M’Cheyne Bible Reading Plan
உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனம்
17 ஆபிராமுக்கு 99 வயதானபோது கர்த்தர் அவனுக்கு காட்சி தந்தார். அவர், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். எனக்குக் கீழ்ப்படிந்து எனக்கு முன்பாகச் சரியான வழியில் நட. 2 நீ இவற்றைச் செய்தால், நமக்குள் ஒரு உடன்படிக்கையை நான் ஏற்படுத்துவேன். உனது ஜனங்களுக்காக ஒரு பெரிய நாட்டை ஏற்பாடு செய்வதாக வாக் குறுதி செய்வேன்” என்றார்.
3 தேவனுக்கு முன் ஆபிராம் பணிந்து வணங்கினான். 4 தேவன் அவனிடம், “நான் உன்னைப் பல நாடுகளின் தந்தையாக்குவேன். 5 நான் உனது பெயரை மாற்றுவேன். இப்போது உனது பெயர் ஆபிராம், இனி உன் பெயர் ஆபிரகாம். நான் உன்னைப் பல நாடுகளுக்குத் தந்தையாக்கப் போவதால் இந்தப் பெயரை உனக்கு சூட்டுகிறேன். 6 நான் உனக்கு அநேக சந்ததிகளை கொடுப்பேன். உன்னிடமிருந்து புதிய நாடுகள் உருவாகும். பல அரசர்கள் உன்னிடமிருந்து எழும்புவார்கள். 7 நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கை தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன். 8 நான் இந்த பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். நீ பரதேசியாய் தங்கி வருகிற கானான் நாடு முழுவதையும் தருவேன். என்றென்றைக்கும் இது உனக்கு உரியதாகும். நான் உனது தேவனாயிருப்பேன்” என்றார்.
9 மேலும் தேவன் ஆபிரகாமிடம், “இது உடன்படிக்கையில் உனது பகுதியாகும். நீயும் உனது சந்ததியும் இந்த உடன்படிக்கையை மனதில் வைத்திருக்க வேண்டும். 10 இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். 11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே நீங்கள் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதற்கான அடையாளம். 12 ஒரு ஆண்குழந்தை பிறந்த எட்டாவது நாள் அவனுக்கு விருத்தசேதனம் செய்துவிட வேண்டும். அது போலவே உங்கள் அடிமைகளுக்குப் பிறக்கும் ஆண்குழந்தைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 13 எனவே உங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் அடிமைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 14 இதுதான் உனக்கும் எனக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை. விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆணும் உங்களிடமிருந்து விலக்கப்படுவான்; ஏனென்றால் அவன் எனது உடன்படிக்கையை உடைத்தவனாகிறான்” என்றார்.
ஈசாக்கு சத்தியத்திற்குரிய மகன்
15 தேவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராய் இனிமேல் சாராள் என்று அழைக்கப்படுவாள். 16 அவளை நான் ஆசீர்வதிக்கிறேன். அவள் உனக்கு ஒரு மகனைப் பெற்றுத்தரும்படி செய்வேன். நீயே அவன் தந்தை. சாராள் பல நாடுகளுக்குத் தாயாக இருப்பாள். அவளிடமிருந்து பல அரசர்கள் வருவார்கள்” என்றார்.
17 ஆபிரகாம் தன் முகம் தரையில்படும்படி விழுந்து வணங்கி தேவனுக்கு மரியாதை செலுத்தினான். எனினும் அவன் தனக்குள் சிரித்துக்கொண்டே, “எனக்கு 100 வயது ஆகிறது. என்னால் ஒரு மகன் பிறப்பது கூடியகாரியமா?. சாராளுக்கோ 90 வயது. அவள் ஒரு மகனைப் பெறுவது எப்படி?” என்றான்.
18 ஆபிரகாம் தேவனிடம், “இஸ்மவேல் வாழ்ந்து உமக்குச் சேவை செய்வான் என நம்புகிறேன்” என்றான்.
19 தேவன், “இல்லை. உன் மனைவி சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்று சொன்னேன். நீ அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாய். நான் அவனோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வேன். அந்த உடன்படிக்கையே என்றென்றைக்கும் அவனுக்கும் அவனது சந்ததிக்கும் தொடரும்.
20 “நீ இஸ்மவேலைப்பற்றிச் சொன்னாய். நான் அவனையும் ஆசீர்வதிப்பேன். அவனுக்கும் நிறைய பிள்ளைகள் இருக்கும். அவன் 12 பெரிய தலைவர்களுக்குத் தந்தையாவான். அவனது குடும்பமே ஒரு நாடாகும். 21 ஆனால் நான் என் உடன்படிக்கையை ஈசாக்கிடம் ஏற்படுத்துவேன். ஈசாக்கு சாராளின் மகனாயிருப்பான். அவன் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் பிறந்திருப்பான்” என்றார்.
22 ஆபிரகாமிடம் தேவன் பேசி முடித்த பிறகு தேவன் அவனை விட்டு விலகிப் போனார். 23 தேவன் ஆபிரகாமிடம் அவன் குடும்பத்திலுள்ள ஆண்களும், சிறுவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே, ஆபிரகாம் தனது மகன் இஸ்மவேல், மற்றும் அவனுடைய வீட்டில் பிறந்த அடிமைகளையும், பணம் கொடுத்து வாங்கிய அடிமைகளையும் கூட்டினான். ஆபிரகாமின் வீட்டிலுள்ள ஒவ்வொரு ஆணும், சிறுவனும் அந்த நாளிலே, தேவன் ஆபிரகாமிடம் கூறியபடியே விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.
24 ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவனுக்கு 99 வயது. 25 அப்போது ஆபிரகாமின் மகன் இஸ்மவேலுக்கு 13 வயது. 26 ஆபிரகாமும் அவனது மகனும் அதே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டனர். 27 அன்று அவனது குடும்பத்தில் உள்ள அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டனர். அவன் வீட்டில் பிறந்த அடிமைகளும், அவன் வாங்கிய அடிமைகளும் கூட விருத்தசேதனம் செய்துகொண்டனர்.
யூதத் தலைவர்களால் சோதனை(A)
16 இயேசுவைச் சோதிப்பதற்காகப் பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரிடம் வந்தார்கள். அவர்கள் இயேசு தேவனிடமிருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதம் நிகழ்த்துமாறு கேட்டனர்.
2 இயேசு அவர்களிடம்,, “சூரியன் மறைவதை நீங்கள் காணும்பொழுது, காலநிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். செவ்வானமாயிருந்தால், நல்ல கால நிலை என்கிறீர்கள். 3 சூரிய உதயத்தைக் காலையில் காண்கிறீர்கள். அப்பொழுது வானம் இருண்டும் சிவந்துமிருந்தால், மழை பெய்யும் என்கிறீர்கள். இவை காலநிலையின் அறிகுறிகள். இவைகளை வானத்தில் கண்டு, அவற்றின் பொருளை அறிகிறீர்கள். அது போலவே, தற்பொழுது நடப்பவைகளை நீங்கள் காண்கிறீர்கள். இவைகளும் அறிகுறிகளே. ஆனால், இவற்றின் பொருளை நீங்கள் அறியவில்லை. 4 தீயவர்களும் பாவிகளும் அற்புதங்களை அறிகுறிகளாகத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு, யோனாவின் அடையாளத்தையன்றி [a] வேறெந்த அடையாளமும் கிடைக்காது” என்று கூறினார். பின் இயேசு அவர்களை விட்டு அகன்றார்.
யூதத்தலைவர்களைக் குறித்து எச்சரிக்கை(B)
5 இயேசுவும் அவரது சீஷர்களும் கலிலேயா ஏரியைக் கடந்து சென்றார்கள். ஆனால், சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்தனர். 6 இயேசு தம் சீஷர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! பரிசேயர் சதுசேயரின் புளித்தமாவைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்,” என்று கூறினார்.
7 அவரது சீஷர்கள் அதன் பொருளைக் குறித்து விவாதித்தனர்., “நாம் அப்பங்களைக் கொண்டு வர மறந்ததினாலா இயேசு இவ்வாறு கூறினார்?” என்று அவர்கள் விவாதித்தனர்.
8 தமது சீஷர்கள் இதைக் குறித்து விவாதித்ததை இயேசு அறிந்தார். எனவே, இயேசு அவர்களிடம்,, “அப்பங்கள் இல்லாததைக் குறித்து ஏன் பேசுகிறீர்கள்? உங்கள் விசுவாசம் குறைவுள்ளது. 9 இன்னமும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? ஐந்து அப்பங்களால் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? மக்கள் உண்டதில் மீதியைப் பல கூடைகளில் இட்டு நிரப்பியதும் ஞாபகமில்லையா? 10 ஏழு அப்பங்களைக் கொண்டு நான்காயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? பின் மக்கள் உண்டு மீந்ததைப் பல கூடைகளில் நிரப்பியதும் ஞாபகமில்லையா? 11 எனவே, நான் அப்பத்தை குறித்து உங்களுடன் பேசவில்லை. அது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான தீய போதனைகளை விட்டு விலகிப் பாதுகாப்பாயிருக்க நான் உங்களுக்குக் கூறுகிறேன்,” என்றார்.
12 பின்னரே, இயேசு கூறியதன் பொருளைச் சீஷர்கள் புரிந்துகொண்டார்கள். அப்பம் செய்யப் பயன்படுத்தப்படும் புளித்த மாவைக் குறித்து இயேசு பேசவில்லை. மாறாக, இயேசு அவர்களைப் பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான போதனைகளைக் குறித்தே எச்சரித்தார்.
இயேசுவே கிறிஸ்து என பேதுருவின் அறிக்கை(C)
13 செசரியா பிலிப்பு என்ற இடத்திற்கு இயேசு சென்றார். இயேசு தம் சீஷர்களிடம்,, “மனித குமாரனாகிய என்னை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
14 அதற்கு சீஷர்கள்,, “சிலர் உம்மை யோவான்ஸ்நானகன் என்கிறார்கள். சிலர் உம்மை எலியா என்கிறார்கள். மேலும் சிலர் உம்மை எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கிறார்கள்” எனப் பதில் அளித்தார்கள்.
15 பின் இயேசு தம் சீஷர்களிடம்,, “நான் யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.
16 அதற்கு சீமோன் பேதுரு,, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான்.
17 இயேசு அவனிடம்,, “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார். 18 எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு [b] (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது. 19 பரலோக இராஜ்யத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். நீ இப்பூலோகத்தில் வழங்கும் நியாயத்தீர்ப்பு, (மெய்யாகவே) தேவனின் நியாயத்தீர்ப்பாகும். இப்பூலோகத்தில் நீ வாக்களிக்கும் மன்னிப்பு, தேவனின் மன்னிப்பாகும்” என்று சொன்னார்.
20 தான் கிறிஸ்து என்பதை ஒருவருக்கும் சொல்லக் கூடாது எனத் தமது சீஷர்களை இயேசு எச்சரித்தார்.
இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்(D)
21 அப்பொழுதிலிருந்து இயேசு தம் சீஷர்களிடம் தாம் எருசலேம் செல்லவேண்டுமென சொல்லத் தொடங்கினார். மூத்த யூதத் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும் நியாயப் பிரமாண போதகர்களாலும் தமக்குப் பல இன்னல்கள் வரப்போவதை இயேசு விளக்கினார். மேலும், தம் சீஷர்களிடம் தாம் கொல்லப்படவிருப்பதையும் இயேசு கூறினார். பின்னர், மூன்றாம் நாள் தாம் உயிர்த்தெழவிருப்பதையும் கூறினார்.
22 இயேசுவுடன் தனிமையில் பேசிய பேதுரு அவரை விமர்சிக்கத் தொடங்கினான். பேதுரு,, “தேவன் உம்மை அவற்றிலிருந்து காப்பாற்றட்டும். ஆண்டவரே! அவை உமக்கு ஒருபோதும் நிகழக்கூடாது!” என்று கூறினான்.
23 இயேசு அதற்குப் பேதுருவிடம்,, “என்னை விட்டு விலகிச் செல், சாத்தானே! நீ எனக்கு உதவி செய்யவில்லை! தேவனின் செயல்களைக் குறித்து உனக்குக் கவலையில்லை. மக்கள் முக்கியமெனக் கருதுகின்றவைகளையே நீ பொருட்படுத்துகிறாய்” என்று கூறினார்.
24 பின்பு இயேசு தமது சீஷர்களிடம்,, “என்னைப் பின்தொடர விரும்பும் யாரும் தன் சுயவிருப்பங்களைத் துறக்க வேண்டும். தனக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்தொடர வேண்டும். 25 தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் எவனும் அதை இழப்பான். எனக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறவன், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான். 26 தன் ஆத்துமாவை இழந்தவனுக்கு, இவ்வுலகம் முழுவதும் கிடைத்தாலும் ஒரு பயனும் இல்லை. என்ன விலை கொடுத்தாலும் இழந்த ஆத்துமாவை மீட்க இயலாது. 27 தமது தந்தையின் மகிமையுடனும் தேவதூதர்களுடனும் மீண்டும் தேவகுமாரன் வருவார். அப்பொழுது, ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்த செயல்களுக்குத் தக்கபடி தேவ குமாரன் வெகுமதியளிப்பார். 28 நான் உண்மையைச் சொல்கிறேன். இங்குள்ள சிலர் தாங்கள் இறப்பதற்கு முன்பு மனித குமாரன் தன் இராஜ்யத்தின் ஆட்சியுடன் வருவதைக் காண்பார்கள்.” என்றார்.
மேலும் பிரச்சனைகள்
6 பிறகு சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேமும் மற்றும் எங்களது மற்ற பகைவர்களும் நான் சுவரைக் கட்டிவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்டனர். நாங்கள் சுவரிலுள்ள அனைத்து துவாரங்களையும் அடைத்தோம். ஆனால் நாங்கள் இன்னும் வாசலுக்குரிய கதவுகளைப் போட்டிருக்கவில்லை. 2 எனவே சன்பல்லாத்தும் கேஷேமும் எனக்கு, “நெகேமியா வா, நாம் ஒன்றாகக் கூடுவோம். நாம் ஓனோ பள்ளத்தாக்கில் உள்ள கெப்பிரிம் எனும் பட்டணத்தில் கூடிப்பேசுவோம்” என்னும் செய்தியை அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் என்னைத் தாக்கத் திட்டமிட்டனர்.
3 எனவே நான்: “முக்கியமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். நான் அங்கு வர முடியாது. நான் கீழே வந்து உங்களைச் சந்திப்பதால் இந்த வேலை தடைபடுவதை விரும்பவில்லை” என்கிற பதிலோடு அவர்களிடம் தூதர்களை அனுப்பினேன்.
4 சன்பல்லாத்தும் கேஷேமும் அதே செய்தியை என்னிடம் நான்குமுறை அனுப்பினார்கள். ஒவ்வொருமுறையும் நான் அதே பதிலையே திரும்ப அனுப்பினேன். 5 பிறகு, ஐந்தாவது தடவை, சன்பல்லாத் தனது உதவியாளனை என்னிடம் அதே செய்தியோடு அனுப்பினான். அதோடு அவனது கையில் முத்திரையிடப்படாத ஒரு கடிதமும் இருந்தது. 6 அக்கடிதத்தில்,
“ஒரு வதந்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எங்கெங்கும் ஜனங்கள் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, கேஷேம் இதனை உண்மை என்று கூறுகிறான். நீயும் யூதர்களும் அரசனுக்கு எதிராகத்திரும்ப திட்டமிடுகிறீர்கள் என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகத் தான் நீங்கள் எருசலேம் சுவரைக் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீ யூதர்களின் புதிய அரசன் ஆவாய் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 7 ‘யூதாவில் ஒரு அரசன் இருக்கிறான்’ என்று எருசலேமில் அறிக்கையிடுவதற்கு நீ தீர்க்கதரிசிகளைத் தேர்ந்தெடுக்கிறாய் என்றும் வதந்தி உள்ளது.
“நெகேமியா, இப்பொழுது நான் உன்னை எச்சரிக்கிறேன். இதைப்பற்றி அர்தசஷ்டா அரசனும் கேள்விப்படுவான். எனவே வா, நாம் கூடி இதைப் பற்றி பேசுவோம்” என்று எழுதியிருந்தது.
8 எனவே நான் சன்பல்லாத்துக்கு இந்தப் பதிலை அனுப்பினேன். அதில், “நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் நடக்கவில்லை. உன் சொந்த தலைக்குள் நீயே எல்லாவற்றையும் சிந்தித்துக்கொண்டிருக்கிறாய்” என்று எழுதியிருந்தேன்.
9 எங்கள் பகைவர்கள் எங்களைப் பயமுறுத்தவே முயன்றனர். அவர்கள் தங்களுக்குள், “யூதர்கள் பயப்படுவார்கள். வேலைச் செய்துகொண்டிருப்பதில் சோர்வு அடைவார்கள். பிறகு சுவர் வேலை முடியாது” என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான், “தேவனே என்னைப் பலப்படுத்தும்” என ஜெபம் செய்தேன்.
10 ஒரு நாள் தெலாயாவின் மகனாகிய செமாயாவின் வீட்டிற்குப் போனேன். தெலாயா, மெகதாபெயேலின் மகன். செமாயா தன் வீட்டிலேயே தங்கியிருந்தான். செமாயா, “நெகேமியா, நாம் தேவனுடைய ஆலயத்தில் சந்திப்போம். நாம் அந்த பரிசுத்தமான இடத்தின் உள்ளே போய் கதவுகளை மூடிக்கொள்வோம். ஏனென்றால் மனிதர்கள் உன்னைக் கொல்ல வருகின்றனர். இன்று இரவு உன்னைக் கொல்ல வருகின்றனர்” என்றான்.
11 ஆனால் நான் செமாயாவிடம், “என்னைப் போன்ற சாதாரண மனிதன் ஓடலாமா? என்னைப் போன்ற சாதாரண மனிதன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பரிசுத்தமான இடத்திற்கு ஓட முடியாது என்று நீ அறிவாய். நான் போகமாட்டேன்!” என்று சொன்னேன்.
12 செமாயாவை தேவன் அனுப்பியிருக்கவில்லை என்பதை நான் அறிவேன். அவன் எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துக்கொண்டிருக்கிறான் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் அவ்வாறு செய்வதற்கு அவனுக்குத் தொபியாவும் சன்பல்லாத்தும் சம்பளம் கொடுக்கிறார்கள். 13 செமாயா, என்னைப் பயங்காட்டி அச்சமடைய செய்வதற்குக் கூலி பெற்றிருக்கிறான். நான் ஆலயத்தின் அந்தப் பாகத்திற்குப் போவதால் ஏற்படும் பாவத்தை செய்ய அவர்கள் இத்தகைய தீயகாரியங்களை எனக்கு எதிராக திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். பிறகு எனது பகைவர்களுக்கு என்னை நிந்திக்க ஒரு காரணம் கிடைத்துவிடும். அதன் மூலம் எனக்குக் கெட்ட பெயரைத் தருவார்கள்.
14 தேவனே தயவுசெய்து தொபியாவையும் சன்பல்லாத்தையும் அவர்கள் செய்துள்ள தீயவற்றையும் நினைவுக்கொள்ளும். பெண் தீர்க்கதரிசியான நொவதியாளும் மற்ற தீர்க்கதரிசிகளும் என்னைப் பயங்காட்ட முயன்றதை நினைவுக்கொள்ளும்.
சுவர் முடிக்கப்படுகிறது
15 எனவே, எருசலேம் சுவர் எலூல் மாதத்தின் 25வது நாளன்று கட்டி முடிக்கப்பட்டது. சுவரைக் கட்டிமுடிக்க 52 நாட்கள் ஆயிற்று. 16 பிறகு எங்களது பகைவர்கள் எல்லாம் சுவர் கட்டி முடிக்கப்பட்டது என்பதைக் கேள்விப்பட்டனர். எங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினர் சுவர் கட்டி முடிந்துவிட்டது என்பதைப் பார்த்தனர். எனவே அவர்கள் தமது தைரியத்தை இழந்தனர். ஏனென்றால் இவ்வேலை எங்கள் தேவனுடைய உதவியால் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டனர்.
17 சுவர் வேலை முடிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில், யூதாவில் உள்ள பணக்கார ஜனங்கள் தொபியாவிற்குப் பல கடிதங்களை அனுப்பினர். தொபியாவும் அவற்றுக்குப் பதில் அனுப்பினான். 18 அவர்கள் அக்கடிதங்களை அனுப்பினர். ஏனென்றால், யூதாவிலுள்ள பல ஜனங்கள் அவனுக்கு உண்மையாக இருப்பதாகச் சத்தியம் செய்துள்ளனர். இதற்கு காரணம், தொபியா செகனியாவிற்கு மருமகனாக இருந்தான். செகனியா ஆராகின் மகன். தொபியாவின் மகனான யோகனான் மெசுல்லாமின் மகளை மண முடித்திருந்தான். மெசுல்லாம், பெரகியாவின் மகனாக இருந்தான். 19 கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் தொபியாவிற்கு ஒரு சிறப்பான வாக்குறுதியைச் செய்துக் கொடுத்திருந்தனர். எனவே அந்த ஜனங்கள் என்னிடம் தொபியா எவ்வளவு நல்லவன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். நான் செய்துக்கொண்டிருந்ததையும் அவர்கள் தொபியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். தொபியா என்னைப் பயங்காட்ட கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தான்.
பவுல்-சீலா-தீமோத்தேயு
16 தெர்பை, லிஸ்திரா ஆகிய நகரங்களுக்குப் பவுல் சென்றான். தீமோத்தேயு எனப்படும் கிறிஸ்துவின் சீடன் அங்கிருந்தான். தீமோத்தேயுவின் தாய் ஒரு விசுவாசியான யூதப் பெண்மணி, அவன் தந்தை ஒரு கிரேக்கன். 2 லிஸ்திரா, இக்கோனியம் நகரங்களிலுள்ள விசுவாசிகள் தீமோத்தேயுவை மதித்தனர். அவனைப் பற்றிய நல்ல கருத்துக்களையே கூறினர். 3 தீமோத்தேயு தன்னுடன் பயணம் செய்ய பவுல் விரும்பினான். அப்பகுதியில் வசித்த எல்லா யூதர்களும் தீமோத்தேயுவின் தந்தை கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான்.
4 பின் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் பிற பட்டணங்கள் வழியாகப் பிரயாணம் செய்தனர். எருசலேமில் அப்போஸ்தலரும் மூப்பர்களும் எடுத்த முடிவுகளையும் விதிகளையும் அவர்கள் விசுவாசிகளுக்கு அளித்தார்கள். இந்த விதிகளைப் பின்பற்றும்படிக்கு அவர்கள் விசுவாசிகளுக்குக் கூறினர். 5 எனவே சபைகள் விசுவாசத்தில் வலிமையுற்று நாள்தோறும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தன.
ஆசியாவிற்கு வெளியே அழைப்பு
6 பிரிகியா, கலாத்தியா நாடுகளின் வழியாகப் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் சென்றனர். ஆசியா நாட்டில் அவர்கள் நற்செய்தியைப் போதிப்பதை பரிசுத்த ஆவியானவர் அனுமதிக்கவில்லை. 7 மீசியா நாட்டிற்கருகே பவுலும் தீமோத்தேயுவும் சென்றனர். பித்தினியா நாட்டிற்குள் போக அவர்கள் விரும்பினர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உள்ளே செல்ல விடவில்லை. 8 எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகருக்குச் சென்றனர்.
9 அன்றிரவு பவுல் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சியில் மக்கதோனியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன் பவுலிடம் வந்தான். அம்மனிதன் அங்கு நின்று, “மக்கதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவுங்கள்” என்றான். 10 பவுல் அக்காட்சியைக் கண்ட பின்பு கர்த்தருடைய நற்செய்தியை அம்மக்களுக்குக் கூறுவதற்கு தேவன் எங்களை அழைத்துள்ளார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
லீதியாளின் மாற்றம்
11 நாங்கள் ஒரு கப்பலில் துரோவாவை விட்டுப் புறப்பட்டு சாமோத்திராக்கே தீவிற்குப் பயணமானோம். மறுநாள் நாங்கள் நியாப்போலி நகருக்கு கடல் வழியாகப் பயணமானோம். 12 அங்கிருந்து நாங்கள் பிலிப்பிக்குச் சென்றோம். மக்கதோனியாவில் பிலிப்பி ஒரு முக்கியமான நகரம். அது ரோமர்களுக்கான நகரம். சில நாட்கள் நாங்கள் அந்நகரில் தங்கினோம்.
13 ஓய்வுநாளில் நகர வாசல் வழியாக ஆற்றை நோக்கிச் சென்றோம். நதியருகே ஒரு சிறப்பான பிரார்த்தனை செய்வதற்கு இடம் கிடைக்கக்கூடும் என்று எண்ணினோம். சில பெண்கள் அங்குக் கூடியிருந்தனர். நாங்கள் அங்கு அமர்ந்து அவர்களோடு பேசினோம். 14 தியத்தீரா என்னும் நகரிலுள்ள லீதியாள் என்னும் பெண்மணி அங்கிருந்தாள். ஊதாநிற பட்டு ஆடைகளை விற்பதே அவளது தொழில். அவள் உண்மையான தேவனை வழிபட்டாள். அவள் பவுலைக் கவனித்துக்கொண்டிருந்தாள். கர்த்தர் அவளது இருதயத்தைத் திறந்து பவுல் சொன்னவற்றை ஒப்புக்கொள்ளச் செய்தார். அவள் பவுல் கூறியவற்றை நம்பினாள். 15 அவளும் அவளது வீட்டினரும் ஞானஸ்நானம் பெற்றனர். பின் லீதியாள் எங்களை அவளது வீட்டிற்கு அழைத்தாள். அவள், “கர்த்தராகிய இயேசுவில் நான் உண்மையாகவே விசுவாசம் உள்ளவள் என்று நீங்கள் எண்ணினால் என் வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்றாள். அவள் எங்களை அவளோடு தங்குமாறு வற்புறுத்தினாள்.
சிறையில் பவுலும் சீலாவும்
16 ஒரு நாள் பிரார்த்தனை செய்யுமிடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு வேலைக்காரச் சிறுமி எங்களைச் சந்தித்தாள். அவளுக்குள் ஒரு விசேஷ ஆவி இருந்தது. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைப்பற்றிக் கூறும் வல்லமையை இந்த ஆவி அவளுக்குக் கொடுத்தது. அவளது உரிமையாளர்களுக்கு இதைச் செய்து மிகுந்த பணத்தை அவள் சம்பாதித்துக்கொடுத்தாள். 17 இந்தப் பெண் பவுலையும் எங்களையும் தொடர்ந்து வந்தாள். அவள் உரத்த குரலில் “இம்மனிதர்கள் மிக உன்னதமான தேவனின் ஊழியர்கள்! உங்களுக்கு இரட்சிப்பின் வழியை அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்!” என்றாள். 18 அவள் இதையே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாள். மேலும் அதைப் பொறுக்கமுடியாத பவுல் அந்த ஆவியைப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அவளிடமிருந்து வெளியே வருமாறு உனக்குக் கட்டளையிடுகிறேன்!” என்றான். உடனே ஆவி வெளியேறிற்று.
19 அந்த வேலைக்காரப் பெண்ணின் உரிமையாளர்கள் இதைக் கண்டனர். அப்பெண்ணைப் பணம் சம்பாதிப்பதற்கு இனிமேல் பயன்படுத்த முடியாது என்பதை அம்மனிதர்கள் அறிந்தனர். எனவே அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து வந்து நகரத்தின் சந்தியில் நிறுத்தினர். நகர அதிகாரிகள் அங்கிருந்தனர். 20 தலைவர்களின் முன்பு அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் கொண்டு வந்தனர். அவர்கள், “இம்மனிதர்கள் யூதர்கள். நகரத்தில் துன்பத்தை விளைவிக்கிறார்கள். 21 நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது” என்றார்கள்.
22 பவுலையும், சீலாவையும் கூட்டத்தினர் எதிர்த்தார்கள். பவுல், சீலா ஆகியோரின் ஆடைகளைத் தலைவர்கள் கிழித்தார்கள். பவுலையும், சீலாவையும் கழிகளால் அடிக்கும்படி அவர்கள் சில மனிதர்களுக்குச் சொன்னார்கள். 23 அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் பல முறை அடித்தார்கள். பின் அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறையில் தள்ளினார்கள். தலைவர்கள் சிறை அதிகாரியை நோக்கி, “கவனமாக அவர்களைக் காவலில் வையுங்கள்!” என்றார்கள். 24 சிறையதிகாரி இந்தச் சிறப்புக் கட்டளையைக் கேட்டான். எனவே அவன் பவுலையும் சீலாவையும் சிறையின் மிக உட்பகுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து காவலில் வைத்தான். பெரிய மரத்தூண்களுக்கிடையில் அவர்கள் கால்களைக் கட்டினான்.
25 நள்ளிரவில் பவுலும், சீலாவும் பிரார்த்தனை செய்துகொண்டும் தேவனை நோக்கி துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டுமிருந்தனர். மற்ற சிறைக் கைதிகள் அவர்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். 26 திடீரென்று ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. சிறையின் அஸ்திபாரத்தை அசைக்கும்படியாக அது பலமாக இருந்தது. பின் சிறைச் சாலையின் கதவுகள் எல்லாம் திறந்தன. எல்லா கைதிகளும் அவர்களது விலங்குகளிலிருந்து விடுபட்டனர். 27 சிறையதிகாரி விழித்தெழுந்தான். சிறைக் கதவுகள் திறந்திருப்பதை அவன் கண்டான். சிறைக் கைதிகள் ஏற்கெனவே தப்பித்துப் போயிருக்க வேண்டுமென அவன் நினைத்தான். எனவே சிறையதிகாரி தன் வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள இருந்தான். 28 ஆனால் பவுல் உரக்க, “உன்னைத் துன்புறுத்திக்கொள்ளாதே. நாங்கள் எல்லோரும் இங்கு இருக்கிறோம்!” என்றான்.
29 சிறையதிகாரி விளக்குகளைக் கொண்டுவருமாறு ஒருவனுக்குப் பணித்தான். பின் அவன் உள்ளே ஓடினான். அவன் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் பவுல், சீலா ஆகியோர் முன்பாகக் கீழே விழுந்தான். 30 பின் அவன் அவர்களை வெளியே அழைத்து வந்து அவர்களிடம், “நான் இரட்சிப்படைய என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
31 அவர்கள் அவனை நோக்கி, “கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாயிரு. நீயும் உன் வீட்டாரும் இரட்சிப்பு அடைவீர்கள்” என்றார்கள். 32 எனவே பவுலும் சீலாவும் கர்த்தரின் செய்தியை சிறையதிகாரிக்கும் அவன் வீட்டிலிருந்த ஒவ்வொருவருக்கும் கூறினர். 33 சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் அழைத்துச் சென்று அவர்களது காயங்களைக் கழுவினான். பின் சிறையதிகாரியும் அவன் வீட்டிலிருந்த அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர். 34 அதன் பிறகு சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுத்தான். அவன் வீட்டிலிருந்த அனைவரும் தேவன் மீதுகொண்ட விசுவாசத்தால் மகிழ்ந்தார்கள்.
35 மறுநாள் காலையில், தலைவர்கள் சில வீரர்களைச் சிறையதிகாரியிடம், “அம்மனிதர்களை விடுதலை செய்!” என்று கூற அனுப்பினர்.
36 சிறையதிகாரி பவுலிடம், “உங்களை விடுதலை செய்யும்படியாகக் கூறி தலைவர்கள் இந்த வீரர்களை அனுப்பியுள்ளனர். நீங்கள் போகலாம். அமைதியாகச் செல்லுங்கள்” என்று அறிவித்தான்.
37 ஆனால் பவுல் வீரரை நோக்கி, “உங்கள் தலைவர்கள் எங்களை விசாரணை செய்யவில்லை. ஆனால் மக்கள் முன்பாக அவர்கள் எங்களை அடித்துச் சிறையில் அடைத்தார்கள். நாங்கள் ரோம மக்கள். எங்களுக்கு உரிமை உள்ளது. இப்போது தலைவர்கள் நாங்கள் இரகசியமாகப் போக வேண்டுமென விரும்புகிறார்கள். முடியாது, தலைவர்களே வந்து எங்களை வெளியேற்றட்டும்!” என்றான்.
38 பவுல் கூறியவற்றை வீரர்கள் தலைவர்களுக்குக் கூறினர். பவுலும் சீலாவும் ரோம மக்கள் என்பதைத் தலைவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் பயந்தார்கள். 39 எனவே அவர்கள் வந்து பவுலிடமும், சீலாவிடமும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறைக்கு வெளியே அழைத்துவந்து அவர்களை நகரத்தை விட்டுப்போகுமாறு கூறினர். 40 ஆனால் பவுலும் சீலாவும் சிறையினின்று வந்தபோது அவர்கள் லிதியாளின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் விசுவாசிகள் சிலரைக் கண்டு, அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். பின் பவுலும் சீலாவும் வெளியேறினர்.
2008 by World Bible Translation Center