M’Cheyne Bible Reading Plan
லேவியர்கள் ஆலயத்திற்கு சேவை செய்யத் திட்டமிடுகிறார்கள்
23 தாவீது முதியவன் ஆனான். எனவே இஸ்ரவேலின் புதிய அரசனாகத் தன் மகன் சாலொமோனை ஆக்கினான். 2 அனைத்து இஸ்ரவேல் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் தாவீது ஒன்றுக்கூட்டினான். 3 அவன் லேவியர்களில் 30 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களை எண்ணினான். ஆக மொத்தம் 38,000 பேர் இருந்தனர். 4-5 தாவீது அவர்களிடம், “24,000 லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை மேற்பார்வை பார்க்க வேண்டும். 6,000 லேவியர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கவேண்டும். 54,000 லேவியர்கள் வாசல் காவலர்களாக இருக்கட்டும். 4,000 லேவியர்கள் இசைக் கலைஞர்களாக இருக்கட்டும். அவர்களுக்காக சிறப்பான இசைக் கருவிகளை தயாரித்து வைத்துள்ளேன். கர்த்தரை துதித்துப்பாட அவர்கள் அக்கருவிகளைப் பயன்படுத்துவார்கள்” என்றான்.
6 தாவீது லேவியர்களை 3 குழுவாகப் பிரித்தான். அவர்கள் லேவியின் மூன்று மகன்களான கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோரின் கோத்திரத்தினராக இருந்தனர்.
கெர்சோன் கோத்திரத்தினர்
7 லாதானும், சிமேயும், கெர்சோன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள். 8 லாதானுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். மூத்த மகனின் பெயர் யெகியேல் ஆகும். அவனது மற்ற மகன்கள் சேத்தாம், யோவேல். 9 சிமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் எனும் மூன்று பேர்கள். இவர்கள் லாதானின் குடும்பத் தலைவர்களாக இருந்தனர்.
10 சிமேயிற்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்பவை அவர்களின் பெயர்கள் ஆகும். 11 யாகாத் மூத்த மகன். சீனா அடுத்த மகன். ஆனால் எயூஷீக்கும் பெரீயாவுக்கும் அதிகப் பிள்ளைகள் இல்லை. எனவே இருவரும் ஒரே குடும்பமாக எண்ணப்பட்டனர்.
கோகாத் கோத்திரத்தினர்
12 கோகாத்திற்கு 4 பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர். 13 அம்ராமிற்கு ஆரோன், மோசே என இரு பிள்ளைகள் இருந்தார்கள். ஆரோன் சிறப்புக் குரியவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆரோனும் அவனது சந்ததியினரும் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் சிறப்பானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கர்த்தருடைய சேவைக்குப் பரிசுத்தப் பொருட்களைத் தயார் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆரோனும், அவனது சந்ததியினரும் நறுமணப் பொருட்களை கர்த்தருக்கு முன்பு எரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஆசாரியர்களாகப் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எல்லாக் காலத்திலும் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் அளித்தனர்.
14 மோசே தேவனுடைய மனிதன். லேவி கோத்திரத்தினரின் ஒரு பகுதியினர், மோசேயின் பிள்ளைகள் ஆவார்கள். 15 கெர்சோமும், எலியேசரும் மோசேயின் மகன்கள். 16 செபுவேல், கெர்சோமின் மூத்த மகன். 17 ரெகபியா, எலியேசரின் மூத்த மகன். எலியேசருக்கு வேறு பிள்ளைகள் இல்லை. ஆனால் ரெகபியாவிற்கு ஏராளமான மகன்கள் இருந்தனர்.
18 செலோமித், இத்சாரின் மூத்தமகன்.
19 எரியா எப்ரோனின் மூத்த மகன். அமரியா இரண்டாவது மகன். யாகாசியேல் மூன்றாவது மகன். எக்காமியாம் நான்காவது மகன்.
20 ஊசியேல் மீகாவின் மூத்த மகன், இஷியா இரண்டாவது மகன்.
மெராரி கோத்திரத்தினர்
21 மகேலியும், மூசியும் மெராரியின் மகன்கள் ஆவார்கள். மகேலிக்கு எலெயாசார், கீஸ் எனும் மகன்கள் இருந்தனர். 22 எலெயாசார் ஆண் பிள்ளைகள் இல்லாமலேயே மரித்துப்போனான். அவனுக்குப் பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்தனர். எலெயாசாரின் மகள்கள் உறவினரையே மணந்துகொண்டனர். அவர்களின் உறவினர்கள் கீஸின் மகன்கள். 23 மூசியின் மகன்களாக மகலி, ஏதேர், ஏரோமோத் எனும் மூன்று பேர் இருந்தனர்.
லேவியர்களின் வேலை
24 இவர்கள் லேவியரின் சந்ததியினர். அவர்கள் குடும்ப வாரியாகக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். ஒவ்வொருவரின் பெயரும் பட்டியலிடப்பட்டது. இருபதும், அதற்கு மேலும் உள்ள வயதினர் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் பணி செய்தனர்.
25 தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தனது ஜனங்களுக்குச் சமாதானத்தைக் கொடுத்திருந்தார். கர்த்தர், எருசலேமிற்கு எல்லாக் காலத்திலும் வாழ்வதற்கு வந்திருந்தார். 26 எனவே பரிசுத்தக் கூடாரத்தை இனி தூக்கிக்கொண்டு செல்லும் வேலை லேவியர்களுக்கு இல்லை. ஆலயப்பணியில் பயன்படுத்தப்பட்ட வேறு பொருட்களைத் தூக்குகிற வேலையும் இல்லை” என்றான்.
27 இஸ்ரவேல் ஜனங்களுக்கு, லேவியர் கோத்திரத்தை எண்ணிக் கணக்கிடும்படி தாவீது கடைசியாக அறிவுறுத்தினான். அவர்கள் இருபதும் அதற்கும் மேலும் வயது கொண்டவர்களை எண்ணினார்கள்.
28 ஆரோனின் சந்ததியினர் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்போது லேவியர்கள் உதவுவதை வேலையாகக் கொண்டனர். அவர்கள் ஆலயத்தின் பிரகாரங்களையும் பக்கத்து அறைகளையும் கவனித்துக்கொண்டனர். எல்லாப் பரிசுத்தமானப் பொருட்களையும் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்தனர். தேவனுடைய ஆலயத்திற்குள் பணி செய்வதில் இது அவர்களின் வேலையாய் இருந்தது. 29 ஆலய மேஜையின் மேல் அப்பத்தை வைக்கும் பொறுப்பு இவர்களுடையது. மாவு, தானியக் காணிக்கை, புளிக்காத மாவில் அப்பம் செய்யும் வேலை போன்றவற்றைக் கவனித்துக்கொண்டனர். சட்டிகளில் சுடுகிற வேலைக்கும், கலவை பலிகளுக்கும் அவர்களே பொறுப்பாளர்களாக இருந்தனர். எல்லா வகையான அளவிடுகின்ற வேலைகளையும் செய்தார்கள். 30 லேவியர்கள் ஒவ்வொரு காலையிலும் கர்த்தருக்கு முன்பு நின்று நன்றி சொல்லியும் துதித்தும் பாடினார்கள். இதனை ஒவ்வொரு மாலையிலும் கூடச் செய்து வந்தனர். 31 சிறப்பு ஓய்வு நாட்கள், மாதப் பிறப்பு நாட்கள், திருவிழாக்கள், சிறப்பு விடுமுறை நாட்கள் ஆகிய காலங்களில் அவர்கள் கர்த்தருக்குத் தகன பலியைச் செலுத்தினார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தருக்கு முன்னால் பணிவிடைச் செய்தார்கள். ஒவ்வொரு வேளையும் எத்தனை லேவியர்கள் பணிவிடைச் செய்யவேண்டும் என்பதிலும் சில சட்டவிதிகள் இருந்தன. 32 லேவியர்கள் எதையெதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்களோ, அவற்றையெல்லாம் செய்தனர். பரிசுத்தக் கூடாரத்தின் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். பரிசுத்த இடத்தின் பொறுப்பையும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் ஆரோனின் சந்ததியினர். தமது உறவினர்களுக்கும், ஆசாரியர்களுக்கும் உதவினார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் பணி விடைகளை ஆசாரியர்களுக்கு உதவியாகச் செய்து வந்தனர்.
மாற்றப்பட்ட வாழ்க்கை
4 கிறிஸ்து தம் சரீரத்தில் இருக்கும்போது துன்புற்றார். கிறிஸ்துவையொத்த சிந்தனையை மேற்கொண்டு நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். சரீரத்தில் மரணமுறுகிற மனிதனோ பாவத்தினின்று நீங்குகிறான். 2 தேவன் விரும்புகிறவற்றைச் செய்யும் மனிதர்கள் செய்ய விரும்புகிறவற்றை இனிமேலும் செய்யாமல் இருக்கவும் உங்கள் உலக வாழ்வின் மீதியான காலத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 3 பாலுறவுப் பாவங்களில் ஈடுபடுதல், தீயவிருப்பங்கள், குடிப்பழக்கம், மது அருந்தும் விருந்துகள், தடைசெய்யப்பட்ட உருவ வழிபாடு ஆகிய நம்பிக்கை அற்றோர் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்வதில் ஏற்கெனவே உங்களின் பெரும்பாலான நேரத்தைச் செலவழித்துவிட்டீர்கள்.
4 இந்தக் குரூரமும் பாவமும் நிறைந்த வாழ்க்கை முறையில் நீங்கள் ஈடுபடாததை அந்த நம்பிக்கையற்றோர் விநோதமாகக் கருதுகிறார்கள். உங்களைக் குறித்து மோசமான முறையில் பேசுகிறார்கள். 5 வாழ்கிறவர்களையும் இறந்துபோனவர்களையும் நியாயம் தீர்க்கத் தயாராய் இருக்கிற ஒருவருக்கு செய்த காரியங்களுக்கு அவர்கள் விளக்கமளிக்கவேண்டும். 6 இக்காரணங்களுக்காக இப்போது இறந்துவிட்ட விசுவாசிகளுக்கும் நற்செய்தியானது போதிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் உலக வாழ்க்கையின்போது மோசமான வகையில் மனிதர்களால் நியாயம் தீர்க்கப்பட்டாலும், ஆவியால் தேவன் முன்னிலையில் அவர்கள் வாழ்ந்தார்கள்.
தேவனுடைய வரங்கள்
7 எல்லாம் முடிகிற காலம் நெருங்குகிறது. எனவே உங்கள் மனங்களைத் தெளிவுடையதாக வைத்திருங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்ய அது உதவும். 8 அன்பு எத்தனையோ பாவங்களை மூடி விடுவதால் ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது இதுவே ஆகும். 9 குற்றம் சாட்டாமல் உங்கள் வீடுகளை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். 10 உங்களில் ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து வரங்களைப் பெற்றுக்கொண்டீர்கள். பல வகையான வழிகளில் தேவன் தம் இரக்கத்தை உங்களுக்குக் காட்டியுள்ளார். தேவனுடைய வரங்களைப் பயன்படுத்தும் பொறுப்புக்கு உரியவர்களான பணியாட்களைப் போல நீங்கள் இருக்கிறீர்கள். எனவே நல்ல பணியாட்களாக இருந்து தேவனுடைய வரங்களை ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்குப் பயன்படுத்துங்கள். 11 பேசுகிற மனிதன் தேவனிடமிருந்து வார்த்தைகளைக் கொண்டு வருவதுபோல பேசவேண்டும். சேவை செய்யும் மனிதன் தேவன் தரும் வல்லமையோடு சேவை புரிதல் வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் எல்லாவற்றிலும் மகிமையுறும்படி நீங்கள், இக்காரியங்களைச் செய்ய வேண்டும்.
கிறிஸ்தவனாகத் துன்புறுதல்
12 எனது நண்பர்களே, நீங்கள் தற்சமயம் அனுபவிக்கிற வருத்தங்களையும் இன்னல்களையும் கண்டு ஆச்சரியப்படாதீர்கள். இவை உங்கள் விசுவாசத்தை சோதிப்பன. ஏதோ விசித்திரமான செயல் உங்களுக்கு நிகழ்வதாக நினைக்காதீர்கள். 13 கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்வதால், நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். இதன் மூலம் கிறிஸ்து தம் மகிமையைக் காட்டும்போது நீங்கள் மகிழ்ச்சி அடைந்து, சந்தோஷத்தால் மனம் நிறைவீர்கள். 14 நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால், மக்கள் உங்களைப் பற்றிப் தீயன கூறும்போது, நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். தேவனுடைய மகிமைமிக்க ஆவியானவர் உங்களோடிருப்பதால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். 15 உங்களில் யாரும் கொலைக்காரர்களாகவோ, திருடர்களாகவோ, அடுத்தவர்களின் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவோ, இக்காரியங்களுக்கான தண்டனையை அனுபவிக்கிறவர்களாகவோ இருக்கக் கூடாது. 16 ஒருவன் கிறிஸ்துவுக்காகத் துன்புறுவதற்காக வெட்கப்படக்கூடாது. அப்பெயருக்காக நீங்கள் தேவனை வாழ்த்தவேண்டும். 17 நியாயந்தீர்க்கப்படுதல் ஆரம்பமாகும் காலம் இது. தேவனுடைய குடும்பத்தில் அந்நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகும். நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் ஆரம்பித்தால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாத மக்களுக்கு என்ன நிகழும்?
18 “ஒரு நல்ல மனிதனே இரட்சிக்கப்படுவது மிகவும் கடுமையானது என்றால், தேவனுக்கு எதிரானவனும்,
பாவத்தால் நிரம்பியவனுமான மனிதனுக்கு என்ன நேரிடக்கூடும்?” (A)
19 தேவனுடைய விருப்பப்படி துன்புறுகிற மக்கள் தங்கள் ஆன்மாக்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தேவன் அவற்றை உண்டாக்கினார், எனவே அவர்கள் அவரை நம்பலாம். ஆகையால் அவர்கள் தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்.
ஜனங்களின் தீயத்திட்டங்கள்
2 பாவம் செய்யத் திட்டமிட்டிருந்த ஜனங்களுக்குத்
துன்பங்கள் வரும்.
அந்த ஜனங்கள் தம் படுக்கையில் கிடந்த வண்ணம் தீய திட்டங்களைத் தீட்டினார்கள்.
பிறகு காலை வெளிச்சம் வந்ததும் தங்களது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர்.
ஏனென்றால், அவர்களுக்குத் தாங்கள் விரும்பியதைச் செய்யும் வல்லமை இருந்தது.
2 அவர்கள் வயல்களை விரும்பினார்கள்,
எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் வீடுகளை விரும்பினார்கள்,
அதை எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது வீட்டை எடுத்தனர்.
அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது நிலத்தை எடுத்தனர்.
அந்த ஜனங்களைத் தண்டிக்கக் கர்த்தருடைய திட்டங்கள்
3 அதனால், கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்:
“பார், நான் இந்தக் குடும்பத்திற்கு எதிராக துன்பத்தைக் கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
நீங்கள் வீண் பெருமைகொள்வதை விடுவீர்கள்.
ஏனென்றால் தீமைகள் வந்துகொண்டிருக்கின்றன.
4 பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பாட்டு இயற்றுவார்கள்.
ஜனங்கள் இந்தச் சோகப் பாடலைப் பாடுவார்கள்:
நாங்கள் அழிக்கப்படுகிறோம்.
கர்த்தர் எங்களது நிலத்தை எடுத்துக் அதனை மற்றவர்களுக்குக் கொடுத்தார்.
ஆமாம், அவர் எனது நிலங்களை என்னிடமிருந்து எடுத்தார்.
கர்த்தர் நமது வயல்களைப் பகைவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்.
5 எனவே நாம் நிலத்தை அளந்து, கர்த்தருடைய
ஜனங்களுக்குள் பகிர்ந்துக்கொள்ள இயலாது.”
பிரசங்கம் செய்ய வேண்டாம் என மீகா கேட்டுக்கொள்ளப்படுகிறான்
6 ஜனங்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டாம்.
எங்களைப் பற்றிய அந்தத் தீயவற்றைச் சொல்லவேண்டாம்.
எங்களுக்குத் தீயவை எதுவும் ஏற்படாது”
7 ஆனால் யாக்கோபின் ஜனங்களே,
நான் இவற்றை கட்டாயம் சொல்ல வேண்டும்.
கர்த்தர் அவரது பொறுமையை இழந்துக்கொண்டிருக்கிறார்.
ஏனென்றால் நீங்கள் தீமை செய்திருக்கிறீர்கள்.
நீங்கள் சரியானபடி வாழ்ந்தால்
பிறகு நான் உங்களிடம் இனிமையாகப் பேசமுடியும்.
8 ஆனால் என் ஜனங்களுக்கு, அவர்கள் விரோதியைப்போல் ஆகிறார்கள்.
நீங்கள் கடந்து செல்லுகிறவர்களின் ஆடைகளைக் களவாடுகிறீர்கள்.
அந்த ஜனங்கள் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக நினைக்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் அவர்களிடமிருந்து யுத்தத்தின் கைதிகளிடமிருந்து எடுப்பது போல பொருள்களைப் பறித்துக்கொள்கிறீர்கள்.
9 நீங்கள் எனது ஜனங்களிலுள்ள பெண்களிடமிருந்து
அழகான வீடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் எனது செல்வத்தை
அவர்களின் சிறிய பிள்ளைகளிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
10 எழுங்கள், புறப்பட்டுப்போங்கள்.
இது நீங்கள் ஓய்வெடுக்கும் இடமாக இராது. ஏனென்றால், இந்த இடத்தை நீங்கள் அழித்தீர்கள்.
இதனை நீங்கள் அசுத்தம் செய்தீர்கள். எனவே, இது அழிக்கப்படும்.
இது பயங்கரமான அழிவாக இருக்கும்.
11 இந்த ஜனங்கள், நான் சொல்வதைக் கேட்க விரும்புவதில்லை.
ஆனால் ஒருவன் பொய்களைச் சொல்லிக்கொண்டு வந்தால் பிறகு, அவனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அவர்கள் ஒரு பொய் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொண்டு, அவன் வந்து,
“அப்பொழுது வருங்காலம் நல்லகாலமாக தோன்றும், திராட்சைரசமும் மதுபானமும் ஏராளமாக கிடைக்கும்” என்று சொன்னதும் அவனையும் ஏற்றுக்கொள்வார்கள்.
கர்த்தர் தனது ஜனங்களை ஒன்று சேர்ப்பார்
12 ஆமாம், யாக்கோபின் ஜனங்களே,
நான் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன்.
இஸ்ரவேலின் தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரையும் நான் ஒன்று சேர்ப்பேன்.
நான் அவர்களை ஆட்டு மந்தையில் உள்ள ஆடுகளைப்போன்றும்
தொழுவத்தில் உள்ள மந்தைகளைப்போன்றும்
ஒன்று சேர்ப்பேன்.
பிறகு அந்த இடமானது அநேக ஜனங்களின் ஓசைகளால் நிறைந்திருக்கும்.
13 “தடைகளை உடைப்பவர்” அவர்களை நடத்தி அவர்கள் முன்னே நடந்து செல்கிறார்.
அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் நுழைந்து கடந்து போவார்கள்.
அவர்களின் அரசன் அவர்களின் முன்பு நடந்து போவான்.
கர்த்தர் அவரது ஜனங்களுக்கு முன்னால் இருப்பார்.
பிரார்த்தனைபற்றிய போதனை(A)
11 ஒருமுறை இயேசு ஓரிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். இயேசு பிரார்த்தனையை முடித்தபோது இயேசுவின் சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி, “யோவான் தன் சீஷர்களுக்குப் பிரார்த்தனை செய்வது எவ்வாறு என்று கற்பித்தான். ஆண்டவரே எங்களுக்கும் பிரார்த்தனை செய்ய நீர் கற்றுக்கொடும்” என்றான்.
2 இயேசு சீஷரை நோக்கி, “பிரார்த்தனை செய்யும்போது, இவ்விதமாகப் பிரார்த்தனை செய்யுங்கள்:
“‘பிதாவே, உமது பெயர் என்றென்றும் பரிசுத்தமாயிருக்க பிரார்த்திக்கிறோம். உமது இராஜ்யம் ஏற்படவும்,
பரலோகத்தைப் போலவே பூமியிலும் நீர் விரும்பியவை நடைபெறவும் பிரார்த்திக்கிறோம்.
3 ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.
4 மற்றவர் செய்கிற குற்றங்களை நாங்கள் மன்னிக்கிறது போலவே,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உள்ளாக்காமல்,
பிசாசிடமிருந்து காப்பாற்றும்’” என்றார்.
தொடர்ந்து கேட்டல்(B)
5-6 பின்பு இயேசு அவர்களை நோக்கி, “உங்களில் ஒருவன் உங்கள் நண்பனின் வீட்டுக்கு இரவில் வெகு நேரம் கழித்துச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவனை நோக்கி, ‘இந்த ஊருக்குள் என் நண்பன் ஒருவன் என்னைச் சந்திக்க வந்திருக்கிறான். ஆனால் அவனுக்கு உண்பதற்காகக் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. தயவுசெய்து மூன்று அப்பங்களைக் கொடுங்கள்’ என்கிறீர்கள். 7 வீட்டின் உள்ளிருக்கும் உங்கள் நண்பன் பதிலாக, ‘போய்விடுங்கள்! என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள். கதவு ஏற்கெனவே மூடப்பட்டிருக்கிறது. என் குழந்தைகளும், நானும் படுக்கையில் படுத்திருக்கிறோம். நான் எழுந்து உங்களுக்கு இப்போது அப்பத்தைக் கொடுக்கமுடியாது’ என்கிறான். 8 உங்கள் நட்பு ஒருவேளை அவன் எழுந்து அப்பத்தை எடுத்துக்கொடுப்பதற்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அவன் கண்டிப்பாக எடுத்து உங்களுக்கு வேண்டியதைக் கொடுப்பான், என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். 9 எனவே, நான் உங்களுக்குச் சொல்வதாவது, தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள். தேவன் உங்களுக்குக் கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். நீங்கள் தேடியதைக் கண்டடைவீர்கள். தொடர்ந்து தட்டிக்கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காகத் திறக்கப்படும். 10 ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக்கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காகத் திறக்கப்படும். 11 உங்களில் யாருக்காவது மகன் இருக்கிறானா? உங்கள் மகன் உங்களிடம் மீனைக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எந்தத் தந்தையாவது தன் மகனுக்கு பாம்பைக் கொடுப்பானா? இல்லை. அவனுக்கு மீனைக் கொடுப்பீர்கள். 12 உங்கள் மகன் முட்டையைக் கேட்டால் அவனுக்குத் தேளைக் கொடுப்பீர்களா? இல்லை. 13 நீங்கள் பொல்லாதவர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றைக் கொடுக்கவேண்டுமென்பதை அறிவீர்கள். எனவே தன்னிடம் கேட்கின்ற மக்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்க வேண்டுமென்பதை பரலோகப் பிதா நிச்சயமாக அறிவார்” என்றார்.
இயேசுவின் வல்லமை(C)
14 ஊமையான ஒரு மனிதனிடமிருந்து ஒரு பிசாசை ஒருமுறை இயேசு துரத்திக்கொண்டிருந்தார். பிசாசு வெளிவந்தபோது, அந்த மனிதனால் பேசமுடிந்தது. மக்கள் வியப்படைந்தனர். 15 ஆனால் சிலர் “பெயல்செபூலின் (பிசாசின்) ஆற்றலை இயேசு பயன்படுத்தி, பிசாசுகளைத் துரத்திவிடுகிறார். அசுத்த ஆவிகளுக்குத் தலைவன் பெயல்செபூல்” என்றனர்.
16 பிறரும் இயேசுவைச் சோதிக்க விரும்பினர். வானத்திருலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டும்படியாக இயேசுவைக் கேட்டனர். 17 அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த நினைவுகளை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு மக்களை நோக்கி, “தனக்குள் ஒன்றுக்கொன்று எதிர்த்துக்கொண்டிருக்கிற எந்த இராஜ்யமும் உடைந்து சிதறும். தனக்குள் சண்டை இடுகிற எந்தக் குடும்பமும் பிரிந்து போகும். 18 எனவே சாத்தான் தனக்குள் சண்டையிட்டால், அவனது இராஜ்யம் எப்படி நிலைபெறும்? இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்கு நான் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். 19 நான் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்குப் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்தினால், உங்களைச் சார்ந்தவர்கள் அசுத்த ஆவிகளை வெளியேற்ற எந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்களைச் சார்ந்தவர்களே நீங்கள் கூறுவது தவறு என்பதை நிரூபிக்கிறார்கள். 20 அசுத்த ஆவிகளைத் துரத்த நான் தேவனுடைய வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
21 “பல ஆயுதங்கள் ஏந்திய ஒரு வலிய மனிதன் தன் சொந்த வீட்டைக் காவல் காக்கும்போது அவன் வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும். 22 அவனைக் காட்டிலும் வலிய மனிதன் ஒருவன் வந்து அவனைத் தோற்கடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். தனது வீட்டைக் காக்கும் பொருட்டு முதல் மனிதன் வைத்திருந்த ஆயுதங்களை வலிய மனிதன் எடுத்துக்கொள்வான். முதல் மனிதனின் பொருட்களைக்கொண்டே வலிய மனிதன் தான் செய்ய நினைப்பதைச் செய்வான்.
23 “ஒருவன் என்னோடு இருக்கவில்லை என்றால், அவன் எனக்கு எதிரானவன். என்னோடு வேலை செய்யாதவன் எனக்கு எதிராகச் செயல் புரிகின்றான்.
வெறுமையான மனிதன்(D)
24 “பிசாசுக்குரிய அசுத்த ஆவியானது ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அந்த ஆவியானது வனாந்தரத்திற்குச் சென்று ஓய்வெடுக்க ஓர் இடம் தேடும். ஆனால் அதற்கு எந்த இடமும் அகப்படுவதில்லை. எனவே ஆவியானது, ‘நான் விட்டு வந்த மனிதனிடம் திரும்பிச் செல்வேன்’ என்று கூறும். 25 ஆவியானது மீண்டும் அவனிடம் வரும்போது, தனது வீடு சுத்தமானதாகவும் அழகானதாகவும் இருப்பதைக் காணும். 26 அப்போது அந்த அசுத்த ஆவியானது வெளியேபோய் தன்னைக் காட்டிலும் அசுத்த குணம்கொண்ட மேலும் ஏழு ஆவிகளைக் கூடவே அழைத்து வரும். பின்பு எல்லா அசுத்த ஆவிகளும் அவனுள்ளே சென்று வசிக்கும். முன்னே இருந்ததைக் காட்டிலும் அம்மனிதனுக்கு மிகுந்த தொல்லை உண்டாகும்” என்றார்.
மகிழ்ச்சியுள்ள மனிதர்கள்
27 இயேசு இக்காரியங்களைக் கூறியபோது, மக்களிடையே இருந்த ஒரு பெண் பேச ஆரம்பித்தாள். அவள் இயேசுவை நோக்கி, “உங்களைப் பெற்றெடுத்து தன் மார்பில் பால் ஊட்டிய உங்கள் தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள்.
28 ஆனால் இயேசு, “தேவனுடைய போதனைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிற மக்களே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள்” என்றார்.
நிரூபித்துக் காட்டுங்கள்(E)
29 மக்களின் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. இயேசு சொல்லத் தொடங்கினார், “இன்று வாழும் மக்கள் தீயவர்கள். அவர்கள் தேவனிடமிருந்து அடையாளமாக அற்புதங்களைச் செய்யும்படி கேட்கிறார்கள். யோனாவுக்கு [a] நடந்த அதிசயமே அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரே அடையாளமாகும். 30 நினிவேயில் வாழ்ந்த மக்களுக்கு யோனா ஓர் அடையாளமாக இருந்தான். மனித குமாரனுக்கும் அதுவே பொருந்தும். இக்காலத்தில் வாழும் மக்களுக்கு மனித குமாரனே ஓர் அடையாளமானவர்.
31 “நியாயம் தீர்க்கின்ற நாளில் இன்று வாழும் மக்களோடு தெற்கு தேசங்களின் அரசி எழுந்து நின்று, அவர்கள் செய்வது தவறு எனச் சுட்டிக்காட்டுவாள். ஏனெனில் அந்த அரசி சாலமோனின் ஞானமான போதனைகளைக் கேட்பதற்காகத் தொலை தூரத்தில் இருந்து வந்தவள். ஆனால், நான் சாலமோனைக் காட்டிலும் மேலானவர் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.
32 “நியாயம் தீர்க்கிற நாளில் இன்று வாழும் மக்களோடு நினிவேயின் மக்கள் எழுந்து நின்று, நீங்கள் தவறுடையவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவார்கள். ஏனெனில் அம்மக்களுக்கு யோனா போதித்தபோது, அவர்கள் தம் இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொண்டார்கள். ஆனால் நான் யோனாவைக் காட்டிலும் மேலானவர் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.
உலகின் ஒளி நீங்கள்(F)
33 “யாரும் பாத்திரத்தை விளக்கின் மேல் கவிழ்த்து வைப்பதோ, விளக்கை மறைத்து வைப்பதோ இல்லை. அதற்குப் பதிலாக விளக்கை விளக்குத் தண்டின்மீது வைத்து உள்ளே வருபவர் பார்க்கும்படியாக ஏற்றி வைப்பார்கள். 34 உங்கள் சரீரத்திற்கு உங்கள் கண்ணே விளக்காக இருக்கிறது. உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரமும் ஒளி உடையதாக இருக்கும். உங்கள் கண்கள் கெட்டவையாக இருந்தால், உங்கள் சரீரமும் இருள் நிரம்பிக் காணப்படும். 35 எனவே கவனமாக இருங்கள். உங்களில் இருக்கும் ஒளி இருளாகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 36 உங்கள் முழு சரீரமும் ஒளி வீசி எந்தப் பகுதியும் இருளாகாதபடி இருந்தால் நீங்கள் மின்னலைப்போல் ஒளி வீசுவீர்கள்” என்றார்.
பரிசேயரை இயேசு விமர்சித்தல்(G)
37 இயேசு இவற்றையெல்லாம் கூறி முடித்த பின்பு, பரிசேயர்களில் ஒருவன் அவனோடு சாப்பிடுமாறு இயேசுவை அழைத்தான். எனவே இயேசு வந்து மேசையருகே அமர்ந்தார். 38 இயேசு உணவு உண்பதற்கு முன்னே கைகளைக் கழுவாது வந்து அமர்ந்ததைக் கண்ட பரிசேயன் வியப்படைந்தான். 39 இயேசு அவனை நோக்கி, “பரிசேயர்களாகிய நீங்கள் பாத்திரத்தையும், குவளையையும் வெளிப்புறத்தில் சுத்தமாகக் கழுவுகின்றீர்கள். ஆனால் உட்புறத்தில் பிறரை ஏமாற்றித் தீமை செய்யும் காரியங்களால் நிரம்பி இருக்கின்றீர்கள். 40 நீங்கள் மூடர்கள். வெளிப்புறத்தை உண்டாக்கியவரே (தேவனே) உள்புறத்தையும் உண்டாக்கி உள்ளார். 41 உங்கள் பாத்திரங்களிலும் குவளைகளிலும் இருப்பவற்றை தேவைப்படுகின்ற மக்களுக்குக் கொடுங்கள். அப்போது நீங்கள் முற்றிலும் சுத்தமானவர்களாக இருப்பீர்கள்.
42 “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். உங்களுக்குச் சொந்தமானவற்றில், உங்கள் தோட்டத்தின் சகல விளை பொருட்களில் புதினா, மரிக்கொழுந்து முதலானவற்றில்கூட பத்தில் ஒரு பாகத்தை தேவனுக்குக் கொடுக்கின்றீர்கள். ஆனால் பிறரிடம் நியாயமாக நடந்துகொள்வதையும் தேவனை நேசிப்பதையும் மறந்துவிடுகின்றீர்கள். இவற்றை நீங்கள் கண்டிப்பாகச் செய்தல் வேண்டும். கூடவே, பத்தில் ஒரு பாகம் கொடுப்பது போன்ற காரியங்களையும் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.
43 “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இடத்தில் வீற்றிருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள். சந்தை இடங்களில் மக்கள் உங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென விரும்புகிறீர்கள். 44 நீங்கள் மறைக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருந்தால் அது உங்களுக்கு மோசமானதாக இருக்கும். அதை அறியாமல் மக்கள் அவற்றின் மீது நடந்து செல்வார்கள்” என்றார்.
யூத போதகர்களுக்குப் போதனை
45 வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே, பரிசேயரைக் குறித்து இக்காரியங்களை நீங்கள் சொல்லும்போது, எங்களையும் விமர்சிக்கிறீரே” என்றான்.
46 அவனுக்குப் பதிலாக இயேசு, “வேதபாரகரே, உங்கள் நிலைமை மோசமானதாக இருக்கும். மக்கள் கீழ்ப்படிய இயலாத வகையில் கடுமையான விதிகளை விதிக்கிறீர்கள். மற்ற மக்கள் அவ்விதிகளுக்குக் கட்டுப்படுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றீர்கள். ஆனால் நீங்களோ அவ்விதிகளைப் பின்பற்றுவதற்கு முயன்றுகூடப் பார்ப்பதில்லை. 47 தீர்க்கதரிசிகளுக்கு நினைவுச்சின்னங்களைக் கட்டுவதால் உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். அதே தீர்க்கதரிசிகளை உங்கள் முன்னோர்கள் கொன்றார்களே. 48 உங்கள் முன்னோர் செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக எல்லா மக்களிடமும் காட்டிக் கொள்கிறீர்கள். அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள், அவர்களுக்கு நீங்கள் நினைவுச் சின்னங்களை எழுப்புகின்றீர்கள்! 49 எனவே தேவனின் ஞானமானது, ‘நான் தீர்க்கதரிசிகளையும், சீஷர்களையும், அவர்களிடம் அனுப்புவேன். தீய மனிதரால் தீர்க்கதரிசிகளிலும் சீஷர்களிலும் சிலர் கொல்லப்படுவார்கள். வேறு சிலர் துன்புறுத்தப்படுவார்கள்’” என்று உரைத்தார்.
50 “உலகம் தோன்றிய காலம் தொடங்கி கொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளின் மரணத்திற்காகவும், இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். 51 ஆபேலின் மரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். சகரியாவின் கொலைக்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள். பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் நடுவில் சகரியா கொல்லப்பட்டான். அவர்கள் எல்லாருக்காகவும் இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
52 “வேதபாரகரே, உங்களுக்குத் தீமை வரும். தேவனைப்பற்றி அறிவதற்குரிய திறவுகோலை ஒளித்து வைத்திருக்கிறீர்கள். நீங்களும் அறிந்துகொள்வதில்லை. பிறர் அறிந்துகொள்வதையும் தடைசெய்கிறீர்கள்” என்றார்.
53 இயேசு அங்கிருந்து கிளம்பும்போது, வேதபாரகர்களும் பரிசேயர்களும் அவரைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தார்கள். பலவற்றைக் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு இயேசுவை வற்புறுத்தினார்கள். 54 இயேசு தவறாக ஏதேனும் சொல்ல நேர்ந்தால் அவரைப் பிடிக்கலாம் என வழிகாண முயன்றுகொண்டிருந்தார்கள்.
2008 by World Bible Translation Center