Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 22

22 தாவீது, “தேவனாகிய கர்த்தருடைய ஆலயமும் சர்வாங்க தகனபலிக்கான பலிபீடமும் இங்கே கட்டப்படும்” என்றான்.

தாவீது ஆலயத்திற்கு திட்டமிடுகிறான்

தாவீது இஸ்ரவேலில் வாழும் அயல் நாட்டுக்காரர்களைக் கூடும்படிக் கட்டளையிட்டான். அவர்களில் கல்தச்சர்களைத் தேர்ந்தெடுத்தான். தேவனுடைய ஆலயத்திற்கானக் கற்களை வெட்டும்படி அவர்களுக்கு கட்டளையிட்டான். தாவீது வாசல் கதவுக்கான ஆணிகளுக்கும் கீல்களுக்கும் தேவையான இரும்பையும் பெற்றான். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலத்தையும் பெற்றான். எண்ண முடிகிற அளவிற்கும் அதிகமான அளவில் கேதுரு மரங்களையும் பெற்றான். சீதோன், தீரு போன்ற நகர ஜனங்கள் கேதுருமரங்களை தாவீதிற்குக் கொண்டுவந்தனர்.

தாவீது, “நாம் கர்த்தருக்காக மிகவும் மகத்தான ஆலயத்தை கட்டவேண்டும். ஆனால் என் மகன் சாலொமோன் இளைஞனாக இருக்கிறான். அவன் எதையெதை அறிந்துக்கொள்ள வேண்டுமோ அதனை இன்னும் அறிந்துக்கொள்ளவில்லை. கர்த்தருடைய ஆலயமானது மிக மகத்தானதாக இருக்க வேண்டும். அது தன் உயர்வாலும் அழகாலும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெறும். எனவே, நான் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட திட்டமிடுகிறேன்” என்றான். எனவே தாவீது இறப்பதற்கு முன்பு ஆலயம் கட்டுவதற்கான திட்டங்களை அமைத்தான்.

பிறகு தாவீது தன் மகன் சாலொமோனை அழைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுமாறு சொன்னான். தாவீது சாலொமோனிடம், “என் மகனே, எனது தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்ட நான் விரும்பினேன். ஆனால் கர்த்தர் என்னிடம், ‘தாவீது, நீ பல போர்களைச் செய்து அதில் பலரைக் கொன்றிருக்கிறாய். எனவே எனது நாமத்தில் நீ ஆலயம் கட்டக் கூடாது. ஆனால் உனக்கு ஒரு மகன் இருப்பான். அவன் சமாதான புருஷனாக இருப்பான். நான் உனது மகனுக்குச் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுப்பேன். அவனைச் சுற்றியுள்ள பகைவர்கள் அவனுக்குத் தொந்தரவு செய்யமாட்டார்கள். அவனது பெயர் சாலொமோன். சாலொமோன் அரசனாக இருக்கும்போது இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சமாதானமும் அமைதியும் தருவேன். 10 சாலொமோன் எனது நாமத்துக்காக ஆலயம் கட்டுவான். அவன் எனது மகனாக இருப்பான், நான் அவனது தந்தையாக இருப்பேன். நான் சாலோமோனின் அரசைப் பலமுள்ளதாக்குவேன். அவனது குடும்பத்தில் உள்ளவர்கள் என்றென்றும் இஸ்ரவேலை ஆள்வார்கள்’ என்றார்!” என்றான்.

11 தாவீது மேலும், “இப்போது மகனே, கர்த்தர் உன்னோடு இருக்கட்டும், உன் செயல்களில் வெற்றி கிடைக்கட்டும். உனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தால் ஆலயம் கட்டுவாய். அவர் சொன்னது போலவே கட்டாயம் நீ செய்வாய். 12 கர்த்தர் உன்னை இஸ்ரவேலின் அரசனாக்குவார். ஜனங்களை வழி நடத்தவும் கர்த்தருடைய சட்டங்களை மதித்து கட்டுப்பட்டு நடக்கவும் தேவையான ஞானத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும் தேவனாகிய கர்த்தர் உனக்கு வழங்கட்டும். 13 நீ வெற்றிமிக்கவனாய் இருப்பாய். இஸ்ரவேலுக்காக கர்த்தர் மோசேயிடம் கொடுத்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் நீ கவனமாகக் கீழ்ப்படிய வேண்டும். பலமாகவும், தைரியமாகவும் இரு. பயப்படாதே.

14 “சாலொமோன், நான் கடினமான வேலை செய்து கர்த்தருக்கு ஆலயம் கட்டதிட்டமிட்டேன். நான் 3,750 டன் தங்கம் கொடுத்திருக்கிறேன். 37,500 டன் வெள்ளி கொடுத்திருக்கிறேன். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும் கொடுத்திருக்கிறேன். மரமும் கற்களும் கொடுத்திருக்கிறேன். சாலொமோன், உன்னால் மேலும் சேர்க்க முடியும். 15 உன்னிடம் ஏராளமான கல்தச்சர்களும் மரத்தச்சர்களும் உள்ளனர். எல்லா வேலைகளையும் செய்யும் திறமை உடையவர்களும் உனக்கு இருக்கின்றனர். 16 அவர்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலை செய்வதில் வல்லவர்கள். எண்ணிபார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளனர். இப்போதே வேலையைத் தொடங்கு. கர்த்தர் உன்னோடு இருக்கட்டும்” என்றான்.

17 பிறகு தாவீது, இஸ்ரவேலின் தலைவர்கள் அனைவருக்கும் தனது மகன் சாலொமோனுக்கு உதவும்படி கட்டளையிட்டான். 18 தாவீது தலைவர்களிடம், “தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருக்கிறார். அவர் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுத்திருந்தார். நம்மைச் சுற்றி இருப்பவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உதவினார். கர்த்தருக்கும், அவரது ஜனங்களுக்கும் இப்போது இந்த நிலம் கட்டுப்பட்டிருக்கிறது. 19 இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உங்கள் இதயத்தையும் ஆத்துமாவையும் கொடுங்கள். அவர் சொன்னபடி செய்யுங்கள். தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள். கர்த்தருடைய நாமத்துக்காக ஆலயம் கட்டுங்கள். பிறகு உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வாருங்கள். மற்ற பரிசுத்தமான பொருட்களையும் ஆலயத்திற்குள் கொண்டு வாருங்கள்” என்றான்.

1 பேதுரு 3

மனைவியரும் கணவன்மார்களும்

அவ்வாறே மனைவியராகிய நீங்கள், உங்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய போதனைகளை உங்களில் சிலரது கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கூட, எப்பேச்சுமில்லாமல் தம் நடத்தையின் மூலம் அவர்களின் மனைவிமார்கள் அவர்களை வலியுறுத்தவேண்டும். உங்கள் பரிசுத்த மரியாதைக்குரிய நடத்தையை அவர்கள் காண்பார்கள். கூந்தல், பொன் ஆபரணங்கள் மற்றும் ஆடை வகைகள் ஆகிய புற அழகுகளால் ஆனதாக உங்கள் அழகு இருக்கக் கூடாது. உள்மனதினுடையதும் இதயத்தினுடையதுமான அமைதியும் மென்மையுமான அழகாக உங்கள் அழகு இருக்கவேண்டும். அந்த அழகு ஒரு நாளும் அழியாது. இது தேவனுடைய பார்வையில் மிகவும் விலை உயர்ந்ததாகும்,

பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து தேவனின் நம்பிக்கைக்கொண்ட பரிசுத்த பெண்கள் அவ்வாறே வாழ்ந்தனர். இவ்வாறாகவே அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொண்டனர். அவர்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். நான் சாராளைப் போன்ற பெண்களைக் குறித்துக் கூறுகிறேன். அவள் தனது கணவனாகிய ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்தாள். அவனை எஜமானென்று அழைத்தாள். நீங்கள் சரியானவற்றைச் செய்து எதைப்பற்றியும் அஞ்சாதவர்களாய் வாழ்ந்தால் சாராளின் உண்மையான மக்களாய் இருப்பீர்கள்.

அவ்வாறே கணவன்மாராகிய நீங்களும் உங்கள் மனைவியரோடு திருமண வாழ்வு பற்றிய புரிந்துகொள்ளுதலின்படி வாழவேண்டும். நீங்கள் உங்கள் மனைவியரை மதிக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களைக் காட்டிலும் எளியவர்கள். அதே சமயத்தில் உங்களுக்கு வாழ்வளித்த தேவனுடைய கிருபையில் அவர்களும் கூட்டு வாரிசுதாரர்கள் ஆவார்கள். உங்கள் பிரார்த்தனைக்கு எந்தக் தொந்தரவும் நேராமல் இருக்க இவற்றைச் செய்யுங்கள்.

நேர்மையினிமித்தம் துன்பம்

எனவே நீங்கள் யாவரும் ஒன்றிணைந்து அமைதியாக வாழவேண்டும். ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். ஒருவரையொருவர் சகோதரரைப்போல நேசியுங்கள். இரக்கமுள்ளவர்களாகவும், அருளுடையவர்களாகவும் இருங்கள். உங்களுக்கு ஒருவன் தீமை செய்துவிட்டதால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவனுக்குத் தீமை செய்யாதீர்கள். உங்களை ஒருவன் அவமானப்படுத்தினால், பதிலுக்கு நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள். ஆனால் அவனை ஆசீர்வதிக்கும்படியாக தேவனை வேண்டுங்கள். நீங்கள் ஆசியைப் பெற அழைக்கப்பட்டீர்கள் என்பதால் இதைச் செய்யுங்கள் 10 வேதவாக்கிம் கூறுகிறது:

“வாழ்க்கையை நேசிக்கவும்
    நல்ல நாட்களை அனுபவிக்கவும்
விரும்புகிற மனிதன் தீயவற்றைப்
    பேசுவதை நிறுத்தல் வேண்டும்.
11 அவன் தீமை செய்வதை விட்டு நன்மை செய்ய வேண்டும்.
    அவன் அமைதியை நாடி, அதைப் பெற முயலவேண்டும்.
12 கர்த்தர் நல்ல மனிதரைக் காண்கிறார்.
    அவர்களுடைய பிரார்த்தனைகளைக் கேட்கிறார்.
ஆனால் தீமைசெய்யும் மனிதருக்குக் கர்த்தர் எதிரானவர்.” (A)

13 எப்போதும் நன்மை செய்யவே நீங்கள் முயன்றுகொண்டிருந்தால் ஒருவனும் உங்களைத் துன்புறுத்த முடியாது. 14 ஆனால் சரியானதைச் செய்கையில் நீங்கள் துன்பம் அடைந்தால் கூட, உங்களுக்கு நல்லதே ஆகும். “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள். கவலை கொள்ளாதீர்கள்.” 15 ஆனால் உங்கள் இதயங்களில் கர்த்தராகிய கிறிஸ்துவை பரிசுத்தம் பண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றி விளக்கிக் கூறும்படியாகக் கேட்போருக்குப் பதில் கூறுவதற்கு எப்போதும் தயாராக இருங்கள். 16 ஆனால் அவர்களுக்கு மரியாதையோடும் மென்மையாகவும் பதில் கூறுங்கள். உங்கள் மனசாட்சியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது கிறிஸ்துவைப் பின்பற்றும் உங்கள் நடத்தையைக் குறை கூறிப் பேசுகின்ற மக்கள் வெட்கமடைவார்கள். கிறிஸ்துவில் நீங்கள் வாழும் நல்வாழ்க்கைக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் உங்களுக்கெதிராகப் பேசியவற்றிற்காக வெட்கமடைவார்கள்.

17 தவறு செய்வதைக் காட்டிலும், தேவனுடைய விருப்பம் இதுதான் எனில் நன்மை செய்வதற்காகத் துன்புறுவது நல்லது.

18 ஏனெனில் ஒட்டுமொத்தமாக நம்
    பாவங்களுக்காக கிறிஸ்துவும் மரித்தார்.
குற்றம் நிறைந்த மனிதர்களுக்காக பாவமேயில்லாத அவர் இறந்தார்.
    இதன்மூலம் உங்களை தேவனிடம் வழிகாட்டினார்.
    இயற்கையான மனித வாழ்வில் அவர் மரணமடைய நேரிட்டது.
ஆனால் உயர்ந்த ஆன்மீக நிலையில்
    அவர் மீண்டும் எழுப்பப்பட்டார்.

19 சிறைச்சாலைகளில் உள்ள ஆவிகளுக்கு, இந்த ஆவி நிலையிலேயே சென்று அறிவித்தார். 20 நோவாவின் காலத்தில் அந்த ஆவிகள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தன. நோவா பேழையை அமைக்கும்போது தேவன் அவற்றிற்காகப் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார். மிகச் சில மக்களாகிய எட்டுப் பேர் மட்டுமே பேழையில் காப்பாற்றப்பட்டார்கள். தண்ணீரினால் இம்மக்கள் மீட்கப்பட்டார்கள். 21 இன்று நீங்கள் இரட்சிக்கப்படுகின்ற ஞானஸ்நானத்திற்கு அந்தத் தண்ணீர் ஒப்பானது. ஞானஸ்நானம் சரீரத்திலிருந்து அழுக்கை விலக்குவதில்லை. ஆனால் தேவனிடம் தூய உள்ளத்தை வேண்டுவதே ஞானஸ்நானம். இயேசு கிறிஸ்து மரணத்தினின்று எழுப்பப்பட்டதால் இவை அனைத்தும் நடக்கின்றன. 22 இப்போது இயேசு பரலோகத்திற்குப் போய்விட்டார். அவர் தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். அவர் தேவதூதர்களையும், அதிகாரங்களையும், ஆற்றல் வாய்ந்தோரையும் ஆளுகிறார்.

மீகா 1

சமாரியாவும் இஸ்ரவேலும் தண்டிக்கப்பட வேண்டும்

கர்த்தருடைய வார்த்தை மீகாவிடம் வந்தது. இது யோதாம், ஆகாஸ், எசேக்கியா எனும் அரசர்களின் காலங்களில் நிகழ்ந்தது. இவர்கள் யூதாவின் அரசர்கள். மீகா, மொரேசா என்னும் ஊரைச் சேர்ந்தவன். மீகா இந்தத் தரிசனத்தைச் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துப் பார்த்தான்.

அனைத்து ஜனங்களே, கவனியுங்கள்!
    பூமியே அதிலுள்ள உயிர்களே, கவனியுங்கள்,
எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது பரிசுத்த ஆலயத்திலிருந்து வருவார்.
    எனது ஆண்டவர் உங்களுக்கு எதிரான சாட்சியாக வருவார்.
பாருங்கள், கர்த்தர் அவரது இடத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார்.
    அவர் இறங்கி வந்து பூமியிலுள்ள உயர்ந்த மேடைகளை மிதிப்பார்.
அவருக்குக் கீழே மலைகள் உருகும்.
    அவை நெருப்புக்கு முன்னாலுள்ள
மெழுகைப் போன்று உருகும்.
    பள்ளத்தாக்குகள் பிளந்து மலைகளிலிருந்து தண்ணீர் பாயும்.
ஏனென்றால், இதற்கு காரணம் யாக்கோபின் பாவம்.
    இதற்கு இஸ்ரவேல் நாடு செய்த பாவங்களும் காரணமாகும்.

சமாரியா, பாவத்தின் காரணம்

யாக்கோபு செய்த பாவத்திற்கு காரணம் என்ன?
    அது சமாரியா,
யூதாவிலுள்ள, வழிபாட்டிற்குரிய இடம் எங்கே?
    அது எருசலேம்.
எனவே, நான் சமாரியாவை வயலிலுள்ள குன்றுகளின் குவியலாக்குவேன்.
    அது திராட்சைக் கொடி நடுவதற்கான இடம்போல் ஆகும்.
நான் சமாரியவின் கற்களைப் பள்ளத்தாக்கில் புரண்டு விழப் பண்ணுவேன்.
    நான் அவளது அஸ்திபாரங்களைத் தவிர எல்லாவற்றையும் அழிப்பேன்.
அவளது அனைத்து விக்கிரகங்களும் துண்டுகளாக உடைக்கப்படும்.
    அவள் வேசித்தனத்தின் சம்பளம் (விக்கிரகங்கள்) நெருப்பில் எரிக்கப்படும்.
நான் அவளது அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்கள் அனைத்தையும் அழிப்பேன்.
    ஏனென்றால் சமாரியா எனக்கு விசுவாசமற்ற முறையில் அச்செல்வத்தைப் பெற்றாள்.
எனவே அவை எனக்கு விசுவாசம்
    அற்றவர்களாலேயே எடுத்துக்கொள்ளப்படும்.

மீகாவின் பெருந்துக்கம்

என்ன நிகழும் என்பதைப்பற்றி நான் மிகவும் துக்கப்படுவேன்.
    நான் பாதரட்சையும் ஆடையும் இல்லாமல் போவேன்.
நான் ஒரு நாயைப்போன்று அழுவேன்.
    நான் ஒரு பறவையைப்போன்று துக்கங்கொள்வேன்.
சமாரியாவின் காயங்கள் குணப்படுத்தப்பட இயலாது.
    அவளது (பாவம்) நோய் யூதா முழுவதும் பரவியிருக்கிறது.
இது எனது ஜனங்களின் நகரவாசலை அடைந்திருக்கிறது.
    எருசலேமின் எல்லா வழிகளிலும் பரவியிருக்கிறது,
10 இதனைக் காத்திடம் சொல்லவேண்டாம்.
    அக்கோ என்னுமிடத்தில் கதறவேண்டாம்.
பெத்அப்ராவிலே
    புழுதியில் நீ புரளு.
11 சாப்பீரில் குடியிருக்கிறவர்களே வெட்கத்துடன்
    நிர்வாணமாய் உங்கள் வழியிலே போங்கள்.
சாயனானில் குடியிருக்கிறவர்கள் வெளியே வரமாட்டார்கள்.
பெத்ஏசேலில் வாழ்கிறவர்கள் கதறுவார்கள்.
    உங்களின் உதவியை எடுத்துக்கொள்வார்கள்.
12 மாரோத்தில் குடியிருக்கிறவளே பலவீனமாகி
    நல்ல செய்தி வருமென்று எதிர்ப்பார்த்திருந்தார்கள்.
ஏனென்றால், துன்பமானது
    கர்த்தரிடமிருந்து எருசலேமின் நகர வாசலுக்கு வந்திருக்கிறது.
13 லாகீசில் குடியிருக்கிறவளே,
    உங்கள் இரதத்தில் விரைவாகச் செல்லும் குதிரையைப் பூட்டு.
சீயோனின் பாவம் லாகீசில் தொடங்கியது.
    ஏனென்றால் நீ இஸ்ரவேலின் பாவங்களைப் பின்பற்றுகிறாய்.
14 எனவே, நீ மோர்ஷேக் காத்தினிடத்திற்கு கட்டாயமாக பிரிவு உபச்சார
    வெகுமதிகளைக் கொடுக்கவேண்டும்.
அக்சீபின் வீடுகள் இஸ்ரவேல் அரசர்களிடம்
    வஞ்சனை செய்யும்.
15 மரேஷாவில் குடியிருக்கிறவளே,
    நான் உனக்கு எதிராக ஒருவனைக் கொண்டு வருவேன்.
அவன் உனக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொள்வான்.
    அதுல்லாமிற்குள் இஸ்ரவேலின் மகிமை (தேவன்) வரும்.
16 எனவே உனது முடியை வெட்டு, உன்னை மொட்டையாக்கிக்கொள்.
    ஏனென்றால், நீ அன்பு செலுத்துகிற உன் குழந்தைகளுக்காக நீ கதறுவாய்.
நீ கழுகைப்போன்று முழுமொட்டையாக இருந்து உனது துக்கத்தைக் காட்டு.
    ஏனென்றால் உனது பிள்ளைகள் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

லூக்கா 10

எழுபத்திரண்டு பேரை அனுப்புதல்

10 இதன் பின்பு இயேசு கூடுதலாக எழுபத்திரண்டு [a] மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார். இரண்டு இரண்டு பேராக இயேசு அவர்களை அனுப்பினார். தான் போக விரும்பிய ஒவ்வொரு நகருக்கும், இடத்துக்கும் தனக்கு முன்பாக அவர்களை அனுப்பினார். இயேசு அவர்களுக்கு, “அறுவடைக்கு மிக அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள். அறுவடை செய்வதற்கு உதவியாக மிகக் குறைவான வேலையாட்களே உள்ளனர். தேவன் அறுவடைக்கு (மக்களுக்கு) எஜமானர். அறுவடை செய்வதற்கு ஏற்ற அதிகமான வேலைக்காரர்களை அனுப்பும்படியாக தேவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

“நீங்கள் இப்போது போகலாம். ஆனால் கேளுங்கள். நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கு நடுவில் சிக்கிய ஆடுகளைப்போல் காணப்படுவீர்கள். பணப் பையையோ, பையையோ, காலணிகளையோ எடுத்துச்செல்லாதீர்கள். வழியிலே மக்களோடு பேசுவதற்காக நிற்காதீர்கள். ஒரு வீட்டினுள் நுழையும் முன்பே, ‘இவ்வீட்டில் அமைதி நிலவட்டும்’ என்று வாழ்த்துங்கள். அமைதிக்குத் தகுதியுள்ள மனிதன் அங்கு வாழ்ந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி அவனோடு தங்கட்டும். அமைதிக்குத் தகுதியற்ற மனிதன் அங்கிருந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி உங்களுக்கே திரும்பட்டும். அமைதியான வீட்டில் தங்குங்கள். அவ்வீட்டிலுள்ள மக்கள் தரும் உணவை உண்டு, பானத்தைப் பருகுங்கள். ஒரு வேலைக்காரனுக்குச் சம்பளம் தரப்படவேண்டும். இன்னொரு வீட்டில் தங்கும்பொருட்டு அந்த வீட்டைவிட்டுச் செல்லாதீர்கள்.

“ஒரு நகரத்தில் நுழையும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்றால் அவர்கள் உங்கள் முன் வைக்கும் உணவை சாப்பிடுங்கள். அங்கு வாழும் நோயுற்ற மக்களைக் குணப்படுத்துங்கள். பின்னர், ‘தேவனின் இராஜ்யம் உங்களிடம் வந்துகொண்டிருக்கிறது’ எனக் கூறுங்கள்.

10 “ஒரு நகரத்துக்குப் போகும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், அந்நகரத்தில் உள்ள தெருக்களுக்குச் சென்று, 11 ‘எங்கள் கால்களில் பட்டிருக்கும் உங்கள் நகரத்தின் தூசியைக் கூட உங்களுக்கு எதிராகத் தட்டி விடுகிறோம். ஆனால் தேவனின் இராஜ்யம் சீக்கிரமாக வந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுங்கள். 12 நியாயம் தீர்க்கிற நாளில் அந்நகரத்து மக்களுக்குக் கிடைக்கும் தீர்ப்பு, சோதோம் நாட்டு மக்களுக்குக் கிடைத்ததைவிடக் கொடுமையானதாக இருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

விசுவாசமற்றோருக்கு எச்சரிப்பு(A)

13 “கோராசீனே! உனக்குக் கேடு வரும். பெத்சாயிதாவே! உனக்குக் கேடு உண்டாகும். உங்களுக்கு அநேக அற்புகங்களைச் செய்தேன். தீருவிலும், சீதோனிலும் அதே அற்புதங்களைச் செய்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே அப்பட்டணங்களின் மக்கள் தங்கள் வாழ்வை மாற்றி, பாவம் செய்வதை விட்டு விட்டிருப்பார்கள். துயரத்தின் ஆடையை உடுத்திக்கொண்டு, சாம்பலைத் தங்கள் மேல் தூவிக்கொண்டு, தங்கள் பாவங்களுக்காக வருந்துவதைக் காண்பித்து இருப்பார்கள். 14 நியாயம் தீர்க்கிற நாளில் தீரு, சீதோன் ஆகிய இடங்களைக் காட்டிலும் உங்கள் நிலை மோசமாக இருக்கும். 15 கப்பர்நகூம் நகரமே, நீ பரலோகத்திற்கு நேராக எழுப்பப்படுவாயா? இல்லை, மரணத்துக்குரிய இடத்திற்கு நேராக நீ வீசி எறியப்படுவாயாக.

16 “ஒருவன் நீங்கள் கூறுவதைக் கேட்கும்போது அவன் உண்மையாகவே எனக்குச் செவிசாய்க்கிறான். ஆனால் ஒருவன் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவன் என்னை அனுப்பியவராகிய தேவனை ஏற்க மறுக்கிறான்” என்றார்.

சாத்தான் விழுதல்

17 எழுபத்திரண்டு மனிதர்களும் தங்கள் பயணத்தை முடித்துத் திரும்பியபோது மிக்க மகிழ்வோடு காணப்பட்டார்கள். அவர்கள், “ஆண்டவரே, உங்கள் பெயரைக் கூறியபோது பிசாசுகள்கூட எங்களுக்குக் கீழ்ப்படிந்தன” என்றார்கள்.

18 அம்மனிதர்களை நோக்கி இயேசு, “வானிலிருந்து மின்னலைப்போன்று சாத்தான் வீழ்வதை நான் கண்டேன். 19 கேளுங்கள். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கிற வல்லமையை நான் உங்களுக்குக் கொடுத்தேன். பகைவனின் (பிசாசின்) வல்லமையைக் காட்டிலும் மிகுந்த வல்லமை உங்களுக்குக் கொடுத்தேன். உங்களை எதுவும் காயப்படுத்துவதில்லை. 20 ஆம், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகின்றன. மகிழ்ச்சியாக இருங்கள். ஏன், உங்களுக்கு இந்த வல்லமை இருப்பதால் அல்ல, உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதால் சந்தோஷப்படுங்கள்” என்று கூறினார்.

இயேசுவின் பிரார்த்தனை(B)

21 அப்போது பரிசுத்த ஆவியானவர் இயேசுவை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். இயேசு: “பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! உங்களுக்கு நன்றி. ஞானிகளிடமிருந்தும், அறிவுமிக்கவர்களிடமிருந்தும் இக்காரியங்களை நீங்கள் மறைத்ததால் உங்களை வாழ்த்துகிறேன். ஆனால் சிறு குழந்தைகளைப்போன்ற மக்களுக்கு இச்செயல்களை நீர் காட்டியுள்ளீர். ஆம், பிதாவே, நீர் உண்மையாகவே இதைச் செய்ய விரும்பியதால் இதனைச் செய்துள்ளீர்கள்.

22 “எனக்கு எல்லாவற்றையும் என் பிதா தந்துள்ளார். மகன் யார் என்பது பிதாவைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. பிதா யார் என்பதை மகன் மட்டுமே அறிவார். மகன் அதனைத் தெரிவிக்கும்பொருட்டு தேர்ந்தெடுக்கும் மக்கள் மட்டுமே தந்தையைப்பற்றி அறிந்துகொள்வார்கள்” என்றார்.

23 பின் இயேசு சீஷர்களை நோக்கித் திரும்பினார். அவர்கள் அவரோடு தனித்திருந்தார்கள். இயேசு, “நீங்கள் இப்போது பார்க்கிற செயல்களைக் காணும்படியாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். 24 நீங்கள் இப்போது பார்க்கிற காரியங்களைக் காணவேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், மன்னர்களும் விரும்பினார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் அவர்கள் இக்காரியங்களைப் பார்க்கவில்லை. நீங்கள் இப்போது கேட்கிற செய்திகளைக் கேட்க வேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், அரசர்களும் விரும்பினார்கள். ஆனால் அவர்கள் இச்செய்திகளைக் கேட்கவில்லை” என்றார்.

நல்ல சமாரியன்

25 நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்து நின்றான். அவன் இயேசுவைச் சோதிக்க முயன்று கொண்டிருந்தான். அவன், “போதகரே, நித்தியமான வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

26 அவனை நோக்கி இயேசு, “சட்டத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? அங்கு எதை நீ வாசிக்கிறாய்?” என்றார்.

27 அம்மனிதன், “‘உனது தேவனாகிய கர்த்தரை நேசிப்பாயாக. உன் முழு நெஞ்சத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு வல்லமையோடும் உன் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்’” [b] என்றும், மேலும், “‘நீ உன்னை நேசிப்பது போலவே பிறரிடமும், அன்பு காட்ட வேண்டும்’j என்றும் எழுதப்பட்டுள்ளது” எனப் பதிலுரைத்தான்.

28 இயேசு அவனை நோக்கி, “உன் பதில் சரியானது. இதைச் செய்தால் நித்திய வாழ்வைப் பெறுவாய்” என்றார்.

29 அம்மனிதன் தான் வாழ்ந்து வரும் முறையே சரியானது என நிரூபிக்க விரும்பினான். எனவே அவன் இயேசுவிடம், “நான் நேசிக்க வேண்டிய பிற மக்கள் யார்?” என்று கேட்டான்.

30 அக்கேள்விக்குப் பதிலாக இயேசு: “ஒரு மனிதன் எருசலேமில் இருந்து எரிகோவிற்குப் பாதை வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தான். சில திருடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் அவனது ஆடையைக் கிழித்து அவனை அடித்தார்கள். அம்மனிதனைத் தரையில் வீழ்த்திவிட்டு அத்திருடர்கள் அங்கிருந்து சென்றார்கள். அவன் இறக்கும் தருவாயில் கிடந்தான்.

31 “ஒரு யூத ஆசாரியன் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் அம்மனிதனைக் கண்டபோதும் அவனுக்கு உதவும்பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான். 32 அடுத்ததாக, ஒரு லேவியன் அவ்வழியாக வந்தான். லேவியன் காயமுற்ற மனிதனைக் கண்டான். அவன் பக்கமாய் கடந்து சென்றான். ஆனால் அவனும் அவனுக்கு உதவும் பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான்.

33 “பின்னர் ஒரு சமாரியன் அவ்வழியாகப் பயணம் செய்தான். காயப்பட்ட மனிதன் கிடந்த இடத்துக்கு வந்தான். சமாரியன் அம்மனிதனைப் பார்த்தான். காயமுற்ற மனிதனுக்காகக் கருணைகொண்டான். 34 சமாரியன் அவனிடம் சென்று ஒலிவ எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் காயங்களில் ஊற்றினான். அம்மனிதனின் காயங்களைத் துணியால் சுற்றினான். சமாரியனிடம் ஒரு கழுதை இருந்தது. அவன் காயமுற்ற மனிதனை அக்கழுதையின் மேல் ஏற்றி, ஒரு விடுதிக்கு அழைத்து வந்தான். அங்கு சமாரியன் அம்மனிதனைக் கவனித்தான். 35 மறுநாள் இரண்டு வெள்ளிப் பணத்தை எடுத்து விடுதியில் வேலைசெய்த மனிதனிடம் கொடுத்தான். சமாரியன் அவனிடம், ‘காயமுற்ற இம்மனிதனைக் கவனித்துக்கொள். அதிகப் பணம் செலவானால் நான் திரும்ப வரும்போது அதனை உனக்குக் கொடுப்பேன்’” என்றான்.

36 பின்பு இயேசு, “இந்த மூன்று பேரிலும் கள்வரால் காயமுற்ற மனிதனுக்கு அன்பு காட்டியவன் யார் என்று நீ எண்ணுகிறாய்?” என்றார்.

37 நியாயசாஸ்திரி, “அவனுக்கு உதவியவன்தான்” என்று பதில் சொன்னான்.

இயேசு அவனிடம், “நீயும் சென்று பிறருக்கு அவ்வாறே செய்” என்றார்.

மரியாளும் மார்த்தாளும்

38 இயேசுவும், அவரது சீஷர்களும் பயணம் செய்கையில் இயேசு ஓர் ஊருக்குள் நுழைந்தார். மார்த்தாள் என்ற பெயருள்ள பெண் இயேசுவைத் தனது வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தாள். 39 மார்த்தாளின் சகோதரியின் பெயர் மரியாள். மரியாள் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து அவரது போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது சகோதரி மார்த்தாள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். 40 மிகுதியான வேலைகளைத் தானே செய்துகொண்டிருந்ததால் மார்த்தாள் எரிச்சலடைந்தாள். அவள் உள்ளே சென்று, “ஆண்டவரே வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நானே தனிமையாகச் செய்வதற்கு என் சகோதரி என்னை விட்டு வைத்திருப்பதை நீர் கவனிக்கவில்லையா? எனக்கு உதவும்படியாக அவளுக்குக் கூறுங்கள்” என்றாள்.

41 ஆனால் கர்த்தர் அவளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், “மார்த்தாளே மார்த்தாளே நீ பல வகையான காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டு, மனதைக் குழப்பிக்கொள்கிறாய். 42 ஒரே ஒரு காரியம் முக்கியமானது. மரியாள் மிகச்சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து ஒருபோதும் எடுக்கப்படமாட்டாது” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center