Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 32

அசீரியா நாட்டு அரசன் எசேக்கியாவிற்குத் துன்பம் கொடுக்கிறான்

32 இவையனைத்தையும் எசேக்கியா உண்மையுடன் செய்து முடித்தப் பிறகு, சனகெரிப் எனும் அசீரியா அரசன் யூதா நாட்டைத் தாக்க வந்தான். சனகெரிப்பும் அவனது படைகளும் கோட்டைக்கு வெளியே முகாமிட்டனர். அந்நகரங்களைத் தோற்கடிக்கத் திட்டங்கள் தீட்டும்பொருட்டு அவன் இவ்வாறுச் செய்தான். அவன் அனைத்து நகரங்களையும் தானே வென்றுவிட விரும்பினான். எருசலேமைத் தாக்குவதற்காக சனகெரிப் வந்திருக்கும் செய்தியை எசேக்கியா அறிந்துகொண்டான். பிறகு எசேக்கியா தனது அதிகாரிகளோடும் படை அதிகாரிகளோடும் கலந்தாலோசித்தான். அவர்கள் அனைவரும் நகரத்துக்கு வெளியே தண்ணீரை விநியோகிக்கும் ஊற்றுக் கண்களை அடைத்துவிட ஒப்புக் கொண்டனர். அந்த அதிகாரிகளும் அலுவலர்களும் எசேக்கியாவிற்கு உதவினார்கள். நாட்டின் நடுவில் ஓடிக்கொண்டிருந்த ஓடைகளையும் ஊற்றுகளையும் எராளமான ஜனங்கள் சேர்ந்து வந்தடைத்தனர். அவர்கள், “அசீரியா அரசன் இங்கு வரும்போது அவனுக்கு அதிகம் தண்ணீர் கிடைக்காது!” என்றனர். எசேக்கியா எருசலேமைப் பலமுள்ளதாக ஆக்கினான். இடிந்துபோன சுவர்களை மீண்டும் கட்டினான். சுவர்களின் மேல் கோபுரங்களைக் கட்டினான். முதல் சுவருக்கு அடுத்தாக இரண்டாம் சுவரையும் கட்டினான். எருசலேமின் பழைய பகுதியில் உள்ள கிழக்கு பாகத்தைப் பலமுள்ளதாகக் கட்டினான். அவன் பல்வேறு ஆயுதங்களையும் கேடயங்களையும் செய்தான். 6-7 ஜனங்களுக்குத் தலைமைத் தாங்கும் போர்த் தலைவர்களை எசேக்கியா தேர்ந்தெடுத்தான். நகர வாசலுக்கருகில் அவன் இந்த அதிகாரிகளை அழைத்துப் பேசினான். எசேக்கியா அவர்களோடு பேசி அவர்களை உற்சாகப்படுத்தினான். அவன், “நீங்கள் பலமாகவும், தைரியமாகவும் இருங்கள். அசீரியா அரசனைப்பற்றியோ, அவனது பெரும் படையைப் பற்றியோ பயமும் கவலையும் அடையாதீர்கள். அசீரியா அரசனுக்கு இருக்கிற பலத்தைவிட மாபெரும் வல்லமை நமக்கு பலமாக இருக்கிறது. அசீரியா அரசனிடம் மனிதர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் நம்மிடமோ நமது தேவனாகிய கர்த்தர் இருக்கிறார்! நமது தேவன் நமக்கு உதவுவார். நமது போர்களில் அவர் சண்டையிடுவார்” என்று பேசினான். இவ்வாறு யூதா அரசனான எசேக்கியா ஜனங்களை உற்சாகப்படுத்தி அவர்களைப் பலமுள்ளவர்களாக உணரச்செய்தான்.

சனகெரிப்பும் அவனது படைகளும் லாகீசுக்கு எதிராக முற்றுகை இட்டனர். அதனைத் தோற்கடிக்க முடியும் என்றும் எண்ணினர். சனகெரிப் தனது வேலைக்காரர்களை யூதாவின் அரசனான எசேக்கியாவிடமும் எருசலேமில் உள்ள யூதா ஜனங்களிடமும் அனுப்பினான். எசேக்கியாவிற்கும், எருசலேமில் உள்ள ஜனங்களுக்கும் எடுத்துச்சொல்ல சனகெரிப்பின் வேலைக்காரர்களிடம் ஒரு செய்தி இருந்தது.

10 அவர்கள், “அசீரியாவின் அரசனான சனகெரிப் சொல்வதாவது, ‘முற்றுகை இடப்பட்ட எருசலேமிற்குள் எந்த நம்பிக்கையின் பேரில் நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்? 11 எசேக்கியா உங்களை முட்டாளாக்குகிறான். நீங்கள் தந்திரமாக எருசலேமிற்குள் தங்கவைக்கப்படுகிறீர்கள். எனவே நீங்கள் பசியாலும் தாகத்தாலும் மரித்துப்போவீர்கள். எசேக்கியா உங்களிடம், “நமது தேவனாகிய கர்த்தர் அசீரியா அரசனிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவார்” என்று கூறுகிறான். 12 எசேக்கியாவே கர்த்தருடைய மேடைகளையும் பலிபீடங்களையும் அப்புறப்படுத்தினான். அவன் யூதாவுக்கும் எருசலேமிற்கும் ஒரே பலிபீடத்தையே தொழுதுகொள்ளுங்கள், நறு மணப்பொருட்களை எரியுங்கள் என்று சொன்னான். 13 நானும் என் முற்பிதாக்களும் மற்ற நாடுகளிலிருந்த அனைத்து ஜனங்களுக்கும் என்ன செய்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களையே காப்பாற்ற முடியாமல்போனது. அந்தத் தெய்வங்களின் ஜனங்களை நான் அழிக்கும்போதுகூட, அவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. 14 என் முற்பிதாக்கள் அந்நாடுகளை அழித்தார்கள். தனது ஜனங்களை அழிப்பதிலிருந்து என்னைத் தடுக்கும் தேவன் யாரும் இல்லை. எனவே, உங்கள் தெய்வம் என்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று நினைக்கிறீர்களா? 15 எசேக்கியா உங்களை முட்டாளாக்கவோ, உங்களிடம் தந்திரம் செய்யவோ அனுமதிக்காதீர்கள். அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் எந்த நாட்டையும், அரசையும் என்னிடமிருந்தும், என் முற்பிதாக்களிடமிருந்தும் எந்தத் தெய்வமும் காப்பாற்றவில்லை. எனவே என்னுடைய தாக்குதலில் இருந்து உங்கள் தெய்வம் உங்களைக் காப்பாற்றுவார் என்று எண்ணாதீர்கள்’” என்றார்கள்.

16 அசீரியா அரசனின் வேலைக்காரர்கள், தேவனாகிய கர்த்தருக்கும், அவரது தொண்டனான எசேக்கியாவுக்கும் எதிராக மிக மோசமாகப் பேசினார்கள். 17 அசீரியா அரசன் மேலும் தேவனாகிய கர்த்தரை நிந்தித்து கடிதங்கள் பல எழுதினான். அசீரியா அரசன் தம் கடிதத்தில் எழுதியிருந்த செய்திகள் பின் வருமாறு: “மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களைக்கூட என்னிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. இதைப் போலவே எசேக்கியாவின் தெய்வம் உங்களை எனது தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியாது.” 18 பிறகு அசீரியா அரசனின் வேலைக்காரர்கள் சுவர்களின் மேலே இருந்த எருசலேமின் ஜனங்களைப் பார்த்து சத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் எபிரெய மொழியைப் பயன்படுத்தினர். எருசலேம் ஜனங்கள் அஞ்சவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துக்கொண்டனர். தாம் அந்நகரத்தைக் கைப்பற்றிவிடுவோம் என்று நம்பினார்கள். 19 உலக ஜனங்கள் தொழுதுகொண்ட தேவனுக்கு எதிராக அந்த வேலைக்காரர்கள் கெட்ட செய்திகளைக் கூறினார்கள். அந்த தெய்வங்கள் அந்த ஜனங்களின் கைகளால் செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே. இதைப்போலவே எருசலேமின் தேவனுக்கும் அதேபோன்ற தீமைகளை அந்த வேலைக்காரர்கள் செய்தார்கள்.

20 இந்தப் பிரச்சனையைப்பற்றி எசேக்கியா அரசனும், ஆமோத்தின் மகனாகியா ஏசாயா தீர்க்கதரிசியும் கர்த்தரிடம் ஜெபம் செய்தார்கள். அவர்கள் பரலோகத்தை நோக்கி மிகச் சத்தமாக ஜெபம் செய்தனர். 21 பிறகு கர்த்தர் அசீரியா அரசனின் முகாமிற்கு ஒரு தேவ தூதனை அனுப்பினார். தேவதூதன் அசீரியாவின் படையில் உள்ள எல்லா வீரர்களையும், தலைவர்களையும், அதிகாரிகளையும் கொன்றான். எனவே, அசீரியா அரசன் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போனான். அவனது ஜனங்கள் அவனுக்காக வெட்கப்பட்டனர். அவன் தனது பொய்த் தெய்வங்களின் கோவிலிற்குப் போனான். அங்கே அவனது மகன்கள் அவனை வாளால் கொன்றனர். 22 இவ்வாறு கர்த்தர், அசீரியா அரசனாகிய சனகெரிபிடமிருந்தும் மற்ற ஜனங்களிடமிருந்தும் எசேக்கியாவையும், அவனது ஜனங்களையும் காப்பாற்றினார். கர்த்தர் எசேக்கியா மீதும் எருசலேம் ஜனங்கள் மீதும் அக்கறைக்கொண்டார். 23 எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு பலரும் காணிக்கைகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் யூதா அரசனாகிய எசேக்கியாவுக்கும் விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்தனர். அந்நாளிலிருந்து அனைத்து நாடுகளும் எசேக்கியாவை மதித்தன.

24 அந்நாட்களில் எசேக்கியா நோய்வாய்ப் பட்டு மரணப்படுக்கையில் விழுந்தான். அவன் கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் எசேக்கியாவிடம் பேசினார். அவனுக்கு ஒரு அடையாளம் காட்டினார். 25 ஆனால் எசேக்கியாவின் மனதில் கர்வ உணர்வு தோன்றியது. எனவே அவன் தேவனுடைய கருணைக்காக அவருக்கு நன்றி செலுத்தவில்லை. இதனால் தேவனுக்கு எசேக்கியாவின் மீது கோபம் ஏற்பட்டது. அதோடு யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதும் கோபம் ஏற்பட்டது. 26 ஆனால் எசேக்கியாவும் எருசலேமில் உள்ள ஜனங்களும் தங்கள் இதயத்தையும், வாழ்வையும் மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் பணிவுள்ளவர்கள் ஆனார்கள். பெருமை உணர்வுக்கொள்வதை நிறுத்தினார்கள். அவர்கள் மேல் கர்த்தருக்கு எசேக்கியா உயிரோடு இருந்தவரை கோபம் வரவில்லை.

27 எசேக்கியாவுக்கு ஏராளமான செல்வமும், சிறப்பும் இருந்தது. அவன் வெள்ளி, தங்கம், விலைமதிப்புள்ள நகைகள், நறுமணப்பொருட்கள், கேடயங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களைப் பண்டகசாலைகள் கட்டி சேமித்தான். 28 ஜனங்கள் அனுப்பித் தரும் உணவு தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேகரித்து வைக்கும் கட்டிடங்கள் அவனிடம் இருந்தன. அவன் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தொழுவங்களை அமைத்தான். 29 எசேக்கியா அநேக நகரங்களையும் கட்டினான். அவன் ஏராளமான ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையுங்கூட பெற்றான். கர்த்தர் அவனுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்தார். 30 எசேக்கியா கீகோன் என்னும் ஆற்றிலே அணையைக் கட்டினான். அந்த நீரை மேற்கேயிருந்து தாழ தாவீதின் நகரத்திற்குத் திரும்பினான். அவனது செயல்கள் அனைத்திலும் வெற்றிபெற்றான்.

31 ஒருமுறை பாபிலோனில் உள்ள தலைவர்கள் எசேக்கியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினார்கள். அவர்கள் தம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புதுவிதமான அடையாளத்தைப் பற்றிக் கேட்டனர். அப்போது தேவன் அவனைத் தனியாகவிட்டார். அவன் இதயத்தில் உண்டான அத்தனையையும் அறியும்படி அவனைச் சோதித்தார்.

32 எசேக்கியா செய்த மற்ற செயல்களும், அவன் எவ்வாறு கர்த்தரை நேசித்தான் என்ற விபரமும் 'ஆமோத்தின் மகனாகிய ஏசாயாவின் தரிசனம்' என்ற புத்தகத்திலும் யூதா மற்றும் 'இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு' என்ற புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளன. 33 எசேக்கியா மரித்தான். அவன்தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். தாவீதின் முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகள் உள்ள மலைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியா மரித்ததும் யூதா மற்றும் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் அனைவரும் அவனுக்கு மரியாதைச் செய்தார்கள். மனாசே என்பவன் அவனுக்குப் பிறகு எசேக்கியாவின் இடத்தில் புதிய அரசன் ஆனான். மனாசே எசேக்கியாவின் மகன்.

வெளி 18

பாபிலோன் அழிக்கப்படுதல்

18 பிறகு வேறொரு தூதன் பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதைக் கண்டேன். அவனுக்கு மிகுதியான அதிகாரம் இருந்தது. அவனுடைய மகிமையால் பூமி ஒளி பெற்றது. அத்தூதன் உரத்த குரலில் கூவினான்:

“அவள் அழிக்கப்பட்டாள்!
    மாநகரமான பாபிலோன் அழிக்கப்பட்டது!
அவள் பிசாசுகளின் குடியிருப்பானாள்.
    அந்நகரம் ஒவ்வொரு அசுத்தமான ஆவியும் வசிக்கிற இடமாயிற்று.
    எல்லாவிதமான அசுத்தமான பறவைகளுக்கும் அது ஒரு கூடானது.
    அசுத்தமானதும் வெறுக்கத்தக்கதுமான ஒவ்வொரு மிருகத்திற்கும் அது ஒரு நகரமாயிற்று.
அவளுடைய வேசித்தனத்தினுடையதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லாத் தேசங்களும் குடித்தன.
உலகிலுள்ள அரசர்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்.
    உலகிலுள்ள வியாபாரிகள் அவளது மாபெரும் செல்வச் செழிப்பில் இருந்து செல்வர்கள் ஆனார்கள்.”

பிறகு நான் பரலோகத்திலிருந்து இன்னொரு குரலையும் கேட்டேன்.

“ஓ! என் மக்களே, அவளுடைய பாவத்தில்
    உங்களுக்குப் பங்கில்லாதபடிக்கு வெளியே வாருங்கள்.
பிறகு அவளுக்கிருக்கும் வாதைகள் எதுவும் உங்களுக்கிருக்காது.
அந்நகரத்தின் பாவங்கள் பரலோகம் வரை எட்டிவிட்டன.
    தேவன் அவளது குற்றங்களை மறக்கவில்லை.
அவள் கொடுத்ததைப்போலவே நீங்களும் அந்நகருக்கு கொடுங்கள்.
    அவள் கொடுத்ததைப்போல இருமடங்கு திருப்பிச் செலுத்துங்கள்.
மற்றவர்களுக்கு அவள் தயாரித்த அடர்த்தியான மதுவைப்போல இருமடங்கு அடர்த்தியான மதுவை அவளுக்காகத் தயார் செய்யுங்கள்.
அவள் தனக்கு செல்வ வாழ்வையும் அதிக மகிமையையும் அளித்துக்கொண்டாள்.
    அதே அளவு துன்பத்தையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள்.
அவள் தனக்குத் தானே, ‘என் சிம்மாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிற நான் ஒரு ராணி.
    நான் விதவை அல்ல.
    நான் எக்காலத்திலும் துக்கப்படமாட்டேன்’ என்று சொல்லிக்கொள்கிறாள்.
எனவே ஒருநாளில் இக்கேடுகள் அவளுக்கு வரும்.
    அவை மரணம், அழுகை, பெரும் பசியாய் இருக்கும்.
அவள் நெருப்பால் அழிக்கப்படுவாள்.
    ஏனென்றால் அவளை நியாயந்தீர்க்கிற தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.”

“அவளோடு வேசித்தனம் புரிந்து அவளுடைய செல்வத்தைப் பகிர்ந்துகொண்ட பூமியின் எல்லா அரசர்களும் அவள் எரியும்போது வரும் புகையைக் காண்பார்கள். அவளது மரணத்துக்காக அவர்கள் அழுது துக்கப்படுவார்கள். 10 அவளது துன்பத்தைக் கண்டு அரசர்கள் அஞ்சி விலகி நிற்பார்கள். அவர்கள் சொல்வார்கள்:

“பயங்கரம்! எவ்வளவு பயங்கரம்,
மாநகரமே,
    சக்திமிக்க பாபிலோன் நகரமே!
உனது தண்டனை ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டது.”

11 “அவளுக்காக உலகிலுள்ள வியாபாரிகள் அழுது துக்கப்படுவார்கள். இப்பொழுது அவர்களின் பொருள்களை வாங்குவதற்கு யாரும் இல்லை என்பது தான் அவர்களின் துயரத்துக்குக் காரணம். 12 அவர்கள் தங்கம், வெள்ளி, நகைகள், முத்துக்கள், மெல்லிய ஆடை, இரத்தாம்பர ஆடை, பட்டு ஆடை, சிவப்பு ஆடை, எல்லாவிதமான வாசனைக் கட்டைகள், தந்தத்தால், தங்கத்தால் செய்யப்பட்ட அனைத்து விதமான பொருள்கள், விலையுயர்ந்த மரப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், வெள்ளைக்கல் பொருட்கள், ஆகியவற்றை விற்கின்றனர். 13 இலவங்கப்பட்டை, தூபவர்க்கம், தைலங்கள், சாம்பிராணி, திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய், மெல்லிய மாவு, கோதுமை, மாடு, ஆடு, குதிரைகள், இரதங்கள், மனிதர்களின் சரீரங்கள் மற்றும் ஆன்மாக்கள் போன்றவற்றையும் அவர்கள் விற்கின்றனர்.

14 “ஓ பாபிலோனே, நீ விரும்பிய பொருட்களெல்லாம் உன்னை விட்டுப் போய்விட்டன.
உன் செல்வமும் நாகரீகமும் மறைந்து விட்டன.
    உன்னால் அவற்றை மீண்டும் பெற இயலாது.”

15 “உலகிலுள்ள வியாபாரிகள் அவளது துயரங்களுக்கு அஞ்சி அவளை விட்டு விலகுவார்கள். இவர்களே பலவற்றை அவளிடம் விற்று செல்வம் குவித்தார்கள். அவர்கள் அழுது துக்கப்படுவார்கள். 16 அவர்கள் சொல்வார்கள்:

“பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது!
    அவள் மெல்லிய துணி,
    பீதாம்பரம், சிவப்பாடைகளை அணிந்திருந்தாள்.
    அவள் தங்கம், நகைகள், முத்துக்கள் ஆகியவற்றால் சிங்காரிக்கப்பட்டாள்.
17 அத்தனை செல்வமும் ஒரு மணி நேரத்துக்குள் அழிக்கப்பட்டது.”

“எல்லா கடல் தலைவர்களும், மாலுமிகளும், கப்பற் பயணிகளும், கடலில் சம்பாதித்தவர்களும் பாபிலோனை விட்டு விலகி நின்றனர். 18 அவள் எரியும் புகையைக் கண்டனர். அவர்கள் உரத்த குரலில், ‘இது போன்ற ஒரு மகா நகரம் எங்கேனும் உண்டா?’ என்று கேட்டனர். 19 தங்கள் தலைமேல் புழுதியைப் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் அழுது துக்கப்பட்டார்கள். அவர்கள் சத்தமாய்க் கூறினார்கள்:

“பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது!
    கடலில் சொந்தக் கப்பல்களுள்ள அனைவரும் அவளது செல்வத்தால் பணக்காரர்கள் ஆனார்கள்!
    ஆனால் அவளோ ஒரு மணிநேரத்தில் அழிந்து போனாள்!
20 பரலோகமே! இதற்காக மகிழ்ச்சியோடிரு.
    தேவனுடைய பரிசுத்தமான மக்களே!
    அப்போஸ்தலர்களே, தீர்க்கதரிசிகளே மகிழ்ச்சி அடையுங்கள்!
அவள் உங்களுக்குச் செய்த கேடுகளுக்காக தேவன் அவளைத் தண்டித்துவிட்டார்.”

21 அப்போது சக்திமிக்க தூதன் ஒருவன் ஒரு பெரும் பாறையைத் தூக்கி வந்தான். அது ஒரு பெரிய எந்திரக்கல்லைப்போல இருந்தது. கடலில் அப்பாறையைப் போட்டு விட்டு தூதன் சொன்னான்:

“இவ்வாறுதான் பாபிலோன் நகரமும் தூக்கி எறியப்படும்.
    அந்நகரம் மீண்டும் ஒருக்காலும் காணப்படாமல் போகும்.
22 சுரமண்டலங்களையும் மற்ற இசைக் கருவிகளையும் நாதசுரங்களையும் எக்காளங்களையும் மக்கள் வாசித்து எழுப்பும் இசை ஒருபோதும் இனி உன்னிடத்தில் கேட்காது.
எந்தத் துறையின் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படமாட்டான்.
எந்திரங்களின் ஓசை இனி உன்னிடம் கேட்கப்படுவதில்லை.
23 இனி விளக்குகளின் ஒளி உன்னிடம் பிரகாசிக்காது.
மணமகன் மணமகள் ஆகியோரின் சத்தங்கள் இனி உன்னிடம் கேட்காது.
உன் வியாபாரிகள் உலகில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.
    உலக நாடுகள் எல்லாம் உன் மாயத்தால் மோசம் செய்யப்பட்டன.
24 தீர்க்கதரிசிகள், தேவனுடைய பரிசுத்த மக்கள் மற்றும் பூமியின்மேல் கொல்லப்பட்டிருக்கிற மக்கள் அனைவருடையதுமான இரத்தத்தால்
    அவள் குற்ற உணர்வோடு இருக்கிறாள்.”

சகரியா 14

நியாயத்தீர்ப்பு நாள்

14 பார், கர்த்தருக்கு நியாயந்தீர்க்க சிறப்பான நாள் இருக்கிறது. நீங்கள் அள்ளி வந்த செல்வங்கள் உங்கள் நகரில் பங்கிடப்படும். நான் எல்லா தேசங்களையும் எருசலேமிற்கு எதிராகப் போரிட கூட்டுவேன். அவர்கள் நகரைக் கைப்பற்றி வீடுகளை அழிப்பார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். ஜனங்களின் பாதிபேர் கைதிகளாக கொண்டுப் போகப்படுவார்கள். ஆனால் மீதியுள்ளவர்கள், நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படமாட்டார்கள். பின்னர் கர்த்தர் அந்நாடுகளோடு போரிடச் செய்வார். இது உண்மையான போராக இருக்கும். அந்நேரத்தில், அவர் எருசேலேமிற்கு கிழக்கே உள்ள ஒலிவ மலைமேல் நிற்பார். ஒலிவமலை பிளக்கும். அதன் ஒரு பகுதி வடக்குக்கும் மற்றொரு பகுதி தெற்கிற்கும் நகரும். ஒரு ஆழமான பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து மேற்காக திறந்துக்கொள்ளும். அம்மலைப் பள்ளத்தாக்கு உங்களை நெருங்க நெருங்க நீங்கள் தப்பி ஓட முயல்வீர்கள். நீங்கள் யூதாவின் அரசனான உசியாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பயந்து ஓடியதுபோன்று ஓடுவீர்கள். ஆனால் எனது தேவனாகிய கர்த்தர் வருவார். அவரோடு அவரது பரிசுத்தமானவர்களும் வருவார்கள்.

6-7 அது மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். அங்கு வெளிச்சமும், குளிரும், மப்பும் இருக்கிறது. கர்த்தர் மட்டுமே அந்த நாளை அறிவார். ஆனால் அங்கே இரவோ, பகலோ இருக்காது. பின்னர், வழக்கமாக இருள் வரும் நேரத்தில் இன்னும் வெளிச்சம் இருக்கும். அந்நேரத்தில், எருசலேமிலிருந்து தொடர்ந்து தண்ணீர் பாயும். அந்த தண்ணீரோடை இரண்டாகப் பிரிந்து ஒன்று கிழக்காகவும், இன்னொன்று மேற்கே மத்தியதரைக் கடலுக்கும் பாயும். இது ஆண்டு முழுவதும் கோடைக் காலத்திலும், மழைகாலத்திலும் பாய்ந்துகொண்டிருக்கும் அந்நேரத்தில் உலகம் முழுவதற்கும் கர்த்தரே அரசராக இருப்பார். கர்த்தர் ஒருவரே, அவரது நாமம் ஒன்றே. 10 அந்நேரத்தில், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் அரபா பாலைவனமாக காலியாக இருக்கும். நாடானது கேபா தொடங்கி எருசலேமிற்கு தெற்கேயுள்ள ரிம்மோன் வரைக்கும் பாலைவனமாகும். ஆனால் எருசலேம் நகரம் முழுவதும் மீண்டும் கட்டப்படும். பென்யமீன் வாசல் தொடங்கி முதல்வாசல் (மூலை வாசல்) வரைக்கும் அனானெயேல் கோபுரம் தொடங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள் வரை குடியேற்றப்பட்டிருக்கும். 11 ஜனங்கள் அங்கே வாழப்போவார்கள். இனி மேல் அவர்களை எந்தப் பகைவரும் அழிக்க வரமாட்டார்கள். எருசலேம் பாதுகாப்பாக இருக்கும்.

12 ஆனால் எருசலேமிற்கு எதிராக போரிட்ட நாடுகளை கர்த்தர் தண்டிப்பார். அவர்களுக்குப் பயங்கரமான நோய் ஏற்பட காரணமாக இருப்பார். அங்கு ஜனங்கள் இன்னும் நின்றுகொண்டிருக்கும்போதே அவர்களின் தோல் அழுகும். அவர்களின் கண்கள் இமைக்குள்ளும் நாக்குகள் வாய்க்குள்ளும் அழுகிப் போகும். 13-15 அந்தப் பயங்கரமான நோய் எதிரியின் கூடாரத்தில் இருக்கும். அவர்களின் குதிரைகள் கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் எல்லாம் அந்நோயால் பீடிக்கப்படும்.

அந்நேரத்தில், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு உண்மையில் பயப்படுவார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பிடித்து பற்றிக்கொண்டு சண்டையிடுவார்கள். யூதாவின் ஜனங்கள் எருசலேமில் போரிடுவார்கள். ஆனால், அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து செல்வத்தைப் பெறுவார்கள். அவர்கள் மிகுதியாக பொன், வெள்ளி, ஆடை ஆகியவற்றைப் பெறுவார்கள். 16 எருசலேமில் போரிட வந்த ஜனங்களில் சிலர் பிழைப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அரசனான சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதிட வருவார்கள். அவர்கள் அடைக்கல கூடாரப் பண்டிகையை கொண்டாட வருவார்கள். 17 பூமியிலுள்ள எந்த ஒரு குடும்பத்திலுள்ள ஜனங்களும் அரசனை, சர்வ வல்மையுள்ள கர்த்தரை தொழுதிட எருசலேம் செல்லாமல் இருந்தால், பிறகு கர்த்தர் அவர்கள் மழை பெறாமல் போகும்படிச் செய்வார். 18 எகிப்திலுள்ள குடும்பத்தார்கள் எவரும் அடைக்கல கூடார பண்டிகை கொண்டாட வராமல் போனால், பின்னர் கர்த்தர் பகைவரது நாடுகளுக்குக் கொடுத்த நோயை அவர்கள் பெறும்படிச் செய்வார். 19 அது தான் எகிப்துக்கான தண்டனையாக இருக்கும். அடைக்கல கூடார பண்டிகையைக் கொண்டாட வராத மற்ற நாடுகளுக்கும் இதுதான் தண்டனை.

20 அந்நேரத்தில், அனைத்தும் தேவனுக்கு உரியதாகும். குதிரைகளின் மணிகளில் கூட கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று பொறிக்கப்பட்டிருக்கும். கர்த்தருடைய ஆலயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பானைகளும் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கும் பாத்திரங்களைப் போன்று முக்கியமானதாக இருக்கும். 21 உண்மையில், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள ஒவ்வொரு பானைக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு “பரிசுத்தம்” என்ற முத்திரையிருக்கும். கர்த்தருக்கு தகன பலிகளை செலுத்தும் ஒவ்வொருவரும் வந்து அவற்றில் சமைத்து உண்ண முடியும்.

அந்நேரத்தில், அங்கு வியாபாரிகள் எவரும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் பொருட்களை விற்கவும் வாங்கவும்மாட்டார்கள்.

யோவான் 17

சீஷர்களுக்காகப் பிரார்த்தனை

17 இவற்றையெல்லாம் இயேசு சொன்ன பிறகு, அவர் தனது கண்களால் வானத்தை (பரலோகத்தை) அண்ணாந்து பார்த்தார். “பிதாவே, நேரம் வந்துவிட்டது. உமது குமாரனுக்கு மகிமையைத் தாரும். அதனால் உமது குமாரனும் உமக்கு மகிமையைத் தருவார். உமது குமாரன் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிரந்தர வாழ்வைக் கொடுக்கும்படியாக அனைத்து மக்கள் மீதும் அவருக்கு அதிகாரம் கொடுத்தீர். அந்த மனிதர்கள், நீர்தான் உண்மையான தேவன் என்பதையும் உம்மால் அனுப்பப்பட்டவர் இயேசு கிறிஸ்து என்பதையும் தெரிந்துகொள்வார்கள். இவ்வாறு தெரிந்துகொள்வதுதான் நிரந்தரமான வாழ்க்கை. நான் செய்யுமாறு நீர் கொடுத்த வேலைகளை நான் முடித்துவிட்டேன். நான் பூமியில் உம்மை மகிமைப்படுத்தினேன். இப்பொழுது, உம்மோடு இருக்கும் மகிமையைத் தாரும். உலகம் உண்டாவதற்கு முன்பிருந்தே உம்மோடு நான் கொண்டிருந்த மகிமையைத் தாரும்.

“உலகத்திலிருந்து சில ஆட்களை நீர் எனக்குக் கொடுத்தீர். நான் அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள். அவர்களை எனக்குத் தந்தீர். அவர்கள் உமது போதனைக்குக் கீழ்ப்படிந்தார்கள். நீர் எனக்குத் தந்தவையெல்லாம் உம்மிடமிருந்து வந்தவை என்று அவர்கள் இப்போது தெரிந்துகொண்டனர். நீர் எனக்குக் கொடுத்த போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். அவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். உண்மையாகவே நான் உம்மிடமிருந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். நீர் என்னை அனுப்பிவைத்ததையும் அவர்கள் நம்புகிறார்கள். நான் அவர்களுக்காக இப்பொழுது வேண்டுகிறேன். நான் உலகில் உள்ள மக்களுக்காக வேண்டிக்கொள்ளவில்லை. ஆனால் நீர் எனக்குக் கொடுத்த மக்களுக்காக வேண்டுதல் செய்கிறேன். ஏனென்றால் அவர்கள் உம்முடையவர்கள். 10 என்னுடையவை எல்லாம் உம்முடையவை. உம்முடையவை எல்லாம் என்னுடையவை. அவர்களில் நான் மகிமை அடைந்திருக்கிறேன்.

11 “இப்பொழுது நான் உம்மிடத்தில் வந்துகொண்டிருக்கிறேன். நான் இனிமேல் உலகத்தில் இருக்கமாட்டேன். ஆனால் இவர்கள் இப்பொழுதும் உலகத்தில் தான் இருக்கிறார்கள். பரிசுத்த பிதாவே, உமது பெயரின் வல்லமையினால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கச் செய்யும். இதன் மூலம் நீரும் நானும் ஒன்றாக இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாயிருப்பார்கள். 12 நான் அவர்களோடு இருந்தபோது அவர்களைப் பாதுகாத்து வந்தேன். நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன். அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான். (யூதாஸ்) அவன் இழக்கப்படுவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஏற்கெனவே வேதவாக்கியங்களில் எழுதப்பட்டவை நிறைவேறும்படியே அவன் இழக்கப்பட்டான்.

13 “நான் இப்பொழுது உம்மிடம் வருகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் நான் உலகில் இருக்கும்போதே வேண்டிக்கொள்கிறேன். நான் இவற்றையெல்லாம் கூறுகிறேன். ஆதலால் அவர்கள் எனது மகிழ்ச்சியைப் பெறமுடியும். அவர்கள் எனது முழுமையான மகிழ்ச்சியையும் பெறவேண்டும் என நான் விரும்புகிறேன். 14 உமது போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உலகம் அவர்களை வெறுக்கிறது. ஏனென்றால் அவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். நானும் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்.

15 “அவர்களை உலகத்திலிருந்து வெளியே எடுக்கும்படி நான் உம்மை வேண்டிக்கொள்ளவில்லை. அவர்களை நீர் தீமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன். 16 நான் இந்த உலகத்தை சாராதது போலவே அவர்களும் இந்த உலகத்தைச் சாராதவர்களாக இருக்கிறார்கள். 17 உம்முடைய உண்மையின் மூலம் உமது சேவைக்கு அவர்களைத் தயார்படுத்தும். உமது போதனையே உண்மை. 18 நீர் என்னை உலகத்துக்கு அனுப்பிவைத்தீர். அது போலவே நானும் அவர்களை உலகத்துக்குள் அனுப்புகிறேன். 19 நான் சேவைக்காக என்னைத் தயார் செய்து கொண்டேன். நான் இதனை அவர்களுக்காகவே செய்கிறேன். எனவே, அவர்களும் உமது சேவைக்காக உண்மையில் தம்மைத் தயார் செய்துகொள்வார்கள்.

20 “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். இவர்களுக்காக மட்டுமல்ல இவர்களுடைய உபதேசங்களால் என்மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். 21 பிதாவே, என்னில் நம்பிக்கை வைக்கிற அனைவரும் ஒன்றாயிருப்பதற்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். நீர் என்னில் இருக்கிறீர். நான் உம்மில் இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கும்படிக்கும் நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். ஆகையால் இவ்வுலகம் நீர் என்னை அனுப்பினதில் நம்பிக்கைகொள்ளும். 22 நீர் எனக்குத் தந்த மகிமையை நான் தருவதால் அவர்கள் ஒன்றாக இருப்பார்கள். நானும் நீரும் ஒன்றாக இருப்பது போல, 23 நான் அவர்களில் இருப்பேன்; நீர் என்னில் இருப்பீர். ஆக அனைவரும் ஒன்றாக இருப்பார்கள். பிறகு இந்த உலகம் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொள்ளும். நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோலவே நீர் அவர்களிடமும் அன்பாக இருக்கிறீர் என்பதையும் உலகம் தெரிந்து கொள்ளும்.

24 “பிதாவே! நீர் எனக்குத் தந்த இவர்கள், நான் எங்கே இருந்தாலும் என்னுடனே இருக்குமாறு விரும்புகிறேன். அவர்கள் என் மகிமையைக் காண வேண்டும் எனவும் விரும்புகிறேன். உலகம் உண்டாவதற்கு முன்னரே நீர் என்னுடன் அன்பாக இருந்தீர். இதனால் எனக்கு நீர் மகிமை தந்தீர். 25 பிதாவே! நீர் நல்லவராக இருக்கிறீர். இந்த உலகம் உம்மை அறிந்துகொள்ளவில்லை. ஆனால் உம்மை நான் அறிந்துகொண்டுள்ளேன். இந்த மக்கள் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொண்டுள்ளனர். 26 உம்மை நான் அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். இன்னும் வெளிப்படுத்துவேன். பிறகு நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோன்று அவர்களும் அன்பாக இருப்பார்கள். நானும் அவர்களுக்குள் வாழ்வேன்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center