M’Cheyne Bible Reading Plan
ஏழாவது நாள்-ஓய்வு
2 பூமியும் வானமும் அவற்றிலுள்ள யாவும் படைக்கப்பட்டு முடிந்தது. 2 தேவன் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார். ஆகையால் ஏழாவது நாள் அவர் ஓய்வெடுத்தார். 3 தேவன் ஏழாவது நாளை ஆசீர்வதித்து அதனைப் பரிசுத்தமாக்கினார். அவர் அன்றைக்குத் தமது படைப்பு வேலைகளையெல்லாம் நிறைவு செய்துவிட்டு ஓய்வெடுத்ததால் அந்த நாள் சிறப்புக்குரியதாயிற்று.
மனித குலத்தின் தொடக்கம்
4 இதுதான் பூமி மற்றும் வானம் தோன்றின வரலாறாகும். இதுதான் தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது, நடந்தவற்றைப்பற்றிக் கூறும் விபரங்களாகும். 5 பூமியில் எந்தத் தாவரமும் இல்லாமல் இருந்தது. வயலிலும் அதுவரை எதுவும் வளரவில்லை. எந்தப் பகுதியிலும் எந்தச் செடிகொடிகளும் இல்லை. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் இன்னும் மண்ணில் மழை பெய்யச் செய்யவில்லை. பூமியில் விவசாயம் செய்ய மனுக்குலம் எதுவும் இல்லை.
6 பூமியிலிருந்து தண்ணீர் [a] எழும்பி நிலத்தை நனைத்தது. 7 பிறகு தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை தேவனாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான். 8 பிறகு தேவனாகிய கர்த்தர் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டத்தை அமைத்து அதற்கு ஏதேன் என்று பெயரிட்டார். தேவனாகிய கர்த்தர் தாம் உருவாக்கிய மனிதனை அத்தோட்டத்தில் வைத்தார். 9 தேவனாகிய கர்த்தர் எல்லாவகையான அழகான மரங்களையும், உணவுக் கேற்ற கனிதரும் மரங்களையும் தோட்டத்தில் வளரும்படிச் செய்தார். அத்தோட்டத்தின் நடுவில் தேவனாகிய கர்த்தர் ஜீவ மரத்தையும், நன்மை மற்றும் தீமை பற்றி அறிவு தருகிற மரத்தையும் வைத்தார்.
10 ஏதேன் தோட்டத்தில் தண்ணீர் பாய ஒரு ஆற்றையும் படைத்தார். அந்த ஆறு நான்கு சிறு ஆறுகளாகவும் பிரிந்தது. 11 அந்த முதல் ஆற்றின் பெயர் பைசோன். அந்த ஆறு ஆவிலா நாடு முழுவதும் ஓடிற்று. 12 அந்த நாட்டில் தங்கம் இருந்தது. அத்தங்கம் நன்றாக இருந்தது. அங்கு வாசனைப் பொருள்களும் கோமேதகக் கல்லும் இருந்தன. 13 இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதும் ஓடிற்று. 14 மூன்றாவது ஆற்றின் பெயர் இதெக்கேல் அது அசீரியாவுக்கு கிழக்கே பாய்ந்தது. நான்காவது ஆற்றின் பெயர் ஐபிராத்து.
15 தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, அதனைப் பராமரிக்கவும், காக்கவும் செய்தார். 16 தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “இந்த தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நீ உண்ணலாம். 17 ஆனால் நன்மை தீமை பற்றிய அறிவைக் கொடுக்கக் கூடிய மரத்தின் கனியைமட்டும் உண்ணக் கூடாது. அதனை உண்டால் நீ மரணமடைவாய்” என்றார்.
முதல் பெண்
18 மேலும் தேவனாகிய கர்த்தர், “ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல, எனவே அவனுக்கு உதவியாக அவனைப்போன்று ஒரு துணையை உருவாக்குவேன்” என்றார்.
19 தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து காட்டிலுள்ள அனைத்து மிருகங்களையும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளையும் படைத்து அவைகளை மனிதனிடம் கொண்டு வந்தார். அவன் அவை ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தான். 20 மனிதன் வீட்டு மிருகங்களுக்கும், வானில் பறக்கும் பறவைகளுக்கும், காட்டிலுள்ள மிருகங்களுக்கும் பெயர் வைத்தான். மனிதன் எல்லா மிருகங்களையும் பறவைகளையும் கண்டான். எனினும் அவனுக்கு ஏற்ற துணை காணவில்லை. 21 எனவே, தேவனாகிய கர்த்தர் அவனை ஆழ்ந்து தூங்க வைத்தார். அவன் தூங்கும்போது அவர் அவனது சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, அந்த இடத்தை சதையால் மூடிவிட்டார். 22 தேவனாகிய கர்த்தர் அந்த விலா எலும்பை ஒரு பெண்ணாகப் படைத்து, அந்தப் பெண்ணை மனிதனிடம் அழைத்து வந்தார். 23 அப்பொழுது அவன்,
“இறுதியில் என்னைப்போலவே ஒருத்தி;
அவளது எலும்பு என் எலும்பிலிருந்து உருவானவை.
அவளது உடல் எனது உடலிலிருந்து உருவானது.
அவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டாள்.
அதனால் அவளை மனுஷி என்று அழைப்பேன்” என்றான்.
24 அதனால் தான் மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்துகொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர்.
25 மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.
ஞானிகளின் வருகை
2 யூதேயாவிலுள்ள பெத்லகேம் நகரில் இயேசு பிறந்தார். அவர் ஏரோது மன்னன் காலத்தில் பிறந்தார். அதன் பின்பு இயேசு பிறந்தவுடன், சில ஞானிகள் எருசலேமுக்குக் கிழக்கிலிருந்து வந்தனர். 2 அவர்கள் மக்களைப் பார்த்து, “புதிதாகப் பிறந்த யூதர்களின் அரசரான குழந்தை எங்கே? அவர் பிறந்துள்ளதை அறிவிக்கும் நட்சத்திரத்தைக் கண்டோம். கிழக்கு திசையில் அந்நட்சத்திரம் மேலெழுவதைக் கண்டோம். நாங்கள் அவரை வணங்க வந்துள்ளோம்” என்று சொன்னார்கள்.
3 ஏரோது மன்னன் யூதர்களின் இப்புதிய அரசரைப்பற்றிக் கேள்வியுற்றான். அதைக் கேட்டு ஏரோது மன்னனும் எருசலேம் மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்தனர். 4 ஏரோது தலைமை ஆசாரியர் மற்றும் வேதபாரகரின் கூட்டத்தைக் கூட்டினான். கிறிஸ்து எங்கே பிறந்திருப்பார் என அவர்களைக் கேட்டான். 5 அதற்கு அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார். ஏனெனில்,
6 “‘யூதேயாவிலுள்ள பெத்லகேமே,
உனக்கு யூதேயாவின் ஆட்சியாளர்களுக்கிடையில் முக்கியத்துவம் உண்டு.
ஆம், உன்னிலிருந்து ஒரு பிரபு தோன்றுவார்.
அவர் இஸ்ரவேல் என்னும் என் மக்களை வழி நடத்துவார்’ (A)
என்று தீர்க்கதரிசி வேத வாக்கியங்களில் எழுதியுள்ளார்” என்று கூறினார்கள்.
7 பின், கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுடன் ஏரோது இரகசியமாகப் பேசி அவர்கள் முதன் முதலில் நட்சத்திரத்தைக் கண்ட காலத்தை அவர்களிடமிருந்து அறிந்தான். 8 ஏரோது அந்த ஞானிகளிடம், “நீங்கள் சென்று அந்தக் குழந்தையைக் கவனமாகத் தேடுங்கள். நீங்கள் அக்குழந்தையைக் கண்டதும் என்னிடம் வந்து சொல்லுங்கள். பின் நானும் சென்று அக்குழந்தையை வணங்க இயலும்” என்று கூறி அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
9 மன்னன் இவ்வாறு கூறியதைக் கேட்ட ஞானிகள் அங்கிருந்து செல்லும்போது அவர்கள் கிழக்கில் தாங்கள் கண்ட அதே நட்சத்திரத்தை மீண்டும் பார்த்தனர். ஞானிகள் அந்த நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். நட்சத்திரம் அவர்களுக்கு முன்னாலேயே சென்று குழந்தை பிறந்த இடத்திற்கு மேலாக வந்து நின்றது. 10 நட்சத்திரத்தைக் கண்ட ஞானிகள் மிகவும் மகிழ்ந்தனர்.
11 குழந்தை இருந்த வீட்டிற்கு ஞானிகள் வந்தனர். அவர்கள் குழந்தையை அதன் தாய் மரியாளுடன் பார்த்தனர். ஞானிகள் குழந்தையைத் தாழவிழுந்து வணங்கினர். குழந்தைக்காகத் தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை எடுத்து வைத்தனர். அவர்கள் தங்கத்தாலான பொருட்களையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளம் முதலான வாசனைப் பொருட்களையும் கொடுத்தனர். 12 அதன் பின்னர் தேவன் ஞானிகளின் கனவில் தோன்றி அவர்களை ஏரோது மன்னனிடம் திரும்பிச் செல்ல வேண்டாம் என எச்சரித்தார். எனவே, ஞானிகள் வேறு வழியாகத் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.
எகிப்திற்குத் தப்பிச் செல்லுதல்
13 ஞானிகள் சென்றபின், யோசேப்பின் கனவில் ஒரு தேவதூதன் தோன்றி, “எழுந்திரு! குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பிச்செல். ஏரோது குழந்தையைத் தேடத் தொடங்குவான். ஏரோது குழந்தையைக் கொல்ல விரும்புகிறான். எனவே, நான் சொல்லுகிறவரைக்கும் எகிப்தில் தங்கியிரு” என்று சொன்னான்.
14 எனவே யோசேப்பு விழித்தெழுந்து குழந்தையுடனும் அதன் தாயுடனும் இரவிலே எகிப்துக்குப் புறப்பட்டான். 15 ஏரோது மரிக்கும்வரையில் அவர்கள் எகிப்தில் தங்கியிருந்தனர். “எகிப்திலிருந்து என் மகனை வெளியே வரவழைத்தேன்” [a] என்று தீர்க்கதரிசியின் வழியாக தேவன் சொல்லியதின் நிறைவேறுதலாக இது நடந்தேறியது.
பெத்லகேமின் ஆண் குழந்தைகளைக் கொல்லுதல்
16 ஞானிகள் தன்னைச் சந்திக்காமல் சென்றுவிட்டதை அறிந்த ஏரோது மிகுந்த கோபமுற்றான். குழந்தை பிறந்த காலத்தை ஏரோது ஞானிகளிடமிருந்து அறிந்திருந்தான். இதற்குள் இரண்டு வருடங்களாகி இருந்தன. எனவே, பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல ஏரோது ஆணையிட்டான். ஆகவே, இரண்டும் அதற்குக் குறைவான வயதுடையதுமாகிய எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிட ஆணையிட்டான். 17 தீர்க்கதரிசி எரேமியாவின் மூலமாக தேவன் கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறியது.
18 “ராமாவிலே ஒரு குரல் கேட்டது.
துக்கத்தின் மிகுதியில் வந்த கதறல் அது.
தன் குழந்தைகளுக்காக அழுகிறாள், ராகேல்.
அவளைத் தேற்ற முடியாது,
ஏனெனில் அவளது குழந்தைகள் இறந்துவிட்டன.” (B)
எகிப்தில் இருந்து திரும்புதல்
19 ஏரோது இறந்தபின், யோசேப்பின் கனவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் தோன்றினான். இது யோசேப்பு எகிப்தில் இருக்கும்போது நடந்தது. 20 தூதன் அவனிடம், “எழுந்திரு! குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக் கொண்டு இஸ்ரவேலுக்குச் செல். ஏனெனில் குழந்தையைக் கொல்ல முயன்றவர்கள் இப்பொழுது இறந்துவிட்டனர்” என்றான்.
21 ஆகவே, யோசேப்பு குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு இஸ்ரவேல் சென்றான். 22 அப்பொழுது யூதேயாவின் மன்னனாக அர்கெலாயு இருந்தான் என்பதை யோசேப்பு கேள்வியுற்றான். தன் தந்தை ஏரோது இறந்தபின் அர்கெலாயு யூதேயாவின் மன்னனானான். இவ்வாறு, யூதேயாவுக்குச் செல்ல யோசேப்பு தயங்கினான். யோசேப்பு கனவில் எச்சரிப்படைந்து அங்கிருந்து கலிலேயா பகுதிக்குச் சென்றான். 23 யோசேப்பு நாசரேத் என்னும் நகருக்குச் சென்று அங்கு வசித்தான். எனவே தேவன் தீர்க்கதரிசிகள் வாயிலாக “கிறிஸ்து நசரேயன் [b] என்று அழைக்கப்படுவார்” என சொன்னது நடந்தேறியது.
திரும்பிச் சென்ற கைதிகளின் பட்டியல்
2 அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த அப்பகுதி ஜனங்கள் இவர்கள். முன்பு, பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோயிருந்தான். இவர்கள் இப்போது எருசலேம் மற்றும் யூதாவிற்குத் திரும்பி வந்தார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்கள். 2 செருபாபேலோடு திரும்பிய ஜனங்களின் விபரம்: யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா. இஸ்ரவேலில் இருந்துதிரும்பிய ஜனங்களின் பெயர்களும் எண்ணிக்கையும் கீழ்வருமாறு:
3 பாரோஷின் சந்ததியினர்#2,172
4 செபத்தியாவின் சந்ததியினர்#372
5 ஆராகின் சந்ததியினர்#775
6 யெசுவா மற்றும் யோவாபின்
குடும்பத்திலிருந்து பாகாத்
மோவாபின் சந்ததியினர்#2,812
7 ஏலாமின் சந்ததியினர்#1,254
8 சத்தூவின் சந்ததியினர்#945
9 சக்காயின் சந்ததியினர்#760
10 பானியின் சந்ததியினர்#642
11 பெபாயின் சந்ததியினர்#623
12 அஸ்காதின் சந்ததியினர்#1,222
13 அதொனிகாமின் சந்ததியினர்#666
14 பிக்வாயின் சந்ததியினர்#2,056
15 ஆதீனின் சந்ததியினர்#454
16 எசேக்கியாவின் குடும்பம்
வரைக்கும் அதேரின் சந்ததியினர்#98
17 பேசாயின் சந்ததியினர்#323
18 யோராகின் சந்ததியினர்#112
19 ஆசூமின் சந்ததியினர்#223
20 கிபாரின் சந்ததியினர்#95
21 பெத்லகேமின் ஊரிலிருந்து#123
22 நெத்தோபாவின் ஊரிலிருந்து#56
23 ஆனதோத்தின் ஊரிலிருந்து#128
24 அஸ்மாவேத்தின் ஊரிலிருந்து#42
25 கீரியாத்யாரீம், கெபிரா,
பேரோத் ஆகியோர் ஊரிலிருந்து#743
26 ராமா, காபா ஆகியோரின்
ஊரிலிருந்து#621
27 மிக்மாசின் ஊரிலிருந்து#122
28 பெத்தேல், ஆயி ஊரிலிருந்து#223
29 நேபோவின் ஊரிலிருந்து#52
30 மக்பீஷின் ஊரிலிருந்து#156
31 ஏலாமின் ஊரிலிருந்து#1,254
32 ஆரீமின் ஊரிலிருந்து#320
33 லோத், ஆதீத், ஓனோ
ஊரிலிருந்து#725
34 எரிகோவின் ஊரிலிருந்து#345
35 சேனாகின் ஊரிலிருந்து#3,630
36 பின்வரும் பட்டியல் ஆசாரியர்களுடையவை: யெசுவாவின் குடும்பம் வழியாய் யெதாயாவின்
சந்ததியினர்#973
37 இம்மேரின் சந்ததியினர்#1,052
38 பஸ்கூரின் சந்ததியினர்#1,247
39 ஆரீமின் சந்ததியினர்#1,017
40 கீழே குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்:
ஒதாயாவின் குடும்பம் முடிய
யெசுவா மற்றும் கத்மியேல் சந்ததியினர்#74
41 பாடகர்கள்:
ஆசாபின் சந்ததியினர்#128
42 கீழ்வருபவர்கள் ஆலய வாசல் காவலாளர்களின் சந்ததியினர்:
சல்லூம், அதேர், தல்மோன்,
அக்கூப், அதிதா, சோபா சந்ததியினர்#139
43 ஆலயச் சிறப்பு பணியாளர்களின் சந்ததியினர்:
சீகா, அசுபா, தபாகோத்,
44 கேரோஸ், சீயாகா, பாதோன்,
45 லெபானாக், அகாபா, அக்கூப்,
46 ஆகாப், சல்மாய், ஆனான்,
47 கித்தேல், காகார், ராயாக்,
48 ரேத்சீன், நெகோதா, காசாம்,
49 ஊசா, பாசெயா, பேசாய்,
50 அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
51 பக்பூக், அகுபா, அர்கூர்,
52 பஸ்லூத், மெகிதா, அர்ஷா,
53 பர்கோஸ், சிசெரா, தாமா,
54 நெத்சியா, அதிபா.
55 சாலொமோனின் வேலைக்காரர்களது சந்ததியினர்:
சோதாய், சொபெரேத், பெருதா,
56 யாலாக், தர்கோன், கித்தேல்,
57 செபத்தியா, அத்தீல், செபாயீமிலுள்ள பொகெரேத் எசாபயிம், ஆமி.
58 ஆலயப் பணியாட்களும்
சாலொமோனின் வேலைக்காரர்களும்
மொத்தம்#392
59 எருசலேமிற்குச் சில ஜனங்கள் தெல்மெலாக், தெல்அர்சாவி, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களில் இருந்து வந்தனர். ஆனால் இந்த ஜனங்களால் தங்களுடைய குடும்பங்கள் இஸ்ரவேல் குடும்பத்திலிருந்து வந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
60 தெலாயா, தொபியா, நெகோதா சந்ததியினர்#652
61 ஆசாரியர்களின் குடும்பங்களில் இருந்து வரும் சந்ததியினரின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அபாயா, கோஸ், பர்சிலாய் (ஒருவன் பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான்.
அவனும் பர்சிலாயின் சந்ததியினரோடு சேர்த்து எண்ணப்பட்டான்.)
62 இந்த ஜனங்கள் தங்கள் குடும்ப வரலாற்றைத் தேடினார்கள், ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள், என்பதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஆசாரியர்களாகச் சேவைசெய்ய முடியவில்லை. ஆசாரியர்களின் ஜனங்கள் பட்டியலில், இவர்கள் இடம்பெற முடியவில்லை. 63 இவர்கள் பரிசுத்தமான உணவுப் பொருட்கள் எதையும் உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஓர் ஆசாரியன் ஊரீமையும் தும்மீமையும் பயன்படுத்தி, தேவனிடம் என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்கும் வரைக்கும் அவர்களால் அந்த உணவு எதையும் உண்ண முடியவில்லை.
64-65 ஆக மொத்தம், 42,360 பேர் திரும்பி வந்த குழுவில் இருந்தார்கள். அவர்களின் வேலைக்காரர்களான 7,337 ஆண்கள் மற்றும் பெண்களையும் சேர்க்கவில்லை. அவர்களோடு 200 பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாய் இருந்தனர். 66-67 அவர்களிடம் 736 குதிரைகள், 245 கோவேறு கழுதைகள், 435 ஒட்டகங்கள், 6,720 கழுதைகள் இருந்தன.
68 இக்கூட்டம் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பிறகு குடும்பத் தலைவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளைக் கொடுத்தனர். ஆலயம் அழிக்கப்பட்ட இடத்திலேயே புதிய ஆலயத்தைக் கட்ட எண்ணினார்கள். 69 ஜனங்கள் தங்களால் முடிந்தவரை கொடுத்தனர். அவர்கள் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கொடுத்த பொருட்கள் வருமாறு: 61,000 தங்கக் காசுகள், 5,000 இராத்தல் வெள்ளி, 100 ஆசாரியர்களுக்கான ஆடைகள்.
70 எனவே ஆசாரியர்களும், வேலையாட்களும், மற்றும் பலரும் எருசலேமிலும் அதைச் சுற்றிய இடங்களுக்கும் போனார்கள். இவர்களோடு ஆலயப் பாடகர்களும், வாயில் காவலர்களும், ஆலயப் பணியாளர்களும் இருந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களில் தங்கினார்கள்.
பரிசுத்த ஆவியானவரின் வருகை
2 பெந்தெகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். 2 திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று. 3 நெருப்புக் கொழுந்து போன்றவற்றை அவர்கள் கண்டனர். அக்கொழுந்துகள் பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன. 4 அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
5 அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர். 6 ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர்.
7 யூதர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர். அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், “பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் எல்லோரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்! 8 ஆனால் நமது மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம். எப்படி இது இயலும்? நாம் 9 பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொபொதாமியா, யூதேயா, கப்பதோகியா, பொந்து, ஆசியா, 10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேனே நகரங்களிற்கு அருகேயுள்ள லிபியா நாட்டுப் பகுதிகள், 11 கிரேத்தா, ரோமிலிருந்து வந்த மக்கள் மற்றும் அரேபியா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள். நாம் வெவ்வேறு நாட்டினர். ஆனால் இவர்கள் நம் மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே! அவர்கள் தேவனைக் குறித்துக் கூறும் மேன்மையான காரியங்களை நம்மெல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறதே” என்றார்கள்.
12 மக்கள் அனைவரும் வியப்புற்றவர்களாகவும் குழப்பமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வினவினர். 13 பிற மக்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சிரித்தனர். அம்மக்கள் அப்போஸ்தலர் மிகுதியான மதுவைப் பருகியிருந்தனர் என நினைத்தனர்.
பேதுரு மக்களிடம் பேசுதல்
14 அப்பொழுது பேதுரு மற்ற அப்போஸ்தலர் பதினொருவரோடும் எழுந்து நின்றான். எல்லா மக்களும் கேட்கும்படியாக உரக்கப் பேசினான். அவன், “எனது யூத சகோதரர்களே, எருசலேமில் வசிக்கும் மக்களே, நான் கூறுவதைக் கவனியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில கருத்துக்களை உங்களுக்குக் கூறுவேன். கவனமாகக் கேளுங்கள். 15 நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான். 16 இங்கு இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதைக் குறித்து யோவேல் என்னும் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். யோவேல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:
17 “‘தேவன் கூறுகிறார், கடைசி நாட்களில் நான் எனது ஆவியை எல்லா மக்களுக்கும் அள்ளி வழங்குவேன்.
ஆண் மக்களும், பெண்மக்களும் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
உங்கள் இளைஞர் தரிசனம் காண்பார்கள்.
உங்கள் முதியோர் விசேஷக் கனவுகள் காண்பர்.
18 அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன்.
அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
19 மேலே வானில் வியப்புறும் காட்சிகளைக் காண்பிப்பேன்.
கீழே பூமியிலும் சான்றுகள் தருவேன்.
அங்கு இரத்தம், நெருப்பும், புகை மண்டலமும் இருக்கும்.
20 சூரியன் இருளாக மாறும்.
நிலா இரத்தம் போல் சிவப்பாகும்.
அப்போது கர்த்தருடைய மகத்தான மகிமை மிக்க நாள் வரும்.
21 கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’ (A)
22 “எனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 23 இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்பதை தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகுகாலத்திற்கு முன்னரே தேவன் இந்தத் திட்டத்தை வகுத்திருந்தார். 24 மரணத்தின் வேதனையை இயேசு அனுபவித்தார். ஆனால் தேவன் அவரை விடுவித்தார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். மரணம் இயேசுவைத் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. 25 தாவீது இயேசுவைக் குறித்து இவ்வாறு கூறினான்:
“‘நான் ஆண்டவரை எப்போதும் என்முன் காண்கிறேன்.
என்னைப் பாதுகாப்பதற்கு எனது வலப்புறத்தே உள்ளார்.
26 எனவே என் உள்ளம் மகிழுகிறது,
என் வாய் களிப்போடு பேசுகிறது.
ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும்.
27 ஏனெனில் மரணத்தின் இடத்தில் [a] எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை.
உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.
28 வாழும் வகையை எனக்குப் போதித்தீர்.
என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’ (B)
29 “எனது சகோதரர்களே, நமது முன்னோராகிய தாவீதைக் குறித்து உண்மையாகவே உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். அவன் இறந்து புதைக்கப்பட்டான். அவன் புதைக்கப்பட்ட இடம் இங்கேயே நம்மிடையே இன்றும் உள்ளது. 30 தாவீது ஒரு தீர்க்கதரிசி. தேவன் கூறிய சில செய்திகளை அவன் அறிந்திருந்தான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவரை தாவீதைப்போன்று மன்னனாக்குவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 31 அது நடக்கும் முன்பே தாவீது அதனை அறிந்திருந்தான். எனவேதான் அவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினான்.
“‘அவர் மரணத்தின் இடத்தில் விடப்படவில்லை.
அவர் சரீரம் கல்லறையில் அழுகவில்லை.’ (C)
தாவீது மரணத்தின்று எழும்பும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினான். 32 எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம். 33 இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இப்போது இயேசு தேவனோடு, தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். பிதா பரிசுத்தாவியை இயேசுவுக்குக் கொடுத்துள்ளார். பிதா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது பரிசுத்த ஆவியேயாகும். எனவே இயேசு அந்த ஆவியை இப்பொழுதுகொடுத்துக்கொண்டிருக்கிறார். இதையே நீங்கள் பார்க்கவும், கேட்கவும் செய்கிறீர்கள். 34-35 தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான்,
“‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார்,
உம் எதிரிகள் அனைவரையும் உம்
அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’ (D)
36 “எனவே எல்லா யூத மனிதர்களும் இதை உண்மையாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் இருக்கும்படியாக இயேசுவை தேவன் உண்டாக்கினார். அவரே நீங்கள் சிலுவையில் அறைந்த மனிதர்” என்றான்.
37 மக்கள் இதைக் கேட்டபோது அவர்கள் தங்கள் இதயத்தில் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அவர்கள் பேதுருவையும் பிற அப்போஸ்தலரையும் நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
38 பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39 இந்த வாக்குறுதி உங்களுக்குரியது. அது உங்கள் பிள்ளைகளுக்கும் தொலைவில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் கூட உரியது. ஆண்டவராகிய நமது தேவன் தன்னிடம் அழைக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது உரியது” என்று கூறினான்.
40 வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான். 41 பேதுரு கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
விசுவாசிகளின் ஒருமனம்
42 விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள். 43 பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர். 44 எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 45 விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். 46 ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர். 47 விசுவாசிகள் தேவனை வாழ்த்தினர். எல்லா மக்களும் அவர்களை விரும்பினர். ஒவ்வொரு நாளும் அதிகமதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். விசுவாசிகளின் கூட்டத்தில் கர்த்தர் அம்மக்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்.
2008 by World Bible Translation Center