Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 9-10

இஸ்ரவேலர்களின் பெயர்கள் எல்லாம் குடும்ப வரலாற்றில் சேர்க்கப்பட்டது. அந்த குடும்பங்களின் வரலாறு இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

எருசலேம் ஜனங்கள்

யூதாஜனங்கள் கைதிகளாக்கப்பட்டு பாபிலோனுக்குப் பலவந்தமாகக் கொண்டுப் போகப்பட்டார்கள். அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாதபடியால் அந்த இடத்துக்குக் கொண்டுப் போகப்பட்டார்கள். சில இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயத்தில் பணியாற்றும் வேலையாட்களும் முதலில் அங்கு திரும்பி வந்து தங்கள் சொந்த நிலங்களிலும் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.

எருசலேமில் வாழ்ந்த யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே ஆகிய கோத்திரங்களைச் சார்ந்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:

ஊத்தாய் அம்மியூதியின் மகன். அம்மியூதி உம்ரியின் மகன். உம்ரி இம்ரியின் மகன். இம்ரி பானியின் மகன். பானி பேரேசின் சந்ததியைச் சேர்ந்தவன். பேரேஸ் யூதாவின் மகன்.

எருசலேமில் வாழ்ந்த சேலாவின் ஜனங்கள்: அசாயா மூத்த மகன். இவனுக்கும் மகன்கள் இருந்தனர்.

எருசலேமில் வாழ்ந்த சேராவின் ஜனங்கள், அவர்கள் யெகுவேலும், அவர்களின் உறவினர்களும். அவர்கள் மொத்தம் 690 பேர்.

எருசலேமில் வாழ்ந்த பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள்: சல்லு மெசுல்லாவின் மகன். மெசுல்லா ஓதாவியாவின் மகன், ஓதாவியா அசெனூவாவின் மகன். இப்னெயா எரோகாமின் மகன். ஏலா ஊசியின் மகன். ஊசி மிக்கிரியின் மகன். மெசுல்லாம் செபதியாவின் மகன். செபதியா ரேகுவேலின் மகன்.ரேகுவேல் இப்னியாவின் மகன். பென்யமீன் குடும்ப வரலாறானது, அவர்கள் 956 பேர் எருசலேமில் வாழ்ந்ததாகக் கூறுகின்றது. அவர்கள் அனைவரும் குடும்பத் தலைவர்கள்.

10 எருசலேமில் வாழ்ந்த ஆசாரியர்கள்: யெதாயா, யோயாரீப், யாகின், 11 அசரியா. அசரியா இல்க்கியாவின் மகன். இல்க்கியா மெசுல்லாவின் மகன். மெசுல்லா சாதோக்கின் மகன். சாதோக் மெராயோதின் மகன். மெராயோது அகிதூபின் மகன். இவன் தேவனுடைய ஆலயத்தில் மிக முக்கியமான அதிகாரியாக இருந்தான். 12 அதோடு எரோகாமின் மகனான அதாயாவும் அங்கே வாழ்ந்தான். எரோகாம் பஸ்கூவின் மகன். பஸ்கூ மல்கியாவின் மகன். ஆதியேலின் மகனான மாசாயும் அங்கிருந்தான். ஆதியேல் யாசெராவின் மகன். யாசெரா மெசுல்லாமின் மகன். மெசுல்லாம் மெசிலேமித்தின் மகன். மெசிலேமித் இம்மெரின் மகன்.

13 அங்கே 1,760 ஆசாரியர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், தேவனுடைய ஆலயத்தில் பணிசெய்யும் பொறுப் பாளர்களாகவும் இருந்தனர்.

14 எருசலேமில் வாழ்ந்த லேவியர் கோத்திரத்தைச் சேர்ந்த ஜனங்களின் பட்டியல்: செமாயா அசூபின் மகன். அசூப் அஸ்ரீகாமுவின் மகன். அஸ்ரீகாமு அசபியாவின் மகன். அசபியா மெராரியின் சந்ததியைச் சேர்ந்தவன். 15 பக்பக்கார், ஏரேஸ், காலால், மத்தானியா ஆகியோரும் எருசலேமில் வாழ்ந்து வந்தார்கள். மத்தானியா மிக்காவின் மகன். மிக்கா சிக்ரியின் மகன். சிக்ரி ஆசாப்பின் மகன். 16 ஒபதியா செமாயாவின் மகன். செமாயா காலாலின் மகன். காலால் எதுத்தூனின் மகன். எருசலேமில் ஆசாவின் மகனான பெர்கியா வாழ்ந்தான். ஆசா எல்க்கானாவின் மகன். எல்க்கானா நெத்தோபாத்தியரின் சிறு நகரங்களில் வாழ்ந்தான்.

17 எருசலேமில் வாழ்ந்த காவலாளர்கள்: சல்லூம், அக்கூப், தல்மோன், அகிமான் ஆகியோரும் அவர்களது உறவினருமே. அவர்களின் தலைவனாகச் சல்லூம் இருந்தான். 18 சிலர் கிழக்கே இருக்கிற இராஜாவின் வாசலைக் காவல் காத்தனர். இவர்கள் லேவியரின் கோத்திரத்தின் வழிவந்த காவல்காரர்கள். 19 சல்லூம், கோரேயின் மகன். கோரே, எபியாசாவின் மகன். எபியாசா, கோராகின் மகன், சல்லூம் மற்றும் அவனது சகோதரர்கள் வாசலைக் காத்தனர். அவர்கள் கோராகின் வம்சத்தில் வந்தவர்கள். அவர்களுக்குப் பரிசுத்தக் கூடார வாசலைக் காவல் காப்பது வேலை ஆயிற்று. அதனை அவர்கள் அவர்களின் முற்பிதாக்கள் செய்தது போன்றே செய்து வந்தனர். 20 முன்பு பினேகாசு வாசலைக் காக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தான். பினேகாசு, எலியாசாரின் மகன். கர்த்தர் பினேகாசோடு இருந்தார். 21 மெசெலமியாவின் மகனான சகரியா பரிசுத்தக் கூடாரத்தின் வாயிலின் காவல்காரனாய் இருந்தான்.

22 பரிசுத்தக் கூடார வாசலைக் கண்காணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 212. அவர்களின் பெயர்கள் சிறு நகரங்களின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. நம்பிக்கைக்கு உரிய அவர்களை தாவீதும் சீயர் ஆகிய சாமுவேலும் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தார்கள். 23 இந்த வாயில் காவலர்களும் அவர்களது சந்ததியினரும் கர்த்தருடைய ஆலயமாகிய பரிசுத்தக் கூடாரத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்று வந்தனர். 24 வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு பக்கமும் 4 வாசல்கள் இருந்தன. 25 சில நேரங்களில் வாயில் காவலர்களின் உறவினர்கள் சிறு நகரங்களிலிருந்து வந்து அவர்களுக்குக் காவல் பணிக்கு உதவி செய்தனர். அவர்கள் வருகைதந்த ஒவ்வொரு முறையும் ஏழு நாட்கள் வாயில் காவலர்களுக்கு உதவினார்கள்.

26 நான்கு வாசல் காவலர்களுக்கும், நான்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் லேவியர்களாக இருந்தனர். அவர்களுக்கு தேவனுடைய ஆலயத்தின் பண்டகச்சாலை மற்றும் கருவூலங்களைக் காக்கும் பொறுப்பு இருந்தது. 27 அவர்கள் தேவனுடைய ஆலயத்தில் இரவில் தங்கியிருந்து காத்தனர். ஒவ்வொரு நாள் காலையிலும் தேவாலயத்தைத் திறப்பதும் அவர்களின் வேலையாய் இருந்தது.

28 சில வாசல் காவலர்களுக்கு, ஆலய பணிக்குரிய பாத்திரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருந்தது. அவர்கள் அவற்றை எண்ணிப்பார்த்தே வெளியே எடுப்பதும் உள்ளே வைப்பதுமாய் இருந்தனர். 29 வேறு சில வாசல் காவலர்கள், மற்ற இருக்கை போன்றவற்றையும் பரிசுத்தமான பாத்திரங்களையும் கவனித்துக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோடு மெல்லிய மா, திராட்சை ரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்கள் போன்றவற்றுக்குப் பொறுப்பாளிகளாயினர். 30 வாசனைப் பொருட்களால் சிறப்பான தைலத்தைக் கலக்கும் வேலையைச் சில ஆசாரியர்கள் செய்து வந்தனர்.

31 ஒரு லேவியனின் பெயர் மத்தித்தியா. பலியிடுவதற்காக அப்பம் சுடுகிற வேலை அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. சல்லூமின் மூத்த மகன் மத்தித்தியா. சல்லூம், கோரகியா குடும்பத்தில் வந்தவன். 32 சில வாசல் காப்பவர்கள் கோரகியா குடும்பத்தினர். அவர்களுக்கு ஓய்வு நாள்தோறும் அப்பங்களைத் தயாரித்து மேஜையின் மேல் அடுக்கும் பணி கொடுக்கப்பட்டது.

33 லேவியர்களில் பாடுபவர்களும் குடும்பத் தலைவர்களும் ஆலயத்தில் உள்ள அறைகளில் தங்கி இருந்தனர். அவர்கள் வேறு வேலைகளைச் செய்யமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இரவும் பகலும் ஆலயத்தில் வேலை இருந்தது.

34 இந்த லேவியர்கள் அனைவரும் அவரவர்கள் குடும்பங்களுக்கு தலைவர்களாக இருந்தனர். தம் குடும்ப வரலாற்றில் குடும்பத் தலைவர்களாக அவர்கள் விவரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எருசலேமில் வாழ்ந்தார்கள்.

சவுல் அரசனின் குடும்ப வரலாறு

35 யெகியேல், கிபியோனின் தந்தை. யெகியேல், கிபியோன் நகரில் வாழ்ந்தான். யெகியேலின் மனைவியின் பெயர் மாக்காள். 36 யெகியேலின் மூத்த மகனின் பெயர் அப்தோன். மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப், 37 கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் ஆகியோர். 38 மிக்லோத், சிமியாமின் தந்தை. யெகியேலின் குடும்பம், அவர்களது உறவினர்களோடு எருசலேமில் வாழ்ந்து வந்தது.

39 நேர் கீஸின் தந்தை. கீஸ் சவுலின் தந்தை. சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரைப் பெற்றான்.

40 யோனத்தானின் மகன் மெரிபால். மெரிபால் மீகாவின் தந்தை.

41 மீகாவிற்கு பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் எனும் மகன்கள் இருந்தனர். 42 ஆகாஸ் யாதாவின் தந்தை. யாதா யாராகின் தந்தை. யாராக் என்பவன் அலெமேத், அஸ்மவேத், சிம்ரி ஆகிய மகன்களைப் பெற்றான். சிம்ரி மோசாவின் தந்தை. 43 மோசா பினியாவின் தந்தை. பினியா ரப்பாயாவின் தந்தை. ரப்பாயா எலியாசாவின் தந்தை. எலியாசா ஆத்சேலின் தந்தை.

44 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகும். இவர்கள் அனைவரும் ஆத்சேலின் பிள்ளைகள்.

சவுல் அரசனின் மரணம்

10 பெலிஸ்தர்கள், இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தோற்று ஓடிப்போனார்கள். கில்போவா மலையில் அவர்கள் வெட்டுண்டு மரித்துப்போனார்கள். சவுலையும், அவனது மகன்களையும் பெலிஸ்தர்கள் தொடர்ந்து துரத்திக்கொண்டு போனார்கள். அவர்கள், இவர்களைப் பிடித்து கொன்றார்கள். பெலிஸ்தர்கள் சவுலின் மகன்களான யோனத்தான், அபினதாப், மல்கிசூவா ஆகியோரைக் கொன்றனர். சவுலைச் சுற்றி போர் பலமடைந்தது. வில் வீரர் அவனை அம்பால் எய்து காயப்படுத்தினார்கள்.

பிறகு சவுல் அவனது ஆயுதந்தாங்கியிடம், “உனது வாளை எடு. அதனால் என்னைக் கொல். அதனால் அந்த அந்நியர்கள் என்னைக் காயப்படுத்தமாட்டார்கள். அவர்கள் வரும்போது என்னைக் கேலிச் செய்யமாட்டார்கள்” என்றான்.

ஆனால், சவுலின் ஆயுதந்தாங்கி பயந்தான். அவன் சவுலைக் கொல்ல மறுத்தான். பிறகு சவுல், தனது சொந்த வாளையே தன்னைக் கொல்வதற்கு பயன்படுத்தினான். சவுல் மரித்துப்போனதை ஆயுதந்தாங்கி பார்த்தான். பின் அவனும் தற்கொலை செய்துக்கொண்டான். அவனும் சவுலைப் போலவே தன் வாளின் நுனியிலே விழுந்து மரித்துப் போனான். இவ்வாறு சவுலும், அவனது மூன்று மகன்களும் மரித்துப்போனார்கள். சவுலின் குடும்பம் முழுவதுமே மொத்தமாக மரித்துப்போனது.

அப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் அனைவரும் தமது சொந்த படை ஓடுவதைக் கண்டனர். சவுலும், அவனது மகன்களும் மரித்துப் போனதைக் கண்டனர். எனவே, இவர்கள் தமது நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள். இவர்கள் விட்டுப்போன இடங்களில், பெலிஸ்தர்கள் வந்து நுழைந்தனர். அவ்விடங்களிலே பெலிஸ்தர்கள் குடியேறினார்கள்.

மறுநாள், பெலிஸ்தர்கள் மரித்துப்போனவர்களின் உடலில் இருந்து விலைமதிப்புடைய பொருட்களை எடுக்கவந்தனர். அப்போது அவர்கள் சவுல் மற்றும் அவனது மகன்களின் உடல்களைக் கில்போவா மலையில் கண்டுபிடித்தனர். பெலிஸ்தர்கள் சவுலின் உடம்பிலுள்ள சில பொருட்களை எடுத்துக்கொண்டனர். அவர்கள் சவுலின் தலையையும் ஆயுதங்களையும் எடுத்தனர். அவர்கள் தூதுவர்களை அனுப்பி தங்கள் நாடுகளில் உள்ள ஜனங்களுக்கும், பொய்த் தெய்வங்களுக்கும் செய்தியை பரப்பினார்கள். 10 பெலிஸ்தர்கள், சவுலின் ஆயுதங்களைத் தமது பொய்த் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்தனர். சவுலின் தலையைத் தாகோன் ஆலயத்திலே தொங்கவிட்டனர்.

11 பெலிஸ்தர்கள் சவுலுக்குச் செய்தவற்றைப் பற்றி கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் கேள்விப்பட்டனர். 12 சவுல் மற்றும் அவனது மகன்களின் உடல்களைக் கைப்பற்ற தைரியமுள்ள கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் போனார்கள். அவற்றை எடுத்துவந்தனர். அவர்கள், சவுல் மற்றும் மகன்களின் எலும்புகளை யாபேசில் ஒரு பெரிய மரத்தடியில் அடக்கம்செய்தனர். பின் ஏழு நாட்கள் உபவாசமிருந்தார்கள்.

13 சவுல் கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லாதபடியால் அவன் கொல்லப்பட்டான். சவுல் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. 14 அவன் தன் எதிர்காலத்தைப் பற்றி கர்த்தரிடம் கேட்பதற்குப் பதிலாக குறி சொல்வோரை நாடினான். அதனால்தான் கர்த்தர் அவனைக் கொன்று ஆட்சியை ஈசாயின் மகனான தாவீதிடம் தந்தார்.

எபிரேயர் 12

இயேசுவின் முன்மாதிரியை நாமும் பின்பற்றுவோம்

12 நம்மைச் சுற்றிலும் விசுவாசமுடையவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். விசுவாசம் என்றால் என்ன பொருள் என்று அவர்களது வாழ்க்கை நமக்குக் கூறுகின்றது. நாமும் அவர்களைப்போல் வாழவேண்டும். நம் முன் நடக்கும் பந்தயத்தில் நாமும் பங்கெடுத்து ஓடவேண்டும். நம் முயற்சியில் இருந்து நாம் என்றும் பின்வாங்கக் கூடாது. நம்மைத் தடுத்து நிறுத்துகிற எதையும் நமது வாழ்விலிருந்து தூக்கி எறிய வேண்டும். நம்மைப் பற்றுகிற பாவங்களையும் விலக்கிவிட வேண்டும். நாம் இயேசுவை முன்மாதிரியாகக்கொண்டு பின்பற்ற வேண்டும். நம் விசுவாசத்தின் தலைவரே இயேசுதான். நம் விசுவாசத்தை அவர் முழுமையாக்குகிறார். அவர் சிலுவையில் துன்புற்று மரணம் அடைந்தார். ஆனால் சிலுவையின் அவமானத்தைப் பொருட்படுத்தாமல் சிலுவையின் துன்பங்களை அவர் ஏற்றுக்கொண்டார். தேவன் அவருக்கு முன்னால் வைக்கப்போகிற மகிழ்ச்சிக்காகவே இத்தனையையும் ஏற்றுக்கொண்டார். எனவே இப்போது அவர் தேவனுடைய வலது புறத்தில் வீற்றிருக்கிறார். இயேசுவைப் பற்றி நினைத்துப்பாருங்கள். பாவிகள் அவருக்கு எதிராகச் செயல்புரிந்தபோது அவர் அதனைப் பொறுமையாக ஏற்றுக்கொண்டார். இயேசு செய்தது போலவே நீங்களும் பொறுமையோடு சோர்ந்து போகாமல் இருங்கள்.

தேவன் பிதாவைப் போன்றவர்

நீங்கள் பாவத்திற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் போராட்டம் இன்னும் நீங்கள் கொல்லப்படுகிற அளவுக்கு வன்மையாகவில்லை. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் உங்கள் ஆறுதலுக்காகவே பேசுகிறார். நீங்கள் அந்த வார்த்தைகளை மறந்துவிட்டீர்கள்.

“என் மகனே! கர்த்தர் உன்னைத் தண்டிக்கும்போது அதனை அற்பமாக எண்ணாதே.
    அவர் உன்னைத் திருத்தும்போது உன் முயற்சியைக் கைவிட்டு விடாதே.
தம் நேசத்துக்குரிய ஒவ்வொருவரையும் கர்த்தர் தண்டிக்கிறார்.
    தம் மக்களாக ஏற்றுக்கொள்கின்ற எல்லோரையும் தண்டித்துத் திருத்துகிறார்.” (A)

எனவே ஒரு பிதாவின் தண்டனை என்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு தந்தை தன் மகனைத் தண்டிப்பது போன்றே தேவன் உன்னையும் தண்டித்திருக்கிறார். எல்லாப் பிள்ளைகளுமே தம் தந்தைகளால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் எந்த நாளிலும் தண்டிக்கப்படாவிட்டால் உண்மையில் தேவனுடைய பிள்ளைகள் ஆகவில்லை என்று பொருள். இங்கே பூமியில் தண்டிக்கிற தந்தைகளையே நாம் கொண்டிருக்கிறோம். அதற்காக அவர்களை நாம் மதிக்கிறோம். ஆகவே நம் ஆன்மீகத் தந்தைக்கு மிக அதிகமாக அடங்கி நடக்கவேண்டும். நாம் இதனைச் செய்தால் நமக்கு வாழ்வு உண்டு. 10 உலகில் உள்ள தந்தைகளின் தண்டனை கொஞ்ச காலத்திற்குரியது. அவர்கள் தங்களின் சிந்தனைக்குச் சரியாகத் தோன்றுகிறதையே செய்கிறார்கள். ஆனால் தேவன் நமக்கு உதவி செய்வதற்காகவே தண்டிக்கிறார். எனவே நாமும் அவரைப் போன்று பரிசுத்தமாகலாம். 11 எந்தத் தண்டனையும் அந்நேரத்தில் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பதில்லை! ஆனால், பிறகு அதில் பழகியவர்கள், நேர்மையான வாழ்விலிருந்து வருகிற சமாதானத்தை அனுபவிப்பார்கள்.

எவ்வாறு வாழ்வது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்

12 நீங்கள் பலவீனமாகிவிட்டீர்கள். மீண்டும் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள். 13 சரியான வழியில் நடவுங்கள், அப்போதுதான் இரட்சிக்கப்படுவீர்கள். உங்கள் பலவீனம் எந்த இழப்புக்கும் காரணமாகக் கூடாது.

14 எல்லோரோடும் சமாதானமாய் இருக்க முயலுங்கள். பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முயலுங்கள். ஏனெனில், அது இல்லாமல் யாராலும் கர்த்தரைக் காணமுடியாது. 15 ஒருவனும் தேவனுடைய கிருபையைத் தவறவிடாதபடிக்கும் மக்களுக்கு விஷமூட்ட வளரும் விஷ வேரைப் போல உங்கள் குழுவுக்கு யாராலும் தொல்லை வராதபடிக்கும் உறுதி செய்யுங்கள். 16 எவரும் பாலியல் பாவத்தைச் செய்யாதபடி எச்சரிக்கையாயிருங்கள். எவரும் ஏசாவைப்போல் ஆகாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏசா தன் குடும்பத்தின் மூத்த மகன். தன் தந்தையின் சொத்தில் அவனுக்கு இரட்டைப் பங்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஏசா தன் வாரிசுரிமையைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒரு வேளை உணவுக்காக அவற்றை விற்றுவிட்டான். 17 பிறகு ஏசா ஆசியைப்பெற விரும்பிய போதிலும், கண்ணீர்விட்டுக் கதறிக் கெஞ்சினாலும் கூட அவனால் அதைப் பெற முடியவில்லை.ஏனெனில் மனமாறுதலுக்கு வழி காணாமல் போனான்.

18 நீங்கள் புதிய இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களால் தொடமுடிகிற இடமில்லை இது. நெருப்பு எரிவதும், அடர்த்தியான மேகங்களாலும் இருட்டாலும், புயலாலும் சூழ்ந்த மலையில்லை இது. 19 எக்காள சத்தத்தைக் கேட்டோ அல்லது கட்டளையிடும் ஒரு குரலைக் கேட்டோ நீங்கள் அந்த இடத்துக்கு வரவில்லை. வார்த்தைகளின் சத்தமும் எழும்பாது. அந்த சத்தத்தைக் கேட்டவர்கள் மீண்டும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். 20 ஏனென்றால் “ஒரு மிருகமாகிலும் அம்மலையைத் தொட்டால் கற்களால் அடிபட்டுச் சாக வேண்டியதிருக்கும்” [a]என்ற கட்டளையைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை. 21 “நான் பயத்தால் நடுங்குகிறேன்” [b]என்று மோசேயும் சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.

22 ஆனால் நீங்கள் அது போன்ற இடத்துக்கு வரவில்லை. இந்தப் புதிய இடத்தின் பெயர் சீயோன் மலை. தேவன் வசிக்கும் நகரத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது பரலோகமான எருசலேம். ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் மகிழ்ச்சியோடு கூடுகிற இடம். 23 இங்கே பரலோகத்தில் பெயரெழுதப்பட்ட முதற் பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை உள்ளது. எல்லோரையும் நியாயம் தீர்க்கிற நீதிபதியாக தேவன் இருக்கிறார். முழுமையாக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள் உள்ளன. 24 இயேசுவிடம் வந்திருக்கிறீர்கள். அவரே தம் மக்களுக்கு தேவனிடமிருந்து புதிய உடன்படிக்கையைக் கொண்டு வந்தவர். ஆபேலின் இரத்தம் பேசியதைவிட நன்மைகளைப் பேசுகிற, தெளிக்கப்பட்ட இயேசுவின் இரத்தமிருக்கும் இடத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்.

25 எச்சரிக்கையாய் இருங்கள். தேவன் பேசும்போது கவனிக்கத் தவறாதீர்கள். பூமியில் எச்சரிக்கப்பட்டபோதும் கூட இஸ்ரவேல் மக்கள் இதுபோலத்தான் கவனிக்க மறுத்தார்கள். அதனால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது பரலோகத்திலிருந்து தேவன் பேசுகிறார். அதைக் கவனிக்க மறுக்கிறவர்கள் முன்பைவிட மோசமான நிலையை அடைவார்கள். 26 அவருடைய பேச்சு அப்போது பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “இன்னொருமுறை நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பேன்” [c]என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். 27 “இன்னொரு முறை” என்பது என்னால் உருவாக்கப்பட்டவை எல்லாம் அழிக்கப்படும் எனப் பொருள்படும். அவை அசையத்தக்க பொருட்களே. அசைக்கக் கூடாத பொருட்களே என்றும் நிலைத்திருக்கும்.

28 அசைக்கப்பட முடியாத ஓர் இராஜ்யத்தை நாம் பெற்றுக்கொண்டிருப்பதால் நாம் நன்றி சொல்லவேண்டும். மிகவும் அச்சத்தோடும் மரியாதையோடும் கூடிய ஒப்புக்கொள்ளத்தக்க ஒரு வழியில் நாம் தேவனை வழிபடவேண்டும். 29 ஏனென்றால் நமது தேவன் அனைத்தையும் அழிக்கும் நெருப்பைப் போன்றவர்.

ஆமோஸ் 6

இஸ்ரவேலிலிருந்து நல்ல காலங்கள் அகற்றப்படும்

சீயோனில் வாழ்க்கையை மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டு
    சமாரியா மலையில் மிகவும் பாதுகாப்பு இருப்பதாக எண்ணும் ஜனங்களே, உங்களுக்கு மிகுந்த கேடு வரும்.
நீங்கள் மிக முக்கியமான நாட்டின் முக்கியமான தலைவர்கள். “இஸ்ரவேல் வீட்டார்”
    உங்களிடம் ஆலோசனைக்காக வருகிறார்கள்.
கல்னேவுக்குப் போய்ப் பாருங்கள்.
    அங்கிருந்து ஆமாத் என்னும் பெருநகருக்குப் போங்கள்.
    பெலிஸ்தியர்களின் காத் நகருக்குப் போங்கள்.
நீங்கள் இந்த இராஜ்யங்களை விடச் சிறந்தவர்களா?
    இல்லை. அவர்கள் நாடுகள் உங்கள் நாட்டைவிட பெரியவையா?
நீங்கள் அந்தத் தண்டனை தரும் நாளை நோக்கி விரைகிறீர்கள்.
    அந்த வன்முறை ஆட்சியை மிகவும் பக்கத்தில் கொண்டு வருகிறீர்கள்.
ஆனால் இப்போது, நீங்கள் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறீர்கள்.
    நீங்கள் தந்தக் கட்டில்களில் படுக்கிறீர்கள்.
நீங்கள் மஞ்சங்களில் நீட்டி நிமிர்ந்து கிடக்கிறீர்கள்.
    நீங்கள் மந்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் ஆட்டுக்குட்டிகளையும் மாட்டுத் தொழுவத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கன்றுக் குட்டிகளையும் உண்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் வீணைகளை மீட்டுகிறீர்கள்.
    தாவீதைப் போன்று உங்கள் இசைக் கருவிகளில் பயிற்சி செய்கிறீர்கள்.
நீங்கள் அழகான கிண்ணங்களில் மது குடிக்கிறீர்கள்.
    நீங்கள் சிறந்த மணப் பொருட்களை பயன்படுத்துகிறீர்கள்.
யோசேப்பின் குடும்பம் அழிக்கப்படுவதைக் கண்டு
    கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கிறீர்கள்.

அந்த ஜனங்கள் இப்பொழுது மஞ்சங்களில் வசதியாகப் படுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நல்ல நேரங்கள் முடிவடையும். அவர்கள் அந்நிய நாட்டுக்குக் கைதிகளைப்போன்று கொண்டுசெல்லப்படுவார்கள். எடுத்துக்கெள்ளப்படுகிறவர்களில் இவர்கள் முதன்மையானவர்களாக இருப்பார்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது சொந்த நாமத்தைப் பயன்படுத்தி வாக்குறுதி கொடுத்தார். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இந்த வாக்குறுதியை அளித்தார்.

“நான், யாக்கோபு பெருமைக்கொள்கிற காரியங்களை வெறுக்கிறேன்.
    நான் அவனது பலமுள்ள கோபுரங்களை வெறுக்கிறேன்.
எனவே நான் பகைவன் இந்த நகரத்தையும்
    அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள விடுவேன்.”

கொஞ்சம் இஸ்ரவேலர்களே உயிரோடு விடப்படுவர்

அப்போது, சில வீடுகளில் பத்துபேர் உயிர் பிழைக்கலாம், ஆனால் அவர்களும் மரித்துப்போவார்கள். 10 ஒருவன் மரிக்கும் போது ஒரு உறவினன் வந்து உடலைப் பெற்று வெளியே எடுத்துக்கொண்டு எரிக்க வருவான். உறவினன், எலும்பை வெளியே கொண்டுபோக வருவான். வீட்டின் உட்புறத்திலே மறைந்திருக்கிற யாரையாவது அழைப்பான்.

“உன்னோடு வேறு மரித்த உடல்கள் உள்ளனவா?” என்று கேட்பான். அந்த மனிதன், “இல்லை” என்று பதில் சொல்லுவான். ஆனால் அந்த உறவினன், “நீ மௌனமாயிரு! நாம் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லக் கூடாது” என்று சொல்வான்.

11 பார், தேவனாகிய கர்த்தர் கட்டளை கொடுப்பார்.
    பெரிய வீடுகள் துண்டுகளாக உடைக்கப்படும்.
    சிறிய வீடுகள் சிறிய துண்டுகளாக உடைக்கப்படும்.
12 ஜனங்கள் குதிரைகளைத் தளர்ந்த பாறைகளின் மேல் ஓடும்படிச் செய்வார்களா? இல்லை.
    ஜனங்கள் பசுக்களைப் உழுவதற்கு பயன்படுத்துவார்களா? இல்லை.
ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் தலை கீழாகத் திருப்பினீர்கள்.
    நீங்கள் நன்மையையும் நேர்மையையும் விஷமாக மாற்றினீர்கள்.
13 நீங்கள் லோடேபரில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.
    நீங்கள், “நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் கர்ணாயீமை எடுத்துக் கொண்டோம்” என்று சொல்கிறீர்கள்.

14 “ஆனால் இஸ்ரவேலே, நான் உங்களுக்கு எதிராக ஒரு நாட்டைக் கொண்டு வருவேன். அந்நாடு உன் முழு நாட்டுக்கும் அது லெபோ ஆமாத் முதல் அரபா ஓடைவரை துன்பங்களைக் கொண்டுவரும்.” சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறினார்.

லூக்கா 1:39-80

சகரியாவையும் எலிசபெத்தையும் மரியாள் சந்தித்தல்

39 மலைநாடான யூதேயாவில் உள்ள பட்டணத்துக்கு மரியாள் எழுந்து விரைந்து சென்றாள். 40 அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிசபெத்தை வாழ்த்தினாள். 41 மரியாளின் வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும் இன்னும் பிறக்காமல் எலிசபெத்துக்குள் இருக்கும் குழந்தை துள்ளிக் குதித்தது.

42 எலிசபெத் உரத்த குரலில் “வேறெந்தப் பெண்ணைக் காட்டிலும் அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதித்துள்ளார். உனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையையும், தேவன் ஆசீர்வதித்திருக்கிறார். 43 கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்? 44 உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. 45 உன்னிடம் கர்த்தர் கூறியதை நீ நம்பியதால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். இது நடக்கக் கூடியதென நீ நம்பினாய்” என்று சொன்னாள்.

மரியாள் தேவனைப் போற்றுதல்

46 அப்போது மரியாள்,

47 “எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது.
    தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது.
48 நான் முக்கியமற்றவள்,
    ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார்.
இப்போது தொடங்கி,
    எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர்.
49 ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார்.
    அவர் பெயர் மிகத் தூய்மையானது.
50 தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார்.
51 தேவனின் கைகள் பலமானவை.
    செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார்.
52 சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார்.
    தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார்.
53 நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார்.
    செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார்.
54 தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார்.
    அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார்.
55 நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்”

என்று சொன்னாள்.

56 மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்று மாதகாலம்வரைக்கும் தங்கி இருந்தாள். பின்பு மரியாள் தனது வீட்டுக்குச் சென்றாள்.

யோவானின் பிறப்பு

57 குழந்தைப் பேற்றின் காலம் நெருங்கியபோது எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். 58 அவளது அக்கம் பக்கத்தாரும் உறவினரும் கர்த்தர் அவளுக்குக் கருணைக் காட்டியதை கேள்விப்பட்டனர். அதைக்குறித்து மகிழ்ச்சியடைந்தனர்.

59 குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனபோது அக்குழந்தையை விருத்தசேதனம் செய்யும்பொருட்டு கொண்டு வந்தனர். அவனது தந்தை பெயரால் அவனை சகரியா என்று பெயரிட்டு அழைக்க விரும்பினர். 60 ஆனால் அக்குழந்தையின் தாய், “இல்லை, அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்” என்றாள்.

61 மக்கள் எலிசபெத்தை நோக்கி, “உன் குடும்பத்தில் யாருக்கும் இப்பெயர் இல்லையே!” என்றனர். 62 பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், “குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்?” என்று கேட்டனர்.

63 சகரியா எழுதுவதற்கு ஏதாவது ஒன்று கொண்டு வருமாறு கேட்டான். சகரியா, “அவன் பெயர் யோவான்” என்று எழுதினான். எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தனர். 64 அப்போது சகரியாவால் மீண்டும் பேசமுடிந்தது. அவன் தேவனை வாழ்த்த ஆரம்பித்தான். 65 அவனது அக்கம் பக்கத்தார் அனைவருக்கும் பயமுண்டாயிற்று. யூதேயாவின் மலைநாட்டு மக்கள் இக்காரியங்களைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டனர். 66 இச்செய்திகளைக் கேட்ட எல்லா மக்களும் அவற்றைக் குறித்து அதிசயப்பட்டார்கள். அவர்கள், “இக்குழந்தை எப்படிப்பட்டதாயிருக்குமோ?” என்று எண்ணினர். கர்த்தர் இந்தக் குழந்தையோடு இருந்தபடியால் அவர்கள் இதைக் கூறினர்.

சகரியா தேவனைப் போற்றுதல்

67 அப்போது யோவானின் தந்தையாகிய சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். பின்னர் நடக்க இருப்பவற்றைக் குறித்து அவன் மக்களுக்குக் கூறினான்.

68 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்றுவோம்.
    தேவன் அவரது மக்களுக்கு உதவ வந்தார். அவர்களுக்கு விடுதலை தந்தார்.
69 தேவன் நமக்கு வல்லமை பொருந்திய இரட்சகரைத் தந்தார்.
    அவர் தாவீது என்னும் தேவனுடைய பணிவிடைக்காரனின் குடும்பத்தைச் சார்ந்தவர்.
70 தேவன் இதைச் செய்வதாகக் கூறினார்.
    பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவரது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாக இதை அவர் கூறினார்.
71 நம் எதிரிகளிடம் இருந்து தேவன் நம்மைக் காப்பாற்றுவார்.
    நம்மை வெறுக்கும் அனைவரின் கைகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவார்.
72 நமது தந்தையருக்கு அருள்புரிவதாக தேவன் சொன்னார்.
    தனது பரிசுத்த வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
73 நமது தந்தையாகிய ஆபிரகாமுக்கு எதிரிகளின் சக்தியிலிருந்து.
74     நம்மை விடுவிப்பதாக தேவன் வாக்குறுதி தந்தார்.
    அதனால் பயமின்றி நாம் அவருக்குச் சேவை செய்வோம்.
75     நாம் நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய முன்னிலையில் நீதியும் பரிசுத்தமும் வாய்ந்தோராக வாழ்வோம்.
76 இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்.
    கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய்.
77 அவரது மக்கள் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர்களுக்கு உணர்த்துவாய். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் இரட்சிக்கப்படுவர்.
78 நம் தேவனின் அன்பான இரக்கத்தால் பரலோகத்திலிருந்து
    புதுநாள் ஒன்று நம்மீது பிரகாசிக்கும்.
79 இருளில் மரணப் பயத்திடையே வாழும் மக்களுக்கு தேவன் உதவி செய்வார்.
சமாதானத்தை நோக்கி அவர் நம்மை வழிநடத்துவார்.”

என்று சகரியா உரைத்தான்.

80 அச்சிறுவன் வளர்ந்துவருகையில் ஆவியில் வல்லமை பொருந்தியவனாக மாறினான். இஸ்ரவேல் மக்களுக்குப் போதிக்கும்பொருட்டு வளரும்மட்டும் அவன் மக்களிடமிருந்து தொலைவான இடத்தில் வாழ்ந்தான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center