M’Cheyne Bible Reading Plan
உலகம் பிரிக்கப்பட்டது
11 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர். 2 ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர். 3 ஜனங்கள், “நாம் செங்கற்களைச் செய்து, நெருப்பில் அவற்றைச் சுடுவோம். அது பலமுடையதாகும்” என்றனர். எனவே ஜனங்கள் கற்களைப் பயன்படுத்தாமல் செங்கற்களைப் பயன்படுத்தி வீடு கட்டினர். சாந்துக்கு பதிலாக தாரைப் பயன்படுத்தினர்.
4 மேலும் ஜனங்கள், “நமக்காக நாம் ஒரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு பெரிய கோபுரத்தை வானத்தை எட்டுமளவு கட்ட வேண்டும். நாம் புகழ் பெறுவோம். அது நம்மை ஒன்றுபடுத்தும். பூமி எங்கும் பரவிப் போகாமல் இருக்கலாம்” என்றனர்.
5 கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார். 6 கர்த்தர், “இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். 7 எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார்.
8 அவ்வாறே, கர்த்தர் ஜனங்களை பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று. 9 உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார்.
சேம் குடும்பத்தின் வரலாறு
10 இது சேமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேமுக்கு 100 வயதானபோது அர்பக்சாத் என்னும் மகன் பிறந்தான். 11 அதன் பிறகு அவன் 500 ஆண்டுகள் வாழ்ந்தான். அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் இருந்தனர்.
12 அர்பக்சாத்துக்கு 35 வயதானபோது சாலா என்னும் மகன் பிறந்தான். 13 சாலா பிறந்த பின் அர்பக்சாத் 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
14 சாலாவுக்கு 30 வயதானபோது ஏபேர் பிறந்தான். 15 ஏபேர் பிறந்தபின் சாலா 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
16 ஏபேருக்கு 34 வயதானபோது பேலேகைப் பெற்றான். 17 பேலேக் பிறந்த பின் ஏபேர் 430 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
18 பேலேக்குக்கு 30 வயதானபோது அவனது மகன் ரெகூ பிறந்தான். 19 ரெகூ பிறந்த பின் பேலேகு 209 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
20 ரெகூவுக்கு 32 வயது ஆனதும் அவனது மகன் செரூகைப் பெற்றான். 21 செரூகு பிறந்தபின் ரெகூ 207 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
22 செரூகுக்கு 30 வயது ஆனதும் நாகோர் பிறந்தான். 23 நாகோர் பிறந்தபின் செரூகு 200 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
24 நாகோருக்கு 29 வயது ஆனதும் அவனது மகன் தேராகைப் பெற்றான். 25 தேராகு பிறந்ததும் நாகோர் 119 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
26 தேராகுக்கு 70 வயதானபோது அவனது மகன்கள் ஆபிராம், நாகோர், ஆரான் பிறந்தார்கள்.
தேராகு குடும்பத்தின் வரலாறு
27 இது தேராகு குடும்பத்தின் வரலாறு ஆகும். தேராகு என்பவன் ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோரின் தந்தையானவன். ஆரான் லோத்தின் தந்தையானவன். 28 ஆரான் தனது பிறந்த நகரமான பாபிலோனியாவில் உள்ள ஊர் என்ற இடத்தில் மரணமடைந்தான். அப்போது அவனது தந்தையான தேராகு உயிரோடு இருந்தான். 29 ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்துகொண்டனர். ஆபிராமின் மனைவியின் பெயர் சாராய். நாகோரின் மனைவியின் பெயர் மில்காள். இவள் ஆரானுடைய மகள். ஆரான் மில்காளுக்கும் இஸ்காளுக்கும் தந்தை. 30 சாராய் பிள்ளைகள் இல்லாமல் மலடியாய் இருந்தாள்.
31 தேராகு தனது குடும்பத்தோடு பாபிலோனியாவில் உள்ள ஊர் எனும் இடத்தை விட்டுப் போனான். அவர்கள் கானானுக்குப் போகத் திட்டமிட்டனர். தேராகு தனது மகன் ஆபிராமையும் பேரன் லோத்தையும், மருமகள் சாராவையும் தன்னோடு அழைத்துச் சென்றான். அவர்கள் ஆரான் நகரத்துக்கு போய் அங்கே தங்கிவிட முடிவு செய்தனர். 32 தேராகு 205 ஆண்டுகள் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்தான்.
அப்போஸ்தலர்களை அனுப்புதல்(A)
10 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். தீய ஆவிகளை மேற்கொள்ளும் வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்கினார். எல்லா விதமான நோய்களையும் பிணிகளையும் குணப்படுத்தும் வல்லமையையும் இயேசு அவர்களுக்கு வழங்கினார். 2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருமாறு:
சீமோன் (மற்றொரு பெயர் பேதுரு.)
மற்றும் அவரது சகோதரன் அந்திரேயா,
செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும்
அவரது சகோதரன் யோவான்,
3 பிலிப்பு
மற்றும் பார்த்தலோமியு,
தோமா
மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
ததேயு,
4 சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து.
இயேசுவை அவரது எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தவன் இந்த யூதாஸ் ஆவான்.
5 இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 7 நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 8 நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள். தொழு நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டுங்கள். இவ்வல்லமைகளை உங்களுக்குத் தாராளமாய் வழங்குகிறேன். எனவே, மற்றவர்களுக்குத் தாராளமாய் உதவுங்கள். 9 உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள். 10 பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப்படவேண்டும்.
11 ,“நீங்கள் ஒரு நகரத்திலோ ஊரிலோ நுழையும்பொழுது, தகுதிவாய்ந்த மனிதரைக் கண்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லும்வரை அவருடன் தங்கி இருங்கள். 12 நீஙகள் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொல்லுங்கள். 13 அவ்வீட்டில் உள்ளவர்கள் உங்களை வரவேற்றால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நீங்கள் அவர்களுக்கு விரும்பிய சமாதானம் அவர்களுக்குக் கிடைக்கட்டும். வீட்டிலுள்ளவர்கள் உங்களை வரவேற்காவிட்டால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுக்கு நீங்கள் விரும்பிய சமாதானத்தைத் திரும்பப் பெறுங்கள். 14 ஒரு வீட்டிலுள்ளவர்களோ அல்லது நகரத்திலுள்ளவர்களோ உங்களை வரவேற்கவோ அல்லது உங்கள் பேச்சைக் கேட்கவோ மறுத்தால், அவ்விடத்தை விட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்த தூசியைத் தட்டிவிடுங்கள். 15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நியாயத்தீர்ப்பு நாளிலே சோதாம் மற்றும் கொமோரா ஆகிய ஊர்களுக்கு நேர்ந்ததைக் காட்டிலும் மோசமானது அவ்வூருக்கு நடக்கும்.
பிரச்சனைகளைப் பற்றிய எச்சரிக்கை(B)
16 ,“கவனியுங்கள்! நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கிடையில் அகப்பட்ட வெள்ளாட்டினைப் போல இருப்பீர்கள். எனவே, பாம்புகளைப்போல சாதுரியமாய் இருங்கள். ஆனால் புறாவைப்போல கபடற்றவர்களாயிருங்கள். 17 மக்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் உங்களைக் கைது செய்து கொண்டு போய் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவார்கள். உங்களை (அவர்களது) ஜெப ஆலயங்களில் வைத்து சாட்டையால் அடிப்பார்கள். 18 ஆளுநர்களுக்கும் மன்னர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் முன்னால் நிறுத்தப்படுவீர்கள். என்னிமித்தம் உங்களுக்கு மக்கள் இதைச் செய்வார்கள். அப்போது நீங்கள் என்னைப் பற்றி அம்மன்னர்களுக்கும் ஆளுநர்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் எடுத்துச் சொல்வீர்கள். 19 நீங்கள் கைது செய்யப்படும்பொழுது, எதைச் சொல்வது எப்படிச் சொல்வது என்று கவலைகொள்ளாதீர்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் பேச வேண்டியவை அருளப்படும். 20 அப்பொழுது உண்மையில் பேசுவது நீங்களாயிருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவர் உங்கள் மூலமாகப் பேசுவார்.
21 ,“சகோதரர்களே தமது சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தந்தையரே தம் பிள்ளைகளுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுப்பார்கள். பிள்ளைகளே தமது பெற்றோர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். 22 நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள். ஆனால், இறுதிவரை உறுதியாயிருக்கிறவன் இரட்சிக்கப்படுவான். 23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
24 ,“ஒரு மாணவன் ஆசிரியரைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு வேலைக்காரன் தன் முதலாளியைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. 25 ஒரு மாணவன் தன் ஆசிரியரின் அளவிற்கு முன்னேறுவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானைப்போல முன்னேற்றமடைவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வீட்டின் தலைவனே ‘பெயல்செபூல்’ என்றழைக்கப்பட்டால், அக்குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அதனிலும் மோசமான பெயரால் அழைக்கப்படுவார்கள்.
யாருக்குப் பயப்படுவது(C)
26 ,“எனவே, அத்தகைய மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். மறைந்துள்ள யாவும் வெளியே வரும். மர்மமாயுள்ள அனைத்தும் தெளிவாக அறியப்படும். 27 நான் இவற்றை இருளில் (இரகசியமாக) கூறுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றை வெளிச்சத்தில் கூற வேண்டுமென நான் விரும்புகிறேன். நான் இவற்றை அமைதியாக உங்களுடன் மட்டும் மெதுவாகப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றைத் தாராளமாக எல்லா மக்களுக்கும் கூற வேண்டும்.
28 ,“மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்களால் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியும். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாது. சரீரத்தோடு ஆத்துமாவையும் சேர்த்துக் கொல்லக்கூடிய ஒருவரிடம் (தேவனிடம்) மட்டுமே நீங்கள் பயம்கொள்ள வேண்டும். அவர் சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்திற்கு அனுப்ப வல்லவர். 29 பறவைகள் விற்கப்படும் பொழுது இரண்டு சிறிய பறவைகளின் விலை ஓரணா மட்டுமே. ஆனால் இரண்டில் ஒன்று கூட உங்கள் பிதாவானவரின் அனுமதி இன்றி சாக முடியாது. 30 உங்கள் தலையிலுள்ள முடிகளின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். 31 எனவே பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் நீங்கள் அதிக மதிப்பு வாய்ந்தவர்கள்.
விசுவாசத்தை வெளிப்படுத்துங்கள்(D)
32 ,“ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் (நின்று கொண்டு) என்னிடம் நம்பிக்கை உடையவனாய் இருப்பதாகக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவான். நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன். 33 மாறாக, ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் என்னிடம் நம்பிக்கை உடையவனல்ல எனக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவானல்ல. நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன்.
வித்தயாசமான போதனை(E)
34 ,“பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நான் வந்திருப்பதாய் நினைக்காதீர்கள். சமாதானத்தை ஏற்படுத்த நான் வரவில்லை. ஒரு பட்டயத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்துள்ளேன். 35-36 கீழ்க்கண்டவை நடந்தேறவே நான் வந்துள்ளேன்:
, “‘தன் குடும்பத்து மக்களே ஒருவருக்கு ஒருவர் எதிராவார்கள்.
மகன் தன் தந்தைக்கும்,
மகள் தன் தாய்க்கும்,
மருமகள் தன் மாமியாருக்கும், எதிராவார்கள்.’ (F)
37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. 38 என்னைப் பின்பற்றும்பொழுது உண்டாகும் துன்பத்தை ஏற்றுக்கொள்ளாதவன், என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. 39 என்னைவிடவும் தன் வாழ்வை அதிகம் நேசிக்கிறவன், மெய்யான வாழ்வை இழக்கிறான். எனக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறவன், மெய்யான வாழ்வை அடைவான்.
உங்களை ஏற்றுக்கொள்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பார்(G)
40 ,“உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொண்டவன். என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். 41 தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். நல்லவரை அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்கிறவன், நல்லவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவான். 42 யாரேனும் என்னைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சிறிய அளவேனும் உதவினால், அவன் தக்க வெகுமதியை நிச்சயம் பெறுவான். என்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்திருந்தாலும், அவனுக்குத் தக்க வெகுமதி நிச்சயம் கொடுக்கப்படும்.”
ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ளுதல்
10 எஸ்றா ஜெபம் செய்து அறிக்கையிட்டான். அழுதுக்கொண்டே அவன் தேவனுடைய ஆலயத்திற்கு முன்பு விழுந்தான். எஸ்றா இவ்வாறு செய்துகொண்டிருக்கும்போது, இஸ்ரவேல் ஜனங்களில் ஆண், பெண், குழந்தைகள் என ஒரு பெரிய கூட்டம் அவரைச் சுற்றிக்கொண்டது. அவர்களும் அவரோடு சேர்ந்து மிகப் பலமாக அழுதார்கள். 2 அப்போது ஏலாமின் சந்ததியில் ஒருவனான, யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவிடம் பேசினான். செக்கனியா, “நான் நமது தேவனிடம் உண்மையாக இருக்கவில்லை. நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் மணந்துக்கொண்டோம். ஆனால் நாங்கள் இதைச் செய்திருந்தாலும், இஸ்ரவேலுக்கான நம்பிக்கை இன்னும் இருக்கிறது. 3 இப்போது நாம் தேவனுக்கு முன்னால் ஒரு உடன்படிக்கை செய்துக்கொள்வோம். அதன்படி அப்படிப்பட்ட நமது பெண்களையும் குழந்தைகளையும் அகற்றிவிடுவோம். எஸ்றா மற்றும் நமது தேவனுடைய சட்டங்களை மதிக்கும் ஜனங்களின் அறிவுரையைப் பின்பற்றுவதற்காக நாம் அதைச் செய்வோம். நாம் தேவனுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவோம். 4 எஸ்றா, எழுந்திரும், இது உங்கள் பொறுப்பு, ஆனால் நாங்கள் உங்களை ஆதரிப்போம். எனவே தைரியமாக செயல்படும்” என்றான்.
5 எனவே எஸ்றா எழுந்தான். தலைமை ஆசாரியர்களையும், லேவியர்களையும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தன் சொல்லுக்குக் கட்டுப்படும்படி வாக்குறுதி பண்ணச்செய்தான். 6 பிறகு, எஸ்றா தேவனுடைய ஆலயத்தில் இருந்து வெளியேப் போனான். எலியாசிபின் மகனான யோகனானின் அறைக்குப் போனான். அங்கே, அவன் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட ஜனங்களுக்காக உணவு உண்ணாமலும், தண்ணீர் குடியாமலும் இருந்தான். காரணம் அவன் இன்னும் சோகமாக இருந்தான். எருசலேமிற்குத் திரும்பி வந்த ஜனங்களைப் பற்றி மிகவும் சோகமாயிருந்தான். 7 யூதா மற்றும் எருசலேமில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பினான். அச்செய்தி, அடிமைத்தனத்திலிருந்து மீண்டு எருசலேமிற்கு வந்த இஸ்ரவேலர்கள் அனைவரையும் எருசலேமில் கூடும்படிச் சொன்னது. 8 மூன்று நாட்களுக்குள் எந்த இஸ்ரவேலனும் எருசலேமிற்கு வராவிட்டால், தம் சொத்துக்களை இழக்க வேண்டியதிருக்கும். இந்த முடிவை முக்கிய அதிகாரிகளும், மூப்பர்களும் எடுத்தனர். கூட்டத்திற்கு வராதவர்கள் அந்தக் குழுவின் உறுப்பினராக இல்லாமல் போவார்கள்.
9 எனவே, எருசலேமில் மூன்று நாட்களுக்குள், யூதா மற்றும் பென்யமீனில் உள்ள அனைவரும் வந்து கூடினார்கள். 9வது மாதத்தின் 20வது நாளில் ஆலய பிரகாரத்தில் அனைவரும் கூடினார்கள். இக்கூட்டத்தாலும் அப்போது பெய்த பெரு மழையால் ஜனங்கள் மிகவும் கலக்கமடைந்தார்கள். 10 பிறகு ஆசாரியனான எஸ்றா எழுந்து ஜனங்களிடம் பேசினான். “நீங்கள் தேவனுக்கு உண்மையானவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டீர்கள். இதைச் செய்ததன் மூலம் இஸ்ரவேலர்களை மேலும் குற்றவாளிகளாக்கிவிட்டீர்கள். 11 இப்போது, நீங்கள் பாவம் செய்தீர்கள் என்பதை கர்த்தரிடம் ஒப்புக்கொள்ளவேண்டும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் தேவன். நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்தும், உங்கள் அயல்நாட்டு மனைவியரிடம் இருந்தும் தனித்திருங்கள்” என்றான்.
12 பிறகு அங்கு கூடியுள்ள கூட்டம் முழுவதும் எஸ்றாவிற்குப் பதில் சொன்னது. அவர்கள் உரத்த குரலில், “எஸ்றா, நீர் சொல்வது சரி! நீர் சொல்லும் காரியங்களை நாங்கள் செய்யவேண்டும். 13 ஆனால் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். இது மழை காலமாகவும் இருக்கிறது. எனவே எங்களால் வெளியே தங்கமுடியாது. நாங்கள் மிக மோசமான பாவங்களைச் செய்துவிட்டோம். எனவே இந்தப் பிரச்சினையை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தீர்க்க முடியாது. 14 இங்கே கூடியுள்ள அனைவருக்காகவும் எங்கள் தலைவர்கள் முடிவுச் செய்யட்டும். எங்கள் நகரங்களில் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள் எல்லாம் ஒரு திட்டமிட்ட நாளில் இங்கே எருசலேமில் கூடட்டும். அவர்கள் இங்கு மூப்பர்களோடும் நகர நீதிபதிகளோடும் வரட்டும். பிறகு எங்கள் மீது தேவன் கோபங்கொள்ளாமல் இருப்பார்” என்றனர்.
15 மிகச் சிலரே இந்தத் திட்டத்திற்கு எதிராக இருந்தனர். அவர்கள் ஆசகேலின் மகனான யோனத்தானும், திக்வாவின் மகனான யக்சியாவும் ஆவார்கள். லேவியர்களில் மெகல்லாவும், சப்பேதாவும் இதற்கு எதிராக இருந்தனர்.
16 எனவே எருசலேமிற்குத் திரும்பி வந்த இஸ்ரவேலர்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். ஆசாரியனாகிய எஸ்றா, குடும்பத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். அவன் ஒவ்வொரு கோத்திரங்களிலிருந்தும் ஒருவனைத் தேர்ந்தெடுத்தான். ஒவ்வொருவரும் தங்கள் பேரால் அழைக்கப்பட்டனர். பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அவர்கள் கூடியமர்ந்து, ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்தனர். 17 அடுத்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில், அவர்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டவர்களைப் பற்றி விசாரித்து முடித்தனர்.
அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்களின் பட்டியல்
18 அயல்நாட்டுப் பெண்களை மணந்துக் கொண்ட ஆசாரியர் சந்ததியினரின் பெயர்கள்:
யோசதாக்கின் மகனாகிய யெசுவா என்பவனின் சந்ததியிலும் யெசுவாவின் சகோதரர்களும்; மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா ஆகியோர். 19 இவர்கள் அனைவரும் தம் மனைவியரை விவாகரத்து செய்வதாக வாக்களித்தனர். தங்கள் ஒவ்வொருவரும் மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தார்கள். தங்கள் குற்ற மனப்பான்மையால் அவர்கள் இவ்வாறு செய்தனர்.
20 இம்மேர் என்பவனின் சந்ததியில், அனானியும் செபதியாவும்.
21 ஆரீம் என்பவனின் சந்ததியில், மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா ஆகியோர்.
22 பஸ்கூர் என்பவனின் சந்ததியில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா ஆகியோர்.
23 லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா (இவனுக்கு கெலாயா என்ற பேருமுண்டு), பெத்தகீயா, யூதா, எலியேசர் ஆகியோர்
அயல் தேசத்துப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள்.
24 பாடகரில் எலியாசிபும்,
வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி ஆகியோர்
அயல் தேசத்துப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள்.
25 மற்ற இஸ்ரவேலருக்குள்ளே கீழ்க்கண்டவர்கள் அனைவரும் அயல்தேசப் பெண்களை மணந்துக் கொண்டவர்கள்.
பாரோஷின் சந்ததியில்: ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா ஆகியோர்.
26 ஏலாமின் சந்ததியில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா ஆகியோர்.
27 சத்தூவின் சந்ததியில்: எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா ஆகியோர்.
28 பெபாய் என்பவனின் சந்ததியில்: யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி ஆகியோர்.
29 பானி என்பவனின் சந்ததியில்: மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் ஆகியோர்.
30 பாகாத்மோவாப் என்பவனின் சந்ததியில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே ஆகியோர்.
31 ஆரீம் என்பவனின் சந்ததியில்: எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன். 32 பென்யமீன், மல்லூக், செமரியா ஆகியோர்.
33 ஆசும் என்பவனின் சந்ததியில்: மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி ஆகியோர்.
34 பானி என்பவனின் சந்ததியில்: மாதாயி, அம்ராம், ஊவேல், 35 பெனாயா, பெதியா, கெல்லூ, 36 வனியா, மெரெமோத், எலெயாசீப், 37 மத்தனியா, மதனாய், யாசாய்,
38 பானிபின்னூயி என்பவனின் சந்ததியில்: சிமெயி, 39 செலேமியா, நாத்தான், அதாயா, 40 மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, 41 அசரெயேல், செலேமியா, செமரியா, 42 சல்லூம், அமரியா, யோசேப் ஆகியோர்.
43 நேபோ என்பவனின் சந்ததியில்: ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா ஆகியோர்.
44 இவர்கள் அனைவரும் அயல்நாட்டுப் பெண்களை மணந்திருந்தனர். சிலருக்கு அவர்களோடு குழந்தைகளும் இருந்தனர்.
பேதுருவும் கொர்நேலியுவும்
10 செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனிதன் இருந்தான். ரோமப் படையில் “இத்தாலிய” வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான். 2 கொர்நேலியு நல்ல மனிதன். அவனும் அவன் வீட்டில் வாழ்ந்த எல்லா மக்களும் உண்மையான தேவனை வணங்கினர். தனது பணத்தின் பெரும் பகுதியையும் அவன் ஏழை மக்களுக்குக் கொடுத்தான். கொர்நேலியு தேவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். 3 ஒருநாள் மதியத்திற்குப்பின் மூன்று மணியளவில் கொர்நேலியு ஒரு காட்சியைக் கண்டான். அவன் தெளிவாக அதைக் கண்டான். அக்காட்சியில் தேவனிடமிருந்து ஒரு தூதன் அவனிடம் வந்து “கொர்நேலியுவே!” என்றான்.
4 கொர்நேலியு தேவதூதனைக் கண்டு பயந்து, “ஆண்டவரே, என்ன வேண்டும்?” என்றான்.
தேவதூதன் கொர்நேலியுவிடம், “தேவன் உனது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்தார். நீ ஏழை மக்களுக்குக் கொடுக்கும் தருமங்களை அவர் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். 5 யோப்பா நகரத்திற்குச் சில மனிதரை அனுப்பு, சீமோன் என்னும் மனிதனை அழைத்து வருவதற்கு அம்மனிதர்களை அனுப்பு. சீமோன், பேதுரு எனவும் அறியப்படுகிறான். 6 சீமோன் எனப்படும் தோல் தொழிலாளியோடு சீமோன் பேதுரு தங்கிக்கொண்டிருக்கிறான். கடற்கரையில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இப்போது இருக்கிறான்” என்றான். 7 கொர்நேலியுவோடு பேசிய தேவதூதன் அகன்றான். பின் கொர்நேலியு இரண்டு வேலைக்காரர்களையும், ஒரு வீரனையும் அழைத்தான். அந்த வீரன் ஒரு நல்ல மனிதன். கொர்நேலியுவின் நெருக்கமான உதவியாளர்களில் அவ்வீரனும் ஒருவன். 8 கொர்நேலியு அம்மூன்று மனிதருக்கும் எல்லாவற்றையும் விளக்கினான். பின் அவன் அவர்களை யோப்பாவிற்கு அனுப்பினான்.
9 மறுநாள் இம்மனிதர்கள் யோப்பா அருகே வந்தனர். அப்போது பேதுரு மாடிக்குப் பிரார்த்தனை செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது மதியமாகிக்கொண்டிருந்தது. 10 பேதுரு பசியடைந்தான். அவன் உண்ண வேண்டுமென நினைத்தான். ஆனால் பேதுரு உண்ணும்படியாக அவர்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு காட்சி தெரிந்தது. 11 திறந்த வானத்தின் வழியாக ஏதோ ஒன்று இறங்கி வருவதை அவன் கண்டான். அது பூமிக்கு வரும் பெரிய விரிப்பைப் போன்றிருந்தது. அதனுடைய நான்கு மூலைகளிலிருந்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. 12 ஒவ்வொரு வகை பிராணியும் அதில் இருந்தது. நடப்பன, பூமியில் ஊர்வன, வானில் பறக்கும் பறவைகள் போன்ற யாவும் அதில் இருந்தன. 13 பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது.
14 ஆனால் பேதுரு, “நான் அதை ஒருக்காலும் செய்யமாட்டேன். கர்த்தாவே! தூய்மையற்றதும், பரிசுத்தமற்றதுமான உணவை நான் ஒரு முறைகூடப் புசித்ததில்லை” என்றான்.
15 ஆனால் குரல் மீண்டும் அவனுக்கு, “தேவன் இவற்றைச் சுத்தமாக உண்டாக்கியுள்ளார். அவற்றை தூய்மையற்றவை என்று கூறாதே!” என்றது. 16 இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. பிறகு அப்பொருள் முழுவதும் வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
17 இந்தக் காட்சியின் பொருள் என்ன என்று பேதுரு ஆச்சரியப்பட்டான். இதற்கிடையில் கொர்நேலியு அனுப்பிய மனிதர்கள் சீமோனின் வீட்டைக் கண்டுபிடித்தனர். அவர்கள் வாசலருகே நின்றுகொண்டிருந்தனர். 18 அவர்கள், “சீமோன் என்று அழைக்கப்படும் பேதுரு இங்கு வசிக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள்.
19 பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, “கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 20 எழுந்து கீழே போ. அம்மனிதர்களோடு கேள்விகள் எதுவும் கேட்காமல் போ. நான் அவர்களை உன்னிடம் அனுப்பியிருக்கிறேன்” என்றார். 21 எனவே பேதுரு இறங்கி அம்மனிதரிடம் சென்றான். அவன், “நீங்கள் தேடி வந்த மனிதன் நானே. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்றான்.
22 அம்மனிதர்கள், “ஒரு தேவதூதன் உம்மைத் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கொர்நேலியுவுக்குக் கூறியுள்ளான். கொர்நேலியு ஒரு படை அதிகாரி. அவன் ஒரு நல்ல நேர்மையான மனிதன். அவன் தேவனை வணங்குகிறான். எல்லா யூத மக்களும் அவனை மதிக்கின்றனர். நீர் கூறும் காரியங்களைக் கொர்நேலியு கேட்கும்படியாக அவனது வீட்டிற்கு உம்மை அழைக்கும்படியாகக் கொர்நேலியுவுக்கு தேவதூதன் கூறியுள்ளான்” என்றனர். 23 பேதுரு அம்மனிதரை உள்ளே கூப்பிட்டு இரவில் அங்கே தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டான்.
மறுநாள் பேதுரு தயாராகி அம்மூன்று மனிதரோடும் சென்றான். யோப்பாவிலிருந்து சில சகோதரர்கள் பேதுருவோடு சென்றனர். 24 அடுத்த நாள் செசரியா நகரத்திற்குள் அவர்கள் வந்தனர். கொர்நேலியு அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவனது வீட்டில் உறவினரையும், நெருங்கிய நண்பர்களையும் ஏற்கெனவே வரவழைத்திருந்தான்.
25 பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோதுகொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான். 26 ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு “எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே” என்றான். 27 பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான்.
28 பேதுரு மக்களை நோக்கி, “யூதரல்லாத எந்த மனிதனோடும் சந்திப்பதோ தொடர்பு கொள்வதோ கூடாது என்பது எங்கள் யூதச் சட்டம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் நான் எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது என்று தேவன் எனக்குக் காட்டியுள்ளார். 29 அதனால்தான் அம்மனிதர் இங்கு வருமாறு என்னை அழைத்தபோது நான் மறுக்கவில்லை. எதற்காக என்னை இங்கு அழைத்தீர்கள் என்பதை இப்போது தயவு செய்து கூறுங்கள்” என்றான்.
30 கொர்நேலியு, “நான்கு நாட்களுக்கு முன், என் வீட்டில் நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். அது இதே வேளை பிற்பகல் மூன்று மணியாயிருந்தது. திடீரென ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அவன் ஒளிமிக்க பிரகாசமான ஆடைகளை அணிந்துகொண்டிருந்தான். 31 அம்மனிதன், ‘கொர்நேலியுவே! தேவன் உன் பிரார்த்தனையைக் கேட்டார். நீ ஏழை மக்களுக்கு அளிக்கும் தருமங்களை தேவன் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். 32 எனவே சில மனிதர்களை யோப்பா நகரத்திற்கு அனுப்பு. சீமோன் எனப்படும் பேதுருவை வரச்சொல். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயர் கொண்ட ஒருவனின் வீட்டில் பேதுரு தங்கியிருக்கிறான். அவன் வீடு கடற்கரையில் உள்ளது’ என்றான். 33 எனவே உடனேயே உமக்கு வரச்சொல்லியனுப்பினேன். நீர் இங்கு வந்தது நல்லது. இப்போது தேவனுக்கு முன்பாக நாங்கள் அனைவரும் கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படியாக உமக்குக் கட்டளையிட்டவற்றைக் கேட்க இங்கு கூடியிருக்கிறோம்” என்றான்.
கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு
34 பேதுரு பேச ஆரம்பித்தான். “மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். 35 சரியானவற்றைச் செய்து அவரை வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார். 36 தேவன் யூத மக்களோடு பேசியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக சமாதானம் வந்தது என்ற நற்செய்தியை தேவன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இயேசு எல்லா மக்களின் கர்த்தராவார்.
37 “யூதேயா முழுவதும் நிகழ்ந்த செயல்களை நீங்கள் அறிவீர்கள். யோவான் மக்களுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து உபதேசிக்கத் துவங்கியதற்குப் பின் இவை யாவும் கலிலேயாவில் ஆரம்பமாயின. 38 நீங்கள் நாசரேத்தின் இயேசுவைக் குறித்து அறிவீர்கள். பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் அவருக்குக் கொடுத்து தேவன் அவரைக் கிறிஸ்துவாக்கினார். இயேசு எல்லா இடங்களுக்கும் சென்று மக்களுக்கு நல்லவற்றைச் செய்துகொண்டிருந்தார். பிசாசினால் முடக்கப்பட்ட மக்களை இயேசு குணப்படுத்தினார். தேவன் இயேசுவோடிருந்தார் என்பதை இது காட்டிற்று.
39 “யூதேயாவிலும் எருசலேமிலும் இயேசு செய்த எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள் சாட்சிகள். ஆனால் இயேசு கொல்லப்பட்டார். மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையில் அவரை அறைந்தனர். 40 ஆனால் மரணத்திற்குப்பின் மூன்றாவது நாள் தேவன் இயேசுவை உயிரோடு எழுப்பினார். இயேசுவை மக்கள் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பை தேவன் கொடுத்தார். 41 ஆனால் எல்லா மக்களும் அவரைப் பார்க்கவில்லை. தேவனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்சிகள் மட்டும் அவரைப் பார்த்தார்கள். நாங்களே அந்த சாட்சிகள்! இயேசு மரித்து பின்னர் எழுந்த பிறகு அவரோடு உண்டோம், குடித்தோம்.
42 “மக்களுக்குப் போதிக்கும்படியாக இயேசு எங்களுக்குக் கூறினார். உயிரோடிருக்கும் மக்களுக்கும் மரித்த மக்களுக்கும் நீதிபதியாக தேவன் நியமித்தவர் அவரே என்று மக்களுக்குச் சொல்லும்படி எங்களுக்குக் கூறினார். 43 இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான்.
யூதரல்லாதவருக்கும் பரிசுத்த ஆவி
44 பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பரிசுத்த ஆவியானவர் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா மக்களின் மீதும் வந்திறங்கினார். 45 பேதுருவோடு வந்த யூத விசுவாசிகள் வியந்தனர். யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். 46 ஏனெனில் அவர்கள் வேற்று மொழிகளைப் பேசுவதையும், தேவனைத் துதிப்பதையும் யூத விசுவாசிகள் கேட்டனர். பின்பு பேதுரு 47 “தண்ணீரின் மூலம் இம்மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை நாம் மறுக்க முடியாது. நாம் பெற்றதைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்!” என்றான். 48 கொர்நேலியுவும் அவன் உறவினரும் நண்பர்களும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பேதுரு கட்டளையிட்டான். பின் அம்மக்கள் பேதுருவைச் சில நாட்கள் தங்களோடு தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டனர்.
2008 by World Bible Translation Center