M’Cheyne Bible Reading Plan
ரெகொபெயாம் முட்டாள்த்தனமாக நடந்துக்கொள்கிறான்
10 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமை அரசனாக்க விரும்பியதால் அவன் சீகேம் நகரத்திற்குப் போனான். 2 யெரொபெயாம், சாலொமோனுக்கு அஞ்சி ஓடி எகிப்தில் இருந்தான். அவன் நேபாத்தின் மகன். ரெகொபெயாம் புதிய அரசனாகப் போகிற செய்தியை யெரொபெயாம் கேள்விப்பட்டான். எனவே யெரொபெயாம் எகிப்திலிருந்து திரும்பி வந்தான். 3 இஸ்ரவேல் ஜனங்கள் யெரொபெயாமைத் தங்களோடு வரும்படி அழைத்தனர். பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், 4 “உனது தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெரிய பாரத்தைச் சுமப்பதுபோல் உள்ளது. இப்பாரத்தை எளிதாக்கும். பிறகு நாங்கள் உமக்கு சேவைச்செய்வோம்” என்றனர்.
5 ரெகொபெயாம் அவர்களிடம், “மூன்று நாட்களுக்குப் பிறகு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்றான். எனவே எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள்.
6 பிறகு அரசன் ரெகொபெயாம் தன் தந்தையான சாலொமோனுடன் கூடவே இருந்த மூத்த பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்தான். அவர்களிடம் அவன், “இந்த ஜனங்களுக்கு நான் என்ன பதில் சொல்லவேண்டும்?” என்று கேட்டான்.
7 அம்முதியவர்கள் அவனிடம், “நீங்கள் அந்த ஜனங்களோடு கருணையோடு இருந்தால் அவர்கள் மனம் மகிழும்படி செய்யுங்கள். நல்ல முறையில் பேசுங்கள் பின் அவர்கள் உங்களுக்கு என்றென்றும் சேவை செய்வார்கள்” என்றனர்.
8 ஆனால் ரெகொபெயாம் முதியவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் தன்னோடு வளர்ந்து தனக்கு சேவை செய்துவரும் இளைஞர்களிடம் ஆலோசனை கேட்டான். 9 அவர்களிடம் அவன், “நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்? அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? நான் அவர்களின் வேலை பாரத்தைக் குறைக்கவேண்டும் எனக் கேட்கிறார்கள். என் தந்தை அவர்கள்மேல் சுமத்திய பாரத்தைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று கேட்டான்.
10 ரெகொபெயாமோடு வளர்ந்த இளைஞர்களோ அவனிடம், “உன்னுடன் பேசிய ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியது இதுதான். ஜனங்கள் உன்னிடம், ‘உங்கள் தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெருஞ்சுமையை சுமப்பது போல் உள்ளது. ஆனால் நீங்கள் அந்தச் சுமையைக் குறைக்கவேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தப் பதிலைத்தான் நீ கூறவேண்டும்: ‘எனது சுண்டு விரலானது என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது! 11 என் தந்தை உங்கள் மீது பெருஞ்சுமையை ஏற்றினார். நானோ அதைவிடப் பெருஞ்சுமையை ஏற்றுவேன். என் தந்தை உங்களைச் சவுக்கினால் தண்டித்தார். நானோ கூரான உலோக முனைகளைக் கொண்ட சவுக்கினால் உங்களைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்று ஆலோசனை வழங்கினர்.
12 மூன்று நாட்களுக்குப் பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் வந்தனர். அரசன் ரெகொபெயாம், “மூன்று நாட்களுக்குப் பிறகு வாருங்கள்” என்று அவர்களிடம் சொல்லி இருந்தான். 13 பிறகு ரெகொபெயாம் அரசன் அவர்களோடு மிகக் கடுமையாகப் பேசினான். முதியவர்கள் சொன்ன ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. 14 ரெகொபெயாம் அரசன் இளைஞர்கள் ஆலோசனை சொன்னபடியே பேசினான். அவன், “என் தந்தை உங்கள் சுமையை அதிகமாக்கினார். நான் அதைவிட அதிகமாக்குவேன். அவர் உங்களைச் சவுக்கால் தண்டித்தார். நானோ கூரான உலோக முனைகளைக்கொண்ட சவுக்கினால் உங்களைத் தண்டிப்பேன்” என்றான். 15 எனவே அரசன் ரெகொபெயாம் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. இம்மாற்றங்கள் தேவனிடமிருந்து வந்ததினால் அவன் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. தேவன் இந்த விளைவை ஏற்படுத்தினார். அகியாவின் மூலமாக யெரொபெயாமுடன் கர்த்தர் பேசிய அவரது வார்த்தை உண்மையாகும்படி இது நடந்தது. அகியா சிலோனிய ஜனங்களிடமிருந்து வந்தவன். யெரொபெயாம் நேபாத்தின் மகன்.
16 இஸ்ரவேல் ஜனங்கள் தம் அரசனான ரெகொபெயாம் தமது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கண்டனர். பிறகு அவர்கள் அரசனிடம், “நாங்களும் தாவீது குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? ஈசாயின் நிலத்தில் நாங்கள் ஏதாவது பெற்றோமா? எனவே இஸ்ரவேலராகிய நாம் நமது வீடுகளுக்குப் போவோம். தாவீதின் மகன் தன் சொந்த ஜனங்களை ஆண்டுகொள்ளட்டும்!” என்றனர். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள். 17 ஆனால் யூத நகரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் பலர் இருந்தனர். ரெகொபெயாம் அவர்களை ஆண்டுவந்தான்.
18 கட்டாயமாக வேலைசெய்ய வேண்டும் என நியமிக்கப்பட்ட ஜனங்களுக்கெல்லாம் அதோனிராம் பொறுப்பாளியாக இருந்தான். அவனை ரெகொபெயாம் இஸ்ரவேல் ஜனங்களிடம் அனுப்பி வைத்தான். ஆனால் அவனை இஸ்ரவேல் ஜனங்கள் கல்லெறிந்து கொன்றனர். ரெகொபெயாம் ஓடிப்போய் தேரில் ஏறிக்கொண்டான். அவன் தப்பித்து எருசலேமிற்கு ஓடினான். 19 அன்று முதல் இன்று வரை இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் குடும்பத்துக்கு எதிராகவே இருந்து வருகின்றனர்.
1 இது இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷம். [a] விரைவில் நடைபெறப் போகிறவை எவையென்று தன் ஊழியர்களுக்குத் தெரிவிக்கும்பொருட்டு இயேசுவுக்கு தேவன் இதை வழங்கினார். கிறிஸ்து தன் தேவதூதனை அனுப்பி தன் ஊழியனாகிய யோவான் இதனைத் தெரிந்துகொள்ளுமாறு செய்தார். 2 தான் பார்த்த எல்லாவற்றையும் யோவான் சொல்லி இருக்கிறான். தேவனிடமிருந்து வருகிற செய்தியாகிய இவ்வுண்மையையே இயேசு அவனிடம் சொன்னார். 3 தேவனிடமிருந்து வந்த இச்செய்திகளை வாசிக்கிற எவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். இச்செய்தியைக் கேள்விப்படுகிறவர்களும் இதில் எழுதியுள்ளபடி நடக்கின்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் குறுகினதாயிருக்கிறது.
இயேசுவின் செய்திகளை சபைகளுக்கு யோவான் எழுதுகிறார்
4 ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் யோவான் எழுதுவது:
எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் இனிமேல் வரப்போகிறவருமான ஒருவராலும், அவரது சிம்மாசனத்துக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 5 இயேசுவே உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தவர்களுள் முதலானவர் அவரே ஆவார்.
பூமியில் உள்ள அரசர்களுக்கு எல்லாம் அதிபதி இயேசு. 6 இயேசுவே நம்மை நேசிக்கிறவர். அவரே தமது இரத்தத்தால் நமது பாவங்களில் இருந்து நம்மை விடுதலை செய்தவர். தமது பிதாவாகிய தேவனின் முன்னிலையில் நம்மை ஆசாரியர்களாக்கி, அரசு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு மகிமையும், வல்லமையும் எப்போதும் உண்டாவதாக! ஆமென்.
7 பாருங்கள், இயேசு மேகங்களுடனே வருகிறார். ஒவ்வொருவரும் அவரைக் காண்பார்கள். அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியில் உள்ள அனைத்து மக்களும் அவரைப் பார்த்து, அவருக்காகப் புலம்புவார்கள். ஆமாம், அது அப்படியே நடக்கும். ஆமென்.
8 கர்த்தர் கூறுகிறார்: “நான் அல்பாவும் ஒமேகாவுமாய் [b] இருக்கிறேன். நான் இருக்கிறவராகவும், இருந்தவராகவும், இனி வருகிறவருமாய் இருக்கிற சர்வவல்லமை உள்ளவராயிருக்கிறேன்.”
9 நான் யோவான், கிறிஸ்துவில் நான் உங்கள் சகோதரன். இயேசுவின் நிமித்தம் வரும் துன்பங்களுக்கும், இராஜ்யத்துக்கும், பொறுமைக்கும் நாம் பங்காளிகள். தேவனின் செய்தியைப் போதித்துக்கொண்டிருந்ததற்காகவும், இயேசுவைப் பற்றிய சாட்சியின் நிமித்தமாகவும் பத்மு [c] என்னும் தீவிற்கு நான் நாடுகடத்தப்பட்டேன். 10 கர்த்தருடைய நாளில் பரிசுத்த ஆவியானவர் என்னை ஆட்கொண்டார். அப்பொழுது ஒரு பெரிய சத்தத்தை எனக்குப் பின்பாகக் கேட்டேன். அது எக்காள சத்தம்போல் இருந்தது. 11 அந்த சத்தம், “நீ பார்க்கின்ற எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுது. அதனை ஏழு சபைகளுக்கும் அனுப்பு. அவை ஆசியாவில் உள்ள எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் நகரங்களில் உள்ளன” என்று கூறியது.
12 என்னோடு பேசிக்கொண்டிருந்தவர் யார் என அறிய நான் திரும்பிப் பார்த்தேன். நான் ஏழு பொன்னாலான குத்துவிளக்குகளைப் பார்த்தேன். 13 அவற்றுக்கு மத்தியில் “மனித குமாரனைப் போன்ற” ஒருவரைக் கண்டேன். அவர் நீண்ட மேல் அங்கியை அணிந்திருந்தார். அவர் மார்பில் பொன்னால் ஆன கச்சை கட்டப்பட்டிருந்தது. 14 அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப்போலவும், பனியைப்போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன. 15 அவரது பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்துகொண்டிருக்கிற ஒளிமிக்க வெண்கலம்போல் இருந்தன. அவரது சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. 16 அவர் தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் வாயில் இருந்து இருபக்கமும் கூர்மையுள்ள வாள் வெளிப்பட்டது. அவர் முகம் உச்சி நேரத்தில் ஒளிவீசும் சூரியனைப்போல ஒளி வீசியது.
17 நான் அவரைக் கண்டதும் இறந்தவனைப்போல அவரது பாதங்களில் விழுந்தேன். அவர் தனது வலது கையை என்மீது வைத்து, பயப்படாதே, நானே முந்தினவரும், பிந்தினவரும் ஆக இருக்கிறேன். 18 நான் வாழ்கிற ஒருவராக இருக்கிறேன். நான் இறந்தேன். ஆனால் இப்போது சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்கள் உள்ளன. 19 எனவே, நீ பார்த்தவற்றையெல்லாம் எழுது. இப்பொழுது நடப்பதையும், இனிமேல் நடக்கப்போவதையும் எழுது. 20 எனது வலது கையில் உள்ள ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும் ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது. நீ கண்ட ஏழு குத்து விளக்குகளும் ஏழு சபைகளாகும். ஏழு நட்சத்திரங்களும் அந்தச் சபைகளில் உள்ள தூதர்களாகும்.
தேவன் ஜனங்களிடம் அவர்களது வாழ்வை மாற்றும்படி கேட்கிறார்
2 வெட்கமற்ற ஜனங்களே, உங்கள் வாழ்க்கையை, 2 நீங்கள் உதிர்ந்த பூக்களைப் போன்று வாடும் முன்னால் மாற்றுங்கள். பகலின் வெப்பத்தால் பூவானது வாடி உதிரும். நீயும் அதைப்போன்று கர்த்தர் கோபத்தைக் காட்டும்போது ஆவாய். எனவே கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள் மீது வரும் முன்னே உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். 3 பணிவான ஜனங்களே, அனைவரும் கர்த்தரிடம் வாருங்கள். அவருடைய சட்டங்களுக்கு அடி பணியுங்கள். நல்லவற்றைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். பணிவாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதனால் ஒரு வேளை நீங்கள் கர்த்தர் தனது கோபத்தைக் காட்டும்போது பாதுகாப்பு பெறலாம்.
இஸ்ரவேலின் அண்டை நாட்டினரைக் கர்த்தர் தண்டிப்பார்
4 காத்சாவில் எவரும் விடுபடமாட்டார்கள். அஸ்கலோன் அழிக்கப்படும். அஸ்தோத்தை விட்டுப் போகும்படி மதியத்திற்குள் பலவந்தப்படுத்தப்படுவார்கள். எக்ரோன் காலியாகும். 5 பெலிஸ்தரின் தேச ஜனங்களே, கடற்கரையில் வாழும் ஜனங்களே, கர்த்தரிடமிருந்து வந்த இச்செய்தி உங்களுக்குரியது. கானான் தேசமே, பெலிஸ்தரின் தேசமே, நீங்கள் அழிக்கப்படுவீர்கள். அங்கே எவரும் வாழமாட்டார்கள். 6 கடற்கரையில் உள்ள உங்கள் நிலங்கள் மேய்ப்பர்களுக்கும், ஆடுகளுக்கும் தங்கும் இடங்களாகும். 7 பிறகு அந்த தேசம் யூதாவிலிருந்துத் தப்பிப் பிழைத்தவர்களுக்கு உரியதாகும். கர்த்தர் அந்த யூதாவிலுள்ள ஜனங்களை நினைவில் வைத்திருப்பார். அந்த ஜனங்கள் அயல்நாடுகளில் கைதிகளாக இருப்பார்கள். ஆனால் கர்த்தர் அவர்களைத் திரும்ப அழைத்து வருவார். பிறகு யூதா ஜனங்கள் தமது ஆடுகளை அவ்வயல்களில் உள்ள புல்லை மேயச்செய்வார்கள். மாலை நேரங்களில் அவர்கள் அஸ்கலோனின் காலியான வீடுகளில் படுத்துக்கொள்வார்கள்.
8 கர்த்தர் கூறுகின்றார்: “மோவாப் ஜனங்களும், ஆமோன் ஜனங்களும் என்ன செய்தனர் என்று எனக்குத் தெரியும். அந்த ஜனங்கள் எனது ஜனங்களை நிந்தைக்குள்ளாக்கினார்கள். அந்த ஜனங்கள் தம் சொந்த நாட்டைப் பெரிதாக்க இத்தேசத்தை எடுத்துக் கொண்டார்கள். 9 எனவே, நான் வாழ்வது எவ்வளவு உறுதியோ அவ்வாறே, மோவாப் மற்றும் ஆமோனின் ஜனங்கள், சோதோம் மற்றும் கொமோராவைப்போல அழிக்கப்படுவார்கள். நான் சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர். நான் அந்நாடுகள் எல்லாம் என்றென்றைக்கும் முழுமையாக அழிக்கப்படுமென்று வாக்குறுதி அளிக்கிறேன். அவர்களது நிலத்தில் முட்செடிகள் வளரும். அவர்களது நிலமானது சவக்கடலினால் உப்பாக்கப்பட்ட நிலம் போன்றிருக்கும். எனது ஜனங்களில் மீதியாக இருப்பவர்கள் அந்த நிலத்தையும் அதில் உள்ளவற்றையும் எடுத்துக்கொள்வார்கள்.”
10 மோவாப் மற்றும் அம்மோன் ஜனங்களுக்கு அவை நிகழும். ஏனென்றால், அவர்கள் பெருமைமிக்கவர்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஜனங்களைக் கொடுமைப்படுத்தி, அவமானமடையவும், வெட்கமடையவும் செய்தார்கள். 11 அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அஞ்சுவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்களது தெய்வங்களை அழிப்பார். பிறகு தூரதேசங்களில் உள்ள ஜனங்கள் அனைவரும் கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள். 12 எத்தியோப்பியா ஜனங்களே, இது உங்களுக்கும் பொருந்தும். கர்த்தருடைய பட்டயம் உமது ஜனங்களையும் கொல்லும். 13 கர்த்தர் வடக்கே திரும்பி அசீரியாவையும் தண்டிப்பார். அவர் நினிவேயையும் அழிப்பார். அந்நகரமானது காலியான வறண்ட பாலைவனம் போலாகும். 14 பிறகு அந்த அழிந்த நகரத்தில் ஆடுகளும், காட்டு மிருகங்களும் மட்டுமே வாழும். விட்டுப்போன தூண்களின்மேல் கோட்டான்களும், நாரைகளும் இருக்கும். அவர்களின் கூக்குரல் ஜன்னல் வழியாக வந்து கேட்கப்படும். வாசல் படிகளில் காகங்கள் இருக்கும். கருப்பு பறவைகள் காலியான வீடுகளில் இருக்கும். 15 இப்பொழுது நினிவே மிகவும் பெருமிதமாக உள்ளது. இது அத்தகைய மகிழ்ச்சிகரமான நகரம். ஜனங்கள் தாம் பாதுகாப்புடன் இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்கள் நினிவேதான் உலகத்திலேயே மிகச் சிறந்த இடம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்நகரம் அழிக்கபடும். இது காலியான இடமாகி காட்டு மிருகங்கள் மட்டுமே ஓய்வெடுக்கச் செல்லும். ஜனங்கள் அந்த வழியாகக் கடந்து செல்லும்போது அதைப் பார்த்து பரிகசிப்பார்கள். அந்நகரம் எவ்வளவு மோசமாக அழிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி தங்கள் தலையை குலுக்குவார்கள்.
இயேசு உயிர்த்தார்.(A)
24 வாரத்தின் முதல் நாளில் அதிகாலைப் பொழுதில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குப் பெண்கள் வந்தார்கள். தாம் தயாரித்த மணமிக்க பொருட்களை அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள். 2 ஒரு பெருங்கல் கல்லறையின் நுழை வாசலில் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல் உருண்டு போயிருந்ததை அப்பெண்கள் கண்டார்கள். 3 அவர்கள் உள்ளே சென்றார்கள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இருக்கவில்லை. 4 அப்பெண்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒளிமிக்க ஆடை அணிந்தவர்களாக இரண்டு தேவ தூதர்கள் அவர்களருகே நின்றார்கள். 5 அப்பெண்கள் மிகவும் பயந்தார்கள். அந்த இரு மனிதரும் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருக்கிற ஒருவரை ஏன் இங்கு தேடுகிறீர்கள்? இது இறந்தோருக்குரிய இடம். 6 இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார். 7 தீயோரிடம் ஒப்படைக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார் எனவும், மூன்றாம் நாளில் மரணத்தின்று எழுவார் எனவும் இயேசு கலிலேயாவில் சொன்னது ஞாபகம் இருக்கிறதா?” என்றார்கள். 8 அப்போது இயேசு கூறியவற்றை அப்பெண்கள் நினைவுகூர்ந்தார்கள்.
9 அப்பெண்கள் கல்லறையை விட்டுப் போய், பதினொரு சீஷர்களும், மற்றவர்களும் இருக்கும் இடத்துக்குச் சென்றார்கள். கல்லறையின் அருகே நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அப்பெண்கள் அவர்களுக்குக் கூறினார்கள். 10 அவர்கள் மகதலேனா மரியாள், யோவன்னா, யாக்கோபின் தாயாகிய மரியாள், வேறு சில பெண்கள் ஆகியோர். அப்பெண்கள் நடந்த அனைத்தையும் சீஷர்களுக்குச் சொன்னார்கள். 11 அப்பெண்கள் கூறியவற்றை சீஷர்கள் நம்பவில்லை. அது விசித்திரமான பேச்சாக இருந்தது. 12 ஆனால் பேதுரு எழுந்து அது உண்மையா எனப் பார்க்கக் கல்லறைக்கு ஓடினான். அவன் உள்ளே பார்த்து இயேசுவின் உடலைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணிகள் மட்டுமே கிடப்பதைக் கண்டான். இயேசுவைக் காணவில்லை. இயேசு சென்றுவிட்டிருந்தார். நடந்தவற்றைக் குறித்து ஆச்சரியப்பட்டவனாகப் பேதுரு தனித்திருக்க விரும்பிச் சென்றான்.
எம்மாவூர் சென்ற சீஷர்கள்(B)
13 எம்மா என்னும் ஊருக்கு அதே நாள் இயேசுவின் இரண்டு சீஷர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். எருசலேமில் இருந்து ஏழு மைல் தூரத்தில் அந்த ஊர் இருந்தது. 14 நடந்தவை அனைத்தையும் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். 15 அவர்கள் இவற்றை விவாதித்துக்கொண்டிருக்கும்போது இயேசு அருகே வந்து அவர்களோடு நடந்தார். 16 (இயேசுவை அடையாளம் கண்டுகொள்வதிலிருந்து ஏதோ ஒன்றால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள்) 17 “நீங்கள், நடக்கும்போது பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் என்ன?” என்று இயேசு கேட்டார்.
இருவரும் நின்றார்கள். அவர்கள் முகங்கள் சோகத்தால் நிரம்பி இருந்தன. 18 கிலேயோபாஸ் என்பவன், “கடந்த சில நாட்களாக அங்கே நிகழ்ந்தவற்றை அறியாத மனிதர் எருசலேமில் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்” என்றான்.
19 அவர்களை நோக்கி, இயேசு, “நீங்கள் எதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்.
அம்மனிதர்கள் அவரை நோக்கி, “நாசரேத்தில் உள்ள இயேசுவைக் குறித்துப் பேசுகிறோம். தேவனுக்கும் மக்களுக்கும் அவர் ஒரு பெரிய தீர்க்கதரிசி. அவர் பல ஆற்றல் மிக்க காரியங்களைச் சொல்லியும் செய்தும் வந்திருக்கிறார். 20 ஆனால் தலைமை ஆசாரியரும் நம் தலைவர்களும் அவர் நியாயந்தீர்க்கப்பட்டுக் கொல்லப்படுமாறு கொடுத்துவிட்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். 21 இஸ்ரவேல் மக்களை விடுவிப்பவர் இயேசு ஒருவரே என நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படி நடந்துள்ளது. இயேசு கொல்லப்பட்டு மூன்று நாட்களாகிவிட்டன. 22 இன்று எங்கள் பெண்களில் சிலர் எங்களுக்குச் சில ஆச்சரியமான தகவல்களைச் சொன்னார்கள். இன்று அப்பெண்கள் அதிகாலையில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்றார்கள். 23 ஆனால் அவரது உடலை அங்கே காணவில்லை. அவர்களுக்கு ஒரு காட்சியில் தரிசனமான இரண்டு தேவதூதர்களைப் பார்த்தார்கள். ‘இயேசு உயிரோடு இருக்கிறார்’ என அவர்கள் சொன்னார்கள் என்று அப்பெண்கள் வந்து எங்களிடம் சொன்னார்கள். 24 அதன் பின்பு எங்களில் சிலரும் கல்லறைக்குச் சென்றார்கள். பெண்கள் சொன்னபடியே இருந்தது. கல்லறை வெறுமையாக இருந்ததை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவைப் பார்க்கவில்லை” என்றார்கள்.
25 பின்பு இயேசு இருவரிடமும், “நீங்கள் அறிவற்றவர்கள். உண்மையை மிகவும் தாமதமாக உணர்ந்துகொள்கிறீர்கள். தீர்க்கதரிசிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் நம்பவேண்டும். 26 கிறிஸ்து தன் மகிமையில் நுழையும்முன்பு இவ்வாறு துன்புற வேண்டும் என்று தீர்க்கதரிசிகள் கூறி இருந்தார்கள்” என்றார். 27 பிற்பாடு சுவடிகளில் தன்னைப்பற்றி எழுதிய ஒவ்வொன்றைப்பற்றியும் இயேசு விளக்க ஆரம்பித்தார். மோசேயின் புத்தகங்கள் தொடங்கி தீர்க்கதரிசிகள் வரைக்கும் இயேசுவைக் குறித்துக் கூறியவற்றை அவர் சொன்னார்.
28 அவர்கள் எம்மாவூர் என்னும் ஊரை அடைந்தார்கள். தன் பயணத்தைத் தொடர விரும்பியது போல இயேசு நடித்தார். 29 ஆனால் அவர்கள் அவர் அங்கே தங்கவேண்டுமென விரும்பினார்கள். அவர்கள் இயேசுவை “எங்களுடன் தங்குங்கள். மிகவும் தாமதமாகிவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது” என்று கெஞ்சிக் கேட்டார்கள். எனவே அவர் அவர்களோடு தங்கச் சென்றார்.
30 அவர்களோடு சேர்ந்து இயேசு உணவுண்ண உட்கார்ந்திருந்தார். உணவுக்காக நன்றி சொல்லிவிட்டு, உணவைப் பகிர்ந்தார். 31 அப்போது அம்மனிதர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவர் யார் என அவர்கள் உணர்ந்துகொண்டதும், அவர் மறைந்துவிட்டார். 32 இருவரும் தமக்குள்ளாக, “பாதையில் நம்முடன் இயேசு பேசிக்கொண்டு வந்தபோது ஏதோ எரிவதுப்போல் ஓர் உணர்வு இதயத்தில் எழுந்தது. வேதாகமத்தின் பொருளை அவர் விளக்கியபோது மிகவும் பரவசமாக இருந்தது” என்று பேசிக்கொண்டார்கள்.
33 பின்பு அவர்கள் எழுந்து திரும்பி எருசலேமை நோக்கிச் சென்றார்கள். எருசலேமில் இயேசுவின் சீஷர்கள் ஒன்றாகக் கூடியிருக்கக் கண்டார்கள். பதினொரு சீஷர்களும் அவர்களோடிருந்த மக்களும் 34 “மரணத்தினின்று உண்மையாகவே அவர் மீண்டும் எழுந்தார்” சீமோனுக்கு (பேதுருவுக்கு) அவர் காட்சியளித்தார் என்றார்கள்.
35 அப்போது பாதையில் நடந்த விஷயங்களை இரு மனிதர்களும் கூறினார்கள். உணவைப் பங்கிட்டபோது எவ்வாறு இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள் எனச் சொன்னார்கள்.
சீஷர்களுக்கு இயேசுவின் காட்சி(C)
36 அவர்கள் இருவரும் இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோது சீஷர்களின் கூட்டத்தின் நடுவில் இயேசு நின்றிருந்தார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்றார்.
37 சீஷர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் பயந்தார்கள். அவர்கள் ஏதோ ஒரு ஆவியைப் பார்த்துக்கொண்டிருப்பதாக எண்ணினார்கள். 38 ஆனால் இயேசு, “நீங்கள் எதற்காகக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? நீங்கள் காண்பதில் ஏன் ஐயம்கொள்கின்றீர்கள்? 39 என் கைகளையும் என் பாதங்களையும் பாருங்கள். உண்மையாகவே நான்தான். என்னைத் தொடுங்கள். எனக்கு உயிருள்ள உடல் இருப்பதைப் பார்க்க முடியும். ஓர் ஆவி இப்படிப்பட்ட உடல் கொண்டிருக்காது” என்றார்.
40 இயேசு அவர்களுக்கு இதைக் கூறிய பின்பு, அவர்களுக்குத் தன் கைகளிலும், பாதங்களிலும் உள்ள ஆணித் துளைகளைக் காட்டினார். 41 சீஷர்கள் ஆச்சரியமுற்றவர்களாக இயேசுவை உயிரோடு பார்த்ததால் மிகவும் மகிழ்ந்தார்கள். எனினும் கூட தாம் பார்த்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்களை நோக்கி இயேசு, “உங்களிடம் இங்கே ஏதாவது உணவு இருக்கிறதா?” என்று கேட்டார். 42 அவர்கள் சமைத்த மீனில் ஒரு துண்டைக் கொடுத்தார்கள். 43 சீஷர்களின் முன்னிலையில் இயேசு அந்த மீனை எடுத்து சாப்பிட்டார்.
44 அவர்களை நோக்கி இயேசு, “நான் உங்களோடு இருந்த காலத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். மோசேயின் சட்டத்திலும், தீர்க்கதரிசிகளின் நூற்களிலும், சங்கீதத்திலும் என்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற அனைத்தும் நடந்தேயாக வேண்டும் என்று நான் சொன்னேன்” என்றார்.
45 பின்பு இயேசு சீஷர்களுக்கு வேதாகமத்தை விளக்கினார். தன்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற காரியங்களை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவினார். 46 பிறகு அவர்களை நோக்கி, “கிறிஸ்து கொல்லப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து எழுவார் என்று எழுதப்பட்டிருக்கிறது. 47-48 நீங்கள் நடந்தவை அனைத்தையும் பார்த்தீர்கள். நீங்களே சாட்சிகள். மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட முடியும் என்று நீங்கள் போய் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் தம் மனம் மாறி, தாம் செய்த பாவங்களுக்காக வருந்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அதைச் செய்தால் அவர்கள் தேவனால் மன்னிக்கப்படுவர். எருசலேமிலிருந்து நீங்கள் புறப்பட்டு என் பெயரில் இவற்றைப் போதிக்க வேண்டும். உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் இந்த நற்செய்தி கூறப்பட வேண்டும். 49 கவனியுங்கள், என் பிதா உங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை உங்களுக்கு அனுப்புவேன். விண்ணில் இருந்து அந்த வல்லமையை நீங்கள் பெறும்வரைக்கும் எருசலேமில் தங்கி இருக்கவேண்டும்” என்றார்.
இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்(D)
50 எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 51 இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார். 52 சீஷர்கள் அவரை அங்கே வணங்கினர். பிறகு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் மகிழ்வோடு இருந்தார்கள். 53 தேவனை வாழ்த்தியவாறே எப்போதும் அவர்கள் தேவாலயத்தில் தங்கி இருந்தார்கள்.
2008 by World Bible Translation Center