Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 24

யோவாஸ் ஆலயத்தை மீண்டும் கட்டுகிறான்

24 யோவாஸ் அரசனானபோது அவனுக்கு 7 வயது. அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் சிபியாள். அவள் பெயர்செபா நகரத்தவள். யோய்தா ஆசாரியன் உயிரோடிருந்தவரை, யோவாஸ் கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான். யோய்தா, யோவாசுக்கு இரண்டு மனைவியரைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு மகன்களும் மகள்களும் இருந்தனர்.

பின்னர், யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்ட முடிவுசெய்தான். யோவாஸ் ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றாகத் திரட்டினான். அவன் அவர்களிடம், “யூதாவின் நகரங்களுக்குச் சென்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் பணத்தைச் சேகரியுங்கள். ஆண்டுதோறும் தேவனுடைய ஆலயத்தைப் பழுது பார்த்து மேலும் கட்ட வேண்டும். வேகமாகப் போய் இதனைச் செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்கள் அவசரப்படவில்லை.

எனவே, அரசன் தலைமைஆசாரியனான யோய்தாவை அழைத்தான். அவனிடம் அரசன், “யோய்தா, யூதாவிலும் எருசலேமிலும் வரியை வசூலிக்க நீங்கள் ஏன் லேவியர்களை அனுப்பவில்லை? கர்த்தருடைய ஊழியக்காரனான மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் அந்த வரிப்பணத்தை பரிசுத்தக் கூடாரத்திற்குப் பயன்படுத்தினார்களே” என்றான்.

முற்காலத்தில் அத்தாலியாளின் மகன்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் உடைத்துக் கொண்டுசென்றார்கள். அவர்கள் இங்குள்ள பரிசுத்தமானப் பொருட்களை எல்லாம் கொண்டுபோய் பாகால் ஆலயத்தில் பயன்படுத்தினார்கள். அத்தாலியாள் மிகவும் தீயப் பெண்.

ஒரு பெட்டியைச் செய்து வாசலுக்கு வெளியில் கர்த்தருடைய ஆலயத்தில் வைக்குமாறு யோவாஸ் அரசன் கட்டளையிட்டான். பிறகு யூதாவிலும், எருசலேமிலும் லேவியர்கள் ஒரு அறிவிப்பு செய்தனர். கர்த்தருக்கு வரிப்பணத்தைக் கொண்டுவரும்படி அவர்கள் ஜனங்களை வேண்டிக் கேட்டுக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் பாலைவனத்தில் இருந்தபோது, தேவனின் ஊழியனான மோசே எங்களிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட பணத்தின் அளவு தான் இவ்வரிப் பணம் ஆகும். 10 அனைத்து தலைவர்களும் ஜனங்களும் மகிழ்ந்தனர். அவர்கள் தம் பணத்தைக் கொண்டுவந்து பெட்டியில் போட்டனர். பெட்டி நிரம்பும்வரை அவர்கள் போட்டுக்கொண்டிருந்தனர். 11 பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை அரசனின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். அரசனின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள். 12 பிறகு யோவாஸ் அரசனும், யோய்தா ஆசாரியனும் அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக மரம் குடைவதில் திறமை பெற்றவர்களையும், தச்சர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள். மேலும் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக இரும்பிலும் வெண்கலத்திலும் வேலைச் செய்வதில் திறமைமிக்கவர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள்.

13 வேலையை மேற்பார்வை செய்பவர்கள் உண்மையானவர்கள். கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் வேலை வெற்றியடைந்தது. அவர்கள் தேவனுடைய ஆலயத்தை முன்பு இருந்தது போலவே அழகாகவும், பலமாகவும் கட்டினார்கள். 14 எல்லா வேலைகளும் முடிந்த பிறகு மீதியான பணத்தை அரசனிடமும், யோய்தா ஆசாரியனிடமும் கொண்டு வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் அப்பணத்தைச் செலவுசெய்தனர். அப்பொருட்கள் ஆலயத்தில் சேவைச்செய்யவும் சர்வாங்கத் தகனபலிகள் போன்றவற்றை செய்யவும் பயன்பட்டன. அவர்கள் கலசங்களையும், வேறு பொருட்களையும் பொன்னாலும், வெள்ளியாலும் செய்தனர். யோய்தா உயிரோடு இருக்கும்வரை ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் தினந்தோறும் தகனபலிகளைக் கொடுத்துவந்தனர்.

15 யோய்தா முதியவனானான். நீண்ட வாழ்க்கை வாழ்ந்து பின் மரித்துப்போனான். அவன் மரிக்கும்போது அவனுக்கு 130 வயது. 16 யோய்தாவை தாவீதின் நகரத்திலே அரசர்களை அடக்கம் செய்யக் கூடிய இடத்தில் ஜனங்கள் அடக்கம் செய்தனர். இஸ்ரவேலில் தேவனுக்கும் தேலாயத்திற்கும் ஏராளமான அளவில் நற்சேவை செய்திருக்கிறான் என்பதாலேயே ஜனங்கள் அந்த இடத்தில் அவனை அடக்கம் செய்தனர்.

17 யோய்தா மரித்தப் பிறகு, யூதாவின் தலைவர்கள் அரசன் யோவாசிடம் வந்து பணிந்து வணங்கினார்கள். அவர்கள் கூறுவதை அரசன் கவனித்தான். 18 அரசனும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். அரசனும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார். 19 தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி ஜனங்களைத் தன்னிடம் திரும்ப அழைக்க முயன்றார். தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரித்தனர். ஜனங்கள் கேட்க மறுத்து விட்டனர்.

20 தேவனுடைய ஆவி சகரியா மீது வந்தது. சகரியாவின் தந்தை ஆசாரியனாகிய யோய்தா ஆவான். சகரியா ஜனங்களின் முன்பு நின்று, “தேவன் சொல்வது இதுதான்: ‘நீங்கள் ஏன் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றீர்கள்? நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். நீங்கள் கர்த்தரைவிட்டு விலகிவிட்டீர்கள். எனவே கர்த்தரும் உங்களை விட்டு விலகிவிட்டார்!’” என்றான்.

21 ஆனால் ஜனங்கள் சகரியாவிற்கு எதிராகத் திட்டமிட்டனர். சகரியாவைக் கொல்லும்படி அரசன் கட்டளையிட்டான். எனவே அவன் மரிக்கும்வரை ஜனங்கள் அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஜனங்கள் இதனை ஆலய பிரகாரத்திலேயே செய்தனர். 22 யோய்தா தன் மீது காட்டிய கருணையை யோவாஸ் அரசன் நினைவுக்கூரவில்லை. யோய்தா சகரியாவின் தந்தை. எனினும் யோவாஸ், யோய்தாவின் மகனாகிய சகரியவைக் கொன்றான். மரிப்பதற்கு முன்பு சகரியா, “நீ செய்வதை கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உன்னைத் தண்டிப்பார்!” என்றான்.

23 ஆண்டு முடிவில், யோவாசுக்கு எதிராக ஆராமியப்படை வந்தது. அவர்கள் யூதாவையும் எருசலேமையும் தாக்கினார்கள். மேலும் அவர்கள் அந்த ஜனங்களின் தலைவர்கள் அனைவரையும் கொன்றார்கள். தமஸ்கு அரசனுக்கு விலையுயர்ந்தப் பொருட்கள் அனைத்தையும் அனுப்பிவைத்தனர். 24 மிகவும் குறைந்த எண்ணிகையுள்ள வீரர்களுடைய குழுவுடனேயே ஆராமியப்படை வந்தது. ஆயினும் அது பெரும் அளவுடைய யூதாவின் படையை வெல்லுமாறு கர்த்தர் அருளினார். யூதாவின் ஜனங்கள் தம் முற்பிதாக்கள் வழிபட்ட தேவனாகிய கர்த்தரை விட்டு விலகியதால், கர்த்தர் இவ்வாறு செய்தார். எனவே யோவாஸ் தண்டிக்கப்பட்டான். 25 ஆராமியர்கள் யோவாசைவிட்டுப் போகும்போது அவன் பெருத்த காயம் அடைந்திருந்தான். யோவாசின் சொந்த வேலைக்காரர்களும் அவனுக்கெதிராகத் திட்டமிட்டனர். அவன் யோய்தா ஆசாரியனின் மகனான சகரியாவைக் கொன்றான் என்பதனால் அவர்கள் இதைச் செய்தார்கள். வேலைக்காரர்கள் யோவாசை அவனுடைய படுக்கையிலேயே கொன்று போட்டனர். யோவாஸ் மரித்ததும், அவனை தாவீதின் நகரத்திலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அரசர்களை அடக்கம் செய்யும் இடத்தில் அவனை அடக்கம் செய்யவில்லை.

26 யோவாசுக்கு எதிராகத் திட்டமிட்ட வேலைக்காரர்கள் சாபாத்தும், யோசபாத்தும் ஆவார்கள். சாபாத்தின் தாயின் பெயர் சீமாத் ஆகும். இவள் அம்மோனியப் பெண் ஆவாள். யோசபாத்தின் தாயின் பெயர் சிம்ரீத் ஆகும். இவள் மோவாபிய பெண் ஆவாள். 27 யோவாசின் மகன்களைப்பற்றியும், அவனுக்கு எதிரான தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் புதுப்பித்ததைப்பற்றியும் அரசர்களின் சரித்திரம் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாசுக்குப் பிறகு அமத்சியா புதிய அரசனானான். அமத்சியா யோவாசின் மகன்.

வெளி 11

இரண்டு சாட்சிகள்

11 பிறகு கைக்கோல் போன்ற ஒரு அளவு கோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்போது தேவதூதன் நின்று என்னிடம், “போ, போய் தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அளந்து பார், அதற்குள் வழிபட்டுக்கொண்டிருப்பவர்களையும் அளந்து பார். ஆலயத்திற்கு வெளியே இருக்கிற பிரகாரம் யூதர் அல்லாதவர்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அளக்காதே. அந்த மக்கள் பரிசுத்த நகரத்தில் 42 மாதங்கள் நடமாடுவார்கள். நான் எனது இரண்டு சாட்சிகளுக்கும் 1,260 நாட்களின் அளவிற்குத் தீர்க்கதரிசனம் சொல்ல அதிகாரம் கொடுப்பேன். அவர்கள் முரட்டுத் துணியாலான ஆடையை அணிந்திருப்பார்கள்” என்றான்.

இரண்டு ஒலிவ மரங்களும் பூமியின் கர்த்தருக்கு முன்னிலையில் இருக்கிற இரு விளக்குத்தண்டுகளும் இந்த இரு சாட்சிகளாகும். எவராவது சாட்சிகளைச் சேதப்படுத்த முயற்சித்தால், சாட்சிகளின் வாயில் இருந்து நெருப்பு வந்து எதிரிகளை அழித்துவிடும். எவரொருவர் சாட்சிகளைச் சேதப்படுத்த முயன்றாலும் அவர்கள் இது போலவே அழிக்கப்படுவர். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாள்களில் மழை பெய்துவிடாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு வல்லமை உண்டு. அவர்களுக்குத் தண்ணீரை இரத்தம் ஆக்குகிற வல்லமையும் உண்டு. விரும்பும்போதெல்லாம் அடிக்கடி பூமியைச் சகலவிதமான வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு எல்லாவிதமான அதிகாரமும் உண்டு.

அந்த இரு சாட்சிகளும் தங்களது செய்திகளைச் சொல்லி முடித்தபின், பாதாளத்தில் இருந்து வெளிவருகிற மிருகம் அவர்களை எதிர்த்துச் சண்டையிடும். அம்மிருகம் அவர்களைத் தோற்கடித்து அவர்களைக் கொல்லும். பிறகு ஞானார்த்தமாக சோதோம் என்றும் எகிப்து என்றும் அழைக்கப்படுகிற அந்த மகா நகரத்தின் தெருக்களில் அச்சாட்சிகளின் சடலங்கள் கிடக்கும். கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டு, மரணமடைந்த நகரமும் இது தான். ஒவ்வொரு இனத்திலும், பழங்குடியிலும், மொழியிலும், நாட்டிலும் உள்ள மக்கள், மூன்றரை நாட்களுக்கு நகர வீதிகளில் அப்பிணங்களைக் காண்பார்கள். அவற்றை அடக்கம் செய்ய அவர்கள் மறுப்பர். 10 அந்த இருவரும் இறந்துபோனதற்காக, பூமியில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைவர். அவர்கள் விருந்து நடத்தி தமக்குள் பரிசுகளை அளிப்பர். அச்சாட்சிகள் உலகில் உள்ள மக்களுக்கு மிகுதியாகத் துன்பம் அளித்ததால்தான் அம்மக்கள் இவ்வாறு நடந்துகொள்வார்கள்.

11 ஆனால் மூன்றரை நாட்களுக்குப்பின், அந்த இருவரின் சடலங்களுக்கும் தேவனிடமிருந்து வெளிப்பட்ட ஓர் உயிர்மூச்சு ஜீவனைக் கொடுத்தது. அவர்கள் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்தவர்கள் அச்சத்தால் நடுங்கினர். 12 பின்னர் அவ்விரு சாட்சிகளும் பரலோகத்தில் இருந்து வந்த ஒரு குரலைக் கேட்டனர். அது “இங்கே வாருங்கள்” என்று அழைத்தது. அவர்கள் மேகங்களின் வழியாகப் பரலோகத்துக்குப் போனார்கள். அவர்கள் போவதை அவர்களுடைய பகைவர்கள் கவனித்தனர்.

13 அதே நேரத்தில் ஒரு பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நகரின் பத்தில் ஒரு பகுதி அழிந்துபோனது. அந்நில நடுக்கத்தால் ஏழாயிரம் மக்கள் இறந்து போயினர். இறந்து போகாத மற்றவர்கள் மிகவும் பயந்துபோனார்கள். அவர்கள் பரலோகத்தில் உள்ள தேவனை மகிமைப்படுத்தினர்.

14 இரண்டாவது பேராபத்து நடந்து முடிந்தது. மூன்றாம் பேராபத்து விரைவில் வர இருக்கிறது.

ஏழாவது எக்காளம்

15 ஏழாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது பரலோகத்தில் உரத்த சத்தங்கள் கேட்டன. அவை:

“உலகத்தின் இராஜ்யம் இப்போது கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் சொந்தமாயிற்று.
    அவர் எல்லாக் காலங்களிலும் ஆள்வார்”

என்றன.

16 பிறகு தம் சிம்மாசனங்களில் தேவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த 24 மூப்பர்களும் தரையில்படும்படி தலைகுனிந்து தேவனை வழிபட்டனர். 17 அந்த மூப்பர்கள்,

“சகல வல்லமையும் வாய்ந்த கர்த்தராகிய தேவனே, நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.
    நீரே இருக்கிறவரும் இருந்தவரும் ஆவீர்.
உம் மிகப் பெரிய வல்லமையைப் பயன்படுத்தி
    ஆளத் தொடங்கியதால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
18 உலகில் உள்ள மக்கள் எல்லாம் கோபமாக இருந்தனர்.
    ஆனால், இது உம் கோபத்துக்குரிய காலம்.
இதுவே இறந்துபோனவர்கள் நியாயம் தீர்க்கப்படும் காலம்.
    உங்கள் ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளும் உங்கள் பரிசுத்தவான்களும் பலன்பெறும் காலம்.
சிறியோராயினும் பெரியோராயினும் சரி,
    உம்மீது மதிப்புடைய மக்கள் சிறப்பு பெறுகிற காலம்.
உலகை அழிக்கிறவர்கள் அழிந்துபோகிற காலமும் இதுவே” என்று சொன்னார்கள்.

19 பிறகு தேவனுடைய ஆலயம் பரலோகத்தில் திறக்கப்பட்டது. அந்த ஆலயத்தில் தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. பின்னர் மின்னலும், இடி முழக்கங்களும், நிலநடுக்கங்களும், பெருங்கல்மழையும் உண்டாயிற்று.

சகரியா 7

கர்த்தர் இரக்கத்தையும் கருணையையும் விரும்புகிறார்

தரியுவின் நான்காவது ஆட்சியாண்டில் கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது ஒன்பதாவது மாதத்தின் நான்காம் நாள். (அது கிஸ்லே எனப்படும்) பெத்தேல் ஜனங்கள் சரேத்சேரையும், ரெகெம்மெலேகும், அவனது ஆட்களையும் சில கேள்விகள் கேட்க கர்த்தரிடம் அனுப்பினார்கள். அவர்கள் தீர்க்கதரிசிகளிடமும், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள ஆசாரியர்களிடமும் சென்றனர். அம்மனிதர்கள் அவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டனர்: “பல ஆண்டுகளாக ஆலயத்தின் அழிவுக்காக நாங்கள் துக்கம் கொண்டோம். ஒவ்வொரு ஆண்டின் ஐந்தாவது மாதத்திலும் நாங்கள் அழுவதற்கும், உபவாசிப்பதற்கும் தனியான காலத்தை நியமித்திருந்தோம். நாங்கள் இதனைத் தொடரவேண்டுமா?”

நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றேன் “ஆசாரியர்களுக்கும் இந்த நாட்டிலுள்ள பிறருக்கும் இதனைக் கூறு. நீங்கள் ஐந்தாவது மாதத்திலும், ஏழாவது மாதத்திலும், உபவாசம் இருந்து 70 வருடங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டினீர்கள். ஆனால் அந்த உபவாசம் எனக்காகவா? இல்லை. நீங்கள் உண்ணுவதும், குடிப்பதும் எனக்காகவா? இல்லை. இது உங்கள் சொந்த நலனுக்காக. தேவன் முற்கால தீர்க்கதரிசிகளைக் கெண்டு இதே செய்தியைச் சொல்லியிருக்கிறார். எருசலேம் ஒரு வளமான நகரமாக ஜனங்களால் நிறைந்திருந்தபோது அவர் இவற்றைச் சொன்னார். எருசலேமைச் சுற்றியுள்ள நகரங்களிலும் நெகேவ், மேற்கத்திய மலை அடிவாரங்களிலும் ஜனங்கள் வாழ்ந்த காலத்தில் தேவன் இவற்றைச் சொன்னார்.”

இதுதான் சகரியாவுக்கான கர்த்தருடைய செய்தி.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“எது நன்மையும் நேர்மையும் கொண்டதோ அவற்றை நீ செய்ய வேண்டும்.
    நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையும் இரக்கமும் கொள்ளவேண்டும்.
10 விதவைகளையும், அநாதைகளையும்,
    அயல் நாட்டாரையும், ஏழைகளையும் துன்புறுத்தாதேயுங்கள்.
ஒருவருக்கொருவர் தீமைச் செய்ய எண்ணவும் வேண்டாம்!” என்றார்.

11 ஆனால் அந்த ஜனங்கள் கேட்க மறுத்தனர்.
    அவர்கள் அவர் விரும்பியதை செய்ய மறுத்தனர்.
அவர்கள் தங்கள் காதுகளை மூடினார்கள்.
    எனவே, தேவன் என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியவில்லை.
12 அவர்கள் மிகவும் கடின மனமுடையவர்கள்.
    அவர்கள் சட்டங்களுக்கு அடிபணிவதில்லை.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆவியைக்கொண்டு
    தனது ஜனங்களுக்குத் தீர்க்கதரிசிகள் மூலமாக செய்திகளை அனுப்பினார்.
ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை.
    எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மிகவும் கோபமுற்றார்.
13 ஆகவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“நான் அவர்களைக் கூப்பிட்டேன்.
    அவர்கள் பதில் சொல்லவில்லை.
இப்பொழுது அவர்கள் என்னைக் கூப்பிட்டால்,
    நான் பதில் சொல்லமாட்டேன்.
14 நான் மற்ற நாடுகளை, ஒரு புயலைப்போன்று அவர்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன்.
    அவர்கள் அந்த நாடுகளை அறியமாட்டார்கள்.
    ஆனால், இந்த நாடு பிற நாடுகள் வந்து போன பிறகு அழிக்கப்படும்.
இந்த செழிப்பான நாடு அழிக்கப்படும்” என்றார்.

யோவான் 10

நல்ல மேய்ப்பனும் ஆடுகளும்

10 “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான். ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன். வாசலைக் காக்கிற காவல்காரன் மேய்ப்பனுக்காகக் கதவைத் திறந்துவிடுவான். ஆடுகள் மேய்ப்பனின் குரலுக்கு செவி கொடுக்கும். மேய்ப்பன் தன் சொந்த ஆடுகளை அவற்றின் பெயரைச் சொல்லி அழைப்பான். அவன் அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போவான். மேய்ப்பன் தனது ஆடுகளையெல்லாம் வெளியே கொண்டுவந்த பின் அவற்றுக்கு முன்னால் நடந்து அவற்றை நடத்திக்கொண்டு போகிறான். ஆடுகள் அவனது குரல் குறிப்புகளை அடையாளம் கண்டபடியால், அவை அவன் பின்னே செல்கின்றன. ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று

இயேசு மக்களிடம் இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் உட்பொருளை அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.

இயேசுவே நல்ல மேய்ப்பர்

எனவே இயேசு மேலும் சொன்னார், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆடுகளுக்கு நானே வாசலாக இருக்கிறேன். எனக்கு முன்னால் வந்தவர்கள் அனைவரும் கள்ளரும், கொள்ளைக்காரர்களுமாக இருந்தார்கள். ஆடுகள் அவர்களைக் கவனிக்கவில்லை. நானே வாசல். என் மூலமாக நுழைகிறவனே மீட்கப்படுவான். அவன் உள்ளேயும் வெளியேயும் போய் மேய்ச்சலைக் கண்டடைவான். 10 திருடன் திருடுவதற்காகவே வருகிறான். அவன் ஆடுகளைக் கொல்லவும் அழிக்கவுமே செய்வான். ஆனால் நானோ ஜீவனைக் கொடுக்க வந்துள்ளேன். அந்த ஜீவன் பூரணமும், நன்மையுமானது.

11 “நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான். 12 கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும். 13 அந்த மனிதன் ஓடிவிடுகிறான். ஏனென்றால் அவன் கூலிக்காரன். அவனுக்கு ஆடுகளைப்பற்றிய அக்கறை இல்லை.

14-15 “ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன். 16 எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். வருங்காலத்தில் எல்லாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் இருக்கும். 17 என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன். 18 என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்றார்.

19 இயேசு சொன்ன இக்காரியங்களினால் மீண்டும் யூதர்கள் பிரிந்துபோயினர். 20 பல யூதர்கள் “பிசாசு அவனுக்குள் புகுந்துகொண்டது. அவன் பைத்தியமாக உளறுகிறான். அவன் கூறுவதை ஏன் கேட்கிறீர்கள்?” என்றனர்.

21 அதற்குப் பதிலாக வேறு சில யூதர்கள், “பிசாசு பிடித்து உளறுகிறவனால் இதுபோன்ற உண்மைகளைப் பேசமுடியுமா? குருடனின் கண்களைப் பிசாசு குணமடையச் செய்யுமா? செய்யாது” என்றனர்.

யூதர்கள் இயேசுவுக்கு எதிராகுதல்

22 அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது. 23 இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார். 24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். “இன்னும் எவ்வளவு காலம் உங்களைப்பற்றிப் புதிராக வைத்திருப்பீர்கள். நீங்கள் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்று கேட்டனர்.

25 “நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் நம்பவில்லை. நான் என் பிதாவின் பேரில் அற்புதங்களைச் செய்கிறேன். அந்த அற்புதங்கள் நான் யாரென்று உங்களுக்கு காட்டுகின்றன. 26 ஆனால் நீங்கள் நம்புகிறதில்லை. ஏனென்றால் நீங்கள் எனது ஆடுகள் அல்ல. 27 எனது ஆடுகள் எனது குரலைக் கேட்கும். நான் அவற்றை அறிவேன். அவை என்னைப் பின் தொடரும். 28 நான் என் ஆடுகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் இறந்துபோவதில்லை. அவைகளை என் கையிலிருந்து எவரும் பறித்துக்கொள்ளமுடியாது. 29 என் பிதா எனக்கு ஆடுகளைத் தந்தார். அவர் எல்லோரையும்விடப் பெரியவர். எவரும் ஆடுகளை என் பிதாவின் கைகளில் இருந்து திருடிக்கொள்ளமுடியாது. 30 நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார், இயேசு.

31 மீண்டும் யூதர்கள் அவரைக் கொல்வதற்காகக் கற்களை எடுத்துக்கொண்டனர். 32 ஆனால் இயேசு அவர்களிடம், “நான் என் பிதா மூலமாகப் பல நற்செயல்களைச் செய்தேன். அந்தச் செயல்களை நீங்களும் பார்த்தீர்கள். அவற்றில் எந்த நல்ல செயலுக்காக என்னைக் கல்லெறிய விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.

33 அதற்கு அவர்கள் “நீ செய்த எந்த நல்ல செயல்களுக்காகவும் நாங்கள் உன்னைக் கொல்லவில்லை. ஆனால் நீ சொல்லுகிறவை எல்லாம் தேவனுக்கு எதிராக இருக்கின்றன. நீ ஒரு மனிதன். ஆனால் நீ தேவன் என்று கூறுகிறாய். அதற்காகத்தான் உன்னைக் கல்லால் எறிந்து கொல்லப் பார்க்கிறோம்” என்றனர்.

34 “‘தேவர்களாயிருக்கிறீர்கள், என்று நான் சொன்னேன்’ [a] என்பதாக உங்கள் சட்டத்தில் எழுதியிருக்கிறது. 35 தேவனின் செய்தியைப் பெற்றுக்கொண்ட மக்களை தேவர்கள் என்று சொல்லலாம் என பரிசுத்த வேதவாக்கியங்கள் கூறுகின்றன. வேதவாக்கியங்கள் எப்போதும் உண்மையானவை. 36 ஆகவே, ‘நான் தேவனின் குமாரன்’ என்று கூறியதை, தேவனுக்கு எதிராகப் பேசுவது என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டவன் நான்தான். 37 என்னுடடைய பிதா செய்தவற்றை நான் செய்யாவிட்டால் நீங்கள் என்னை நம்பவேண்டியதில்லை. 38 ஆனால் எனது பிதா செய்தவற்றை நானும் செய்வேனானால் நீங்கள் என்னை நம்பித்தான் ஆகவேண்டும். நீங்கள் என்னை நம்புவதில்லையானாலும் நான் செய்கின்றவற்றை நம்பித்தான் ஆகவேண்டும். நான் பிதாவிடமும் பிதா என்னிடமும் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார், இயேசு.

39 யூதர்கள் இயேசுவைப் பிடிக்க மீண்டும் முயன்றார்கள். ஆனால் இயேசு அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார்.

40 பிறகு இயேசு யோர்தான் நதியைக் கடந்து திரும்பிப் போனார். யோவான் முன்பு ஞானஸ்நானம் கொடுத்த இடத்துக்குப் போனார். அங்கே அவர் தங்கினார். 41 அவரிடம் பலர் வந்தனர். “யோவான் எவ்வித அற்புதமும் செய்யவில்லை. ஆனால் இயேசுவைப்பற்றி அவன் சொன்னவை எல்லாம் உண்மையாக இருக்கின்றன” என்றனர். 42 அங்கே அநேக மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center