M’Cheyne Bible Reading Plan
யாக்கோபு ராகேலைச் சந்திக்கிறான்
29 பிறகு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்கே உள்ள நாட்டுக்குப் போனான். 2 யாக்கோபு வயல்வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தான். அக்கிணற்றின் அருகில் மூன்று ஆட்டு மந்தைகள் மடக்கப்பட்டிருப்பதையும் பார்த்தான். அக்கிணறு தான் ஆடுகள் தண்ணீர் குடிக்கும் இடம் ஆகும். கிணற்றின் வாயானது ஒரு பெரிய கல்லால் அடைக்கப்பட்டிருந்தது. 3 ஆடுகள் எல்லாம் அங்கு ஒன்று சேர்ந்ததும் மேய்ப்பர்கள் கிணற்றை மூடியுள்ள பாறையை அகற்றி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். ஆடுகள் வயிறு நிறைய தண்ணீர் குடித்த பிறகு மேய்ப்பர்கள் அக்கிணற்றைப் பாறையால் மூடி வைப்பார்கள்.
4 யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “சகோதரர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
மேய்ப்பர்கள், “நாங்கள் ஆரானிலிருந்து வருகிறோம்” என்றார்கள்.
5 பிறகு யாக்கோபு “உங்களுக்கு லாபானைத் தெரியுமா? அவர் நாகோரின் மகன்” என்று கேட்டான்.
மேய்ப்பர்கள் “எங்களுக்குத் தெரியும்” என்று பதில் சொன்னார்கள்.
6 “அவர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான் யாக்கோபு.
அதற்கு அவர்கள் “அவர் நன்றாக இருக்கிறார். அதோ பாரும் அவரது மகள் ராகேல் ஆட்டு மந்தையோடு வந்துகொண்டிருக்கிறாள்” என்றார்கள்.
7 யாக்கோபு, “சூரியன் அஸ்தமிக்க இன்னும் பொழுது இருக்கிறதே. ஆடுகளை இன்னும் கொஞ்சம் மேய்த்து தண்ணீர் காட்டலாமே! இது ஆடுகளை அடைக்கிற நேரமில்லையே. தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் அவற்றை, வயல்வெளிக்கு அனுப்புங்கள்” என்றான்.
8 அதற்கு மேய்ப்பர்கள், “எல்லா ஆடுகளும் சேருமுன்னால் நாங்கள் அவ்வாறு செய்யக் கூடாது. சேர்ந்த பின்னரே கிணற்றின் கல்லை அகற்றுவோம் அப்போது எல்லா ஆடுகளும் தண்ணீர் குடிக்கும்” என்றனர்.
9 யாக்கோபு மேய்ப்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போதே ராகேல் தன் தந்தையின் ஆடுகளோடு வந்தாள். (அவளது வேலையே ஆடு மேய்ப்பது தான்.) 10 ராகேல் லாபானின் மகள். லாபான் யாக்கோபின் தாயான ரெபெக்காளின் சகோதரன். அவன் ராகேலைக் கண்டதும் கிணற்றின் மேலுள்ள கல்லை நகர்த்தி ஆடுகள் தண்ணீர் குடிக்க உதவினான். 11 பிறகு அவன் ராகேலை முத்தமிட்டு, அழுதான். 12 அவன் அவளிடம், தான் அவளது தந்தையின் குடும்பத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான். தான் ரெபெக்காளின் மகன் என்றான். ராகேல் ஓடிப் போய் தந்தையிடம் கூறினாள்.
13 லாபான் தன் சகோதரியின் மகன் யாக்கோபைப்பற்றிக் கேள்விப்பட்டதும் அவனைச் சந்திக்க ஓடி வந்தான். அவனை அணைத்து முத்தமிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். யாக்கோபு நடந்தவற்றையெல்லாம் சொன்னான்.
14 அப்பொழுது லாபான் “இது ஆச்சரியமானது. நீ எனது சொந்தக் குடும்பத்தில் உள்ளவன்” என்றான். எனவே யாக்கோபு அங்கு ஒரு மாத காலம் தங்கி இருந்தான்.
லாபான் யாக்கோபிடம் தந்திரம் செய்கிறான்
15 ஒரு நாள் லாபான் யாக்கோபிடம், “நீ என்னிடம் தொடர்ந்து சம்பளமில்லாமல் வேலை செய்துகொண்டிருப்பது சரியல்ல. நீ எனது அடிமையல்ல, உறவினன். நான் உனக்கு என்ன சம்பளம் தரட்டும்?” என்று கேட்டான்.
16 லாபானுக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவள் பெயர் லேயாள் இளையவள் பெயர் ராகேல்.
17 ராகேல் மிக அழகானவள். லேயாளின் கண்களோ கூச்சம் உடையவை. [a] 18 யாக்கோபு ராகேலை நேசித்தான். எனவே அவன் லாபானிடம், “உங்கள் மகள் ராகேலை மணமுடிக்க நீங்கள் அனுமதித்தால் நான் ஏழு ஆண்டுகள் உங்களுக்காக வேலை செய்யத் தயார்” என்றான்.
19 அதற்கு லாபான், “அவள் வேறு யாரையாவது மணந்துகொள்வதைவிட உன்னை மணந்துகொள்வது அவளுக்கு நல்லது” என்றான்.
20 அதனால் யாக்கோபு அங்கு ஏழு ஆண்டுகள் தங்கி வேலை பார்த்தான். ஆனால் அவன் ராகேலை நேசித்ததால் ஆண்டுகள் வேகமாக முடிந்துவிட்டன.
21 ஏழு ஆண்டுகள் ஆனதும் அவன் லாபானிடம், “ராகேலை எனக்குத் தாருங்கள். நான் அவளை மணமுடிக்க வேண்டும். நான் வேலை செய்ய வேண்டிய காலமும் முடிந்துவிட்டது” என்றான்.
22 அதனால் அந்த இடத்திலுள்ள எல்லா ஜனங்களுக்கும் லாபான் ஒரு விருந்து கொடுத்தான். 23 அன்று இரவு அவன் தன் மூத்த மகள் லேயாளை யாக்கோபிடம் அழைத்து வந்தான். இருவரும் பாலின உறவு கொண்டனர். 24 (லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளை லேயாளுக்கு வேலைக்காரியாக ஆக்கி இருந்தான்.) 25 காலையில் எழுந்ததும் யாக்கோபு இரவு முழுக்க தன்னோடு இருந்தது லேயாள் என்பதை அறிந்துகொண்டான். லாபானிடம் சென்று “என்னை ஏமாற்றிவிட்டீர்கள். நான் ராகேலை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஏழு ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறேன். ஏன் என்னை ஏமாற்றினீர்கள்?” என்று கேட்டான்.
26 லாபான், “மூத்தவள் இருக்கும்போது இளையவளுக்கு மணம் முடிக்க எங்கள் நாட்டில் அனுமதிக்கமாட்டோம். 27 ஆனால் திருமணச் சடங்குகளை ஒரு வாரத்திற்குத் தொடர்ந்தபின் நான் உனக்கு ராகேலையும் திருமணம் செய்துகொள்ளத் தருவேன். ஆனால் நீ இன்னும் ஏழு ஆண்டுகள் எனக்குப் பணியாற்ற வேண்டும்” என்றான்.
28 எனவே யாக்கோபு அதற்கு ஒப்புக்கொண்டு ஒரு வாரத்தைக் கழித்தான். லாபான் ராகேலை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். 29 (தனது வேலைக்காரியான பில்காளை ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.) 30 யாக்கோபு ராகேலோடும் பாலின உறவு கொண்டான். அவன் லேயாளைவிட ராகேலைப் பெரிதும் நேசித்ததால் மேலும் ஏழு ஆண்டுகள் அங்கு வேலை செய்தான்.
யாக்கோபின் குடும்பம் பெருகுதல்
31 யாக்கோபு லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசிப்பதை கர்த்தர் கண்டார். எனவே லேயாள் மட்டுமே கருத்தரிக்குமாறு கர்த்தர் செய்தார். ஆனால் ராகேலோ மலடியாய் இருந்தாள்.
32 லேயாளுக்கு ஓர் மகன் பிறந்தான். அவள் அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள். “கர்த்தர் நான் படும் தொல்லைகளைக் கண்டார். என் கணவன் என்னை நேசிக்காமல் இருந்தார். இப்போது ஒரு வேளை அவர் என்னை நேசிக்கலாம்” என்று நினைத்தாள்.
33 லேயாள் மீண்டும் கர்ப்பமானாள். அவள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு சிமியோன் என்று பெயர் வைத்தாள். “நான் நேசிக்கப்படாததைக் கண்டு கர்த்தர் எனக்கு இன்னொரு மகனை கொடுத்தார்” என்று கூறினாள்.
34 லேயாள் மீண்டும் கர்ப்பமாகி இன்னொரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள். “இப்பொழுது என் கணவர் என்னை நிச்சயம் நேசிப்பார். நான் அவருக்கு மூன்று மகன்களைக் கொடுத்திருக்கிறேன்” என்றாள்.
35 லேயாள் மேலும் ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள். அவள், “நான் இப்போது கர்த்தரைத் துதிப்பேன்” என்றாள். பிறகு குழந்தை பெறுவது நின்றுவிட்டது.
இயேசுவின் உயிர்த்தெழுதல்(A)
28 ஓய்வு நாளுக்குப் பிறகு மறுநாள் வாரத்தின் முதல் நாள் அன்று அதிகாலை மகதலேனா மரியாளும், மரியாள் எனப் பெயர் கொண்ட மற்றப் பெண்ணும் இயேசுவின் கல்லறையைக் காணச் சென்றார்கள்.
2 அப்பொழுது மிகத் தீவிரமான பூமி அதிர்ச்சி உண்டானது. வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தூதன் கல்லறையை மூடியிருந்த பாறாங்கல்லை உருட்டிக் கீழே தள்ளினான். பின் அத்தூதன் அப்பாறாங்கல்லின் மீது அமர்ந்தான். 3 மின்னலைப் போலப் பிரகாசித்த அந்தத் தூதனின் ஆடைகள் பனி போல வெண்மையாயிருந்தன. 4 கல்லறைக்குக் காவலிருந்த போர்வீரர்கள் தூதனைக் கண்டு மிகவும் பயந்துபோனார்கள். பயத்தினால் நடுங்கிய போர்வீரர்கள் பிணத்தைப்போல பேச்சு மூச்சற்றவர்களானார்கள்.
5 தூதன் பெண்களைப் பார்த்து,, “பயப்படாதீர்கள். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவை நீங்கள் தேடுகின்றீர்கள் என்பதை நானறிவேன். 6 ஆனால் இயேசு இங்கே இல்லை. அவர் சொன்னது போலவே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். அவரது சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பாருங்கள். 7 உடனே அவரது சீஷர்களிடம் விரைந்து சென்று சொல்லுங்கள். ‘இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். அவர் கலிலேயாவிற்குச் சென்றுகொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு முன்னரே அங்கிருப்பார்.’ அங்கே நீங்கள் இயேசுவைக் காணலாம். இதோ நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்” என்று கூறினான்.
8 ஆகவே, அப்பெண்கள் விரைந்து கல்லறையை விட்டுப் புறப்பட்டார்கள். அவர்கள் பயந்துபோனார்கள். அதே சமயம் மகிழ்ச்சியடைந்தார்கள். நடந்ததை சீஷர்களிடம் சொல்ல அவர்கள் ஓடினார்கள். 9 அப்பொழுது இயேசு அவர்களின் முன்பு வந்து நின்றார். இயேசு அவர்களைப் பார்த்து, “வாழ்க” என்றார். இயேசுவின் அருகில் சென்ற பெண்கள் அவரது கால்களைத் தொட்டு வணங்கினார்கள். 10 பின்னர் இயேசு அப்பெண்களிடம்,, “பயப்படாதீர்கள். என் சகோதரர்களிடம் (சீஷர்களிடம்) சென்று கலிலேயாவிற்கு வரச்சொல்லுங்கள். அவர்கள் என்னை அங்கே காண்பார்கள்” என்றார்.
யூதத் தலைவர்களிடம் புகார்
11 பெண்கள் சீஷர்களைத் தேடிப் போனார்கள். அதே சமயம், கல்லறைக்குக் காவலிருந்த போர் வீரர்களில் சிலர் நகருக்குள் சென்றார்கள். நடந்தவை அனைத்தையும் தலைமை ஆசாரியர்களிடம் சொல்வதற்காக அவர்கள் சென்றார்கள். 12 தலைமை ஆசாரியர்கள் மூத்த யூதத் தலைவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு, அதன்படி ஒரு பொய் கூறுவதற்காக போர்வீரர்களுக்குப் பெரும் பணம் தந்தார்கள். 13 அவர்கள் போர்வீரர்களிடம்,, “நீங்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்தபொழுது இயேசுவின் சீஷர்கள் அவரது சரீரத்தைத் திருடிச் சென்றுவிட்டார்கள் என மக்களிடம் சொல்லுங்கள். 14 ஆளுநர் இதை அறிந்தால் அவரைச் சமாளித்து உங்களுக்குத் தீங்கு வராதபடி நாங்கள் காப்பாற்றுகிறோம்” என்றார்கள். 15 ஆகவே, போர் வீரர்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சொல்லியபடி செய்தார்கள். இன்றைக்கும் யூதர்களுக்கிடையில் இந்தப் பொய்யான கதை சொல்லப்பட்டு வருகிறது.
தமது சீஷர்களுடன் இயேசு பேசுதல்(B)
16 பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள். 17 மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள். ஆனால் சில சீஷர்கள் அவர் உண்மையாகவே இயேசு என்று நம்பவில்லை. 18 ஆகவே இயேசு அவர்களிடம்,, “வானத்திலும் பூமியிலும் முழு அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 19 ஆகவே உலகில் உள்ள மக்கள் அனைவரையும் சீஷர்களாக்குங்கள். பிதாவின் பெயராலும் குமாரனின் பெயராலும் பரிசுத்த ஆவியானவரின் பெயராலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்குங்கள். 20 நான் உங்களுக்குக் கூறிய அனைத்தையும் அவர்களும் பின்பற்றும்படி போதனை செய்யுங்கள். நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன் என்பதில் உறுதியாயிருங்கள். உலகின் முடிவுவரையிலும் நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன்” என்றார்.
எஸ்தர் அரசனிடம் பேசுகிறாள்
5 மூன்றாவது நாள், எஸ்தர் அவளுக்குரிய அரச உடைகளை அணிந்துக்கொண்டாள். பிறகு, அவள் அரசனது அரண்மனை உட்பகுதிக்குள் போய் நின்றாள். அப்பகுதி அரசனது சபைக்கு முன்னால் இருந்தது. அரசன் தனது சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் அரண்மனை வாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் இருந்தான். 2 பிறகு, அரசன் எஸ்தர் அரசி முற்றத்தில் நிற்பதைப் பார்த்தான். அவன் அவளைப் பார்த்தபோது மகிழ்ச்சிடைந்தான். அதனால் அவன் அவளை நோக்கி தனது கையிலுள்ள செங்கோலை நீட்டினான். எனவே, எஸ்தர் அந்த அறைக்குள் சென்று அரசன் அருகில் போனாள். பிறகு அவள் அரசனது பொற் செங்கோலின் முனையைத் தொட்டாள்.
3 பிறகு அரசன், “எஸ்தர் அரசியே, நீ விரும்புகிறது என்ன? நீ என்னிடம் என்ன வேண்டுமென கேட்கிறாய்? நீ என்ன கேட்டாலும் நான் உனக்குத் தருவேன். எனது பாதி இராஜ்யம் கேட்டாலும் தருவேன்” என்றான்.
4 அதற்கு எஸ்தர், “நான் உங்களுக்கும் ஆமானுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்று அந்த விருந்துக்கு நீங்களும் ஆமானும் வரமுடியுமா?” என்று கேட்டாள்.
5 பிறகு அரசன், “ஆமானை விரைவாக அழைத்து வா. எனவே எஸ்தர் என்ன கேட்கிறாளோ, அதன்படிச் செய்வோம்” என்றான்.
எனவே, அரசனும், ஆமானும் எஸ்தர் தயார் செய்த விருந்துக்குப் போனார்கள். 6 அவர்கள் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போது அரசன் மீண்டும் எஸ்தரிடம், “இப்போது எஸ்தரே, என்னிடம் நீ என்ன கேட்க விருப்புகிறாய்.? நான் அதனை உனக்கு கொடுப்பேன். நீ என்ன விரும்புகிறாய்? நீ என்ன விரும்பினாலும் அதனை நான் உனக்குக் கொடுப்பேன். நான் எனது பாதி இராஜ்யம்வரை கொடுப்பேன்.” என்றான். 7 எஸ்தர், “இதுதான் நான் உம்மிடம் கேட்க விரும்பியது. 8 அரசன், எனக்கு ஆதரவு கொடுத்தால், அரசன் என்னிடம் தயவாக இருந்தால், அரசனும் ஆமானும் நாளையும் வரவேண்டும். நாளை அரசனுக்கும், ஆமானுக்கும் இன்னொரு விருந்து ஏற்பாடு செய்வேன். அப்பொழுது, நான் உண்மையில் என்ன விரும்புகிறேன் என்று சொல்வேன்” எனப் பதிலுரைத்தாள்.
மொர்தெகாய் மீது ஆமானின் கோபம்
9 அவனது வீட்டைவிட்டு ஆமான் மிகவும் மகிழ்ச்சியோடு சென்றான். அவன் நல்ல மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை அரசனது வாசலில் பார்த்ததும் அவனுக்கு மொர்தெகாய் மீது கோபம் வந்தது. ஆமான் மொர்தெகாய் மீது மிகுந்த கோபமடைந்தான். ஏனென்றால், அவன் ஆமான் நடந்து வரும்போது எவ்வித மரியாதையையும் தரவில்லை. மொர்தெகாய் ஆமானைக் கண்டு பயப்படவில்லை. அது அவனை மேலும் கோபத்திற்குள்ளாக்கிற்று. 10 ஆனால் ஆமான் தனது கோபத்தைக் அடக்கிக்கொண்டு வீட்டிற்குப் போனான். பிறகு ஆமான் தனது நண்பர்களையும், மனைவி சிரேஷையும் அழைத்தான். 11 தான் எவ்வளவு செல்வமுடையவன் என்ற பெருமையோடு பேச ஆரம்பித்தான். அவன் தனது பல மகன்களைப் பற்றியும் அரசன் எவ்வழியில் எல்லாம் தன்னை பெருமைபடுத்துக்கிறான் என்பதைப் பற்றியும் பெருமையோடு பேசினான். மற்ற அதிகாரிகளைவிட தன்னை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருக்கிறான் என்பதையும் பெருமையோடு பேசினான். 12 ஆமான், “அதுமட்டுமல்ல, அரசி எஸ்தர் அரசனுக்குக் கொடுத்த விருந்தில் என்னை மட்டுமே அழைத்திருந்தாள். அவள் நாளை மீண்டும் விருந்துக்கு வருமாறு அழைத்தாள். 13 ஆனால் இவை யாவும் என்னை மகிழ்ச்சியடைய செய்யவில்லை. அந்த யூதனான மொர்தெகாய் அரசனின் வாசலில் உட்கார்ந்திருப்பதைக் காணும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று சொன்னான்.
14 பிறகு ஆமானின் மனைவி சிரேஷ் மற்றும் நண்பர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அவர்கள், “யாராவது ஒருவரை, அவனைத் தூக்கிலிட கம்பம் கட்டச் சொல். அதனை 75 அடி உயரமுள்ளதாகச் செய். பிறகு, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கில் போடுமாறு அரசனை கேள். பிறகு, அரசனோடு விருந்துக்குப் போ. அப்போது உன்னால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியும்” என்றனர்.
ஆமான் இக்கருத்தை விரும்பினான். எனவே, அவன் சிலரிடம் தூக்கு மரக் கம்பம் செய்யுமாறு கட்டளையிட்டான்.
மெலித்தா தீவில் பவுல்
28 நாங்கள் நலமாகக் கரையை அடைந்தபோது அத்தீவு மெலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம். 2 மழை பெய்துகொண்டிருந்தது. குளிர் மிகுதியாக இருந்தது. ஆனால் அங்கு வாழ்ந்த மக்கள் எங்களை அசாதாரணமான அன்புடன் நடத்தினார்கள். அவர்கள் எங்களுக்காகத் தீ மூட்டி எங்களையெல்லாம் வரவேற்றனர். 3 நெருப்பின் பொருட்டு பவுல் விறகுக் குச்சிகளை சேகரித்தான். பவுல் அக்குச்சிகளை நெருப்பில் இட்டுக்கொண்டிருந்தான். விஷப் பாம்பு ஒன்று வெப்பத்தினால் வெளியேறி வந்து பவுலின் கையில் கடித்தது. 4 தீவில் வாழ்ந்த மக்கள் பவுலின் கையில் அப்பாம்பு தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “இம்மனிதன் ஒரு கொலைக்காரனாக இருக்க வேண்டும். அவன் கடலில் இறக்கவில்லை. ஆனால் தெய்வீக நீதியானது அவன் வாழ்வதை விரும்பவில்லை” என்றனர்.
5 ஆனால் பவுல் பாம்பைத் தீயினுள் உதறினான். அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. 6 பவுல் சரீரம் வீங்கக் கூடும், அல்லது அவன் இறந்துவிடக்கூடும் என்று மக்கள் எண்ணினர். மக்கள் காத்திருந்து நீண்ட நேரம் பவுலைக் கண்காணித்தனர். ஆனால் அவனுக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. எனவே பவுலைக் குறித்த தங்கள் கருத்தை அவர்கள் மாற்றிக்கொண்டனர். அவர்கள் “அவன் ஒரு தேவன்” என்றனர்.
7 அப்பகுதியைச் சுற்றிலும் சில வயல்கள் இருந்தன. தீவின் ஒரு முக்கியமான மனிதனுக்கு அந்த வயல்கள் சொந்தமானவை. அவன் பெயர் புபிலியு. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் வரவேற்றான். அவன் எங்களுக்கு நல்லவனாக இருந்தான். நாங்கள் அவனது வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். 8 புபிலியுவின் தந்தை மிகவும் நோயுற்றுப் படுக்கையிலிருந்தார். அவருக்கு காய்ச்சலும் வயிற்றிளைச்சலும் இருந்தது. ஆனால் பவுல் அவனிடம் சென்று அவனுக்காகப் பிரார்த்தனை செய்தான். பவுல் தனது கைகளை அம்மனிதன் மீது வைத்து அவனைக் குணமாக்கினான். 9 இது நடந்த பின் தீவிலுள்ள எல்லா நோயாளிகளும் பவுலிடம் வந்தனர். அவர்களையும் கூடப் பவுல் குணமாக்கினான்.
10-11 தீவின் மக்கள் எங்களுக்குப் பல கௌரவங்களை அளித்தார்கள். (நாங்கள் தீவில் மூன்று மாதம் தங்கினோம்) நாங்கள் புறப்படுவதற்குத் தயாரானபோது எங்களுக்குத் தேவையான பொருட்களை மக்கள் கொடுத்தார்கள்.
பவுல் ரோமுக்குப் போகிறான்
அலெக்ஸாண்டிரியாவிலிருந்து வந்த ஒரு கப்பலில் நாங்கள் ஏறினோம். குளிர் காலத்தில் அக்கப்பல் மெலித்தா தீவில் தங்கியிருந்தது. மிதுனம் [a] என்னும் சின்னம் கப்பலில் முன்புறத்தில் இருந்தது. 12 சிராகூஸ் நகரில் நாங்கள் கப்பலை நிறுத்தினோம். மூன்று நாட்கள் சிராகூஸில் தங்கியிருந்து பின் புறப்பட்டோம். 13 ரேகியு நகருக்கு நாங்கள் வந்தோம். தென்மேற்கிலிருந்து மறுநாள் ஒரு காற்று வீசியது. எனவே நாங்கள் கடலில் பயணமாக முடிந்தது. ஒரு நாள் கழித்து நாங்கள் புத்தேயோலி நகருக்கு வந்தோம். 14 அங்குச் சில சகோதரர்களை நாங்கள் கண்டோம். ஒரு வாரம் தம்மோடு எங்களைத் தங்கியிருக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். இறுதியில் நாங்கள் ரோமை அடைந்தோம். 15 ரோமிலுள்ள விசுவாசிகள் நாங்கள் அங்கிருப்பதை கேள்விப்பட்டனர். அப்பியு சந்தையிலும், மூன்று விடுதிகளிலும் எங்களைச் சந்திக்கும்படியாக அவர்கள் வந்தனர். விசுவாசிகளைக் கண்டபோது பவுல் ஊக்கம் பெற்றான். பவுல் தேவனுக்கு நன்றி கூறினான்.
ரோமில் பவுல்
16 பின்பு நாங்கள் ரோமுக்குச் சென்றோம். ரோமில் பவுல் தனித்துத் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டான். ஒரு வீரன் மட்டும் பவுலைக் காவல் காப்பதற்காக அவனோடு தங்கினான்.
17 மூன்று நாளைக்குப் பின் பவுல், சில மிக முக்கியமான யூதர்களைத் தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அவர்கள் எல்லோரும் வந்தபோது பவுல், “எனது யூத சகோதரர்களே, நான் நமது மக்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை, நம் முன்னோர்களின் மரபிற்கு எதிராகவும் எதையும் நான் செய்யவில்லை. ஆனால் என்னை எருசலேமில் சிறைப்பிடித்து ரோமரிடம் ஒப்படைத்தனர். 18 ரோமர்கள் என்னை விசாரித்தார்கள். ஆனால் நான் கொல்லப்படுவதற்கு ஏதுவான எந்தக் காரணத்தையும் என்னிடம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் என்னை விடுதலை செய்ய விரும்பினர். 19 ஆனால் அங்கிருந்த யூதர்கள் அதை விரும்பவில்லை. எனவே நான் என்னை இராயரிடம் வழக்காடும்படியாக ரோமுக்குக் கொண்டு வருமாறு கேட்க வேண்டியதாயிற்று. ஆனால் எனது மக்கள் தவறிழைத்தார்கள் என்று நான் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவில்லை. 20 எனவே தான் உங்களைச் சந்தித்து உங்களோடு பேச விரும்பினேன். இஸ்ரவேலரின் நம்பிக்கையை நான் கொண்டிருப்பதால் இவ்விலங்குகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான்.
21 யூதர்கள் பவுலுக்குப் பதிலாக, “நாங்கள் உன்னைக் குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதையும் பெறவில்லை. அங்கிருந்து பயணம் செய்த எந்த யூத சகோதரரும் உன்னைக் குறித்து செய்தி கொண்டுவரவோ, உன்னைப் பற்றித் தவறாக எதையும் கூறவோ இல்லை. 22 நாங்கள் உனது கருத்துக்களை அறிய விரும்புகிறோம். இந்தக் கூட்டத்தினருக்கு (கிறிஸ்தவர்களுக்கு) எதிராக எல்லா இடங்களின் மக்களும் பேசிக்கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம்” என்றனர்.
23 பவுலும் யூதரும் கூட்டத்திற்கு ஒரு நாளைத் தேர்ந்துகொண்டனர். அந்த நாளில் இன்னும் பல யூதர்கள் பவுலை அவனது வீட்டில் சந்தித்தனர். நாள் முழுவதும் பவுல் அவர்களிடம் பேசினான். தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து பவுல் அவர்களுக்கு விளக்கினான். இயேசுவைக் குறித்த காரியங்களில் அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்ய முயன்றான். மோசேயின் சட்டங்களையும் தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களையும் இதற்குப் பயன்படுத்தினான். 24 சில யூதர்கள் பவுல் கூறியவற்றை நம்பினார்கள். ஆனால் மற்றவர்கள் அதை நம்பவில்லை. 25 அவர்களிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யூதர்கள் புறப்படுவதற்குத் தயாராக இருந்தனர். ஆனால் பவுல் அவர்களுக்கு வேறொரு செய்தியையும் சொல்லியனுப்பினான்: “பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உங்கள் முன்னோருக்கு உண்மையைக் கூறினார். அவர்,
26 “‘இம்மக்களிடம் போய் அவர்களுக்குக் கூறு,
நீங்கள் கவனிப்பீர்கள், நீங்கள் கேட்பீர்கள்,
ஆனால் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
நீங்கள் காண்பீர்கள், நீங்கள் பார்ப்பீர்கள்,
ஆனால் நீங்கள் பார்ப்பவற்றைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
27 ஆம், இம்மக்களின் இருதயங்கள் கடினப்பட்டுள்ளன.
இம்மக்களுக்குக் காதுகள் உள்ளன.
ஆனால் அவர்கள் கேட்பதில்லை.
இம்மக்கள் உண்மையைக் காணவும் மறுக்கிறார்கள்.
இம்மக்கள் தம் கண்களால் பார்க்காமலும்,
தம் காதுகளால் கேளாமலும்,
தம் மனங்களால் புரிந்துகொள்ளாமலும் இருக்கப் போவதாலேயே இது நடந்தது.
அவர்கள் குணமடைவதற்காக என்னை நோக்கித் திரும்பாமல் இருப்பதற்காகவே இது நிகழ்ந்தது’ என்றார். (A)
28 “தேவன் தமது இரட்சிப்பை யூதரல்லாத மக்களுக்கு அனுப்பினார் என்பதை யூதராகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் கவனிப்பார்கள்!” என்றான். 29 [b]
30 அவனது வாடகை வீட்டில் பவுல் இரண்டு ஆண்டுகள் முழுவதும் தங்கியிருந்தான். அவனைச் சந்திக்கும்படியாக வந்த மக்களை வரவேற்றான். 31 பவுல் தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் போதித்தான். கர்த்தர் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கற்பித்தான். அவன் தைரியசாலியாக இருந்தான். அவன் பேசுவதை நிறுத்த ஒருவரும் முயற்சிக்கவில்லை.
2008 by World Bible Translation Center