Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 19

லோத்தின் பார்வையாளர்கள்

19 அன்று மாலையில் இரண்டு தேவ தூதர்கள் சோதோம் நகரத்திற்கு வந்தனர். நகர வாசலில் இருந்துகொண்டு லோத்து தேவதூதர்களைப் பார்த்தான். அவர்கள் நகரத்துக்குப் போகும் பயணிகள் என்று நினைத்தான். அவன் எழுந்து அவர்களிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயா, எனது வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுக்குச் சேவை செய்வேன். உங்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டு இரவில் அங்கே தங்கி, நாளை உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான்.

அதற்கு தேவதூதர்கள், “இல்லை, நாங்கள் இரவில் வெட்டவெளியில் தங்குவோம்” என்றனர்.

ஆனால் லோத்து தொடர்ந்து தன் வீட்டிற்கு வருமாறு அவர்களை வற்புறுத்தினான். அவர்களும் ஒப்புக்கொண்டு அவனது வீட்டிற்குப் போனார்கள். அவர்களுக்காக அவன் ஆயத்தம் செய்த ரொட்டியை அவர்கள் சாப்பிட்டார்கள்.

அன்று மாலை தூங்குவதற்கு முன்னால், லோத்தின் வீட்டிற்கு நகரின் பலபாகங்களில் இருந்தும் இளைஞர், முதியோர்கள் எனப் பலரும் கூடிவந்து வீட்டைச் சுற்றிலும் நின்றுகொண்டு அவனை அழைத்தனர். அவர்கள், “இன்று இரவு உன் வீட்டிற்கு வந்த இருவரும் எங்கே? அவர்களை வெளியே அழைத்து வா, நாங்கள் அவர்களோடு பாலின உறவு கொள்ள வேண்டும்” என்றனர்.

லோத்து வெளியே வந்து வீட்டின் கதவை அடைத்துக்கொண்டான். லோத்து அவர்களிடம், “நண்பர்களே வேண்டாம். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கெட்டச் செயல்களைச் செய்ய வேண்டாம். எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை எந்த ஆணையும் அறியாதவர்கள். நான் அவர்களை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் அவர்களோடு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால் இந்த மனிதர்களை எதுவும் செய்து விடாதீர்கள். இவர்கள் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றான்.

வீட்டைச் சுற்றி நின்றவர்கள், “எங்கள் வழியில் குறுக்கிடாதே” என்று சத்தமிட்டார்கள். பிறகு அவர்கள் தங்களுக்குள்ளேயே, “லோத்து நமது நகரத்திற்கு விருந்தாளியாக வந்தான். இப்போது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நமக்கே கூறுகிறான்” என்றனர். பிறகு அவர்கள் லோத்திடம், “நாங்கள் அந்த மனிதர்களை விட உனக்கே அதிகக் கொடுமையைச் செய்வோம்” என்று கூறி லோத்தை நெருங்கி வந்து, கதவை உடைப்பதற்கு முயன்றனர்.

10 ஆனால் லோத்தின் வீட்டிற்குள் இருந்த இருவரும் கதவைத் திறந்து லோத்தை வீட்டிற்குள் இழுத்து கதவை மூடிக்கொண்டனர். 11 பிறகு அவர்கள் கதவுக்கு வெளியே இருந்த இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் பார்வையை இழக்கும்படி செய்தனர். எனவே, அவர்களால் கதவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சோதோமிலிருந்து தப்பித்தல்

12 அந்த இருவரும் லோத்திடம், “உன் குடும்பத்திலுள்ளவர்களில் யாராவது இந்த நகரத்தில் இருக்கிறார்களா? உனக்கு மருமகன்களோ, மகன்களோ, மகள்களோ அல்லது வேறு யாராவது இந்நகரத்தில் இருந்தால் அவர்களை உடனே இந்நகரத்தைவிட்டு விலகச் சொல்ல வேண்டும். 13 நாங்கள் இந்த நகரத்தை அழிக்கப் போகிறோம். இந்த நகரம் எவ்வளவு மோசமானது என்பதைப்பற்றி கர்த்தர் அறிந்தபடியால் இதனை அழிக்க எங்களை அனுப்பினார்” என்றார்கள்.

14 ஆகவே, லோத்து வெளியே போய், தனது மகள்களை மணந்துகொள்வதாயிருந்த மருமகன்களிடம், “வேகமாக இந்த நகரத்தை விட்டு வெளியேறுங்கள். விரைவில் கர்த்தர் இந்த நகரத்தை அழிக்கப் போகிறார்” என்றான். அவர்களோ அவன் வேடிக்கையாகப் பேசுவதாய் எண்ணினார்கள்.

15 அடுத்த நாள் காலையில் தேவதூதர்கள் லோத்தை வெளியேற விரைவுபடுத்தினார்கள். அவர்கள், “இந்நகரம் தண்டிக்கப்படும். எனவே, உனது மனைவியையும், இரண்டு பெண்களையும், இன்னும் உன்னோடு வருகிறவர்களையும், அழைத்துக்கொண்டு இந்த இடத்தைவிட்டு விலகிப் போ. அவ்வாறு செய்தால் நீ இந்நகரத்தோடு அழியாமல் இருப்பாய்” என்றனர்.

16 லோத்து குழப்பத்துடன் வேகமாகப் புறப்படாமல் இருந்தான், எனவே அந்த இரண்டு தேவதூதர்கள் அவன், அவனது மனைவி, மகள்கள் ஆகியோரின் கையைப் பிடித்து அவர்களைப் பாதுகாப்பாக நகரத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். லோத்தோடும் அவனது குடும்பத்தோடும் கர்த்தர் மிகவும் கருணை உடையவராக இருந்தார். 17 எனவே, இரு தேவதூதர்களும் லோத்தையும் அவன் குடும்பத்தையும் பாதுகாப்பாக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தபின்னர் தூதர்களில் ஒருவன், “இப்போது உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப் போங்கள். இந்நகரத்தைத் திரும்பிப் பார்க்காதீர்கள். இந்தச் சமவெளியில் எங்கும் நிற்காதீர்கள். மலைக்குப் போய்ச் சேரும்வரை ஓடுங்கள். இடையில் நின்றால் நகரத்தோடு நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றான்.

18 ஆனால் லோத்து அந்த இருவரிடமும், “ஐயா, அவ்வளவு தூரத்துக்கு ஓடும்படி என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். 19 உங்கள் சேவகனாகிய என் மீது நீங்கள் மிகவும் இரக்கம் வைத்திருக்கிறீர்கள். என்னைக் காப்பாற்ற கருணையுடன் இருக்கிறீர்கள். ஆனால் மலைவரை என்னால் ஓட முடியாது. நான் மரித்துப்போய்விட வாய்ப்புண்டு. 20 அருகில் ஒரு சிறிய நகரம் உள்ளது. என்னை அந்நகரத்திற்கு ஓடிப்போகவிடுங்கள். அந்த அளவுக்கு என்னால் ஓடி என்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்றான்.

21 அதற்கு தேவதூதன், “நல்லது, அவ்வாறு செய்ய உன்னை அனுமதிக்கிறேன். நான் அந்நகரத்தை அழிக்கமாட்டேன். 22 ஆனால் அங்கு வேகமாக ஓடு. அங்கு நீ பாதுகாப்பாகப் போய்ச் சேரும்வரை சோதோம் நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றான். (அந்நகரின் பெயர் சோவார். ஏனெனில் அது மிகச் சிறிய நகரம்)

சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுதல்

23 சூரியன் உதயமானபோது லோத்து சோவார் நகரத்திற்குள் நுழைந்தான். 24 அதே நேரத்தில் கர்த்தர் சோதோமையும் கோமோராவை அழிக்க ஆரம்பித்தார். கர்த்தர் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்து, 25 அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார்.

26 அவர்கள் ஓடிப்போகும்போது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். அதனால் அவள் உப்புத்தூண் ஆனாள்.

27 அதே நாள் அதிகாலையில், ஆபிரகாம் எழுந்து கர்த்தரை தொழுதுகொள்ளும் இடத்துக்குச் சென்றான். 28 அவன் அங்கிருந்து சோதோம், கொமோரா நகரங்கள் இருக்கும் திசையையும், அதன் சமவெளியையும் பார்த்தபோது அங்கிருந்து புகை எழும்புவதைக் கண்டான். அது பெரிய நெருப்பினால் ஏற்படும் புகைபோல் தோன்றியது.

29 தேவன் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களை அழித்துவிட்டார். அப்போது அவர் ஆபிரகாமை நினைத்து, ஆபிரகாமின் உறவினனான லோத்தை அழிக்காமல் விட்டார். பள்ளத்தாக்கில் இருக்கும் நகரங்களுக்குள் லோத்து வாழ்ந்துகொண்டிருந்த அவ்விடங்களை அழிக்கும் முன்பு லோத்தை தேவன் வெளியேற்றினார்.

லோத்தும் அவனது மகள்களும்

30 சோவாரில் தங்கியிருக்க லோத்துவுக்கு அச்சமாக இருந்தது. எனவே, அவனும் அவனது மகள்களும் மலைக்குச் சென்று அங்கு ஒரு குகையில் வசித்தனர். 31 ஒரு நாள் மூத்தவள் இளையவளிடம், “உலகில் எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் மணந்துகொண்டு குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் நமது தந்தையோ வயதானவராக உள்ளார். நமக்கு குழந்தை தர வேறு ஆண்களும் இங்கே இல்லை. 32 எனவே, நாம் தந்தைக்கு மதுவைக் கொடுக்கலாம். அவர் மயங்கியபின் அவரோடு பாலின உறவு கொள்ளலாம். இப்படியாக நமக்குச் சந்ததி உண்டாக நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றாள்.

33 அன்று இரவு இரண்டு பெண்களும் தந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தனர். பிறகு மூத்தவள் தந்தையின் படுக்கைக்குச் சென்று அவரோடு பாலின உறவு கொண்டாள். லோத்துவுக்குத் தன் மகள் தன்னோடு படுத்ததும், எழுந்து போனதும் தெரியவில்லை. அந்த அளவுக்குக் குடித்திருந்தான்.

34 மறுநாள் மூத்தவள் இளையவளிடம்: “நேற்று இரவு நான் தந்தையோடு பாலின உறவு கொண்டேன். இன்று இரவும் அவரை மீண்டும் குடிக்க வைப்போம். பிறகு நீ அவரோடு பாலின உறவுகொள். இதன் மூலம் நாம் குழந்தை பெற நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் குடும்பமும் அழியாமல் இருக்கும்” என்றாள். 35 அதனால் இருவரும் அந்த இரவிலும் தந்தையை மது குடிக்கும்படி செய்தனர். பிறகு இளையவள் தந்தையோடு படுத்து பாலின உறவு கொண்டாள். லோத்து மதுவைக் குடித்திருந்தபடியால் அவள் படுத்ததையும், எழுந்து போனதையும் அறியாமலிருந்தான்.

36 லோத்தின் இரு மகள்களும் கர்ப்பமுற்றனர். அவர்களின் தந்தையே அவர்களது பிள்ளைகளுக்கும் தந்தை. 37 மூத்தவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவள் அவனுக்கு மோவாப் என்று பெயர் வைத்தாள். அவன் மோவாபியருக்கெல்லாம் தந்தையானான். 38 இளையவளும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு அவள் பென்னம்மி என்று பெயரிட்டாள். அவன் அம்மோன் ஜனங்களுக்குத் தந்தை ஆனான்.

மத்தேயு 18

இயேசு யார் பெரியவர் என்பது பற்றிச் சொல்லுதல்(A)

18 அச்சமயத்தில் இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து,, “பரலோக இராஜ்யத்தில் யார் மிகப் பெரியவர்?” என்று கேட்டனர்.

இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மருகில் அழைத்து, தம் சீஷர்கள் முன் நிறுத்தினார். பின் அவர்களிடம் கூறினார்,, “நான் உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். நீங்கள் மனந்திரும்பி உள்ளத்தில் சிறு பிள்ளைகளைப் போல ஆக வேண்டும். அவ்வாறு மாறாவிட்டால், நீங்கள் ஒருபொழுதும் பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியாது. இந்த சிறு பிள்ளையைப்போல பணிவுள்ளவனாகிறவனே பரலோக இராஜ்யத்தில் பெரியவன்.

,“இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன், என்னையும் ஏற்றுக்கொள்கிறான்.

பாவத்திற்குக் காரணமானவர்களை இயேசு எச்சரித்தல்(B)

,“என்னிடம், நம்பிக்கை வைத்துள்ள ஒரு சிறு பிள்ளையைப் பாவம் செய்ய ஒருவன் தூண்டினால், அவனுக்கு மிகத் தீமை விளையும். அவ்வாறு செய்கிறவன், ஒரு ஆட்டுக்கல்லைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு கடலில் மூழ்குவதே நல்லது. பாவம் செய்ய மக்கள் சோதிக்கப்படுவதால், அவர்களுக்காக வருந்துகிறேன். அவ்வாறான செயல்கள் நடக்கவேண்டும்தான். ஆனால், அவற்றுக்குக் காரணமானவர்களுக்கு மிகுந்த தீங்கு வரும்.

,“உங்களது கையோ அல்லது காலோ உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறியுங்கள். சரீரத்தின் ஒரு பகுதியை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரு கை கால்களுடன் எரிகின்ற நரகத்தின் தீயில் என்றென்றைக்குமாக எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது. உங்களது கண் உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைப் பிடுங்கி எறியுங்கள். ஒரு கண்ணை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரண்டு கண்களுடன் நரகத்தின் தீயில் எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது.

காணாமல் போன ஆட்டைப்பற்றிய உவமை(C)

10 ,“எச்சரிக்கையாயிருங்கள். இச்சிறு பிள்ளைகள் மதிப்பற்றவர்கள் என்று எண்ணாதீர்கள். இவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப் பெற்றுள்ளார்கள் என்று நான் சொல்லுகிறேன். மேலும் அத்தூதர்கள் எப்பொழுதும் பரலோகத்தில் என் பிதாவானவருடன் இருக்கிறார்கள். 11 [a]

12 ,“நூறு ஆடுகளை வைத்திருப்பவன் ஒரு ஆட்டை இழந்தால் மீதி தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குன்றில் விட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிப்போவான் அல்லவா? 13 காணாமல் போன ஆட்டை அவன் கண்டுபிடித்தால், காணமல் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் காட்டிலும் அதனால் மிக மகிழ்ச்சியடைவான். 14 அதைப்போலவே, பரலோகத்தில் இருக்கும் என் பிதா இப்பிள்ளைகள் யாரையும் இழக்க விரும்பவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன்.

ஒரு மனிதன் தவறு செய்தால்(D)

15 ,“உங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ உங்களுக்கு ஏதாவது தீமை செய்தால், அவர் செய்த தீமையை அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதைத் தனிமையில் அவனிடம் சொல்லுங்கள். அதை அவர் கவனமாகக் கேட்பாரானால், அவர் மீண்டும் உங்கள் சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்க நீங்கள் உதவி செய்தவர்களாவீர்கள். 16 ஆனால் நீங்கள் கூறுவதைக் கேட்க அவர் மறுத்தால், மீண்டும் இரண்டு மூன்று பேருடன் சென்று நடந்தவற்றை எடுத்துச் சொல்லுங்கள். அப்பொழுது, நடந்ததை உறுதிசெய்ய இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். 17 அப்பொழுதும் அவன் கேட்க மறுத்தால், சபையாரிடம் சொல்லுங்கள். சபையார் சொல்வதையும் கேட்காமற் போனால், தேவ நம்பிக்கையற்றவனைப்போல் அவனை நடத்துங்கள். வரி வசூல் செய்பவனைப்போல் நடத்துங்கள்.

18 ,“நான் உன்மையைச் சொல்லுகிறேன். நீங்கள் இவ்வுலகில் நியாயத்தைப் பேசும்பொழுது, அது தேவனின் நியாயமாக இருக்கும். இவ்வுலகில் நீங்கள் மன்னிப்பளித்தால் அது தேவனின் மன்னிப்பாக இருக்கும். 19 மேலும், நான் சொல்லுகிறேன். உங்களில் இருவர் இவ்வுலகில் எதைக் குறித்தேனும் ஒரே மனமுடையவர்களாயிருந்தால் அதற்காக நீங்கள் பிரார்த்திக்கலாம். நீங்கள் கேட்பது பரலோகத்தில் உள்ள எனது பிதாவால் நிறைவேற்றப்படும். 20 இது உண்மை. ஏனென்றால், இரண்டு மூன்று பேர் என்னில் விசுவாசம் வைத்துக் கூடினால் அவ்விடத்தில் நான் இருப்பேன்.”

மன்னிப்பைப்பற்றிய உவமை

21 அப்பொழுது, பேதுரு இயேசுவிடம் வந்து,, “ஆண்டவரே, என் சகோதரன் எனக்குத் தொடர்ந்து தீமை செய்தால் நான் அவனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மன்னித்தால் போதுமா?” என்று கேட்டான்.

22 அதற்கு இயேசு அவனுக்கு,, “நீ அவனை ஏழு முறைக்கும் அதிகமாக மன்னிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவன் எழுபத்தேழு முறை [b] தீமை செய்தாலும் நீ தொடர்ந்து மன்னிக்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.

23 ,“எனவே, பரலோகமானது தன் வேலைக்காரர்களுடன் கணக்கை சரி செய்ய முடிவெடுத்த மன்னனைப் போன்றது. 24 மன்னன் வேலைக்காரர்களின் கணக்கை சரி செய்யத் துவங்கினான். ஒரு வேலைக்காரன் அம்மன்னனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. 25 ஆனால், அவ்வேலைக்காரனால், தன் எஜமானனான மன்னனுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே, அவ்வேலைக்காரனுக்குச் சொந்தமான அனைத்தையும் மனைவி குழந்தைகள் உட்பட ஏலம் போட மன்னன் ஆணையிட்டான். அதிலிருந்து தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேண்டும் என்றான்.

26 ,“ஆனால், அந்த வேலைக்காரன் மன்னனின் கால்களில் விழுந்து, ‘என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தர வேண்டிய அனைத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சினான். 27 மன்னன் அவ்வேலைக்காரனுக்காக வருந்தினான். எனவே, மன்னன் அவ்வேலைக்காரன் பணம் ஏதும் தரத் தேவையில்லை என கூறி அவ்வேலைக்காரனை விடுவித்தான்.

28 ,“பின்னர், அதே வேலைக்காரன் தனக்குச் சிறிதளவே பணம் தரவேண்டிய வேறொரு வேலைக்காரனைக் கண்டான். அவன் உடனே, தனக்குப் பாக்கிப்பணம் தரவேண்டியவனின் கழுத்தைப் பிடித்து, ‘எனக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடு’ என்று கேட்டான்.

29 ,“மற்றவன் அவன் கால்களில் வீழ்ந்து, ‘என்னைப் பொறுத்துக் கொள். உனக்குத் தரவேண்டிய அனைத்தையும் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சிக் கேட்டான்.

30 ,“ஆனால், முதலாமவன் தான் பொறுத்துக்கொள்ள இயலாதென்றான். அவன் நீதிபதியிடம் மற்றவன் தனக்குப் பணம் தர வேண்டும் என்று கூற இரண்டாமவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவ்வேலைக்காரன் அவன் தரவேண்டிய பணம் முழுவதையும் கொடுக்கும் வரையிலும் சிறையிலிருக்க நீதிபதி பணித்தார். 31 மற்ற வேலைக்காரர்கள் அனைவரும் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். எனவே, அவர்கள் தங்கள் எஜமானனாகிய மன்னனிடம் சென்று நடந்தவை அனைத்தையும் கூறினார்கள்.

32 ,“பின்பு அம்மன்னன் தன் வேலைக்காரனை அழைத்துவரச் செய்து, அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, எனக்கு நிறையப்பணம் தர வேண்டிய நீ, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சினாய். எனவே, நீ எனக்குப் பணம் ஏதும் தரவேண்டியதில்லை என்று கூறினேன். 33 ஆகவே, நீயும் உன் சக வேலைக்காரனுக்கு அதேபோலக் கருணை காட்டியிருக்க வேண்டும்’ என்று சொன்னான். 34 மிகக் கோபமடைந்த மன்னன், அவ்வேலைக்காரனைச் சிறையிலிட்டான். தரவேண்டிய பணம் அனைத்தையும் திருப்பித் தரும்வரைக்கும் அவன் சிறையிலிருக்க வேண்டியிருந்தது.

35 ,“என் பரலோகப் பிதா உங்களுக்கு என்ன செய்வாரோ அதையே அம்மன்னனும் செய்தான். நீங்கள் மெய்யாகவே உங்கள் சகோதரனையோ சகோதரியையோ மன்னிக்க வேண்டும். இல்லையெனில் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிக்கமாட்டார்” என்று இயேசு சொன்னார்.

நெகேமியா 8

எஸ்றா சட்டத்தை வாசிக்கிறான்

ஆண்டின் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்கள் ஒன்றாயிருந்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டு தண்ணீர் வாசலுக்கு முன்னால் திறந்தவெளியில் அனைவரும் கூடினார்கள். அந்த ஜனங்கள் அனைவரும் எஸ்றா எனும் வேதபாரகனிடம் மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டார்கள். அதுதான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்ட சட்டப் புத்தகம். எனவே, ஆசாரியனான எஸ்றா அங்கே கூடியுள்ள ஜனங்களின் முன், சட்டப் புத்தகத்தைக் கொண்டுவந்தான். இதுவே அம்மாதத்தின் முதல் நாளாகும். இது அந்த ஆண்டின் ஏழாவது மாதமாகும். அக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கவனித்துக்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தனர். எஸ்றா அதிகாலையிலிருந்து மதியம்வரை சட்டப்புத்தகத்திலிருந்து உரத்த குரலில் வாசித்தான். அவன் ஆண்களும் பெண்களுமாய் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தவர்களிடம் வாசித்தான். அனைத்து ஜனங்களும் கவனமாகக் கேட்டனர். சட்டப் புத்தகத்தில் கவனம் வைத்தனர்.

எஸ்றா மரத்தால் ஆன மேடையின் மேல் நின்றான். அது இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்தது. எஸ்றாவின் வலது புறத்தில் மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், நின்றனர். அவனது இடது புறத்தில் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.

எனவே எஸ்றா புத்தகத்தைத் திறந்தான். ஜனங்கள் எல்லோரும் அவனைப் பார்க்க முடிந்தது. ஏனென்றால் அவன் உயர்ந்த மேடையில் நின்றுக்கொண்டிருந்தான். எஸ்றா சட்ட புத்தகத்தைத் திறந்ததும் ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றனர். எஸ்றா உன்னத தேவனாகிய கர்த்தரைத் துதித்தான். ஜனங்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி அதற்கு மறுமொழியாக “ஆமென்! ஆமென்!” என்று சொன்னார்கள். பிறகு ஜனங்கள் அனைவரும் குனிந்து முகங்குப்புற விழுந்து கர்த்தரை தொழுதுகொண்டார்கள்.

லேவியர் கோத்திரத்திலுள்ள இம்மனிதர்கள் அங்கே நின்றுக்கொண்டிருந்த ஜனங்களிடம் சட்டத்தைப் பற்றி ஜனங்களுக்குப் புரியும்படிச் செய்தனர். அவர்கள் யெசுவா, பானி, செரேபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா ஆகியோர்களாவார்கள். அந்த லேவியர்கள் தேவனுடைய சட்டப்புத்தகத்தை வாசித்தனர். அவர்கள் அதனைப் புரியும்படிச் செய்தனர். அதன் பொருளையும் விளக்கினார்கள். அவர்கள் இதனைச் செய்ததால் ஜனங்கள் வாசிக்கப்பட்டது என்னவென்று புரிந்துக்கொண்டனர்.

பிறகு ஆளுநராகிய நெகேமியா, ஆசாரியனுமான, வேதபாரகனாகிய எஸ்றா மற்றும் ஜனங்களுக்குப் போதித்த லேவியர்களும் ஜனங்களிடம், “இந்நாள் சிறப்புக்குரிய நாளாக [a] உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உள்ளது. எனவே துக்கப்படவும் அழவும் வேண்டாம்” என்றனர். ஏனென்றால் ஜனங்கள் தேவனுடையச் செய்திகளைச் சட்டத்தில் கேட்டதும் அழுதனர்.

10 நெகேமியா, “போங்கள், நல்ல உணவையும் இனிய பானங்களையும் குடித்து மகிழுங்கள். கொஞ்சம் உணவையும் பானத்தையும் உணவு எதுவும் தயார் செய்யாத ஜனங்களுக்குக் கொடுங்கள். இன்று கர்த்தருக்கு சிறப்பிற்குரிய நாள். துக்கப்படவேண்டாம். ஏனென்றால் கர்த்தருடைய மகிழ்ச்சியானது உங்களைப் பலமுடையவர்களாகச் செய்யும்” என்றான்.

11 லேவியின் கோத்திரத்தாரும் ஜனங்கள் அமைதியடைய உதவினார்கள். அவர்கள், “அமைதியாக இருங்கள், இது சிறப்பிற்குரிய நாள், துக்கப்பட வேண்டாம்” என்றனர்.

12 பிறகு ஜனங்கள் எல்லாரும் சிறப்பான உணவை உண்ணச் சென்றனர். அவர்கள், தம் உணவையும் பானங்களையும் பகிர்ந்துக்கொண்டனர். அவர்கள் சந்தோஷமாக இருந்தனர். அச்சிறப்பு நாளைக் கொண்டாடினார்கள். அவர்கள் ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்பிக்க முயற்சி செய்துக்கொண்டிருந்த கர்த்தருடைய போதனைகளை புரிந்துக்கொண்டனர்.

13 பிறகு அம்மாதத்தின் இரண்டாவது நாளில் அனைத்து குடும்பத் தலைவர்களும் போய் எஸ்றாவையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் சந்தித்தனர். அவர்கள் அனைவரும் வேதபாரகனாகிய எஸ்றாவைச் சுற்றி சட்டத்தின் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள கூடினார்கள்.

14-15 அவர்கள் கற்று சட்டத்தில் கட்டளைகள் இருப்பதைக் கண்டனர். கர்த்தர் இந்தக் கட்டளையை மோசே மூலம் ஜனங்களுக்குக் கொடுத்தார். ஆண்டின் ஏழாவது மாதத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு விஷேச விடுமுறையை (கூடாரங்கள் விழா) கொண்டாட எருசலேமிற்குப் போகவேண்டும். அவர்கள் தற்காலிகமாக கூடாரங்களில் அங்கே குடியிருக்கவேண்டும். ஜனங்கள் தங்களது சகல நகரங்களுக்கும் எருசலேமிற்கும் போய் இவற்றைக் கூறவேண்டும்: “மலை நாடுகளுக்குப் போங்கள். பலவகையாக ஒலிவ மரங்களிலிருந்து கிளைகளை எடுங்கள். மிருதுச்செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மரப்பட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள். அக்கிளைகளைக் கொண்டு தற்காலிகமாகக் கூடாரங்களை அமையுங்கள். சட்டம் சொல்லுகிறபடிச் செய்யுங்கள்.”

16 எனவே, ஜனங்கள் வெளியே போய் அம்மரக் கிளைகளை எடுத்தனர். பிறகு அவர்கள் தற்காலிகமான கூடாரங்களைத் தங்களுக்காக அமைத்தனர். அவர்கள் தங்கள் சொந்த கூரைகள் மேலும் முற்றங்களிலும் கூடாரங்களை அமைத்துக்கொண்டனர். ஆலயப் பிரகாரங்களிலும், தண்ணீர் வாசல் அருகிலுள்ள திறந்த வெளியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள். 17 இவ்வாறு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேல் ஜனங்களின் குழு முழுவதும் கூடாரங்களைப் போட்டார்கள். அவர்கள் அமைத்த கூடாரங்களிலேயே அவர்கள் குடி இருந்தார்கள். நூனின் மகனாகிய யோசுவாவின் நாட்கள் முதல் அந்நாள்வரை இஸ்ரவேல் ஜனங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையை இவ்வாறு கொண்டாடவில்லை. ஒவ்வொருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.

18 விழாவின் ஒவ்வொரு நாளும் சட்டப் புத்தகத்தில் இருந்து எஸ்றா வாசித்தான். விழாவின் முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை எஸ்றா சட்டப் புத்தகத்தை வாசித்தான். இஸ்ரவேல் ஜனங்கள் இவ்விழாவை ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். பிறகு எட்டாவது நாள் ஜனங்கள் முறைப்படி ஒரு சிறப்புக் கூட்டத்திற்காகக் கூடினார்கள்.

அப்போஸ்தலர் 18

கொரிந்துவில் பவுல்

18 இதன் பிறகு பவுல் அத்தேனேயை விட்டு, கொரிந்து நகரத்திற்குச் சென்றான். கொரிந்துவில் பவுல் ஆக்கில்லா என்னும் பெயருள்ள யூத மனிதனைச் சந்தித்தான். ஆக்கில்லா பொந்து நாட்டில் பிறந்தவன். ஆனால் ஆக்கில்லாவும் அவனது மனைவி பிரிசில்லாவும் சமீபத்தில் இத்தாலியிலிருந்துகொரிந்துவுக்கு வந்திருந்தனர். கிலவுதியு எல்லா யூதர்களும் ரோமை விட்டுப் போக வேண்டுமென்று கட்டளையிட்டதால் அவர்கள் இத்தாலியிலிருந்து வந்தனர். பவுல், ஆக்கில்லா, பிரிசில்லா ஆகியோரைச் சந்திக்கச் சென்றான். அவர்களும் பவுலைப் போலவே கூடாரம் கட்டுபவர்கள். இதன் காரணமாகப் பவுல் அவர்களோடு தங்கியிருந்து வேலை செய்து வந்தான்.

ஒவ்வொரு ஓய்வு நாளிலும் பவுல் ஜெப ஆலயத்தில் யூதரோடும் கிரேக்கரோடும் பேசினான். அவர்கள் இயேசுவில் விசுவாசம்கொள்ள ஒப்புமாறு செய்வதற்குப் பவுல் முயற்சி செய்துகொண்டிருந்தான். சீலாவும் தீமோத்தேயுவும் மக்கதோனியாவிலிருந்துகொரிந்துவிலுள்ள பவுலிடம் வந்தனர். இதன் பிறகு பவுல் தனது நேரம் முழுவதையும் மக்களுக்கு நற்செய்தியைக் கூறுவதிலேயே செலவிட்டான். இயேசுவே கிறிஸ்து என்பதை அவன் யூதர்களுக்குக் காட்டினான். ஆனால் யூதர்கள் பவுலின் போதனையை ஏற்றுக்கொள்ளவில்லை. சில புண்படுத்தும் வார்த்தைகளை யூதர்கள் கூறினர். எனவே பவுல் உடையிலிருந்த தூசியை உதறினான். அவன் யூதரை நோக்கி, “நீங்கள் இரட்சிக்கப்படாவிட்டால் அது உங்களின் தவறுதான்! நான் என்னால் முடிந்ததைச் செய்துவிட்டேன்! இதன் பிறகு, நான் யூதரல்லாத மக்களிடம் மட்டுமே செல்வேன்!” என்றான்.

பவுல் ஜெப ஆலயத்தை விட்டு யுஸ்து என்பவரின் வீட்டிற்குப் போனான். இம்மனிதன் உண்மையான தேவனை வணங்கினான். அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்திருந்தது. அந்த ஜெப ஆலயத்திற்கு அதிகாரி கிறிஸ்பு என்பவன். கிறிஸ்புவும் அவன் வீட்டில் வசிக்கும் எல்லா மக்களும் கர்த்தரை விசுவாசித்தனர். கொரிந்துவிலுள்ள வேறு பலரும் பவுல் கூறியதைக் கேட்டனர். அவர்களும் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் பெற்றனர்.

இரவு வேளையில் பவுலுக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. கர்த்தர் அவனை நோக்கி, “பயப்படாதே! மக்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்து செய். நிறுத்தாதே! 10 நான் உன்னோடு இருக்கிறேன். யாரும் உன்னை தாக்கித் துன்புறுத்த முடியாது. என்னுடைய மக்கள் பலர் நகரத்தில் இருக்கிறார்கள்” என்றார். 11 ஒன்றரை ஆண்டு காலம் பவுல் அங்கேயே தங்கி மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை உபதேசித்தான்.

கல்லியோன் முன் பவுல்

12 கல்லியோன் அகாயா நாட்டின் ஆளுநரானான். அக்காலத்தில் யூதர்களில் சிலர் பவுலுக்கு எதிராகக் குழுவாக வந்தனர். அவர்கள் பவுலை நீதி மன்றத்திற்குக் கொண்டு போனார்கள். 13 யூதர்கள் கல்லியோனிடம், “யூத விதிக்கு மாறான வகையில் தேவனை வழிபடும்படி இம்மனிதன் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்கிறான்!” என்றார்கள்.

14 பவுல் ஏதோ சொல்ல இருந்தான். ஆனால் கல்லியோன் யூதர்களிடம், “நீங்கள் பெரிய குற்றத்தைக் குறித்தோ அல்லது தவறைக் குறித்தோ புகார் செய்திருந்தால் நான் உங்களுக்குச் செவிசாய்த்திருப்பேன். 15 ஆனால் யூதர்களாகிய நீங்கள் கூறுபவையோ வார்த்தைகள், பெயர்கள் ஆகியவற்றைப் பற்றிய வினாக்களும், உங்களுடைய சட்டத்தைப் பற்றிய வாக்குவாதமும் மட்டுமேயாகும். எனவே நீங்களே இந்தப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். இந்த விஷயங்களில் நான் நீதிபதியாக இருக்க விரும்பவில்லை!” என்றான். 16 பின் கல்லியோன் அவர்களை நீதிமன்றத்தை விட்டுப்போகச் செய்தான்.

17 அவர்கள் எல்லோரும் சொஸ்தேனேயைப் பிடித்துக்கொண்டார்கள். (சொஸ்தேனே அப்போது ஜெப ஆலயத்தின் தலைவனாக இருந்தான்) அவர்கள் சொஸ்தேனேயை நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். ஆனால் கல்லியோன் இதைக்குறித்து எந்தக் கவலையும்படவில்லை.

அந்தியோகியாவுக்குத் திரும்புதல்

18 பவுல் சகோதரர்களுடன் பலநாட்கள் தங்கியிருந்தான். பின் அவன் அவர்களை விட்டுப் புறப்பட்டு, சிரியாவிற்குக் கடற்பயணமானான். பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் அவனோடிருந்தனர். கெங்கிரேயாவில் பவுல் தனது தலைமயிரைக் களைந்தான். அவன் தேவனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தான் என்பதை இது உணர்த்தியது. 19 பின் அவர்கள் எபேசு பட்டணத்தை அடைந்தார்கள். இங்கு அவன் ஆக்கில்லாவையும், பிரிசில்லாவையும் பிரிந்தான். பவுல் எபேசுவில் இருந்தபோது ஜெப ஆலயத்திற்குள் சென்று யூதரோடு பேசினான். 20 யூதர்கள் பவுலை இன்னும் சில காலம் தங்குமாறு வேண்டினார்கள். ஆனால் பவுல் மறுத்துவிட்டான். 21 “ஆனால் தேவன் விரும்பினால் நான் உங்களிடம் மீண்டும் வருவேன்” என்று புறப்படும்பொழுது கூறினான். எனவே பவுல் எபேசுவிலிருந்து மீண்டும் கடற்பயணம் செய்தான்.

22 பவுல் செசரியா நகரத்திற்குச் சென்றான். பின்னர் அவன் எருசலேமிலிருந்த சபையினரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தினான். அதன் பிறகு பவுல் அந்தியோகியா நகரத்திற்குச் சென்றான். 23 பவுல் அந்தியோகியாவில் சிலகாலம் தங்கியிருந்தான். பின் அவன் கலாத்தியா, பிரிகியா நாடுகள் வழியாகச் சென்றான். இந்நாடுகளில் பவுல் ஊர் ஊராகப் பயணம் செய்தான். அவன் இயேசுவின் சீஷர்கள் அனைவரையும் பலப்படுத்தினான்.

அப்பொல்லோவின் ஊழியம்

24 அப்பொல்லோ என்னும் பெயருள்ள யூதன் எபேசுவிற்கு வந்தான். அப்பொல்லோ, அலெக்ஸாண்டிரியா நகரத்தில் பிறந்தவன். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவன் வேத வாக்கியங்களை வல்லமையுடன் பயன்படுத்தினான். 25 கர்த்தரைப் பற்றி அவன் கற்றிருந்தான். அப்பொல்லோ ஆன்மீக உற்சாகம் நிரம்பியிருந்தான். இயேசுவைக் குறித்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தான். இயேசுவைக் குறித்து சரியான கருத்துக்களையே அப்பொல்லோ கற்பித்தான். அவனுக்குத் தெரிந்தது யோவானின் ஞானஸ்நானம் மட்டுமே. 26 அப்பொல்லோ ஜெப ஆலயங்களில் துணிவாகப் பேசத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் துணிவுடன் அதைச் செய்தான். அவன் பேசுவதைப் பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் கேட்டனர். அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தேவனுடைய வழியை இன்னும் துல்லியமாக அறிய உதவினார்கள்.

27 அகாயா நாட்டிற்குப் போவதற்கு அப்பொல்லோ விரும்பினான். அதற்கு எபேசுவின் சகோதரர்கள் அவனுக்கு உதவினர். அகாயாவிலுள்ள இயேசுவின் சீஷர்களுக்கு அவர்கள் ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில் அப்பொல்லோவை இச்சீஷர்கள் வரவேற்குமாறு அவர்கள் கேட்டனர். அகாயாவில் உள்ள இந்தச் சீஷர்கள் தேவனுடைய கிருபையின் மூலமாக இயேசுவில் விசுவாசம் வைத்திருந்தார்கள். அப்பொல்லோ அங்கு வந்து சேர்ந்தபொழுது அவன் அவர்களுக்கு மிகவும் உதவினான். 28 அவன் எல்லா மக்களுக்கும் முன்பாக யூதர்களுக்கு எதிராக மிக வன்மையாக வாதிட்டான். யூதர்கள் தவறான போதனைகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை நிரூபித்தான். அவன் வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி இயேசுவே கிறிஸ்து என்று காட்டினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center