அடைவாரா?
நான் எனது முதல் குழந்தையை என் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தரட்டுமா?
என் சரீரத்திலிருந்து வந்த குழந்தையை நான் பாவத்துக்குப் பரிகாரமாகத் தரட்டுமா?
8 மனிதனே, நன்மை எதுவென்று கர்த்தர் உன்னிடம் சொல்லியிருக்கிறார்.
கர்த்தர் உன்னிடமிருந்து இதைத்தான் விரும்புகிறார்.
மற்றவர்களிடம் நியாயமாய் இரு.
கருணையோடும் நம்பிக்கையோடும் நேசி. உனது தேவனோடு தாழ்மையாய் இரு.
நீ அவரை பொக்கிஷத்தினால் கவர முயலாதே.
இஸ்ரவேலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்
9 கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது.
“ஞானவான் கர்த்தருடைய நாமத்தை உயர்த்துகிறான்.
எனவே தண்டனையின் தடியைக் கவனியுங்கள். தண்டனையின் தடியைப் பிடிப்பவரையும் கவனியுங்கள்.
10 தீயவர்கள் தாம் திருடிய சொத்துக்களை
இன்னும் மறைத்துவைப்பார்களா?
தீயவர்கள் வியாபாரத்தில் மிகச் சிறியக் கூடைகளை வைத்து
இன்னும் ஜனங்களை ஏமாற்றுவார்களா? ஆம் இந்த செயல்கலெல்லாம் இன்னும் நடக்கிறது.
11 இன்னும் தமது எடைக்கற்களாலும் அளவு கோல்களாலும்
ஜனங்களை ஏமாற்றுகிறவர்களை, நான் மன்னிப்பேனா?
கள்ளத் தராசும், கள்ளப் படிக்கற்களுள்ள பையும் வைத்து தவறாக அளக்கிறவர்களை நான் மன்னிப்பேனா? இல்லை.
12 செல்வந்தர்கள் நகரத்தில் இன்னும் கொடுமை செய்கிறார்கள்.
அந்நகர ஜனங்கள் இன்னும் பொய்ச் சொல்கிறார்கள்.
ஆமாம், அந்த ஜனங்கள் தம் பொய்களைச் சொல்கின்றனர்.
13 எனவே நான் உன்னைத் தண்டிக்கத் தொடங்கினேன்.
நான் உன்னுடைய பாவங்களினிமித்தம் உன்னை அழிப்பேன்.
14 நீ உண்பாய், ஆனால் உன் வயிறு நிறையாது.
நீ இன்னும் பசியாகவும் வெறுமையாகவும் இருப்பாய்.
நீ பாதுகாப்புக்காக ஜனங்களை அழைத்துவர முயற்சி செய்வாய்.
யாரைப் பாதுகாத்தாயோ, அவர்களையும் நான் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.
15 விதைகளை விதைப்பாய்,
ஆனால் உணவை அறுவடை செய்யமாட்டாய்.
நீ உனது ஒலிவ மரங்களிலிருந்து எண்ணெய் எடுக்க அவற்றை பிழிவாய்.
ஆனால் எண்ணெய் பெறமாட்டாய்.
நீ திராட்சைப் பழங்களை பிழிவாய்.
ஆனால் போதுமான திராட்சைரசம் குடிக்கக் கிடைக்காது.
16 ஏனென்றால் நீ ஓம்ரியின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவாய்.
நீ ஆகாப் குடும்பம் செய்தத் தீயவற்றைச் செய்வாய்.
நீ அவர்களின் உபதேசங்களைப் பின்பற்றுவாய்.
எனவே நான் உன்னை அழியும்படி விடுவேன்.
ஜனங்கள் உனது அழிந்த நகரங்களைக் காணும்போது பரிகசித்து ஆச்சரியப்படுவார்கள்.
அந்நிய நாட்டு ஜனங்களின் நிந்தையை நீங்கள் சுமப்பீர்கள்.”
ஆடு, வெள்ளிக்காசு உவமை
(மத்தேயு 18:12-14)
15 வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள். 2 உடனே பரிசேயரும் வேதபாரகரும் குறை கூற ஆரம்பித்தவர்களாக, “பாருங்கள்! இந்த மனிதன் (இயேசு) தீயோரை வரவேற்று அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்” என்றனர்.
3 அப்போது அவர்களுக்கு இயேசு பின்வரும் உவமையைக் கூறினார்: 4 “உங்களில் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றுள் ஒன்று காணாமல் போகிறது. அப்போது அவன் மற்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் தனியே விட்டுவிட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லமாட்டானா? அந்தக் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் அவன் அதைத் தேடிக்கொண்டே இருப்பான். 5 அந்த ஆட்டை அவன் கண்டுபிடிக்கிறபோது மிகவும் சந்தோஷம் அடைவான். அந்த மனிதன் அந்த ஆட்டைத் தன் தோள்களில் சுமந்துக்கொண்டு தன் வீட்டை அடைவான். 6 தன் நண்பர்களையும் அக்கம் பக்கத்தவர்களையும் அழைத்து அவர்களிடம் ‘எனது காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்தேன். என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்’ என்று கூறுவான். 7 அவ்வாறே, ஒரு பாவி மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தங்கள் இதயத்தை மாற்றத் தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நல்ல மனிதருக்காக ஏற்படும் சந்தோஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பாவிக்காக ஏற்படும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.
8 “ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக் காசுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் ஒன்றை அவள் தொலைத்து விடுகிறாள். அவள் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வாள் அல்லவா? அந்தக் காசு கிடைக்கும் மட்டும் கவனமாகத் தேடுவாள். 9 தொலைந்து போன அந்தக் காசைக் கண்டெடுக்கும்போது அவள் தனது நண்பர்களையும் அக்கம் பக்கத்தாரையும் ஒன்றாக அழைத்து அவர்களை நோக்கி, ‘நான் தொலைத்த காசைக் கண்டெடுத்ததால் நீங்கள் என்னோடு கூட சந்தோஷப்படுங்கள்’ என்பாள். 10 அதைப்போலவே ஒரு பாவி மனந்திருந்தி தன் வாழ்வை மாற்றினால் தேவ தூதருக்கு முன்பாக மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்” என்றார்.
காணாமற்போன குமாரன்
11 அப்போது இயேசு, “ஒரு மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். 12 இளைய குமாரன் தந்தையை நோக்கி, ‘நமக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களிலும் எனது பங்கை எனக்குத் தாருங்கள்’ என்று கூறினான். எனவே தந்தை செல்வத்தை இரண்டு பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான்.
13 “சில நாட்களுக்குப் பிறகு இளைய குமாரன் தனக்குரிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் போனான். வேறொரு தூர தேசத்துக்கு அவன் பிரயாணம் செய்தான். அங்கு அவன் பணத்தை மூடனைப்போல் வீணாகச் செலவழித்தான். 14 அவன் தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவு செய்தான். அதற்குப் பின்னர், அந்நாட்டில் வறட்சி நிலவியது. மழை பெய்யவில்லை. அந்நாட்டில் எல்லாருக்கும் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை. அந்த குமாரன் பசியாலும், பணமின்மையாலும் துன்பப்பட்டான். 15 எனவே அந்த நாட்டில் வாழ்ந்த ஒருவனிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். பன்றிகளுக்குத் தீவனமிடுமாறு அந்த குமாரனை அம்மனிதன் அனுப்பினான். 16 அந்த குமாரன் பசிமிகுதியால் பன்றிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையாகிலும் உண்ண வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனுக்கு ஒருவரும் எந்த உணவையும் கொடுக்கவில்லை.
17 “இளைஞன் தன் மூடத்தனத்தை உணர்ந்தான். அவன், ‘என் தந்தையின் எல்லா வேலைக்காரர்களுக்கும் மிகுதியான உணவு கிடைக்கும். நானோ உணவின்றி இங்கு இறக்கும் நிலையில் இருக்கிறேன். 18 நான் இங்கிருந்து என் தந்தையிடம் போய்: தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களிடமும் தவறு செய்தேன். 19 உங்கள் குமாரன் என்று அழைக்கப்படும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் அல்லன். நான் உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வாழ அனுமதியுங்கள் என்று சொல்லுவேன்’ என்று எண்ணினான். 20 எனவே அந்த குமாரன் அங்கிருந்து தன் தந்தையிடம் சென்றான்.
குமாரன் திரும்பிவருதல்
“அந்த குமாரன் தொலைவில் வரும்போதே அவனது தந்தை பார்த்துவிட்டார். அந்த குமாரனின் நிலையைக் கண்டு தந்தை வருந்தினார். எனவே தந்தை மகனிடம் ஓடினார். குமாரனை அரவணைத்து முத்தமிட்டார். 21 குமாரன், ‘தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களுக்கும் தவறு இழைத்தேன். உங்கள் குமாரன் என்று அழைக்கப்படுவதற்கேற்ற தகுதி எனக்குக் கிடையாது’ என்றான்.
22 “ஆனால் தந்தை வேலைக்காரரை நோக்கி, ‘விரைந்து செல்லுங்கள். விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்டுவந்து அவனுக்கு உடுத்துங்கள். அவன் விரலுக்கு மோதிரம் அணிவித்துக் காலுக்கு நல்ல பாதரட்சைகளை அணியச் செய்யுங்கள். 23 நம் கொழுத்த கன்றை கொண்டுவாருங்கள். அதைச் சமைத்து திருப்தியாகச் சாப்பிடுவோம். ஒரு விருந்து வைப்போம். 24 என்னுடைய இந்த குமாரன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிரோடு வந்துள்ளான். அவன் காணாமல் போயிருந்தான், இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டான்’ என்று கூறினார். எனவே விருந்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.
மூத்த குமாரன் வருதல்
25 “மூத்த குமாரன் வயலில் இருந்தான். அவன் வீட்டுக்கு அருகாமையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். இசை, ஆடல் ஆகியவற்றின் சத்தத்தைக் கேட்டான். 26 எனவே மூத்த குமாரன் வேலைக்காரச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, ‘இவையெல்லாம் எதற்காக நடைபெறுகின்றன?’ என்று கேட்டான். 27 வேலைக்காரன், ‘உங்கள் சகோதரன் திரும்பி வந்துள்ளார். உங்கள் தந்தை கொழுத்த கன்றை உண்பதற்காகக் கொன்றுள்ளார். உங்கள் சகோதரன் பாதுகாப்பாகவும் நல்ல முறையிலும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி இருப்பதால் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்றான்.
28 “மூத்த குமாரன் கோபமுற்று விருந்துக்குச் செல்லவில்லை. எனவே தந்தை வெளியே வந்து அவனிடம் வற்புறுத்தினார். உள்ளே வருமாறு அழைத்தார். 29 குமாரன் தந்தையை நோக்கி, ‘நான் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் பல ஆண்டுகள் உழைத்தேன்! உங்கள் கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தேன். ஆனால் ஒரு வெள்ளாட்டையாகிலும் நீங்கள் எனக்காகக் கொன்றதில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் நீங்கள் விருந்தளித்ததில்லை. 30 ஆனால் உங்கள் இன்னொரு குமாரன் பணத்தை எல்லாம் வேசிகளிடம் செலவழித்தான். பின்னர் வீடு திரும்பியதும் அவனுக்காகக் கொழுத்த கன்றுக் குட்டியை கொன்றீர்கள்’ என்றான்.
31 “ஆனால் தந்தை அவனை நோக்கி, ‘மகனே! நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியவை அனைத்தும் உனக்கு உரியவை. 32 நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்’ என்றார்” என்று கூறினார்.
2008 by World Bible Translation Center