M’Cheyne Bible Reading Plan
சாலொமோன் ஞானத்தை கேட்கிறான்
1 சாலொமோன் பலமுள்ள அரசனாக விளங்கினான். ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் அவனோடு இருந்தார். கர்த்தர் அவனை மிகப் பெரியவனாக்கினார். 2 இஸ்ரவேல் ஜனங்களோடு சாலொமோன் பேசினான். அத்துடன் எல்லா தலைவர்களோடும், பொது அதிகாரிகளோடும், நீதிபதிகளோடும், இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு வழிகாட்டிகளோடும், ஒவ்வொரு குடும்பத் தலைவர்களோடும் பேசினான். 3 பிறகு சாலொமோனும் மற்றும் அனைவரும் கூடி கிபியோனில் இருக்கிற மேடைக்குப் போனார்கள். அங்கு தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் இருந்தது. இதனைக் கர்த்தருடைய ஊழியக்காரனான மோசே வனாந்தரத்தில் இருக்கும்போது அமைத்தான். 4 தாவீது தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான். அவன் எருசலேமில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கும்படி ஒரு கூடாரத்தை அமைத்திருந்தான். 5 ஊரியின் மகனான பெசலெயேல் வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான். அது பரிசுத்தக் கூடாரத்தின் முன்பாக கிபியோனில் இருந்தது. எனவே சாலொமோனும் ஜனங்களும் கிபியோனுக்கு கர்த்தருடைய ஆலோசனை பெற சென்றனர். 6 சாலொமோன் மேலே ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருக்கு முன்பிருந்த வெண்கல பலிபீடத்தின் அருகிலே சென்றான். அப்பலிபீடத்தில் சாலொமோன் 1,000 தகனபலிகளைக் கொடுத்தான்.
7 அன்று இரவு தேவன் சாலொமோனிடம், “நான் உனக்கு என்ன தரவேண்டும் என விரும்புகிறாய் என்பதை கேள்” என்றார்.
8 சாலொமோன் தேவனிடம், “என் தந்தையான தாவீதிடம் நீர் மிகவும் கருணையோடு இருந்தீர். என் தந்தையின் இடத்திற்கு என்னைப் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். 9 இப்போது தேவனாகிய கர்த்தாவே! என் தந்தை தாவீதிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும். இப்பெரிய நாட்டிற்கு என்னை அரசனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். பூமியில் உள்ள புழுதியைப் போன்று ஏராளமான அளவில் ஜனங்கள் வசிக்கின்றனர். 10 இப்போது எனக்கு அறிவையும் ஞானத்தையும் நீர் தரவேண்டும். அதனால் இந்த ஜனங்களை சரியான வழியில் நடத்திச் செல்வேன். உம்முடைய உதவி இல்லாமல் எவராலும் இந்த ஜனங்களை ஆள இயலாது!” என்றான்.
11 தேவன் சாலொமோனிடம், “உனக்கு நீதியான மனப்பான்மை உள்ளது. நீ செல்வத்தையோ, பொருட்களையோ, பெருமையையோ கேட்கவில்லை. உன் பகைவர்களை அழிக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை. நீ நீண்ட வாழ்நாளையும் கேட்கவில்லை. நீ இத்தகையவற்றைக் கேட்கவில்லை. நீ என்னிடம் அறிவையும் ஞானத்தையும் வேண்டுகிறாய். எனவே என்னால் தேர்ந்தெடுக்கப்படும் உன்னால் என் ஜனங்களுக்காக சரியான முடிவுகளை எடுக்க இயலும். 12 ஆகையால் நான் உனக்கு அறிவும் ஞானமும் தருகிறேன். ஆனால் அதோடு உனக்குச் செல்வத்தையும் பொருட்களையும் பெருமையையும் தருவேன். இதற்கு முன்னால் இருந்த எந்த அரசனுக்கும் கிடைக்காத அளவிற்கு உனக்குச் செல்வமும் சிறப்பும் தருவேன். எதிர்காலத்திலும் இதுபோல் எந்த அரசனும் செல்வமும் சிறப்பும் பெறப்போவதில்லை” என்றார்.
13 எனவே, சாலொமோன் கிபியோனில் தொழுதுகொள்ளும் இடத்திற்குச் சென்றான். பிறகு சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு எருசலேமிற்கு இஸ்ரவேலின் அரசனாக அரசாளத் திரும்பிச் சென்றான்.
சாலொமோன் தனது படையையும் செல்வத்தையும் சேர்க்கிறான்
14 சாலொமோன் தனது படைக்காகக் குதிரைகளையும் இரதங்களையும் சேகரிக்க ஆரம்பித்தான். சாலொமோனிடம் 1,400 இரதங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். அவற்றை அவன் இரதத்துக்குரிய நகரங்களில் இருக்கச்செய்தான். அவர்களில் சிலரை அரண்மனையிருந்த எருசலேமிலும் இருக்கச் செய்தான். 15 எருசலேமில் சாலொமோன் ஏராளமாகத் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்தான். அங்கே பொன்னும் வெள்ளியும் கற்களைப் போன்று ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தன. சாலொமோன் கேதுருமரங்களையும் ஏராளமாகச் சேகரித்தான். அவை மேற்கு மலை பள்ளத்தாக்கில் உள்ள காட்டத்தி மரங்களைப் போன்று ஏராளமாக இருந்தன. 16 சாலொமோன் எகிப்திலிருந்தும் கியூவிலிருந்தும் குதிரைகளை வாங்கி வந்தான். அரசனின் வியாபாரிகள் கியூவிலிருந்து குதிரைகளை வாங்கி வந்தனர். 17 சாலொமோனின் வியாபாரிகள் 600 சேக்கல் வெள்ளிக்கு ஒரு இரதத்தையும் 150 சேக்கல் வெள்ளிக்கு ஒரு குதிரையையும் வாங்கி வந்தனர். பிறகு இதே விதத்தில் அந்த வியாபாரிகள் குதிரைகளையும் இரதங்களையும் ஏத்தியரின் அரசர்களுக்கும் ஆராம் அரசர்களுக்கும் கொண்டுபோய் விற்றார்கள்.
1 உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்த சிலவற்றைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதை நாங்கள் கேட்டோம், எங்கள் கண்களாலேயே பார்த்தோம், நாங்கள் நோக்கினோம். எங்கள் கைகளால் தொட்டோம். ஜீவன் தரும் வார்த்தையைக் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம். 2 அந்த ஜீவன் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நாங்கள் அதைப் பார்த்தோம். நாங்கள் அதற்கான சான்றுகளைத் தரமுடியும். நாங்கள் இப்போது அந்த ஜீவனைக் குறித்து உங்களுக்குக் கூறுகிறோம். அது என்றென்றும் தொடரும் ஜீவனாகும். பிதாவாகிய தேவனோடு இருந்த ஜீவன் அது. தேவன் இந்த ஜீவனை எங்களுக்கு வெளிப்படுத்தினார். 3 எங்களோடு நீங்களும் இவற்றில் பங்குள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டுமிருக்கிற காரியங்களை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். பிதாவாகிய தேவன், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆகியோரோடு கூடிய ஐக்கியத்தில் நாம் ஒருமித்துப் பங்கு பெறுகிறோம். 4 நம் மகிழ்ச்சி முழுமையாகும்படி இக்காரியங்களை உங்களுக்கு எழுதுகிறோம்.
தேவன் நமது பாவங்களை மன்னிக்கிறார்
5 தேவனிடமிருந்து நாங்கள் கேட்ட உண்மையான போதனை இதுவே ஆகும். அதை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். தேவன் ஒளியானவர். தேவனில் இருள் இல்லை. 6 ஆகையால் நாம் தேவனோடு நெருக்கமான உறவு உடையவர்கள் என்று சொல்லிக்கொண்டே இருளில் தொடர்ந்து வாழ்வோமானால், பிறகு நாம் பொய்யர்களாயிருக்கிறோம். அப்படியானால், நாம் உண்மையைப் பின்பற்றாதவர்களாக இருக்கிறோம். 7 தேவன் ஒளியில் இருக்கிறார். நாமும் கூட ஒளியில் வாழவேண்டும். தேவன் ஒளியில் இருப்பதுபோல நாம் ஒளியில் வாழ்ந்தால் ஒருவரோடொருவர் நெருக்கமான ஐக்கியமாக இருக்கிறோம். மேலும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தமானது எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குகிறது.
8 நமக்குப் பாவமில்லையென்று நாம் கூறினால் நம்மை நாமே முட்டாளாக்கிக்கொள்வதோடு, நம்மில் உண்மையும் இருக்காது. 9 ஆனால் நாம் நம் பாவங்களை ஒத்துக்கொண்டால் தேவன் நமது பாவங்களை மன்னிப்பார். நாம் தேவனை நம்ப முடியும். தேவன் சரியானதையே செய்கிறார். நாம் செய்த எல்லா பாவங்களிலுமிருந்தும் தேவன் நம்மைச் சுத்தமாக்குவார். 10 நாம் பாவம் செய்ததில்லை என்று கூறினால் அதன் மூலம் தேவனைப் பொய்யராக்குகிறோம். நாம் தேவனின் உண்மையான போதனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
மீகா ஜனங்கள் செய்த பாவங்களால் கலக்கமடைந்தான்
7 நான் கலக்கமடைந்தேன்.
ஏனென்றால், நான் சேகரிக்கப்பட்டிருக்கிற பழங்களைப் போன்றவன்.
பறிக்கப்பட்ட திராட்சைப் பழங்களைப் போன்றவன்.
உண்பதற்குத் திராட்சைகள் இல்லாமல் போகும்.
நான் விரும்பும் அத்திப் பழங்கள் இல்லாமல் போகும்.
2 நான் கூறுவது என்னவெனில் நம்பிக்கைக்குரிய ஜனங்கள் எல்லாம் போய்விட்டார்கள்.
நாட்டில் நல்ல ஜனங்கள் எவரும் மீதியாகவில்லை.
ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கொல்ல காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் தம் சகோதரர்களை வலையில் பிடிக்க விரும்புகின்றனர்.
3 ஜனங்கள் தங்களின் இரண்டு கைகளினால் தீமை செய்ய நல்லவர்களாக இருக்கிறார்கள்.
அதிகாரிகள் லஞ்சத்தைக் கேட்கிறார்கள்.
வழக்கு மன்றத்தில் தீர்ப்பை மாற்ற நீதிபதிகள் பணம் பெறுகிறார்கள்.
“முக்கியமான தலைவர்கள்” நல்லதும் நேர்மையானதுமான முடிவுகளைச் செய்கிறதில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்வார்கள்.
4 அவர்களில் நல்லவர் கூட முட்புதர் போன்றுள்ளனர்.
அவர்களில் மிகச் சிறந்தவர்கள் கூட பின்னிப் பிணைந்து கிடக்கும் முட்புதரைவிட வஞ்சகர்களாக இருக்கிறார்கள்.
தண்டனை நாள் வருகிறது
இந்த நாள் வரும் என்று உங்களுடைய தீர்க்கதரிசிகள் சொன்னார்கள்.
உங்களது காவற்காரரின் நாள் வந்திருக்கிறது.
இப்பொழுது நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
இப்பொழுது நீங்கள் குழம்பிப்போய் இருக்கிறீர்கள்.
5 உங்களது அயலாரை நம்பாதீர்கள். நண்பர்களை நம்பாதீர்கள்.
உங்கள் மனைவியிடமும் உண்மையைப் பேசாதீர்கள்.
6 ஒருவரின் எதிரிகள் அவனது சொந்த வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள்.
ஒரு மகன் அவனது தந்தையை மதிக்கமாட்டான்.
ஒரு மகள் தன் தாய்க்கு எதிராகத் திரும்புவாள்.
ஒரு மருமகள் தன் மாமியார்க்கு எதிராகத் திரும்புவாள்.
கர்த்தரே இரட்சகர்
7 எனவே, நான் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டுவேன்.
நான், தேவன் என்னைக் காப்பாற்றுவார் எனக் காத்திருந்தேன்.
என் தேவன் நான் சொல்வதைக் கேட்பார்.
8 நான் விழுந்திருக்கிறேன்.
ஆனால் பகைவனே, என்னைப் பார்த்துச் சிரிக்காதே, நான் மீண்டும் எழுந்திருப்பேன்.
நான் இப்பொழுது இருளில் அமர்ந்திருக்கிறேன்.
ஆனால் கர்த்தர் எனக்கு ஒளியாக இருப்பார்.
கர்த்தர் மன்னிக்கிறார்
9 நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்.
எனவே அவர் என்னோடு கோபமாக இருந்தார்.
ஆனால் அவர் வழக்கு மன்றத்தில் எனக்காக வாதாடுவார்.
அவர் எனக்குச் சரியானவற்றை செய்வார்.
பின்னர் அவர் என்னை வெளிச்சத்திற்குள் கொண்டு வருவார்.
அவர் சரியானவர் என்று நான் பார்ப்பேன்.
10 என் எதிரி என்னிடம்,
“உன் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்றாள்.
ஆனால் என் எதிரி இதனைப் பார்ப்பாள்.
அவள் அவமானம் அடைவாள்.
அந்த நேரத்தில் நான் அவளைப் பார்த்து சிரிப்பேன்.
ஜனங்கள் அவளுக்கு மேலே தெருவிலுள்ள புழுதியைப் போன்று நடப்பார்கள்.
திரும்புகிற யூதர்கள்
11 காலம் வரும், உங்களது சுவர்கள் மீண்டும் கட்டப்படும்.
அந்த நேரத்தில் நாடு வளரும்.
12 உனது ஜனங்கள் உன் நாட்டிற்க்குத் திரும்புவார்கள்.
அவர்கள் அசீரியாவிலிருந்தும் எகிப்தின் நகரங்களிலிருந்தும் திரும்பி வருவார்கள்.
உனது ஜனங்கள் எகிப்திலிருந்தும்
ஐபிராத்து ஆற்றின் அடுத்தப் பக்கத்திலிருந்தும் வருவார்கள்.
அவர்கள் மேற்கிலுள்ள கடல் பகுதியிலிருந்தும்
கிழக்கிலுள்ள மலைகளிலிருந்தும் வருவார்கள்.
13 அந்த நிலமானது அங்கு வாழ்ந்த ஜனங்களின்
தீய செயல்களால் அழிக்கப்பட்டது.
14 எனவே உனது ஜனங்களை நீ கோலினால் ஆட்சி செய்.
உனக்குச் சொந்தமான உன் ஜனங்கள் கூட்டத்தை நீ ஆட்சிசெய்.
அக்கூட்டம் காடுகளிலும்,
கர்மேல் மலைகளிலும் தனியாக வாழ்கின்றது.
பாசானிலும் கீலேயாத்திலும் வாழ்கிற ஜனங்கள்
முன்பு மேய்ந்தது போலவே மேய்வார்களாக.
இஸ்ரவேல் பகைவர்களை வெல்லும்
15 நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டு வரும்போது பல அற்புதங்களைச் செய்தேன்.
நான் அவற்றைப் போன்று நீங்கள் பல அற்புதங்களைப் பார்க்கும்படிச் செய்வேன்.
16 அந்நாடுகள் அந்த அற்புதங்களைப் பார்க்கும்.
அவர்கள் அவமானம் அடைவார்கள்.
அவர்களின் “வல்லமை” என்னோடு ஒப்பிட இயலாது
என்பதை அவர்கள் காண்பார்கள்.
அவர்கள் ஆச்சரியத்தோடு
தமது கைகளை வாயில் வைத்துக்கொள்வார்கள்.
அவர்கள் கவனிக்க மறுத்து
தங்கள் காதுகளை மூடிக்கொள்வார்கள்.
17 அவர்கள் பாம்புகளைப்போன்று மண்ணை நக்குவார்கள்.
அவர்கள் பயத்தால் நடுங்குவார்கள்.
அவர்கள் தரையின் துவாரங்களில் உள்ள ஊர்வனவற்றைப் போன்று
வெளியேவந்து தேவனாகிய கர்த்தரை அடைவார்கள்.
தேவனே, அவர்கள் அஞ்சி உம்மை மதிப்பார்கள்.
கர்த்தருக்குத் துதி
18 உம்மைப்போன்று வேறு தேவன் இல்லை.
ஜனங்களின் குற்றங்களை நீர் அகற்றிவிடுகிறீர்.
தேவன் தமது சுதந்தரத்தில் மீதியானவர்களை மன்னிக்கிறார்.
தேவன் என்றென்றும் கோபத்தோடு இரார். ஏனென்றால் அவர் கருணையோடு இருப்பதில் மகிழ்கிறார்.
19 தேவன், மீண்டும் திரும்பி வருவார், நமக்கு ஆறுதல் தருவார்.
நமது பாவங்களை, குற்றங்களை நீக்கி (நசுக்கி) எல்லாவற்றையும் ஆழமான கடலுக்குள் எறிந்துவிடுவார்.
20 தேவனே, யாக்கோபுக்கு உண்மையாய் இருப்பீர்.
ஆபிரகாமிடம் உமது உண்மையையும், அன்பையும் காட்டுவீர். நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி செய்யும்.
உண்மையான செல்வம்
16 இயேசு அவரது சீஷரை நோக்கி, “ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். வியாபாரத்தைக் கவனிக்கும்பொருட்டு அவனிடம் ஓர் அதிகாரி இருந்தான். அந்த அதிகாரி ஏமாற்றுவதாக அச்செல்வந்தனுக்குப் புகார்கள் வந்தன. 2 எனவே அந்த அதிகாரியை அழைத்து அவனை நோக்கி, ‘உன்னைக் குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக இருக்க முடியாது’ என்றான்.
3 “பின்னர் அந்த அதிகாரி தனக்குள்ளேயே, ‘நான் என்ன செய்வேன். என் எஜமானர் என்னை வேலையில் இருந்து அகற்றிவிட்டார். குழிகளைத் தோண்டுமளவு வலிமை என்னிடம் இல்லை. பிச்சை எடுக்க வெட்கப்படுகிறேன். 4 நான் என்ன செய்யவேண்டுமென எனக்குத் தெரியும். நான் வேலையை இழக்கும்போது பிற மக்கள் தம் வீட்டுக்குள் என்னை வரவேற்கும்படியான ஒரு செயலை நான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தான்.
5 “எனவே, அந்த அதிகாரி எஜமானனுக்குக் கடன் தர வேண்டியவர்களை அழைத்தான். முதலாமவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ கொடுக்கவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். 6 அவன், ‘நான் நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரி அவனிடம், ‘இதோ உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து ஐம்பது குடம் என்று எழுது’ என்றான்.
7 “பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி அவனிடம், ‘இதோ உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எண்பது மரக்கால் என்று எழுது’ என்றான்.
8 “பின்னர் எஜமானன் நம்பிக்கைக்குத் தகுதியற்ற அந்த அதிகாரியை அவன் திறமையாகச் செய்ததாகப் பாராட்டினான். ஆம், உலகத்திற்குரிய மனிதர் தங்கள் காலத்து மக்களோடு வியாபாரத்தில், ஆவிக்குரிய மனிதர்களைக் காட்டிலும் திறமையானவர்களாகக் காணப்படுகிறார்கள்.
9 “நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனிடம் நட்பைக் காப்பாற்றும்பொருட்டு இந்த உலகத்தில் உனக்குரிய பொருட்களை எல்லாம் பயன்படுத்து. அந்தப் பொருட்கள் எல்லாம் அழிந்த பின்னர் என்றும் நிலைத்திருக்கிற வீட்டில் நீ வரவேற்கப்படுவாய். 10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். 11 உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள். 12 யாராவது ஒருவருக்குரிய பொருட்களில் உங்களை நம்பமுடியாவிட்டால் உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது.
13 “ஒரே நேரத்தில் இரு எஜமானர்களுக்குப் பணிபுரிய எந்த வேலைக்காரனாலும் முடியாது. அந்த வேலைக்காரன் ஒரு எஜமானனை வெறுத்து, மற்ற எஜமானனை நேசிப்பான். அல்லது அவன் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரியவனாக நடந்துகொண்டு மற்றவனிடம் வேறு முறையில் நடந்து கொள்வான். தேவனுக்கும், பணத்துக்கும் ஒருங்கே சேவை செய்ய உங்களால் இயலாது” என்றார்.
தேவ வாக்கியங்கள் மாறாதவை(A)
14 பரிசேயர்கள் இச்செய்திகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பணத்தை நேசித்ததால் இயேசுவை விமர்சித்தார்கள். 15 இயேசு பரிசேயர்களை நோக்கி, “மக்களின் முன்பாக நீங்கள் நல்லவர்களாக நடந்துகொள்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே என்ன இருக்கிறதென தேவன் அறிவார். மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்கள் தேவனின் வெறுப்புக்கு உரியவை ஆகின்றன.
16 “மோசேயின் சட்டத்திற்கிணங்கவும், தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களுக்கேற்பவும் மக்கள் வாழ்வதை தேவன் விரும்பினார். ஆனால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகன் காலம் தொடங்கி, தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சொல்லப்பட்டு வருகிறது. தேவனுடைய இராஜ்யத்தில் செல்வதற்குப் பலர் மிகவும் முயன்று வருகிறார்கள். 17 வேதவாக்கியங்களில் காணப்படுகிற ஒரு எழுத்தின் ஒரு சிறிய பகுதியைக் கூட மாற்ற முடியாது. அதைக் காட்டிலும் வானமும் பூமியும் அழிந்துபோவதே எளிதாக இருக்கும்.”
விவாகரத்தும் மறுமணமும்
18 “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்து, இன்னொரு பெண்ணை மணந்துகொண்டால் அவன் விபசாரம் என்னும் பாவத்தைச் செய்தவன் ஆவான். விவாகரத்துக்கு உட்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொள்பவனும் தீய விபசாரம் என்னும் குற்றத்திற்கு உட்பட்டவன் ஆவான்” என்றார்.
செல்வந்தனும் லாசருவும்
19 “விலையுயர்ந்த ஆடைகளை எப்போதும் அணிந்துகொண்டிருந்த ஒரு செல்வந்தன் இருந்தான். ஒவ்வொரு நாளும் விருந்துண்டு களிக்கும் அளவுக்கு மிகுந்த செல்வந்தனாக இருந்தான். 20 லாசரு என்று அழைக்கப்பட்ட மிகவும் ஏழையான மனிதனும் இருந்தான். லாசருவின் சரீரம் முழுவதும் புண்ணாக இருந்தது. செல்வந்தனின் வீட்டு வாசலருகே லாசரு அடிக்கடி படுத்துக்கிடப்பான். 21 செல்வந்தனின் மேசையில் மீதியாக விடப்பட்ட உணவுத் துணுக்குகளை உண்பதற்கு அவன் விரும்பினான். நாய்கள் வந்து அவனது புண்களை நக்கின.
22 “பின்னர் லாசரு இறந்தான். தேவதூதர்கள் லாசருவை எடுத்துச்சென்று ஆபிரகாமின் மடியில் வைத்தனர். செல்வந்தனும் இறந்து அடக்கம் செய்யப்பட்டான். 23 அவன் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டு மிகுந்த வேதனையை அனுபவித்தான். தொலைவிலேயே ஆபிரகாம் தன் மடியில் லாசருவை ஏந்திக்கொண்டிருப்பதைச் செல்வந்தன் பார்த்தான். 24 அவன், ‘தந்தை ஆபிரகாமே! என்னிடம் இரக்கம் காட்டுங்கள். அவனது விரலைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிர்விக்குமாறு லாசருவை என்னிடம் அனுப்புங்கள். இந்த நெருப்பில் நான் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சத்தமிட்டுக் கூறினான்.
25 “ஆனால் ஆபிரகாம், ‘எனது மகனே! நீ உலகில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்துகொள். வாழ்வின் நல்ல பொருட்கள் அனைத்தும் உனக்கிருந்தன. லாசருவிற்கு எல்லாத் தீமைகளும் நேர்ந்தன. இப்போது அவனுக்கு இங்கு ஆறுதல் கிடைக்கிறது. நீயோ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய். 26 மேலும் உனக்கும், எங்களுக்கும் மத்தியில் ஒரு பெரிய பிளவு உள்ளது. உனக்கு உதவுவதற்காக யாரும் இங்கிருந்து அங்கு கடந்து வரமுடியாது’ என்றான்.
27 “செல்வந்தன், ‘அப்படியானால் தயவுசெய்து பூமியில் இருக்கும் என் தந்தையின் வீட்டுக்கு லாசருவை அனுப்புங்கள். 28 எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். கொடுமை மிகுந்த இந்த இடத்துக்கு அவர்கள் வராதபடிக்கு லாசரு எனது சகோதரர்களை எச்சரிக்கட்டும்’ என்றான்.
29 “ஆனால் ஆபிரகாம், ‘அவர்கள் படிப்பதற்கு மோசேயின் சட்டங்களும் தீர்க்கதரிசிகளின் நூல்களும் உள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளட்டும்’ என்றான்.
30 “ஆனால் செல்வந்தன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே! இறந்தோரிலிருந்து ஒருவன் சென்று கூறினால், அவர்கள் நம்பிக்கை கொண்டு தம் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்வார்கள்’ என்றான்.
31 “ஆனால் ஆபிரகாம் அவனை நோக்கி, ‘இல்லை! உனது சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி சாய்க்கவில்லை என்றால், இறந்தோரில் இருந்து வருகின்ற ஒருவன் கூறுவதையும் கேட்கமாட்டார்கள்’ என்றான்” என இயேசு கூறினார்.
2008 by World Bible Translation Center