M’Cheyne Bible Reading Plan
எசேக்கியா அரசன் செய்த முன்னேற்றங்கள்
31 பஸ்கா பண்டிகை முடிவடைந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமிலிருந்து பஸ்கா முடிந்ததும் யூதாவின் ஊர்களுக்கு வெளியேறினார்கள். அந்த நகரங்களில் இருந்த பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களை நொறுக்கினார்கள். அவை பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதற்கான இடங்களாயிருந்தன. அவர்கள் விக்கிரகத் தோப்புகளை அழித்தனர். அதோடு மேடைகளையும் பலிபீடங்களையும் அழித்தனர். யூதா மற்றும் பென்யமீன் நாட்டில் தொழுகை இடங்களையும் பலி பீடங்களையும் அழித்தனர். ஜனங்கள் இல்லத்திலேயே எப்பிராயீம் மற்றும் மனாசே நாடுகளிலும் பொய்யான தெய்வங்களை தொழுதுகொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட எல்லாப் பொருட்களையும் அழிக்கும்வரைக்கும் ஜனங்கள் இவற்றைச் செய்தார்கள். பின்னர் எல்லா இஸ்ரவேலர்களும் தங்கள் ஊர்களிலுள்ள வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.
2 ஆசாரியர்களும், லேவியர்களும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் சிறப்பான பணி இருந்தது. எனவே எசேக்கியா அரசன் இக்குழுவினர்களிடம் தம் வேலைகளை மீண்டும் செய்யுமாறு கூறினான். எனவே லேவியர்களும், ஆசாரியர்களும் தகனபலிகள் மற்றும் சமாதானப் பலிகள் கொடுக்கும் வேலையைச் செய்தனர். கர்த்தருடைய ஆலயத்தின் வாசலில் தேவனைத் துதித்துப் பாடுவது என்றும் ஆலயத்தில் சேவைசெய்வது என்றும் நியமித்தான் அரசன். 3 எசேக்கியா தனது சொந்த மிருகங்களையும் தகனபலி இடுவதற்காகத் தந்தான். இம்மிருகங்கள் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் செலுத்தப்படும் தகன பலிகளுக்குப் பயன்பட்டன. இம்மிருகங்கள் ஓய்வு நாட்களிலும் பிறைச் சந்திரநாள் பண்டிகைகளிலும் மற்ற சிறப்புக் கூட்டங்களிலும் சர்வாங்க தகன பலிகள் செலுத்த பயன்பட்டன. இவை கர்த்தருடைய சட்டத்தில் எழுதப்பட்டபடியே நடந்தேறின.
4 ஜனங்கள் தம் அறுவடையிலும் மற்ற பொருட்களிலும் ஒரு பகுதியை ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. எனவே எசேக்கியா அரசன் எருசலேம் நகர ஜனங்களிடம் தம் பங்கை அளிக்குமாறு கட்டளையிட்டான். இவ்வாறு ஆசாரியர்களும், லேவியர்களும் தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சட்ட நெறிகளின்படி விதிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு செய்வதிலேயே தன் வாழ்நாளைச் செலவு செய்தனர். 5 நாடு முழுவதிலும் உள்ள ஜனங்கள் இந்த கட்டளையைக் கேள்விப்பட்டார்கள். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் முதல் பஸ்காவுக்காக தமது அறுவடை, திராட்சை, எண்ணெய், தேன், வயலில் விளைந்த மற்றபொருட்கள் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தனர். 6 யூதாவின் ஊர்களில் வசித்த இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஆண்கள் தமது கால் நடைகளிலும் செம்மறி ஆடுகளிலும் பத்தில் ஒரு பங்கைக் கொண்டு வந்தனர். மேலும் கர்த்தருக்காக மட்டும் என்று ஒரு சிறப்பான இடத்தில் வைத்திருந்த பொருட்களில் பத்தில் ஒரு பங்கையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். இவை அனைத்தையும் இவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்குக் கொடுத்தனர். அவர்கள் இவற்றைக் குவியலாக வைத்தனர்.
7 இக்குவியல்களை அவர்கள் மூன்றாம் மாதத்தில் (மே/ஜுன்) தொடங்கி ஏழாவது மாதத்தில் (செப்டம்பர்/அக்டோபர்) முடித்தனர். 8 எசேக்கியாவும் தலைவர்களும் வந்த போது தொகுக்கப்பட்ட குவியல்களைக் கண்டனர். அவர்கள் கர்த்தரையும் அவரது ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்களையும் போற்றினார்கள்.
9 பிறகு எசேக்கியா ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் குவியல்களைப்பற்றி விசாரித்தான். 10 சாதோக்கின் குடும்பத்தை சேர்ந்த தலைமை ஆசாரியனாகிய அசரியா என்பவன் எசேக்கியா அரசனிடம், “ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் காணிக்கை பொருட்களைக் கொண்டுவரத் தொடங்கிய நாள் முதல் எங்களுக்கு உணவு ஏராளமாய் உள்ளது. நாங்கள் எவ்வளவுதான் அதிகமாக தின்றாலும் ஏராளமாக மிகுதியாக உள்ளது. கர்த்தர் உண்மையாகவே தம் ஜனங்களை ஆசீர்வதித்துள்ளார். அதனால் தான் இவ்வளவு மீதியாக உள்ளது.” என்று பதில் சொன்னான்.
11 பின்னர் எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்காக பண்டகச்சாலைகளை அமைக்க கட்டளையிட்டான். அவ்வாறே ஆயிற்று. 12 பிறகு ஆசாரியர்கள் காணிக்கைகளையும், பத்தில் ஒரு பாகத்தையும் கர்த்தருக்கு மட்டுமே கொடுப்பதற்கென்று இருந்த மற்றப் பொருட்களையும் எடுத்து வைத்தார்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்தும் ஆலயத்தின் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டது. இவற்றிற்கு பொறுப்பாளனாக கொனனியா என்ற லேவியன் இருந்தான். அவனது தம்பியாகிய சிமேயு இரண்டாவது நிலை பொறுப்பாளனாக இருந்தான். 13 கொனனியாவும் அவனது தம்பி சிமேயியும் யெகியேல், அசசியா, நாகாத், ஆசகேல், யெரிமோத், யோசபாத், ஏலியேல், இஸ்மகியா, மாகாத், பெனாயா ஆகியோர் மேற்பார்வை செய்தனர். எசேக்கியா அரசனும் அசரியா எனும் தேவனுடைய ஆலய அதிகாரியும் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
14 தேவனுக்கு ஜனங்கள் தாராளமாய்க் கொடுக்கப்பட்ட காணிக்கைகளுக்குக் கோரே பொறுப்பாளியாக இருந்தான். கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்ட காணிக்கைகளைத் திருப்பி விநியோகிக்கும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. கோரே கிழக்கு வாசலுக்குக் காவல்காரனாக இருந்தான். லேவியனாகிய இம்னா என்பவன் அவனது தந்தை ஆவான். 15 ஏதோன், மின்யமீன், யெசுவா, செமாயா, அமரியா, செக்கனியா ஆகியோர் கோரேவுக்கு உதவியாக இருந்தனர். ஆசாரியர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நகரங்களில் இவர்கள் உண்மையுடன் சேவைசெய்தனர். இவர்கள் வசூலித்த பொருட்களைத் தம் உறவினர்களுக்கும், ஒவ்வொரு ஆசாரியர் குழுவுக்கும் கொடுத்தார்கள். அதே அளவு பொருட்களை அவன் முக்கியம் உள்ளவர்களுக்கும், முக்கியம் இல்லாதவர்களுக்கும் கொடுத்தான்.
16 இவர்கள் வசூலிக்கப்பட்ட பொருட்களை, லேவியர் குடும்ப வரலாறுகளில் தம் பெயர்களைக் கொண்டுள்ள மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட ஆண்களுக்குக் கொடுத்தான். இந்த ஆடவர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பிலுள்ள வேலைகளைச் செய்வதற்காக தினசரி சேவைக்காகக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையவேண்டியிருந்தது. ஒவ்வொரு லேவியக் குழுவினருக்கும் அவர்களுக்கென்று பொறுப்புகள் இருந்தன. 17 வசூலில் ஒரு குறிப்பிட்டப் பங்கானது ஆசாரியர்களுக்கும் கொடுக்கப்பட்டது. குடும்ப வரலாறுகளில் பட்டியலின்படி வரிசைக்கிரமமாக ஒவ்வொரு குடும்பமும் இப்படி கொடுத்தது. இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட லேவியர்களுக்கு பங்கு கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் அவரவரது குழுவின் படியும் பொறுப்பின்படியும் கொடுக்கப்பட்டது. 18 லேவியர்களின் குழந்தைகள், மனைவியர், மகன்கள், மகள்கள் ஆகியோரும் தங்கள் பங்கினைப் பெற்றனர். இது அனைத்து லேவியர்களுக்கும் அவர் தம் குடும்ப வரலாற்று பட்டியலின்படியே கொடுக்கப்பட்டது. ஏனென்றால் லேவியர்கள் நம்பிக்கை உள்ளவர்களாகவும் எப்பொழுதும் தம்மை பரிசுத்தமாக வைத்துக்கொள்பவர்களாகவும் சேவைக்குத் தயாரானவர்களாகவும் இருந்தனர்.
19 ஆசாரியர்களாகிய ஆரோனின் சந்ததியினர்களில் சிலர் லேவியர்கள் குடியிருக்கிற நகரங்களின் அருகில் வயல்களை வைத்திருந்தனர். நகரங்களில் ஆரோனின் சந்ததியினர் மேலும் சிலர் வாழ்ந்தனர். இவர்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து இந்த ஆரோனின் சந்ததியினருக்கும் அவர்களுக்குரிய பங்குப் பொருள்கள் கொடுக்கப்பட்டது. லேவியர்களில் அனைத்து ஆண்பிள்ளைகளுக்கும் அட்டவணையில் எழுதப்பட்டவர்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது.
20 யூதா முழுவதிலும் இத்தகைய நல்லச் செயல்களை எசேக்கியா அரசன் செய்தான். அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு முன் எது நல்லதோ, எது சரியானதோ, எது உண்மையுள்ளதோ அவற்றைச் செய்தான். 21 அவன் தொடங்கிய அனைத்து வேலைகளிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். தேவனுடைய ஆலய சேவையிலும் சட்டத்திற்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிற செயலிலும் தேவனைப் பின்பற்றும் முறையிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். எசேக்கியா இவற்றையெல்லாம் தன் முழு இருதயத்தோடு செய்தான்.
மிருகத்தின்மேல் பெண்மணி
17 ஏழு தூதர்களில் ஒரு தூதன் வந்து என்னிடம் பேசினான். ஏழு கிண்ணம் வைத்திருந்த ஏழு தூதர்களில் இத்தூதனும் ஒருவன். அவன், “வா. ஒரு பிரசித்தி பெற்ற வேசிக்கு வரப்போகும் தண்டனையை உனக்குக் காட்டுவேன். அவள் திரளான தண்ணீர்களின்மேல் உட்கார்ந்திருக்கிறவள். 2 பூமியில் உள்ள அரசர்கள் அந்த வேசியோடு பாவம் செய்தார்கள். அவளது வேசித்தனமாகிய மதுவால் உலகில் உள்ள மக்கள் நிலைதடுமாறியவர்கள் ஆனார்கள்” என்றான்.
3 ஆவியானவரால் என்னைப் பாலைவனத்துக்கு அத்தூதன் கொண்டுபோனான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மிருகத்தின்மேல் தீய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. 4 இரத்த வண்ணத்தில் சிவப்பும் இரத்தாம்பரமுமான ஆடை அந்தப் பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டது. அவள் பொன்னாலும் நகைகளாலும், முத்துக்களாலும் தன்னை அலங்கரித்திருந்தாள். அவள் கையில் ஒரு பொன் கோப்பையை வைத்திருந்தாள். இக்கோப்பை அருவருப்பாலும், வேசித்தனமாகிய அசிங்கத்தாலும் நிறைந்திருந்தது. 5 அவளது நெற்றியில் அவளுக்குரிய பட்டப்பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பட்டப் பெயருக்கு ஒரு மறைபொருளும் உண்டு. எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்:
மகா பாபிலோன் வேசிகளுக்கும்
பூமியில் உள்ள
அருவருப்புகளுக்கும் தாய்!
6 அப்பெண் குடித்திருந்ததை நான் பார்த்தேன். அவள் தேவனின் பரிசுத்தமான மக்களின் இரத்தத்தாலும், இயேசுவின் சாட்சிகளின் இரத்தத்தாலும் நிலைதடுமாறி இருந்தாள்.
அவளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. 7 அப்போது தூதன் என்னைப் பார்த்து, “ஏன் அதிசயப்படுகிறாய்? நான் இவளுடைய இரகசியத்தையும், இவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் கொண்ட அம்மிருகத்தின் இரகசியத்தையும் உனக்குக் கூறுகிறேன். 8 நீ கண்ட மிருகம் முன்பொரு காலத்தில் உயிருடன் இருந்தது. ஆனால் இப்போது அது உயிருடன் இல்லை. அது உயிரடைந்து அடித்தளமற்ற பாதாளத்தில் இருந்து ஏறி வந்து அழிவை நோக்கிப் போகிறது. இந்த உலகத்தில் வாழும் மக்கள் இம்மிருகத்தைக் காணும்போது ஆச்சரியப்படுவார்கள். காரணம் இது ஒரு காலத்தில் உயிரோடு இருந்தது பின் இராமல் போனது. ஆனால், மீண்டும் வரப்போகிறது. இம்மக்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் உலகம் தொடங்கின நாள் முதல் எழுதப்படாமல் இருக்கிறது.
9 “இதைப் புரிந்துகொள்ள உனக்கு ஞானமுள்ள மனம் வேண்டும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்துகொண்டிருக்கிற ஏழு மலைகள் ஆகும். அவை ஏழு அரசர்களுமாகும். 10 இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் இன்னும் வரவில்லை. அவன் வந்த பிறகு கொஞ்ச காலம் தான் உயிரோடு இருப்பான். 11 இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாம் அரசனாவான். அவன் அந்த ஏழில் ஒருவனாக இருந்து அழிவை நோக்கிச் செல்வான்.
12 “நீ பார்த்த பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களாகும். இந்தப் பத்து பேரும் இன்னும் தம் இராஜ்யங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் இந்த மிருகத்துடன் சேர்ந்து ஒரு மணி நேரம் ஆள்வதற்கு உரிய அதிகாரத்தைப் பெற்றுள்ளார்கள். 13 இவர்கள் ஒரே நோக்கம் உடையவர்கள். அவர்கள் தம் சக்தியையும் அதிகாரத்தையும் அந்த மிருகத்துக்குக் கொடுப்பார்கள். 14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடன் போர் செய்வார்கள். ஆனால் இவர்களை ஆட்டுக்குட்டியானவர் தோற்கடிப்பார். ஏனென்றால் அவர் கர்த்தர்களின் கர்த்தர், அரசர்களின் அரசர். அவர் தாம் அழைத்தவர்களாகிய தம்முடைய தேர்ந்தெடுத்தவர்களோடும், நம்பிக்கைக்குரியவர்களோடும் கூட அவர்களைத் தோற்கடிப்பார்” என்று சொன்னான்.
15 பிறகு அந்தத் தூதன் என்னிடம், “அந்த வேசி உட்கார்ந்திருக்கிற நீர்நிலைகளைப் பார்த்தாய் அல்லவா. அந்த நீர்நிலைகள் தான் உலகத்தில் உள்ள மக்கள், குடிகள், தேசங்கள், மொழிகளாக இருக்கின்றன. 16 நீ பார்த்த அந்த மிருகமும் அதன் பத்துக் கொம்புகளும் அந்த வேசியை வெறுப்பர். அவளிடம் உள்ள அனைத்தையும் அவர்கள் பறித்துக்கொண்டு அவளை நிர்வாணமாக விட்டுவிடுவர். அவர்கள் அவளது உடலைத் தின்பார்கள். அவர்கள் அவளை நெருப்பால் சுட்டெரிப்பார்கள். 17 தன் குறிக்கோளை நிறைவேற்ற, அந்த பத்துக் கொம்புகளும் விருப்பம் கொள்ள தேவன் காரணமானார். ஆளுவதற்குரிய அவர்கள் அதிகாரத்தை அம்மிருகத்துக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டனர். தேவன் சொன்னவை நிறைவேறும் காலம்வரை அவர்கள் ஆளுவார்கள். 18 பூமியின் அரசர்கள் மீது அரசாள்கிற மகா நகரமானது நீ பார்த்த பெண்ணாகும்” என்று சொன்னான்.
இனி கள்ளத் தீர்க்கதரிசிகள் இருக்கமாட்டார்கள்
2 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “அந்நேரத்தில் நான் பூமியிலுள்ள அனைத்து விக்கிரகங்களையும் நீக்குவேன். ஜனங்கள் அவற்றின் பெயர்களைக் கூட நினைவில் வைத்திருக்கமாட்டார்கள். நான் பூமியிலிருந்து கள்ளத்தீர்க்கதரிசிகளையும், சுத்தமற்ற ஆவிகளையும் நீக்குவேன். 3 ஒருவன் தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொன்னால் பின்னர் அவன் தண்டிக்கப்படுவான். அவன் பெற்றோர்கள் அவனது சொந்த தாயும் தந்தையும் அவனிடம், ‘நீ கர்த்தர் நாமத்தால் பொய் சொன்னாய். எனவே நீ மரிக்க வேண்டும்!’ என்று சொல்வார்கள். அவனது சொந்த தாயும் தந்தையும் அவனைத் தீர்க்கதரிசனம் சொன்னதற்காகக் குத்திக்கொல்வார்கள். 4 அந்நேரத்தில் தீர்க்கதரிசிகள் தமது தரிசனங்களுக்காவும், தீர்க்கதரிசனங்களுக்காகவும் வெட்கப்படுவார்கள். அவர்கள் தாம் தீர்க்கதரிசிகள் என்பதைக் காட்டும் முரட்டு ஆடையை அணியமாட்டார்கள். கள்ளத் தீர்க்கதரிசனங்களால் ஜனங்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் அவ்வாடைகளை அணிவதில்லை. 5 அந்த ஜனங்கள் சொல்வார்கள்: ‘நான் தீர்க்கதரிசி அல்ல. நான் ஒரு விவசாயி. நான் குழந்தைப் பருவத்திலிருந்தே விவசாய வேலையைச் செய்து வருகிறேன்.’ 6 ஆனால் மற்ற ஜனங்களோ, ‘உங்கள் கைகளில் ஏன் இந்த காயங்கள்?’ என்று கேட்பர். அவனோ, ‘நான் என் நண்பனின் வீட்டில் அடிக்கப்பட்டேன்’” என்பான்.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “வாளே, மேய்ப்பனைத் தாக்கு. என் நண்பனைத் தாக்கும் மேய்ப்பனைத் தாக்கு. அந்த மந்தை ஓடிச் செல்லும். நான் அந்தச் சிறியவர்களையும் தண்டிப்பேன். 8 இந்த நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் காயப்பட்டு மரிப்பார்கள். ஆனால் மூன்றில் ஒரு பங்கினர் பிழைப்பார்கள். 9 பின்னர் நான் மீதியானவர்களைச் சோதிப்பேன். நான் அவர்களுக்கு அநேக துன்பங்களைக் கொடுப்பேன். அத்துன்பங்கள் வெள்ளியைச் சுத்தமான வெள்ளி என்று நிரூபிக்கும் நெருப்பைப் போன்றிருக்கும். ஒருவன் தங்கத்தைச் சோதிப்பது போல நான் அவர்களைச் சோதிப்பேன். பின்னர், அவர்கள் என்னை உதவிக்காக வேண்டுவார்கள். நான் அவர்களுக்குப் பதிலுரைப்பேன். நான், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன். அவர்கள், ‘கர்த்தர் எங்கள் தேவன்’” என்பார்கள்.
16 “நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதற்காக இவைகளை நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். 2 மக்கள் தங்கள் ஆலயங்களில் இருந்து உங்களை வெளியேற்றுவர். மேலும் உங்களைக் கொல்பவன் தேவனுக்கு சேவை செய்கிறவன் என்று மக்கள் எண்ணும்படியான காலம் வரும். 3 அவர்கள் பிதாவைப்பற்றியும் என்னைப்பற்றியும் அறிந்துகொள்ளாததால் இப்படிச் செய்வார்கள். 4 நான் இப்பொழுது இவற்றைப்பற்றியெல்லாம் சொல்லிவிட்டேன். எனவே இவை நிகழும் காலம் வரும்போது, நான் ஏற்கெனவே உங்களுக்கு எச்சரித்திருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொள்வீர்கள்.
பரிசுத்த ஆவியானவரின் பணிகள்
“நான் உங்களோடு இருந்தேன். எனவே தொடக்கத்தில் இவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. 5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை. 6 எனினும் நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிரம்பிவிட்டது. 7 ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்.
8 “அவர் வரும்போது இவற்றைப்பற்றிய உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம்பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவுபற்றியும், நியாயத்தீர்ப்புபற்றியும் விளக்குவார். 9 அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார். 10 அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். 11 நியாயத்தீர்ப்புபற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார். ஏனென்றால் இந்த உலகை ஆளுகிற சாத்தான் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்.
12 “உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 14 நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.”
துயரம் மகிழ்ச்சியாக மாறும்
16 பின்னும் இயேசு “இன்னும் கொஞ்ச காலத்திற்குப்பின் என்னை நீங்கள் பார்க்க முடியாது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்” என்றார்.
17 இயேசுவின் சீஷர்களில் சிலர் ஒருவருக்கொருவர், “‘கொஞ்ச காலத்திற்குப்பின் பார்க்கமுடியாது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்’ என்றாரே, இயேசு எதைக் கருதி இவ்வாறு கூறுகிறார். ‘நான் பிதாவிடம் போகிறேன்’ என்று ஏன் கூறுகிறார். 18 ‘கொஞ்ச காலம்’ என்று கூறினாரே அதன் பொருள் என்ன? அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று பேசிக்கொண்டனர்.
19 சீஷர்கள் தன்னிடம் அதைப்பற்றிக் கேட்க விரும்புவதை இயேசு கவனித்தார். ஆகையால் இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறீர்கள்? நான், ‘இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு என்னைப் பார்க்க முடியாது. அப்புறம் கொஞ்ச காலத்திற்குப் பின்பு மீண்டும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று சொன்னேனே, அதைப் பற்றியா? 20 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அழுது துக்கப்படுவீர்கள். ஆனால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் துக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
21 “ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவளுக்கு வலி ஏற்படும். ஏனென்றால் அவளுக்குக் குறிப்பிட்டவேளை நெருங்கி இருக்கும். ஆனால் குழந்தை பிறந்ததும் அவள் தன் வலியை மறந்துவிடுவாள். குழந்தை இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். 22 உங்களுக்கும் இதைப்போலத்தான். இப்பொழுது நீங்கள் துயரமாக இருக்கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் உங்களைப் பார்ப்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எவராலும் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது. 23 அந்த நாளில் நீங்கள் என்னிடம் எதைப்பற்றியும் கேட்கமாட்டீர்கள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். என் பேரில் நீங்கள் எதைக் கேட்டாலும் என் பிதா உங்களுக்குத் தருவார். 24 இதுவரை நீங்கள் என்பேரால் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மகிழ்ச்சி முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும்.
உலகத்தின் மீது வெற்றி
25 “நான் இவற்றையெல்லாம் உங்களுக்கு மறை பொருளில் கூறியிருக்கிறேன். ஆனால் காலம் வரும். அப்போது நான் இவ்வாறு மறைபொருளில் பேசாமல் வெளிப்படையாகச் செய்திகளை அந்தப் பிதாவைப்பற்றிக் கூறுவேன். 26 அந்த நாளில் நீங்கள் பிதாவிடம் என்பேரில் உங்களுக்கானதைக் கேட்பீர்கள். நான் உங்களுக்காக என் பிதாவிடம் கேட்டுக்கொள்ளும் தேவை இருக்காது என்று சொல்கிறேன். 27 என் பிதா அவராகவே உங்களை நேசிக்கிறார். ஏனென்றால் நீங்கள் என்னிடம் அன்பாக இருந்தீர்கள். நான் தேவனிடம் இருந்து வந்ததாக நீங்கள் நம்பியிருந்தீர்கள். 28 நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்றார்.
29 பிறகு இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “நீர் இப்பொழுது எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறீர். புரிந்து கொள்வதற்குக் கடினமான வார்த்தைகளை நீர் பயன்படுத்தவில்லை. 30 உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்.
31 இயேசு அவர்களிடம், “எனவே நீங்கள் இப்போது நம்புகிறீர்கள். 32 என்னைக் கவனியுங்கள். நீங்கள் சிதறிப்போகிற வேளை இதோ நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிற்குப் போய் என்னை விட்டு விலகிப் போவீர்கள். அந்த நேரம் இதோ வந்துவிட்டது. நீங்கள் என்னை விட்டுப் போவீர்கள். நான் தனியே இருப்பேன். எனினும் நான் உண்மையில் தனித்திருக்கமாட்டேன். ஏனென்றால் என்னோடு என் பிதா இருக்கிறார்.
33 “என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.
2008 by World Bible Translation Center