M’Cheyne Bible Reading Plan
ஜனங்கள் தீயவர்களாக மாறுதல்
6 பூமியில் ஜனங்கள் தொகை பெருக ஆரம்பித்தது. அவர்களுக்குப் பெண் பிள்ளைகள் ஏராளமாகப் பிறந்தனர். தேவ குமாரர்கள் மானிடப் பெண்களை அதிக அழகுள்ளவர்கள் எனக் கண்டு, தாங்கள் விரும்பியபடி பெண்களைத் தேர்ந்தெடுத்து மணந்துகொண்டனர்.
அப்பெண்களும் பிள்ளைகளைப் பெற்றனர். அந்நாட்களிலும், அதற்குப் பிறகும் இராட்சதர்கள் இருந்தார்கள். அவர்கள் பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்ற வீரர்களாகவும் இருந்தனர்.
கர்த்தர், “ஜனங்கள் மனிதப்பிறவிகளே, அவர்களால் என்றென்றைக்கும் எனது ஆவி துன்புறும்படி அனுமதிக்கமாட்டேன். அவர்கள் 120 ஆண்டுகள் வாழும்படி அனுமதிக்கிறேன்” என்றார்.
5 பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெரும் பாவிகளாக இருப்பதை கர்த்தர் அறிந்தார். அவர்கள் எல்லாக் காலத்திலும் பாவ எண்ணங்களையே கொண்டிருப்பதை கர்த்தர் பார்த்தார். 6 கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார். 7 எனவே கர்த்தர், “பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும், மிருகங்களையும், ஊர்வனவற்றையும், வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப் போகிறேன். ஏனென்றால் நான் இவற்றையெல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்றார்.
8 ஆனால் கர்த்தருக்கு விருப்பமான வழியில் நடப்பவனாக நோவா என்னும் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தான்.
நோவாவும் பெருவெள்ளமும்
9 இது நோவாவின் குடும்பத்தைப்பற்றிக் கூறுகின்ற பகுதி. நோவா நேர்மையான மனிதனாக இருந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்களில் குற்றமற்றவனாக இருந்தான். அவன் எப்பொழுதும் தேவனைப் பின்பற்றி வாழ்ந்தான். 10 அவனுக்கு சேம், காம், யாப்பேத் எனும் மூன்று மகன்கள் இருந்தனர்.
11-12 தேவன் பூமியைப் பார்த்தார். அது மனிதர்களால் கெடுக்கப்பட்டிருப்பதை அறிந்தார். எங்கும் வன்முறை பரவியிருந்தது. ஜனங்கள் பாவிகளாகவும், கொடூரமானவர்களாகவும் மாறியிருந்தனர். அவர்கள் பூமியில் தம் வாழ்க்கையையும் கெடுத்திருந்தனர்.
13 எனவே, தேவன் நோவாவிடம், “எல்லோரும் பூமியில் பாவத்தையும் வன்முறையையும் பரவ வைத்துள்ளனர். எனவே நான் எல்லா உயிர்களையும் அழித்து, அவற்றை பூமியிலிருந்து விலக்குவேன். 14 கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி நீயே ஒரு பெரிய கப்பலைச் செய். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி விடு.
15 “கப்பல் 450 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் இருக்கட்டும். 16 இதில் 18 அங்குலம் கூரையை விட்டு கீழே ஒரு ஜன்னல் இருக்கட்டும். கப்பலின் பக்கவாட்டில் ஒரு கதவு இருக்கட்டும். அதில் மேல்தளம், நடுத்தளம், கீழ்த்தளம் என்று மூன்று தளங்கள் இருக்கட்டும்.
17 “நான் உனக்குச் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் பூமியில் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவேன். வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து உயிர்களையும் அழிப்பேன். மண்ணிலுள்ள அனைத்தும் மரணமடையும். 18 ஆனால் நான் உன்னோடு ஒரு சிறப்பான உடன்படிக்கையைச் செய்கிறேன். நீயும் உன் மனைவியும் உன் மகன்களும், மகன்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய்விடுங்கள். 19 பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள். கப்பலில் அவைகள் உயிரோடு இருக்கட்டும். 20 ஒவ்வொரு பறவை இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு மிருக இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், எல்லா ஊர்வனவற்றிலும் ஒவ்வொரு ஜோடியும் கண்டு பிடித்து, அவற்றையும் உனது கப்பலில் உயிரோடு வைத்துக்கொள். 21 எல்லாவகை உணவுப் பொருட்களையும் கப்பலில் சேமித்து வை. அவ்வுணவு உங்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் உதவியாக இருக்கட்டும்” என்றார்.
22 நோவா தேவன் சொன்னபடி எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான்.
தர்மம் செய்வதைப் பற்றிய போதனை
6 ,“நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது.
2 ,“நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது, நீங்கள் உதவுவதை விளம்பரம் செய்யாதீர்கள். நல்லவர்களைப் போல நடிக்கும் மனிதர்களைப் போல் நீங்கள் செய்யாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன்னர் குழல் ஊதி அறிவிப்பார்கள். அவர்கள் யூத ஆலயங்களிலும் தெருக்களிலும் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். 3 எனவே, நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது மிக இரகசியமாக உதவுங்கள். மற்றவர் எவரும் அறியாதவாறு உதவுங்கள். 4 உங்கள் உதவி இரகசியமாகச் செய்யப்படவேண்டும். உங்கள் பிதாவாகிய தேவன் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். எனவே அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
பிரார்த்தனை பற்றி போதித்தல்(A)
5 ,“நீங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுது, நல்லவர்களைப்போல நடிக்கும் தீயவர்களைப் போல் நடக்காதீர்கள். போலியான மனிதர்கள் ஜெப ஆலயங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த குரலில் பிராத்தனை செய்ய விரும்புகிறார்கள். தாம் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் காண அவர்கள் விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள். 6 நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
7 ,“நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு பிரார்த்திக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 8 அவர்களைப் போல இருக்காதீர்கள். உங்கள் பிதா நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களின் தேவைகளை அறிவார். 9 நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது கீழ்க்கண்டவாறு பிரார்த்திக்க வேண்டும்:
, “‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே,
உமது பெயர் என்றென்றும் புனிதமாயிருக்கப் பிரார்த்திக்கிறோம்.
10 உமது இராஜ்யம் வரவும் பரலோகத்தில் உள்ளது போலவே
பூமியிலும் நீர் விரும்பியவை செய்யப்படவும் பிரார்த்திக்கிறோம்.
11 ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.
12 மற்றவர் செய்த தீமைகளை நாங்கள் மன்னித்தது போலவே
எங்கள் குற்றங்களையும் மன்னியும்.
13 எங்களைச் சோதனைக்கு உட்படப் பண்ணாமல்
பிசாசினிடமிருந்து காப்பாற்றும்.’ [a]
14 நீங்கள் மற்றவர் செய்யும் தீயவைகளை மன்னித்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவானவரும் உங்கள் தீயசெயல்களையும் மன்னிப்பார். 15 ஆனால், மற்றவர்கள் உங்களுக்குச் செய்யும் தீமைகளை நீங்கள் மன்னிக்காவிட்டால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் தீமைகளை மன்னிக்கமாட்டார்.
உபவாசத்தைப் பற்றிய போதனை
16 ,“நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, சோகமாகக் காட்சியளிக்காதீர்கள். மாயக்காரர்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். நீங்களும் அவர்களைப்போல நடிக்காதீர்கள். தாங்கள் உபவாசம் இருப்பதை மற்றவர்கள் காண்பதற்காகத் தங்கள் முகத்தை விநோதமாக வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு பலனை அடைந்துவிட்டார்கள். 17 எனவே, நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, மகிழ்ச்சியாகக் காணப்படுங்கள். முகம் கழுவிக்கொள்ளுங்கள். 18 எனவே, நீங்கள் உபவாசம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் காண முடியாத உங்கள் பிதாவானவர் உங்களைக் காண்பார். உங்கள் பிதாவானவர் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். மேலும் அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
பணமும் தேவனும்(B)
19 ,“உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள். 20 எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது. 21 உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
22 ,“உடலுக்கு ஒளி தருவது கண். உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியுடன் திகழும். 23 ஆனால், உங்கள் கண்கள் கெட்டுப் போனால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியிழந்து போகும். உங்களிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால் அவ்விருள் எவ்வளவு கொடியதாயிருக்கும்.
24 ,“எந்த மனிதனாலும் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது. அவன் ஒரு முதலாளியை நேசித்து மற்ற முதலாளியை வெறுக்க நேரிடும். அல்லது ஒரு முதலாளியின் பேச்சைக் கேட்டும் மற்ற முதலாளியின் பேச்சை மறுக்கவும் நேரிடும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது.
தேவ இராஜ்யத்திற்கு முதலிடம்(C)
25 ,“எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம். 26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். 27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.
28 ,“உடைகளுக்காக ஏன் கவலை கொள்கிறீர்கள்? தோட்டத்தில் உள்ள மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பாருங்கள். அவைகள் வேலை செய்வதுமில்லை. தங்களுக்கான உடைகளைத் தயார் செய்வதுமில்லை. 29 ஆனால் நான் சொல்கிறேன் மாபெரும் பணக்கார மன்னனான சாலமோன் கூட இந்தப் பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடை அணியவில்லை. 30 அவ்வாறே தேவன் வயல்களிலுள்ள புற்களுக்கும் உடை அணிவிக்கிறார். இன்றைக்கு உயிருடன் இருக்கும் புல், நாளைக்கு தீயிலிடப்பட்டு எரிக்கப்படும். எனவே, தேவன் உங்களுக்குச் சிறப்பாக உடையணிவிப்பார் என்பதை அறியுங்கள். தேவனிடம் சாதாரணமான நம்பிக்கை வைக்காதீர்கள்.
31 ,“‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள். 32 தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார். 33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார். 34 எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு.
தரியுவின் கட்டளை
6 எனவே, தனக்கு முன் அரசாண்ட அரசர்களின் ஆவணங்களைத் தேடும்படி அரசன் தரியு கட்டளையிட்டான். பணம் சேமித்து வைக்கபட்டிருந்த இடத்திலேயே அதிகாரப்பூர்வமான பத்திரங்களும் இருந்தன. 2 ஒரு சுருள் அக்மேதா நகர் கோட்டையில் அகப்பட்டது. இது மேதிய மாகாணத்தில் உள்ளது. சுருளில் எழுதப்பட்டிருந்த செய்தி இதுதான்:
அரசாங்கப் பூர்வமான குறிப்பு: 3 கோரேசின் முதலாம் ஆட்சி ஆண்டில், அவன் எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்திற்கு ஓர் கட்டளைக் கொடுத்தான். அந்த கட்டளை சொல்வது:
தேவனுடைய ஆலயம் மீண்டும் கட்டப்படட்டும். இது பலி கொடுப்பதற்குரிய இடமாக இருக்கும். இதற்குரிய அஸ்திபாரம் கட்டப்படட்டும். இந்த ஆலயம் 60 முழ உயரமும், 60 முழ அகலமுமாய் இருக்கட்டும். 4 அதைச் சற்றி மூன்று வரிசை பெரிய கற்களும், ஒரு வரிசைப் பெரிய மரப்பலகைகளும் இருக்கட்டும். அரசனின் கருவூலத்திலிருந்து ஆலயம் கட்டப் பணம் கொடுக்கப்படும். 5 தேவனுடைய ஆலயத்தில் உள்ள பொன்னும் வெள்ளியும் மீண்டும் அங்கேயே வைக்கப்பட வேண்டும். நேபுகாத்நேச்சார் அவற்றை எருசலேமில் உள்ள ஆலயத்தில் இருந்து எடுத்து பாபிலோனுக்குக் கொண்டு போனான். அவை தேவனுடைய ஆலயத்தில் திரும்ப வைக்கப்பட வேண்டும்.
6 இப்போது, தரியுவாகிய நான், ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநரான தத்னாயும், சேத்தார் பொஸ்னாயுமாகிய நீங்களும், அப்பகுதியில் வசிக்கும் எல்லா அதிகாரிகளும் எருசலேமிற்கு வெளியே தங்கி இருங்கள் என்று கட்டளை கொடுக்கிறேன். 7 வேலை செய்பவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். தேவனுடைய ஆலய வேலையைத் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். யூத ஆளுநர்களும், யூதத் தலைவர்களும் ஆலயத்தை மீண்டும் கட்டட்டும். அவ்வாலயம் முன்பு இருந்த அதே இடத்திலேயே அவர்கள் கட்டட்டும்.
8 இப்போது இந்த கட்டளையை இடுகிறேன். யூதத் தலைவர்கள் ஆலயத்தைக் கட்ட நீங்கள் கீழ்க்கண்டச் செயல்களைச் செய்ய வேண்டும்: ஆலயம் கட்டுவதற்கான முழு பணத்தையும் நீங்கள் அரசனின் கருவூலத்தில் இருந்து தர வேண்டும். இப்பணம் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உள்ள ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும். இதனை விரைவாகச் செய்யுங்கள். அதனால் வேலை தடைப்படாமல் இருக்கும். 9 அந்த ஜனங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுங்கள். அவர்களுக்கு இளங்காளைகள், ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் ஆகியவை பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடத் தேவைப்படுமானால் அவற்றைக் கொடுங்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் கோதுமை, திராட்சைரசம், உப்பு, ஒலிவ எண்ணெய் போன்றனவற்றைக் கேட்டால் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொடுக்கவும். 10 இவற்றை நீங்கள் யூத ஆசாரியர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்கு பலிகளைக் கொடுத்து அவரை மகிழ்ச்சியடையச் செய்வார்கள். இவற்றைக் கொடுத்தால் ஆசாரியர்கள் எனக்கும் என் மகன்களுக்கும் ஜெபம் செய்வார்கள்.
11 அதோடு, இந்தக் கட்டளையையும் தருகிறேன்: யாராவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவனது வீட்டிலிருந்து ஒரு மரச்சட்டம் பிடுங்கப்படும். பின்பு அம்மரச் சட்டம் அவனுடைய உடலில் சொருகப்படும். அவனது வீடும் மண் மேடாகும்வரை அழிக்கப்படும்.
12 தேவன் தமது நாமத்தை எருசலேமில் வைத்திருக்கிறார். இந்தக் கட்டளையை மாற்ற முயல்கிற எந்த அரசர்களையும் அல்லது எந்த ஜனங்களையும் தேவன் தோற்கடிப்பார் என்று நம்புகிறேன். யாராவது இந்த ஆலயத்தை எருசலேமில் அழிக்க முயன்றால் தேவன் அந்த நபரை அழித்துவிடுவார் என்று நம்புகிறேன்.
தரியுவாகிய நான், இந்தக் கட்டளையைத் தருகிறேன். இந்தக் கட்டளை முழுமையாகவும், விரைவாகவும் செய்யப்பட வேண்டும்!
ஆலயப் பணி முடிவும் பிரதிஷ்டையும்
13 எனவே, ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநராக இருக்கும் தத்னாய் என்பவரும், சேத்தார்பொஸ்னாயும் அவர்களைச் சார்ந்த மற்ற ஜனங்களும், அரசன் தரியுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் அந்த கட்டளையை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்தினார்கள். 14 எனவே யூத மூப்பர்கள் கட்டிட வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் மகனாகிய சகரியாவும் ஊக்கப்படுத்தியதால் அவர்கள் வெற்றியுடன் ஆலயத்தைக் கட்டி முடித்தனர். இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவே இது கட்டப்பட்டது. கோரேசு, தரியு மற்றும் பெர்சியாவின் அரசனான அர்தசஷ்டா ஆகியோர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் இவ்வேலை முடிந்தது. 15 ஆலயமானது தரியு அரசாளும் ஆறாம் ஆண்டு ஆதார் மாதம் மூன்றாம் தேதியில் கட்டி முடிக்கப்பட்டது.
16 அப்போது இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்தவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
17 இவ்வாறு தான் அவர்கள் தேவனுடைய ஆலயத்தை பிரதிஷ்டை செய்தது: அவர்கள் 100 காளைகள், 200 செம்மறியாட்டுக் கடாக்கள் மற்றும் 400 ஆண் ஆட்டுக் குட்டிகள் ஆகியவற்றைப் பலி கொடுத்தனர். அவர்கள் இஸ்ரவேலர்களின் பாவப்பரிகார பலியாக 12 வெள்ளாட்டுக்கடாக்களைப் பலி கொடுத்தனர். அந்த 12 வெள்ளாடுகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்திற்கும் ஒன்று வீதம் கொடுக்கப்பட்டவை. 18 பிறகு அவர்கள் தங்கள் குழுவில் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்தனர். லேவியர்களை அவர்களின் குழுவிலும் தேர்ந்தெடுத்து எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலய வேலைக்கு நியமித்தனர். மோசேயின் புத்தகத்தில் சொன்னடியே அவர்கள் செய்து முடித்தார்கள்.
பஸ்கா
19 யூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு எருசலேம் வந்த முதலாம் மாதம் 14வது நாள், பஸ்காவைக் கொண்டாடினார்கள். 20 ஆசாரியர்களும் லேவியர்களும் தம்மைச் சுத்தப்படுத்திக்கொண்டு பஸ்கா பண்டிகையை கொண்டாடத் தயார் ஆனார்கள். லேவியர்கள் பஸ்கா ஆட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்த அனைத்து யூதர்களுக்காகவும் கொன்றனர். அவர்கள் இதனைத் தம் சகோதரர்களான ஆசாரியர்களுக்காகவும், தங்களுக்காகவும் செய்தனர். 21 எனவே, இஸ்ரவேலின் அடிமைத்தனத்திலிருந்து மீட்புப் பெற்ற அனைத்து ஜனங்களும் பஸ்கா விருந்தை உண்டனர். அந்நாட்டிலுள்ள மற்றவர்கள் தம்மைக் கழுவி அந்நாட்டில் வசித்த ஜனங்களின் அசுத்தங்களிலிருந்து சுத்தம் செய்துக்கொண்டார்கள். இவ்வாறு சுத்தமானவர்களும் பஸ்கா விருந்தைப் பங்கிட்டுக் கொண்டனர். அவர்கள் இவ்வாறு செய்தால் அவர்களால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம், உதவிக்காகப் போக முடியும். 22 அவர்கள் புளிப்பில்லா அப்பப்பண்டிகையை மிக மகிழ்ச்சியோடு ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். கர்த்தர் ஜனங்களை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். ஏனென்றால் அசீரியா அரசனின் போக்கையும் கர்த்தர் மாற்றியிருந்தார். எனவே அசீரியாவின் அரசனும் தேவனுடைய ஆலய வேலைக்கு பெரிதும் உதவியாக இருந்தான்.
உதவியாளர்கள் நியமனம்
6 இயேசுவைப் பின்பற்றுவோராகப் பற்பல மக்கள் மாறிகொண்டிருந்தனர். ஆனால் அதே வேளையில் கிரேக்க மொழி பேசுகின்ற சீஷர்களுக்கும் மற்ற யூதச் சீஷர்களுக்கும் ஒரு விவாதம் நடந்தது. சீஷர்கள் ஒவ்வொரு நாளும் பெற்ற பங்கைப் போன்று அவர்களுடனிருந்த விதவைகளுக்கு அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். 2 பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் சீஷர்கள் கூட்டத்தை ஒருமிக்க அழைத்தனர்.
அப்போஸ்தலர்கள் அவர்களை நோக்கி, “தேவனுடைய வார்த்தையைப் போதிக்கும் எங்கள் வேலை தடையுற்றுள்ளது. அது நல்லதல்ல! மக்களுக்கு உண்பதற்கு எதையேனும் கொடுப்பதில் உதவுவதைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையைத் தொடர்ந்து போதிப்பதே எங்களுக்கு நல்லது. 3 எனவே, சகோதரர்களே, உங்களில் ஏழு பேரைத் தேர்ந்து எடுங்கள். மக்கள் நல்லவர்களெனக் கருதுவோராக அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் ஆவியாலும், ஞானத்தாலும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இந்த வேலையைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களை நியமிப்போம். 4 பின்னர் நாங்கள் எங்கள் முழு நேரத்தையும் பிரார்த்தனை செய்வதற்கும், தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதற்கும் பயன்படுத்துவோம்” என்றனர்.
5 கூட்டத்தினர் எல்லோரும் இந்தத் திட்டத்தை வரவேற்றனர். எனவே அவர்கள் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் ஸ்தேவான் (நம்பிக்கை மிகுந்தவனும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனுமான மனிதன்), பிலிப்பு, [a] ப்ரோகோரஸ், நிகனோர், தீமோன், பர்மேனஸ், நிக்கோலஸ் (அந்தியோகியாவிலிருந்து வந்தவனும் யூதனாக மாற்றப் பட்டவனும் ஆவான்) ஆகியோராவர். 6 அவர்கள் அந்த ஏழு பேரையும் அப்போஸ்தலர்களுக்கு முன்பாக அழைத்து வந்தனர். அப்போஸ்தலர்கள் பிரார்த்தனை செய்து தங்கள் கைகளை அவர்கள் மீது வைத்தனர்.
7 தேவனுடைய வார்த்தை மென்மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை எட்டியது. எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்தது. யூத ஆசாரியர்களில் ஒரு பெரும் கூட்டத்தினரும் கூட விசுவாசம் வைத்துக் கீழ்ப்படிந்தனர்.
ஸ்தேவானுக்கு எதிராக யூதர்கள்
8 ஸ்தேவான் மிகுந்த ஆசீர்வாதத்தைப் பெற்றான். தேவனிடமிருந்து ஸ்தேவானும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் தேவனிடமிருந்து மக்களுக்குச் சான்றுகளைக் காட்டும் வல்லமையையும் பெற்றிருந்தான். 9 ஆனால் சில யூதர்கள் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர். அவர்கள் ஒரு யூத ஜெப ஆலயத்திலிருந்து வந்திருந்தனர். அது விடுதலை பெற்ற யூதர்களுக்குரிய ஜெப ஆலயமாக இருந்தது. (இந்த ஜெப ஆலயம் சிரேனே, அலெக்ஸாண்டிரியா ஆகிய இடங்களிலுள்ள யூதர்களுக்கு உரியது) சிலிசியா, ஆசியா ஆகிய இடங்களின் யூதர்களும் அவர்களோடிருந்தனர். அவர்கள் எல்லோரும் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர். 10 ஞானத்தோடு பேசுவதற்கு ஆவியானவர் ஸ்தேவானுக்கு உதவினார். அவனுடைய வலிமையான சொற்கள் யூதர்கள் அவனோடு வாதிட முடியாதபடி செய்தன.
11 எனவே யூதர்கள் சில மனிதர்களுக்குக் கூலி கொடுத்து “மோசேக்கு எதிராகவும், தேவனுக்கெதிராகவும் ஸ்தேவான் தீயவற்றைக் கூறுவதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் செய்தார்கள். 12 இவ்வாறு செய்ததால் யூதர்கள் மக்களையும். முதிய யூதத் தலைவர்களையும், வேதபாரகரையும் கலக்கமுறச் செய்தனர். அவர்கள் மிகுந்த கோபமடைந்து ஸ்தேவானிடம் வந்து அவனைப் பிடித்தனர். யூத அதிகாரிகள் கூடியிருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர்.
13 யூதர்கள் சிலரை அக்கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். ஸ்தேவானைக் குறித்துப் பொய் சொல்லும்படி அவர்களுக்கு யூதர்கள் கூறியிருந்தனர். அந்த மனிதர்கள், “இவன் எப்போதும் பரிசுத்தமான இடத்தைக் குறித்துக் கெட்டதையே சொல்கிறான். மோசேயின் சட்டத்திற்கு எதிராகவே எப்போதும் சொல்கிறான். 14 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இந்த இடத்தை அழிப்பார் என்று அவன் கூறியதை நாங்கள் கேட்டோம். நாம் கடைப்பிடிக்குமாறு மோசே சொன்னவற்றை இயேசு மாற்றுவார் என்றும் அவன் கூறினான்” என்றனர். 15 கூட்டத்தில் அமர்ந்திருந்த மக்கள் எல்லோரும் ஸ்தேவானைக் கூர்ந்து நோக்கினர். அவனது முகம் தேவதூதனின் முகத்தைப்போன்று தோன்றியது. அவர்கள் அதைக் கண்டனர்.
2008 by World Bible Translation Center