Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 1

உலகத்தின் தொடக்கம்

துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

முதல் நாள்-வெளிச்சம்

அப்பொழுது தேவன், “வெளிச்சம் உண்டாகட்டும்” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. தேவன் வெளிச்சத்தைப் பார்த்தார். அது நல்லதென்று அறிந்துகொண்டார். பிறகு தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் “பகல்” என்று பெயரிட்டார். அவர் இருளுக்கு “இரவு” என்று பெயரிட்டார்.

மாலையும் காலையும் ஏற்பட்டது. இதுவே முதல் நாளாயிற்று.

இரண்டாம் நாள்-வானம்

பிறகு தேவன், “இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதி பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது!” என்றார். தேவன் காற்றின் விரிவை உருவாக்கி, தண்ணீரைத் தனியாகப் பிரித்தார். தண்ணீரில் ஒரு பகுதி காற்றிற்கு மேலேயும், மறுபகுதி காற்றிற்குக் கீழேயும் ஆனது. தேவன் காற்றின் விரிவுக்கு “வானம்” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது இரண்டாம் நாள் ஆகும்.

மூன்றாம் நாள்-வறண்ட நிலமும் செடிகொடிகளும்

பிறகு தேவன், “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அவ்வாறே ஆயிற்று. 10 தேவன் அந்த காய்ந்த நிலத்துக்கு “பூமி” என்று பெயரிட்டார். ஒன்று சேர்ந்த தண்ணீருக்கு தேவன் “கடல்” என்று பெயரிட்டார். தேவன் இது நல்லது என்று கண்டார்.

11 பிறகு தேவன், “பூமியில் புல்லும் விதைகளைத் தரும் செடிகளும் கனிதருகிற மரங்களும் உருவாகட்டும். கனிமரங்கள் விதைகளை உடைய கனிகளை உருவாக்கட்டும். ஒவ்வொரு செடிகொடிகளும் தங்கள் இனத்தை உண்டாக்கக்கடவது. இவை பூமியிலே வளரட்டும்” என்று சொன்னார். அவ்வாறே ஆயிற்று. 12 பூமி புல்லையும் தானியங்களைக் கொடுக்கும் செடிகளையும் முளைப்பித்தது. பூமி விதைகளைக்கொண்ட பழங்களைக் கொடுக்கும் மரங்களை முளைப்பித்தது. ஒவ்வொரு செடியும் தனக்கேயுரிய இனத்தை உருவாக்கியது. தேவன் இது நல்லதென்று கண்டார்.

13 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது மூன்றாம் நாளாயிற்று.

நான்காவது நாள்-சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்

14 பிறகு தேவன், “வானத்தில் வெளிச்சம் உண்டாகட்டும், இந்த வெளிச்சமானது பகலையும் இரவையும் பிரிக்கட்டும். இந்த வெளிச்சங்கள் காலங்களையும் நாட்களையும் ஆண்டுகளையும் குறிப்பதாக இருக்கட்டும். 15 இந்த வெளிச்சங்கள் வானத்திலிருந்து பூமிக்கு ஒளி தரட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

16 தேவன் இரண்டு மகத்தான ஒளிச்சுடர்களை உண்டுபண்ணினார். தேவன் பெரிய ஒளிச்சுடரைப் பகலை ஆண்டுகொள்ளவும், சிறிய ஒளிச்சுடரை இரவை ஆண்டுகொள்ளவும் செய்தார். நட்சத்திரங்களையும் தேவன் உருவாக்கினார். 17 தேவன் இந்த ஒளிச்சுடர்களைப் பூமிக்கு வெளிச்சம் தரும்படி வானத்தில் வைத்தார். 18 இரவையும் பகலையும் ஆள்வதற்கு இந்த ஒளிச்சுடர்களைத் தேவன் வானத்தில் ஏற்படுத்தினார். இவை வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வேறுபாட்டை உண்டாக்கிற்று. இது நல்லது என்று தேவன் கண்டுகொண்டார்.

19 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது நான்காம் நாள்.

ஐந்தாம் நாள்-மீன்களும் பறவைகளும்

20 பிறகு தேவன், “தண்ணீரானது திரளான உயிரினங்களை தோற்றுவிப்பதாக, பூமியிலும் வானத்திலும் பறப்பதற்காக பறவைகள் உருவாகட்டும்” என்றார். 21 பிறகு தேவன் கடலில் வாழும் பெரிய உயிரினங்களை உருவாக்கினார். கடலுக்குள் அலைந்து திரிகிற ஏராளமான உயிரினங்களைப் படைத்தார். பல்வேறு வகையான கடல் வாழ் உயிர்களையும் படைத்தார். வானத்தில் பறந்து திரிகிறதற்கு பல்வேறுவகைப் பறவைகளையும் படைத்தார். தேவன் இது நல்லது என்று கண்டார்.

22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, இனப் பெருக்கம் செய்து, எண்ணிக்கையில் விருத்தியடைந்து கடல் தண்ணீரை நிரப்புங்கள், மேலும் பறவைகள் பூமியில் பெருகட்டும் என்று சொன்னார்.

23 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஐந்தாம் நாள் ஆயிற்று.

ஆறாவது நாள்-மிருகங்களும் மனிதர்களும்

24 பிறகு தேவன், “பூமியானது, கால் நடைகள், ஊர்வன, காட்டு மிருகங்கள் முதலியனவற்றை அதனதன் இனத்திற்கு ஏற்ப தோற்றுவிப்பதாக” என்றார். அவை அப்படியே உண்டானது.

25 இவ்வாறு, தேவன் எல்லாவகையான மிருகங்களையும் படைத்தார். அவர் காட்டு மிருகங்களையும், வீட்டு மிருகங்களையும், பூமியில் ஊர்ந்து செல்லும் விதவிதமான உயிரினங்களையும் படைத்தார். இவை நல்லதென்று தேவன் கண்டுகொண்டார்.

26 அதன் பிறகு தேவன், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளட்டும். அவர்கள் பெரிய மிருகங்களையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆண்டுகொள்ளட்டும்” என்று சொன்னார்.

27 எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனுகுலத்தைப் படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். 28 தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களிடம், “பிள்ளைகளைப் பெற்று விருத்தியடையுங்கள், பூமியை நிரப்பி அதை ஆண்டுகொள்ளுங்கள். கடலில் உள்ள மீன்களையும் வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளுங்கள். பூமியில் அலைந்து திரிகின்ற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்றார்.

29 மேலும் தேவன், “நான் உங்களுக்குத் தானியங்களைத் தரும் அனைத்து வகைப் பயிரினங்களையும், எல்லாவகையான பழ மரங்களையும் தருகிறேன். அந்த மரங்கள் விதைகளோடு கூடிய கனிகளைத் தரும். அந்த விதைகளும் கனிகளும் உங்களுக்கு உணவாகும். 30 நான் புல் பூண்டுகளையெல்லாம் மிருகங்களுக்காகக் கொடுத்துள்ளேன். புல் பூண்டுகள் அவற்றுக்கு உணவாக இருக்கும். பூமியில் உள்ள அனைத்து மிருகங்களும் வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தரையில் ஊர்கின்ற அனைத்து சிறு உயிரினங்களும் அவற்றை உணவாகக்கொள்ளும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

31 தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார்.

மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஆறாவது நாளாயிற்று.

மத்தேயு 1

இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு(A)

இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு.

ஈசாக்கின் மகன் யாக்கோபு.

யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும்

அவன் சகோதரர்களும்.

யூதாவின் மக்கள் பாரேசும்

சாராவும்

(அவர்களின் தாய் தாமார்.)

பாரேசின் மகன் எஸ்ரோம்.

எஸ்ரோமின் மகன் ஆராம்.

ஆராமின் மகன் அம்மினதாப்.

அம்மினதாபின் மகன் நகசோன்.

நகசோனின் மகன் சல்மோன்.

சல்மோனின் மகன் போவாஸ்.

(போவாசின் தாய் ராகாப்.)

போவாசின் மகன் ஓபேத்.

(ஓபேத்தின் தாய் ரூத்.)

ஓபேத்தின் மகன் ஈசாய்.

ஈசாயின் மகன் அரசனான தாவீது.

தாவீதின் மகன் சாலமோன்.

(சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.)

சாலமோனின் மகன் ரெகொபெயாம்.

ரெகொபெயாமின் மகன் அபியா.

அபியாவின் மகன் ஆசா.

ஆசாவின் மகன் யோசபாத்.

யோசபாத்தின் மகன் யோராம்.

யோராமின் மகன் உசியா.

உசியாவின் மகன் யோதாம்.

யோதாமின் மகன் ஆகாஸ்.

ஆகாஸின் மகன் எசேக்கியா.

10 எசேக்கியாவின் மகன் மனாசே.

மனாசேயின் மகன் ஆமோன்.

ஆமோனின் மகன் யோசியா.

11 யோசியாவின் மக்கள் எகொனியாவும்

அவன் சகோதரர்களும்.

(இக்காலத்தில்தான் யூதர்கள்

பாபிலோனுக்கு அடிமைகளாகக்

கொண்டு செல்லப்பட்டனர்.)

12 அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்:

எகொனியாவின் மகன் சலாத்தியேல்.

சலாத்தியேலின் மகன் சொரொபாபேல்.

13 சொரொபாபேலின் மகன் அபியூத்.

அபியூத்தின் மகன் எலியாக்கீம்.

எலியாக்கீமின் மகன் ஆசோர்.

14 ஆசோரின் மகன் சாதோக்.

சாதோக்கின் மகன் ஆகீம்.

ஆகீமின் மகன் எலியூத்.

15 எலியூத்தின் மகன் எலியாசார்.

எலியாசாரின் மகன் மாத்தான்.

மாத்தானின் மகன் யாக்கோபு.

16 யாக்கோபின் மகன் யோசேப்பு.

யோசேப்பின் மனைவி மரியாள்.

மரியாளின் மகன் இயேசு. கிறிஸ்து என

அழைக்கப்பட்டவர் இயேசுவே.

17 எனவே ஆபிரகாம் முதல் தாவீதுவரை பதினான்கு தலைமுறைகள். தாவீது முதல் யூதர்கள் அடிமைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதுவரைக்கும் பதினான்கு தலைமுறைகள். யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து கிறிஸ்து பிறக்கும்வரை பதினான்கு தலைமுறைகள்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு(B)

18 இயேசு கிறிஸ்துவின் தாய் மரியாள். இயேசுவின் பிறப்பு இப்படி நிகழ்ந்தது. மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவர்கள் திருமணத்திற்கு முன்பே மரியாள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரியாள் கருவுற்றிருந்தாள். 19 மரியாளின் கணவனாகிய யோசேப்பு மிகவும் நல்லவன். மக்களின் முன்னிலையில் மரியாளை அவன் அவமதிக்க விரும்பவில்லை. எனவே யோசேப்பு மரியாளை இரகசியமாகத் தள்ளிவிட நினைத்தான்.

20 யோசேப்பு இந்த சிந்தையாயிருக்கும்பொழுது, கர்த்தருடைய தூதன் யோசேப்பின் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, மரியாளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்காதே. அவள் கருவிலிருக்கும் குழந்தை பரிசுத்த ஆவியானவரால் உண்டானது. 21 அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அக்குழந்தைக்கு இயேசு [a] எனப் பெயரிடு. அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்” என்றான்.

22 இவையெல்லாம் தீர்க்கதரிசியின் மூலமாகத் தேவன் சொன்னவைகளின் நிறைவேறுதல்களாக நடந்தன. தீர்க்கதரிசி சொன்னது இதுவே: 23 “கன்னிப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்.” [b] (இம்மானுவேல் என்பதற்கு, “தேவன் நம்முடன் இருக்கிறார்” என்று பொருள்.)

24 விழித்தெழுந்த யோசேப்பு, கர்த்தருடைய தூதன் சொன்னபடியே மரியாளை மணந்தான். 25 ஆனால் மரியாள் தன் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு, “இயேசு” எனப் பெயரிட்டான்.

எஸ்றா 1

சிறைக்கைதிகள் திரும்பிச்செல்ல கோரேசு உதவுகிறான்

பெர்சியாவின் அரசனாக கோரேசு வீற்றிருந்த முதல் ஆண்டில், [a] கர்த்தர் அவனை உற்சாகப்படுத்தி ஓர் அறிவிப்பு கொடுக்கச் சொன்னார். அவன் அந்த அறிவிப்பை எழுத்து மூலமாகவே எழுதி, தனது இராஜ்யத்தில் உள்ள எல்லா இடங்களிலும் வாசிக்கும்படி செய்தான். எரேமியாவின் மூலமாகக் கர்த்தர் சொன்னது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது. இதுதான் அந்த அறிவிப்பு:

பெர்சியாவின் அரசனான கோரேசிடமிருந்து:

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர், எனக்கு பூமியிலுள்ள அரசுகளையெல்லாம் கொடுத்தார். யூதா நாட்டிலுள்ள எருசலேமில், அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கர்த்தர் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், அவர் எருசலேமில் இருக்கிற தேவன். உங்களோடு தேவனுடைய மனிதர்கள் யாராவது இருப்பின், தேவன் அவர்களை ஆசீர்வதிக்கும் பொருட்டு நான் ஜெபிக்கிறேன். அவர்களை நீங்கள் யூதா நாட்டிலுள்ள எருசலேமிற்கு அனுப்பவேண்டும். அவர்கள் சென்று கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டவும் நீங்கள் அனுப்பவேண்டும். பிழைத்திருக்கிற இஸ்ரவேலர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்குள்ளவர்கள் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும். அந்த ஜனங்களுக்கு வெள்ளி, பொன், பசுக்கள் மற்றும் மற்ற பொருட்களைக் கொடுக்கவேண்டும். எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளை அவர்களுக்குக் கொடுங்கள் என்பதாகும்.

எனவே, யூதா மற்றும் பென்யமீனின் கோத்திரங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும் எருசலேமிற்குச் செல்லத் தயாரானார்கள். எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்காக அவர்கள் போனார்கள். தேவன் உற்சாகமூட்டின ஒவ்வொருவரும் எருசலேமிற்குப் போகத் தயாரானார்கள். அவர்களின் அண்டை வீட்டுக்காரர்கள் ஏராளமான பரிசுகளைக் கொடுத்தனர். அவர்கள் வெள்ளி, பொன், பசுக்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொடுத்தார்கள். இவற்றையெல்லாம் அவர்கள் இலவசமாகக் கொடுத்தார்கள். கோரேசு அரசன் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களையெல்லாம் வெளியே கொண்டு வந்தான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை எருசலேமிலிருந்து வெளியே எடுத்திருந்தான். அவன் அவற்றை அவனது பொய்த் தெய்வங்கள் இருக்கும் ஆலயத்தில் வைத்திருந்தான். பெர்சியாவின் அரசனான கோரேசு அப்பொருட்களை வெளியே கொண்டு வரும்படி கருவூலக்காரனிடம் சொன்னான். அவனது பெயர் மித்திரேதாத். அவன் அதனை எடுத்து வந்து யூதாவின் தலைவனான சேஸ்பாத்சாரிடத்தில் கொடுத்தான்.

கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து மித்திரேதாத் எடுத்து வந்த பொருட்களின் விபரம்: தங்கத் தட்டுகள் 30, வெள்ளித் தட்டுகள் 1,000, கத்திகளும், சட்டிகளும் 29, 10 பொற்கிண்ணங்கள் 30 தங்கக் கிண்ணங்களைப் போன்ற வெள்ளிக் கிண்ணங்கள் 410 மற்ற தட்டுகள் 1,000

11 ஆக மொத்தம், பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டப் பொருட்கள் 5,400. கைதிகள் பாபிலோனில் இருந்து எருசலேமிற்குத் திரும்பிப் போனபோது சேஸ்பாத்சார் இப்பொருட்களைக் கொண்டு வந்தான்.

அப்போஸ்தலர் 1

லூக்காவின் இரண்டாவது புத்தகம்

அன்பான தேயோப்பிலுவே, நான் எழுதிய முதல் புத்தகத்தில் இயேசு செய்தவைகளையும், கற்பித்தவைகளையும் எல்லாம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். நான் இயேசுவின் வாழ்க்கை முழுவதையும் தொடக்கத்திலிருந்து இறுதியில் அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் எழுதியிருந்தேன். இது நடக்கும் முன் இயேசு தான் தேர்ந்தெடுத்த அப்போஸ்தலர்களிடம் பேசினார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியவற்றை இயேசு அவர்களுக்குக் கூறினார். இது இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்தது. ஆனால் அவர் அப்போஸ்தலருக்குத் தான் உயிரோடிருப்பதைக் காட்டினார். வல்லமைமிக்க செயல்கள் பலவற்றைச் செய்து இயேசு இதை நிரூபித்தார். இயேசு மரணத்தினின்று எழுந்த பின்பு 40 நாட்களில் அப்போஸ்தலர்கள் பலமுறை இயேசுவைப் பார்த்தனர். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசினார். ஒருமுறை இயேசு அவர்களோடு உணவு உட்கொண்டு இருக்கும்போது எருசலேமை விட்டுப் போக வேண்டாமென அவர்களுக்குக் கூறினார். இயேசு, “பிதா உங்களுக்குச் சிலவற்றைக் குறித்து வாக்குறுதி அளித்துள்ளார். இதைக் குறித்து முன்னரே நான் உங்களுக்குக் கூறினேன். இங்கேயே எருசலேமில் இந்த வாக்குறுதியைப் பெறுவதற்காகக் காத்திருங்கள். யோவான் மக்களுக்கு, தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் ஒரு சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்று சொன்னார்.

இயேசுவின் பரமேறுதல்

அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.

இயேசு அவர்களை நோக்கி “நாட்களையும் நேரத்தையும் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் பிதா ஒருவரே. உங்களால் இந்தக் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார். வரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். நீங்கள் எனது சாட்சிகளாக இருப்பீர்கள். மக்களுக்கு என்னைப்பற்றிக் கூறுவீர்கள். முதலில் எருசலேமின் மக்களுக்குக் கூறுவீர்கள். பின் யூதேயா முழுவதும். சமாரியாவிலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் நீங்கள் மக்களுக்குக் கூறுவீர்கள்” என்றார்.

இயேசு அப்போஸ்தலர்களுக்கு இந்தக் காரியங்களைக் குறித்துக் கூறிய பிறகு வானிற்குள்ளாக அவர் மேலே எடுத்துச் செல்லப்பட்டார். அப்போஸ்தலர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவர் மேகத்திற்குள்ளாகச் சென்றார். பின்னர் அவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. 10 இயேசு மேலே போய்க்கொண்டிருந்தார். அப்போஸ்தலர்கள் வானையே நோக்கிக்கொண்டிருந்தனர். திடீரென வெண்ணிற ஆடை அணிந்த இருவர் அவர்களுக்கு அருகே நின்றனர். 11 அவ்விருவரும் அப்போஸ்தலர்களை நோக்கி, “கலிலேயாவிலிருந்து வந்துள்ள மனிதர்களே, ஏன் நீங்கள் வானத்தைப் பார்த்தவாறே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? இயேசு உங்களிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதை நீங்கள் கண்டீர்கள். நீங்கள் பார்த்தபோது சென்றதைப் போலவே அவர் திரும்பவும் வருவார்” என்று கூறினர்.

புதிய அப்போஸ்தலர்

12 பின்பு ஒலிவ மலையிலிருந்து அப்போஸ்தலர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். (இம்மலை எருசலேமிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது) 13 அப்போஸ்தலர்கள் நகரத்திற்குள் சென்றனர். அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அந்த அறை மாடியிலிருந்தது. பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்படும் சீமோன் மற்றும் யாக்கோபின் மகனாகிய யூதாஸ் ஆகிய அப்போஸ்தலர்கள் அங்கிருந்தனர்.

14 அப்போஸ்தலர்கள் அனைவரும் சேர்ந்திருந்தனர். ஒரே குறிக்கோள் உடையோராக விடாது பிரார்த்தனை செய்துகொண்டேயிருந்தனர். இயேசுவின் தாயாகிய மரியாளும் அவரது சகோதரர்களும் சில பெண்களும் அப்போஸ்தலரோடு கூட இருந்தனர்.

15 சில நாட்களுக்குப் பிறகு விசுவாசிகளாக அவர்கள் ஒன்று கூடினர். (சுமார் 120 பேர் அக்கூட்டத்தில் இருந்தனர்.) பேதுரு எழுந்து நின்று, 16-17 “சகோதரர்களே! வேதவாக்கியங்களில் பரிசுத்த ஆவியானவர் சில காரியங்கள் நடக்கும் என்று தாவீதின் மூலமாகக் கூறினார். நமது கூட்டத்தில் ஒருவனாகிய யூதாஸைக்குறித்து அவன் கூறியுள்ளான். யூதாஸ் நம்மோடு கூட சேவையில் ஈடுபட்டிருந்தான். இயேசுவைச் சிறைபிடிக்க யூதாஸ் மனிதர்களுக்கு வழிகாட்டுவான் என்பதை ஆவியானவர் கூறியிருந்தார்,” என்றான்.

18 (இதைச் செய்வதற்கு யூதாஸிற்குப் பணம் தரப்பட்டது. ஒரு நிலத்தை வாங்குவதற்கு அப்பணம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் யூதாஸ் தலைகுப்புற வீழ்ந்து அவன் சரீரம் பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது. 19 எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு “அக்கெல்தமா” என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது “இரத்த நிலம்” எனப் பொருள்படும்.)

20 “சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக்குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

“‘மக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது,
    யாரும் அங்கு வாழலாகாது.’ (A)

மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

‘இன்னொருவன் அவன் பணியைப் பெறட்டும்.’ (B)

21-22 “எனவே இன்னொருவன் நம்மோடு சேர்ந்துகொண்டு இயேசு உயிரோடு எழுந்ததற்கு சாட்சியாக இருக்கட்டும். ஆண்டவராகிய இயேசு நம்மோடு இருந்தபோது எப்போதும் நம்மோடு கூட இருந்த மனிதர்களில் ஒருவனாக அவன் இருத்தல் வேண்டும். யோவான் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து இயேசு பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் நம்மோடு இருந்தவனாக அவன் இருக்க வேண்டும்” என்றான்.

23 அப்போஸ்தலர்கள் கூட்டத்திற்கு முன் இருவரை நிறுத்தினர். ஒருவன் யோசேப்பு பர்சபா என்பவன். அவன் யுஸ்து என அழைக்கப்பட்டான். மற்றவன் மத்தியா என்பவன். 24-25 அப்போஸ்தலர்கள், “ஆண்டவரே, நீர் எல்லா மனிதர்களின் உள்ளங்களையும் அறிந்தவர். இந்த இருவரில் உம் சேவைக்கு நீர் யாரைத் தேர்ந்தெடுக்கிறீர் என்பதை எங்களுக்குக் காட்டும். யூதாஸ் இதனைவிட்டு நீங்கித் தனக்குரிய இடத்திற்குச் சென்றுவிட்டான். ஆண்டவரே, எந்த மனிதன் அப்போஸ்தலனாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டும்!” என்று பிரார்த்தனை செய்தார்கள். 26 பின்னர் அப்போஸ்தலர்கள் அந்த இருவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க சீட்டுகள் எழுதிப் போட்டனர். அதன்படி ஆண்டவர் விரும்பியவராக மத்தியாவை சீட்டுகள் காட்டின. எனவே அவன் மற்ற பதினொருவரோடும் கூட ஓர் அப்போஸ்தலன் ஆனான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center