M’Cheyne Bible Reading Plan
ஆசாரியர்களின் குழுக்கள்
24 ஆரோன் மகன்களின் கீழ்க்கண்ட குழுக்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர் ஆரோனின் மகன்கள். 2 ஆனால் நாதாபும், அபியூவும் தந்தைக்கு முன்னரே செத்துவிட்டனர். அவர்களுக்கு மகன்களும் இல்லை. எனவே எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரியர்களாக தொண்டாற்றினார்கள். 3 எலெயாசர், இத்தாமார் ஆகிய இரண்டு கோத்திரங்களையும் வேறு வேறு குழுக்களாக தாவீது பிரித்து வைத்தான். தமக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளைச் சரிவரச் செய்யும் பொருட்டு தாவீது இக்குழுக்களை இவ்விதம் பிரித்தான். தாவீது இதனை சாதோக், அகிமெலேக் ஆகியோரின் உதவியைக் கொண்டு இவ்வாறு செய்தான். சாதோக் எலெயாசாரின் சந்ததியைச் சேர்ந்தவன். அகிமெலேக்கு இத்தாமாரின் சந்ததியைச் சேர்ந்தவன். 4 இத்தாமாரின் குடும்பத்தைவிட எலெயாசாரின் குடும்பத்தில் ஏராளமான தலைவர்கள் இருந்தனர். எலெயாசாரின் குடும்பத்தில் 16 தலைவர்களும் இத்தாமாரின் குடும்பத்தில் இருந்து 8 தலைவர்களும் இருந்தனர். 5 ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிலர் பரிசுத்த இடத்தின் பொறுப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றவர்கள் ஆசாரியர்களாக சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் எலெயாசார், இத்தாமார் ஆகிய வம்சங்களில் இருந்து வந்தனர்.
6 செமாயா செயலாளனாக இருந்தான். இவன் நெதனெயேலின் மகன். செமாயா, லேவியர் கோத்திரத்திலிருந்து வந்தவன். இவன் அவர்களின் சந்ததியினரின் பெயர்களை எழுதினான். அவன் இதனைத் தாவீது அரசன் மற்றும் சாதோக் ஆசாரியர்களின் தலைவர்கள், அகிமெலேக், ஆசாரிய குடும்பங்களின் தலைவர்கள், லேவியர்களின் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில் செய்தான். அகிமெலேக் அபியதாரின் மகன். அவர்கள் ஒவ்வொரு முறையும் சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்தனர். செமாயா இவர்களின் பெயர்களை எழுதினான். எனவே, எலெயாசார் மற்றும் இத்தாமார் கோத்திரங்களிடையே வேலைகளைப் பங்கிட்டனர்.
7 யோயாரீபின் குழு முதல் குழு.
யெதாயாவின் குழு இரண்டாவது குழு.
8 ஆரிமின் குழு மூன்றாம் குழு.
செயோரீமின் குழு நான்காவது குழு.
9 மல்கியாவின் குழு ஐந்தாம் குழு.
மியாமீனின் குழு ஆறாம் குழு.
10 அக்கோத்சின் குழு ஏழாம் குழு.
அபியாவின் குழு எட்டாவது குழு.
11 யெசுவாவின் குழு ஒன்பதாவது குழு.
செக்கனியாவின் குழு பத்தாவது குழு.
12 எலியாசீபின் குழு பதினோராவது குழு.
யாக்கீமின் குழு பன்னிரண்டாவது குழு.
13 உப்பாவின் குழு பதின்மூன்றாவது குழு.
எசெபெயாவின் குழு பதினான்காவது குழு.
14 பில்காவின் குழு பதினைந்தாவது குழு.
இம்மேரின் குழு பதினாறாவது குழு.
15 ஏசீரின் குழு பதினேழாவது குழு.
அப்சேசின் குழு பதினெட்டாவது குழு.
16 பெத்தகியாவின் குழு பத்தொன்பதாவது குழு.
எகெசெக்கியேலின் குழு இருபதாவது குழு.
17 யாகின் குழு இருபத்தொன்றாவது குழு.
காமுவேலின் குழு இருபத்திரண்டாவது குழு.
18 தெலாயாவின் குழு இருபத்தி மூன்றாவது குழு.
மாசியாவின் குழு இருபத்தி நான்காவது குழு.
19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆரோனுக்கு கட்டளைகளைக் கற்பித்தார். இவர்கள் ஆலயத்தில் சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஆரோனின் விதிகளை ஆலயத்தில் சேவை செய்யக் கடைபிடித்தனர்.
மற்ற லேவியர்கள்
20 மற்ற லேவியின் சந்ததியாரின் பெயர்கள் இவை:
அம்ராமின் சந்ததியினர்: சூபவேல், சூபவேலின் சந்ததியினர்: எகேதியா;
21 ரெகபியாவின் வழிவந்த இஷியா, (இஷியா மூத்த மகன்.)
22 இத்சாரியின் கோத்திரத்தில் இருந்து செலெமோத், செசெமோத்தின் குடும்பத்தில் இருந்து யாகாத்.
23 எப்ரோனின் மூத்த மகன் எரியா, இரண்டாம் மகன் அம்ரியா மூன்றாம் மகன் யாகாசியேல், நான்காம் மகன் எக்காமியாம்,
24 ஊசியேலின் மகன் மீகா, மீகாவின் மகன் சாமீர்.
25 மீகாவின் சகோதரன் இஷியா, இஷியாவின் மகன் சகரியா.
26 மெராரியின் சந்ததியினர் மகேலி, மூசி ஆகியோர், யாசியாவின் மகன் பேனோ,
27 மெராரியின் மகன் யாசியேல், யாசியேலுக்கு பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி ஆகியோர்.
28 மகேலியின் மகனான எலெயாசார், எலெயாசாருக்கு மகன்கள் இல்லை.
29 கீசின் மகனான யெராமியேல்.
30 மூசியின் மகன்களாக மகேலி, ஏதேர், எரிமோத் ஆகியோர்.
இவை அனைத்தும் லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் பெயர்கள் ஆகும். அவர்களின் குடும்ப வரிசைப்படி இப்பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 31 இவர்கள் சிறப்பு வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் ஆசாரியர்களான தங்கள் உறவினர்களைப்போன்று, சீட்டுக் குலுக்கல் போட்டனர். ஆரோனின் சந்ததியினர் ஆசாரியரானார்கள். அரசனான தாவீது, சாதோக், அகிமெலேக், ஆசாரியர்களின் தலைவர்கள் மற்றும் லேவியர் குடும்பத்தினர் முன்னால் இவர்கள் சீட்டுக் குலுக்கல் போட்டனர். வேலைகளைத் தேர்ந்தெடுப்பதில் மூத்த வம்சத்தினரும் இளைய வம்சத்தினரும் ஒன்று போலவே நடத்தப்பட்டனர்.
இசைக் குழுவினர்
25 தாவீதும், படைத்தலைவர்களும் ஆசாப்பின் மகன்களை சிறப்பு வேலைக்காகத் தனியாகப் பிரித்தனர். ஆசாப்பின் மகன்கள் ஏமான், எதுத்தூன் ஆகியோர். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதை தேவனுக்கு சிறப்புப்பணியாகக் கொண்டனர். இதனைச் சுரமண்டலங்கள், தம்புருகள், கைத்தாளங்கள் போன்றவற்றால் செய்தனர். இவ்வகையில் பணி செய்தவர்களின் பெயர் பட்டியல் இது:
2 ஆசாப்பின் குடும்பத்தில், சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா ஆகியோர். தாவீது அரசன், ஆசாப்பைத் தீர்க்கதரிசனம் சொல்லத் தேர்ந்தெடுத்தான். ஆசாப் மகன்களுக்கு வழிகாட்டினான்.
3 எதுத்தானின் குடும்பத்திலிருந்து கெதலியா, சேரீ, எஷாயா, சீமேயி, அஷபியா, மத்தித்தியா எனும் ஆறுபேர். எதுத்தான் தன் மகன்களுக்கு வழிகாட்டினான். எதுத்தான் சுரமண்டலங்களைப் பயன்படுத்தி தீர்க்கதரிசனம் சொன்னான். கர்த்தருக்கு நன்றி சொல்லுவதும் துதிப்பதுமாக இருந்தான்.
4 ஏமானின் மகன்களான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் ஆகியோர் பணிசெய்தனர். 5 இவர்கள் அனைவரும் ஏமானின் மகன்கள். ஏமான் தாவீதின் தீர்க்கதரிசி. ஏமானைப் பலப்படுத்துவதாக தேவன் வாக்களித்துள்ளார். எனவே ஏமானுக்கு அதிக மகன்கள். தேவன் அவனுக்கு 14 மகன்களையும் 3 மகள்களையும் கொடுத்தார்.
6 ஏமான் தன் மகன்களை ஆலயத்தில் பாடுவதற்குப் பயிற்சிகொடுத்தான். அவர்கள் சுரமண்டலங்கள், தம்புருக்கள், கைத்தாளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் தேவாலயத்தில் பணிசெய்தனர். தாவீது அரசன் அவர்களைத் தேர்ந்தெடுத்தான். 7 அவர்களும் அவர்களது உறவினர்களும் லேவியர்களின் கோத்திரத்தில் உள்ளவர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களில் 288 பேர் கர்த்தரை துதித்துப் பாடக் கற்றிருந்தனர். 8 அவர்கள் சீட்டுக் குலுக்கல் மூலம் அவர்களுக்குரிய வேலைகளை ஒதுக்கினான். எல்லோரும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். முதியவர்களும், இளைஞர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். குருக்களும், மாணவர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர்.
9 முதலில், ஆசாப்பின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இரண்டாவதாக, கெதலியா மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
10 மூன்றாவதாக, சக்கூரின் மகன்களிடமும், உறவினர்களிடமும், இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
11 நான்காவதாக, இஸ்ரியின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
12 ஐந்தாவதாக, நெத்தனியாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
13 ஆறாவதாக, புக்கியாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
14 ஏழாவதாக, எசரேலாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
15 எட்டாவதாக, எஷாயாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
16 ஒன்பதாவதாக, மத்தனீயாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
17 பத்தாவதாக, சிமேயாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
18 பதினொன்றாவதாக அசாரியேலின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
19 பன்னிரெண்டாவதாக, அஷாபியாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
20 பதிமூன்றாவதாக, சுபவேலின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
21 பதினான்காவதாக, மத்தித்தியாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
22 பதினைந்தாவதாக, எரேமோத்தின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
23 பதினாறாவதாக, அனனியாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
24 பதினேழாவதாக, யோஸ்பேக்காஷாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
25 பதினெட்டாவதாக, ஆனானியின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
26 பத்தொன்பதாவதாக, மலோத்தின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
27 இருபதாவதாக, எலியாத்தாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
28 இருபத்தொன்றாவதாக, ஒத்திரின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
29 இருபத்திரெண்டாவதாக கிதல்தியின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
30 இருபத்துமூன்றாவதாக, மகாசியோத்தின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
31 இருபத்துநான்காவதாக, ரொமந்தியேசரின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேவனுடைய மந்தை
5 உங்கள் குழுவிலுள்ள முதியோருக்கு இப்பொழுது நான் சிலவற்றைக் கூறவேண்டும். நானும் ஒரு முதியவன். நான் கிறிஸ்துவின் துன்பங்களை நேரில் கண்டிருக்கிறேன். நமக்குக் காட்டப்படும் மகிமையிலும் நான் பங்கு கொள்வேன். 2 ஒரு ஆட்டு மந்தையைக் கவனித்துக்கொள்கிற மேய்ப்பர்கள்போல உங்கள் பொறுப்பில் இருக்கிற மக்களின் கூட்டத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தேவனுடைய கூட்டத்தினர். விருப்பத்தோடு அவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்விதமான நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் அப்படிச் செய்ய வேண்டாம். நீங்கள் அதை விருப்பத்தோடு செய்ய வேண்டுமென தேவன் விரும்புகிறார். பணத்துக்காகப் பேராசை பிடித்திருப்பதால் கண்காணிப்பாளர்களைப்போல சேவை செய்யாதீர்கள். சேவை செய்யும் வாஞ்சை இருப்பதால் சேவை செய்யுங்கள். 3 நீங்கள் பொறுப்பேற்றுள்ள மக்களிடம் கொடுமையான அதிகாரியாக நடந்துகொள்ளாதீர்கள். ஆனால் அம்மக்களுக்கு முன்மாதிரியாக இருங்கள். 4 அப்போது, தலைமை மேய்ப்பர் வரும்போது நீங்கள் கிரீடம் பெறுவீர்கள். அக்கிரீடம் மகிமை நிரம்பியதாகவும், ஒருபோதும் அழகு குன்றாததாகவும் இருக்கும்.
5 இளைஞர்களே, நான் உங்களுக்கும் சிலவற்றைச் சொல்லவேண்டும். முதியோரின் அதிகாரத்திற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் தாழ்மையோடு சேவை புரிந்துகொள்ள வேண்டும்.
“அகம்பாவம்மிக்க மனிதருக்கு தேவன் எதிரானவர்.
ஆனால் தாழ்மையுள்ள மனிதருக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.” (A)
6 எனவே தேவனுடைய வல்லமை வாய்ந்த கைகளுக்குக் கீழே தாழ்மையோடு இருங்கள். தகுந்த காலம் வரும்போது அவர் உங்களை உயர்த்துவார். 7 அவர் உங்களைக் கவனிப்பதால் உங்கள் கவலைகளை அவரிடம் விட்டு விடுங்கள்.
8 உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு கவனமாக வாழுங்கள்! பிசாசு உங்கள் பகைவன். உண்ணும்பொருட்டு எந்த மனிதனாவது அகப்படுவானா என்று தேடிக்கொண்டே கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போலவே அவன் அலைகிறான். பிசாசைப் பின்பற்ற மறுத்துவிடுங்கள். 9 உங்கள் விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நீங்கள் அனுபவிக்கிற அதே துன்பங்களை உலகத்தின் எல்லா பாகங்களிலுமுள்ள உங்கள் சகோதரரும் சகோதரிகளும் அனுபவிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
10 ஆம், குறுகிய காலம் நீங்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் அதற்குப் பிறகு, தேவன் எல்லாவற்றையும் சரிப்படுத்துவார். அவர் உங்களை பலப்படுத்துவார். அவர் உங்களைத் தாங்கிக்கொண்டு, நீங்கள் விழாதபடி பாதுகாப்பார். எல்லா கிருபையையும் அருளுகின்ற தேவன் அவரே. கிறிஸ்துவின் மகிமையில் பங்குகொள்ளும்படி அவர் உங்களை அழைத்தார். அம்மகிமை என்றென்றும் தொடரும். 11 எல்லா வல்லமையும் என்றென்றும் அவருக்குரியது. ஆமென்.
இறுதி வாழ்த்துக்கள்
12 சில்வானுவின் உதவியோடு இந்தச் சிறிய நிருபத்தை உங்களுக்கு எழுதினேன். அவன் நம்பிக்கைக்குத் தகுதியான கிறிஸ்தவ சகோதரன் என்பதை நான் அறிவேன். உங்களை உற்சாகப்படுத்தவும் உங்களுக்கு உறுதிப்படுத்தவும், இதுவே தேவனுடைய உண்மையான கிருபை என்பதை எழுதி இருக்கிறேன். அந்தக் கிருபையில் உறுதியாக நில்லுங்கள்.
13 பாபிலோனில் இருக்கும் சபை உங்களை வாழ்த்துகிறது. அம்மக்களும் உங்களைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிறிஸ்துவில் எனது மகனாகிய மாற்கும் உங்களை வாழ்த்துகிறான். 14 நீங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் அன்பினால் முத்தமிடுங்கள்.
கிறிஸ்துவிலுள்ள உங்கள் எல்லோருக்கும் சமாதானம் உண்டாகட்டும்.
இஸ்ரவேலின் தலைவர்கள் தீயச் செய்லகளை செய்தக் குற்றவாளிகள்
3 பிறகு நான் சொன்னேன்: “இஸ்ரவேல் நாட்டின் தலைவர்களே! மற்றும் இஸ்ரவேல் நாட்டின் அதிகாரிகளே,
இப்போது கவனியுங்கள் நீதி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரிய வேண்டும்.
2 ஆனால் நீங்கள் நல்லவற்றை வெறுத்து தீமையை நேசிக்கிறீர்கள்.
நீங்கள் ஜனங்களின் தோலை உரிப்பீர்கள்.
அவர்களின் எலும்புகளில் உள்ள தசையைப் பிடுங்குவீர்கள்.
3 நீங்கள் எனது ஜனங்களை அழித்தீர்கள்.
அவர்களின் தோலை நீக்குவீர்கள்.
அவர்களின் எலும்பை உடைத்தீர்கள்.
நீங்கள் அவர்களது சதையை பானையில் போடப்படும் மாமிசத்தைப்போன்று துண்டு பண்ணினீர்கள்.
4 எனவே, நீங்கள் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்யலாம்.
ஆனால் அவர் பதில் சொல்லமாட்டார்.
இல்லை, கர்த்தர் உங்களிடமிருந்து தன் முகத்தை மறைத்துக்கொள்வார்.
ஏனென்றால் நீங்கள் தீயவற்றைச் செய்கிறீர்கள்!”
பொய்த் தீர்க்கதரிசிகள்
5 சில பொய்த் தீர்க்கதரிகள் கர்த்தருடைய ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். கர்த்தர் அந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றி இதனைச் சொல்கிறார்.
“இந்தத் தீர்க்கதரிசிகள் வயிற்றுக்காக உழைக்கிறவர்கள்.
உணவு கொடுக்கும் ஜனங்களுக்குச் சமாதானம் வரும் என்று உறுதி கூறுவார்கள்.
ஆனால் உணவு கொடுக்காதவர்களிடத்தில் அவர்களுக்கு எதிராக போர் வரும் என்று உறுதி கூறுவார்கள்.
6 “அதனால்தான் இது உங்களுக்கு இரவைப் போன்றது.
அதனால்தான் உங்களுக்குத் தரிசனம் கிடைப்பதில்லை.
எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதைப் பற்றிய தரிசனத்தை நீங்கள் பார்க்க முடியாது.
எனவே இது உனக்கு அந்தகாரம் போன்றது.
இந்தச் சூரியன் தீர்க்கதரிசிகள் மேல் அஸ்தமித்திருக்கிறது.
அவர்களால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்க்க முடியாது.
எனவே, இது அவர்களுக்கு அந்தகாரம் போன்றிருக்கும்.
7 தீர்க்கதரிசிகள் வெட்கப்படுகிறார்கள்.
திர் காலத்தை குறித்து சொல்கிறவர்கள் அவமானப்படுகிறார்கள்.
அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள்.
ஏனென்றால் தேவன் அவர்களோடு பேசமாட்டார்.”
மீகா ஆண்டவரின் ஒரு நேர்மையான தீர்க்கதரிசி
8 ஆனால் கர்த்தருடைய ஆவி என்னை
நன்மையினாலும், பலத்தினாலும், வல்லமையினாலும் நிரப்பியிருக்கிறது.
ஏன்? அதனால் நான் யாக்கோபிடம் அவனது பாவங்களைச் சொல்லுவேன்.
ஆமாம், நான் இஸ்ரவேலிடம் அவனது பாவங்களைச் சொல்லுவேன்!
இஸ்ரவேலின் தலைவர்கள் பழி சொல்லல்
9 யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேலின் ஆள்வோர்களே, என்னைக் கவனியுங்கள்.
நீங்கள் முறையான வாழ்வை வெறுக்கீறீர்கள்.
ஏதாவது ஒன்று நேராக இருந்தால்
நீங்கள் அதை கோணலாக மாற்றுகிறீர்கள்.
10 நீங்கள் ஜனங்களைக் கொன்று, சீயோனைக் கட்டுகிறீர்கள்.
ஜனங்களை ஏமாற்றி எருசலேமைக் கட்டுகிறீர்கள்.
11 எருசலேமில் உள்ள நீதிபதிகள் வழக்கு மன்றத்தில் யார் வெல்வார்கள்
என்று சொல்ல உதவிட லஞ்சம் பெறுகிறார்கள்.
எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கு முன்னால் பணம் பெறுகிறார்கள்.
ஜனங்களின் தீர்க்கதரிசிகளுக்கு எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் பணம் கொடுக்கவேண்டும்.
பிறகு அந்தத் தலைவர்கள் கர்த்தருடைய உதவியை எதிர்ப்பார்க்கிறார்கள்.
அவர்கள், “எங்களுக்கு தீயவை எதுவும் நடக்காது. கர்த்தர் எங்களோடு வாழ்கிறார்” என்றனர்.
12 தலைவர்களே, உங்களால், சீயோன் அழிக்கப்படும்.
இது உழப்பட்ட வயல் போன்றிருக்கும்.
எருசலேம் கற்களின் குவியலாய் மாறும்.
ஆலயம் உள்ள மலைகள் காட்டு முட்புதர்கள் அதிகம் வளர்ந்து வெறுமையான மலையாகும்.
பரிசேயரைப் போல இராதீர்
12 பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி வந்தார்கள். ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்குத் திரளான மக்கள் குழுமினர். மக்களிடம் பேசும் முன்பு இயேசு தம் சீஷர்களை நோக்கி, “பரிசேயரின் புளிப்பைக் (தீய தொடர்பை) குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் வேஷதாரிகள். 2 மறைக்கப்பட்ட அனைத்தும் வெளிப்படும். இரகசியங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும். 3 இருளில் கூறுகின்ற செயல்கள் ஒளியில் தெரிவிக்கப்படும். இரகசியமாக அறையில் முணுமுணுக்கிற செய்திகள் வீட்டின் மேலிருந்து உரக்கத் தெரிவிக்கப்படும்” என்றார்.
தேவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள்(A)
4 பின்பு இயேசு மக்களை நோக்கி, “எனது நண்பர்களே! மக்களுக்கு அஞ்சாதீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். மக்கள் உங்கள் சரீரத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதற்கு மேல் உங்களுக்கு அவர்கள் வேறெதையும் செய்ய முடியாது. 5 நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமோ அவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களைக் கொல்வதற்கும் நரகத்தில் தள்ளுவதற்கும் ஆற்றல் வாய்ந்தவருக்கு (தேவனுக்கு) நீங்கள் பயப்படவேண்டும். ஆம், நீங்கள் பயப்படவேண்டியவர், அவர் மட்டுமே.
6 “பறவைகளை விற்கும்போது ஐந்து சிறியவைகள் இரண்டு காசுக்கு மாத்திரமே விலை பெறும். ஆனால், தேவன் அவற்றில் எதையும் மறப்பதில்லை. 7 இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது.
இயேசுவைக் குறித்து வெட்கப்படாதீர்(B)
8 “நான் உங்களுக்குச் சொல்வதாவது, பிறர் முன்னிலையில் ஒருவன் எழுந்து நின்று என்மீது அவனுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினால், நானும் அவன் எனக்குரியவன் என்பதைக் கூறுவேன். தேவதூதர்கள் முன்பாக இதைச் சொல்வேன். 9 ஆனால் ஒருவன் மக்களுக்கு முன்பாக எழுந்து நின்று என்னை நம்பவில்லை என்று கூறுவானேயானால், அம்மனிதன் எனக்குரியவன் அல்லன். தேவ தூதர்களுக்கு முன்னிலையில் நான் இதைக் கூறுவேன்.
10 “மனித குமாரனுக்கு எதிராக ஒருவன் எதையேனும் கூறினால், அவன் மன்னிக்கப்படுவான். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவற்றை ஒருவன் பேசினால் அவன் மன்னிக்கப்படமாட்டான்.
11 “ஜெப ஆலயத்தில் தலைவர்களுக்கும், முக்கியமான மனிதர்களுக்கும் முன்பாக, உங்களைக் கொண்டு வரும்போது நீங்கள் எப்படி தற்காத்துக்கொள்வது அல்லது எதைக் கூறவேண்டும் என்று கலக்கம் அடையவேண்டாம். 12 அந்த வேளையில் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் கூற வேண்டியதை உங்களுக்குப் போதிப்பார்” என்றார்.
தன்னலம் கூடாது
13 கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் இயேசுவை நோக்கி, “போதகரே, எங்கள் தந்தை இறந்து போனார். தந்தையின் உடைமையை என்னோடு பங்கிட என் தம்பிக்குச் சொல்லுங்கள்” என்றான்.
14 ஆனால் இயேசு அவனை நோக்கி, “உங்கள் நடுவில் நியாயாதிபதியாக நான் இருக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் தந்தையின் பொருட்களை உங்களுக்கு நான் பிரித்துத் தர வேண்டும் என்றோ யார் கூறியது?” என்று கேட்டார். 15 பின்னர் இயேசு அவர்களை நோக்கி, “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்றார்.
16 பின்பு இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “நிலத்தின் சொந்தக்காரனான ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. 17 அச்செல்வந்தன் தனக்குள், ‘நான் என்ன செய்வேன்? விளைச்சலை எல்லாம் வைப்பதற்கு இடம் இல்லையே’ என்று எண்ணினான்.
18 “பின்பு அச்செல்வந்தன், ‘நான் செய்ய வேண்டியதை அறிவேன். எனது களஞ்சியங்களை இடித்துவிட்டு பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன். அவற்றில் கோதுமையையும், நல்ல பொருட்களையும் நிரப்பி வைப்பேன். 19 அப்போது நான் எனக்குள், என்னிடம் மிகுதியான அளவில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கான பொருட்களைச் சேமித்துள்ளேன். ஓய்வுகொள், உண், குடி, வாழ்க்கையை அனுபவி என்று கூறுவேன்’ என்றான்.
20 “ஆனால் தேவன் அவனை நோக்கி, ‘மூடனே! இன்று இரவில் நீ மரிப்பாய். உனக்காக வைத்துள்ள பொருட்கள் என்ன ஆகும்? அப்போது அப்பொருட்களைப் பெறுவது யார்?’ என்றார்.
21 “தனக்காகவே மட்டும் பொருட்களைச் சேர்க்கின்ற மனிதனின் நிலை இத்தகையது. தேவனுடைய பார்வையில் அம்மனிதன் செல்வந்தன் அல்லன்” என்றார் இயேசு.
கவலை வேண்டாம்(C)
22 இயேசு சீஷர்களை நோக்கி, “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்வுக்குத் தேவையான உணவைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். உங்கள் சரீரத்திற்குத் தேவையான உடைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். 23 உணவைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியமானது. உடைகளைக் காட்டிலும் சரீரம் மிகவும் முக்கியமானது. 24 பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதோ, அறுப்பதோ இல்லை. பறவைகள் வீடுகளிலோ, களஞ்சியங்களிலோ உணவைச் சேமிப்பதுமில்லை. ஆனால் தேவன் அவற்றைப் பாதுகாக்கிறார். நீங்களோ பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள். 25 கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது. 26 சிறிய காரியங்களை உங்களால் செய்ய முடியாவிட்டால் பெரிய காரியங்களைக் குறித்துக் கவலைப்படுவானேன்?
27 “காட்டுப் பூக்களைப் பாருங்கள். அவை வளர்வதைக் கவனியுங்கள். அவை தமக்காக உழைப்பதோ, துணிகளை நெய்வதோ கிடையாது. ஆனால் பெரிய செல்வம் மிக்க அரசனான சாலமோன் கூட அப்பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடுத்தியதில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். 28 வயலிலுள்ள புல்லுக்கும் தேவன் அத்தகைய ஆடையை அணிவிக்கிறார். இன்று அந்தப் புல் உயிர் வாழும். நாளையோ எரிப்பதற்காகத் தீயில் வீசப்படும். எனவே தேவன் இன்னும் அதிகமாக உங்களுக்கு உடுத்துவிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். நம்பிக்கையில் குறைவுபடாதீர்கள்.
29 “எதை உண்போம், எதைக் குடிப்போம், என்பதைக் குறித்து எப்போதும் எண்ணாதீர்கள். அதைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். 30 இவ்வுலக மக்கள் அனைவரும் அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவை உங்களுக்குத் தேவை என உங்கள் தந்தைக்குத் தெரியும். 31 நீங்கள் விரும்பும் காரியம் தேவனுடைய இராஜ்யமாக இருக்க வேண்டும். அப்போது (உங்களுக்குத் தேவையான) மற்ற எல்லாப் பொருட்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.”
பணத்தை நம்பாதீர்கள்
32 “சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார். 33 உங்களிடமிருக்கும் பொருட்களை விற்று, அப்பணத்தைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுங்கள். இந்த உலகத்தின் செல்வங்கள் நிலைத்திருப்பதில்லை. பரலோகத்தின் பொக்கிஷத்தைப் பெறுங்கள். அந்தப் பொக்கிஷம் என்றும் நிலைத்து நிற்கும். திருடர்கள் பரலோகத்தில் உள்ள பொக்கிஷத்தைத் திருட முடியாது. பூச்சிகள் அதை அழிக்கமுடியாது. 34 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.”
எப்போதும் ஆயத்தமாக இருங்கள்(D)
35 “ஆயத்தமாக இருங்கள். எல்லா ஆடைகளையும் அணிந்து தீபங்களை ஏற்றி வையுங்கள். 36 திருமண விருந்திலிருந்து எஜமானர் வீட்டுக்குத் திரும்பி வருவதை எதிர்ப்பார்த்திருக்கும் ஊழியர்களைப் போல் இருங்கள். எஜமானர் வந்து தட்டுகிறார். அதே தருணத்தில் வேலைக்காரர்கள் எஜமானருக்காகக் கதவைத் திறக்கிறார்கள். 37 எஜமானர் வீட்டுக்கு வந்தவுடன் ஊழியர்கள் தயாராக அவருக்குக் காத்திருந்தபடியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானர் வேலைக்குரிய ஆடைகளைத் தானே அணிந்துகொண்டு ஊழியர்களை மேசையின் அருகே அமரும்படியாகச் சொல்வார். பின்னர், எஜமானரே அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார். 38 அந்த ஊழியர்கள் நள்ளிரவு வரையிலோ இன்னும் அதிகமாகவோ எஜமானருக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் எஜமானர் வந்து அந்த ஊழியர்கள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்க்கும்போது அவர் அதிக மகிழ்ச்சியடைவார்.
39 “இதனை நினைவில் வைத்திருங்கள்: திருடன் வரும் நேரத்தை வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், வீட்டினுள் திருடன் நுழைய அவன் அனுமதிக்கமாட்டான். 40 எனவே நீங்களும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். மனித குமாரன் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வருவார்” என்றார்.
நம்பிக்கையான ஊழியன் யார்(E)
41 “ஆண்டவரே நீங்கள் இந்த உவமையை எங்களுக்காக மட்டுமா அல்லது எல்லா மக்களுக்காகவுமா கூறினீர்கள்?” என்று பேதுரு கேட்டான்.
42 அவனுக்குப் பதிலாகக் கர்த்தர், “யார் ஞானமுள்ள, நம்பிக்கைக்குரிய ஊழியன்? எஜமானர் பிற ஊழியர்களைக் கவனிக்கவும் அவர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும்பொருட்டும் ஒரு ஊழியனை நியமிப்பார். அந்த வேலையைச் செய்யும்படி எஜமானர் நம்புகின்ற ஊழியன் யார்? 43 எஜமானர் வந்து அந்த ஊழியன் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவர செய்துவருவதைப் பார்க்கும்போது, அந்த ஊழியன் மிகவும் மகிழ்ச்சியடைவான். 44 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார்.
45 “ஆனால் எஜமானர் விரைவில் திரும்பி வரமாட்டார் என்று எண்ணினால் நடப்பதென்ன? அந்த ஊழியன் மற்ற ஊழியர்களை அவர்கள் ஆண்களானாலும், பெண்களானாலும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பிப்பான். அவன் உண்டு, பருகி, மிதமிஞ்சிப் போவான். 46 அந்த உழியனுக்குத் தகவலே தெரியாதபோது எஜமானர் வருவார். அந்த ஊழியன் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் அவர் வருவார். அப்போது அந்த எஜமானர் அந்த ஊழியனைத் தண்டிப்பார். கீழ்ப்படியாத பிற மனிதரோடு இருக்கும்படியாக எஜமானர் அவனையும் அனுப்பிவிடுவார்.
47 “எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்த்த வேலை என்ன என்பது அந்த ஊழியனுக்குத் தெரியும். ஆனால் அந்த ஊழியன் அவனது எஜமானர் விரும்பியதைச் செய்ய முயல்வதோ, அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வதோ இல்லை. எனவே அந்த ஊழியன் அதிகமாகத் தண்டிக்கப்படுவான். 48 ஆனால் எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை அறிந்துகொள்ளாத ஊழியனின் நிலை என்ன? தண்டனைக்குரிய செயல்களை அவன் செய்கிறான். ஆனால் தான் செய்ய வேண்டியதை அறிந்தும் செய்யாத ஊழியனைக் காட்டிலும் அவன் குறைந்த தண்டனையைப் பெறுவான். ஒருவனுக்கு அதிகமாக அளிக்கப்பட்டால் அவனுடைய பொறுப்பும் அதிகரிக்கும். அதிகமாக ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவனிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கப்படும்” என்றார்.
வித்தியாசமான போதனை(F)
49 இயேசு தொடர்ந்து சொன்னார், “உலகத்தில் அக்கினியைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். அது ஏற்கெனவே எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 50 நான் இன்னொரு ஞானஸ்நானத்தைப் பெறவேண்டும். அது முடியும்வரைக்கும் நான் தொல்லைக்குள்ளானதாக உணர்கிறேன். 51 நான் உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக வந்தேன் என்று எண்ணுகிறீர்களா? இல்லை. நான் உலகில் பிரிவை ஏற்படுத்த வந்தேன். 52 இப்போதிலிருந்து, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இருவருக்கு எதிராகவும், இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள்.
53 “தந்தையும் மகனும் பிரிந்திருப்பார்கள்.
மகன் தந்தையை எதிர்த்து நிற்பான்.
தந்தை மகனை எதிர்த்து நிற்பான்.
தாயும் மகளும் பிரிந்திருப்பார்கள்.
மகள் தாயை எதிர்த்து நிற்பாள்.
தாய் மகளை எதிர்த்து நிற்பாள்.
மாமியாரும் மருமகளும் பிரிந்திருப்பார்கள்.
மருமகள் மாமியாரை எதிர்த்து நிற்பாள்.
மாமியார் மருமகளை எதிர்த்து நிற்பாள்.”
காலத்தை அறியுங்கள்(G)
54 பின்பு இயேசு மக்களை நோக்கி, “மேற்கில் மேகங்கள் பெருகுகையில் நீங்கள் ‘மழைக்குரிய புயல் வந்து கொண்டிருக்கிறது’ என்று உடனே சொல்கிறீர்கள். உடனே மழை பொழிய ஆரம்பிக்கிறது. 55 தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்று வெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே. 56 வேஷதாரிகளே! காலத்தைப் புரிந்து பூமி மற்றும் வானத்தின் மாற்றங்களுக்குப் பொருள் உரைக்கிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருப்பவற்றை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்றார்.
பிரச்சனையைத் தீருங்கள்(H)
57 “சரியான ஒன்றைக் குறித்து ஏன் உங்களால் முடிவெடுக்க முடியவில்லை? 58 ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடுக்கும்போது அதைத் தீர்க்கும்பொருட்டு அவனோடு நீதிமன்றத்துக்குப் போகும்போது, வழியிலேயே அதைத் தீர்த்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்யுங்கள். அந்த வழக்கைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால் அவன் நியாயாதிபதியிடம் உங்களை அழைத்துச் செல்லக் கூடும். நியாதிபதி உங்களை ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்க, அவன் உங்களைச் சிறையில் தள்ளக் கூடும். 59 அவர்கள் உங்களிடமிருக்கும் கடைசிக் காசுவரை அனைத்தையும் எடுக்கிறவரைக்கும் நீங்கள் அங்கிருந்து வெளியே வரப்போவதில்லை” என்றார்.
2008 by World Bible Translation Center