M’Cheyne Bible Reading Plan
ஆபிரகாமின் குடும்பம்
25 ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள். 2 கேத்தூராள் சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவாக் போன்றவர்களைப் பெற்றாள். 3 யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான். தேதானுடைய சந்ததி அசூரீம், லெத்தூசீம், லெயூமீம், என்பவர்கள். 4 மீதியானுக்கு ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்ற மகன்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் கேத்தூராளின் பிள்ளைகள். 5-6 ஆபிரகாம் மரிப்பதற்குமுன், அவன் தன் வேலைக்காரப் பெண்களின் பிள்ளைகளுக்குப் பரிசுகளைக் கொடுத்து கிழக்கு நாடுகளுக்கு ஈசாக்கை விட்டு அப்பால் அவர்களை அனுப்பி வைத்தான். பின் ஆபிரகாம் தனக்குரிய எல்லாவற்றையும் ஈசாக்குக்கு உரிமையாக்கினான்.
7 ஆபிரகாமுக்கு 175 வயது ஆனது. 8 அதனால் அவன் மெலிந்து பலவீனமாகி மரணமடைந்தான். அவன் ஒரு நீண்ட திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தான். அவன் தனது பிதாக்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான். 9 அவனது மகன்களான ஈசாக்கும் இஸ்மவேலும் அவனை மக்பேலா குகையிலே அடக்கம் செய்தனர். அந்தக் குகை எப்பெரோனின் வயலில் இருந்தது. எப்பெரோன் சோகாரின் மகன். அந்த இடம் மம்ரேக்குக் கிழக்கே இருந்தது. 10 இந்தக் குகையைத்தான் ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தான். சாராளோடு சேர்த்து ஆபிரகாமை அடக்கம் செய்துவிட்டனர். 11 ஆபிரகாம் மரித்துப் போனபின் தேவன் ஈசாக்கை ஆசீர்வதித்தார். ஈசாக்கு தொடர்ந்து பெயர்லகாய்ரோயியில் வாழ்ந்து வந்தான்.
12 பின்வருவது இஸ்மவேலின் குடும்பப் பட்டியல்: இஸ்மவேல் ஆபிரகாமுக்கும் ஆகாருக்கும் பிறந்தவன். (ஆகார் சாராளின் எகிப்தியப் பணிப்பெண்.) 13 இஸ்மவேலின் பிள்ளைகளது பெயராவன: மூத்தமகன் பெயர் நெபாயோத், பின் கேதார், தொடர்ந்து அத்பியேல், மிப்சாம். 14 மிஷ்மா, தூமா, மாசா, 15 ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள் பிறந்தார்கள். இவை அனைத்தும் இஸ்மவேலின் ஜனங்களின் பெயர்கள் ஆகும். 16 ஒவ்வொரு மகனும் தங்கள் குடியிருப்புகளை நகரங்களாக்கிக்கொண்டனர். பன்னிரண்டு பிள்ளைகளும் தம் ஜனங்களுடன் பன்னிரண்டு அரசகுமாரர்களைப்போல வாழ்ந்தனர். 17 இஸ்மவேல் 137 ஆண்டுகள் வாழ்ந்தான். பின் அவன் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான். 18 இஸ்மவேலின் சந்ததிகள் பாலைவனப் பகுதி முழுவதும் பரவி குடியேறினார்கள். அப்பகுதி ஆவிலா முதல் சூர் வரை இருந்தது. சூர் எகிப்துக்கு அருகில் இருந்தது. அங்கிருந்து அசிரியா வரை பரவிற்று. இஸ்மவேலின் சந்ததிகள் அவ்வப்போது அவனுடைய சகோதரர்களின் ஜனங்களைத் தாக்கினார்கள்.
ஈசாக்கின் குடும்பம்
19 இது ஈசாக்கின் குடும்ப வரலாறு: ஈசாக்கு ஆபிரகாமின் மகன். 20 ஈசாக்கிற்கு 40 வயதானபோது அவன் ரெபெக்காளை மணந்துகொண்டான். ரெபெக்காள் பதான் அராம் என்னும் ஊரைச் சேர்ந்த பெத்துவேலின் மகள். லாபானுக்குச் சகோதரி. 21 ஈசாக்கின் மனைவிக்குப் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது. எனவே, அவன் தன் மனைவிக்காக கர்த்தரிடம் ஜெபித்தான். ஈசாக்கின் ஜெபத்தைக் கேட்டு, கர்த்தர் ரெபெக்காள் கர்ப்பமடையச் செய்தார்.
22 அவள் கர்ப்பமாக இருந்தபோது, கருவிலுள்ள குழந்தைகள் மோதிக்கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் கர்த்தரிடம் ஜெபித்து, “ஏன் எனக்கு இவ்வாறு ஏற்படுகிறது?” என்று கேட்டாள். 23 அதற்கு கர்த்தர்,
“உனது கர்ப்பத்தில் இரண்டு நாடுகள் உள்ளன.
இரண்டு குடும்பங்களின் அரசர்கள் உனக்குப் பிறப்பார்கள்.
அவர்கள் பிரிக்கப்பட்டு ஒருவனைவிட இன்னொருவன் பலவானாக இருப்பான்.
மூத்தவன் இளையவனுக்குச் சேவை செய்வான்” என்றார்.
24 சரியான நேரம் வந்தபோது ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். 25 முதல் குழந்தை சிவப்பாக இருந்தது. அவனது உடல் ரோம அங்கி போர்த்தது போல இருந்தது. எனவே அவன் ஏசா என்று பெயர் பெற்றான். 26 இரண்டாவது குழந்தை பிறந்தபோது, அவன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டே வெளியே வந்தான். எனவே அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டனர். யாக்கோபும் ஏசாவும் பிறக்கும்போது ஈசாக்குக்கு 60 வயது.
27 பிள்ளைகள் வளர்ந்தார்கள். ஏசா திறமை மிக்க வேட்டைக்காரன் ஆனான். அவன் எப்போதும் வெளியே அலைவதிலேயே விருப்பப்பட்டான். ஆனால் யாக்கோபு அமைதியானவன், தன் கூடாரத்திலேயே தங்கியிருந்தான். 28 ஈசாக்கு ஏசாவை நேசித்தான். ஏசா வேட்டையாடிய மிருகங்களை உண்ண ஈசாக்கு விரும்பினான். ஆனால் ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள்.
29 ஒருமுறை ஏசா வேட்டை முடித்து திரும்பிக்கொண்டிருந்தான். அவன் சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். யாக்கோபு ஒரு பாத்திரத்தில் கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். 30 எனவே ஏசா யாக்கோபிடம், “நான் பலவீனமாகவும் பசியாகவும் இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் கூழ் கொடு” என்று கேட்டான் (இதனாலே அவனுக்கு ஏதோம் என்றும் பெயராயிற்று.)
31 ஆனால் யாக்கோபோ, அதற்குப் பதிலாக: “முதல் மகன் என்ற உரிமையை இன்று எனக்கு விற்றுவிட வேண்டும்” என்று கேட்டான்.
32 ஏசாவோ, “நான் பசியால் மரித்துக்கொண்டிருக்கிறேன். நான் மரித்துப் போனால் என் தந்தையின் சொத்துக்கள் எல்லாம் எனக்கு உதவுவதில்லை. எனவே நான் எனது பங்கை உனக்குத் தருகிறேன்” என்றான்.
33 ஆனால் யாக்கோபு, “முதலில் உன் பங்கைத் தருவதாகச் சத்தியம் செய்” என்றான். ஆகையால் ஏசாவும் சத்தியம் செய்தான். அவன் மூதாதையர் சொத்தாக தனக்குக் கிடைக்கவிருந்த பங்கை யாக்கோபுக்கு விற்றுவிட்டான். 34 பிறகு யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். ஏசா அவற்றை உண்டு, விலகிப் போனான். இவ்வாறு ஏசா தனது பிறப்புரிமையைப்பற்றி கவலைப்படாமல் இருந்தான்.
ஆலயத்தின் எதிர்கால அழிவு(A)
24 இயேசு தேவாலயத்தை விட்டு சென்று கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அவர் அருகில் வந்து, தேவாலயத்தின் கட்டிடங்களைக் காட்டினார்கள். 2 இயேசு சீஷர்களை நோக்கி,, “இந்தக் கட்டிடங்களைப் பார்த்தீர்களா? உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். இக்கட்டிடங்கள் அனைத்தும் நாசமாக்கப்படும். ஒவ்வொரு கல்லும் கீழே தள்ளப்படும். ஒரு கல் இன்னொரு கல்மீது இராதபடி ஆகும்” என்று கூறினார்.
3 பின்னர், இயேசு ஒலிவ மலையின்மீது ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். இயேசுவுடன் தனிமையில் இருக்க வந்த சீஷர்கள், அவரிடம்,, “இவை எப்பொழுது நடக்கும் என்று எங்களுக்குக் கூறுங்கள். நீர் மீண்டும் தோன்றப் போகிறதையும் உலகம் அழியும் என்பதையும் எங்களுக்கு உணர்த்த எம்மாதிரியான செயல் நடக்கும்?” என்று கேட்டார்கள்.
4 அவர்களுக்கு இயேசு,, “எச்சரிக்கையுடன் இருங்கள்! யாரும் உங்களை ஏமாற்ற விடாதீர்கள். 5 பலர் என் பெயரைக் கூறிக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ‘நான்தான் கிறிஸ்து’ என அவர்கள் சொல்வார்கள். பலரையும் அவர்கள் ஏமாற்றுவார்கள். 6 போர்களைப்பற்றியும் போர்களைப்பற்றிய செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள். ஆனால் பயப்படாதீர்கள். முடிவு வருவதற்கு முன்பு இச்செயல்கள் நடக்க வேண்டும். 7 நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவு கிடைக்காத காலம் வரும். வெவ்வேறு இடங்களில் பூகம்பங்கள் தோன்றும். 8 இவை அனைத்தும் பிரசவ வேதனையின் தொடக்கம் போன்றவை” என்று பதில் கூறினார்.
9 ,“பின்னர் மக்கள் உங்களை மோசமாக நடத்துவார்கள். துன்புறுத்தப்படவும் கொல்லப்படவும் ஆட்சியாளர்களிடம் உங்களை ஒப்படைப்பார்கள். அனைவரும் உங்களை வெறுப்பர். நீங்கள் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் இவை அனைத்தும் உங்களுக்கு நிகழும். 10 அக்காலக் கட்டத்தில், பலர் தாம் கொண்ட விசுவாசத்தை இழப்பார்கள். அவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் திரும்பி ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். 11 பல போலித் தீர்க்கதரிசிகள் வருவார்கள். மக்களைக் தவறானவற்றின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள். 12 உலகில் மேலும் மேலும் தீமைகள் ஏற்படும். ஆகவே பலர் அன்பு செலுத்துவதையே நிறுத்தி விடுவார்கள். 13 ஆனால் தொடர்ந்து இறுதிவரை உறுதியாய் இருப்பவர்களே இரட்சிக்கப்படுவார்கள். 14 தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்திகள் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும். அது ஒவ்வொரு தேசத்துக்கும் சொல்லப்படும். அதன் பின்பே முடிவு வரும்.
15 ,“அழிவை ஏற்படுத்துகிற கொடிய காரியத்தைப்பற்றி தீர்க்கதரிசி தானியேல் கூறியுள்ளார். ‘இக்கொடியதை தேவாலயத்தில் நின்றிருக்க நீங்கள் காண்பீர்கள்.’ (இதைப் படிக்கிற நீங்கள் அது என்னவென்பதை அறிந்துகொள்ளவேண்டும்.) 16 அந்நேரத்தில், யூதேயாவில் வசிப்பவர்கள் மலைகளுக்கு ஓடிவிட வேண்டும். 17 கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காமல் ஓடிவிட வேண்டும். வீட்டின் கூரையின் மீதிருப்பவன், வீட்டிலுள்ள பொருட்களை வெளியே எடுப்பதற்காக கீழே இறங்கக் கூடாது. 18 வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறவன், தன் மேலாடையை எடுக்க திரும்பி வீட்டிற்குச் செல்லக் கூடாது.
19 ,“கர்ப்பிணிகளுக்கும் கைக் குழந்தையுடைய பெண்களுக்கும் மோசமான காலம் அது. 20 இச்செயல்கள் நடந்து நீங்கள் தப்பிச்செல்லும் நாள் ஓய்வு நாளாகவோ குளிர் காலமாகவோ இருக்காதிருக்கப் பிரார்த்தியுங்கள். 21 ஏனென்றால், அக்காலத்தில் துன்பங்கள் அதிகரிக்கும். உலகம் தோன்றிய நாள் முதலாக இல்லாத அளவிற்கு அப்பொழுது துன்பங்கள் ஏற்படும். அதைவிட மோசமானது பிற்காலத்தில் ஏற்படாது.
22 ,“அக்கொடிய காலத்தை குறுகியதாக்க தேவன் முடிவு செய்துள்ளார். அவ்வாறு குறுகியதாகாவிடில், பின் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க முடியாது. ஆனால், தான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உதவ தேவன் அக்கொடிய காலத்தை குறுகியதாக்குவார்.
23 ,“அப்போது ஒரு சிலர் உங்களிடம், ‘அங்கே பார், கிறிஸ்து!’ என்று சொல்லக் கூடும். அல்லது வேறு சிலர், ‘இயேசு இங்கே இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அவர்களை நம்பாதீர்கள். 24 கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் தோன்றி மகத்தான செயல்களையும் அதிசயங்களையும் செய்வார்கள். அவற்றை அவர்கள் தேவன் தேர்ந்தெடுத்தவர்களிடம் செய்து காட்டுவார்கள். முடிந்தால் தேவனுடைய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சிப்பார்கள். 25 ஆனால், அவை நடப்பதற்கு முன்பே நான் உங்களை எச்சரிக்கிறேன்.
26 ,“‘கிறிஸ்து வனாந்தரத்தில் இருக்கிறார்’, என்று யாரேனும் ஒருவன் உங்களிடம் சொல்லக்கூடும். அதை நம்பி, நீங்கள் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவைத் தேடிச் செல்லாதீர்கள். வேறொருவன், ‘கிறிஸ்து அந்த அறையில் இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அதை நம்பாதீர்கள். 27 மனித குமாரன் தோன்றும் பொழுது யாவரும் அவரைக் காண இயலும். வானில் தோன்றும் மின்னலைப் போல எல்லோரும் அதைப் பார்க்க இயலும். 28 கழுகுகள் வட்டமிடும் இடத்தில் பிணம் இருப்பதை நீங்கள் அறிவது போல எனது வருகை நன்கு புலப்படும்.
29 ,“அந்த நாட்களின் துன்பம் தீர்ந்தவுடன் கீழ்க்கண்டது நடக்கும்:
, “‘சூரியன் இருளாக மாறும்,
சந்திரன் ஒளியைக் கொடுக்காது.
வானிலிருந்து நட்சத்திரங்கள் உதிரும்,
வானில் அனைத்தும் மாறும்.’ (B)
30 ,“அப்பொழுது மனித குமாரனின் வருகையை அறிவிக்கும் அடையாளம் வானில் தெரியும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் கதறுவார்கள், வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பார்கள். மகத்தான வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மனிதகுமாரன் வருவார். 31 அவர், ஒரு எக்காளத்தைச் சத்தமாய் ஊதி அதன் மூலம் தம் தூதர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்புவார். உலகின் எல்லா பகுதியிலிருந்தும் தேவதூதர்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்கள்.
32 ,“அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைப் போதிக்கிறது. அத்தி மரத்தின் கிளைகள் பசுமையடைந்து இலைகள் துளிர்விட்டு வளரும்பொழுது கோடை காலம் அருகில் உள்ளது என அறிகிறீர்கள்.
33 ,“அதே போலத்தான் நான் நடக்கப் போவதாகக் கூறிய செயல்களைப் பொறுத்தவரையிலும், அவை நடக்கும்பொழுது காலம் நெருங்கிவிட்டதை அறியலாம். 34 நான் உண்மையைச் சொல்கிறேன், இன்றைய மனிதர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்தும் நடக்கும். 35 உலகம் முழுவதும் வானமும் பூமியும் உள்ளாக அழியும். ஆனால் எனது வார்த்தைகள் அழியாது.
இயேசு வரும் வேளை(C)
36 ,“அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கும் தேவ குமாரனும் தேவதூதர்களும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்.
37 ,“நோவாவின் காலத்தில் நடந்ததைப் போலவே, மனித குமாரன் வரும்போதும் நடக்கும். 38 நோவாவின் காலத்தில் வெள்ளம் வருமுன்னர், மக்கள் குடித்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டுமிருந்தார்கள். மக்கள் தம் பிள்ளைகளின் திருமணங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். நோவா கப்பலில் ஏறுகிறவரைக்கும் மக்கள் அவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள். 39 நடந்துகொண்டிருந்ததை அம்மக்களில் யாரும் அறிந்திருக்கவில்லை. பின்னர், வெள்ளம் வந்து அவர்கள் அனைவரையும் அழித்துப்போட்டது.
, “அதைப் போலவே மனிதகுமாரன் வரும்பொழுதும் நடக்கும். 40 இரண்டு ஆண்கள் வயலில் வேலை செய்துகொண்டிருக்க ஒருவன் விடப்பட்டு மற்றவன் எடுத்துச்செல்லப்படுவான். 41 எந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இருவரில், ஒருத்தி விடப்பட்டு மற்றவள் கொண்டுசெல்லப்படுவாள்.
42 ,“ஆகவே, எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். உங்கள் கர்த்தர் வருகிற நேரம் உங்களுக்குத் தெரியாது. 43 இதை, ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், திருடன் வரும் நேரத்தை வீட்டுக்காரன் அறிந்திருந்தால், திருடனுக்காக வீட்டுக்காரன் காத்திருப்பான். மேலும் திருடன் வீட்டில் நுழையாதபடி எச்சரிக்கையுடன் இருப்பான். இதை நினைவில் கொள்ளுங்கள். 44 எனவே, நீங்களும் ஆயத்தமாக இருக்கவேண்டும். நீங்கள் எதிர்பார்க்காதபொழுது மனித குமாரன் வருவார்.
நல்ல வேலைக்காரரும் தீய வேலைக்காரரும்(D)
45 ,“புத்தியுள்ள நம்பிக்கைக்குரிய வேலையாள் யார்? தன் மற்ற வேலைக்காரர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும் வேலைக்காரனை எஜமானன் நம்புகிறான். எஜமானனின் நம்பிக்கைக்குரிய அவ்வேலைக்காரன் யார்? 46 அவ்வேலைக்காரன் எஜமானன் வரும் நேரத்தில் தன் வேலையை சரியாகச் செய்கிறதைக் கண்டால் அவ்வேலைக்காரன் மகிழ்ச்சியடைகிறான். 47 நான் உண்மையைச் சொல்கிறேன். தனக்குரிய எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் அந்த வேலைக்காரன் வசம் ஒப்படைப்பான்.
48 ,“ஆனால், அவ்வேலைக்காரன் தீய எண்ணம் கொண்டு, தன் எஜமானன் விரைவில் வரமாட்டான் என எண்ணினால் என்ன ஆகும்? 49 உடன் வேலைக்காரர்களையெல்லாம் அடித்து உதைத்து எல்லா உணவையும் உண்டுவிட்டு தன்னைப் போன்றவர்களுடன் உண்டு குடிக்க முனைவான். 50 அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான். 51 பின்னர் அவ்வேலைக்காரனைத் தண்டிப்பான். மாயமானவர்களின் இடத்திற்கு அவனை அனுப்பி வைப்பான். அங்கே உள்ளவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு வேதனையினால் பற்களைக் கடித்துக் கொண்டிருப்பார்கள்.
வஸ்தி ராணி அரசனுக்கு கீழ்ப்படிய மறுக்கிறாள்
1 அகாஸ்வேரு அரசனாக இருந்த காலத்தில் இது நடைபெற்றது. அகாஸ்வேரு இந்தியா முதல் எத்தியோப்பியா வரையுள்ள 127 நாடுகளை ஆண்டான். 2 அரசன் அகாஸ்வேரு சூசான் என்ற தலைநகரில் சிங்காசனத்திலிருந்து அரசாண்டான்.
3 அகாஸ்வேருவின், மூன்றாவது ஆட்சியாண்டில், அவன் தனது அதிகாரிகளுக்கும், பிரபுக்களுக்கும் விருந்து கொடுத்தான். படை அதிகாரிகளும், பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள முக்கிய தலைவர்களும் அங்கே இருந்தனர். 4 விருந்தானது 180 நாட்களுக்குத் தொடர்ந்தன. அந்தக்காலம் முழுவதும் அகாஸ்வேரு அரசன் தனது இராஜ்யத்தின் செல்வச் சிறப்பைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் ஒவ்வொருவரிடமும் தன் அரண்மனையின் கம்பீரமான அழகையும், செல்வத்தையும் காட்டிக் கொண்டிருந்தான். 5 அந்த 180 நாட்களும் முடிந்தபோது, அகாஸ்வேரு அரசன் இன்னொரு விருந்தை ஏழு நாட்கள் தொடர்ந்து கொடுத்தான். அந்த விருந்து அரண்மனை தோட்டத்திற்குள்ளே நடைபெற்றது. சூசான் தலைநகரத்தில் உள்ள அனைத்து முக்கியமானவர்களும், முக்கியமற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனார். 6 அந்த உள்தோட்டத்தில் அறையைச் சுற்றி வெள்ளையும், நீலமுமான மெல்லிய திரைகள் தொங்கின. அத்தொங்கல்கள் வெண்கலத் தூண்களிலே, வெள்ளி வளையங்களில், மெல்லிய நூலும், சிவப்பு நூலுமான கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன. அங்கே பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட இருக்கைகள் இருந்தன. அவை சிவப்பும், நீலமும், வெள்ளையும், கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின் மேல் வைக்கப்பட்டிருந்தன. 7 பொற்கிண்ணங்களில் திராட்சைரசம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிண்ணமும் வித்தியாசமாக இருந்தது! அங்கே முதல் தரமான திராட்சைரசம் அரசர்களுக்கு ஏற்ற வகையில் தாராளமாகக் கொடுக்கப்பட்டது. 8 அரசன் தனது வேலைக்காரர்களுக்கு ஒரு கட்டளை இட்டிருந்தான். ஒவ்வொரு விருந்தாளியும் அவரது விருப்பம்போல் திராட்சைரசத்தைக் குடிக்கட்டும் என்று சொல்லியிருந்தான். திராட்சைரசம் பரிமாறுபவன் அரசனுக்குக் கீழ்ப்படிந்தான்.
9 அரசனது அரண்மனையில் இராணி வஸ்தியும் பெண்களுக்கு ஒரு விருந்து கொடுத்தாள்.
10-11 விருந்தின் ஏழாவது நாளில், அகாஸ்வேரு அரசன் திராட்சைரசத்தால் உச்சப் போதையில் இருந்தான். அவன் ஏழு பிரதானிகளுக்குக் கட்டளையிட்டான். அந்த பிரதானிகள், மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகியோர். அவன் இந்த ஏழு பேரிடம் இராணி வஸ்தியை இராஜகிரீடம் அணிவித்து அழைத்துவருமாறு கட்டளையிட்டான். அவள் அழகை முக்கியமான ஜனங்களுக்கும், தலைவர்களுக்கும் காட்டவேண்டும் என்று அரசன் விரும்பினான். ஏனென்றால் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.
12 ஆனால், அந்த வேலைக்காரர்கள் போய் இராணி வஸ்தியிடம் அரசனின் கட்டளையைச் சொன்னதும் அவள் வரமறுத்தாள். அதனால் அரசன் மிகவும் கோபம்கொண்டான். 13-14 சட்டம் மற்றும் தண்டனையைப்பற்றிய ஆலோசனைகளை தேர்ந்தவர்களிடம் கேட்பது ராஜாவின் வழக்கம். எனவே, அரசன் அகாஸ்வேரு சட்டங்களைப் புரிந்துகொண்ட ஞானிகளிடம் பேசினான். அந்த ஞானிகள் அரசனுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோர். இவர்கள் பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள ஏழு முக்கியமான அதிகாரிகள். அவர்களுக்கு அரசனைப் பார்க்கச் சிறப்பு சலுகைகள் உண்டு. அவர்கள் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தனர். 15 அரசன் அவர்களிடம், “இராணி வஸ்தியை என்ன செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது? அரசன் அகாஸ்வேருவின் கட்டளையை பிரதானிகள் கொண்டுபோனபோது அதற்கு அவள் அடிபணியவில்லை” என்று சொன்னான்.
16 பிறகு, மெமுகான் மற்ற அதிகாரிகள் கவனித்துக்கொண்டிருக்கையில், “இராணி வஸ்தி தவறு செய்தாள். அவள் அரசனுக்கு எதிராகவும், எல்லா தலைவர்களுக்கு எதிராகவும், அகாஸ்வேரு அரசனது அரசாட்சியில் உள்ள எல்லா ஜனங்களுக்கு எதிராகவும் தவறு செய்தாள். 17 மற்ற எல்லாப் பெண்களும் இராணி வஸ்தி செய்ததை கேள்விப்படுவார்கள். பிறகு அவர்கள் தம் கணவர்களுக்கு அடிபணிவதை நிறுத்துவார்கள். அவர்கள் தம் கணவர்களிடம், ‘அரசன் அகாஸ்வேரு இராணி வஸ்தியை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். ஆனால் அவள் வர மறுத்துவிட்டாள்’ என்பார்கள்.
18 “இன்றைக்கு பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள தலைவர்களின் மனைவிகளும் இராணி செய்ததைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அப்பெண்களும் இராணியின் செயலால் தூண்டப்படுவார்கள். அப்பெண்களும் அரசனது முக்கிய தலைவர்களுக்கு அவ்வாறே செய்வார்கள். அதனால் மிகுதியான மதிப்பின்மையும் கோபமும் பிறக்கும்.
19 “எனவே அரசனுக்கு விருப்பமானால், நான் ஒரு கருத்தைக் கூறுகிறேன். அரசன் ஒரு அரச கட்டளையைக் கொடுக்கலாம். அது பெரிசியா மற்றும் மேதியாவிற்குச் சட்டமாக எழுதப்படலாம். பெர்சியா மற்றும் மேதியாவின் சட்டங்கள் மாற்ற முடியாதவை. வஸ்தி மீணடும் அரசன் அகாஸ்வேருவுக்கு முன்னால் வரக்கூடாது என்பதுதான் அரச கட்டளையாக இருக்கவேண்டும். அதோடு அரசன் அவளைவிடச் சிறந்த பெண்ணுக்கு இராணியின் உயர் இடத்தைக் கொடுக்கவேண்டும். 20 பிறகு அரசனது கட்டளை அவனது பெரிய நாடு முழுவதும் அறிவிக்கப்படும்போது, பெரியோர் முதல் சிறியோர் வரையுள்ள எல்லாப் பெண்களும் தம் கணவர்களை மதிப்பார்கள்” என்று பதில் சொன்னான்.
21 அரசனும் அவனுடைய முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனையால் பெரிதும் மகிழ்ந்தனர். எனவே அகாஸ்வேரு அரசன் மெமுகானின் ஆலோசனையின்படிச் செய்தான். 22 அரசன் அகாஸ்வேரு தனது அரசிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் கடிதம் அனுப்பினான். அவன் அக்கடிதங்களை ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சொந்த மொழியிலேயே எழுதி அனுப்பினான். அவன் அக்கடிதங்களை ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் மொழியிலேயே எழுதி அனுப்பினான். அக்கடிதங்கள் ஒவ்வொரு மனிதனின் மொழியிலும் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தன் குடும்பத்தை ஆள்பவனாக இருக்க வேண்டும்.
யூதர்களின் குற்றச்சாட்டு
24 ஐந்து நாட்களுக்குப் பிறகு அனனியா செசரியா நகரத்திற்கு வந்தான். அனனியா தலைமை ஆசாரியனாக இருந்தான். சில முதிய யூதத் தலைவர்களையும் தெர்த்துல்லு என்னும் பெயருள்ள வழக்கறிஞரையும் அனனியா அழைத்து வந்திருந்தான். ஆளுநர் முன்னால் பவுல் மீது வழக்கு தொடுக்கும் பொருட்டு அவர்கள் செசரியாவுக்குச் சென்றார்கள். 2 கூட்டத்திற்கு முன் பவுல் அழைக்கப்பட்டான். தெர்த்துல்லு குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கத் துவங்கினான். தெர்த்துல்லு, “மிகக் கனம் பொருந்திய பெலிக்ஸ் அவர்களே! உங்களால் எங்கள் மக்கள் மிகுந்த அமைதியோடு வாழ்கிறார்கள். உங்கள் ஞானமான உதவியால் எங்கள் நாட்டில் பல தவறான காரியங்கள் திருத்தப்பட்டு வருகின்றன. 3 உங்களிடமிருந்து இவற்றைப் பெறுவதால் மிக நன்றியுடையவர்களாக இருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாங்கள் அவற்றை ஒப்புக்கொள்கிறோம். 4 ஆனால் உங்கள் நேரத்தை மேலும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே நான் சுருக்கமாகச் சொல்கிறேன். தயவு செய்து பொறுமையாக இருங்கள். 5 இம்மனிதன் தொல்லைகளை ஏற்படுத்துகிறவன். உலகமெங்குள்ள யூதர்களிடம் அமைதியைக் குலைக்கிறான். நசரேயக் குழுவின் தலைவன் இவன். 6-8 மேலும் அவன் தேவாலயத்தை நாசமாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறான். ஆனால் நாங்கள் அவனைத் தடுத்துவிட்டோம். இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையா என்பதை நீர் முடிவு கட்டலாம். நீரே அவனிடம் சில கேள்விகளைக் கேளும்” [a] என்றான். 9 பிற யூதர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள், “இவையனைத்தும் உண்மையே!” என்றனர்.
பவுல் தனக்காக பெலிக்ஸின் முன்பு வழக்காடுதல்
10 பவுல் பேசுமாறு ஆளுநர் குறிப்பிட்டார். எனவே பவுல் பதிலாக, “ஆளுநர் பெலிக்ஸ் அவர்களே, இந்தத் தேசத்தின் நியாயாதிபதியாக, நீண்ட காலமாக நீங்கள் இருந்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் உங்கள் முன்பு எனக்காக வழக்காடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். 11 பன்னிரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் எருசலேமுக்கு வழிபடச் சென்றேன். இது உண்மையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 12 என்னைப் பழிக்கிற இந்த யூதர்கள் நான் ஆலயத்தில் யாரோடும் விவாதிப்பதைப் பார்க்கவில்லை. நான் மக்களிடம் தொல்லையையும் விளைவிக்கவில்லை. ஜெப ஆலயங்களிலோ, நகரத்தின் வேரிடங்களிலோ நான் விவாதிக்கவோ, தொல்லை விளைவிக்கவோ செய்யவில்லை. 13 இப்போது எனக்கெதிராக அவர்கள் கூறும் குற்றச் சாட்டுகளை அவர்கள் நிரூபிக்க முடியாது.
14 “ஆனால் நான் உங்களுக்கு இதைச் சொல்வேன். இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடனாக நான் நமது முன்னோரின் தேவனை வணங்குகிறேன். 15 இந்த யூதர்கள் தேவனிடம் கொண்டுள்ள நம்பிக்கை, அதாவது நல்லோராயினும் தீயோராயினும் சரி எல்லா மக்களும் மரணத்தினின்று எழுப்பப்படுவர் என்ற அதே நம்பிக்கை எனக்கும் உள்ளது. 16 எனவே தான் தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக நான் சரியென்று நம்புவதை எப்பொழுதும் செய்ய முயல்கிறேன்.
17 “பலகாலம் எருசலேமிலிருந்து தொலைவில் வாழ்ந்து வந்தேன். என் மக்களுக்குப் பணம் கொண்டு வரவும் காணிக்கை செலுத்தவும் நான் அங்குத் திரும்பிச் சென்றேன். 18 தேவாலயத்தில் நான் இதைச் செய்துகொண்டிருந்தபோது சில யூதர்கள் என்னைக் கண்டனர். சுத்தப்படுத்தும் பண்டிகையை [b] முடித்தேன். நான் எந்தக் தொல்லையையும் ஏற்படுத்தவில்லை. என்னை சுற்றி எந்தக் கூட்டமும் சேரவில்லை. 19 ஆசியாவிலுள்ள சில யூதர்கள் அங்கிருந்தார்கள். இங்கும் உங்கள் முன் அவர்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும். நான் ஏதேனும் தவறாகச் செய்திருந்தால் என்னைக் குற்றம் சாட்டவேண்டியவர்கள் அவர்களே. 20 எருசலேமிலுள்ள யூத சங்கத்தின் முன் நான் நின்றபோது என்னில் ஏதேனும் பிழையை அவர்கள் கண்டார்களா என்பதை இந்த யூதர்களிடம் விசாரியுங்கள். 21 நான் அவர்கள் முன்னிலையில் நின்றபோது ஒன்றை மட்டும் கூறினேன். ‘மரணத்தினின்று மக்கள் எழும்புவர் என்பதை நான் நம்புவதால் இன்றைக்கு நீங்கள் என்னை நியாயந்தீர்க்கிறீர்கள்’ என்றேன்” என்று கூறினான்.
22 இயேசுவின் வழிகளைக் குறித்து ஏற்கனவே பெலிக்ஸ் நிரம்பத் தெரிந்துவைத்திருந்தான். அவன் வழக்கை இந்த இடத்தில் நிறுத்தியவனாக, “அதிகாரி லீசியா இங்கு வருகிறபோது, இவற்றைக் குறித்து முடிவெடுப்பேன்” என்றான். 23 பெலிக்ஸ் படை அதிகாரியிடம் பவுலைக் காவலில் வைக்குமாறு கூறினான். அவன் படை அதிகாரியிடம் பவுலுக்குச் சற்றுச் சுதந்திரம் அளிக்குமாறும், பவுலின் நண்பர்கள் அவனுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து உதவுவதற்கு அனுமதி அளிக்குமாறும் கூறினான்.
பெலிக்ஸ் முன் பவுல்
24 சில நாட்களுக்குப் பிறகு பெலிக்ஸ், அவனது மனைவி துருசில்லாவுடன் வந்தான். அவள் யூதப் பெண்மணி. பெலிக்ஸ் பவுலைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினான். கிறிஸ்து இயேசுவில் வைக்கும் விசுவாசத்தைக் குறித்துப் பவுல் பேசுவதை பெலிக்ஸ் கேட்டான். 25 நேர்மையான வாழ்வு, தன்னடக்கம், எதிர்காலத்தின் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்துப் பவுல் கூறியதைக் கேட்டு அவன் அஞ்சினான். பெலிக்ஸ் “இப்போது போய் விடு! இன்னும் கால அவகாசம் கிடைக்கும்போது உன்னை அழைக்கிறேன்” என்றான். 26 பவுலோடு பெலிக்ஸ் பேசுவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. பவுல் தனக்கு லஞ்சம் கொடுப்பான் எனவும் பெலிக்ஸ் நம்பினான். எனவே பெலிக்ஸ் பவுலை அடிக்கடி அழைப்பித்து அவனோடு பேசினான்.
27 ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, போர்சியு பெஸ்து ஆளுநரானார். பெலிக்ஸ் ஆளுநராக இருக்கவில்லை. பெலிக்ஸ் யூதர்களை மகிழ்விக்கும்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று விரும்பியதால் பவுலைச் சிறையிலேயே விட்டுச் சென்றான்.
2008 by World Bible Translation Center