M’Cheyne Bible Reading Plan
யூதாவின் ராஜாவாகிய யோதாம்
27 யோதாம் ராஜாவாகியபோது அவனுக்கு 25 வயது ஆகும். இவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள் ஆகும். இவள் சாதோக்கின் குமாரத்தி ஆவாள். 2 கர்த்தர் செய்ய விரும்பியதையே, யோதாம் செய்து வந்தான். அவன் தன் தந்தை உசியாவைப் போலவே தேவனுக்குக் கீழ்ப்படிந்து வந்தான். ஆனால் தன் தந்தையைப் போல யோதாம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைந்து நறுமணப் பொருட்களை எரிக்க முயலவில்லை. எனினும் ஜனங்கள் தொடர்ந்து தவறு செய்தனர். 3 யோதாம் மீண்டும் கர்த்தருடைய ஆலயத்தின் மேல் வாசலைக் கட்டினான். ஓபேலின் மதில்சுவர் மீது அனேக கட்டிடங்களைக் கட்டினான். 4 யூதாவின் மலைநாட்டில் புதிய நகரங்களையும் கட்டினான். யோதாம் காடுகளில் கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். 5 யோதாம் அம்மோனிய ராஜாக்களுக்கு எதிராகப் போரிட்டான். அவர்களது படைகளை அவன் தோற்கடித்தான். எனவே ஆண்டுதோறும் அம்மோனியர்கள் அவனுக்கு 100 தாலந்து வெள்ளியையும் பதினாயிரங்கலங் கோதுமையையும் பதினாயிரங்கல வாற் கோதுமையையும் கொடுத்தார்கள். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கொடுத்தனர்.
6 யோதாம் உண்மையாகவே தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்ததால், பலமுள்ளவன் ஆனான். 7 யோதாம் செய்த மற்ற செயல்களும் போர்களும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 8 யோதாம் 25 வயதில் ராஜாவானான். அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். 9 பிறகு யோதாம் மரிக்க அவனை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். அவன் தாவீது நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். யோதாமின் இடத்திலே புதிய ராஜாவாக ஆகாஸ் வந்தான். ஆகாஸ் யோதாமின் குமாரன்.
யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ்
28 ஆகாஸ் ராஜாவாகியபோது அவனுக்கு 20 வயது. அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். தனது முற்பிதாவான தாவீதைப் போன்று ஆகாஸ் சரியான வழியில் வாழவில்லை. கர்த்தர் விரும்பியவற்றை ஆகாஸ் செய்யவில்லை. 2 இஸ்ரவேல் ராஜாக்களின் தவறான முன்மாதிரிகளை கடைபிடித்தான். அவன் பாகால் தெய்வங்களைத் தொழுதுகொள்ள வார்ப்புச் சிலைகளைச் செய்தான். 3 ஆகாஸ் பென்இன்னோம் பள்ளத்தாக்கில் நறுமணப் பொருட்களை எரித்தான். தன் சொந்த குமாரர்களை நெருப்பில் எரித்துப் பலிக்கொடுத்தான். அந்நாடுகளில் வாழ்ந்தோர் செய்த பயங்கரமான பாவங்களையே அவனும் செய்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டுக்குள் நுழைந்தபோது ஏற்கெனவே அங்கிருந்த பாவமிக்க ஜனங்களை கர்த்தர் வெளியே துரத்தியிருந்தார். 4 மலைகளில் இருந்த மேடைகளிலும் ஒவ்வொரு பசுமையான மரத்தின் அடியிலும் ஆகாஸ் பலிகளைக் கொடுத்து நறுமணப் பொருட்களை எரித்தான்.
5-6 ஆகாஸ் பாவங்களைச் செய்ததால், ஆராமின் ராஜா ஆகாஸை வெல்லும்படி தேவனாகிய கர்த்தர் செய்தார். ஆராமின் ராஜாவும் அவனது படைகளும் ஆகாஸைத் தோற்கடித்து யூத ஜனங்களில் பலரைச் சிறைபிடித்தனர். ஆராம் ராஜா, சிறைக் கைதிகளை தமஸ்கு என்ற நகரத்திற்கு அழைத்துச் சென்றான். மேலும் கர்த்தர், இஸ்ரவேல் ராஜாவாகிய பெக்கா ஆகாஸை வெல்லும்படிச் செய்தார். பெக்காவின் தந்தையின் பெயர் ரெமலியா ஆகும். ஒரே நாளில் பெக்காவும், அவனது படையும் யூதாவில் 1,20,000 வீரர்களைக் கொன்றனர். பெக்கா யூதா வீரர்களை வென்றதற்குக் காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை என்பது ஆகும். 7 எப்பிராயீமில் சிக்ரி என்பவன் பலமிக்க வீரன். அவன் ஆகாஸ் ராஜாவின் குமாரனான மாசேயாவையும், அரண்மனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும் எல்க்கானாவையும் கொன்றான். எல்க்கானா ராஜாவுக்கு இரண்டாவது நிலையில் இருந்தார்.
8 இஸ்ரவேலிய படையானது யூதாவில் வாழ்ந்த தம் சொந்த உறவினர்களான 2,00,000 பேரைச் சிறை பிடித்தனர். அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகக் கொண்டுசென்றார்கள். அவர்கள் யூதாவிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துச் சென்றார்கள். அந்த அடிமைகளையும், அப்பொருட்களையும் இஸ்ரவேலர்கள் சமாரிய நகருக்குக் கொண்டுவந்தார்கள். 9 ஆனால் அங்கே கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான். அவனது பெயர் ஒதேத். சமாரியாவிற்கு வந்த இஸ்ரவேல் படையை ஒதேத் சந்தித்தான். ஒதேத் இஸ்ரவேல் படையினரிடம், “உங்கள் முற்பிதாக்கள் பணிந்த தேவனாகிய கர்த்தர், நீங்கள் யூதாவின் ஜனங்களைத் தோற்கடிக்கவிட்டார். ஏனென்றால் அவர்கள் மீது அவர் கோபமாயிருந்தார். மிக மோசமான முறையில் நீங்கள் யூதாவின் ஜனங்களைக் கொன்று தண்டித்தீர்கள். இப்போது தேவன் உங்கள் மீது கோபமாக இருக்கிறார். 10 நீங்கள் யூதாவின் ஜனங்களையும், எருசலேமையும் அடிமையாக்கத் திட்டமிட்டுள்ளீர்கள். உங்களது தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்களும் பாவம் செய்திருக்கிறீர்கள். 11 இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நீங்கள் கைப்பற்றிய உங்கள் சகோதர சகோதரிகளைத் திருப்பி அனுப்புங்கள். கர்த்தருடைய கடுமையான கோபம் உங்கள் மீது உள்ளது. எனவே நான் சொன்னபடி செய்யுங்கள்” என்று சொன்னான்.
12 பிறகு எப்பிராயீம் தலைவர்கள், இஸ்ரவேல் வீரர்கள் போர்க்களத்திலிருந்து வீட்டிற்குத் திரும்புவதைப் பார்த்தனர். அந்தத் தலைவர்கள் இஸ்ரவேல் வீரர்களைச் சந்தித்து எச்சரிக்கைச் செய்தனர். யோகனானின் குமாரன் அசரியா, மெஷிலேமோத்தின் குமாரனான பெரகியா, சல்லூமின் குமாரனான எகிஸ்கியா, அத்லாயின் குமாரனான அமாசா ஆகியோர் அந்தத் தலைவர்களாகும். 13 அவர்கள் இஸ்ரவேல் வீரர்களிடம், “யூதாவிலிருந்து கைதிகளை இங்கே கொண்டுவராதீர்கள். அவ்வாறு செய்தால் அது கர்த்தருக்கு எதிராக நாம் பாவம் செய்வது போல் ஆகும். நமது பாவங்களையும் குற்ற உணர்வையும் அது மோசமாக்கும். கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபம் கொள்வார்” என்றார்கள்.
14 எனவே, வீராகள் கைதிகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் தலைவர்களிடமும், ஜனங்களிடமும் கொடுத்தனர். 15 உடனே அசரியா, பெரக்கியா, எகிஸ்கியா, அமாசா, ஆகிய தலைவர்கள் கைதிகளுக்கு உதவினார்கள். அந்நால்வரும் இஸ்ரவேல் படை அபகரித்த ஆடைகளை எடுத்து நிர்வாணமாயிருந்த கைதிகளுக்குக் கொடுத்தனர். அவர்களுக்கு பாதரட்சைகளைக் கொடுத்தனர். உண்ணவும், குடிக்கவும் கைதிகளுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்தனர். அவர்களுக்கு எண்ணெய் தடவினார்கள். பிறகு அந்த எப்பிராயீம் தலைவர்கள் பலவீனமான கைதிகளைக் கழுதைமேல் ஏற்றி எரிகோவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எரிகோ பேரீச்ச மரங்கள் நிறைந்த பட்டணம். பிறகு அந்தத் தலைவர்கள் நால்வரும் தம் நகரமான சமாரியாவிற்குத் திரும்பினார்கள்.
16-17 அதே நேரத்தில் ஏதோம் நாட்டு ஜனங்கள் யூதாவைத் தோற்கடித்தனர். ஏதோமியர் ஜனங்களைச் சிறைபிடித்து கைதிகளாக கொண்டு சென்றார்கள். எனவே ஆகாஸ் ராஜா அசீரியா ராஜாவிடம் உதவுமாறு வேண்டினான். 18 பெலிஸ்தர்களும் மலைநாட்டு நகரங்களையும் யூதாவின் தென் பகுதியையும் தாக்கினார்கள். இவர்கள் பெத்ஷிமேஸ், ஆயலேன், கெதெரோத், சொக்கோ, திம்னா மற்றம் கிம்சோ ஆகிய ஊர்களைக் கைப்பற்றினார்கள். மேலும் அவர்கள் அந்த ஊர்களுக்கு அருகிலிருந்த கிராமங்களையும் கைப்பற்றினார்கள், பிறகு பெலிஸ்தியர்கள் அந்த ஊர்களில் வாழ்ந்தார்கள். 19 யூதா ஜனங்களுக்கு கர்த்தர் கடுமையான துன்பங்களைத் தந்தார். ஏனென்றால் ஆகாஸ் ராஜா யூதா ஜனங்கள் பாவம் செய்யும்படி தூண்டினான். அவன் கர்த்தருக்கு உண்மை இல்லாதவனாக நடந்துக் கொண்டான். 20 அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில் நேசர் உதவுவதற்குப் பதிலாகத் துன்பங்களைத் தந்தார். 21 ஆகாஸ் கர்த்தருடைய ஆலயம், அரண்மனை, இளவரசர்களின் அரண்மனை ஆகியவற்றில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை எடுத்துவந்தான். அவற்றை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான். எனினும் அது ஆகாசுக்கு உதவவில்லை.
22 இவ்வளவு இடையூறுகளுக்கு நடுவிலும் ஆகாஸ் மேலும் மோசமான பாவங்களையே தொடர்ந்து செய்தான். இதனால் கர்த்தருக்கு மிகவும் உண்மையற்றவனாக இருந்தான். 23 தமஸ்கு ஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களுக்கே இவன் பலிகளைக் கொடுத்து வந்தான் தமஸ்கு ஜனங்கள் ஆகாஸைத் தோற்கடித்தனர். அதனால் ஆகாஸ், “ஆராம் ஜனங்களுக்கு அவர்கள் தொழுதுகொண்ட தெய்வங்கள் உதவுகின்றன. எனவே நானும் அத்தெய்வங்களுக்குப் பலியிட்டால் அத்தெய்வங்கள் எனக்கும் உதவும்” என்று எண்ணினான். ஆகாஸ் அத்தெய்வங்களைத் தொழுதுகொண்டான். இவ்வாறு இவன் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.
24 ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்து பொருட்களை எடுத்து உடைத்துப் போட்டான் பிறகு அவன் கர்த்தருடைய ஆலய கதவுகளை மூடினான். அவன் பலிபீடங்களைச் செய்து எருசலேமின் ஒவ்வொரு தெரு முனையிலும் வைத்தான். 25 ஆகாஸ் யூதாவின் ஒவ்வொரு நகரங்களிலும் மேடைகள் அமைத்து நறுமணப் பொருட்களை எரித்து அந்நிய தெய்வங்களை தொழுதுகொண்டான். ஆகாஸ் தன் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவனாகிய கர்த்தரை மேலும் கோபமூட்டினான்.
26 ஆகாஸ் தொடக்ககாலம் முதல் இறுதிவரை செய்த மற்ற செயல் எல்லாமும் யூதா மற்றம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 27 ஆகாஸ் மரித்ததும் அவனை அவனது முற்பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்தனர். ஜனங்கள் அவனை எருசலேம் நகரிலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அவனை இஸ்ரவேல் ராஜாக்களை அடக்கம் செய்யும் இடத்துக்கருகில் அடக்கம் செய்யவில்லை. ஆகாசின் இடத்தில் புதிய ராஜாவாக எசேக்கியா வந்தான். எசேக்கியா ஆகாசின் குமாரன்.
மீட்கப்பட்டவர்களின் பாடல்
14 பிறகு நான் பார்த்தபோது என் முன்னால் ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன். அவர் சீயோன் மலைமீது நின்றுகொண்டிருந்தார். அவரோடு ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் இருந்தனர். அவர்களது நெற்றியில் ஆட்டுக்குட்டியானவரின் பெயரும் அவரது பிதாவின் பெயரும் எழுதப்பட்டு இருந்தது.
2 பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியின் பெரு முழக்கத்தைப்போலவும் ஒரு சத்தம் பரலோகத்தில் ஏற்பட்டதைக் கேட்டேன். அச்சத்தம் சுரமண்டலக்காரர்களால் தம் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது. 3 மக்கள் ஒரு புதிய பாடலைச் சிம்மாசனத்துக்கு முன்பாகவும் நான்கு உயிருள்ள ஜீவன்களின் முன்பாகவும் மூப்பர்களின் முன்பாகவும் பாடினர். அப்புதிய பாடலை ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டுமே கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களே பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். வேறு எவராலும் அப்பாடலைக் கற்றுக்கொள்ளமுடிய வில்லை.
4 அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்களும் பெண்களால் தம்மை மாசுபடுத்திக்கொள்ளாதவர்கள். அவர்கள் தம்மைச் சுத்தமாய் வைத்திருந்தனர். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவர்கள் பின்தொடர்ந்து செல்கிறவர்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டும் பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டியானவருக்கும் தேவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மனிதர்கள். 5 இவர்கள் பொய் சொல்லும் குற்றத்துக்கு ஆளாகாதவர்கள். இவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
மூன்று தேவதூதர்கள்
6 பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான். 7 அவன் உரத்த குரலில், “தேவனுக்கு பயப்படுங்கள். அவருக்கு புகழ் செலுத்துங்கள். அவர் எல்லா மக்களுக்கும் நீயாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்திருக்கிறது. தேவனை வழிபடுங்கள். அவர் பரலோகத்தைப் படைத்தார். பூமியையும், கடலையும் நீரூற்றுக்களையும் படைத்தார்” என்றான்.
8 பிறகு இரண்டாம் தேவதூதன் முதல் தூதனைப் பின்தொடர்ந்து வந்தான். அவன், “அவள் அழிக்கப்பட்டாள். பாபிலோன் என்னும் மாநகரம் அழிக்கப்பட்டது. அவள் தன் வேசித்தனமானதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லா தேசங்களுக்கும் குடிக்கக் கொடுத்தாள்” என்றான்.
9 மூன்றாவது தேவதூதன் மற்ற இரு தூதர்களையும் பின் தொடர்ந்து வந்தான். அவன் உரத்த குரலில், “எவனொருவன் மிருகத்தையும், மிருகத்தின் உருவத்தையும் வழிபடுகிறானோ, எவனொருவன் மிருகத்தின் அடையாளத்தைத் தன் முன்நெற்றியிலோ, கையிலோ பதித்துக்கொள்கிறானோ அவனுக்குக் கேடு உருவாகும். 10 அவன் தேவனுடைய கோபமாகிய மதுவைக் குடிப்பான். அவன் ஆட்டுக்குட்டியானவருக்கும், பரிசுத்த தேவதூதர்களுக்கும் முன்பாக அக்கினியாலும் கந்தகத்தாலும் துன்புறுத்தப்படுவான். 11 அவர்களது வாதையின் புகை சதா காலங்களிலும் எழும்பிக்கொண்டிருக்கும். மிருகத்தையும் அதன் உருவத்தையும் வழிபடுகிறவர்களுக்கும் அதன் பெயரின் அடையாளக் குறியை உடைய மக்களுக்கும் இரவும் பகலும் எக்காலமும் ஓய்வு இருக்காது” என்றான். 12 இதன் பொருள் யாதெனில் தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும். அவர்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும், இயேசுவில் தம் விசுவாசத்தைப் பற்றிக்கொள்கிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
13 பிறகு, பரலோகத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டானதைக் கேட்டேன். அது “இதை எழுது: கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்கள் இப்பொழுதிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றது.
“ஆமாம் அவர்கள் தங்கள் கடினமான வேலைகளை விட்டுவிட்டு ஓய்வுபெறுவார்கள். அவர்களது செயல்கள் அவர்களோடு தங்கும், இது முற்றிலும் உண்மை” என்று ஆவியானவரும் கூறுகிறார்.
பூமி அறுவடையாகுதல்
14 நான் பார்த்தபோது எனக்கு முன்னால் ஒரு வெண்ணிற மேகத்தைக் கண்டேன். அம்மேகத்தின் மீது மனித குமாரனைப் போன்ற ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரது தலையில் பொன் கிரீடம் இருந்தது. அவரது கையிலோ கூர்மையான அரிவாள் இருந்தது. 15 பிறகு இன்னொரு தேவதூதன் ஆலயத்திலிருந்து வெளியே வந்தான். அவன் மேகத்தின்மேல் இருப்பவரைப் பார்த்து, “அறுவடைக்கு உரிய காலம் வந்துவிட்டது. பூமியின் பயிரும் முதிர்ந்து விட்டது. எனவே உங்கள் அறிவாளை எடுத்து அறுவடை செய்யுங்கள்” என்றான். 16 அப்போது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார். பூமியின் விளைச்சல் அறுவடை ஆயிற்று.
17 பிறகு இன்னொரு தேவதூதன் பரலோகத்திலுள்ள ஆலயத்தை விட்டு வெளியே வந்தான். அவனும் ஒரு கூர்மையான அரிவாளை வைத்திருந்தான். 18 பின்பு இன்னொரு தேவதூதன் பலிபீடத்தில் இருந்து வெளியே வந்தான். நெருப்பின் மீது இவனுக்கு வல்லமை இருந்தது. கூர்மையான அரிவாளை வைத்திருந்த தேவதூதனை அழைத்து, அவன், “பூமியின் திராட்சைகள் பழுத்திருக்கின்றன. கூர்மையான உன் அரிவாளை எடு. பூமியின் திராட்சைக் குலைகளை கூரிய உன் அரிவாளால் அறுத்துச் சேகரி” என்று உரத்த குரலில் கூறினான். 19 அதனால் அத்தூதன் அரிவாளைப் பூமியின் மீது நீட்டி பூமியின் திராட்சைப் பழங்களை அறுத்து, தேவனுடைய கோபமாகிய பெரிய ஆலையிலே போட்டான். 20 நகரத்துக்கு வெளியிலிருந்த அந்த ஆலையிலே திராட்சைப் பழங்கள் நசுக்கப்பட்டன. அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அது குதிரைகளின் தலை உயரத்திற்கு 200 மைல் தூரத்துக்குப் பொங்கி எழுந்தது.
கர்த்தருடைய வாக்குறுதிகள்
10 மழைக்காலத்தில் மழைக்காகக் கர்த்தரிடம் ஜெபம் செய். கர்த்தர் மின்னலை அனுப்புவார், மழை விழும். ஒவ்வொருவரின் வயலிலும் தேவன் செடிகளை வளரச் செய்வார்.
2 ஜனங்கள், தங்கள் சிறிய சிலைகளையும், மந்திரத்தையும் பயன்படுத்தி வருங்காலத்தை அறிந்துக்கொள்ள முயல்வார்கள். ஆனால் அவை பயனற்றதாகும். அந்த ஜனங்கள் தரிசனங்களைப் பார்த்து, அவர்கள் கனவுகளைப்பற்றி சொல்வார்கள். ஆனால் இது வீணானது. அவைகள் பொய்கள். எனவே ஜனங்கள் உதவிக்காக அங்கும் இங்கும் அலைந்து ஆடுகளைப்போல் கதறுவார்கள். ஆனால் அவர்களை வழிகாட்டி அழைத்துச் செல்ல மேய்ப்பன் எவரும் இருக்கமாட்டார்கள்.
3 கர்த்தர் கூறுகிறார்: “நான் மேய்ப்பர்கள் மீது (தலைவர்கள்) கோபமாக இருக்கிறேன். எனது ஆடுகளுக்கு (ஜனங்கள்) என்ன நிகழ்கிறதோ அவற்றுக்கு அத்தலைவர்களைப் பொறுப்பாளர்களாக ஆக்கினேன்.” (யூதாவின் ஜனங்கள் தேவனுடைய மந்தை. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உண்மையிலேயே தமது மந்தையைப்பற்றி அக்கறை கொள்வார். ஒரு போர்வீரன் தனது அழகிய போர்க்குதிரையைக் காப்பது போன்று அவர் காப்பார்.)
4 “யூதாவிலிருந்து மூலைக்கல், கூடார முனை, போர்வில் முன்னேறும் வீரர்கள் எல்லாம் சேர்ந்து வரும். 5 அவர்கள் தம் பகைவரை வெல்வார்கள். இது வீரர்கள், தெருவில் உள்ள சேற்றில் செல்வது போல் இருக்கும். அவர்கள் போரிடுவார்கள். கர்த்தர் அவர்களோடு இருக்கும்வரை அவர்கள் குதிரை வீரர்களைக் கூடத் தோற்கடிப்பார்கள். 6 நான் யூதாவின் குடும்பத்தை வலிமை உள்ளவர்களாக்குவேன். போரில் யோசேப்பிற்கு வெற்றிப் பெற நான் உதவுவேன். நான் அவர்களைப் பாதுகாப்போடு திரும்பக் கொண்டு வருவேன். நான் அவர்களை ஆறுதல்படுத்துவேன், இது நான் அவர்களை என்றும் புறம்பாக்கிவிடாமல் இருப்பவர்களைப்போல் இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாகிய கர்த்தர். நான் அவர்களுக்கு உதவுவேன். 7 எப்பிராயீமின் ஜனங்கள் அளவுக்கு மீறி மதுபானம் குடித்த வீரர்களைப்போன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களது குழந்தைகளும் கூட மகிழுவார்கள். அவர்கள் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியடையும்.
8 “நான் அவர்களைப் பார்த்து பரிகசிப்பேன். நான் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன். நான் உண்மையாக அவர்களைக் காப்பாற்றுவேன். அங்கே ஏராளமான ஜனங்கள் இருப்பார்கள். 9 ஆம், நான் எனது ஜனங்களை நாடுகள் முழுவதும் சிதறடித்திருக்கிறேன். ஆனால் அத்தொலை நாடுகளிலிருந்து அவர்கள் என்னை நினைவுகூருவார்கள். அவர்களும் அவர்களது பிள்ளைகளும் வாழுவார்கள். அவர்கள் திரும்ப வருவார்கள். 10 நான் எகிப்திலிருந்தும், அசீரியாவிலிருந்தும் அவர்களை மீண்டும் அழைத்து வருவேன். நான் அவர்களை கீலேயாத் பகுதிக்கு கொண்டு வருவேன். அவர்களுக்கு இடம் போதாமல் போவதால், நான் அவர்களை அருகிலுள்ள லீபனோனிலும் வாழச் செய்வேன். 11 தேவன் முன்பு அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தபோது இருந்ததுபோல் இருக்கும். அவர் கடலின் அலைகளை அடிப்பார். கடல் பிளக்கும், ஜனங்கள் துன்பக்கடலை நடந்து கடப்பார்கள். கர்த்தர் நதியின் ஓடைகளை வறண்டு போகச் செய்வார். அவர் அசீரியாவின் கர்வத்தையும், எகிப்தின் அதிகாரத்தையும் அழிப்பார். 12 கர்த்தர் தமது ஜனங்களைப் பலமுள்ளவராகச் செய்வார். அவர்கள் அவருக்காக அவரது நாமத்தில் வாழ்வார்கள்.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
13 இது ஏறக்குறைய பஸ்கா பண்டிகைக்கான நேரம். இதுதான் இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்கான நேரம் என்பதை இயேசு அறிந்திருந்தார். இயேசு, தன் பிதாவிடம் திரும்பிப் போவதற்கான காலம் இது. இயேசு அவருடைய மக்களின் மீது பெரிதான அன்பை எப்போதும் வைத்திருந்தார். இப்பொழுது, அவருக்கு அவர்களிடம் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் நேரமாயிற்று.
2 இயேசுவும் அவர் சீஷர்களும் மாலை உணவுக்காக அமர்ந்தனர். ஏற்கெனவே சாத்தான் யூதாஸ்காரியோத்தின் மனதில் புகுந்து அவனை இயேசுவுக்கு எதிராக ஆக்கியிருந்தான். (யூதாஸ் சீமோனின் குமாரன்) 3 இயேசுவுக்கு அவரது பிதா எல்லாவிதமான அதிகாரத்தையும் கொடுத்திருந்தார். இயேசு இதனை அறிந்திருந்தார். தேவனிடமிருந்து தான் வந்ததாக இயேசு தெரிந்துவைத்திருந்தார். அதோடு அவர் தன் பிதாவிடமே திரும்பிப் போகவேண்டும் என்பதனை அறிந்திருந்தார். 4 அவர்கள் உணவு உண்டுகொண்டிருக்கும்போது, இயேசு எழுந்து ஆடைகளைக் கழற்றி வைத்தார். ஒரு துண்டை எடுத்துத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டார். 5 பிறகு இயேசு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றினார். அவர் தம் சீஷர்களின் கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்த ஆரம்பித்தார். பின் தன் இடுப்புத் துண்டால் அவர்கள் கால்களைத் துடைத்தார்.
6 இயேசு, சீமோன் பேதுருவிடம் வந்தார். ஆனால் பேதுருவோ இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான்.
7 அதற்கு இயேசு அவனிடம், “நான் என்ன செய்கிறேன் என்று இப்போது உனக்குத் தெரியாது. ஆனால் பிறகு நீ புரிந்துகொள்வாய்” என்றார்.
8 பேதுருவோ, “இல்லை நீர் என் கால்களைக் கழுவவேகூடாது” என்றான்.
இயேசுவோ, “நான் உன் கால்களைக் கழுவாவிட்டால், நீ என்னோடு பங்குள்ளவனாக இருக்க முடியாது” என்றார்.
9 உடனே பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களோடு, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவுங்கள்” என்றான்.
10 “ஒரு மனிதன் குளித்தபிறகு அவனது சரீரம் எல்லாம் சுத்தமாகிவிடுகிறது. அதன் பிறகு அவன் கால்களை மட்டும் கழுவினால் போதும். நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அனைவரும் அல்ல” என்றார் இயேசு. 11 யார் தனக்கு எதிராக மாறியுள்ளவன் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான் இயேசு “நீங்கள் அனைவரும் சுத்தமாக இல்லை” என்று கூறினார்.
12 இயேசு அவர்களின் கால்களைச் சுத்தப்படுத்தி முடித்தார். பிறகு அவர் தன் ஆடைகளை அணிந்துகொண்டு சாப்பாடு மேசைக்குத் திரும்பினார். இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குக்காகச் செய்தவற்றை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? 13 நீங்கள் என்னை ‘ஆண்டவரே’ என்று அழைக்கிறீர்கள், இதுதான் சரியானது, ஏனென்றால் உண்மையில் நான் ஆண்டவராகவே இருக்கிறேன். 14 நான் உங்கள் போதகராகவும் ஆண்டவராகவும் இருக்கிறேன். ஆனால் நான் ஒரு வேலைக்காரனைப்போன்று உங்கள் கால்களைக் கழுவினேன். ஆகையால் நீங்கள் ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளுங்கள். 15 இதை நான் ஒரு முன்மாதிரியாகவே செய்தேன். நான் உங்களுக்குச் செய்ததுபோலவே நீங்களும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளுங்கள். 16 நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்ல. ஒருவன் என்னதான் பெரிய காரியங்களைச் செய்தாலும் அனுப்பப்பட்டவன் அனுப்பியவரைவிட பெரியவனல்ல. 17 நீங்கள் இவற்றை அறிந்துகொண்டால், அவற்றைச் செய்யும்போது மகிழ்ச்சியடைவீர்கள்.
18 “நான் உங்கள் எல்லாரையும்பற்றிப் பேசவில்லை. நான் தேர்ந்தெடுத்த மக்களைப் பற்றி நான் அறிவேன். ஆனால் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டும். ‘என்னோடு பகிர்ந்துகொண்டு உண்பவனே எனக்கு எதிராகத் திரும்பிவிட்டான்.’[a] 19 இது நிறைவேறும் முன்னால் நான் உங்களுக்கு இதை இப்பொழுது சொல்லுகிறேன். இது நடக்கும்போது நானே அவர் என நம்புவீர்கள். 20 நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். என்னை ஏற்றுக்கொள்பவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.
காட்டிக் கொடுப்பவன்
(மத்தேயு 26:20-25; மாற்கு 14:17-21; லூக்கா 22:21-23)
21 இவற்றைச் சொன்னபிறகு இயேசு மிகவும் கலக்கம் அடைந்தார். வெளிப்படையாக அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.
22 இயேசுவின் சீஷர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இயேசுவால் குறிப்பிடப்பட்டவன் எவனென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. 23 சீஷர்களில் ஒருவன் இயேசுவுக்கு அடுத்து அமர்ந்திருந்தான். அவனைத்தான் இயேசு பெரிதும் நேசித்தார். 24 சீமோன் பேதுரு அவனிடம் இயேசுவிடம் கேட்கும்படி சாடையாகத் தெரிவித்தான்.
25 அவன் இயேசுவின் அருகில் சாய்ந்து, “ஆண்டவரே, உங்களுக்கு எதிரானவன் யார்?” என்று கேட்டான்.
26 இயேசு அதற்கு, “நான் இந்தத் தோய்த்தெடுத்த அப்பத்துண்டை எவனுக்குக் கொடுக்கிறேனோ அவனே எனக்கு எதிரானவன்” என்றார். பின்னர் அவர் அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் குமாரனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். 27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். இயேசு யூதாஸிடம், “நீ செய்யப் போவதைச் சீக்கிரமாகக் செய்” என்றார். 28 அந்த மேஜையைச் சுற்றியிருந்த எவருக்கும் இயேசு யூதாஸிடம் ஏன் அவ்வாறு சொன்னார் என்பது புரியவில்லை. 29 அவர்களில் யூதாஸ் மட்டும் தான் பணப்பெட்டியைப் பாதுகாப்பவன். எனவே அவர்கள், இயேசு யூதாஸிடம் விருந்துக்கான பொருட்களை வாங்கி வரும்படியாக ஏதோ கூறுவதாக எண்ணிக்கொண்டார்கள். அல்லது யூதாஸ் ஏழைகளுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்குமாறு இயேசு கூறுவதாக நினைத்துக்கொண்டனர்.
30 இயேசு கொடுத்த அப்பத்துண்டை யூதாஸ் பெற்றுக்கொண்டான். பிறகு அவன் வெளியேறினான். அப்போது இரவு நேரமாயிருந்தது.
தம் மரணத்தைப்பற்றி முன்னறிவிப்பு
31 யூதாஸ் போனபிறகு இயேசு, “இப்பொழுது மனித குமாரன் தன் மகிமையை அடைகிறார். தேவன் தன் குமாரன் மூலமாக மகிமையைப் பெறுகிறார். 32 அவர் மூலம் தேவன் மகிமையை அடைந்தால், பிறகு தேவன் தன் குமாரனுக்கு அவர் மூலமாகவே மகிமை அளிப்பார். தேவன் விரைவில் அவருக்கு மகிமை தருவார்.
33 “எனது பிள்ளைகளே, நான் இன்னும் கொஞ்சக் காலம் மட்டும்தான் உங்களோடு இருப்பேன். என்னை நீங்கள் தேடுவீர்கள். நான் யூதர்களுக்கு சொன்னவற்றையே இப்பொழுது உங்களுக்கும் சொல்கிறேன். நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரமுடியாது.
34 “நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைத் தருகிறேன். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். நான் உங்களை நேசித்ததுபோன்று நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். 35 நீங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தால் அனைத்து மக்களும் உங்களை என் சீஷர்களென அறிந்துகொள்வர்” என்றார்.
பேதுரு மறுதலிப்பது பற்றி
(மத்தேயு 26:31-35; மாற்கு 14:27-31; லூக்கா 22:31-34)
36 சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நான் எங்கே போனாலும் உன்னால் அங்கே பின்தொடர்ந்து இப்போது வர முடியாது. ஆனால் நீ பிறகு என் பின்னே வருவாய்” என்றார்.
37 பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நான் இப்பொழுது ஏன் உங்களைப் பின்தொடர முடியாது? நான் உங்களுக்காக உயிர் தரவும் தயார்” என்றான்.
38 இயேசு அதற்கு, “நீ உண்மையிலேயே எனக்காக உன் உயிரையும் தருவாயா? நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். நீ என்னை அறியாதவன் என்று சேவல் கூவுவதற்கு முன்னால் மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார்.
2008 by World Bible Translation Center