Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 7

எலிசா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! அவர், ‘நாளை இதே நேரத்தில், உணவு பொருட்கள் மிகுதியாகக் கிடைக்கும். அவற்றின் விலை மலிவாக இருக்கும். சமாரியாவின் வாசல் அருகிலுள்ள சந்தையில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் ஒருவனால் வாங்கமுடியும்’ என்று கூறுகிறார்” என்றான்.

பிறகு ராஜாவுக்கு நெருக்கமான அதிகாரி தேவ மனிதனை நோக்கி, “கர்த்தர் பரலோகத்திலே ஜன்னல் அமைத்தாலும், இதுபோல் நடக்காது” என்று சொன்னான்.

அதற்கு எலிசா, “உனது கண்களால் காண்பாய். ஆனால் அந்த உணவை நீ உண்ணமாட்டாய்” என்றான்.

ஆராமிய முகாம் காலியானதைக் கண்டுபிடித்த தொழுநோயாளிகள்

நகர வாசலருகில் நான்கு தொழு நோயாளிகள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள், “நாம் மரணத்தை எதிர்பார்த்து ஏன் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறோம்? சமாரியாவில் உண்ண உணவில்லை. நகரத்திற்குள் போனால் நாம் மரித்துப்போவாம். இங்கிருந்தாலும் மரித்துப்போவோம். எனவே ஆராமிய படைக்குச் செல்வோம். அவர்கள் வாழவைத்தால் வாழ்வோம், கொல்ல நினைத்தால் மரித்துப்போவோம்” என்றனர்.

எனவே அன்று மாலையில் அவர்கள் ஆராமியர்களின் முகாமிற்கு அருகில் சென்றார்கள். முகாமின் விளிம்புவரைக்கும் சென்றார்கள். அங்கு யாருமே இல்லை எனக் கண்டார்கள்! ஆராமிய வீரர்களின் காதுகளில் வீரர்கள், குதிரைகள், இரதங்கள், ஆகியவற்றின் ஓசையைக் கேட்கும்படி கர்த்தர் செய்தார். அவர்கள் தமக்குள், “ஏத்திய மற்றும் எகிப்திய ராஜாக்களின் துணையுடன் இஸ்ரவேல் ராஜா நம்மோடு போர் செய்யவருகிறான்!” என்று பேசிக் கொண்டனர்.

அதனால் அவர்கள் (பயந்து) அன்று மாலையே ஓடிவிட்டனர். அப்போது கூடாரங்கள், குதிரைகள், கழுதைகள் முகாமில் உள்ள எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுத் தம் உயிருக்காக ஓடிவிட்டனர்.

பகை முகாம்களில் தொழுநோயாளிகள்

முகாம் தொடங்கும் இடத்திற்கு வந்தடைந்த தொழுநோயாளிகள், காலியாக இருந்த கூடாரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் நன்றாக உண்டு குடித்தனர். பின் அவர்கள் தங்கம், வெள்ளி, துணி போன்றவற்றை அள்ளிக்கொண்டு வந்தனர். வெளியே கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் இன்னொரு கூடாரத்திற்குள் நுழைந்தனர். அங்குள்ள பொருட்களையும் எடுத்துப் போய் ஒளித்து வைத்தனர். பிறகு அவர்கள் தங்களுக்குள், “நாம் தவறு செய்கிறோம்! இன்று நம்மிடம் நல்ல செய்தி உள்ளது. ஆனால் அமைதியாக இருக்கிறோம். விடியும்வரை இவ்வாறு இருந்தால் தண்டிக்கப்படுவோம். எனவே இப்போது ராஜாவினுடைய வீட்டில் இருக்கிற ஜனங்களிடம் சொல்வோம்” என்று சொல்லிக்கொண்டனர்.

தொழுநோயாளிகள் சொன்ன நற்செய்தி

10 எனவே தொழுநோயாளிகள் வந்து வாயில் காவலரை அழைத்தனர். அவர்களிடம், “நாங்கள் ஆராமியர்களின் முகாமிற்குச் சென்றோம். அங்கே மனிதர்களும் யாரும் இல்லை. குதிரைகளும் கழுதைகளும் கட்டப்பட்டுள்ளன. கூடாரங்களும் அங்கு உள்ளன. ஆனால் மனிதர்கள் யாரும் இல்லை” என்றனர்.

11 பிறகு நகரவாயில் காப்போர்கள் சத்தமிட்டு அரண்மனையில் உள்ளவர்களிடம் சொன்னார்கள். 12 அது இரவு நேரம், ஆனால் ராஜா படுக்கையிலிருந்து எழுந்து தன் அதிகாரிகளிடம், “ஆராமிய வீரர்கள் நமக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று கூறுகிறேன். நமது பட்டினியையும் வறுமையையும் பார்த்து, கூடாரத்தைவிட்டு வயலில் ஒளிந்துக்கொண்டனர். ‘இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தைவிட்டு வெளியே வரும்போது உயிரோடு நாம் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம்’ என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ‘அதன் பிறகு நகருக்குள் நுழையலாம்’ என்று இருக்கிறார்கள்” என்று சொன்னான்.

13 ஒரு அதிகாரியோ, “சிலர் 5 குதிரைகளைக் கொண்டுபோக அனுமதி வழங்குங்கள். அவை எப்படியாவது இங்கு மரித்துப் போகும். இவை ஜனங்களைப் போலவே பட்டினியாக உள்ளன. அவற்றை அனுப்பிப் பார்ப்போம்” என்றான்.

14 எனவே ஜனங்கள் இரண்டு இரதங்களைக் குதிரையோடு தயார் செய்தனர். ராஜா அவர்களை ஆராமியப் படையை நோக்கி அனுப்பினான். ராஜா அவர்களிடம், “என்ன நடக்கிறது என்று போய் பாருங்கள்” என்றான்.

15 அவர்கள் ஆராமியர்களைத் தொடர்ந்து யோர்தான் ஆறுவரைக்கும் சென்றார்கள். வழியெல்லாம் ஆடைகளும் ஆயுதங்களும் கிடந்தன. அவை வீரர்கள் ஓடும்போது எறிந்தவை. தூதர்கள் ராஜாவிடம் திரும்பி வந்து இவற்றைக் கூறினார்கள்.

16 பிறகு ஜனங்கள் கூடாரங்களுக்கு ஓடிப் போய் அங்குள்ள பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவந்தனர். எனவே இது கர்த்தர் சொன்னது போலானது. ஒருவனால் ஒரு மரக்கால் கோதுமை மாவை ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமையை ஒரு சேக்கலுக்கும் வாங்க முடிந்தது.

17 ராஜாவின் அரச ஆணைப்படி காவலுக்கு நெருக்கமான அதிகாரி வாசலில் இருந்தான். ஜனங்கள் கூடாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அவனைத் தள்ளி மிதித்துவிட்டு ஓடியதால் கொல்லப்பட்டான். ராஜா அவரது வீட்டிற்கு போனபோது, தேவமனிதர் (எலிசா) சொன்னது போலவே எல்லாம் நடந்தது. 18 எலிசா, “சமாரியாவின் நகர வாசலுக்கருகில் உள்ள சந்தையில் ஒருவன் ஒரு மரக்கால் கோதுமை மாவை ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமையை ஒரு சேக்கலுக்கும் வாங்கமுடியும்” என்று சொல்லியிருந்தான். 19 ஆனால் அந்த அதிகாரி அவனுக்கு, “பரலோகத்தின் ஜன்னல்கள் திறந்தாலும் அது சாத்தியமில்லை!” என்று பதில் சொல்ல, எலிசா, “இதனை நீ உன் கண்களால் காண்பாய், ஆனால் அந்த உணவை உன்னால் உண்ண முடியாது” என்றான். 20 அந்த அதிகாரிக்கும் அது அவ்வாறே நடந்தது. ஜனங்கள் நகரவாசலில் அவனைத் தள்ளி, அவன் மீதே நடந்து சென்றார்கள். அவனும் செத்துப்போனான்.

1 தீமோத்தேயு 4

தவறான போதகர்களைப் பற்றி எச்சரிக்கை

வருங்காலத்தில் சிலர் உண்மையான போதனையை நம்புவதை நிறுத்திவிடுவார்கள் என்று தூய ஆவியானவர் கூறி இருக்கிறார். அவர்கள் பொய் சொல்லும் ஆவிகளுக்குத் தலைவணங்குவார்கள். அவர்கள் பிசாசுகளின் போதனைகளைப் பின்பற்றுவார்கள். பொய்யும், தந்திரமும் உடையவர்கள் மூலம் அத்தீய போதனைகள் வருகிறது. அந்த மக்கள் சரி எது, தவறு எது என்று பார்க்கமாட்டார்கள். அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மை, சூடு போடப்பட்டு, அழிக்கப்பட்டதைப் போன்றது. அவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்கின்றனர். சில உணவு வகைகளை உண்ணக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் அந்த உணவுகளை தேவனே படைத்திருக்கிறார். நம்புகிறவர்களும், உண்மையை அறிந்தவர்களும் அவற்றை நன்றியோடு உண்ணலாம். தேவனால் படைக்கப்பட்ட அனைத்துமே நல்லதுதான். நன்றிக் கடனாகப் பெறுகிறவரையில் தேவனால் உருவாக்கப்பட்ட எதையும் மறுக்கக்கூடாது. தேவனால் படைக்கப்பட்டவை எல்லாம் தேவனுடைய வார்த்தையாலும் பிரார்த்தனைகளாலும் தூய்மையாக்கப்படும்.

கிறிஸ்துவின் நல்ல வேலையாளாக இரு

அங்குள்ள சகோதர சகோதரிகளிடமும் இவற்றைக் கூறு. இவை நீ இயேசு கிறிஸ்துவின் நல்ல வேலையாள் என்பதைக் காட்டும். விசுவாசமான வார்த்தைகளாலும், பின்பற்றப்படுகிற நல்ல போதனையாலும் நீ பலப்படுத்தப்படுகிறாய் என்றும் காட்டுவாய். மக்கள் சொல்கிற அர்த்தமற்ற கதைகள் தேவனுடைய உண்மையோடு சற்றும் பொருந்தாதவை. அவற்றின் கூற்றுக்களைப் பின்பற்றாதே. தேவனுக்கு உண்மையான சேவையைச் செய்ய கற்றுக்கொள். உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது. ஆனால் தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும். நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். 10 இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.

11 கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய். 12 நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு.

13 மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய். 14 உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய். 15 இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர். 16 உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.

தானியேல் 11

11 மேதியனாகிய தரியுவின் முதலாம் ஆட்சியாண்டில், மிகாவேல், பெர்சியா அதிபதிக்கு எதிராகப் போர் செய்தபோது நான் அவனுக்கு உதவியாக நின்றேன்.

“இப்பொழுதும், தானியேலே, நான் உண்மையைச் சொல்கிறேன். பெர்சியாவில் மேலும் மூன்று ராஜாக்கள் ஆளூகைச் செய்வார்கள். பிறகு நாலாவது ராஜா ஒருவன் வருவான். அந்த நாலாவது ராஜா பெர்சியாவை இதற்கு முன் ஆண்ட எல்லா ராஜாக்களைவிட செல்வந்தனாக இருப்பான். அந்த நாலாவது ராஜா வல்லமையைப் பெறுவதற்கு தனது செல்வத்தைப் பயன்படுத்துவான். அவன், எல்லோரும் கிரேக்க இராஜ்யத்திற்கு எதிராக இருக்கக் காரணமாவான். பிறகு மிகவும் பலமும், வல்லமையும் கொண்ட ராஜா வருவான். அவன் பெரும் வல்லமையுடன் ஆள்வான். அவன் விரும்புகிற எதையும் செய்வான். அதற்குப் பிறகு அவனது இராஜ்யம் உடைந்துபோகும். உலகின் நான்கு பாகங்களாக அவனது இராஜ்யம் பங்கு வைக்கப்படும். அவனது இராஜ்யம் அவனது பிள்ளைகளுக்கோ, பேரப்பிள்ளைகளுக்கோ பங்கு வைக்கப்படமாட்டாது. அவன் பெற்ற வல்லமையை அவனது இராஜ்யம் பெறாது. ஏனென்றால் அவனது இராஜ்யம் பிடுங்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.

“தெற்கிலுள்ள ராஜா பலமுள்ளவனாவான். ஆனால் அவனது தளபதிகளில் ஒருவன் தெற்கிலுள்ள ராஜாவைத் தோற்கடிப்பான். அந்தத் தளபதி ஆளத்தொடங்குவான். அவன் மிகவும் வல்லமையுடையவனாக இருப்பான்.

“பிறகு சில ஆண்டுகள் கழிந்ததும் தென் பகுதி ராஜாவும் அந்தத் தளபதியும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். தென் பகுதி ராஜாவின் குமாரத்தி, வடபகுதி ராஜாவை மணந்துகொள்வாள். அவள் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக இதனைச் செய்வாள். ஆனால் அவளும், தென் பகுதி ராஜாவும் போதுமான வல்லமையுடைவர்களாக இருக்கமாட்டார்கள். ஜனங்கள் அவளுக்கு எதிராகவும், அவளை அந்நாட்டுக்குக் கொண்டுவந்தவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள். அந்த ஜனங்கள் அவளது குழந்தைக்கு எதிராகவும், அவளுக்கு உதவியவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள்.

“ஆனால் அவளது குடும்பத்திலிருந்து ஒருவன் வந்து தென்பகுதி ராஜாவின் இடத்தைப் பிடிக்க வருவான். அவன் வடபகுதி ராஜாவின் படையைத் தாக்கி, அவனது பலம்வாய்ந்த கோட்டைக்குள் நுழைவான். அவன் போர் செய்து வெல்வான். அவன் அவர்கள் தெய்வங்களின் விக்கிரகங்களை எடுப்பான். அவன் அவர்களின் உலோக விக்கிரகங்களை எடுப்பான். வெள்ளியாலும், பொன்னாலுமான விலைமதிப்புள்ளவற்றையும் எடுப்பான். அவன் அவற்றை எகிப்துக்கு எடுத்துச்செல்வான். அவன் சில ஆண்டுகள் வடபகுதி ராஜாவுக்குத் தொல்லை கொடுக்கமாட்டான். வடபகுதி ராஜா, தெற்கு இராஜ்யத்தைத் தாக்குவான். ஆனால் அவன் தோல்வியடைந்து தனது சொந்தநாட்டிற்குப் போவான்.

10 “வடபகுதி ராஜாவின் குமாரர்கள் போருக்குத் தயார் செய்வார்கள். அவர்கள் ஒரு பெரும் படையைச் சேர்ப்பார்கள். அந்தப் படை நாட்டை வெள்ளம்போல் வேகமாகக் கடக்கும். அந்தப் படை தெற்கத்தி ராஜாவின் பலமான கோட்டை வரை தாக்கும். 11 பிறகு தென்பகுதி ராஜா மிகவும் கோபங்கொள்வான். அவன் வடபகுதி ராஜாவோடு போரிட படையை நடத்திச் செல்வான். வடபகுதி ராஜாவுக்குப் பெரும்படை இருக்கும். ஆனால் அவன் போரில் தோல்வியடைவான். 12 வடபகுதி படை தோற்கடிக்கப்படும். அவ்வீரர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள். தென்பகுதி ராஜா மிகவும் பெருமைகொள்வான். அவன் வடபகுதிப் படையில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வான். ஆனால் அவன் தொடர்ந்து வெற்றி பெறமாட்டான். 13 வடபகுதி ராஜா இன்னொரு படையைப் பெறுவான். அப்படை முந்திய படையைவிட மிகப் பெரியதாக இருக்கும். பல ஆண்டுகளுக்குப்பிறகு அவன் தாக்குவான். அப்படைக்கு ஏராளமான ஆயுதங்கள் இருக்கும். அப்படை போரிடத் தயாராக இருக்கும்.

14 “அந்தக் காலங்களில், பல ஜனங்கள் தென்பகுதி ராஜாவுக்கு எதிராக மாறுவார்கள். உனது சொந்த ஜனங்களில் சிலர் போரை நேசிப்பவர்கள் தென் பகுதி ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்வார்கள். அவர்கள் வெல்லமாட்டார்கள். ஆனால், அவர்கள் இதைச் செய்யும்போது இந்தத் தரிசனத்தை உண்மையாக்குவார்கள். 15 பிறகு வடபகுதி ராஜா வந்து நகரத்தின் மதில்களுக்கெதிராகக் கொத்தளங்களைக் கட்டுவான். பிறகு பலமான நகரத்தைப் பிடிப்பான். தென் பகுதி படைக்குத் திரும்பவும் போரிட வல்லமை இராது. தென்பகுதிப் படையிலுள்ள சிறந்த வீரர்களும் வடபகுதிப் படையைத் தடுக்கிற வல்லமை இல்லாமல் இருப்பார்கள்.

16 “வடபகுதி ராஜா தான் விரும்பியதையெல்லாம் செய்வான். எவரும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் வல்லைம பெற்று அழகான நாட்டை தன் அதிகாரத்திற்குள் கொண்டுவருவான். அவன் அதை அழிக்கிற வல்லமையையும் பெற்றிருப்பான். 17 வடபகுதி ராஜா தனது வல்லமை அனைத்தையும் பயன்படுத்தி தென்பகுதி ராஜாவோடு போரிட முடிவு செய்வான். அவன் தென்பகுதி ராஜாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். வடபகுதி ராஜா தனது குமாரத்திகளுள் ஒருத்தியைத் தென்பகுதி ராஜாவை மணந்துகொள்ளச் செய்வான். வடபகுதி ராஜா தென்பகுதி ராஜாவைத் தோற்கடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்வான். ஆனால் அத்திட்டங்கள் வெற்றியடையாது, அவன் திட்டங்கள் அவனுக்கு உதவாது.

18 “பிறகு வடபகுதி ராஜா தன் கவனத்தை மத்தியத் தரைக்கடல் கரையோர நாடுகளுக்கு நேராகத் திருப்புவான். அங்குள்ள பல நகரங்களை அவன் தோற்கடிப்பான். ஆனால் பிறகு ஒரு தளபதி அவனது பெருமைக்கும், கலகச் செயல்களுக்கும் ஒரு முடிவு காண்பான். அந்த தளபதி, வடபகுதி ராஜா வெட்கமடையும்படிச் செய்வான்.

19 “அது நடந்தபிறகு, வடபகுதி ராஜா பலமான அரண்களுடைய தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போவான். ஆனால் அவன் பலவீனமுடையவனாக இருப்பான். அவன் விழுவான். அவன் முடிவடைவான்.

20 “அந்த வடபகுதி ராஜாவுக்குப்பிறகு ஒரு புதிய ராஜா வருவான். அந்த ராஜா ஒரு வரிவசூலிப்பவனை அனுப்புவான். அந்த ராஜா தான் வளமான வழியில் வாழ போதிய செல்வம் உடையவனாக இருக்க இதனைச் செய்வான். ஆனால் சில ஆண்டுகளில் அந்த ராஜா அழிக்கப்படுவான். ஆனால் அவன் போரில் மரிக்கமாட்டான்.

21 “அந்த ராஜாவைப் பின்தொடர்ந்து ஒரு கொடுமையான வெறுக்கத்தக்க மனிதன் வருவான். அவனுக்கு அரச குடும்பத்தவன் என்ற பெருமை இருக்காது. அவன் தந்திரமான வழியில் ராஜா ஆவான். ஜனங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரும்போது அவன் இராஜ்யத்தைத் தாக்குவான். 22 அவன் பெரிய வல்லமை மிக்கப் படைகளைத் தோற்கடிப்பான். அவன் ஒப்பந்தம் உடைய தலைவனையும் தோற்கடிப்பான். 23 பல நாடுகள் இந்தக் கொடூரமான வெறுக்கதக்க ராஜாவோடு ஒப்பந்தத்தைச் செய்துகொள்வார்கள். ஆனால் அவன் அவர்களிடம் பொய் பேசி ஏமாற்றிவிடுவான். அவன் பெரும் பலத்தைப் பெறுவான். ஆனால் வெகு சிலர் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

24 “வளமான நாடுகள் பாதுகாப்பை உணரும்போது கொடூரமும் வெறுக்கத்தக்கக் குணமும் கொண்ட அந்த ராஜா போய் தாக்குவான். அவன் சரியான காலத்தில் தாக்கி அவனது பிதாக்கள் வெற்றிபெறாத இடங்களில் தான் வெற்றிபெறுவான். அவன் தோற்கடித்த நாடுகளிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்வான். அவன் அப்பொருட்களைத் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுப்பான். அவன் பலமான நகரங்களைத் தோற்கடித்து அழிக்கத் திட்டம் போடுவான். அவன் வெற்றிபெறுவான். ஆனால் அது குறுகிய காலத்திற்குத்தான்.

25 “அந்த கொடூரமான வெறுக்கத்தக்க ராஜாவுக்கு மிகப்பெரிய படை இருக்கும். அவன் அப்படையைப் பயன்படுத்தி தனது வல்லமையையும் தைரியத்தையும் காட்டி தென் பகுதி ராஜாவைத் தாக்குவான். தென் பகுதி ராஜா மிகப்பெரியதும், வல்லமை உடையதுமான படையைப் பெற்று போருக்குப் போவான். ஆனால் அவனுக்கு எதிரான ஜனங்கள் இரகசிய திட்டங்களை இடுவார்கள். தென்பகுதி ராஜா தோற்கடிக்கப்படுவான். 26 தென்பகுதி ராஜாவுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் அவனை அழிக்க முயற்சி செய்வார்கள். அவனது படை தேற்கடிக்கப்படும். போரில் அவனது படைவீர்களில் பலர் கொல்லப்படுவார்கள். 27 அந்த இரண்டு ராஜாக்களும் ஒருவருக்கு ஒருவர் தீமைச் செய்ய நினைப்பார்கள். அவர்கள் ஒரே பந்தியில் உட்கார்ந்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் பொய் சொல்வார்கள். அதனால் இருவருக்கும் எந்த நன்மையும் விளைவதில்லை. ஏனென்றால் தேவன் அவர்களது முடிவுகாலத்தைக் குறித்திருக்கிறார்.

28 “வடபகுதி ராஜா பெருஞ்செல்வத்தோடு தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான். பிறகு அவன் பரிசுத்தமான உடன்படிக்கைக்கு எதிராக தீமைகளைச் செய்ய முடிவுச் செய்வான். அவன் தனது திட்டப்படி செய்தபிறகு, தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான்.

29 “ஏற்ற காலத்தில் வடபகுதி ராஜா தென் பகுதி ராஜாவை மறுபடியும் தாக்குவான். ஆனால் இந்த முறை அவன் முன்புபோல வெற்றிபெறமாட்டான். 30 கித்தீமிலிருந்து கப்பல்கள் வந்து வட பகுதி ராஜாவுக்கு எதிராகப் போரிடும். அக்கப்பல்கள் வந்து அவனை அச்சுறுத்துவதை அவன் காண்பான். பிறகு அவன் திரும்பிப் போய் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபங்கொள்வான். அவன் திரும்பி, பரிசுத்த உடன்படிக்கைகளைக் கைவிட்டவர்களை ஆதரிப்பான். 31 வடபகுதி ராஜா தனது படையை எருசலேம் ஆலயத்தில் பயங்கரமான செயல்களைச் செய்ய அனுப்புவான். அவர்கள் ஜனங்களைத் தினபலி கொடுக்காதபடிக்குத் தடுப்பார்கள். பிறகு அவர்கள் உண்மையிலேயே பயங்கரமான செயல்களைச் செய்வார்கள். அழிவுக்குக் காரணமாகும் அந்தப் பயங்கரமான காரியத்தை ஏற்படுத்துவார்கள்.

32 “வடபகுதி ராஜா பொய்களையும் இச்சகப் பேச்சையும் பயன்படுத்தி பரிசுத்த உடன்படிக்கையைப் பின்பற்றுவதை யூதர்கள் கைவிடும்படி செய்வான். அந்த யூதர்கள் மீண்டும் மிக மோசமான பாவங்களைச் செய்வார்கள். ஆனால் தேவனை அறிந்த, அவருக்குக் கீழ்ப்படிகிற யூதர்கள் பலம் பெறுவார்கள். அவர்கள் திரும்பி எதிர்த்து போரிடுவார்கள்.

33 “அந்த யூதர்களில் ஞானமுள்ளவர்கள் பலருக்கு அறிவை உணர்த்துவார்கள். ஆனாலும் ஞானிகள் கூட கொடுமைப்படுத்தப்படுவார்கள். சில ஞானமுள்ள யூதர்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். அவர்களில் சிலர் எரிக்கப்படுவார்கள், அல்லது சிறைபடுத்தப்படுவார்கள். சில யூதர்களின் சொத்துக்களும் வீடுகளும் கொள்ளையடிக்கப்படும். 34 அறிவுமிக்க யூதர்கள் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கொஞ்சம் உதவியும் பெறுவார்கள். ஆனால் அவர்களோடு சேரும் அநேக யூதர்கள் போலிகளாக இருப்பார்கள். 35 அறிவுமிக்க யூதர்களில் சிலர் தவறுகள் செய்து விழுவார்கள். ஆனாலும் கொடுமைக் காலம் வர வேண்டும். ஏனென்றால் அப்பொழுது அவர்கள் பலமுள்ளவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் ஆகமுடியும். இது முடிவுகாலம் வரும்வரை இருக்கும். பிறகு, சரியான நேரத்தில் முடிவு காலம் வரும்.

தன்னையே புகழும் ராஜா

36 “வடபகுதி ராஜா தான் விரும்புகிறதையெல்லாம் செய்வான். அவன் தன்னைப் பற்றியே பேசுவான். அவன் தன்னையே புகழுவான். தன்னைத் தேவனை விட பெரியவனாக நினைப்பான். அவன் இதுவரை எவரும் கேட்காதவற்றையெல்லாம் பேசுவான். அவன் தெய்வங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பவருக்கெதிராக அவ்வாறு பேசுவான். அனைத்து தீமைகளும் ஏற்படும்வரை அவன் வெற்றிபெறுவான். தேவன் என்ன திட்டமிட்டிருக்கிறாரோ அது நடைபெறும்.

37 “அந்த வடபகுதி ராஜா தனது பிதாக்கள் தொழுத தெய்வங்களைப்பற்றி கவலைப்படமாட்டான். அவன் பெண்களால் தொழுகை செய்யப்படும் விக்கிரகங்களைப் பற்றியும் கவலைப்படமாட்டான். அவன் எந்த தேவனைப்பற்றியும் கவலைப்படமாட்டான். அதற்குப் பதில் அவன் தன்னைத் தானே புகழுவான். அவன் மற்ற தெய்வங்களைவிடத் தன்னையே முக்கியமானவனாக ஆக்கிக்கொள்வான். 38 வடபகுதி ராஜா எந்தத் தேவனையும் தொழுதுகொள்ளமாட்டான். ஆனால் அவன் அதிகாரத்தைத் தொழுதுகொள்வான். அதிகாரமும் வல்லமையுமே அவனது தெய்வங்கள். அவன் பிதாக்கள் தன்னைப் போல் வல்லமையை நேசிக்கவில்லை. அவன் அதிகாரமாகிய தேவனை பொன்னாலும், வெள்ளியாலும் விலைமதிப்புள்ள நகைகளாலும், அன்பளிப்புகளாலும், பெருமைப்படுத்துவான்.

39 “அந்த வடபகுதி ராஜா பலம் வாய்ந்த கோட்டைகளை அந்நிய தெய்வங்களின் உதவியுடன் தாக்குவான். அவன் தன்னோடு சேர்ந்த அயல்நாட்டு ராஜாக்களுக்கு மிகுந்த மரியாதையைக் கொடுப்பான். அந்த ராஜாக்களுக்குக் கீழே அவன் பல ஜனங்களை வைப்பான். அவர்கள் ஆளும் நாடுகளுக்காக வரி வசூலிப்பான்.

40 “முடிவின் காலத்தில் தென்பகுதி ராஜா வடபகுதி ராஜாவோடு போர் செய்வான். வட பகுதி ராஜா அவனைத் தாக்குவான். இரதங்களோடும், குதிரைப்படை வீரர்களோடும், பல பெரிய கப்பல்களோடும் வந்து தாக்குவான். வடபகுதி ராஜா நாட்டை விட்டு வெள்ளத்தைப் போன்று வேகமாக ஓடுவான். 41 வடபகுதி ராஜா அழகான தேசத்தைத் தாக்குவான். வடபகுதி ராஜாவால் பல நாடுகள் தோற்கடிக்கப்படும். ஆனால் ஏதோம், மோவாப், அம்மோன் தலைவர்கள் அவனிடமிருந்து காப்பாற்றப்படுவர். 42 வடபகுதி ராஜா பல நாடுகளில் தன் வல்லமையைக் காட்டுவான். எகிப்தும் தான் எவ்வளவு வல்லமையானவன் என்பதை தெரிந்துகொள்ளும். 43 அவன் எகிப்திலுள்ள பொன்னும் வெள்ளியுமான எல்லாச் செல்வங்களையும் பெறுவான். லீபியரும், எத்தியோப்பியரும் அவனுக்கு அடிபணிவார்கள். 44 ஆனால் வடக்கத்தி ராஜா கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் அவனை அச்சமும் கோபமும் கொள்ளத்தக்கச் செய்திகளைக் கேட்பான். அவன் பல தேசங்களை முழுமையாக அழிக்கப் போவான். 45 கடல்களுக்கு இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையில் தனது இராஜ கூடாரத்தை அமைத்துக்கொள்வான். ஆனால் இறுதியில், அத்தீய ராஜா சாவான். அவனது முடிவுகாலம் வரும்போது அவனுக்கு உதவிச் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள்.”

சங்கீதம் 119:25-48

டாலெத்

25 நான் விரைவில் மரிப்பேன்.
    கர்த்தாவே, கட்டளையிடும், என்னை வாழவிடும்.
26 நான் என் வாழ்க்கையைப்பற்றி உமக்குக் கூறினேன்.
    நீர் எனக்கு பதிலளித்தீர்.
    இப்போது, உமது சட்டங்களை எனக்குக் கற்பியும்.
27 கர்த்தாவே, உமது சட்டங்களை நான் புரிந்துகொள்ள எனக்கு உதவும்.
    நீர் செய்த அற்புதமான காரியங்களை நான் படிக்கட்டும்.
28 நான் வருத்தமடைந்து களைத்துப்போனேன்.
    நீர் கட்டளையிடும், என்னை மீண்டும் பலப்படுத்தும்.
29 கர்த்தாவே, நான் பொய்யாக வாழாதபடிச் செய்யும்.
    உமது போதனைகளால் என்னை வழிநடத்தும்.
30 கர்த்தாவே, நான் உம்மிடம் நேர்மையாயிருப்பதைத் தேர்ந்தெடுத்தேன்.
    உமது ஞானமுள்ள முடிவுகளை நான் கவனமாகக் கற்கிறேன்.
31 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன்.
    நான் வெட்கமடையவிடாதிரும்.
32 நான் மகிழ்ச்சியோடு உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
    கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை மகிழ்ச்சியாக்கும்.

33 கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும்,
    நான் அவற்றைப் பின்பற்றுவேன்.
34 நான் புரிந்துகொள்ள உதவும்.
    நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
    நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.
35 கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும்.
    நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.
36 செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது
    உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும்.
37 கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும்,
    உமது வழியில் வாழ எனக்கு உதவும்.
38 ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது
    ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும்.
39 கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும்.
    உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.
40 பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
    எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும்.

வௌ

41 கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டும்.
    நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
42 அப்போது என்னை அவமானப்படுத்திய ஜனங்களுக்கு நான் பதிலளிக்கமுடியும்.
    கர்த்தாவே, நீர் கூறும் காரியங்களை நான் உண்மையாகவே நம்புகிறேன்.
43 உமது உண்மையான போதனைகளை நான் எப்போதும் பேசட்டும்.
    கர்த்தாவே, நான் உமது ஞானமுள்ள முடிவுகளை சார்ந்திருக்கிறேன்.
44 கர்த்தாவே, என்றென்றைக்கும் எப்போதும் உமது போதனைகளைப் பின்பற்றுவேன்.
45 நான் விடுதலையாவேன், ஏனெனில் நான் உமது
    சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
46 நான் உமது உடன்படிக்கையை ராஜாக்களோடு கலந்து ஆலோசிப்பேன்.
    அவர்கள் என்னை ஒருபோதும் அவமானப்படுத்தமாட்டார்கள்.
47 கர்த்தாவே, உமது கட்டளைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
    நான் அக்கட்டளைகளை நேசிக்கிறேன்.
48 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளைத் துதிக்கிறேன்.
    அவற்றை நேசிக்கிறேன். நான் அவற்றைக் கற்பேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center