M’Cheyne Bible Reading Plan
யூதாவின் அரசனான உசியா
26 யூதா ஜனங்கள் அமத்சியாவின் இடத்தில் உசியா என்பவனைப் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். அமத்சியா, உசியாவின் தந்தை ஆவான். இது இவ்வாறு நிகழும்போது உசியாவின் வயது 16. 2 உசியா மீண்டும் ஏலோத் நகரத்தை கட்டி யூதாவிற்குத் திருப்பிக் கொடுத்தான். அமத்சியா மரித்த பிறகு உசியா இதனைச் செய்தான். அம்த்சியாவை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.
3 உசியா அரசனாகும்போது அவனுக்கு 16 வயது. அவன் எருசலேமில் 52 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் எக்கோலியாள். இவள் எருசலேம் நகரத்தவள். 4 கர்த்ததருடைய விருப்பம் போலவே உசியா காரியங்களைச் செய்தான். அவனது தந்தை அமத்சியாவைப் போலவே தேவனுக்கு அடிபணிந்து வாழ்ந்து வந்தான். 5 சகரியாவின் வாழ்நாளிலே உசியா தேவனைப் பின்பற்றினான். சகரியா அவனுக்கு எவ்வாறு தேவனுக்கு மரியாதை செலுத்துவது என்பதைப்பற்றியும் தேவனுக்கு கீழ்ப்படிவது பற்றியும் சொல்லித்தந்தான். உசியா கர்த்தரிடம் கீழ்ப்படிந்து இருந்தவரை தேவனும் அவனுக்கு வெற்றியைத் தந்தார்.
6 உசியா பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போரிட்டான். காத், யப்னே, அஸ்தோத் ஆகிய நகர சுவர்களை இடித்து வீழ்த்தினான். அஸ்தோத் நகரத்தின் அருகிலே இவன் புதிய நகரங்களைக் கட்டினான். பெலிஸ்திய ஜனங்களுக்கிடையில் வேறு இடங்களிலும் ஊர்களை கட்டினான். 7 பெலிஸ்தர்களுடனான போரிலும், கூர்பாகாலில் இருந்த அரபியரோடான போரிலும், மெகுனியரோடான போரிலும் வெற்றிபெற உசியாவுக்கப் பெருமளவில் தேவன் உதவினார். 8 அம்மோனியர்கள் உசியாவிற்கு காணிக்கைகளைக் கொடுத்தனர். எகிப்தின் எல்லைவரை உசியாவின் புகழ் பரவி இருந்தது. இவன் பலமிக்கவன் ஆதலால் பெரும் புகழையும் பெற்றான்.
9 உசியா எருசலேமில் மூலைவாசலிலும் பள்ளத்தாக்கு வாசலிலும் சுவர்களின் முடிவிலும் கோபுரங்களைக் கட்டினான். அவற்றைப் பலப்படுத்தினான். 10 உசியா வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டினான். பல கிணறுகளைத் தோண்டினான். இவனுக்கு மலைநாடுகளிலும் சமவெளிகளிலும் ஏராளமான ஆடுகள் இருந்தன. உசியா மலை நாடுகளில் விவசாயிகளைப் பெற்றிருந்தான். பயிர்கள் நன்றாக விளைந்தன. திராட்சைத் தோட்டத்தைக் கவனிப்பவர்களும் இருந்தனர். உசியா விவசாயத்தைப் பெரிதும் விரும்பினான்.
11 பயிற்சி பெற்ற வீரர்கள் நிறைந்த படை உசியாவிடம் இருந்தது. அவ்வீரர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். செயலாளனான ஏயெலியும் அதிகாரியான மாசேயாவும் இப்பிரிவுகளைச் செய்தனர். அனனியாவும் அரசனின் அதிகாரிகளுள் ஒருவன். இவன் மற்ற அதிகாரிகளுக்குத் தலைவன். 12 இந்த வீரர்களுக்கு 2,600 தலைவர்கள் இருந்தனர். 13 இக்குடும்பத் தலைவர்களே மிகுந்த ஆற்றலுடன் போரிடவல்ல 3,07,500 வீரர்களுக்கும் பொறுப்பாளர்களாக இருந்தனர். வில்வீரர்கள் அனைவரும் பகைவர்களுக்கு எதிராக வெல்ல அரசனுக்கு உதவினார்கள். 14 உசியா படைக்குக் கேடயங்கள், ஈட்டிகள், தலைகவசங்கள், மார்க்கவசங்கள், வில்கள், கவண்களுக்குக் கற்கள் ஆகியவற்றைக் கொடுத்தான். 15 எருசலேமில் உசியா, புத்திசாலிகளால் அமைக்கப்பட்ட எந்திரங்களை கோபுரங்களின் மேலும், சுவர்களின் மேலும் வைத்தான். இந்த எந்திரங்கள் அம்புகளையும், கற்களையும் எறிந்தன. இதனால் உசியா பெரும் புகழ்பெற்றான். வெகு தொலை நாடுகளிலுள்ள ஜனங்களும் இவனைப்பற்றி அறிந்துகொண்டனர். அதிகமான உதவியைப் பெற்று அவன் வலிமைமிக்க ஒரு அரசனானான்.
16 ஆனால் உசியா பலமுள்ளவனாக ஆனதும் அவனது தற்பெருமை அவனுக்கு அழிவை விளைவித்தது. அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லை. அவன் நறுமணப் பொருட்களை எரிக்கும் பலிபீடத்தின் மீது நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். 17 அசரியா என்ற ஆசாரியனும் கர்த்தருடைய ஆசாரியர்களுள் தைரியமிக்க 80 ஆசாரியர்களும் உசியாவைப் பின்தொடர்ந்து ஆலயத்திற்குள் சென்றனர். 18 அவர்கள் உசியாவின் தவறுகளை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம், “உசியாவே, கர்த்தருக்குத் தூபம் காட்டுவது உனது வேலையல்ல. இவ்வாறு செய்வது உனக்கு நல்லதன்று. இந்த ஆசாரியர்கள் பரிசுத்தமான நறுமணப்பொருட்களை எரிப்பதற்குப் பயிற்சிப் பெற்றவர்கள். ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார் மட்டுமே இதனைச் செய்யவேண்டும். மகா பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போ, நீ உண்மையுள்ளவனாக இல்லை. இதற்காக தேவனாகிய கர்த்தர் உம்மை கனம் பண்ணமாட்டார்” என்றனர். 19 இதனால் உசியா கோபம் கொண்டான். அவன் தன் கையில் நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக ஒரு கலசத்தை வைத்திருந்தான். அத்தோடு அவன் ஆசாரியர்களோடு கோபமாகப் பேசியபோது அவன் நெற்றியில் தொழுநோய் தோன்றியது. இது ஆசாரியர்களுக்கு முன்பாக கர்த்தருடைய ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் நறுமணப் பொருட்களை எரிக்கும்போது நடந்தது. 20 தலைமை ஆசாரியனாகிய அசரியாவும் மற்ற ஆசாரியர்களும் இதனைக் கண்டனர். அவர்கள் அவனது நெற்றியில் ஏற்பட்ட தொழுநோயையும் கண்டனர். உடனே உசியாவை ஆலயத்தைவிட்டு வெளியேறும்படி அவர்கள் கூறினார்கள். கர்த்தர் அவனைத் தண்டித்து விட்டதால் அவனும் வேகமாக ஆலயத்தைவிட்டு வெளியேறினான். 21 உசியா எனும் அரசன் தொழுநோயாளியானான். அவனால் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு தனி வீட்டில் அவன் வசிக்க வேண்டியதாயிற்று. அவனது மகனான யோதாம் அரண்மனையைக் கட்டுப்படுத்தினான். அவனே ஜனங்களின் ஆளுநர் ஆனான்.
22 தொடக்ககாலம் முதல் இறுதிவரை உசியா செய்த வேறு செயல்கள், ஆமோத்சின் மகனான ஏசாயா எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டுள்ளன. 23 உசியா மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். அரசர்களின் கல்லறைகளுக்கு அருகில் உள்ள வயல் வெளிகளில் உசியாவை அடக்கம் செய்தனர். ஜனங்கள், “உசியாவிற்குத் தொழு நோய் இருந்தது” என்றனர் என்பதே இதன் காரணம் யோதாம் புதிய அரசனாக உசியாவின் இடத்தில் அரசேற்றான். யோதாம் உசியாவின் மகன் ஆவான்.
இரண்டு மிருகங்கள்
13 பின்பு கடலுக்குள் இருந்து ஒரு மிருகம் வெளிவருவதைக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் ஒவ்வொரு கொம்பின் மேலும் ஒரு கிரீடம் இருந்தது. அதன் ஒவ்வொரு தலைமீதும் ஒரு கெட்ட பெயர் எழுதப்பட்டிருந்தது. 2 அந்த மிருகம் பார்ப்பதற்கு ஒரு சிறுத்தையைப் போன்று இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்களைப்போலவும் அதன் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன. இராட்சசப் பாம்பானது அம்மிருகத்துக்குத் தன் முழு பலத்தையும், சிம்மாசனத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தது. 3 அம்மிருகத்தின் தலைகளில் ஒன்று சாவுக்கேதுவாகக் காயம்பட்டதுபோல காணப்பட்டது. சாவுக்கேதுவான அக்காயம் குணப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள அத்தனை பேரும் அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டு அம்மிருகத்தைப் பின்பற்றினர். 4 இராட்சசப் பாம்பு அந்த மிருகத்துக்கு அனைத்து பலத்தையும் கொடுத்ததால் மக்கள் அப்பாம்பை வழிபடத் தொடங்கினர். மக்கள் அம்மிருகத்தையும் வழிபட்டனர். அவர்கள், “இம்மிருகத்தைப்போன்று பலமிக்கது வேறு என்ன இருக்கிறது? அதனை எதிர்த்து யாரால் போரிடமுடியும்?” என்று பேசிக்கொண்டனர்.
5 அம்மிருகம் பெருமையானவற்றையும், தீய வார்த்தைகளையும் பேச அனுமதிக்கப்பட்டது. நாற்பத்திரண்டு மாதங்கள் தன் அதிகாரத்தைச் செலுத்த அம்மிருகம் அனுமதிக்கப்பட்டது. 6 அம்மிருகம் தன் வாயைத் திறந்து தேவனுக்கு எதிரானவற்றைப் பேசியது. அது தேவனுடைய பெயருக்கு எதிராகவும், தேவன் வாழும் இடத்துக்கு எதிராகவும், பரலோகத்தில் வாழ்பவர்களுக்கு எதிராகவும் பேசியது. 7 தேவனுடைய பரிசுத்த மக்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெறும் அதிகாரமும் அந்த மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. உலகில் உள்ள ஒவ்வொரு குல, இன, மொழி, நாட்டின் மீதும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 8 உலகில் வாழும் அத்தனை மக்களும் அந்த மிருகத்தை வழிபடுவார்கள். இவர்கள், உலகத்தின் துவக்கக்காலம் முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர்கள் எழுதப்படாத மக்கள் ஆவார்கள்.
9 கேட்கிற சக்தி உள்ளவன் எவனும் இதனைக் கேட்பானாக.
10 எவனொருவன் சிறைப்படுத்திக்கொண்டு போகிறானோ
அவன் சிறைபட்டுப் போவான்.
எவனொருவன் வாளால் கொல்பவனாக இருக்கிறானோ
அவன் வாளால் கொல்லப்பட்டுப் போவான்.
இதன் பொருள், “தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும்” என்பதாகும்.
பூமியிலிருந்து வெளிவரும் மிருகம்
11 பிறகு வேறொரு மிருகம் பூமிக்குள் இருந்து வெளிவருவதைப் பார்த்தேன். அதற்கு ஆட்டுக்குட்டியைப்போன்று இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் அது இராட்சச பாம்பினைப் போன்று பேசியது. 12 இது முதல் மிருகத்தின் முன்னே நிற்கிறது. முதல் மிருகம் பயன்படுத்திய அதே சக்தியை இதுவும் பயன்படுத்துகிறது. அது பூமியில் வாழ்கிற மக்கள் அனைவரையும் அந்த முதல் மிருகத்தை வழிபடுமாறு தன் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அந்த முதல் மிருகமே குணப்படுத்தப்பட்ட மரணக் காயத்தைக் கொண்டிருந்தது. 13 இந்த இரண்டாம் மிருகம் மாபெரும் அற்புதங்களைச் செய்கிறது. மக்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே வானத்திலிருந்து பூமிக்கு நெருப்பை வரச் செய்கிறது.
14 அந்த முதல் மிருகத்தின் முன்னிலையில் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஆற்றலினால் அற்புதங்களை நிகழ்த்தி, பூமியில் வசிக்கிற மக்களை இம்மிருகம் வஞ்சிக்கிறது. முதல் மிருகத்தை கௌரவிக்க ஒரு விக்கிரகத்தைச் செய்யுமாறு இரண்டாவது மிருகம் மக்களுக்கு ஆணையிட்டது. வாளால் காயம் அடைந்தாலும் கூட இறக்காத மிருகம் இதுவாகும். 15 முதல் மிருகத்தின் உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கிற வல்லமை இரண்டாவது மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு அந்த உருவச் சிலையால் பேசவும், அதை வணங்காதவரைக் கொல்லும்படி மக்கள் அனைவருக்கும் ஆணையிடவும் முடிந்தது. 16 இரண்டாவது மிருகமும் மக்கள் அனைவரையும் அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் சுதந்தரமானவர்களாக இருந்தாலும் சரி, அடிமைகளாக இருந்தாலும் சரி அவர்களின் வலக்கையிலாவது நெற்றியிலாவது முத்திரை பெறும்படியும் வலியுறுத்தியது. 17 எந்த ஒரு மனிதனுக்கும் அந்த அடையாளக்குறி இல்லாமல் விற்கவோ, வாங்கவோ முடியவில்லை. அந்த அடையாளம் என்பது மிருகத்தின் பெயர் அல்லது பெயரின் எண்ணாகும்.
18 புரிந்துகொள்ளக் கூடிய அறிவுள்ளவன் எவனும் அம்மிருகத்தின் எண்ணைப் புரிந்துகொள்ள முடியும். அந்த எண் ஒரு மனிதனின் எண்ணாகும். அவனது எண் 666 ஆகும்.
பிற நாடுகளுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு
9 தேவனிடம் இருந்து ஒரு செய்தி, ஆதிராக் நாட்டைப் பற்றியும், அவனது தமஸ்கு தலைநகரத்தைப் பற்றியும் எதிராக உள்ள கர்த்தருடைய செய்தி. “இஸ்ரவேலின் சகல கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் மட்டுமே தேவனைப் பற்றித் தெரிந்தவர்களல்ல. அவரிடம் ஒவ்வொருவரும் உதவி கேட்கிறார்கள். 2 ஆமாத், ஆதிராக் நாட்டின் எல்லை. தீரு, சீதோன் நகரத்தார் திறமையும், மதிநுட்பமும் உடையவர்களாக இருந்தபோதிலும், இச்செய்தி அவர்களுக்கு எதிரானது. 3 தீரு ஒரு கோட்டையைப் போன்று கட்டப்பட்டது. அங்குள்ள ஜனங்கள் வெள்ளியை வசூல் செய்தார்கள். அது புழுதியைப் போல் மிகுதியாக இருந்தது. பொன்னானது களி மண்ணைப்போன்று சாதாரணமாக இருந்தது. 4 ஆனால் நமது அதிகாரியாகிய கர்த்தர் அவற்றை எடுத்துக்கொள்வார். அவர் ஆற்றல் மிக்க கப்பல் படையை அழிப்பார். நகரமானது நெருப்பால் அழிக்கப்படும்.
5 “அஸ்கலோனில் உள்ள ஜனங்கள் அவற்றைப் பார்ப்பார்கள். அவர்கள் அஞ்சுவார்கள். காத்சா ஜனங்கள் அச்சத்தால் நடுங்குவார்கள். எக்ரோன் ஜனங்கள் நிகழ்வதைப் பார்த்து நம்பிக்கையை இழப்பார்கள். காத்சாவில் எந்த அரசனும் விடுபடமாட்டான். அஸ்கலோனில் எவரும் வாழமாட்டார்கள். 6 அஸ்தோத்தில் உள்ள ஜனங்கள் தங்களது உண்மையான தந்தை யாரென்று அறியமாட்டார்கள். நான் தற்பெருமைமிக்க பெலிஸ்திய ஜனங்களை முழுவதுமாக அழிப்பேன். 7 அவர்கள் இரத்தமுள்ள இறைச்சியை உண்ணமாட்டார்கள். வேறு உண்ணக்கூடாத உணவையும் உண்ணமாட்டார்கள். மீதியுள்ள பெலிஸ்திய ஜனங்கள் என் ஜனங்களின் ஒரு பகுதியாக இருப்பார்கள். அவர்கள் யூதாவின் மற்றுமொறு கோத்திரமாக இருப்பார்கள். எக்ரோன் ஜனங்கள் என் ஜனங்களின் ஒரு பகுதியாக எபூசியர்களைப்போல இருப்பார்கள். நான் எனது நாட்டைக் காப்பாற்றுவேன். 8 நான் பகைவர்கள் படைகளை என் நாட்டின் வழியாகப் போக அனுமதிக்கமாட்டேன். நான் அவர்கள் என் ஜனங்களைத் துன்புறுத்தும்படி விடமாட்டேன். என் சொந்தக் கண்களால் எனது ஜனங்கள் கடந்த காலத்தில் எவ்வளவு துன்புற்றார்கள் எனப் பார்த்தேன்.”
வருங்கால அரசன்
9 சீயோன் நகரமே, மகிழ்ச்சியாயிரு.
எருசலேம் ஜனங்களே, மகிழ்ச்சியோடு கூவுங்கள்.
பார், உனது அரசன் உன்னிடம் வருகிறார்.
அவர் நல்லவர், வெற்றிபெற்ற அரசன்.
ஆனால் அவர் பணிவுள்ளவர்.
அவர் கழுதை மேல் வந்துக்கொண்டிருக்கிறார்.
இது வேலை செய்யக்கூடிய கழுதைக்கு பிறந்த இளங்கழுதை.
10 அரசன் கூறுகிறார்: “நான் எப்பிராயீமின் இரதங்களை அழித்தேன்.
எருசலேமின் குதிரைவீரர்களை அழித்தேன்.
நான் போரில் பயன்படும் வில்களை அழித்தேன்.”
அவ்வரசன் சமாதனத்தின் செய்தியை நாடுகளுக்கு அறிவிப்பான்.
அவன் கடல் விட்டு கடலையும் ஐபிராத்து நதி தொடங்கி
பூமியிலுள்ள தொலைதூர இடங்களையும் ஆள்வான்.
கர்த்தர் தனது ஜனங்களைப் காப்பாற்றுவார்
11 எருசலேமே, உனது உடன்படிக்கையை நாம் இரத்தத்தால் முத்தரித்தோம்.
எனவே நான் தரையில் துவாரங்களில் அடைப்பட்ட ஜனங்களை விடுதலை பண்ணுவேன்.
12 கைதிகளே, வீட்டிற்குப் போங்கள்.
இப்பொழுது நீங்கள் நம்பிக்கைக்கொள்ள இடமுண்டு.
நான் திரும்பி உங்களிடம் வருவேன்
என்று இப்பொழுது சொல்கிறேன்.
13 யூதாவே, நான் உன்னை வில்லைப் போல் பயன்படுத்துவேன்.
எப்பிராயீமே, நான் உன்னை அம்பாகப் பயன்படுத்துவேன்.
நான் உங்களை கிரேக்க நாட்டாருக்கு எதிராக
வலிமையுள்ள வாளாகப் பயன்படுத்துவேன்.
14 கர்த்தர் அவர்களிடம் தோன்றுவார்.
அவர் தமது அம்புகளை மின்னலைப் போன்று எய்வார்.
எனது அதிகாரியாகிய கர்த்தர் எக்காளம் ஊதுவார்.
படையானது பாலைவனப் புயல்போல் விரையும்.
15 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அவர்களைக் காப்பார்.
வீரர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்காகக் கற்களையும், கவண்களையும் பயன்படுத்துவார்கள்.
அவர்கள் பகைவரின் இரத்தத்தை வடியச் செய்வார்கள்.
அது திராரட்சைரசத்தைப் போன்று பாயும்.
அது பலிபீடத்தின் மூலைகளில் வழியும் இரத்தத்தைப் போன்று இருக்கும்.
16 அந்த நேரத்தில், அவர்களின் தேவனாகிய கர்த்தர்,
மேய்ப்பன் ஆடுகளைக் காப்பது போல காப்பார்.
அவருக்கு அவர்கள் விலைமதிப்பற்றவர்கள்.
அவர்கள் அவரது நாட்டில் ஒளிவீசும் நகைகளைப் போன்றவர்கள்.
17 எல்லாம் நல்லதாகவும், அழகானதாகவும் இருக்கும்.
அங்கே அற்புதமான அறுவடை இருக்கும்.
ஆனால் அது உணவாகவும், திராட்சைரசமாகவும் இருக்காது.
இல்லை, இது இளம் ஆண்களும், பெண்களுமாய் இருக்கும்.
பெத்தானியாவில் இயேசு(A)
12 பஸ்கா பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தன. இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே லாசரு வாழ்ந்து வந்தான். (இவன் இறந்த பின்னரும் இயேசுவால் உயிர் பெற்று எழுந்தவன்) 2 பெத்தானியாவில் இயேசுவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்தனர். மார்த்தாள் உணவு பரிமாறினாள். இயேசுவோடு லாசருவும் இன்னும் பலரும் விருந்தில் கலந்துகொண்டனர். 3 மரியாள் சுத்தமான நளதம் என்னும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை ஒரு இராத்தல் கொண்டு வந்தாள். அவள் அதனை இயேசுவின் பாதங்களில் ஊற்றினாள். பிறகு அதனைத் தன் தலை மயிரால் துடைத்தாள். வீடு முழுவதும் தைலத்தின் வாசனை நிறைந்துவிட்டது.
4 யூதாஸ்காரியோத்தும் அங்கிருந்தான். (யூதாஸ் இயேசுவின் சீஷரில் ஒருவன். இவன்தான் பிறகு இயேசுவிற்கு எதிரானவன்.) மரியாள் செய்தவற்றை இவன் விரும்பவில்லை. 5 அவன் “இத்தைலம் முந்நூறு வெள்ளிகாசுகள் மதிப்பு உடையது. இதனை விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றான். 6 ஆனால் உண்மையில் அவனுக்கு ஏழைகளின்மீது அக்கறையில்லை. அவன் ஒரு திருடனானபடியால் இவ்வாறு சொன்னான். இவன்தான் இயேசுவின் சீஷர்களுள் பணப்பையை வைத்திருந்தவன். இவன் அவ்வப்போது பணப்பையிலிருந்து பணம் திருடி வந்தான்.
7 இயேசு அவனிடம், “அவளைத் தடை செய்யாதீர்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதைச் சேமித்து வைத்திருந்தாள். 8 ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நானோ எப்பொழுதும் உங்களோடு இருப்பதில்லை” என்றார்.
லாசருவுக்கு எதிரான சதி
9 யூதர்களில் பலர், இயேசு பெத்தானியாவில் இருப்பதாக அறிந்தனர். ஆகையால் அவர்கள் அங்கே சென்றனர். அவர்கள் இயேசுவை மட்டுமல்லாமல் லாசருவையும் பார்க்க எண்ணினர். லாசரு இயேசுவால் மரணத்துக்குப் பின்னும் உயிரோடு எழுப்பப்பட்டவன். 10 ஆகவே, தலைமை ஆசாரியர்களும் இயேசுவோடு லாசருவையும் கொல்லத் திட்டமிட்டார்கள். 11 ஏனென்றால் லாசருவின் நிமித்தம் ஏராளமான யூதர்கள் தங்கள் தலைவர்களை விட்டுவிட்டு இயேசுவை நம்பத் தொடங்கினர். அதனால்தான் யூதத் தலைவர்கள் லாசருவையும் கொலைசெய்ய விரும்பினர்.
எருசலேமில் இயேசு(B)
12 மறுநாள் இயேசு வருவதாக எருசலேமிலுள்ள பெருங்கூட்ட மக்கள் கேள்விப்பட்டனர். இம்மக்கள் பஸ்கா பண்டிகைக்காக வந்தவர்கள். 13 அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்:
“‘அவரைப் புகழ்வோம்! வருக!’
‘தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே!’ (C)
“தேவன் இஸ்ரவேலின் இராஜாவை ஆசீர்வதிப்பாராக!”
என்று முழங்கினர்.
14 இயேசு ஒரு கழுதையைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டார்.
15 “சீயோன் [a] நகரமே அஞ்சவேண்டாம். பார்.
உன் அரசர் வந்துகொண்டிருக்கிறார்.
அவர் இளங்கழுதைமேல் சவாரி செய்து வருகிறார்” (D)
என்றும் மக்கள் ஆரவாரம் செய்தனர்.
16 இயேசுவின் சீஷர்கள் இவற்றை முதலில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இயேசு மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்கள் இவை ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறதே என்று உணர்ந்துகொண்டனர். அத்துடன் அவருக்காகத் தாங்கள் செய்த செய்கைகளையும் நினைவுகூர்ந்தனர்.
இயேசுவைப்பற்றி மக்கள் பேசுதல்
17 மரணத்திலிருந்து லாசருவை இயேசு எழுப்பி “கல்லறையை விட்டு வெளியே வா” என்று சொன்னபோது இயேசுவுடன் பலர் இருந்தனர். இப்பொழுது அவர்கள் மற்றவர்களிடம் இயேசு செய்தவற்றைப்பற்றிக் கூறினர். 18 இயேசு இந்த அற்புதத்தைச் செய்ததைக் கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் இயேசுவை வரவேற்பதற்காகத் திரண்டனர். 19 அதனால் பரிசேயர்கள் தங்களுக்குள், “பாருங்கள், நமது திட்டம் நன்மையைத் தரவில்லை. எல்லா மக்களும் அவரைப் பின்தொடர்கிறார்கள்” என்று பேசிக்கொண்டனர்.
ஜீவன்-மரணம்
20 அங்கே கிரேக்க நாட்டு மக்களில் சிலரும் இருந்தனர். இவர்கள் பஸ்கா பண்டிகையில் வழிபாடு செய்ய எருசலேமுக்கு வந்திருந்தனர். 21 இவர்கள் பிலிப்புவிடம் சென்று (கலிலேயாவிலுள்ள பெத்சாய்தாவில் இருந்து வந்தவன் பிலிப்பு) “ஐயா, நாங்கள் இயேசுவைச் சந்திக்க விரும்புகிறோம்” என்றனர். 22 பிலிப்பு அந்திரேயாவிடம் சொன்னான். பிறகு இருவரும் இயேசுவிடம் சொன்னார்கள்.
23 இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமை பெறுகிற நேரம் வந்துவிட்டது. 24 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து (இறக்க) அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். ஆனால் அது அழியாவிட்டால், அது தனி விதையாகவே இருக்கும். 25 தனக்குச் சொந்தமான வாழ்வை நேசிக்கிறவன் அதனை இழப்பான். இவ்வுலகில் தன் வாழ்வின்மீது வெறுப்புகொண்டவன் என்றென்றைக்கும் அதைக் காத்துக்கொள்வான். அவன் நிரந்தர வாழ்வைப் பெறுவான். 26 எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கெங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம் என் பணியாளனும் இருப்பான். எனக்குப் பணி செய்கிறவர்களை என் பிதாவும் பெருமைப்படுத்துவார்.”
இயேசு தன் மரணத்தைப்பற்றிப் பேசியது
27 “நான் இப்போது கலக்கத்தில் இருக்கிறேன். நான் என்ன சொல்வது? ‘பிதாவே, என்னை இந்தத் துன்ப காலத்தில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று சொல்லலாமா? இல்லை, துன்பப்படுவதற்காகவே இத்தருணத்தில் வந்தேன். 28 பிதாவே, உங்கள் பெயருக்கே மகிமையை தேடித்தருக!” என்றார்.
அப்போது வானில் இருந்து ஒரு குரல் வந்து, “நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன்” என்றது.
29 அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர்.
வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்றனர்.
30 மக்களிடம் இயேசு, “இந்தக் குரல் எனக்காக அல்ல. உங்களுக்காக. 31 உலகம் நியாயம் தீர்க்கப்படுவதற்கான தருணம் இதுதான். இப்பொழுது உலகை ஆண்டுகொண்டிருக்கும் சாத்தான் தூக்கி எறியப்படுவான். 32 நான் பூமியில் இருந்து உயர்த்தப்படுவேன். இது நடைபெறும்போது எல்லா மக்களையும் என்னோடு சேர்த்துக்கொள்வேன்” என்றார். 33 தான் எவ்வாறு இறந்துபோவேன் என்பதைக் காட்டவே இவ்வாறு கூறினார்.
34 ஆனால் மக்களோ, “கிறிஸ்து என்றென்றும் வாழ்வார் என்று நமது சட்டங்கள் கூறுகின்றனவே. அப்படியிருக்க ‘மனித குமாரன் உயர்த்தப்படுவார்’ என்று ஏன் கூறுகின்றீர்? யார் இந்த ‘மனித குமாரன்?’” எனக் கேட்டனர்.
35 பிறகு இயேசு, “இன்னும் சிறிது காலம் உங்களோடு ஒளி இருக்கும். எனவே, ஒளி இருக்கும்போதே நடந்துவிடுங்கள். அப்போதுதான் இருட்டாகிய பாவம் உங்களைப் பிடித்துக்கொள்ளாது. இருட்டிலே நடந்துபோகிறவனுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும். 36 ஆகவே, ஒளி இருக்கும்போதே அதன்மீது நம்பிக்கை வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஒளியின் பிள்ளைகள் ஆவீர்கள்” என்றார். இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின் அவ்விடத்தை விட்டுப் போனார். அவர் போய் அவர்களிடமிருந்து தன்னை மறைத்துக்கொண்டார்.
இயேசுவை நம்பாத யூதர்கள்
37 இயேசு இவ்வாறு ஏராளமான அற்புதங்களைச் செய்தார். மக்கள் அவற்றைப் பார்த்தனர். எனினும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. 38 தீர்க்கதரிசி ஏசாயா சொன்னது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.
“கர்த்தாவே, நாங்கள் சொன்னதைக் கேட்டு நம்பிக்கை வைத்தவர்கள் யார்?
தேவனின் வல்லமையைக் கண்டுகொண்டவர்கள் யார்?” (E)
39 இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும்,
40 “தேவன் மக்களைக் குருடாக்கினார்.
தேவன் அவர்களின் மனதை மூடினார்.
அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்கவேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார்.
அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன்.” (F)
41 இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார்.
42 ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவை நம்பினார்கள். ஏராளமான யூதத்தலைவர்கள் கூட இயேசுவை நம்பினார்கள். ஆனால் அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்தனர். எனவே, அவர்கள் இயேசுவை நம்புவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. தாம் ஜெப ஆலயத்திற்குப் புறம்பாக்கப்படுவோமோ என்று அவர்கள் பயந்தனர். 43 அவர்கள் தேவனால் வரும் பாராட்டைவிட மனிதரால் வரும் பாராட்டை விரும்பினர்.
தீர்ப்பளிக்கும் வசனங்கள்
44 பிறகு இயேசு உரத்த குரலில், “என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான். 45 என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான். 46 நானே ஒளி, நான் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறேன். ஆகவே, என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான்.
47 “நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை. 48 என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம்தீர்க்கும். 49 ஏனென்றால் நான் சொன்ன உபதேசங்கள் என்னிடமிருந்து வந்தவையல்ல. நான் சொன்னவையும் உபதேசித்தவையும் என்னை அனுப்பிய என் பிதாவாகிய தேவன் எனக்குச் சொன்னவையாகும். 50 என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றார்.
2008 by World Bible Translation Center