Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 29

யூதாவின் அரசனான எசேக்கியா

29 எசேக்கியா அவனது 25 வது வயதில் அரசன் ஆனான். அவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் அபியாள். இவள் சகரியாவின் மகள். அவன் செய்யவேண்டு மென கர்த்தர் விரும்பியபடியே எசேக்கியா செயல்களைச் செய்து வந்தான். இவனது முற்பிதாவான தாவீது சரியானவை என்று எவற்றைச் செய்தானோ அவற்றையே இவனும் செய்துவந்தான்.

எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குக் கதவுகளைப் பொருத்தினான். அதனைப் பலமுள்ளதாக ஆக்கினான். எசேக்கியா மீண்டும் ஆலயத்தைத் திறந்தான். அவன் அரசனான முதல் ஆண்டின் முதல் மாதத்திலேயே இதனைச் செய்தான். 4-5 எசேக்கியா ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒரே மன்றத்தில் கூட்டினான். ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள திறந்தவெளி பிரகாரத்தில் அவர்களோடு கூட்டம் போட்டான். எசேக்கியா அவர்களிடம், “லேவியர்களே! நான் சொல்வதைக் கவனியுங்கள். பரிசுத்தமான சேவைக்கு உங்களைத் தயார் செய்துக்கொள்ளுங்கள். தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தையும் பரிசுத்த சேவைக்குரிய இடமாக ஆக்குங்கள். உங்கள் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவன் அவர். ஆலயத்திற்குச் சொந்தமில்லாத பொருட்களை அங்கிருந்து வெளியே எடுத்து விடுங்கள். அப்பொருட்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தமாட்டாது. நமது முற்பிதாக்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். தங்கள் முகங்களை கர்த்தருடைய ஆலயத்திலிருந்து திருப்பிக் கொண்டனர். அவர்கள் ஆலயக் கதவுகளை மூடிவிட்டனர். விளக்குகளை அணைத்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அவரது பரிசுத்தமான இடத்தில் நறுமணப் பொருட்கள் எரிப்பதையும் தகனபலியிடுவதையும் விட்டனர். எனவே, யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீது கர்த்தர் பெரும் கோபங்கொண்டார். கர்த்தர் அவர்களைத் தண்டித்தார். மற்றவர்கள் இதனைப் பார்த்து பயந்தனர். யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்குக் கர்த்தர் செய்தவற்றைப் பார்த்து திகைத்துவிட்டனர். அவர்கள் எருசலேம் ஜனங்களுக்காக வெறுப்புடனும் வெட்கத்துடனும் தலையை அசைத்தார்கள். இவையனைத்தும் உண்மை என்பது உங்களுக்குத் தெரியும். இவற்றை உங்களது கண்களாலேயே நீங்கள் பார்க்கலாம். அதனால்தான் நமது முற்பிதாக்கள் போரில் கொல்லப்பட்டனர். நமது மகன்களும், மகள்களும், மனைவியரும் சிறைபிடிக்கப்பட்டனர். 10 எனவே, இப்பொழுது நான், எசேக்கியா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள முடிவு செய்துவிட்டேன். பிறகு அவர் நம்மோடு மேற்கொண்டு கோபங்கொள்ளமாட்டார். 11 எனவே என் மகன்களே, சோம்பேறிகளாக இராதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். கர்த்தர் தனக்கு சேவைசெய்ய உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர், ஆலயத்தில் சேவைசெய்யவும் நறுமணப் பொருட்களை எரிக்கவும் உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்” என்று சொன்னான்.

12-14 வேலைசெய்ய ஆரம்பித்த லேவியர்களின் பட்டியல் இது:

கோரா குடும்பத்திலிருந்து அமாசாயின் மகனான மாகாத்து என்பவனும், அசரியாவின் மகன் யோவேல் என்பவனும்,

மெராரி குடும்பத்திலிருந்து அப்தியின் மகன் கீசும் என்பவனும் எகலேலின் மகன் அசரியா என்பவனும்,

கெர்சோனிய குடும்பத்திலிருந்து சிம்மாவின் மகன் யோவாகு என்பவனும் யோவாகின் மகன் ஏதேன் என்பவனும்,

எளச்சாப்பான் சந்ததியிலிருந்து சிம்ரி, ஏயெல் என்பவர்களும்,

ஆசாப்பின் சந்ததியிலிருந்து சகரியா, மத்தனியா என்பவர்களும்,

ஏமானின் சந்ததியிலிருந்து எகியேல், சிமியி என்பவர்களும்,

எதுத்தானின் சந்ததியிலிருந்து செமாயா, ஊசியேல் என்பவர்களும்,

அந்த பட்டியலில் அடங்கும்.

15 பிறகு இந்த லேவியர்கள் தம் சகோதரர்களையும் சேர்த்துக் கொண்டு தங்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் பரிசுத்த சேவைசெய்யத் தயார் செய்துக்கொண்டார்கள். கர்த்தரிடமிருந்து வந்த அரசனின் கட்டளைக்கு அவர்கள் பணிந்தனர். சுத்தம் செய்து பரிசுத்தப்படுத்துவதற்காக அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றார்கள். 16 ஆசாரியர்கள் சுத்தம் செய்யும் பொருட்டு ஆலயத்தின் உட்பகுதிக்குள் சென்றனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் கண்ட, சுத்தமில்லாத பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்துப்போட்டனர். அவற்றை அவர்கள் கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் கொண்டுவந்து போட்டனர். பிறகு அவை அனைத்தையும் லேவியர்கள் கீதரோன் பள்ளத்தாக்குக்குக் கொண்டுச்சென்றனர். 17 முதல் மாதத்தின் முதல் நாளில், லேவியர்கள் பரிசுத்தச் சேவைசெய்ய தம்மை தயார் செய்துக்கொண்டனர். அந்த மாதத்தின் எட்டாவது நாள் லேவியர்கள் கர்த்தருடைய ஆலய முற்றத்திற்கு வந்தார்கள். பரிசுத்தக் காரியங்களுக்குப் பயன்படுத்தத் தயார் செய்வதற்காக அவர்கள் மேலும் 8 நாட்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்தம் செய்தார்கள். முதல் மாதத்தில் 16வது நாள் அதைச் செய்து முடித்தார்கள்.

18 பிறகு அவர்கள் எசேக்கியா அரசனிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், “எசேக்கியா அரசனே! கர்த்தருடைய ஆலயம் முழுவதையும் சுத்தம் செய்துவிட்டோம். தகனபலி கொடுக்க பலிபீடத்தையும் மற்ற பொருட்களையும் தயார் செய்துவிட்டோம். சமூகத்தப்பங்களின் மேஜையையும் அதன் சகல பணிமூட்டுகளையும் சுத்தம் செய்துவிட்டோம். 19 ஆகாஸ் அரசாளும்போது அவன் தேவனுக்கு உண்மையுள்ளவனாக இல்லாமல் ஆலயத்தில் உள்ள பல பொருட்களை வெளியில் எறிந்தான். இப்போது நாங்கள் சுத்தப்படுத்தி பரிசுத்தமாகப் பயன்படுகிற அளவிற்கு ஆலயத்தின் உள்ளே வைத்துவிட்டோம். இப்போது அவை கர்த்தருடைய பலி பீடத்தின் எதிரில் உள்ளது” என்றனர்.

20 எசேக்கியா அரசன் நகர அதிகாரிகளைக் கூட்டினான். மறுநாள் காலையில் அவர்களுடன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைந்தான். 21 அவர்கள் 7 காளைகளையும், 7 ஆண் ஆட்டுக்கடாக்களையும், 7 ஆட்டுக்குட்டிகளையும், 7 வெள்ளாட்டுக் கடாக்களையும், பாவப்பரிகாரப் பலிக்காகக் கொண்டுவந்தனர். இதன் மூலம் அவர்கள் யூதா அரசாங்கம், பரிசுத்த இடம், யூதா ஜனங்கள் ஆகியோரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். கர்த்தருடைய பலிபீடத்தில் இவற்றைப் பலியிடுமாறு ஆசாரியர்களுக்கு எசேக்கியா அரசன் கட்டளையிட்டான். இவ்வாசாரியர்கள் ஆரோனின் சந்ததியினர் ஆவார்கள். 22 எனவே, ஆசாரியர்கள் காளைகளைக் கொன்று இரத்தத்தைச் சேகரித்தனர். பிறகு அதனைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். பின்னர் செம்மறி ஆட்டுக்கடாக்களைக் கொன்று அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் தெளித்தனர். 23-24 பின்னர் ஆசாரியர்கள் ஆண் ஆட்டுக் கடாக்களை அரசனுக்கு முன்பு கொண்டு வந்தனர். ஜனங்களும் கூடினார்கள். இவை பாவப்பரிகாரப் பலிக்குரியவை. எனவே ஆசாரியர்கள் தம் கைகளை அவற்றின் தலையில் வைத்துவிட்டு கொன்றனர். ஆசாரியர்கள் அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் தெளித்து பாவப்பரிகாரம் செய்தனர். அவர்கள் இவ்வாறு செய்ததால் தேவன் இஸ்ரவேலர்களது பாவங்களை மன்னித்துவிட்டார். அரசன் அந்த தகன பலிகளும் பாவப்பரிகாரப் பலிகளும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் செய்யப்பட வேண்டும் என்றான்.

25 எசேக்கியா அரசன் லேவியர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் கைத்தாளங்கள், தம்புருக்கள், சுரமண்டலங்கள் ஆகியவற்றோடு தொண்டுசெய்ய நியமித்தான். இது தாவீதும், அரசனின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் காட்டிய வழியாகும். இந்த ஆணைகள் கர்த்தரிடமிருந்து தீர்க்கதரிசிகள் மூலம் வந்தன. 26 எனவே லேவியர்கள் தாவீதின் இசைக்கருவிகளோடு தயாராக நின்றனர். ஆசாரியர்கள் தம் பேரிகைகளோடு தயாராக நின்றார்கள். 27 பிறகு எசேக்கியா, பலிபீடத்தின் மேல் தகனபலிகளும், காணிக்கைகளும் கொடுக்குமாறு கட்டளையிட்டான். தகனபலி தொடங்கியதும் கர்த்தருக்காகப் பாடுவதும் தொடங்கியது. எக்காளங்கள் ஊதப்பட்டன. தாவீதின் இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன. 28 அங்கே கூடியிருந்தவர்கள் பணிந்து நின்றனர். இசைக் கலைஞர்கள் பாடினார்கள். எக்காளங்களை இசைப்பவர்கள் அவற்றை ஊதினார்கள். இது தகனபலி முடியும்வரை நிகழ்ந்தது.

29 பலிகள் முடிவுற்றதும் எசேக்கியா அரசனும், ஜனங்களும் குனிந்து தொழுதுகொண்டார்கள். 30 எசேக்கியா அரசனும், அவனது அதிகாரிகளும் லேவியர்களை கர்த்தரைத் துதிக்கும்படி கட்டளையிட்டனர். அவர்கள், தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் எழுதிய பாடல்களைப் பாடினார்கள். அவர்கள் தேவனைத் துதித்துப் பாடி மகிழ்ந்தனர். அவர்கள் பணிந்து தேவனைத் தொழுதுகொண்டனர். 31 எசேக்கியா, “இப்போது யூதா ஜனங்களாகிய நீங்கள் உங்களையே கர்த்தருக்காகக் கொடுத்துவிட்டீர்கள். அவரண்டைக்கு வாருங்கள். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும், ஸ்தோத்திரப் பலிகளையும், கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். பிறகு ஜனங்களும் அவ்வாறே தகனபலிகளையும் ஸ்தோத்திரப் பலிகளையும் கொண்டுவந்தனர். விடுப்பட்டவர்கள் எல்லாம் கொண்டுவந்தனர். 32 கூடியிருந்தவர்கள் கொண்டுவந்த தகனபலிகளின் விபரம்: 70 காளைகள், 100 ஆட்டுக்கடாக்கள், 200 ஆட்டுக்குட்டிகள், இவை அனைத்தும் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளாகக் கொடுக்கப்பட்டன. 33 600 காளைகளும் 3,000 செம்மறி ஆடுகளும் ஆட்டுக் கடாக்களும் பரிசுத்த பலிகளாகக் கொடுக்கப்பட்டன. 34 எனினும் ஆசாரியர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்ததால் அவர்களால் தகன பலிகளின் மிருகங்களை வெட்டி தோல் உரிக்க முடியாமல் போனது. எனவே, அவர்களின் உறவினர்களான லேவியர்கள் அவர்களுக்கு உதவினார்கள். அவர்கள் வேலையை முடிக்கும்வரையிலும் மற்ற ஆசாரியர்கள் தம்மைப் பரிசுத்தம் செய்யும்வரையிலும் உதவினார்கள். ஆசாரியர்களைவிட லேவியர்கள் கர்த்தருக்கு சேவை செய்தவற்குத் தங்களைத் தயார் செய்துக் கொள்வதில் தீவிரமாக இருந்தார்கள். 35 தகனபலிகளும், சமாதானப் பலிகளின் கொழுப்பும், பானங்களின் காணிக்கைகளும் மிகுதியாயிற்று. இவ்வாறு மீண்டும் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை ஆரம்பமாயிற்று. 36 எசேக்கியாவும் ஜனங்களும் தேவன்தம் ஜனங்களுக்காக ஆலயத்தைத் தயார் செய்ததைப்பற்றி மகிழ்ந்தனர். இவ்வளவு விரைவாக கர்த்தர் செய்துமுடித்ததால் அவர்கள் மேலும் மகிழ்ந்தனர்.

வெளி 15

இறுதி வாதைகள்

15 பரலோகத்தில் நான் இன்னொரு அற்புதத்தைப் பார்த்தேன். அது பெரிதும் ஆச்சரியமுமானது. ஏழு தேவ தூதர்கள் ஏழு துன்பங்களைக் கொண்டு வந்தார்கள். இவை தான் இறுதியான துன்பங்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு தேவனுடைய கோபம் முடிந்துவிடுகிறது.

நெருப்பு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். மிருகத்தையும், அதன் உருவத்தையும் அதன் எண்ணையும் வென்ற மக்கள் அனைவரும் கடலருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் தேவன் கொடுத்த இசைக் கருவிகள் இருந்தன. அவர்கள் தேவனுடைய ஊழியராகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடினர்:

“சர்வ வல்லமையுள்ள தேவனே!
    நீர் செய்தவை எல்லாம் பெரியவை,
அற்புதமானவை. நாடுகளின் அரசரே!
    உமது வழிகளெல்லாம் நீதியும் உண்மையுமானவை.
கர்த்தாவே! மக்கள் அனைவரும் உமக்கு அஞ்சுவார்கள்.
எல்லாரும் உம் பெயரைப் போற்றுவார்கள்.
    நீர் ஒருவரே பரிசுத்தமானவர்
எல்லா மக்களும் உம் முன் வந்து உம்மை வழிபடுவார்கள்.
    ஏனெனில் நீர் நீதியானவற்றையே செய்கிறீர் என்பது தெளிவு.”

இதற்குப் பிறகு பரலோகத்தில் நான் ஆலயத்தைப் பார்த்தேன். (இது தேவன் இருக்கிற பரிசுத்தமான இடம்) அந்த ஆலயம் திறக்கப்பட்டது. ஏழு துன்பங்களையுடைய ஏழு தேவதூதர்களும் ஆலயத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் பளபளக்கிற சுத்தமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் தம் மார்பைச் சுற்றி பொன்னால் ஆன கச்சைகளைக் கட்டியிருந்தார்கள். நான்கு ஜீவன்களுள் ஒன்று ஏழு தேவ தூதர்களுக்கும் ஏழு பொற்கிண்ணங்களைக் கொடுத்தது. அக்கிண்ணங்கள் சதாகாலங்களிலும் ஜீவிக்கிற தேவனுடைய கோபத்தால் நிறைந்திருந்தன. தேவனுடைய மகிமையிலிருந்தும் வல்லமையிலிருந்தும் வருகிற புகையால் ஆலயம் நிறைந்துவிட்டது. ஏழு தேவதூதர்களின் ஏழு துன்பங்களும் முடிகிறவரையில் எவராலும் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை.

சகரியா 11

தேவன் மற்ற நாடுகளைத் தண்டிப்பார்

11 வீபனோனே, உன் வாசலைத் திற.
    அதனால் நெருப்பு அதன் வழியாக வந்து உன் கேதுரு மரங்களை எரிக்கும்.
சைபிரஸ் மரங்கள் அழும். ஏனென்றால் கேதுரு மரங்கள் விழுந்திருக்கும்.
    அந்தப் பலமான மரங்கள் எடுத்துச் செல்லப்படும்.
    பாஷானிலுள்ள ஓக் மரங்கள், வெட்டப்பட்ட காடுகளுக்காக கதறும்.
அழுதுகொண்டிருக்கும் மேய்ப்பர்களைக் கவனி.
    அவர்களின் ஆற்றல்மிக்க தலைவர்கள் கொண்டுப்போகப்பட்டனர்.
கெர்ச்சித்துக்கொண்டிருக்கும் இளஞ் சிங்கங்களைக் கவனி.
    அவற்றின் அடர்ந்த புதர்கள் யோர்தான் நதிக்கரையில் இருந்தன. அவை அழிந்துப்போயின.

எனது தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: “கொலைச் செய்யப்படுவதற்குரிய ஆடுகளைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளுங்கள். அவர்களின் தலைவர்கள் சொந்தக்காரர்களையும், வியாபாரிகளையும்போல உள்ளனர். சொந்தக்காரர்கள் தமது ஆடுகளைக் கொல்கிறார்கள், ஆனால் தண்டிக்கப்படுவதில்லை. வியாபாரிகள் ஆட்டினை விற்று, ‘கர்த்தரைத் துதியுங்கள். நான் செல்வந்தன் ஆனேன்!’ என்பார்கள். மேய்ப்பர்கள் தம் ஆடுகளுக்காக வருத்தப்படுவதில்லை. நான் இந்நாட்டில் வாழ்கிற ஜனங்களுக்காக வருத்தப்படுவதில்லை.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்: “பார், நான் ஒவ்வொருவரையும் அவர்களது அயலகத்தாரும், அரசனும் அடக்கியாண்டு அவர்களது நாட்டினை அழிக்கும்படி விடுவேன். அப்போது நான் அவர்களைத் தடுப்பதில்லை!”

எனவே, நான் கொல்லப்படுவதற்குரிய அந்தப் பரிதாபத்துக்குரிய ஆடுகளை மேய்ப்பேன். நான் இரண்டு கோல்களை கண்டெடுப்பேன். ஒன்றிற்கு அனுக்கிரகம் என்றும் இன்னொன்றிற்கு ஒற்றுமை என்றும் பேரிடுவேன். பின்னர், நான் ஆடுகளை மேய்க்கத் தொடங்குவேன். நான் ஒரே மாதத்தில் மூன்று மேய்ப்பர்களைக் கொன்றுப்போட்டேன். நான் ஆடுகளின் மேல் கோபமுற்றேன். அவை என்னை வெறுக்க தொடங்கின. பின்னர், “நான் உங்களை கவனியாமல் நிறுத்திவிடுவேன். நான் உங்களை இனிமேல் மேய்ப்பதில்லை. நான் அவற்றில் மரிக்க விரும்புகிறவர்களை மரிக்கட்டும் என்று விடுவேன். நான் அவற்றில் அழிய விரும்புகிறவர்கள் அழியட்டும் என்று விடுவேன். மீதியானவை ஒன்றை ஒன்று அழிக்கும்.” 10 பிறகு நான் அனுக்கிரகம் என்ற கோலை எடுத்தேன். நான் அதனை உடைத்தேன். தேவன் அனைத்து ஜனங்களோடும் செய்த உடன்படிக்கை உடைந்துபோனது என்பதைச் காட்டவே இதனைச் செய்தேன். 11 அந்நாளில் உடன்படிக்கை முடிந்தது. எனக்காகக் காத்திருந்த பரிதாபத்திற்குரிய ஆடுகள், இச்செய்தி கர்த்தரிடமிருந்து வந்தது என்பதை அறிந்தன.

12 பிறகு நான் சொன்னேன், “நீங்கள் எனக்குக் கூலி கொடுக்க விரும்பினால் கொடுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம்.” எனவே அவர்கள் எனக்கு 30 வெள்ளிக் காசுகளைக் கொடுத்தார்கள். 13 பிறகு கர்த்தர் என்னிடம், “நான் இவ்வளவே மதிப்புள்ளவன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே அத்தொகையை ஆலயக் கருவூலத்தில் எறி” என்றார். எனவே நான் முப்பது வெள்ளிகாசுகளை எடுத்து கர்த்தருடைய ஆலயக் கருவூலத்தில் எறிந்தேன். 14 பின்னர் நான் ஒற்றுமை என்ற கோலை, இரண்டு துண்டுகளாக உடைத்தேன். யூதாவும், இஸ்ரவேலும் கொண்ட ஒற்றுமை உடைந்தது என்று காட்டவே இவ்வாறு செய்தேன்.

15 பிறகு கர்த்தர் என்னிடம், “மதியற்ற மேய்ப்பனொருவன் பயன்படுத்தும் பொருட்களை இப்பொழுது நீ எடுத்துக்கொள். 16 இது நான் இந்த நாட்டுக்குப் புதிய மேய்ப்பனை ஏற்படுத்துவேன் என்பதைக் காட்டும். ஆனால் இந்த இளைஞனால் இழந்துப்போன ஆடுகளைப் பேணிக்காக்க இயலாது. அவனால் காயப்பட்ட ஆடுகளைக் குணப்படுத்தவும் முடியாது. அவனால் மெலிந்தவற்றுக்கு ஊட்ட முடியாது. அவன் கொழுத்தவற்றை முழுமையாக உண்பான். அவற்றின் குளம்புகள் மட்டுமே மீதியாகும்” என்றார்.

17 ஓ! எனது பயனற்ற மேய்ப்பனே,
    நீ என் மந்தையைக் கைவிட்டாய்.
அவனைத் தண்டித்துவிடு.
    அவனது வலது கண்ணையும், கையையும் வாளால் வெட்டு.
    அவனது வலது கை பயனற்றுப்போகும்.
    அவனது வலது கண் குருடாகும்.

யோவான் 14

சீஷர்களுக்கு ஆறுதல்

14 இயேசு அவர்களிடம், “நீங்கள் மனம் கலங்காதீர்கள். தேவனை விசுவாசியுங்கள். என்னிலும் விசுவாசம் வையுங்கள். எனது பிதாவின் வீட்டில் அறைகள் ஏராளமாக உள்ளன. அது உண்மை இல்லை என்றால் நான் இதனை உங்களிடம் சொல்லமாட்டேன். உங்களுக்கு ஓர் இடத்தைத் தயார் செய்வதற்காக நான் அங்கே செல்லுகிறேன். நான் அங்கே போனதும் உங்களுக்கான இடத்தை தயார் செய்வேன். நான் திரும்பி வருவேன். என்னோடு உங்களை அழைத்துச் செல்வேன். எனவே, நான் எங்கே இருப்பேனோ அங்கே நீங்களும் இருப்பீர்கள். நான் போகிற இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்” என்றார்.

உடனே, “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. அவ்வாறு இருக்கும்போது வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என தோமா கேட்டான்.

அதற்கு இயேசு, “நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு. என் மூலமாகத்தான் என் பிதாவிடம் போக முடியும். நீங்கள் உண்மையிலேயே என்னைப் புரிந்துகொண்டால் என் பிதாவையும் புரிந்துகொள்ளலாம். ஆனால் இப்பொழுது என் பிதாவை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்கள்” என்றார்.

இயேசுவிடம் பிலிப்பு, “ஆண்டவரே, எங்களுக்கு பிதாவைக் காட்டுங்கள். அதுதான் எங்களுக்குத் தேவையானது” என்றான்.

அதற்கு இயேசு “பிலிப்பு, நான் உன்னோடு நீண்ட நாட்களாக இருக்கிறேன். ஆகையால் நீ என்னை அறிந்திருக்கவேண்டும். என்னைப் பார்க்கிறவன் எவனும் என் பிதாவைப் பார்க்கிறான். அப்படியிருக்க நீ என்னிடம், ‘எங்களுக்குப் பிதாவைக் காட்டுங்கள்’ என்று கூறுகிறாயே. 10 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நீ உண்மையாகவே நம்புகிறாயா? நான் உங்களுக்குச் சொன்னவை எல்லாம் என்னிடமிருந்து வந்தவை அல்ல. பிதா என்னில் வாழ்கிறார். அவர் அவருடைய பணியைச் செய்கிறார். 11 நான் பிதாவில் இருக்கிறேன். பிதா என்னில் இருக்கிறார் என்று நான் சொல்லும்போது என்னை நம்புங்கள். இல்லாவிட்டால் நான் செய்த அற்புதங்களுக்காவது என்னை நம்புங்கள்.

12 “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் நான் செய்த அத்தகைய அற்புதங்களைச் செய்வான். என்னைவிட மேலான காரியங்களைக்கூட செய்வான். ஏனென்றால் நான் என் பிதாவிடம் செல்கிறேன். 13 எனது பெயரில் நீங்கள் எதை வேண்டினாலும் அதை உங்களுக்காக நான் செய்வேன். பிறகு பிதாவின் மகிமை குமாரனின் மூலமாக விளங்கும். 14 நீங்கள் எனது பெயரில் என்னை என்ன கேட்டாலும் அதை நான் செய்வேன்.

பரிசுத்த ஆவியானவர்பற்றிய வாக்குறுதி

15 “நீங்கள் என்னை நேசித்தால், நான் கட்டளையிட்டபடி நீங்கள் காரியங்களைச் செய்வீர்கள். நான் பிதாவை வேண்டுவேன். அவர் உங்களுக்கு இன்னொரு உதவியாளரைத் தருவார். 16 அந்த உதவியாளர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார். 17 உண்மையின் ஆவியே அந்த உதவியாளர். இந்த உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் உலகம் அவரைக் காணாமலும் தெரிந்துகொள்ளாமலும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அவரை அறிவீர்கள். அவர் உங்களோடு வாழ்கிறார். அவர் உங்களிலும் வாழ்வார்.

18 “பெற்றோர் இல்லாத பிள்ளைகளைப்போன்று நான் உங்களைவிட்டுப் போகமாட்டேன். நான் மீண்டும் உங்களிடம் வருவேன். 19 இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகில் உள்ள மக்கள் என்னை இனிமேல் காணமாட்டார்கள். ஆனால் நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள். நான் உயிர்வாழ்வதால் நீங்களும் வாழ்வீர்கள். 20 அந்த நாளிலே நான் பிதாவில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களிலும் நீங்கள் என்னிலும் இருப்பதையும் அறிவீர்கள். 21 ஒருவன் எனது கட்டளைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் உண்மையாகவே என்னை நேசிக்கிறான். என்னை நேசிக்கிறவனை என் பிதாவும் நேசிப்பார். அதோடு நானும் அவனை நேசிப்பேன். நான் என்னை அவனிடம் வெளிப்படுத்துவேன்” என்றார்.

22 பிறகு யூதா என்பவன் (யூதாஸ்காரியோத் அல்ல) இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் உம்மை உலகத்துக்கு இல்லாமல் எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்று ஏன் திட்டமிடுகிறீர்?” என்றான்.

23 அதற்கு இயேசு, “எவனொருவன் என்னை நேசிக்கிறானோ அவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான். எனது பிதா அவன்மீது அன்பு வைப்பார். நானும் எனது பிதாவும் அவனிடம் வந்து அவனோடு வாழ்வோம். 24 ஆனால் என்னை நேசிக்காதவன், என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படியமாட்டான். நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற எனது உபதேசங்கள் எல்லாம் என்னுடையவையல்ல. அவை என்னை அனுப்பின எனது பிதாவினுடையவை.

25 “நான் உங்களோடு இருக்கையில் இவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். 26 ஆனால் உதவியாளர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்னவற்றையெல்லாம் உங்களுக்கு அவர் நினைவுபடுத்துவார். அவரே பரிசுத்த ஆவியானவர். பிதா எனது நாமத்தினால் அவரை அனுப்புவார்.

27 “நான் சமாதானத்தை உங்களுக்கு வைத்துவிட்டுப் போகிறேன். எனது சொந்த சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுப்பதுபோல் இல்லாமல் நான் வித்தியாசமான சமாதானத்தைக் கொடுக்கிறேன். ஆகையால் உங்கள் மனம் கலங்காமல் இருக்கட்டும். அஞ்சவும் வேண்டாம். 28 ‘நான் போவேன், மீண்டும் உங்களிடம் வருவேன்’ என்று சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். நீங்கள் என்னை நேசிப்பதானால், நான் என் பிதாவிடம் திரும்பிப்போவதைப்பற்றி மகிழ்ச்சியடைவீர்கள், ஏனென்றால் என்னைவிட என் பிதா பெரியவர். 29 நான் இவை நடப்பதற்கு முன்னரே இவற்றை உங்களிடம் சொல்கிறேன். இவை நடைபெறும்போது என்னை நீங்கள் நம்புவீர்கள்.

30 “நான் உங்களோடு அதிகம் பேசமாட்டேன். இந்த உலகத்தை ஆளுகிறவன் (சாத்தான்) வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மீது அதிகாரமில்லை. 31 ஆனால் நான் என் பிதாவை நேசிக்கிறேன் என்று உலகத்துக்குத் தெரியவேண்டும். ஆகையால் என் பிதா எனக்குச் சொன்னவற்றை மட்டும் நான் செய்கிறேன். இப்பொழுது வாருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center