M’Cheyne Bible Reading Plan
யூதாவின் அரசனான அமத்சியா
25 அரசனானபோது அமத்சியாவுக்கு 25 வயது. அவன் எருசலேமிலிருந்து 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் யோவதானாள். இவள் எருசலேமியப் பெண். 2 கர்த்தர் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினாரோ அதையே அமத்சியா செய்தான். ஆனால் அவன் அவற்றை முழு மனதோடு செய்யவில்லை. 3 அமத்சியா பலமுள்ள அரசன் ஆனான். தன் தந்தையைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்றான். 4 ஆனால் அவன் அந்த அதிகாரிகளின் பிள்ளைகளைக் கொல்லவில்லை. ஏனென்றால் மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டங்களுக்கு அவன் அடிபணிந்தான். கர்த்தர், “பிள்ளைகளின் செயல்களுக்காகப் பெற்றோர்கள் கொல்லப்படக்கூடாது. பெற்றோர்கள் செய்த செயல்களுக்காகப் பிள்ளைகளும் கொல்லப்படக்கூடாது. ஒருவன் தான் செய்த பாவத்துக்காகமட்டுமே தண்டிக்கப்படவேண்டும்” என்று கட்டளையிட்டிருக்கிறார்.
5 அமத்சியா யூதாவின் ஜனங்களை அனைவரையும் ஒன்றாகத் திரட்டினான். சில குழுக்களாக அவர்களை அவன் பிரித்தான். பிறகு அக்குழுக்களுக்கு தளபதிகளையும், தலைவர்களையும் நியமித்தான். அவர்கள் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தின் வீரர்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இருபதும் அதற்கு மேலும் வயதுடைய வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் ஈட்டியும் கேடயமும் கொண்டு போரிடும் வீரர்கள் 3,00,000 பேர் இருந்தனர். 6 அமத்சியா இஸ்ரவேலில் இருந்து 1,00,000 வீரர்களை அழைத்தான். அவர்களுக்கு 100 தாலந்து வெள்ளியைக் கூலியாகக் கொடுத்தான். 7 ஆனால் ஒரு தேவமனிதன் (தீர்க்கதரிசி) ஒருவன் அமத்சியாவிடம் வந்தான். அவன், “அரசனே இஸ்ரவேல் வீரர்களை உன்னோடு அழைத்துக் கொண்டு போகாதே. கர்த்தர் இஸ்ரவேலர்களோடு இல்லை. எப்பிராயீம் ஜனங்களோடும் கர்த்தர் இல்லை. 8 உன்னை நீயே பலப்படுத்திக்கொண்டு போருக்கு தயாராகலாம். ஆனால் நீ வெற்றிபெறவோ அல்லது தோல்வியடையவோ தேவன் உதவுவார்” என்றான். 9 அமத்சியா தேவமனிதனிடம், “இஸ்ரவேல் படைக்கு நான் ஏற்கெனவே கொடுத்தப் பணத்துக்கு என்ன செய்ய?” என்று கேட்டான். அதற்கு தேவ மனிதன், “கர்த்தரிடம் ஏராளமாக உள்ளது. அவர் உனக்கு அவற்றைவிட மிகுதியாகக் கொடுப்பார்” என்றான்.
10 எனவே, அமத்சியா இஸ்ரவேல் படையை எப்பிராயீமுக்குத் திருப்பி அனுப்பிவிட்டான். அவர்களுக்கு அரசன் மீதும், யூதா ஜனங்கள் மீதும் கோபம் மிகுந்தது. அவர்கள் கோபத்தோடு வீட்டிற்குத் திரும்பினார்கள்.
11 பிறகு அமத்சியா மிகுந்த தைரியத்தோடு தனது படையை ஏதோம் நாட்டிலுள்ள உப்புப் பள்ளத்தாக்குக்கு நடத்திச் சென்றான். அங்கே அமத்சியாவின் படையானது 10,000 சேயீர் ஆண்களைக் கொன்றது. 12 யூதாவின் படை சேயீரிலிருந்து 10,000 ஆண்களையும் பிடித்தது. அவர்களை ஒரு மலை உச்சிக்குக் கொண்டுபோனார்கள். அந்த ஆட்கள் இன்னமும் உயிருடன் இருந்தார்கள். பின்னர் யூதாவின் படை அவர்களை மலையுச்சியில் இருந்து கீழே வீசி எறிந்தது. அவர்களது உடல்கள் கீழேயிருந்த பாறைகளின் மேல் உடைந்தன.
13 அதே நேரத்தில், இஸ்ரவேல் படையானது யூதா நகரங்களைத் தாக்கியது. அவர்கள் பெத்தொரோன் முதல் சமாரியாவரையுள்ள நகரங்களை எல்லாம் தாக்கினார்கள். அவர்கள் 3,000 பேரை கொன்று விலைமதிப்புள்ள பொருட்களைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களை அமத்சியா தன்னோடு போருக்கு அழைத்து போகாததால் அவர்கள் கோபமாக இருந்தனர்.
14 ஏதோமிய ஜனங்களை வென்ற பிறகு அமத்சியா வீட்டிற்குத் திரும்பினான். சேயீர் ஜனங்கள் தொழுது கொண்ட தெய்வ விக்கிரகங்களை அவன் கொண்டு வந்தான். அமத்சியா அவற்றைத் தொழுதுகொள்ள ஆரம்பித்துவிட்டான். அவற்றின் முன்னால் அவன் தரையில் விழுந்து வணங்கி அவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தான். 15 அதனால் அமத்சியாவின் மேல் கர்த்தருக்குக் கோபம் உண்டானது. அவர் அவனிடம் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அத்தீர்க்கதரிசி, “அமத்சியா, அந்த ஜனங்கள் தொழுது கொண்ட தெய்வங்களை நீ ஏன் தொழுதுகொள்கிறாய்? அத்தெய்வங்களால் அவர்களை உன்னிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லையே!” என்றான்.
16 அவ்வாறு அந்த தீர்க்கதரிசி பேசி முடித்ததும், அரசன் அவனிடம், “அரசனுக்கு ஆலோசனை சொல்லும்படி உன்னை நியமிக்கவில்லை! ஆகவே சும்மாயிரு. இல்லாவிட்டால் நீ கொல்லப்படுவாய்” என்றான். தீர்க்கதரிசி அமைதியானான். ஆனால் பிறகு, “தேவன் உண்மையில் உன்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஏனென்றால் நீ தீயவற்றைச் செய்ததோடு எனது ஆலோசனைகளையும் கேட்கவில்லை” என்றான்.
17 யூதாவின் அரசனான அமத்சியா, தனது ஆலோசகர்களோடு ஆலோசனை செய்தான். பிறகு அவன் இஸ்ரவேலின் அரசனான யோவாசுக்குத் தூது அனுப்பினான். அமத்சியா யோவாசிடம், “நாம் இருவரும் நேருக்குநேர் சந்திப்போம்” என்று அழைத்தான். யோவாஸ் யோவாகாசின் மகன் ஆவான். யோவாகாஸ் யெகூவின் மகன் ஆவான்.
18 பிறகு யோவாஸ் தனது பதிலை அமத்சியாவிற்கு அனுப்பினான். யோவாஸ் இஸ்ரவேலின் அரசன். அமத்சியா யூதாவின் அரசன். யோவாஸ், “லீபனோனில் உள்ள முட்செடியானது லீபனோனில் உள்ள கேதுரு மரத்திற்குத் தூது அனுப்பி, ‘நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்து தருவாயா’ என்று கேட்டது. ஆனாலும் ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப் போட்டது. 19 நீ உனக்குள்ளே, ‘நான் ஏதோமியரை வென்றிருக்கிறேன்’ என்று கூறுகிறாய். அதற்காக நீ பெருமைப்படுகிறாய். ஆனால் நீ உன் வீட்டிலேயே இரு. நீ துன்பத்தில் சிக்கிக்கொள்ள வேண்டிய தேவையில்லை. என்னிடம் போரிட வந்தால் நீயும், யூதாவும் அழிந்துப்போவீர்கள்” என்று சொல்லி அனுப்பினான்.
20 ஆனால் அமத்சியா அதனைக் கேட்கவில்லை. இது தேவனால் உண்டானது. தேவன் இஸ்ரவேல் மூலம் யூதாவைத் தோற்கடிக்க எண்ணினார். அதற்கு காரணம், யூதா நகர ஜனங்கள் ஏதோமியரின் தெய்வங்களைப் பின்பற்றி தொழுதுகொண்டு வந்தனர் என்பதாகும். 21 ஆகையால் இஸ்ரவேல் அரசனான யோவாஸ் யூதாவின் அரசனான அமத்சியாவை நேருக்கு நேராக பெத்ஷிமேசிலே சந்தித்தான். பெத்ஷிமேசு யூதாவிலே உள்ளது. 22 இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதாவைச் சேர்ந்த ஒவ்வொருவனும் தன் வீட்டிற்கு ஓடிப்போனான். 23 யோவாஸ் அமத்சியாவைப் பிடித்து எருசலேமிற்குக் கொண்டு போனான். அமத்சியாவின் தந்தையின் பெயர் எகோவஸ். இஸ்ரவேல் அரசன் எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் முதல் மூலை வாசல்வரை 400 முழ நீளம் இடித்துப்போட்டான். 24 பிறகு யோவாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்த பொன்னையும், வெள்ளியையும், இன்னும் பல பொருட்களையும் கொண்டுப் போனான். ஓபேத்ஏதோம் ஆலயத்திலுள்ள பொருட்களுக்குப் பொறுப்பாளியாக இருந்தான். யோவாஸ் அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டான். சிலரைச் சிறைப்பிடித்தான். பின் சமாரியாவிற்குத் திரும்பிப்போனான்.
25 யோவாஸ் மரித்தபிறகு அமத்சியா 15 ஆண்டுகள் வாழ்ந்தான். அமத்சியாவின் தந்தை யூதாவின் அரசனான யோவாஸ் ஆவான். 26 அமத்சியா தொடக்கத்திலிருந்தது முதல் இறுதிவரை செய்த மற்ற செயல்கள் எல்லாவற்றைப் பற்றியும் யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 27 அமத்சியா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை நிறுத்தியதும் எருசலேமிலுள்ள ஜனங்கள் அரசனுக்கு எதிராகத் திட்டமிட்டனர். அமத்சியா லாகீசுக்கு ஓடிப்போனான். ஜனங்கள் அங்கும் ஆட்களை அனுப்பி அமத்சியாவைக் கொன்றனர். 28 பிறகு அமத்சியா உடலை அங்கிருந்து குதிரையில் வைத்துக் கொண்டு வந்தனர். அவனை யூதாவின் நகரத்தில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.
ஒரு பெண்ணும், இராட்சச பாம்பும்
12 அத்துடன் பரலோகத்தில் ஓர் அதிசயம் காணப்பட்டது: ஒரு பெண் சூரியனை அணிந்திருந்தாள். அவளது பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது. அவளது தலையின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்கள் உள்ள கிரீடம் இருந்தது. 2 அவள் கருவுற்றிருந்தாள். அவள் வலியால் கதறினாள். ஏனெனில் அவள் குழந்தை பெறுகிற நிலையில் இருந்தாள். 3 பிறகு இன்னொரு அதிசயமும் பரலோகத்தில் காணப்பட்டது. மிகப் பெரிய சிவப்பு வண்ணமுடைய இராட்சசப் பாம்பு தோன்றியது. அதற்கு ஏழு தலைகளிருந்தன. ஏழு தலைகளிலும் ஏழு கிரீடங்கள் இருந்தன. அத்துடன் பத்துக் கொம்புகளும் அதற்கு இருந்தன. 4 அதன் வால் உயர்ந்து வானில் உள்ள நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து அவற்றைத் தரையில் வீசி எறிந்தன. பிள்ளை பெறுகிற நிலையில் இருந்த அப்பெண்ணின் முன்பு அந்தப் பாம்பு எழுந்து நின்றது. அவளுக்குக் குழந்தை பிறந்ததும் அதைத் தின்ன அப்பாம்பு தயாராக இருந்தது. 5 அப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவன் எல்லா தேசங்களையும் இரும்புக் கோலால் ஆட்சி செய்வான். பிறகு அக்குழந்தை தேவனுடைய முன்னிலையிலும் சிம்மாசனத்தின் முன்னிலையிலும் எடுத்துச்செல்லப்பட்டது. 6 அப்பெண் தேவனால் தயார் செய்யப்பட்ட இடமான பாலைவனத்திற்குள் ஓடினாள். அங்கே 1,260 நாட்கள் கவனித்துக்கொள்ளப்படுவாள்.
7 பின்பு பரலோகத்தில் ஒரு போர் உருவாயிற்று. அந்த இராட்சசப் பாம்புடன் மிகாவேலும் [a] அவனைச் சார்ந்த தேவ தூதர்களும் போரிட்டார்கள். பாம்பும், அதன் தூதர்களும் திரும்பித் தாக்கினார்கள். 8 பாம்பு போதுமான வல்லமை உடையதாய் இல்லை. இராட்சசப் பாம்பும், அதன் தூதர்களும் பரலோகத்தில் தம் இடத்தை இழந்தார்கள். 9 அப்பாம்பு பரலோகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டது. (பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகின்ற பழைய பாம்பு தான் இந்த இராட்சசப் பாம்பு ஆகும். அவன் உலகம் முழுவதையும் தவறான வழிக்குள் நடத்துகிறான்) பாம்பும் அதன் தூதர்களும் பூமியில் வீசி எறியப்பட்டார்கள்.
10 அப்போது நான் பரலோகத்தில் ஓர் உரத்த குரலைக் கேட்டேன். அது, “வெற்றியும் வல்லமையும் நம் தேவனுடைய இராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் இப்போது வந்திருக்கின்றன. ஏனெனில் நமது சகோதரர்கள்மேல் குற்றம் சுமத்தியவன் புறந்தள்ளப்பட்டான். நம் தேவனுக்கு முன்பாக இரவும் பகலும் நம் சகோதரர்கள் மேல் குற்றம் சுமத்தியவன் அவனே ஆவான். 11 நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை. 12 எனவே, பரலோகங்களே! அவற்றில் வாழ்பவர்களே! மகிழ்ச்சி அடையுங்கள். ஆனால் பூமிக்கும் கடலுக்கும் ஆபத்தாகும். ஏனெனில் சாத்தான் உங்களிடம் வந்துவிட்டான். அவன் கோபத்தோடு இருக்கின்றான். அவனது காலம் அதிகம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும்” என்றது.
13 இராட்சசப் பாம்பானது தான் பூமியில் வீசி எறியப்பட்டதை அறிந்துகொண்டது. ஆகையால் அது ஆண்பிள்ளையைப் பெற்ற அந்தப் பெண்ணைத் துரத்தியது. 14 ஆனால் அப்பெண்ணுக்குப் பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டன. அவற்றால் அவள் பாலைவனத்தில் தனக்காக தயார் செய்யப்பட்ட இடத்துக்குப் பறந்து செல்ல முடிந்தது. பாம்பிடமிருந்து அவள் அங்கே மூன்றரை வருட காலத்திற்கு கவனித்துக்கொள்ளப்பட்டாள். 15 பிறகு அப்பாம்பு தன் வாயில் இருந்து நதியைப் போன்று நீரை வெளியிட்டது. வெள்ளம் அப்பெண்ணை இழுத்துப்போக ஏதுவாக அந்நீர் அவளை நோக்கிச் சென்றது. 16 ஆனால் பூமி அப்பெண்ணுக்கு உதவியது. பூமி தன் வாயைத் திறந்து இராட்சசப் பாம்பின் வாயில் இருந்து வெளிவரும் வெள்ளத்தை விழுங்கியது.
17 பின்னும் அப்பாம்புக்கு அப்பெண்ணின்மீது மிகுந்த கோபம் இருந்தது. அவளது மற்ற பிள்ளைகளோடு போரிட அப்பாம்பு புறப்பட்டுப் போயிற்று. தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்களும், இயேசு போதித்த உண்மையைக் கொண்டிருப்பவர்களுமே அவளுடைய மற்ற பிள்ளைகள் ஆவார்கள்.
18 அந்த இராட்சசப் பாம்பு கடற்கரையில் நின்றது.
எருசலேமை ஆசீர்வதிக்க கர்த்தர் வாக்குறுதி அளிக்கிறார்
8 இதுதான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வருகிற செய்தி. 2 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “நான் சீயோனை உண்மையாக நேசிக்கிறேன். அவள் என்னை விசுவாசிக்காதபோது நான் மிகவும் கோபங்கொள்ளும் அளவுக்கு அதிகமாக அவளை நேசித்தேன்”. 3 கர்த்தர் கூறுகிறார், “நான் சீயோனுக்கு திரும்ப வந்திருக்கிறேன். நான் எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். எருசலேம் விசுவாசமுள்ள நகரம் என்று அழைக்கப்படும். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய மலையானது பரிசுத்தமான மலை என அழைக்கப்படும்.”
4 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “எருசலேமின் பொது இடங்களில் வயதான ஆண்களும், பெண்களும் மீண்டும் காணப்படுவார்கள். ஜனங்கள் நீண்டகாலம் கைதடியின் தேவை வரும்வரை வாழ்வார்கள். 5 நகரமானது தெருக்களில் விளையாடும் குழந்தைகளால் நிறைந்திருக்கும். 6 தப்பிப் பிழைத்தவர்கள் இதனை ஆச்சரியமானது என்று நினைப்பார்கள். நானும் இதை ஆச்சரியமானது என்றே நினைப்பேன்!”
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “பார், நான் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளிலிருந்து என் ஜனங்களை மீட்டுக் கொண்டிருக்கிறேன். 8 அவர்களை இங்கே மீண்டும் அழைத்து வருவேன். அவர்கள் எருசலேமில் வாழ்வார்கள். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் நல்ல உண்மையுள்ள தேவனாக இருப்பேன்.”
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “பலமாயிருங்கள். இன்று ஜனங்களாகிய நீங்கள் அதே செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இது, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆலயத்தை மீண்டும் கட்ட முதல் அஸ்திபாரக் கல்லைப் போட்டபோது சொன்னது. 10 அந்த நேரத்துக்கு முன்பு, கூலிக்கு வேலை ஆட்களையும், வாடகைக்கு மிருகங்களையும் அமர்த்த மனிதர்களிடம் பணம் இல்லாமல் இருந்தது. ஜனங்களுக்கு வந்து போவது பாதுகாப்பானதாக இல்லை. அவர்களுக்கு எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை இல்லாமல் இருந்தது. நான் ஒவ்வொருவரையும் தன் அயலாருக்கு எதிராக மாற்றியிருக்கிறேன். 11 ஆனால் இப்பொழுது அதுபோன்றில்லை. மீதியானவர்களுக்கு நான் முன்பு போன்று இருக்கமாட்டேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
12 “இந்த ஜனங்கள் சமாதானத்தோடு நடுவார்கள். அவர்களின் திராட்சைச் கொடிகள் திராட்சைகளைத் தரும். நிலம் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மேகங்கள் மழையைத்தரும். நான் எனது ஜனங்களுக்கு இவற்றையெல்லாம் தருவேன். 13 ஜனங்கள் தமது சாபங்களில் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் பெயர்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால் நான் இஸ்ரவேலையும், யூதாவையும் காப்பாற்றுவேன். அவற்றின் பெயர்கள் ஆசீர்வாதங்களாக மாறும் எனவே அஞ்ச வேண்டாம். உறுதியாய் இருங்கள்.”
14 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “உங்களது முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டினார்கள். எனவே நான் அவர்களை அழிக்க முடிவு செய்தேன். மனதை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார். 15 “ஆனால் இப்பொழுது நான் என் மனதை மாற்றிக் கொண்டேன். அதே வழியில் நான் எருசலேமிற்கும், யூத ஜனங்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே அஞ்சவேண்டாம். 16 ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யவேண்டும். நீங்கள் அயலாரிடம் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் நகரங்களில் நீங்கள் முடிவெடுக்கும்போது உண்மையானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். அது சமாதானத்தைக் கொண்டுவரும். 17 உனது அயலார்களைத் துன்புறுத்த ரகசியத் திட்டங்களைப் போடவேண்டாம். பொய்யான வாக்குறுதிகளை செய்யவேண்டாம். நீங்கள் அவற்றைச் செய்து மகிழ்ச்சி அடையக்கூடாது. ஏனென்றால், நான் அவற்றை வெறுக்கிறேன்” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
18 நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இச்செய்தியைப் பெற்றேன். 19 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “உங்களுக்குத் துக்கம் கொள்ளவும், உபவாசம் இருக்கவும், நாலாவது மாதத்திலும், ஐந்தாவது மாதத்திலும், ஏழவாவது மாதத்திலும், பத்தாவது மாதத்திலும் சிறப்பான நாட்கள் இருக்கும். அந்தத் துக்கத்துக்குரிய நாட்களை மகிழ்ச்சிக்குரிய நாட்களாக மாற்றவேண்டும். அவை நல்ல மகிழ்ச்சிகரமான நாட்களாக இருக்கும். நீங்கள் உண்மையையும் சமாதானத்தையும் நேசிக்க வேண்டும்.”
20 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,
“எதிர்காலத்தில், எருசலேமிற்கு பல நகரங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள்.
21 வேறுபட்ட நகரங்களிலிருந்து ஜனங்கள் ஒருவரையொருவர் வாழ்த்துதல் சொல்லுவார்கள்.
அவர்கள், ‘நாங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதுகொள்ளப் போகிறோம்’ என்பார்கள்.
மேலும் மற்றவன் ‘நான் உன்னோடு வரவிரும்புகிறேன்’ என்பான்.”
22 சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பார்ப்பதற்காக அநேக நாடுகளிலிருந்து அநேக ஜனங்கள் வருவார்கள். அவர்கள் அவரை தொழுதுகொள்வதற்காக வருவார்கள். 23 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “அந்த வேளையில், வேறு வேறு மொழிகளைப் பேசுகிற ஜனங்கள் யூதரிடம் வருவார்கள். பல அன்னிய நாட்டினர் ஒரு யூதனின் உடையின் ஓரத்தைப் (வஸ்திரத்தொங்கலை) பிடித்துக்கொள்வார்கள். அவர்கள், ‘தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். நாங்கள் அவரை தொழுதுகொள்ள உங்களோடு வரலாமா?’ என்று கேட்பார்கள்.”
லாசருவின் இறப்பு
11 லாசரு என்ற பெயருள்ள ஒரு மனிதன் நோயுற்றிருந்தான். அவன் பெத்தானியா என்ற நகரத்தில் வாழ்ந்து வந்தான். இந்நகரத்தில்தான் மரியாளும் அவளது சகோதரி மார்த்தாளும் வாழ்ந்தனர். 2 (இந்த மரியாள்தான் பின்பு இயேசுவிற்கு வாசனைத் தைலம் பூசித் தன் கூந்தலால் அவரது கால்களைத் துடைத்தவள்) மரியாளின் சகோதரன்தான் லாசரு. அவன் இப்போது நோயுற்றிருந்தான். 3 ஆகையால் மரியாளும் மார்த்தாளும் இயேசுவிடம் செய்தி அனுப்பி “ஆண்டவரே, உங்கள் அன்பான நண்பன் லாசரு நோயுற்றிருக்கிறான்” என்று சொன்னார்கள்.
4 இயேசு இதனைக் கேட்டு “நோயின் முடிவு மரணம் அன்று. இந்த நோய் தேவனை மகிமைப்படுத்துவதற்காக ஏற்பட்டது. இது, தேவனின் குமாரனுக்குப் புகழைக் கொண்டுவருவதற்காகவே உண்டானது” என்றார். 5 (மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய மூவரையும் இயேசு நேசித்து வந்தார்) 6 இயேசு லாசருவின் நோயைப்பற்றி அறிந்தபோது மேலும் இரண்டு நாட்கள் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே தங்கினார். 7 பிறகு இயேசு தன் சீஷர்களிடம் “நாம் மறுபடியும் யூதேயாவுக்குத் திரும்பிப் போவோம்” என்றார்.
8 அவரது சீஷர்கள், “ஆண்டவரே, யூதேயாவில் உள்ள யூதர்கள் உம்மைக் கல்லெறிந்து கொல்ல முயற்சித்தார்கள். அது நடந்தது சமீபகாலத்தில்தான். எனவே, இப்பொழுது அங்கே திரும்பிப் போக வேண்டுமா?” என்று கேட்டனர்.
9 இயேசுவோ, “பகலில் பன்னிரண்டு மணிநேரம் வெளிச்சம் இருக்கும். சரிதானே. ஒருவன் பகலில் நடந்தால், அவன் தடுமாறி விழமாட்டான். ஏனென்றால், அவனால் உலகின் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். 10 ஆனால் ஒருவன் இரவிலே நடந்தால் அவன் தடுமாறுவான். ஏனென்றால் அவனுக்கு உதவி செய்ய வெளிச்சம் இல்லை” என்றார்.
11 அவர் மேலும், “நமது நண்பன் லாசரு இப்பொழுது தூங்கிக்கொண்டிருக்கிறான். ஆனால் நான் அவனை எழுப்பப்போகிறேன்” என்றார்.
12 அவரது சீஷர்களோ, “ஆண்டவரே, அவன் தூங்கிக்கொண்டிருந்தால் நிச்சயம் குணமாவான்” என்றார்கள். 13 லாசரு இறந்து போனான் என்பதைக்குறித்தே இயேசு அவ்வாறு சொன்னார். ஆனால் அவரது சீஷர்களோ லாசரு உண்மையில் தூங்குவதாக நினைத்துக்கொண்டனர்.
14 பிறகு இயேசு தெளிவாக, “லாசரு இறந்துபோனான். 15 அங்கே அப்பொழுது நான் இல்லை என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது என்னை நீங்கள் நம்புவீர்கள். அதனால்தான் மகிழ்கிறேன். நாம் அவனிடம் போவோம்” என்றார்.
16 பிறகு தோமா என்று அழைக்கப்படும் சீஷன், ஏனைய சீஷர்களைப் பார்த்து, “நாமும் அவரோடு போவோம். யூதேயாவில் இயேசுவோடு நாமும் சாவோம்” என்றான்.
பெத்தானியாவில் இயேசு
17 இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கு வந்ததும் லாசரு இறந்துபோனாதாகவும் அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனதாகவும் அறிந்தார். 18 எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பெத்தானியா உள்ளது. 19 யூதர்கள் பலர் மார்த்தாளிடமும் மரியாளிடமும் வந்திருந்தனர். அவர்களின் சகோதரன் லாசருவின் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க வந்தனர்.
20 இயேசு வந்துகொண்டிருப்பதாக மார்த்தாள் கேள்விப்பட்டாள். அவரை வரவேற்க அவள் போனாள். ஆனால் மரியாள் வீட்டிலேயே தங்கிக்கொண்டாள். 21 மார்த்தாள் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். 22 ஆனால் இப்பொழுதுகூட நீர் கேட்பவற்றை தேவன் உமக்குத் தருவார்” என்றாள்.
23 இயேசுவோ, “உன் சகோதரன் எழுவான், மீண்டும் உயிர்வாழ்வான்” என்றார்.
24 மார்த்தாளோ, “உயிர்த்தெழுதல் நடைபெறும் கடைசிநாளில் அவன் மீண்டும் எழுந்து உயிர் வாழ்வான் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
25 இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான். 26 என்னில் வாழ்ந்து நம்பிக்கை வைக்கிற எவனும் உண்மையிலேயே இறப்பதில்லை. மார்த்தாளே, இதை நீ நம்புகிறாயா?” எனக் கேட்டார்.
27 “ஆம், ஆண்டவரே. நீர்தான் கிறிஸ்து என்று நம்புகிறேன். நீர்தான் தேவனின் குமாரன். நீரே உலகத்திற்கு வரவிருந்தவர்” என்றாள் மார்த்தாள்.
இயேசு அழுதல்
28 மார்த்தாள் இவ்வாறு சொன்ன பிறகு அவள் தன் சகோதரி மரியாளிடம் திரும்பிச் சென்றாள். அவள் தனியாக அவளிடம் பேசினாள். “இயேசு இங்கே இருக்கிறார். அவர் உன்னை அழைத்தார்” என்றாள் மார்த்தாள். 29 இதைக் கேட்டதும் மரியாள் எழுந்து இயேசுவிடம் விரைவாகப் போனாள். 30 இயேசு இன்னும் அக்கிராமத்துக்கு வந்து சேரவில்லை. மார்த்தாள் சந்தித்த இடத்திலேயே அவர் இருந்தார். 31 யூதர்கள் பலர் மரியாளோடு அவளது வீட்டில் இருந்தனர். அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். மரியாள் எழுந்து வேகமாகச் செல்வதைப் பார்த்து அவள் லாசருவின் கல்லறைக்குப் போகக்கூடும் என எண்ணினர். அவள் அங்கு அழப்போகலாம் என்று கருதி அவளோடு அவர்களும் சென்றனர். 32 இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் சென்றாள். அவள் இயேசுவைப் பார்த்ததும் குனிந்து அவரை வணங்கினாள். “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என்னுடைய சகோதரன் இறந்துபோயிருக்கமாட்டான்” என்று சொன்னாள்.
33 மரியாள் அழுவதை இயேசு பார்த்தார். அவளோடு வந்த யூதர்களையும் அவர் கவனித்தார். அவர்களும் அழுதனர். இயேசு மனப்பூர்வமாக வருந்தி, ஆழமாக வேதனைப்பட்டார். 34 “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று அவளிடம் கேட்டார்.
அவர்கள் அவரிடம், “கர்த்தரே, வந்து பாரும்” என்றனர். 35 இயேசு அழுதார்.
36 இதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இயேசு லாசருவை மிகவும் நேசித்திருக்கிறார்” என்றனர்.
37 ஆனால் சில யூதர்களோ, “இயேசு குருடனின் கண்களைக் குணப்படுத்தினார். லாசருவுக்கு உதவிசெய்ய. அவனை ஏன் சாகாமலிருக்கச் செய்திருக்கக் கூடாது?” என்று கேட்டனர்.
லாசருவை உயிர்ப்பித்தல்
38 மீண்டும் இயேசு மனதில் மிகவும் வருத்தம் அடைந்தார். பிறகு லாசரு வைக்கப்பட்ட கல்லைறைக்கு வந்தார். அக்கல்லறை பெரிய பாறையால் அடைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருந்தது. 39 இயேசு, “அந்தப் பாறையை அகற்றுங்கள்” என்றார்.
மார்த்தாளோ, “ஆண்டவரே, லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அதில் கெட்ட நாற்றம் வீசுமே” என்றாள். அவள் இறந்துபோன லாசருவின் சகோதரி.
40 இயேசு மார்த்தாளிடம், “நான் சொன்னவற்றை நினைத்துப்பார். நீ என்னை நம்புகிறதானால் தேவனின் மகிமையை அறியலாம் எனச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.
41 ஆகையால் அவர்கள் அந்தப் பாறையை குகையின் வாசலில் இருந்து அகற்றினார்கள். இயேசு மேலே ஏறிட்டுப் பார்த்து “பிதாவே! நான் சொல்வதை நீர் கேட்டதற்காக நன்றி கூறுகிறேன். 42 எப்பொழுதும் நான் சொல்வதை நீர் கேட்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் இங்கே கூடியிருக்கிற இம்மக்களுக்காகவே இவற்றைக் கூறுகிறேன். நீர்தான் என்னை அனுப்பினீர் என்று இவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார். 43 இவ்விதம் சொன்னபிறகு இயேசு உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா” என்று அழைத்தார். 44 இறந்தவன் வெளியே வந்தான். அவனது கைகளிலும் கால்களிலும் துணிகள் சுற்றப்பட்டிருந்தன. அவன் முகத்தை ஒரு துண்டுத் துணி மூடியிருந்தது.
இயேசு மக்களிடம், “துணிகளை அப்புறப்படுத்தி அவனை விடுவியுங்கள்” என்றார்.
யூதத்தலைவர்களின் சதித்திட்டம்(A)
45 மரியாளைப் பார்ப்பதற்காக ஏராளமான யூதர்கள் வந்திருந்தனர். இயேசு செய்ததை அவர்கள் பார்த்தார்கள். அவர்களில் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். 46 ஆனால், சிலர் பரிசேயர்களிடம் சென்றனர். இயேசு செய்ததை அவர்கள் பரிசேயர்களிடம் சொன்னார்கள். 47 பிறகு ஆசாரியர்களும் பரிசேயர்களும் யூதர்களின் ஆலோசனைச் சபையைக் கூட்டினர். “இனி என்ன செய்யலாம்? இயேசு பல அற்புதங்களைச் செய்து வருகிறான். 48 அவனை இவ்வாறு தொடர்ந்து செய்ய அனுமதித்தால் பிறகு மக்கள் அனைவரும் அவனை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பின் ரோமானியர்கள் வந்து நமது ஆலயத்தையும், நாட்டையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று பேசிக்கொண்டனர்.
49 அங்கே அவர்களில் ஒருவன் காய்பா. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். அவன் “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. 50 நாடு முழுவதும் அழிவதைவிட மக்களுக்காக ஒருவன் இறந்துபோவது நல்லது அல்லவா? இதை ஏன் நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை?” என்று சொன்னான்.
51 காய்பா இவற்றைச் சொந்தமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். இயேசு யூத நாட்டுக்காக மரிக்கப்போகிறார் என்பதை அவன் உண்மையில் தீர்க்கதரிசனமாகவே கூறினான். 52 ஆம். இயேசு யூதர்களுக்காகவே மரிக்கப் போகிறார். உலகில் சிதறிக் கிடக்கிற மக்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை ஒரே மக்களாக்க அவர் மரிக்கப் போகிறார்.
53 அன்றிலிருந்து யூதத்தலைவர்கள் இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டினர். 54 ஆகையால் இயேசு யூதர்களின் மத்தியில் வெளிப்படையாக நடமாடுவதை நிறுத்தினார். இயேசு எருசலேமை விட்டு வனாந்தரத்திற்கு அருகிலுள்ள இடத்துக்கு சென்றார். இயேசு எப்பிராயீம் என்று அழைக்கப்படுகிற நகரத்துக்குச் சென்றார். அங்கே அவர் தம் சீஷர்களோடு தங்கினார்.
55 யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்கு முன்பே நாட்டிலுள்ள மக்களில் பலர் எருசலேமிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் தம்மை சுத்தப்படுத்திக்கொள்வதற்கான சடங்குகளைச் செய்வர். 56 மக்கள் இயேசுவை எதிர்ப்பார்த்தனர். அவர்கள் ஆலயத்தில் நின்றுகொண்டு “இயேசு பண்டிகைக்கு வரமாட்டாரா? நீ என்ன நினைக்கிறாய்?” என ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர். 57 ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்ய முடியும்.
2008 by World Bible Translation Center