M’Cheyne Bible Reading Plan
ஆபிரகாம் கேராருக்குப் போகிறான்
20 ஆபிரகாம் அந்த நாட்டைவிட்டுப் பாலைவனப் பகுதிக்குச் சென்றான். அவன் காதேசுக்கும், சூருக்கும் நடுவிலுள்ள கேராரில் தங்கினான். 2 அவன் கேராரிலே தங்கி இருந்தபோது தன் மனைவி சாராளைச் சகோதரி என்று சொன்னான். அபிமெலேக்கு கேராரின் அரசன். அவன் சாராளை மிகவும் விரும்பினான். எனவே, வேலைக்காரர்களை அனுப்பி அவளைக் கொண்டு வருமாறு சொன்னான். 3 ஆனால் இரவில் தேவன் அபிமெலேக்கின் கனவிலே பேசி, “நீ மரித்து போவாய். நீ கைப்பற்றிய பெண் திருமணமானவள்” என்றார்.
4 ஆகையால் அபிமெலேக்கு சாராளைத் தொடவில்லை. அவன் தேவனிடம், “கர்த்தாவே! நான் குற்றமுடையவன் அல்ல. ஒன்றும் தெரியாத அப்பாவியை நீர் கொல்வீரா? 5 ஆபிரகாமே என்னிடம், ‘இவள் என் சகோதரி’ என்று சொன்னானே! சாராளும் ஆபிரகாமை ‘இவர் என் சகோதரன்’ என்று கூறிவிட்டாள். நான் அப்பாவி. நான் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை” என்றான்.
6 தேவன் அவனிடம், “நீ என்ன மனநிலையில் இதைச் செய்தாய் என்று எனக்குத் தெரியும். நீ என்ன செய்கிறாய் என்பது உனக்குத் தெரியாது. நீ எனக்கு எதிராகப் பாவம் செய்யாதபடி நான் உன்னைக் காப்பாற்றினேன். நீ அவளைத் தொடாதபடி நானே உன்னைத் தடுத்தேன். 7 ஆகவே ஆபிரகாமிடம் அவன் மனைவியைத் திரும்பக் கொடுத்துவிடு. ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி. அவன் உனக்காக ஜெபிப்பான். நீ வாழ்வாய். ஆனால் நீ சாராளை ஆபிரகாமிடம் திரும்பக் கொடுக்காவிட்டால் நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் மரித்துப்போவீர்கள் என்று அறிந்துகொள்” என்றார்.
8 எனவே, மறுநாள் அதிகாலையில், அபிமெலேக்கு தன் வேலைக்காரர்களை அழைத்து, நடந்தவைகளைப்பற்றிக் கூறினான், அவர்கள் பயந்தார்கள். 9 பிறகு அபிமெலேக்கு ஆபிரகாமை அழைத்து அவனிடம்: “நீ ஏன் எங்களுக்கு இதுபோல் செய்தாய்? உனக்கு எதிராக நான் என்ன செய்தேன்? அவள் உன் சகோதரி என்று ஏன் பொய் சொன்னாய்? எனது அரசுக்கு நீ நிறைய தொந்தரவுகளைக் கொடுத்துவிட்டாய். நீ இவ்வாறு செய்திருக்கக் கூடாது. 10 நீ எதற்காகப் பயந்தாய்? ஏன் இவ்வாறு செய்தாய்” என்று கேட்டான்.
11 பிறகு ஆபிரகாம், “நான் பயந்துவிட்டேன், இந்த இடத்தில் உள்ள எவரும் தேவனை மதிக்கமாட்டார்கள் என்று நினைத்தேன். சாராளுக்காக என்னை எவராவது கொன்று விடுவார்களோ என்று நினைத்தேன். 12 அவள் எனது மனைவி, ஆனால் அவள் என் சகோதரியும் கூட, அவள் என் தந்தைக்கு மகள். ஆனால் என் தாய்க்கு மகளல்ல. 13 தேவன் என்னை என் தந்தையின் வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து என்னைப் பல்வேறு இடங்களில் அலைந்து திரியும்படி செய்திருக்கிறார். அப்போதெல்லாம் சாராளிடம், ‘நாம் எங்கு சென்றாலும் நான் உன் சகோதரன் என்று சொல்லு’ என்று கேட்டுக்கொண்டேன்” என்றான்.
14 என்ன நடந்தது என்பதை அபிமெலேக்கு புரிந்துகொண்டான். எனவே சாராளைத் திரும்ப ஆபிரகாமிடம் அனுப்பிவிட்டான். அவளுக்குச் சில ஆடுகளையும் மாடுகளையும் அடிமைகளையும் கொடுத்தான். 15 பிறகு, “உன்னைச் சுற்றிலும் பார், இது எனது நிலம், நீ விரும்புகிற எந்த இடத்திலும் வாழலாம்” என்றான்.
16 அவன் சாராளிடம், “நான் உன் சகோதரன், ஆபிரகாமிடம் 1,000 வெள்ளிக் காசுகள் கொடுத்தேன். நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கவே அவ்வாறு செய்தேன். நான் செய்தது சரியென்று எல்லோருக்கும் தெரியவேண்டும்” என்றான்.
17-18 கர்த்தர், சாராளினிமித்தம் அபிமெலேக்கின் குடும்பத்தில் எவருக்கும் குழந்தை இல்லாமல் இருக்கும்படி செய்திருந்தார். இப்போது ஆபிரகாம் தேவனிடம் வேண்டிக்கொள்ளவே, தேவன் அபிமெலேக்கு, அவன் மனைவி, வேலைக்காரப் பெண்கள் அனைவரையும் குணப்படுத்தினார்.
விவாகரத்தைப்பற்றி போதனை(A)
19 இவை அனைத்தையும் கூறிய பின்னர், இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார். யோர்தான் நதிக்கு மறுகரையில் உள்ள யூதேயாவிற்கு இயேசு சென்றார். 2 மக்கள் பலர் அவரைத் தொடர்ந்தனர். அங்கு நோயாளிகளை இயேசு குணமாக்கினார்.
3 இயேசுவிடம் வந்த பரிசேயர்கள் சிலர் இயேசுவைத் தவறாக ஏதேனும் சொல்ல வைக்க முயன்றனர். அவர்கள் இயேசுவை நோக்கி,, “ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியானதா?” என்று கேட்டனர்.
4 அவர்களுக்கு இயேசு,, “தேவன் உலகைப் படைத்தபொழுது மனிதர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் [a] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் நிச்சயமாய் படித்திருப்பீர்கள். 5 தேவன் சொன்னார், ‘ஒருவன் தன் தாய் தந்தையரை விட்டு விலகி தன் மனைவியுடன் இணைவான், கணவனும் மனைவியும் ஒன்றாவார்கள்.’ [b] 6 எனவே, கணவனும் மனைவியும் இருவரல்ல ஒருவரே. அவர்களை இணைத்தவர் தேவன். எனவே, எவரும் அவர்கள் இருவரையும் பிரிக்கக் கூடாது” என்று பதில் கூறினார்.
7 அதற்குப் பரிசேயர்கள்,, “அப்படியெனில் எதற்காக ஒருவன் விவாகரத்து பத்திரம் எழுதிக் கொடுத்துத் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஒரு கட்டளையைக் கொடுத்துள்ளான்?” என கேட்டார்கள்.
8 அதற்கு இயேசு,, “மோசே உங்கள் மனைவியை நீங்கள் விவாகரத்து செய்ய அனுமதியளித்தார். எனென்றால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்க மறுத்தீர்கள். ஆனால், ஆதியில் விவாகரத்து அனுமதிக்கப்படவில்லை. 9 நான் கூறுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்து பின் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபச்சாரம் என்னும் குற்றத்திற்கு ஆளாகிறான். ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய ஒரே தகுதியான காரணம் அவள் வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பதே ஆகும்” என்றார்.
10 இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய அது ஒன்று மட்டுமே தக்க காரணமெனில், திருமணம் செய்யாமலிருப்பதே நன்று” என்றார்கள்.
11 அதற்கு இயேசு,, “திருமணம் குறித்த இவ்வுண்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், தேவன் சிலரை அப்படிப்பட்ட கருத்தை ஒப்புக்கொள்ள ஏதுவாக்கியுள்ளார். 12 சிலர் ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் குழந்தைகளை பெறச் செய்ய இயலாதவாறு பிறந்தார்கள். சிலர் அவ்வாறு மற்றவர்களால் ஆக்கப்பட்டார்கள். மேலும் சிலர் பரலோக இராஜ்யத்திற்காக திருமணத்தைக் கைவிட்டார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்கள் திருமண வாழ்வைக் குறித்த இந்தப் போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.
இயேசுவும் குழந்தைகளும்(B)
13 பிறகு, இயேசு தம் குழந்தைகளைத் தொடுவார் என்பதற்காகவும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார் என்பதற்காகவும் மக்கள் தம் குழந்தைகளை அவரிடம் அழைத்து வந்தனர். இதைக் கண்ட சீஷர்கள் இயேசுவிடம் குழந்தைகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு மக்களிடம் கூறினார்கள். 14 ஆனால் இயேசு,, “குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம், ஏனென்றால் பரலோக இராஜ்யம் இக்குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே உரியது” என்று கூறினார். 15 அதன் பின் குழந்தைகளைத் தொட்டு ஆசீர்வதித்தார். பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
பணக்காரனும் இயேசுவும்(C)
16 ஒரு மனிதன் இயேசுவை அணுகி,, “போதகரே நித்திய ஜீவனைப் பெற நான் என்ன நல்ல செயலைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
17 இயேசு அவனிடம்,, “எது நல்லது என்பதை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட” என்று பதிலுரைத்தார்.
18 ,“எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன்.
அதற்கு இயேசு,, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. 19 உன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும். [c] ‘தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்’” [d] என்று பதில் சொன்னார்.
20 அதற்கு அந்த இளைஞன்,, “இவை அனைத்தையும் கீழ்ப்படிந்து நடந்திருக்கிறேன். வேறென்ன செய்ய வேண்டும்?” என்றான்.
21 இயேசு அவனிடம்,, “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.
22 ஆனால், இதைக் கேட்ட அம்மனிதன் மிகுந்த வருத்தமடைந்தான். மிகச் செல்வந்தனான அவன், தன் செல்வத்தை இழக்க விரும்பவில்லை. எனவே, அவன் இயேசுவை விட்டு விலகிச் சென்றான்.
23 பிறகு, இயேசு தம் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். பரலோக இராஜ்யத்திற்குள் செல்வந்தர்கள் நுழைவது மிகக் கடினம். 24 ஆம் பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது” என்று கூறினார்.
25 இதைக் கேட்டபோது சீஷர்கள் வியப்புற்றனர். அவர்கள்,, “பின் யார் தான் இரட்சிக்கப்படுவார்கள்?” என்று கேட்டனர்.
26 இயேசு தம் சீஷர்களைப் பார்த்து,, “மனிதர்களால் ஆகக் கூடியதல்ல இது. ஆனால், எல்லாம் வல்ல தேவனால் ஆகும்” என்று சொன்னார்.
27 பேதுரு இயேசுவிடம்,, “நாங்கள் பெற்றிருந்த அனைத்தையும் துறந்து உம்மைப் பின்பற்றினோம். எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று வினவினான்.
28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் [e] பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள். 29 மேலும் என்னைப் பின்பற்றுவதற்காக வீடு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் அல்லது நிலம் ஆகியவற்றைத் துறந்தவன், தான் துறந்ததை விடப் பல மடங்கு பலன் பெறுவான். அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். 30 உயர்ந்த வாழ்க்கை வாழும் பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த வாழ்வை அடைவார்கள். மிகத் தாழ்ந்த வாழ்வை வாழும் பலர் மிக உயர்ந்த வாழ்வை அடைவார்கள்” என்றார்.
இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறார்கள்
9 பிறகு அதே மாதத்தின் 24வது நாள் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு நாள் உபவாசத்திற்காகக் கூடினார்கள். அவர்கள் துக்கத்திற்குரிய ஆடையை அணிந்தனர்; தங்கள் தலையில் சாம்பலைப் போட்டுக்கொண்டனர். இதன் மூலம் தாங்கள் துக்கமாகவும், கலக்கமாகவும் இருப்பதாகக் காட்டினார்கள். 2 இஸ்ரவேல் சந்ததியினர் அயல் நாட்டினவர்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் ஆலயத்தில் எழுந்து நின்று தங்களது பாவங்களையும் தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டனர். 3 அவர்கள் மூன்று மணி நேரம் எழுந்து நின்று, ஜனங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சட்டப்புத்தகத்தை வாசித்தனர். பிறகு மேலும் மூன்று மணிநேரம் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர். தங்கள் தேவனாகிய கர்த்தரை குனிந்து தொழுதுகொண்டனர்.
4 யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியர்களுடைய படிகளின் மேல் நின்றார்கள். அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை உரத்தக்குரலில் அழைத்தார்கள். 5 பிறகு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா ஆகியோர் ஜனங்களைப் பார்த்து பேசினார்கள். அவர்கள், “எழுங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்!” என்றனர்.
“தேவன் என்றென்றும் வாழ்கிறார்!
தேவன் என்றென்றும் வாழ்வார்!
ஜனங்கள் உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்க வேண்டும்!
உமது நாமம் எல்லாத் துதிக்கும் போற்றுதலுக்கும் மேலானதாக இருப்பதாக!.
6 நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்!
நீர் வானத்தை உண்டாக்கினீர்!
நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்!
நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்!
நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்!
நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்!
தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்!
7 நீரே தேவனாகிய கர்த்தர்.
நீர் ஆபிராமைத் தேர்ந்தெடுத்தீர்.
பாபிலோனிலுள்ள ஊரிலிருந்து அவரை வழிநடத்தினீர்.
அவனது பெயரை ஆபிரகாம் என்று மாற்றினீர்.
8 அவன் உமக்கு உண்மையாகவும் நம்பிக்கையுடையவனாகவும் இருந்ததைக் கண்டீர்.
நீர் அவனோடு ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்டீர்.
நீர் அவனுக்கு கானானியர்,
ஏத்தியர், எமோரியர், பெரிசியர்,
எபூசியர், கிர்காசியர் ஆகியோரது நாடுகளைக் கொடுப்பதாக வாக்களித்தீர்.
ஆனால் நீர் அத்தேசத்தை ஆபிரகாமின் சந்ததியினருக்குக் கொடுப்பதாக வாக்களித்தீர்.
உமது வாக்குறுதியைக் காப்பாற்றினீர்!
ஏன்? ஏனென்றால் நீர் நல்லவர்!
9 எங்கள் முற்பிதாக்கள் எகிப்தில் துன்பப்படுவதை நீர் பார்த்தீர்.
செங்கடலில் அவர்கள் உதவிக்காகக் கூப்பிட்டதைக் கேட்டீர்.
10 பார்வோனிடத்தில் நீர் அற்புதங்களைக் காட்டினீர்.
அவனது அதிகாரிகளிடமும் ஜனங்களிடமும் அற்புதங்களை செய்தீர்.
நமது முற்பிதாக்களைவிட எகிப்தியர்கள் தம்மைச் சிறந்தவர்களாக நினைத்தனர் என்பது உமக்குத் தெரியும்.
ஆனால் நீர் எவ்வளவு சிறந்தவர் என நிரூபித்தீர்! அவர்கள் இன்றும் கூட அதனை நினைக்கின்றனர்!
11 அவர்களுக்கு முன் நீர் செங்கடலைப் பிரித்தீர்.
அவர்கள் காய்ந்த நிலத்தின் வழியாக நடந்தனர்.
எகிப்திய வீரர்கள் அவர்களைத் துரத்தினர்.
ஆனால் அவர்களை நீர் கடலுக்குள் எறிந்தீர். அவர்கள் கடலுக்குள் பாறை மூழ்குவது போன்று மூழ்கினார்கள்.
12 அந்த நேரத்தில் அவர்களை வழி நடத்த பகல் நேரத்தில் நீர் உயர்ந்த மேகத்தைப் பயன்படுத்தினீர்.
இரவில் நீர் அக்கினி தூணைப் பயன்படுத்தினீர்.
இவ்வாறு நீர் அவர்களின் பாதையை வெளிச்சமாக்கினீர்.
அவர்களுக்கு எங்கே போகவேண்டும் என்றும் வழிக்காட்டினீர்.
13 பிறகு நீர் சீனாய் மலையிலிருந்து இறங்கினீர்.
நீர் பரலோகத்திலிருந்து அவர்களோடு பேசினீர்.
நீர் அவர்களுக்கு நல்ல சட்டங்களையும் கொடுத்தீர்.
நீர் அவர்களுக்கு மிக நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமானவற்றை கொடுத்தீர்.
14 உமது பரிசுத்தமான ஓய்வுநாளைப் பற்றியும் சொன்னீர்.
உமது தாசனாகிய மோசேயைப் பயன்படுத்தி, நீர் அவர்களுக்கு கற்பனைகளையும் போதனைகளையும் சட்டங்களையும் கொடுத்தீர்.
15 அவர்கள் பசியோடு இருந்தார்கள்.
எனவே, பரலோகத்திலிருந்து அவர்களுக்கு உணவைக் கொடுத்தீர்.
அவர்கள் தாகமாய் இருந்தார்கள்.
எனவே, பாறையிலிருந்து அவர்களுக்கு தண்ணீரைக் கொடுத்தீர்.
நீர் அவர்களிடம், ‘வாருங்கள், இந்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றீர்.
நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி அவர்களுக்காக நாட்டை எடுத்துக்கொண்டீர்.
16 ஆனால் எங்கள் முற்பிதாக்களான அந்த ஜனங்கள் பெருமைகொண்டனர்.
அவர்கள் பிடிவாதமானவர்களானார்கள்.
அவர்கள் உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தனர்.
17 அவர்கள் கவனிக்க மறுத்தனர். நீர் செய்த அற்புதங்களை மறந்தனர்.
அவர்கள் எகிப்திற்கு மீண்டும் சென்று அடிமைகளாகத் தலைவரை அமர்த்தினார்கள்!
“ஆனால் நீர் மன்னிக்கிற தேவன்!
நீர் கருணையும் மிகுந்த இரக்கமும் உடையவர்.
நீர் பொறுமையும் முழு அன்பும் உடையவர்.
எனவே நீர் அவர்களைவிட்டு விலகவில்லை.
18 அவர்கள் தங்கத்தால் கன்றுக்குட்டிகைளைச் செய்து,
‘இவை தான் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தெய்வங்கள்’ என்று சொன்னபோதுங்கூட நீர் அவர்களை விட்டு விலகவில்லை.
19 நீர் மிகவும் கருணை உடையவர்!
எனவே, நீர் அவர்களை வனாந்தரத்தில் கைவிடவில்லை.
பகலில் அவர்களிடமிருந்த உயர்ந்த மேகங்களை எடுக்கவில்லை.
நீர் அவர்களைத் தொடர்ந்து வழி காட்டினீர்.
இரவில் விளக்குத்தூணை அவர்களிடமிருந்து எடுக்கவில்லை.
அவர்களது பாதைக்குத் தொடர்ந்து வெளிச்சம் தந்தீர்.
எந்த வழியில் போக வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டினீர்.
20 அவர்களை அறிவாளிகளாக்க உமது நல் ஆவியைக் கொடுத்தீர்.
அவர்களுக்கு உணவாக மன்னாவைக் கொடுத்தீர்.
நீர் அவர்களின் தாகத்திற்கு தண்ணீரைக் கொடுத்தீர்.
21 40 ஆண்டுகளுக்கு அவர்களை கவனித்து வந்தீர்!
வனாந்தரத்தில் அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
அவர்கள் ஆடைகள் பழையதாய் போகவில்லை.
அவர்களின் பாதங்கள் வீங்கவோ புண்ணாகவோ இல்லை.
22 கர்த்தாவே, நீர் அவர்களுக்கு இராஜ்யங்களையும் நாடுகளையும் கொடுத்தீர்.
நீர் அவர்களுக்குக் குறைந்த அளவான ஜனங்கள் வாழ்கிற தூர நாடுகளையும் கொடுத்தீர்.
அவர்கள் எஸ்போனின் அரசனாகிய சீகோன் நாட்டையும் பெற்றனர்.
அவர்கள் பாசானின் அரசனாகிய ஓகின் நாட்டையும் பெற்றனர்.
23 வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போன்று அவர்களது சந்ததியினரைப் பெருக்கினீர்.
அவர்களது முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தீர்.
அவர்கள் உள்ளே சென்று நாட்டை எடுத்துக்கொண்டார்கள்.
24 அப்பிள்ளைகளும் நாட்டை எடுத்துக்கொண்டனர்.
அங்கே வாழ்ந்த கானானியர்களை அவர்கள் தோற்கடித்தனர்.
நீர் அந்த ஜனங்களை தோற்கடிக்கும்படி செய்தீர்!
அந்நாடுகளையும் ஜனங்களையும் அரசர்களையும் அவர்களது விருப்பப்படிச் செய்ய நீர் அனுமதித்தீர்!
25 அவர்கள் பலமிக்க நகரங்களைத் தோற்கடித்தனர்.
அவர்கள் வளமான நிலங்களை எடுத்தனர்.
அவர்கள் நல்ல பொருட்கள் நிறைந்த வீடுகளைப் பெற்றனர்.
அவர்கள் ஏற்கெனவே தோண்டப்பட்ட கிணறுகளைப் பெற்றனர்.
அவர்கள் திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் மற்றும் பழமரங்களைப் பெற்றனர்!
அவர்கள் வயிறு நிறையும் வரை உண்டுக் கொழுத்தனர்.
நீர் கொடுத்த அற்புதமான பொருட்களை எல்லாம் அனுபவித்தனர்.
26 அவர்கள் உமக்கு எதிராகத் திரும்பினார்கள்!
அவர்கள் உமது போதனைகளைத் தூர எறிந்தனர்!
அவர்கள் உமது தீர்க்கதரிசிகளைக் கொன்றனர்.
அத்தீர்க்கதரிசிகள் மக்களை எச்சரித்தனர்.
அவர்களை உம்மிடம் திரும்பக் கொண்டுவர அவர்கள் முயற்சித்தனர்.
ஆனால் எங்களது முற்பிதாக்கள் உங்களுக்கு எதிராக அக்கிரமம் செய்தனர்!
27 எனவே அவர்களைத் தம் பகைவர்கள் கைக்கொள்ளவிட்டீர்.
பகைவர்களுக்குத் துன்பங்களைக் கொடுத்தனர்.
துன்பம் வந்ததும், முற்பிதாக்கள் உம்மை உதவிக்கு அழைத்தனர்.
பரலோகத்தில் நீர் கேட்டீர்.
நீர் மிகவும் இரக்கமுடையவர்.
எனவே அவர்களைக் காக்க ஜனங்களை அனுப்பினீர்.
அந்த ஜனங்கள் அவர்களைப் பகைவரிடமிருந்து காத்தனர்.
28 பிறகு இளைப்பாறுதல் பெற்ற உடனேயே
எங்கள் முற்பிதாக்கள் உமக்கு முன் மீண்டும் பொல்லாப்புகளைச் செய்யத் தொடங்கினார்கள்!
எனவே அவர்களைப் பகைவர் தோற்கடித்து தண்டிக்கும்படி விட்டுவிட்டீர். அவர்கள் உம்மை உதவிக்கு அழைத்தனர்.
பரலோகத்திலிருந்து நீர் அதனைக் கேட்டு அவர்களுக்கு உதவினீர்.
நீர் மிகவும் இரக்கமுள்ளவர்!
அது பலதடவை நிகழ்ந்தது.
29 நீர் அவர்களை எச்சரித்தீர்.
அவர்களை மீண்டும் வரும்படி சொன்னீர்.
ஆனால் அவர்கள் அகங்காரம் கொண்டனர்.
அவர்கள் உமது கட்டளையைக் கேட்க மறுத்தனர்.
ஜனங்கள் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் பிறகு அவர்கள் உண்மையில் வாழ்வார்கள்.
ஆனால் எங்கள் முற்பிதாக்கள் உமது சட்டங்களை மீறினார்கள்.
அவர்கள் பிடிவாதமானவர்கள்.
அவர்கள் தமது முதுகை உமக்குத் திருப்பினார்கள்.
அவர்கள் கவனிக்க மறுத்தனர்.
30 “நீர் எங்கள் முற்பிதாக்களோடு மிகப் பொறுமையாய் இருந்தீர்.
பல ஆண்டுகள் உம்மிடம் தவறாக நடந்தனர்.
உமது ஆவியினால் அவர்களை எச்சரித்தீர்.
நீர் அவர்களை எச்சரிக்க தீர்க்கதரிசிகளை அனுப்பினீர்.
ஆனால் எங்கள் முற்பிதாக்கள் கவனிக்கவில்லை.
எனவே நீர் அவர்களை அந்நியர்களிடம் ஒப்புக்கொடுத்தீர்.
31 “ஆனால் நீர் மிகவும் இரக்கமுடையவர்!
நீர் அவர்களை முழுமையாக அழிக்கவில்லை.
நீர் அவர்களை கைவிடவும் இல்லை.
நீர் இத்தகைய இரக்கமும் கருணையும் கொண்ட தேவன்!
32 எங்கள் தேவனே, நீரே பெரிய தேவன்; பயங்கரமும் வல்லமையும் கொண்ட வீரர்!
நீர் அன்பும், உண்மையுமானவர்.
நீர் உமது உடன்படிக்கையைக் காக்கிறீர்!
நாங்கள் பல துன்பங்களைப் பெற்றிருந்தோம். எங்கள் துன்பங்கள் உமக்கு முக்கியமானவை!
எங்கள் ஜனங்கள் அனைவருக்கும், அரசர்களுக்கும், தலைவர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் தீமை ஏற்பட்டன.
அத்துன்பங்கள் அசீரியா அரசரின் காலமுதல் இன்றுவரை ஏற்பட்டன!
33 ஆனால் தேவனே, எங்களுக்கு ஏற்பட்ட எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்.
நீர் நேர்மையானவர். நாங்கள் தவறானவர்கள்.
34 எங்கள் அரசர்கள், தலைவர்கள், ஆசாரியர்கள் மற்றும் முற்பிதாக்கள் உமது சட்டத்திற்கு கீழ்ப்படியவில்லை.
அவர்கள் உம்முடைய கட்டளைகளைக் கவனிக்கவில்லை.
அவர்கள் உமது எச்சரிக்கைகளைப் புறக்கணித்தனர்.
35 எங்கள் முற்பிதாக்கள் உமக்குப் பணி செய்யவில்லை.
அவர்கள் தம் சொந்த இராஜ்யத்தில் இருந்தும் செய்யவில்லை.
அவர்கள் தீமை செய்வதை நிறுத்தவில்லை.
அவர்கள் நீர் செய்த அனைத்து அற்புதங்களையும் அனுபவித்தனர்.
அவர்கள் வளமான நிலங்களை அனுபவித்தனர். அவர்கள் ஏராளமான இடத்தைப் பெற்றனர்.
ஆனால் அவர்கள் தம் தீச்செயல்களை நிறுத்தவில்லை.
36 இப்பொழுது நாங்கள் அடிமைகள். நாங்கள் இந்த நாட்டில் அடிமைகளாக இருக்கின்றோம்.
இது நீர் எமது முற்பிதாக்களுக்கு கொடுத்த நாடு.
எனவே அவர்கள் இதன் பலனையும் நன்மையையும் அனுபவிக்க முடிந்தது.
37 இந்நாட்டின் அறுவடை மிகப் பெரியது. ஆனால் நாங்கள் பாவம் செய்தோம்.
எனவே அறுவடை, எங்களை ஆள உம்மால் நியமிக்கப்பட்ட அரசர்களுக்கு சொந்தமாயிற்று.
அந்த அரசர்கள் எங்களையும் எங்கள் ஆடு மாடுகளையும் ஆளுகிறார்கள்.
அவர்கள் விரும்புகிறபடி எதையும் செய்கிறார்கள்.
நாங்கள் மிகுந்த இக்கட்டில் உள்ளோம்.
38 “இவை இப்படி இருக்கிறபடியால், நாங்கள் மாற்ற முடியாத ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை எழுத்தில் வைக்கிறோம். எங்கள் தலைவர்கள், லேவியர்கள், ஆசாரியர்கள், ஆகியோர் ஒப்பந்தத்தில் தங்கள் கையெழுத்தை போட்டனர். அதற்கு முத்திரையும் இட்டனர்.”
எபேசுவில் பவுல்
19 அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான். 2 பவுல் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.
இந்தச் சீஷர்கள் அவனுக்கு, “நாங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லை” என்றனர்.
3 எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான்.
அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள்.
4 பவுல், “மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே” என்றான்.
5 அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். 6 அப்போது பவுல் அவனது கைகளை அவர்கள்மீது வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தனர். 7 இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர்.
8 பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்று, மிகவும் துணிவாகப் பேசினான். பவுல் மூன்று மாதங்கள் இதைச் செய்தான். அவன் யூதர்களிடம் தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிப் பேசி, அவற்றை யூதர்கள் ஏற்றுக்கொள்ளும்படித் தூண்ட முயற்சித்தான். 9 ஆனால் சில யூதர்கள் பிடிவாதமாக இருந்தனர். அவர்கள் நம்ப மறுத்தனர். இந்த யூதர்கள் தேவனுடைய வழியைக் குறித்துத் தீயவற்றைப் பேசினர். எல்லா மக்களும் இவற்றை கேட்டனர். எனவே பவுல் இந்த யூதரை விட்டு நீங்கி, இயேசுவின் சீஷர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றான். திறன்னு என்ற ஒருவனின் பள்ளிக்கூடம் இருந்த இடத்திற்குப் பவுல் போனான். பவுல் அங்கிருந்த மக்களுடன் தினமும் கலந்துரையாடினான். 10 பவுல் இதை இரண்டு வருடங்கள் செய்தான். இச்செயலால் ஆசியாவில் வசித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு யூதனும் கிரேக்கனும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டனர்.
ஸ்கேவாவின் பிள்ளைகள்
11 சில அசாதாரணமான அற்புதங்களைச் செய்வதற்கு தேவன் பவுலைப் பயன்படுத்தினார். 12 பவுல் பயன்படுத்திய துணிகளையும் கைக்குட்டைகளையும் சிலர் எடுத்துச் சென்றனர். இவற்றை மக்கள் நோயாளிகள் மீது வைத்தனர். அவர்கள் இதைச் செய்தபோது, நோயாளிகள் குணமடைந்தார்கள். அசுத்த ஆவிகள் அவர்களைவிட்டு நீங்கிச் சென்றன.
13-14 சில யூதர்களும் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களை விட்டு அசுத்த ஆவிகள் நீங்கும்படியாகச் செய்தனர். ஸ்கேவாவின் ஏழு மகன்களும் இதைச் செய்தனர். (ஸ்கேவா ஒரு தலைமை ஆசாரியன்) கர்த்தர் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி, மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளை வெளியேற்ற இந்த யூதர்கள் முயன்றனர். அவர்கள் எல்லோரும், “பவுல் பேசுகின்ற அதே இயேசுவினால், வெளியேறுமாறு நான் கட்டளையிடுகிறேன்!” என்று கூறினர்.
15 ஆனால் ஒருமுறை ஓர் அசுத்த ஆவி இந்த யூதர்களை நோக்கி, “எனக்கு இயேசுவைத் தெரியும், எனக்குப் பவுலைப் பற்றியும் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது.
16 மேலும் அசுத்த ஆவி பிடித்த மனிதன், இந்த யூதர்கள் மீது தாவினான். அவர்கள் எல்லோரைக் காட்டிலும் அவன் மிகுந்த பலம் பொருந்தியவனாக இருந்தான். அவன் அவர்களை அடித்து, அவர்களின் ஆடைகளைக் கிழித்துப்போட்டான். அந்த வீட்டிலிருந்து இந்த யூதர்கள் நிர்வாணமாக ஓடிப் போனார்கள்.
17 எபேசுவின் எல்லா ஜனங்களும், யூதரும் கிரேக்கரும் இதனை அறிந்தனர். தேவனிடம் மிகுந்த மரியாதை கொள்ளத் துவங்கினர். கர்த்தராகிய இயேசுவின் பெயரை மக்கள் அதிகமாக மகிமைப்படுத்த ஆரம்பித்தனர்.
18 விசுவாசிகளில் பலர் தாங்கள் செய்த பாவச் செயல்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் துவங்கினார்கள். 19 சில விசுவாசிகள் மந்திரத்தைப் பயன்படுத்தினவர்களாயிருந்தனர். அவர்கள் தங்கள் மந்திர நூல்களைக் கொண்டு வந்து, அவற்றை எல்லோருக்கும் முன்பாக எரித்தனர். அப்புத்தகங்கள் சுமார் ஐம்பதாயிரம் வெள்ளிக் காசுகள் மதிப்புடையனவாக இருந்தன. 20 இவ்வாறே கர்த்தரின் வார்த்தை மிக்க வல்லமை வாய்ந்த வகையில் அதிகமான மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் விசுவாசம் வைத்தனர்.
பவுல் பயணத்திட்டம்
21 இக்காரியங்களுக்குப் பிறகு, பவுல் எருசலேமுக்குச் செல்லத் திட்டமிட்டான். மக்கதோனியா, அகாயா நாடுகள் வழியாகச் சென்று, பின் எருசலேமுக்குச் செல்லப் பவுல் திட்டமிட்டான். பவுல், “நான் எருசலேமை அடைந்த பிறகு, ரோமையும் பார்க்க வேண்டும்” என்று எண்ணினான். 22 தீமோத்தேயுவும், எரஸ்துவும் பவுலுக்கு உதவியவர்களில் இருவர். மக்கதோனியாவுக்கு அவர்களைத் தனக்கு முன்பாகவே பவுல் அனுப்பினான். ஆசியாவில் இன்னும் சிலகாலம் பவுல் தங்கியிருந்தான்.
எபேசுவில் குழப்பம்
23 ஆனால் அக்காலத்தில் எபேசுவில் மிகத் தீவிரமான ஒரு குழப்பம் ஏற்பட்டது. தேவனுடைய வழியைக் குறித்த குழப்பம் அது. அவையெல்லாம் இவ்வாறு நிகழ்ந்தன. 24 தெமெத்திரியு என்னும் பெயர் கொண்ட மனிதன் ஒருவன் இருந்தான். அவன் வெள்ளி வேலை செய்பவனாக இருந்தான். ஆர்தமிஸ் தேவதையின் தேவாலயத்தைப் போன்று தோற்றமளித்த வெள்ளியாலான சிறிய மாதிரி தேவாலயங்களை அவன் செய்து வந்தான். இவ்வேலையைச் செய்தவர்கள் மிகுந்த பணம் சம்பாதித்தார்கள்.
25 இதே வேலையைச் செய்து வந்தவர்கள் அனைவரையும் அதன் தொடர்பான வேலையைச் செய்தவர்களையும் தெமெத்திரியு ஒன்று கூட்டினான். தெமெத்திரியு அவர்களை நோக்கி, “நமது வளம் இத்தொழிலைச் சார்ந்துள்ளதை அறிவீர்கள். 26 ஆனால் இந்த மனிதன் பவுல் செய்துகொண்டிருப்பதைப் பாருங்கள்! அவன் சொல்வதைக் கேளுங்கள்! பவுல் மனிதர்களைத் தூண்டி, மனம் மாற்றிவிட்டான். எபேசுவிலும் அநேகமாக ஆசியாவின் எல்லாப் பகுதிகளிலும் இதைச் செய்திருக்கிறான். மனிதன் செய்கின்ற கடவுள் சிலைகள் உண்மையானவை அல்ல என்று பவுல் சொல்கிறான். 27 பவுல் சொல்கின்ற இந்தக் காரியங்கள் மக்களை, நமது வேலைக்கெதிராகத் திருப்பக்கூடும். ஆனால் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. பெரிய தேவியான ஆர்தமிஸின் தேவாலயம் முக்கியமானதல்ல என்று மக்கள் நினைக்கக் கூடும். அவளது பெருமை அழிக்கப்படக்கூடும். ஆசியாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் வழிப்படுகின்ற தேவதை ஆர்தமிஸ் ஆவாள்” என்றான்.
28 அம்மனிதர்கள் இதனைக் கேட்டபோது மிகவும் கோபமுற்றனர். அவர்கள், “எபேசு பட்டணத்தார்களின் தேவியான ஆர்தமிஸே பெரியவள்” என்று உரக்க கூவினர். 29 நகரத்தின் எல்லா மக்களும் குழப்பமான நிலையில் காயுவையும், அரிஸ்தர்க்குவையும் பிடித்தார்கள். (இவ்விருவரும் மக்கதோனியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பவுலோடு பயணம் செய்துகொண்டிருந்தனர்.) பின் எல்லா மக்களும் அரங்கிற்குள் ஓடினார்கள். 30 பவுல் உள்ளே சென்று கூட்டத்தில் பேச விரும்பினான். ஆனால் இயேசுவின் சீஷர்கள் அவனைப் போக அனுமதிக்கவில்லை. 31 மேலும் நாட்டின் சில தலைவர்கள் பவுலின் நண்பர்களாக இருந்தனர். இத்தலைவர்கள் அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினர். அவர்கள் பவுல் அரங்கிற்குள் செல்ல வேண்டாமென்று கூறினர்.
32 ஒருவர் சத்தம் போட்டு ஒன்றையும் இன்னொருவர் சத்தம் போட்டு இன்னொன்றையும் சொன்னார்கள். மேலும் அவர்கள் எதற்காகக் கூடியிருக்கிறார்கள் என்பதைப் பெரும்பாலோர் அறியாதவாறு கூட்டத்தில் குழப்பம் மிகுந்திருந்தது. 33 யூதர்கள் அலெக்ஸாண்டர் என்னும் பெயருள்ள ஒருவனை மக்கள் முன்பாக நிறுத்தினர். அவன் செய்ய வேண்டியதை மக்கள் அவனுக்கு விளக்கினார்கள். மக்களுக்குக் காரியங்களை விளக்கவேண்டியிருந்ததால் அலேக்ஸாண்டர் தனது கையை அமைதிக்காக அசைத்தான். 34 அலெக்ஸாண்டர் ஒரு யூதன் என்பதை மக்கள் அடையாளம் கண்டபோது அவர்கள் எல்லோரும் உரத்த குரலில் கூச்சலிட ஆரம்பித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். மக்கள் “எபேசுவின் ஆர்தமிஸ் பெருமை பொருந்தியவள்! எபேசுவின் ஆர்தமிஸ் பெருமை மிக்கவள்! ஆர்தமிஸ் பெரியவள்!” என்றனர்.
35 நகர அலுவலன் மக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டினான். அவன், “எபேசுவின் மக்களே! ஆர்தமிஸ் தேவியின் தேவாலயத்தையும் பரலோகத்திலிருந்து விழுந்த அவளது பரிசுத்தப் பாறையையும் [a] பெற்ற நகரம் எபேசு என்பதை எல்லா மக்களும் அறிவர். 36 இவற்றை யாரும் மறுக்க முடியாது. எனவே நீங்கள் அமைதியாக இருங்கள். முரட்டுத்தனமாக எதையும் செய்யாதீர்கள்
37 “நீங்கள் இந்த மனிதர்களை அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால் நமது தேவிக்கு விரோதமாக அவர்கள் எதுவும் கூறவில்லை. அவள் தேவாலயத்திலிருந்து அவர்கள் எதையும் திருடவில்லை. 38 நம்மிடம் நீதி வழங்கும் மன்றங்களும் நீதிபதிகளும் இருக்கிறார்கள். தெமெத்திரியுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும் எவருக்கேனும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றனவா? அவர்கள் நீதிமன்றத்திற்குப் போக வேண்டும்! அங்கே குற்றச்சாட்டுகளையும் எதிர் குற்றச்சாட்டுக்களையும் வைக்கலாம்.
39 “நீங்கள் பேசவேண்டியது வேறு ஏதேனும் உள்ளதா? அப்படியானால் மக்களின் நகரமன்றம் நமக்கிருக்கிறது. அங்கு முடிவெடுக்கலாம். 40 நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இன்று ஒருவன் இந்தத் தொல்லையைப் பார்த்துவிட்டு, நாம் கலகத்தை உண்டாக்குகிறோம் என்று கூறலாம். இந்தத் தொல்லையை நம்மால் விளக்க முடியாது, ஏனெனில் இக்கூட்டத்திற்கு உண்மையான காரணம் எதுவும் இல்லை” என்றான். 41 நகர அலுவலன் இவற்றைக் கூறிய பிறகு, அவன் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு கூறினான். எல்லா மக்களும் கலைந்தார்கள்.
2008 by World Bible Translation Center