Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 16

ஆசாவின் இறுதி ஆண்டுகள்

16 ஆசாவின் 36வது ஆட்சி ஆண்டில் யூதா நாட்டினை பாஷா தாக்கினான். பாஷா இஸ்ரவேலின் அரசன் ஆவான். அவன் ராமா என்னும் நகருக்குச் சென்று அதையே ஒரு கோட்டையாகக் கட்டினான். ஜனங்கள் யூதாவின் அரசனான ஆசாவிடம் செல்வதையோ அல்லது அவனிடமிருந்து திரும்புவதையோ தடுப்பதற்கான இடமாக ராமா ஊரினைப் பயன்படுத்தினான். கர்த்தருடைய ஆலயத்தில் கருவூலத்தில் இருந்த பொன்னையும் வெள்ளியையும் ஆசா வெளியே எடுத்தான். அரண்மனை கருவூலத்தில் உள்ள பொன்னையும் வெள்ளியையும் ஆசா எடுத்தான். பிறகு அவன் பென்னாதாத்துக்கு தூது அனுப்பினான். பென்னாதாத் ஆராம் நாட்டு அரசன். அவன் தமஸ்கு நகரத்தில் இருந்தான். ஆசாவின் செய்தி இது: “பென்னாதாத் நீயும் நானும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வோம். உன் தந்தையும் என் தந்தையும் செய்த ஒப்பந்தம் போன்று இருக்கட்டும். நான் உனக்குப் பொன்னும் வெள்ளியும் அனுப்புவேன். நீ இப்போது பாஷாவுடன் உள்ள ஒப்பந்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடு. அதனால் அவன் எனக்குத் துன்பம் தராமல் விலகிவிடுவான்.”

பென்னாதாத் அரசனாகிய ஆசா சொன்னவற்றை ஒத்துக்கொண்டான். அவன் தனது படைத் தளபதிகளை அனுப்பி இஸ்ரவேல் நகரங்களைத் தாக்கினான். அவர்கள் ஈயோன், தாண், ஆபேல், மாயீம், நப்தலிப் பகுதியில் இருந்த ஊர்கள் ஆகியவற்றைத் தாக்கினார்கள். இந்நகரங்களில் கருவூலங்களும் பண்டகச்சாலைகளும் இருந்தன. இஸ்ரவேல் நகரங்கள் தாக்கப்படுவதை பாஷா கேள்வியுற்றான். எனவே அவன் ராமாவில் கோட்டை கட்டுவதை விட்டுவிட்டு விலகிப்போனான். பிறகு ஆசா அரசன் யூதா ஜனங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டினான். அவர்கள் ராமா நகரத்திற்குச் சென்றார்கள். அங்கு கோட்டை கட்டுவதற்காக பாஷா வைத்திருந்த கல், மரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். அவற்றால் அவர்கள் கேபா, மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினார்கள்.

அப்போது யூதாவின் அரசனான ஆசாவிடம் அனானி எனும் ஞானதிருஷ்டிக்காரன் வந்தான். அனானி அரசனிடம், “ஆசா, நீ உதவிக்காக ஆராம் நாட்டு அரசனையே சார்ந்திருந்தாய். உனது தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருக்கவில்லை. நீ உன் உதவிக்காக கர்த்தரைச் சார்ந்திருக்கவேண்டும். ஆனால் உதவிக்காகக் கர்த்தரைச் சாராததால் ஆராம் நாட்டு படையும் உன் கைகளில் இருந்து விலகிப்போனது. எத்தியோப்பியர்களிடமும் லூபியர்களிடமும் வலிமைமிக்க பெரிய படை இருந்தது. அவர்களிடம் ஏராளமான இரதங்களும் குதிரை வீரர்களும் இருந்தனர். ஆனால் நீ உதவிக்கு கர்த்தரை நாடியபோது அவர் இவர்களை வெல்லும்படி உதவினார். கர்த்தருடைய கண்கள் பூமியில் உள்ள அனைவர் மீதும் சுற்றிவரும். தனக்கு உண்மையானவர்களை அவர் தேடி அவர்களை பலமுள்ளவர் ஆக்குவார். ஆசா நீ முட்டாள்தனமாக நடந்துக்கொண்டாய். எனவே இப்போது முதல் நீ போர்களை சந்திப்பாய்” என்றான்.

10 ஆசாவிற்கு அனானி மீது அவன் பேசிய சொற்களுக்காக கோபம் வந்தது. அவன் எந்தவித காரணமின்றி அனானியைச் சிறையில் அடைத்தான். இக்காலக் கட்டத்தில் ஆசா பலரிடம் கொடூரமாக நடந்துக்கொண்டான்.

11 தொடக்கம் முதல் இறுதிவரை ஆசா செய்த செயல்கள் யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 12 ஆசாவின் 39வது ஆட்சியாண்டில் அவன் காலில் நோய் வந்தது. இது மிக மோசமான நோய். எனினும் கர்த்தருடைய உதவியை நாடவில்லை. உதவிக்காக மருத்துவர்களை நாடினான். 13 ஆசா தனது 41வது ஆட்சியாண்டில் மரித்தான். அவன் தன் முற்பிதாக்களோடு சேர்க்கப்பட்டான். 14 தாவீதின் நகரத்திலே ஆசா தனக்கென்று ஒரு கல்லறை அமைத்திருந்தான். ஜனங்கள் அவனை அதிலேயே அடக்கம் செய்தனர். அவனை வாசனைப் பொருட்களாலும் பலவகை மணக்கலவைகளாலும் அமைக்கப்பட்ட மெத்தை மீது வைத்தனர். ஆசாவை கௌரவிப்பதற்காக ஜனங்கள் ஒரு பெரும் நெருப்பை உண்டாக்கினார்கள்.

வெளி 5

சிம்மாசனத்தின்மேல் உட்கார்ந்திருப்பவரின் வலதுகைப் பக்கத்தில் எழுதப்பட்ட ஒரு தோல் சுருளைக் கண்டேன். அதில் இருபக்கமும் எழுதப்பட்டிருந்தது. அது மூடி வைக்கப்பட்டு ஏழு முத்திரைகளும் இடப்பட்டிருந்தன. ஒரு சக்தி வாய்ந்த தேவதூதனையும் நான் கண்டேன். அவன் உரத்த குரலில் அழைத்து “இம்முத்திரைகளை உடைத்து இந்தத் தோல் சுருளைத் திறந்துவிடுகிற தகுதி உள்ளவன் யார்?” என்று கேட்டான். ஆனால் பரலோகத்திலோ, பூமியிலோ, பூமிக்கு அடியிலோ இருக்கிற எவரும் இதுவரை அம்முத்திரைகளை உடைத்து திறந்து உள்ளே பார்க்க இயலவில்லை. எவரும் அந்தத் தோல் சுருளைத் திறந்து உள்ளே இருப்பதைப் பார்க்காததால் நான் மிகவும் அழுதேன். ஆனால் முதியவர்களுள் ஒருவர் என்னிடம், “அழாதே! யூதர் குலத்தில் பிறந்த சிங்கமான இயேசு வெற்றி பெற்றார். அவர் தாவீதின் வழி வந்தவர். அவர் ஏழு முத்திரைகளையும் உடைத்து இந்தத் தோல் சுருளைத் திறந்து பார்க்கும் ஆற்றல் உள்ளவர்.”

பிறகு ஒரு ஆட்டுக்குட்டி சிம்மாசனத்தின் மத்தியில் நிற்பதைக் கண்டேன். அதனைச் சுற்றி நான்கு ஜீவன்களும் இருந்தன. மூப்பர்களும் அதனைச் சுற்றி இருந்தனர். அந்த ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டது போல தோன்றியது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அவை தேவனுடைய ஏழு ஆவிகளாகும். அவை உலகமெங்கும் அனுப்பப்பட்டவை. அந்த ஆட்டுக்குட்டி தேவனுடைய வலது கையிலிருந்த தோல் சுருளை எடுத்தது. உடனே உயிர் வாழும் ஜீவன்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் அந்த ஆட்டுக் குட்டியைப் பணிந்து வணங்கினர். ஒவ்வொருவரிடமும் ஒரு இசைக்கருவி இருந்தது. அதோடு தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் அவர்கள் பிடித்திருந்தனர். அத்தூபவர்க்கங்கள் நிறைந்த பொற்கலசங்கள் தேவனுடைய பரிசுத்தமான மக்களின் பிரார்த்தனைகளைக் குறிக்கின்றன. அவர்கள் அந்த ஆட்டுக்குட்டிக்காகப் புதிய பாடலைப் பாடினர்.

“தோல் சுருளை எடுக்க நீரே தகுதியுள்ளவர்.
    அதன் முத்திரைகளையும் நீரே உடைக்கத்தக்கவர்.
ஏனென்றால் நீர் கொல்லப்பட்டவர்
    உம் குருதியால் தேவனுக்காக மக்களை மீட்டுக்கொண்டவர்.
    அவர்கள் பல்வேறு இனத்தை, மொழியை, நாட்டை, குழுவைச் சேர்ந்தவர்கள்.
10 நீர் நம் தேவனுக்காக ஒரு இராஜ்யத்தையும், ஆசாரியர்களையும் உருவாக்கினீர்.
    அவர்கள் இந்த உலகத்தை ஆளுவார்கள்.”

11 பிறகு நான் பல தூதர்களைப் பார்த்தேன். அவர்களது குரலைக் கேட்டேன். அத் தூதர்கள் சிம்மாசனத்தைச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் ஜீவன்களையும், முதியவர்களையும் சூழ்ந்து இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாகவும் பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தது. 12 அந்தத் தூதர்கள் உரத்த குரலில் கீழ்க்கண்டவாறு பாடினார்கள்.

“கொல்லப்பட்ட இந்த ஆட்டுக்குட்டியானவரே வல்லமையை, செல்வத்தை, ஞானத்தை, பலத்தை, புகழை, மகிமையை,
    பாராட்டுகளைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்.”

13 பிறகு பரலோகத்தில் உள்ள அத்தனை உயிருள்ள ஜீவன்களும், பூமியிலும் கடலிலும் பூமிக்கு அடியிலுள்ள உலகிலுமுள்ள அத்தனை உயிருள்ள ஜீவன்களும் கீழ்க்கண்டவாறு சொல்வதைக் கேட்டேன்.

“சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் பாராட்டுகளும்,
    கனமும், புகழும், அதிகாரமும் சதாகலங்களிலும் உண்டாகட்டும்.”

14 இதைக் கேட்டு அந்த நான்கு உயிருள்ள ஜீவன்களும் “ஆமென்” என்று சொல்லின. மூப்பர்களும் பணிந்து வணங்கினர்.

சகரியா 1

கர்த்தர் தமது ஜனங்கள் திரும்பவேண்டும் என விரும்புகிறார்

கர்த்தரிடமிருந்து பெரகியாவின் மகன் சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது தரியு பெர்சியாவை அரசாண்ட இரண்டாம் ஆண்டு எட்டாம் மாதம். (சகரியா பெரகியாவின் மகன். பெரகியா தீர்க்கதரிசியான இத்தோவின் மகன்) இதுதான் அந்த செய்தி.

கர்த்தர் உங்களது முற்பிதாக்கள் மேல் மிகவும் கோபங்கொண்டவரானார். நீங்கள் இவற்றை ஜனங்களிடம் சொல்லவேண்டும். கர்த்தர், “என்னிடம் திரும்பி வாருங்கள். நான் உங்களிடம் திரும்பி வருவேன்” என்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

கர்த்தர், “நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் போன்றிருக்கக் கூடாது. கடந்த காலத்தில், தீர்க்கதரிசிகள் அவர்களிடம், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நீங்கள் உங்களது தீய வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என விரும்புகிறார். தீயவற்றைச் செய்வதை நிறுத்துங்கள்!’ என்றார்கள். ஆனால், உங்கள் முற்பிதாக்கள் நான் சொன்னதைக் கேட்கவில்லை” என்றார். கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

கர்த்தர், “உங்கள் முற்பிதாக்கள் போய்விட்டனர். அந்தத் தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் வாழவில்லை. தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்கள். நான் எனது வார்த்தைகளையும், சட்டங்களையும், போதனைகளையும் அவர்களைப் பயன்படுத்தி உன் முற்பிதாக்களுக்குச் சொன்னேன். உனது முற்பிதாக்கள் இறுதியில் தங்கள் பாடங்களைக் கற்றனர். அவர்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தான் எவற்றைச் செய்ய வேண்டும் எனச் சென்னாரோ அதைச் செய்தார். நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்காகவும், நாங்கள் செய்த தீமைக்காகவும் அவர் எங்களைத் தண்டித்தார்’ என்றார்கள். எனவே அவர்கள் தேவனிடம் திரும்பி வந்தனர்” என்றார்.

நான்கு குதிரைகள்

தரியு அரசாண்ட இரண்டாம் ஆண்டு சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்து நாலாந் தேதியிலே கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு இன்னொரு செய்தி வந்தது. (தீர்க்கதரிசி இத்தோவின் மகன் பெரகியா. இவனது மகன் சகரியா.) இதுதான் செய்தி.

இரவில், நான் ஒரு மனிதன் சிவப்புக் குதிரையில் ஏறி வருவதைப் பார்த்தேன். அவன் பள்ளத்தாக்கில் இருந்த நறுமணப் புதருக்குள் செடிகளுக்கிடையே நின்றான். அவனுக்குப் பின் சிவப்பும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் நின்றன. நான், “ஐயா இந்தக் குதிரைகள் எதற்காக?” என்று கேட்டேன்.

பிறகு என்னிடம் பேசின தேவதூதன், “இந்தக் குதிரைகள் எதற்காக உள்ளன என்பதை நான் உனக்குக் காட்டுவேன்” என்றான்.

10 பிறகு புதருக்குள் நின்ற அந்த மனிதன் “கர்த்தர் இந்தக் குதிரைகளைப் பூமியில் அங்கும் இங்கும் போவதற்காக அனுப்பினார்” என்றான். 11 அதன் பிறகு நறுமணப் புதருக்குள் நின்ற கர்த்தருடைய தூதனிடத்தில் குதிரைகள், “நாங்கள் பூமி முழுதும் சுற்றித்திரிந்தோம், எல்லாம் அமைதியாக இருக்கிறது” என்றன.

12 பின்னர் கர்த்தருடைய தூதன், “கர்த்தாவே, நீர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் ஆறுதல்படுத்தாமலிருப்பீர்? எழுபது ஆண்டுகளாக இந்நகரங்களின் மேல் நீர் உமது கோபத்தைக் காட்டினீர்” என்றான்.

13 பின்னர் கர்த்தர், என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனிடம், நல்ல ஆறுதலான வார்த்தைகளைப் பேசினார்.

14 பின்னர் தூதன் ஜனங்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும் என்று சொன்னான். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:

“நான் எருசலேம் மற்றும் சீயோன் மீது உறுதியான அன்புகொண்டிருந்தேன்.
15     நான், தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணும் நாடுகள் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன்.
நான் கொஞ்சம் கோபம் கொண்டிருந்தபோது
    என் ஜனங்களைத் தண்டிக்க அந்த நாடுகளைப் பயன்படுத்தினேன்.
    ஆனால் அந்த நாடுகள் பெருஞ்சேதத்திற்குக் காரணமாயின.”
16 எனவே கர்த்தர் கூறுகிறார்:
“நான் எருசலேமிற்குத் திரும்பி வருவேன்.
அவளுக்கு ஆறுதல் கூறுவேன்.”
    சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “எருசலேமை மீண்டும் கட்டுவேன். எனது வீடு அங்கே கட்டப்படும்.”

17 தூதன் கூட, “‘எனது நகரங்கள் மீண்டும் வளம்பெறும்.
    நான் சீயோனுக்கு ஆறுதல் அளிப்பேன்.
நான் எனது சிறப்புக்குரிய நகரமாக எருசலேமைத் தேர்ந்தெடுப்பேன்’
    என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்” என்றான்.

நான்கு கொம்புகளும் நான்கு தொழிலாளிகளும்

18 பிறகு நான் மேலே பார்த்தேன். நான்கு கொம்புகளைக் கண்டேன். 19 பிறகு நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இக்கொம்புகளின் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன்.

அவர், “இக்கொம்புகள் இஸ்ரவேல், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை அன்னிய நாடுகளுக்குத் துரத்தின” என்றார்.

20 பிறகு கர்த்தர் நான்கு தொழிலாளிகளைக் காட்டினார். 21 நான் அவரிடம், “இந்த நான்கு ஆட்களும் என்ன செய்ய வந்திருக்கிறார்கள்?” எனக் கேட்டேன்.

அவர், “இம்மனிதர்கள் இக்கொம்புகளை அச்சுறுத்தி வெளியில் எறிந்துபோட வந்திருக்கின்றனர். அக்கொம்புகள் யூதாவின் ஜனங்களை அயல்நாடுகளுக்குப் பலவந்தமாக தூக்கி ‘எறிந்தன.’ அக்கொம்புகள் எவரிடமும் இரக்கம் காட்டவில்லை. அக்கொம்புகள் யூதா ஜனங்களை அயல் நாடுகளுக்குத் தூக்கி எறிவதின் அடையாளமாக உள்ளன” என்றார்.

யோவான் 4

சமாரியப் பெண்ணும் இயேசுவும்

யோவானைவிட இயேசு மிகுதியான மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதாகப் பரிசேயர்கள் கேள்விப்பட்டனர். (ஆனால் உண்மையில் இயேசு எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. அவரது சீஷர்களே கொடுத்தனர்.) பரிசேயர்கள் கேள்விப்பட்டதைப்பற்றி இயேசுவும் அறிந்துகொண்டார். ஆகையால் அவர் யூதேயாவை விட்டுத் திரும்பி கலிலேயாவுக்குச் சென்றார். கலிலேயாவுக்குச் செல்கிற வழியில் இயேசு சமாரியா நாட்டைக் கடந்து செல்ல இருந்தார்.

சமாரியாவில் இயேசு சீகார் என்னும் பட்டணத்துக்கு வந்தார். அந்தப் பட்டணம், யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகில் இருந்தது. யாக்கோபின் கிணறும் அங்கே இருந்தது. இயேசு தன் நீண்ட பயணத்தால் களைத்துப் போயிருந்தார். ஆகையால் இயேசு கிணற்றின் அருகில் இளைப்பாறிட அமர்ந்தார். அது மதிய வேளை. ஒரு சமாரியப் பெண் தண்ணீரெடுப்பதற்காக அக்கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், “தயவுசெய்து நான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடு” என்று கேட்டார். (இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது இது நடந்தது.)

“குடிப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஒரு யூதர். நானோ சமாரியப் பெண்” என்று அவள் பதிலுரைத்தாள். (ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களோடு எப்பொழுதும் நட்புடன் இருப்பதில்லை.)

10 “தேவன் கொடுப்பவற்றைப்பற்றி நீ அறியவில்லை. குடிக்கத் தண்ணீர் கேட்கிற நான் யாரென்று உனக்குத் தெரியாது. இவற்றைப்பற்றி நீ அறிந்தால் நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். ஜீவத் தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றார் இயேசு.

11 “ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே! 12 நீங்கள் எமது மூதாதையரான யாக்கோபை விடப் பெரியவரா? அவர்தான் எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தார். அவரும் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார். அத்துடன் அவரது பிள்ளைகளும் மிருகங்களும் இதிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார்கள்” என்று அந்தப் பெண் சொன்னாள்.

13 “இந்த தண்ணீரைக் குடிக்கிறவர்களுக்கு மீண்டும் தாகம் எடுக்கும். 14 ஆனால் நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும்” என்று இயேசு பதிலுரைத்தார்.

15 “ஐயா! எனக்கு அந்தத் தண்ணீரை வழங்குங்கள். அப்போது ஒருபோதும் மறுபடியும் எனக்குத் தாகம் எடுக்காது. மிகுதியாகத் தண்ணீரெடுக்க இங்கே நான் மீண்டும் வர வேண்டியதும் இராது” எனக் கூறினாள் அந்தப் பெண்.

16 “போ, உன் கணவனோடு இங்கே திரும்ப வா” என்றார் இயேசு.

17 “ஆனால், எனக்குக் கணவன் இல்லையே” என்றாள் அப்பெண்.

“உனக்குக் கணவன் இல்லையென்று நீ சொல்வது சரிதான். 18 உண்மையில் உனக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் நீ இப்பொழுது யாரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாயோ அவன் உன் கணவனல்ல. நீ என்னிடம் உண்மையைச் சொன்னாய்” என்றார் இயேசு.

19 “உம்மை நான் தீர்க்கதரிசியாகக் காண்கிறேன். 20 எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்” என்றாள் அந்தப் பெண்.

21 “பெண்ணே! என்னை நம்பு. இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பிதாவை (தேவனை) வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. 22 சமாரியர்களாகிய நீங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். யூதர்களாகிய நாங்கள், எங்களால் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். யூதர்களிடமிருந்தே இரட்சிப்பு வருகின்றது. 23 உண்மையாக வழிபடுகிறவர்கள் (தேவனை) ஆவியோடும் உண்மையோடும் வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது. பிதாவும் தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகைய மக்களாக இருக்க விரும்புகிறார். 24 தேவன் ஆவியாயிருக்கிறார். ஆகையால் தேவனை வழிபடுகிற மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை வழிபடுதல் வேண்டும்” என்றார் இயேசு.

25 “கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள் அப்பெண்.

26 பிறகு இயேசு, “இப்பொழுது அவர்தான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். நான்தான் மேசியா” என்றார்.

27 அப்பொழுது இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்தனர். இயேசு ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். ஆனால் எவரும், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றோ “ஏன் நீங்கள் அவளோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றோ கேட்கவில்லை.

28 பிறகு அந்தப் பெண் தன் தண்ணீர்க் குடத்தை விட்டுவிட்டு நகருக்குத் திரும்பப் போனாள். 29 அங்கே அவள் மக்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். ஒரு வேளை அவர் கிறிஸ்துவாக இருக்கலாம்” என்றாள். 30 ஆகையால் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி இயேசுவைக் காண வந்தனர்.

31 அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக்கொண்டனர்.

32 ஆனால் இயேசுவோ, “என்னிடம் உண்பதற்கு உணவுண்டு. அதனைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.

33 “ஏற்கெனவே வேறு யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்கள்” என்று சீஷர் கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.

34 “எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வதுதான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பதுதான் எனது உணவாக இருக்கிறது. 35 நீங்கள் பயிரை நடும்போது ‘அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்’ என்று சொல்வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப்போன்று இருக்கிறார்கள். 36 இப்பொழுதுகூட அறுவடை செய்கிறவன் சம்பளம் பெறுகிறான். அவன் தனது நித்திய வாழ்வுக்கு அனுகூலமாக அறுவடை செய்துகொள்கிறவன். ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனோடு அறுவடை செய்கிறவனும் மகிழ்ச்சியடைய இயலும். 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் இன்னொருவன் என்கிற பழமொழி இதனால் உண்மையாகிறது. 38 நீங்கள் பாடுபட்டு விதைக்காத நிலத்தை அறுவடை செய்யுமாறு உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் பாடுபட்டார்கள். நீங்கள் அவர்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள்” என்று இயேசு கூறினார்.

39 அந்நகரத்தில் உள்ள ஏராளமான மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். அந்தப் பெண் இயேசுவைப்பற்றிக் கூறியவற்றால்தான் அவர்கள் அவரை நம்பினர். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொல்லி விட்டார்” என்று கூறி இருந்தாள். 40 சமாரியர்கள் இயேசுவிடம் சென்றார்கள். இயேசுவை அவர்களோடு தங்கும்படி வேண்டினார்கள். ஆகையால் இயேசு அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கினார். 41 மேலும் மிகுதியான மக்கள், இயேசு சொன்னவற்றின் மூலம் அவரை நம்பினர்.

42 அவர்கள், “முதலில் நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை நம்பினோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே அவர் சொன்னவற்றைக் கேட்டதால் விசுவாசிக்கிறோம். அவர் உண்மையாகவே இந்த உலகத்தை இரட்சிக்கப்போகிறவர் என்று நம்புகிறோம்” என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார்கள்.

அதிகாரியின் மகன் குணப்படுதல்(A)

43 இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார். 44 (இயேசு ஏற்கெனவே “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டான்” என்று சொல்லியிருந்தார்) 45 அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்துகொண்டவர்கள்.

46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். அரசனின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது மகன் நோயுற்றிருந்தான். 47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது மகன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். 48 “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.

49 அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய மகன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.

50 அதற்கு இயேசு, “போ, உன் மகன் பிழைப்பான்” என்றார்.

அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். 51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் மகன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.

52 “என் மகன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் மகனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள்.

53 இயேசு, “உன் மகன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.

54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center