M’Cheyne Bible Reading Plan
உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்ப கொண்டுவந்தது
13 தாவீது தனது படையின் அனைத்து அதிகாரிகளோடும் பேசினான். 2 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “இது நல்ல யோசனை என்று நீங்கள் நினைத்தால், கர்த்தருடைய விருப்பமும் இருந்தால், இஸ்ரவேலின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நமது சகோதரர்களுக்குச் செய்தியை அனுப்புவோம். ஆசாரியர்களுக்கும், நகரங்களிலும், வெளி நிலங்களிலும், நமது சகோதரர்களோடு வாழும் லேவியர்களுக்கும் செய்தியை அனுப்புவோம். நம்முடன் வந்து சேர்ந்துகொள்ளும்படி செய்தி அவர்களுக்குச் சொல்லப்படட்டும். 3 நமது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை திரும்பவும் எருசலேமுக்குக் கொண்டுவருவோம். சவுல் அரசனாக இருந்தபோது உடன்படிக்கைப் பெட்டியை கொண்டுவர அக்கறை இல்லாமல் இருந்துவிட்டோம்” என்றான். 4 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தாவீது சொன்னதை ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் இதுவே செய்வதற் கேற்ற சரியான செயல் என்று எண்ணினர்.
5 எகிப்திலுள்ள சீகோர் ஆறுமுதல் லெபோ ஆமாத்தின் எல்லைவரையுள்ள அனைத்து ஜனங்களையும் தாவீது கூட்டினான். அவர்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டியை கீரியாத் யாரீமிலிருந்து கொண்டுவருவதற்காகக் கூடினார்கள். 6 தாவீதும் அவனோடு இருந்த மற்ற இஸ்ரவேலர்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். (பாலா என்பது கீரியாத்யாரீமின் இன்னொரு பெயர்) உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர அவர்கள் அங்கே போனார்கள். உடன்படிக்கைப் பெட்டி என்பது தேவனாகிய கர்த்தருடைய பெட்டி. அவர் கேருபீன்களுக்கு மேலே அமர்ந்திருக்கிறார். இப்பெட்டி கர்த்தருடைய நாமத்தாலேயே அழைக்கப்படுகிறது.
7 ஜனங்கள் உடன்படிக்கைப் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து தூக்கி வந்தனர். அதனைப் புதிய வண்டியில் வைத்தனர். ஊசாவும் அகியாவும் அவ்வண்டியை ஓட்டினார்கள்.
8 தாவீதும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக கொண்டாடினார்கள். அவர்கள் தேவனை புகழ்ந்து பாடினார்கள். அவர்கள் சுரமண்டலங்களையும், மேளங்களையும், கைத்தாளங்களையும், எக்காளங்களையும் இசைத்தனர்.
9 அவர்கள் கீதோனின் தானியத்தைப் பிரித்தெடுக்கும் களம் வந்தனர். வண்டியை இழுத்து வந்த மாடுகள் இடறின. உடன்படிக்கைப் பெட்டியானது ஏறக்குறைய விழுவது போலானது. ஊசா, அதனை ஒரு கையால் விழாமல் பிடித்துக்கொள்ள கையை நீட்டினான். 10 ஊசாவின் மேல் கர்த்தருக்கு பெருங் கோபம் உண்டாயிற்று, ஊசா பெட்டியைத் தொட்டதால் கர்த்தர் அவனைக் கொன்றுப்போட்டார். எனவே அவன் தேவனுக்கு முன்னால் மரித்துப் போனான். 11 தேவன் தனது கோபத்தை ஊசாவின் மேல் காட்டினார். இதனால் தாவீதுக்குக் கோபம் வந்தது. அன்று முதல் இன்றுவரை இந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது.
12 தாவீது அன்று தேவனுக்குப் பயந்தான். தாவீது, “தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை இங்கு என்னிடம் என்னால் கொண்டுவர முடியாது!” என்றான். 13 எனவே தாவீது தனது நகரத்திற்கு உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் செல்லவில்லை. அவன் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டில் விட்டுவிட்டுப் போனான். இவன் காத் நகரத்தைச் சேர்ந்தவன். 14 உடன்படிக்கைப் பெட்டியானது ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்களுக்கு இருந்தது. ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும், அவனுக்குரிய அனைத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
தாவீதின் அரசு வளர்ந்தது
14 ஈராம், தீரு எனும் நகரத்தின் அரசன், ஈராம், தாவீதுக்கு தூதுவனை அனுப்பியிருந்தான். அதோடு கேதுரு மரத்தடிகளையும், கல்தச்சர்களையும், மரவெட்டிகளையும் அனுப்பியிருந்தான். தாவீதிற்கு வீடு கட்டவே ஈராம் இவற்றை அனுப்பினான். 2 உண்மையிலேயே கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் அரசனாக்கியதை தாவீது அறிய முடிந்தது. தாவீதின் அரசாங்கத்தைக் கர்த்தர் பலமுள்ளதாகவும் பெரிதானதாகவும் ஆக்கினார். தேவன், தாவீதையும் இஸ்ரவேல் ஜனங்களையும் நேசித்ததால் இவ்வாறு செய்தார்.
3 எருசலேம் நகரத்தில் தாவீது மேலும் பெண்களை மணந்துக்கொண்டான். அவனுக்கு ஏராளமாக ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 4 இவை எருசலேமில் தாவீதின் பிள்ளைகளின் பெயர்களாகும்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 5 இப்கார், எலிசூவா, எல்பெலேத், 6 நோகா, நெப்பேக், யப்பியா, 7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் ஆகியோர்.
தாவீது பெலிஸ்தர்களை வெல்கிறான்
8 இஸ்ரவேலின் அரசனாகத் தாவீது தேர்ந்தெடுக்கப்பட்டதை பெலிஸ்தர்கள் அறிந்தனர். எனவே பெலிஸ்தர்கள் அனைவரும் தாவீதை தேடுவதற்காக வந்தார்கள். இதனை தாவீது கேள்விப்பட்டான். பிறகு தாவீது பெலிஸ்தர்களோடு போரிடச் சென்றான். 9 பெலிஸ்தர்கள், ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே உள்ள ஜனங்களைத் தாக்கி அவர்களது பொருட்களைக் கொள்ளை அடித்தனர். 10 தாவீது தேவனிடம், “நான் பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போரிடலாமா? நான் அவர்களைத் தோற்கடிக்கும்படி செய்வீரா?” என்று கேட்டான்.
அதற்குக் கர்த்தர் தாவீதிடம், “போ, நான் உன்னைப் பெலிஸ்தர்களை வெல்லும்படிச் செய்வேன்” என்று பதிலுரைத்தார்.
11 பிறகு, தாவீதும் அவனது ஆட்களும் பாகால் பிராசீம்வரை சென்றனர். அங்கே தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தர்களைத் தோற்கடித்தனர். தாவீது அவர்களிடம், “உடைந்த அணையிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதைப்போல, என் எதிரிகளிடமிருந்து தேவன் வெற்றிக் கண்டுள்ளார்! தேவன், இதனை என் மூலம் செய்தார்” என்றான். அதனால் அந்த இடம் பாகால்பிராசீம் என்ற பெயரைப் பெற்றது. 12 பெலிஸ்தர்கள் பாகால்பிராசீமில் தங்கள் விக்கிரங்களை விட்டு விட்டு ஓடிப் போனார்கள். அவற்றை எரித்துப்போடும்படி தாவீது கட்டளையிட்டான்.
பெலிஸ்தர் மீது மேலும் வெற்றிபெற்றது
13 பெலிஸ்தர்கள், மீண்டும் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே உள்ள ஜனங்களைத் தாக்கினார்கள். 14 தாவீது மீண்டும் தேவனிடம் ஜெபித்தான். தாவீதின் ஜெபத்திற்குத் தேவன் பதில் சொன்னார். தேவன், “நீ பெலிஸ்தர்களைத் தாக்கும்போது அவர்களுக்கு முன்பாகப் போகாதே. அதற்குப் பதிலாக அவர்களைச் சுற்றிக்கொண்டு செல். நறுமணம் வீசும் திரவங்கள் வடியும் மரங்களுக்குப்பின் மறைந்துக்கொள். 15 அவற்றின் மீது ஏறு. அதன் மேலிருந்து உன்னால் படைகளின் வருகை ஒலியைக் கேட்க முடியும். அப்போது, பெலிஸ்தர்களை நீ தாக்கு. நான் (தேவன்) உனக்கு முன்னால் போய் பெலிஸ்தர்களைத் தோற்கடிப்பேன்!” என்றார். 16 தேவன் சொன்னபடியே தாவீது செய்தான். அதனால் தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தரின் படைகளை வென்றனர். பெலிஸ்தர் வீரர்களை கிபியோன் முதல் காசேர்வரை அவர்கள் கொன்றார்கள். 17 எனவே, தாவீது அனைத்து நாடுகளிலும் பிரபலமானான். தாவீதிற்கு அனைத்து தேசங்களும் பயப்படும்படி கர்த்தர் செய்தார்.
1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியனான யாக்கோபு, உலகமெங்கும் பரவியுள்ள பன்னிரண்டு குடிகளுக்கும் வாழ்த்துக்களோடு எழுதிக்கொள்வது:
விசுவாசமும் ஞானமும்
2 எனது சகோதர சகோதரிகளே, உங்களுக்குப் பலவகையான தொந்தரவுகள் இருக்கும். ஆனால் இவை நிகழும்போது இதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். 3 ஏனென்றால், இத்தொந்தரவுகள் உங்களது விசுவாசத்தை சோதிக்கின்றன என நீங்கள் அறியுங்கள். இவை உங்களுக்குப் பொறுமையைத் தருகின்றது. 4 நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொறுமை வெளிப்படக்கடவது. அப்பொறுமை உங்களை, நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல் முழுமையும் நிறைவும் உள்ளவர்களாக ஆக்கித் தன் பணியை நிறைவு செய்யும்.
5 ஆனால் உங்களில் எவருக்கேனும் ஞானம் வேண்டுமானால் நீங்கள் தேவனிடம்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். தேவன் தாராளமானவர். கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் கொடுப்பதில் அவர் மகிழ்வடைகிறார். ஆகையால் தேவன் உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பார். 6 ஆனால் நீங்கள் தேவனைக் கேட்டுக்கொள்ளும்போது உங்களுக்கு அவர் மீது விசுவாசம் வேண்டும். தேவனை சந்தேகித்தல் கூடாது. சந்தேகப்படுகிறவன் கடலில் உள்ள அலைகளைப் போன்றவன். காற்று அந்த அலைகளை மேலும் கீழுமாகப் புரட்டும். 7-8 சந்தேகப்படுகிறவன் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட சிந்தனைகளை உடையவனாக இருக்கிறான். அவன் தான் செய்கின்ற எதைப் பற்றியும் தீர்மானிக்க முடியாதவன். இத்தகையவன் கர்த்தரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.
உண்மையான செல்வம்
9 தேவன் தன்னை செல்வந்தனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு ஏழைச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். 10 மேலும் தேவன் தன்னைப் பணிவுள்ளவனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு பணக்காரச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். எப்படி? “அவன் ஒரு காட்டுப் பூவைப்போல உதிர்ந்து போவான்” என்று தேவன் சொன்னார். 11 சூரியன் உதயமானதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடாகிறது. சூரிய வெப்பமானது செடிகளைக் காய வைக்கிறது. பூ உதிர்ந்துவிடுகின்றது. அந்த பூ அழகாக இருந்தது. ஆனால் அது வாடிப்போய் விடுகிறது. பணக்காரனும் அப்படித்தான். அவன் தன் வியாபாரத்துக்காகத் திட்டமிடும்போது இறந்துபோவான்.
தேவனிடமிருந்து சோதனைகள் வருவதில்லை
12 சோதிக்கப்படும்போது உறுதியாய் இருக்கிற மனிதன் மிகுந்த பாக்கியவான் ஆகிறான். ஏனெனில் தான் நேசிக்கிறவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த வாழ்வு என்னும் பரிசை, சோதனையில் தேறிவிடும்போது அவன் பெறுவான். 13 ஒரு மனிதன் சோதிக்கப்படும்போது, “அந்த சோதனை தேவனிடமிருந்து உண்டாகிறது” என்று அவன் சொல்லக் கூடாது. பொல்லாங்கினால் தேவன் சோதிக்கப்படுவதில்லை. மேலும் தேவன் ஒருவரையும் சோதிப்பதும் இல்லை. 14 அவனவன் தனது சுய ஆசைகளாலேயே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். 15 இந்த ஆசையானது கருத்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது. மேலும் பாவம் முழுமையடையும்போது மரணத்தைத் தருகிறது.
16 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, ஏமாற்றப்படாமல் இருங்கள். 17 எல்லா நன்மைகளும் தேவனிடமிருந்தே வருகின்றன. ஒவ்வொரு முழுமையான வரமும் அவரிடமிருந்தே வருகின்றது. இவை, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை உருவாக்கிய பிதாவிடமிருந்தே வருகின்றன. அவர் மாறுவதில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கிறார். 18 உண்மையான வார்த்தை மூலமே தேவன் நமக்கு வாழ்க்கையைத் தர முடிவு செய்துள்ளார். அவரால் படைக்கப்பட்ட அனைத்திலும் நம்மையே முக்கியமானவையாகக் கருதுகிறார்.
கவனிப்பதும் கீழ்ப்படிவதும்
19 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, கேட்பதில் தீவிரமாகவும், பேசுவதில் பொறுமையாகவும், கோபிப்பதில் தாமதமாகவும் இருங்கள். 20 ஒருவனின் கோபமானது, அவனை தேவன் விரும்புகிற நல் வழியில் நடத்தாது. 21 எனவே உங்களைச் சுற்றி மிகுந்த அளவில் இருக்கிற எல்லாவிதமான அழுக்கையும், தீமையையும் நீங்கள் ஒழித்துவிட்டு உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற வல்ல போதனையைப் பணிவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.
22 தேவன் சொல்கிறபடி செய்கிறவர்களாக இருங்கள். போதனையைக் கேட்கிறவர்களாக மட்டுமே இருந்து தம்மைத் தாமே வஞ்சித்துக்கொள்கிறவர்களாக இருக்காதீர்கள். 23 ஒருவன் தேவனுடைய போதனையைக் கேட்டுவிட்டு எதுவும் செயல்படாமல் இருந்தால் அது ஒருவன் கண்ணாடியின் முன் நின்று தன் பிம்பத்தைத் தானே பார்த்துக்கொள்வது போன்றது ஆகும். 24 அவன் தன்னைத் தானே பார்த்து, அந்த இடம் விட்டுப் போனபிறகு தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். இதுவும் அதைப் போன்றதுதான். 25 முழுமையான தேவனுடைய சட்டத்தை ஆழமாக ஆராய்ந்து, கேட்டு மறந்துவிடுகிறவனாக இல்லாமல் தொடர்ந்து அதைப் படித்து அதன்படி நடக்கிறவன் தான் செய்வதில் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறான். தேவனுடைய சட்டம் மக்களை விடுதலையடையச் செய்கிறது.
தேவனை வழிபடுகிற உண்மையான வழி
26 தெய்வ பக்தி உள்ளவன் என ஒருவன் தன்னைப்பற்றி எண்ணிக்கொள்ளலாம். ஆனால் தன் நாக்கை அவன் அடக்கிக்கொள்ளவில்லையெனில், தன்னைத்தானே அவன் முட்டாளாக்கிக்கொள்கிறான். அவன் “தெய்வ பக்தி” பயனற்றதாக இருக்கின்றது. 27 பிதாவாகிய தேவன் தூய்மையானதும் குற்றமற்றதுமென எண்ணுகிற வழிபாடு என்பது உதவி தேவைப்படுகிற விதவைகள், அனாதைகள் ஆகியோர்மேல் அக்கறை கொள்வதும் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்வதுமே ஆகும்.
பழுத்த கனியின் தரிசனம்
8 கர்த்தர் இதனை எனக்குக் காட்டினார். நான் கோடைகால கனியுள்ள கூடையைப் பார்த்தேன். 2 “ஆமோஸ் நீ என்ன பார்க்கிறாய்?” என்று என்னிடம் கேட்டார்.
நான், “ஒரு கோடைக்கனியுள்ள கூடை” என்றேன்.
பிறகு கர்த்தர் என்னிடம், “எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி அவர்களின் பாவங்களை நான் கவனிக்காமல் விடமாட்டேன். 3 ஆலயப் பாடல்கள் மரணப் பாடல்களாக மாறும். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை கூறினார். எல்லா இடங்களிலும் மரித்த உடல்கள் கிடக்கும். மௌனமாக, ஜனங்கள் மரித்த உடல்களை எடுத்துப் போய் குவியலாக எறிவார்கள்” என்றார்.
இஸ்ரவேல் வியாபாரிகள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள்
4 எனக்குச் செவி கொடுங்கள்! நீங்கள் உதவியற்ற ஜனங்கள் மீது நடக்கிறீர்கள்:
நீங்கள் இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களை அழிக்க முயற்சி செய்கிறீர்கள்.
5 வியாபாரிகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்:
“நாங்கள் தானியம் விற்க அமாவாசை எப்பொழுது முடியும்?
நாங்கள் கோதுமையை விற்கக் கொண்டு வர
ஓய்வுநாள் எப்பொழுது முடியும்?
எங்களால் விலையை ஏற்றி அளவைக் குறைக்க முடியும்.
அளவுக் கருவிகளை நமக்கு அதிகம் லாபம் கிடைக்கிற விதத்தில் மாற்றி ஜனங்களை ஏமாற்றுவோம்.
6 ஏழை ஜனங்களால் தம் கடன்களைச் செலுத்த முடியாது,
எனவே நாங்கள் அவர்களை அடிமைகளாக வாங்குவோம்.
நாங்கள் ஒரு ஜோடி பாதரட்சைக்குரிய பணத்தால்
அந்த உதவியற்ற ஜனங்களை வாங்குவோம்.
ஓ, நாங்கள் நிலத்தில் சிதறிக் கிடக்கிற
கோதுமைகளை விற்க முடியும்.”
7 கர்த்தர் ஒரு வாக்குறுதி செய்தார். அவர் யாக்கோபின் பெருமை, என்ற தமது நாமத்தை, பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார்.
“நான் அந்த ஜனங்கள் செய்தவற்றை மறக்கமாட்டேன்.
8 அவற்றால் முழு நாடும் நடுங்கும்.
இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும்
மரித்துப்போனவர்களுக்காக அழுவார்கள்.
முழு நாடும் எகிப்திலுள்ள நைல் நதியைப் போன்று உயர்ந்து தாழும்.
இந்த நாடு தடுமாறிப் போகும்.”
9 கர்த்தர் இவற்றையும் கூறினார்:
“அந்த வேளையில் நான் சூரியனை நடுப்பகலில் மறையச் செய்வேன்.
நான் பகல் வேளையில் பூமியை இருளச் செய்வேன்.
10 நான் உங்கள் விடுமுறை நாட்களை மரித்தவர்களுக்காக ஒப்பாரி வைக்கும் நாளாக்குவேன்.
உங்கள் பாடல்கள் எல்லாம் மரித்த ஜனங்களுக்காகப் பாடப்படும் சோகப் பாடல்களாகும்.
நான் ஒவ்வொருவர் மீதும் துக்கத்திற்கான ஆடையை அணிவிப்பேன்.
நான் எல்லாத் தலைகளையும் வழுக்கையாக்குவேன்.
நான், மரித்துப்போன ஒரே மகனுக்காக அழும் ஒப்பாரியைப் போன்று ஆக்குவேன்.
இது ஒரு மிகவும் கசப்பான முடிவாயிருக்கும்.”
தேவனுடைய வார்த்தை கிடைக்காத கொடிய பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது
11 கர்த்தர் கூறுகிறார்:
“பார், தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்.
ஜனங்கள் அப்பத்துக்காகப் பசித்திருக்கமாட்டார்கள்.
தண்ணீருக்காகத் தவித்திருக்கமாட்டார்கள்.
இல்லை, கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளுக்காக ஜனங்கள் பசியோடு இருப்பார்கள்.
12 ஜனங்கள் சவக்கடலிலிருந்து மத்தியத் தரைக் கடலுக்கும்
வடக்கிலிருந்து கிழக்குக்கும் அலைவார்கள்.
ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக
அங்கும் இங்கும் அலைவார்கள்.
ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.
13 அந்த நேரத்தில் அழகான ஆண்களும் பெண்களும் தாகத்தால்
பலவீனம் அடைவார்கள்.
14 அந்த ஜனங்கள் சமாரியாவின் பாவத்தின் பேரில் வாக்குறுதி செய்தனர்.
அவர்கள், ‘தாணே, உன் தேவனுடைய உயிரின் மேல் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள்.
மேலும் அவர்கள்,
‘பெயர்செபாவின் தேவனுடைய உயிரின்மேல் நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வீழ்வார்கள்.
அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.”
யோவானின் போதனை(A)
3 அது திபேரியு இராயன் அரசாண்ட பதினைந்தாவது வருஷமாயிருந்தது. சீசருக்குக் கீழான மனிதர்களின் விவரமாவது;
பொந்தியு பிலாத்து யூதேயாவை ஆண்டான்.
ஏரோது கலிலேயாவை ஆண்டான்.
ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயாவையும்
திராகொனித்தி நாட்டையும் ஆண்டான்.
2 அன்னாவும், காய்பாவும் தலைமை ஆசாரியராக இருந்தனர். அப்போது சகரியாவின் மகனாகிய யோவானுக்கு தேவனிடமிருந்து ஒரு கட்டளை வந்தது. யோவான் வனாந்தரத்தில் வாழ்ந்து வந்தான். 3 யோர்தான் நதியைச் சுற்றிலுமுள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் யோவான் சென்றான். அவன் மக்களுக்குப் போதித்தான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியாக, இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுமாறு யோவான் மக்களுக்குக் கூறினான். 4 இது ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளின் நிறைவேறுதலாக அமைந்தது:
“வனாந்தரத்தில் யாரோ ஒரு மனிதன் கூவிக்கொண்டிருக்கிறான்:
‘கர்த்தருக்கு வழியைத் தயார் செய்யுங்கள்.
அவருக்குப் பாதையை நேராக்குங்கள்.
5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்.
ஒவ்வொரு மலையும் குன்றும் மட்டமாக்கப்படும்.
திருப்பம் மிக்க பாதைகள் நேராக்கப்படும்.
கரடுமுரடான பாதைகள் மென்மையாகும்.
6 ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய இரட்சிப்பை அறிவான்.’” (B)
7 யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெறும்பொருட்டு மக்கள் வந்தனர். யோவான் அவர்களை நோக்கி, “நீங்கள் விஷம் பொருந்திய பாம்புகளைப் போன்றவர்கள். வரவிருக்கும் தேவனுடைய கோபத்தினின்று ஓடிப் போக யார் உங்களுக்கு எச்சரிக்கை செய்தனர்? 8 உங்கள் இதயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டவல்ல செயல்களை நீங்கள் செய்தல் வேண்டும். ‘ஆபிரகாம் எங்கள் தந்தை’ என்று பெருமை பாராட்டிக் கூறாதீர்கள். தேவன் இந்தப் பாறைகளில் இருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உருவாக்கக்கூடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். 9 மரங்களை வெட்டும்படிக்குக் கோடாரி வைக்கப்பட்டுள்ளது. நல்ல பழங்களைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும்” என்றான்.
10 மக்கள் யோவானை நோக்கி, “நாங்கள் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டனர்.
11 அவர்களுக்கு யோவான், “உங்களிடம் இரண்டு மேலாடைகள் இருந்தால், ஒரு மேலாடைகூட இல்லாத மனிதனுக்கு ஒன்றைக் கொடுங்கள். உங்களிடம் உணவிருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று பதிலுரைத்தான்.
12 வரி வசூலிப்போரும்கூட யோவானிடம் வந்தனர். அவர்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினர். அவர்கள் யோவானிடம், “போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
13 அவர்களிடம் யோவான், “எந்த அளவுக்கு வரி வசூலிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு வரி வாங்குவதன்றி அதிகமாக வசூலிக்காதீர்கள்” என்று கூறினான்.
14 வீரர்கள் யோவானை நோக்கி, “எங்களைப்பற்றி என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர்.
அவர்களுக்கு யோவான், “உங்களுக்குப் பணம் தரும்பொருட்டு மக்களை ஒருபோதும் நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள். யாரைக்குறித்தும் பொய் சொல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறினான்.
15 எல்லா மக்களும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருந்தனர். எனவே யோவானைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் கொண்டனர். அவர்கள், “இவன் கிறிஸ்துவாக இருக்கக்கூடும்” என்று எண்ணினர்.
16 அவர்கள் அனைவரிடமும் பேசிய யோவான், “நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப் பின்னால் வருகிறவரோ நான் செய்வதைக் காட்டிலும் அதிகமாகச் செய்ய வல்லவர். அவரது மிதியடிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் ஆவியானவராலும், அக்கினியாலும், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 17 தானியங்களைச் சுத்தமாக்குவதற்குத் தயாராக அவர் வருவார். பதரிலிருந்து தானியத்தைப் பிரித்துக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவர் எரிப்பார். அணைக்க முடியாத நெருப்பில் அவற்றைச் சுட்டெரிப்பார்,” என்று பதில் கூறினான். 18 யோவான் நற்செய்தியைத் தொடர்ந்து போதித்து, மக்களுக்கு உதவும்படியான மற்ற பல காரியங்களையும் சொல்லி வந்தான்.
யோவானுக்கு ஏற்பட்ட உபத்திரவம்
19 ஆளுநராகிய ஏரோதுவை யோவான் கண்டித்தான். ஏரோதுவின் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை அவன் தகாத முறையில் சேர்த்துக்கொண்டதை யோவான் கண்டனம் செய்தான். ஏரோது செய்த பல தீய செயல்களையும் யோவான் கண்டித்தான். 20 எனவே ஏரோது இன்னொரு தீய காரியத்தையும் செய்தான். அவன் யோவானை சிறையிலிட்டான். ஏரோது செய்த பல தீய காரியங்களோடு கூட இதுவும் ஒரு தீய செயலாக அமைந்தது.
இயேசு ஞானஸ்நானம் பெறுதல்(C)
21 யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு அவனால் எல்லா மக்களும் ஞானஸ்நானம் பெற்றனர். இயேசுவும் அப்போது அங்கு வந்து அவனிடம் ஞானஸ்நானம் பெற்றார். இயேசு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது வானம் திறந்தது. 22 பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார். ஆவியானவர் ஒரு புறாவைப்போலத் தோற்றமளித்தார். அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது. அது “நீர் என் அன்புள்ள குமாரன். நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.
யோசேப்பின் குடும்ப வரலாறு(D)
23 இயேசு போதிக்க ஆரம்பித்தபோது ஏறக்குறைய முப்பது வயது நிரம்பியவராக இருந்தார். மக்கள் இயேசுவை யோசேப்பின் மகன் என்றே எண்ணினர்.
யோசேப்பு ஏலியின் மகன்.
24 ஏலி மாத்தாத்தின் மகன்.
மாத்தாத் லேவியின் மகன்.
லேவி மெல்கியின் மகன்.
மெல்கி யன்னாவின் மகன்.
யன்னா யோசேப்பின் மகன்.
25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன்.
மத்தத்தியா ஆமோஸின் மகன்.
ஆமோஸ் நாகூமின் மகன்.
நாகூம் எஸ்லியின் மகன்.
எஸ்லி நங்காயின் மகன்
26 நங்காய் மாகாத்தின் மகன்.
மாகாத் மத்தத்தியாவின் மகன்.
மத்தத்தியா சேமேயின் மகன்.
சேமேய் யோசேப்பின் மகன்.
யோசேப்பு யூதாவின் மகன்.
27 யூதா யோவன்னாவின் மகன்.
யோவன்னா ரேசாவின் மகன்.
ரேசா செரூபாபேலின் மகன்.
செரூபாபேல் சலாத்தியேலின் மகன்.
சலாத்தியேல் நேரியின் மகன்.
28 நேரி மெல்கியின் மகன்.
மெல்கி அத்தியின் மகன்.
அத்தி கோசாமின் மகன்.
கோசாம் எல்மோதாமின் மகன்.
எல்மோதாம் ஏரின் மகன்.
29 ஏர் யோசேயின் மகன்.
யோசே எலியேசரின் மகன்.
எலியேசர் யோரீமின் மகன்.
யோரீம் மாத்தாத்தின் மகன்.
மாத்தாத் லேவியின் மகன்.
30 லேவி சிமியோனின் மகன்.
சிமியோன் யூதாவின் மகன்.
யூதா யோசேப்பின் மகன்.
யோசேப்பு யோனானின் மகன்.
யோனான் எலியாக்கீமின் மகன்.
31 எலியாக்கீம் மெலெயாவின் மகன்.
மெலெயா மயினானின் மகன்.
மயினான் மத்தாத்தாவின் மகன்.
மத்தாத்தா நாத்தானின் மகன்.
நாத்தான் தாவீதின் மகன்.
32 தாவீது ஈசாயின் மகன்.
ஈசாய் ஓபேதின் மகன்.
ஓபேத் போவாசின் மகன்.
போவாஸ் சல்மோனின் மகன்.
சல்மோன் நகசோனின் மகன்.
33 நகசோன் அம்மினதாபின் மகன்.
அம்மினதாப் ஆராமின் மகன்.
ஆராம் எஸ்ரோமின் மகன்.
எஸ்ரோம் பாரேசின் மகன்.
பாரேஸ் யூதாவின் மகன்.
34 யூதா யாக்கோபின் மகன்.
யாக்கோபு ஈசாக்கின் மகன்.
ஈசாக்கு ஆபிரகாமின் மகன்.
ஆபிரகாம் தேராவின் மகன்.
தேரா நாகோரின் மகன்.
35 நாகோர் சேரூக்கின் மகன்.
சேரூக் ரெகூவின் மகன்.
ரெகூ பேலேக்கின் மகன்.
பேலேக் ஏபேரின் மகன்.
ஏபேர் சாலாவின் மகன்.
36 சாலா காயினானின் மகன்.
காயினான் அர்பக்சாத்தின் மகன்.
அர்பக்சாத் சேமின் மகன்.
சேம் நோவாவின் மகன்.
நோவா லாமேக்கின் மகன்.
37 லாமேக் மெத்தூசலாவின் மகன்.
மெத்தூசலா ஏனோக்கின் மகன்.
ஏனோக் யாரேதின் மகன்.
யாரேத் மகலாலெயேலின் மகன்.
மகலாலெயேல் கேனானின் மகன்.
கேனான் ஏனோஸின் மகன்.
38 ஏனோஸ் சேத்தின் மகன்.
சேத் ஆதாமின் மகன்.
ஆதாம் தேவனின் மகன்.
2008 by World Bible Translation Center