Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 7-8

இசக்காரின் சந்ததியினர்

இசக்காருக்கு 4 மகன்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தோலா, பூவா, யசுப், சிம்ரோன் ஆகிய பெயர்களுண்டு.

ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் ஆகியோர் தோலாவின் மகன்கள். அவர்கள் அனைவரும் தம் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். அவர்களும் அவர்களின் சந்ததிகளும் மிகப் பலமுள்ளவர்களாயிருந்தனர். தாவீது அரசனாகும் காலம்வரை அவர்களின் குடும்பம் வளர்ந்தது. அவர்களில் 22,600 பேர் போர் செய்ய தயாரானவர்கள்.

ஊசியாவின் மகன்களில் ஒருவன் இஸ்ரகியா. இஸ்ரகியாவுக்கு மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா ஆகிய மகன்கள் இருந்தனர். இந்த 5 பேரும் அவர்களின் குடும்பத் தலைவராக இருந்தனர். இவர்களில் 36,000 பேர் போர் செய்யத் தகுதியுடைய வீரர்களாக இருந்தனர் என வம்ச வரலாறு கூறும். அவர்கள் ஏராளமான மனைவியரும், பிள்ளைகளும் பெற்றதால் குடும்பம் பெரிதாயிற்று.

இசக்காரின் கோத்திரங்களில் ஆக மொத்தம் 87,000 பலமிக்க வீரர்கள் இருந்தனர் என்று குடும்ப வரலாறு கூறுகிறது.

பென்யமீனின் சந்ததியினர்

பேலா, பெகேர், யெதியாயேல் எனும் மூன்று பேரும் பென்யமீனின் மகன்கள்.

பேலாவிற்கு எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி எனும் மகன்கள் இருந்தனர். இவர்கள் தத்தம் குடும்பங்களின் தலைவர்களாக இருந்தனர். இவர்களிடம் 22,034 வீரர்கள் இருந்தார்கள் என குடும்ப வரலாறு கூறுகிறது.

செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனாதோத், அதுமேத் ஆகியோர் பெகேரின் மகன்கள். இவர்கள் பெகேரின் பிள்ளைகள். இவர்களின் குடும்ப வரலாறு குடும்பத் தலைவர்களைப்பற்றி கூறுகிறது. இவர்களிடம் 20,200 வீரர்கள் இருந்தனர் என்பதை குடும்ப வரலாறு காட்டுகிறது.

10 யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான். ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் ஆகியோர் பில்கானின் மகன்கள். 11 யெதியாயேலின் மகன்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் போருக்குத் தயாராக 17,200 வீரர்கள் இருந்தனர்.

12 சுப்பீமியர்களும், உப்பீமியர்களும் ஈரின் சந்ததியினர். ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன்.

நப்தலியின் சந்ததியினர்

13 யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் ஆகியோர் நப்தலியின் மகன்கள்.

இவர்கள் பில்காளியின் சந்ததியினர்.

மனாசேயின் சந்ததியினர்

14 கீழ்க்கண்டவர்கள் மனாசேயின் சந்ததியினர்: மனாசே அராமிய வேலைக்காரி மூலம் அஸ்ரியேல் என்ற மகன் பிறந்தான். அவர்களுக்கு மாகீர் என்ற மகனும் இருந்தான். இவன் கீலேயாத்தின் தந்தை. 15 மாகீர் உப்பீமியர் மற்றும் சுப்பீமியர்களிடமிருந்தும் ஒரு பெண்ணை மணந்துக்கொண்டான். அவளது பெயர் மாக்காள். மாகீரின் சகோதரியின் பெயரும் மாக்காள். மாக்காளின் இரண்டாவது மனைவியின் பெயர் செலோப்பியாத். செலோப்பியாத்திற்கு மகள்கள் மட்டுமே இருந்தார்கள். 16 மாகீரின் மனைவியான மாக்காளிற்கு ஒரு மகன் இருந்தான். மாக்காள் தனது மகனுக்குப் பேரேஸ் என்று பெயரிட்டாள். பேரேஸின் சகோதரனின் பெயர் சேரேஸ். சேரேசுக்கு, ஊலாம், ரேகேம் எனும் மகன்கள் இருந்தனர்.

17 ஊலாம் மகன் பேதான்.

இவர்கள் கீலேயாத்தின் சந்ததியினர். கீலேயாத் மாகீரின் மகன். மாகீர் மனாசேயின் மகன். 18 மாகீரின் சகோதரியான அம்மொளெகேத்திற்கு இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோர் மகன்கள்.

19 அகியான், சேகேம், லிக்கே, அனியாம் ஆகியோர் செமிதாவின் மகன்கள்.

எப்பிராயீமின் சந்ததியினர்

20 கீழ்க்கண்டவை எப்பிராயீமின் சந்ததியினரின் பெயர்கள். எப்பிராயீமின் மகன் சுத்தெலாக். எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக், சுத்தெலாக்கின் மகன் பேரேத், பேரேத்தின் மகன் தாகாத் 21 தாகாத்தின் மகன் எலாதா, எலாதாவின் மகன் தாகாத், தாகாத்தின் மகன் சாபாத், சாபாத்தின் மகன் சுத்தெலாக்.

காத் நகரில் வளர்ந்த சிலர் எத்சோர், எலீயாத் ஆகியோரை கொன்றனர். எசேரும், எலீயட்டும் ஆடு மாடுகளைத் திருடும்பொருட்டு காத் நகருக்குச் சென்றார்கள் என்னும் காரணத்தால் இவர்கள் கொல்லப்பட்டார்கள். 22 எத்சேர், எலீயாத் ஆகியோரின் தந்தை எப்பிராயீம். இவர்கள் மரித்துப் போனதால் இவன் அதிக நாட்கள் துக்கம் கொண்டாடினான். எப்பிராயீமின் குடும்பத்தினர் வந்து ஆறுதல் சொன்னார்கள். 23 பிறகு, இவன் தன் மனைவியோடு பாலின உறவு கொண்டான். அவள் கர்ப்பமுற்று ஒரு மகனைப் பெற்றாள். அவன் தன் மகனுக்குப் பெரீயா என்று பெயர் வைத்தான். ஏனென்றால் அவன் பிறந்தபொழுது குடும்பத்துக்குப் பல தீங்குகள் ஏற்பட்டன. 24 எப்பிராயீமின் மகள் பெயர் சேராள். இவள் கீழ்பெத்ரோன், மேல் பெத்ரோன், கீழ் ஊசேன் சேரா, மேல் ஊசேன் சேரா ஆகியவற்றைக் கட்டினாள்.

25 எப்பிராயீமின் மகன் ரேப்பாக், ரேப் பாக்கின் மகன் ரேசேப், ரேசேப்பின் மகன் தேலாக், தேலாக்கின் மகன் தாகான். 26 தாகானின் மகன் லாதான், லாதானின் மகன் அம்மியூத், அம்மியூத்தின் மகன் எலிஷாமா 27 எலிஷாமாவின் மகன் நூன், நூனின் மகன் யோசுவா.

28 கீழ்க்கண்ட நகரங்களிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எப்பிராயீமின் சந்ததியினர் குடியிருந்தனர். அவை, பெத்தேலும், அதைச் சார்ந்த கிராமங்களும், கீழ்ப்புறமுள்ள நாரானும், மேற்கேயுள்ள கேசேரும், அதைச் சார்ந்த கிராமங்களும், சீகேமும் அதைச் சார்ந்த கிராமங்களும், அய்யாவரையுள்ள இடங்களும் அதைச் சார்ந்த கிராமங்களும். 29 மனாசே ஜனங்களின் எல்லையுள்ள மெத்செயானும், அதைச் சார்ந்த கிராமங்களும் தானாக், மெகிதோ, தோர் ஆகிய நகரங்களும் அவற்றின் அருகில் உள்ள சிறு நகரங்களும். இவ்விடங்களில் யோசேப்பின் சந்ததியினர் குடியிருந்தார்கள். யோசேப்பு இஸ்ரவேலின் மகன்.

ஆசேரின் சந்ததியினர்

30 இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா ஆகியோர் ஆசேரின் மகன்கள். இவர்களது சகோதரியின் பெயர் சேராள்.

31 ஏபேர், மல்கியேல் ஆகியோர் பெரீயாவின் மகன்கள், மல்கியேல் பிர்சாவீத்தின் தந்தை.

32 ஏபேர், யப்லோத்தையும் சோமேரையும் ஒத்தாமையும் இவர்களின் சகோதரியான சூகாளையும் பிள்ளைகளாகப் பெற்றான்.

33 யப்லேத்திற்குப் பாசாக், பிம்மால், அஸ்வாத் ஆகிய மகன்கள் பிறந்தனர். இவர்கள் யப்லோத்தின் பிள்ளைகள்.

34 அகி, ரோகா, எகூபா, ஆராம் ஆகியோர் சோமேரின் மகன்கள்.

35 சோமேரின் சகோதரன் ஏலேம். சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் ஆகியோர் ஏலேமின் மகன்கள்.

36 சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா.

37 பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா ஆகியோர் சோபாக்கின் மகன்கள்.

38 யெத்ரேனுக்கு எப்புனே, பிஸ்பா, ஆரா ஆகிய மகன்கள் இருந்தனர்.

39 உல்லாவிற்கு ஆராக், அன்னியேல், ரித்சியா ஆகிய மகன்கள் இருந்தனர்.

40 இவர்கள் அனைவரும் ஆசேரின் சந்ததியினர். இவர்கள் குடும்பத் தலைவர்கள், இவர்கள் மகத்தான மனிதர்கள், இவர்கள் வலிமைமிக்க வீரர்கள், திறமைமிக்க வீரர்களான இவர்களில் 26,000 பேர் போர் செய்வதற்குத் தயாரான வீரர்களாக இருந்தார்கள்.

சவுல் அரசனின் குடும்ப வரலாறு

பென்யமீன் பேலாவின் தந்தை. பேலா பென்யமீனின் மூத்த மகன், அஸ்பால் பென்யமீனின் இரண்டாவது மகன். அகராக் பென்யமீனின் மூன்றாவது மகன். நோகா, பென்யமீனின் நான்காவது மகன். ரப்பா, பென்யமீனின் ஐந்தாவது மகன்.

3-5 ஆதார், கேரா, அபியூத், அபிசுவா, நாமான், அகோவா, கேரா, செப்புப்பான், ஊராம் ஆகியோர் பேலாவின் மகன்கள்.

6-7 இவர்கள் ஏகூதின் சந்ததியினர். கேபாவின் குடும்பங்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இவர்கள், தம் வீடுகளை விட்டு விட்டு மனாகாத்துக்குப் போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நாமான், அகியா, கேரா ஆகியோர் ஏகூதின் சந்ததியினர். கேரா இவர்களைக் கட்டாயமாக வீட்டைவிட்டு அழைத்துச்சென்றான். ஊசா, அகியூத் ஆகியோர் தந்தையானான் கேரா.

மோவாப்பில் சகாராயீம் தன் மனைவிகளான ஊசிம், பாராள் ஆகியோரை விவாகரத்து செய்தான். பின்னர் பிற மனைவியோடு சில பிள்ளைகளைப் பெற்றான். 9-10 சகாராயீம் தன் மனைவியான ஓதேசாலிடம் யோவாப், சீபியா, மேசா, மல்காம், எயூஸ், சாகியா, மிர்மா, ஆகிய பிள்ளைகளைப் பெற்றான். இவர்கள் சகாராயீமின் மகன்கள். 11 சகாராயிமுக்கும் ஊசீமுக்கும் இரண்டு மகன்கள். அவர்களின் பெயர் அபிதூப், எல்பால்.

12-13 எல்பாலின் மகன்களாக ஏபேர், மீஷாம், சாமேத், பெரீயா, சேமா ஆகியோர் பிறந்தனர். சாமேத் ஓனா, லோத் ஆகிய நகரங்களையும், லோத்தைச் சுற்றிலும் சிறிய ஊர்களையும் உருவாக்கினான். பெரீயாவும், சேமாவும் ஆயயோன் ஜனங்களின் தலைவர்களாயிருந்தனர். இவர்கள் காத்தியர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.

14 பெரீயாவின் மகன்களாக சாஷாக், ஏரேமோத், 15 செபதியா, ஆராத், ஆதேர், 16 மிகாயேல், இஸ்பா, யோகா ஆகியோர் பிறந்தனர். 17 எல்பாலின் மகன்களாக செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ரபேர், 18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் ஆகியோர் பிறந்தனர்.

19 சிமேயின் மகன்களாக யாக்கீம், சிக்ரி, சப்தி, 20 எலியேனாய், சில்தாய், எலியேல், 21 அதாயா, பெராயா, சிம்ராத், ஆகியோர் பிறந்தனர்.

22 சாஷாக்கின் மகன்களாக இஸ்பான், ஏபேர், ஏலியேல், 23 அப்தோன், சிக்ரி, ஆனான், 24 அனனியா, ஏலாம், அந்தோதியா, 25 இபிதியா, பெனூயேல் ஆகியோர் பிறந்தனர்.

26 எரொகோமின் மகன்களாகச் சம்சேராய், செகரியா, அத்தாலியா, 27 யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் பிறந்தனர்.

28 இவர்கள் அனைவரும் குடும்பத் தலைவர்கள். இவர்களின் வம்ச வரலாற்றில் அவ்வாறு தான் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.

29 யேயேல் கிபியோனின் தந்தை. இவன் கிபியோனில் குடியிருந்தான். யேயேலின் மனைவியின் பெயர் மாக்காள். 30 இவனது மூத்த மகன் அப்தோன், மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப், 31 கேதோர், அகியோ, சேகேர் ஆகியோர். 32 மிக்லோத், சிமியாவின் தந்தை. இப்பிள்ளைகள் எருசலேமில் தம் உறவினர்களோடு வாழ்ந்தனர்.

33 நேர், கீசின் தந்தை, கீஸ் சவுலின் தந்தை. சவுல் யோனத்தான் மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தந்தை.

34 யோனத்தானின் மகன் மேரிபால், மேரி பாலின் மகள் மீகா. 35 மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் ஆகியோர்.

36 ஆகாஸ் யோகதாவின் தந்தை. யோகதா, அலமேத்துக்கும் அஸ்மாவேத்துக்கும் சிம்ரிக்கும் தந்தை. சிம்ரி மோசாவின் தந்தை. 37 மோசா, பினியாவின் தந்தை, பினியா, ரப்பாவின் தந்தை. ரப்பா, எலியாசாவின் தந்தை. எலியாசா, ஆத்சேலின் தந்தை.

38 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள். அவர்களின் பெயர்: அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் அனைவரும் ஆத்சேலின் பிள்ளைகள்.

39 ஆத்சேலின் சகோதரன் ஏசேக். ஏசேக்கின் முதல் மகன் ஊலாம், அவனது இரண்டாவது மகன் ஏகூஸ், அவனது மூன்றாவது மகன் எலிபேலேத். 40 ஊலாமின் பிள்ளைகள் வீரமுடையவர்களாக வில் வீரர்களாய் இருந்தனர். அவர்களுக்கும் நிறைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மொத்தத்தில் அவர்களின் எண்ணிக்கை 150 ஆகும்.

இவர்கள் அனைவரும் பென்யமீனின் சந்ததியினர் ஆவார்கள்.

எபிரேயர் 11

விசுவாசம்

11 நாம் நம்புகிறவற்றின் மீது கொண்டுள்ள உறுதிதான் விசுவாசம் ஆகும். நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் கூட உண்மையான ஒன்றை நம்புவது தான் விசுவாசம். முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள்.

தேவன் தமது ஆணையால் இந்த முழு உலகையும் படைத்தார் என்று நாம் நம்ப விசுவாசம் உதவுகிறது. அதாவது நாம் பார்க்கின்ற பொருட்கள் எல்லாம் பார்க்கப்படாத ஒன்றால் உருவாக்கப்பட்டதை உணர்ந்துகொள்கிறோம்.

காயீனும் ஆபேலும் தேவனுக்குப் பலி கொடுத்தார்கள். ஆனால் ஆபேலின் பலி, அவனது விசுவாசம் காரணமாக உயர்வாகக் கருதப்பட்டது. தேவனும் அதையே விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே அவனை நல்லவன் என்று அழைத்தார். அவன் இறந்து போனான். எனினும் அவன் தன் விசுவாசத்தின் வழியே இன்னும் பேசிக்கொண்டிருக்கிறான்.

ஏனோக்கு இறக்கவில்லை. இந்த பூமியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் தேவனுக்கு விருப்பமானவனாக இருந்தான். தேவன் அவனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டார். அதனால் மக்கள் அதன் பிறகு அவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. இது அவனது விசுவாசத்தினாலேயே ஆயிற்று. விசுவாசம் இல்லாமல் எவனும் தேவனுக்கு விருப்பமானவனாக இருக்கமுடியாது. தேவனிடத்தில் வருகிறவன் அவர் உண்மையாகவே இருக்கிறார் என நம்பிக்கை கொள்கிறான். அதோடு தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுப்பார் என்றும் நம்பிக்கை கொள்ளவேண்டும்.

நோவா, இதுவரை அவன் காணாததைப் பற்றி தேவனால் எச்சரிக்கை செய்யப்பட்டான். ஆனால் நோவா தேவன் மீது விசுவாசமும், மரியாதையும் கொண்டிருந்தான். எனவே அவன் பெரிய கப்பலைச் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொண்டான். தனது விசுவாசத்தின் மூலமாக இந்த உலகம் தவறானது என்பதை நோவா நிரூபித்தான். இதனால் விசுவாசத்தின் வழியாக தேவனுக்கு முன் நீதிமான்களாகக் கருதப்பட்ட சிலருள் ஒருவனானான்.

தேவன் ஆபிரகாமை அழைத்தார். அவர் வாக்களித்தப்படி ஒரு இடத்துக்குப் பயணம் போகச் சொன்னார். அவனுக்கு அந்த இடம் எங்கே உள்ளது என்று தெரியாது. எனினும் அவனுக்கு விசுவாசம் இருந்ததால், தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவர் சொன்னபடி பயணம் செய்தான். தேவன் தருவதாக வாக்களித்த நாட்டில் ஆபிரகாம் வாழ்ந்தான். அங்கே ஒரு பரதேசியைப் போல அலைந்தான். எனினும் அவன் விசுவாசம் வைத்திருந்தான். ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரோடு கூடாரத்தில் குடியிருந்தான். அவர்களும் தேவனுடைய வாக்குறுதியைப் பெற்றார்கள். 10 ஆபிரகாம், உண்மையான அஸ்திபாரம் இடப்பட்ட தேவனுடைய நகரத்துக்காகக் [a] காத்திருந்தான்.

11 ஆபிரகாம் மிகவும் முதியவன். குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு இல்லாதவன். சாராளும் அப்படியே. ஆபிரகாம் தேவனிடம் விசுவாசம் வைத்ததால் அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. 12 அவன் ஏறக்குறைய இறந்து போகின்றவனைப் போன்று இருந்தான். ஆனால் அவனிடமிருந்து முதுமைப் பருவத்தில் ஒரு பரம்பரை தோன்றி வானத்து நட்சத்திரங்களைப் போன்று விளங்கியது. கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமான மக்கள் அவனிடமிருந்து வெளிப்பட்டனர்.

13 இந்த மாபெரும் மனிதர்கள் அனைவரும் இறுதிவரை தங்கள் விசுவாசத்துடனேயே வாழ்ந்தனர். இவர்கள் வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக்கொள்ளாமல், வெகுதூரத்திலே அவற்றைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டனர். பூலோகத்தில் தாம் அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் இருந்ததை அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொண்டனர். 14 அவர்கள் தம் சொந்த தேசத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே இத்தகைய விஷயங்களைப் பேசுகிறவர்கள் உணர்த்துகிறார்கள். 15 அவர்கள் தாங்கள் விட்டுவந்த நாட்டைப் பற்றி நினைத்திருந்தார்களேயானால் அவர்கள் அதற்குத் திரும்பிப் போக சமயம் கிடைத்திருக்குமே. 16 ஆனால் அவர்கள் பரலோகம் என்னும் சிறப்பான நாட்டிற்குப் போகக் காத்திருக்கிறார்கள். எனவே தேவன் தன்னை அவர்களது தேவன் என்று அழைத்துக்கொள்வதில் வெட்கப்படுவதில்லை. தேவன் அவர்களுக்காக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்.

17-18 தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை சோதித்தார். ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலி கொடுக்கும்படி தேவன் சொன்னார். ஆபிரகாமும் விசுவாசத்தின் காரணமாக அந்தக் கட்டளையைப் பின்பற்றினான், ஏனென்றால் ஏற்கெனவே தேவன் ஆபிரகாமுக்கு வாக்களித்துள்ளார். “ஈசாக்கு மூலம் உன் பரம்பரை வளரும்” என்றும் கூறியுள்ளார். ஆனாலும் ஒரே மகனான அந்த ஈசாக்கைப் பலிகொடுக்க ஆபிரகாம் முன் வந்தான். 19 தேவன் மக்களை மரணத்திலிருந்து எழுப்புவார் என ஆபிரகாம் நம்பினான். உண்மையில் அதுபோன்றே ஆபிரகாம் அவன் மகனைக் கொல்லாதபடி தேவன் தடுத்துவிட்டார். இதுவும் மரணத்திலிருந்து எழுப்பியது போலாயிற்று.

20 யாக்கோபையும் ஏசாவையும் ஈசாக்கு ஆசீர்வதித்தான். ஈசாக்கு இதனை விசுவாசத்தின் அடிப்டையில் செய்தான். 21 யாக்கோபு யோசேப்பின் மகன்களில் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் இறந்துகொண்டிருக்கும்போது இதனைச் செய்தான். அவன் தனது கோலின் முனையில் சாய்ந்துகொண்டு தொழுதான். யாக்கோபு இப்படிச் செய்ததற்கும் அவனது விசுவாசமே காரணமாகும்.

22 யோசேப்பு இறந்துகொண்டிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டுப் போவதைப் பற்றி பேசினான். அவன் இதனை விசுவாசத்தால் சொன்னான். தனது சரீரத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களிடம் சொன்னான்.

23 மோசே பிறந்த பிறகு, அவன் அழகாக இருந்ததை அவன் பெற்றோர்கள் கண்டு மூன்று மாத காலத்திற்கு மறைத்து வைத்தார்கள். விசுவாசத்தின் அடிப்படையிலேயே இதைச் செய்தனர். அரச கட்டளைக்குப் பயப்படாமல் இதை செய்தனர்.

24 மோசே வளர்ந்து பெரியவன் ஆனான். பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை மறுத்தான். 25 பாவத்துக்குரிய தற்காலிக சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட தேவனுடய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே அவன் தேர்ந்தெடுத்தான். 26 எகிப்தின் கருவூலத்தைவிட கிறிஸ்துவுக்காகத் தாங்கிக்கொண்ட பாடுகளை மதிப்புமிக்கதாக அவன் நினைத்தான். ஏனெனில் வர இருக்கிற பலனுக்காக அவன் பார்த்திருந்தான்.

27 மோசே எகிப்திலிருந்து வெளியேறினான். தன் விசுவாசத்தின் அடிப்படையில் அப்படிச் செய்தான். அவன் அரசனின் கோபத்துக்கும் அஞ்சவில்லை. அவன் தொடர்ந்து உறுதியாக இருந்தான். ஒருவராலும் பார்க்க இயலாத தேவனை அவனால் பார்க்க முடிந்தது. 28 அவன் பஸ்காவைத் தயார் செய்தான். கதவின் மீது இரத்தத்தைப் பூசினான். யூதமக்களின் முதல் ஆண் குழந்தையை மரண தூதன் [b] கொல்லாதபடிக்கு இதைச் செய்தான். மோசே இதனை விசுவாசத்தோடு செய்தான்.

29 மோசே தன் மக்களை அழைத்துக்கொண்டு போனான். அப்போது செங்கடல் காய்ந்த தரையைப் போலாயிற்று. அவர்களின் விசுவாசமே இதற்குக் காரணமாகும். எகிப்தியர்களும் அவ்வாறே கடலைக் கடக்க முனைந்து அமிழ்ந்துபோனார்கள்.

30 எரிகோவின் சுவர்கள், தேவனது மக்களின் விசுவாசத்தினால் விழுந்துபோனது. அவர்கள் ஏழு நாட்கள் அந்தச் சுவர்களைச் சுற்றி வந்தனர். அப்புறம் அச்சுவர்கள் விழுந்தன.

31 ராகாப் என்னும் விலைமாதும் இஸ்ரவேல் ஒற்றர்களை நண்பர்களைப்போல வரவேற்றாள். அவளது விசுவாசத்தின் காரணமாகக் கீழ்ப்படியாதவர்கள் கொல்லப்பட்டபோது அவள் தன் வீட்டாருடன் சேதமடையாமல் தப்பினாள்.

32 பின்னும் வேறு எடுத்துக்காட்டுகளை நான் சொல்லவேண்டுமா! கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும் தீர்க்கதரிசிகளையும் குறித்து விளக்கிச் சொல்லக் காலம் போதாது. 33 விசுவாசத்தாலேயே அவர்கள் அரசுகளை வெற்றிகொண்டார்கள். நீதியை வலியுறுத்தினார்கள். தேவனுடைய வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டார்கள். சிலர் சிங்கங்களின் வாய்களை மூடினார்கள். 34 சிலர் நெருப்பின் உக்கிரத்தைக் குறைத்தார்கள். வாளின் சாவிலிருந்து தப்பினார்கள். பலவீனத்திலிருந்து அவர்கள் பலம் பெற்று அந்நியப் படைகளைத் தோற்கடித்து யுத்தத்தில் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். 35 இறந்துபோன தங்களுடையவர்களை பெண்கள் மீண்டும் அடைந்தார்கள். மற்றவர்கள் வாதைக்குள்ளானபோதும் விடுபட மறுத்தார்கள். மரணத்திலிருந்து ஒரு சிறந்த வாழ்விற்கென உயிரோடு எழுப்பப்படுவதற்காக இதனைச் செய்தார்கள். 36 வேறு சிலர் கேலிசெய்யப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; கட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். 37 சிலர் கல்லால் எறியப்பட்டார்கள்; வாள்களினால் இரண்டு துண்டாகக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். சிலர் செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு திரிந்து ஏழ்மையையும், துன்பத்தையும், கசப்புகளையும் அனுபவித்தனர். 38 உலகம் அந்த உத்தமர்களுக்கு உகந்ததாக இல்லை. அவர்கள் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தனர். மலைக் குகைகளிலும் பூமியில் உள்ள பொந்துகளிலும் வாழ்ந்தார்கள்.

39 தம் விசுவாசத்தாலேயே அவர்கள் புகழப்படுகின்றனர். ஆனால் இவர்களில் எவரும் தேவனுடைய வாக்குறுதியை அடையவில்லை. 40 தேவன் நமக்குச் சிறந்த சிலவற்றைத் தரத் திட்டமிட்டிருந்தார். பிறகு நம்மோடு சேர்ந்து மட்டுமே அவர்களும் முழுமைபடுத்தப்படுவார்கள்.

ஆமோஸ் 5

இஸ்ரவேலுக்கான சோகப்பாடல்

இஸ்ரவேல் ஜனங்களே, இந்தப் பாடலைக் கேளுங்கள். இந்தச் மரணப் பாடல் உங்களைப் பற்றியதுதான்.

இஸ்ரவேல் கன்னி விழுந்தாள்.
    அவள் இனிமேல் எழமாட்டாள்.
அவள் தனியாக விடப்பட்டாள். புழுதியில் கிடக்கிறாள்.
    அவளைத் தூக்கிவிட எவருமில்லை.

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“1,000 ஆட்களோடு நகரை விட்டுப்போன அதிகாரிகள்,
    100 ஆட்களோடு திரும்பி வருவார்கள்,
100 ஆட்களோடு நகரை விட்டுப்போன
    அதிகாரிகள் 10 ஆட்களோடு திரும்பி வருவார்கள்.”

கர்த்தர் இஸ்ரவேலரைத் திரும்பிவர உற்சாகப்படுத்துகிறார்

கர்த்தர் இதனை இஸ்ரவேல் நாட்டிடம் கூறுகிறார்:
“என்னைத் தேடிவந்து, வாழுங்கள்.
    ஆனால் பெத்தேலைப் பார்க்காதீர்கள்.
கில்காலுக்கும் போகாதீர்கள்.
    எல்லையைக் கடந்து பெயர்செபாவிற்குப் போகாதீர்கள்.
கில்காலிலுள்ள ஜனங்கள் சிறைபிடிக்கப்படுவார்கள்.
    பெத்தேல் அழிக்கப்படும்.
கர்த்தரிடம் போய் வாழுங்கள்.
    நீங்கள் கர்த்தரிடம் போகாவிட்டால் பிறகு யோசேப்பின் வீட்டில் நெருப்பு பற்றும்.
    அந்நெருப்பு யோசேப்பின் வீட்டை அழிக்கும்.
    பெத்தேலில் அந்நெருப்பை எவராலும் நிறுத்தமுடியாது.
7-9 நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் போக வேண்டும்.
    தேவன் நட்சத்திரக் கூட்டங்களைப் படைத்தார்.
அவர் இருளைக் காலை ஒளியாக மாற்றுகிறார்.
    அவர் பகல் ஒளியை இரவின் இருளாக மாற்றுகிறார்.
அவர் கடலிலுள்ள தண்ணீரை அழைத்து, அதனை பூமியில் ஊற்றுகிறார்.
    அவரது நாமம் யேகோவா.
அவர் ஒரு பலமான நகரைப் பாதுகாப்பாக வைத்து
    இன்னொரு பலமான நகரை அழிய விடுகிறார்.”

இஸ்ரவேலர்கள் செய்த பாவச்செயல்கள்

நீங்கள் நன்மையை விஷமாக மாற்றுகிறீர்கள்.
    நீங்கள் நீதியைக் கொல்லுகிறீர்கள், கொன்று தரையில் விழவிடுகிறீர்கள்.
10 தீர்க்கதரிசிகளே, பொது இடங்களுக்குச் சென்று ஜனங்கள் செய்கிற தீமைகளுக்கு எதிராகப் பேசுங்கள்.
    அத்தீர்க்கதரிசிகள் நன்மையான எளிய உண்மைகளைப் போதிக்கிறார்கள். ஜனங்கள் அத்தீர்க்கதரிசிகளை வெறுக்கிறார்கள்.
11 நீங்கள் நியாயமற்ற வரிகளை எளிய ஜனங்களிடம் வசூலிக்கிறீர்கள்.
    நீங்கள் கோதுமையைச் சுமைச் சுமையாக அவர்களிடமிருந்து எடுக்கிறீர்கள்.
நீங்கள் செதுக்கப்பட்ட கற்களால் அழகான வீடுகளைக் கட்டுகிறீர்கள்.
    ஆனால் அவ்வீடுகளில் நீங்கள் வாழமாட்டீர்கள்.
நீங்கள் அழகான திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்கிறீர்கள்.
    ஆனால் நீங்கள் அவற்றிலிருந்து மதுவைக் குடிக்கமாட்டீர்கள்.
12 ஏனென்றால் நான் உங்களது அநேகப் பாவங்களை அறிவேன்.
நீங்கள் சில தீயச் செயல்களைச் செய்திருக்கிறீர்கள்.
    நீங்கள் நேர்மையானவர்களைப் புண்படுத்துகிறீர்கள்.
    நீங்கள் தீமை செய்யப் பணம் வாங்குகிறீர்கள்.
    நீங்கள் ஏழைகளுக்கு வழக்கு மன்றங்களில் நீதி வழங்குவதில்லை.
13 அப்போது ஞானமிக்க ஆசிரியர்கள் அமைதியாக இருப்பார்கள்.
    ஏனென்றால் இது கெட்ட நேரம்.
14 நீங்கள் தேவன் உங்களோடு இருப்பதாகச் சொல்கிறீர்கள்.
    எனவே நீங்கள் தீமையையல்ல, நன்மையைச் செய்யவேண்டும்.
அப்போது நீங்கள் வாழ்வீர்கள்.
    சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உண்மையில் உங்களோடு இருப்பார்.
15 தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்.
    வழக்கு மன்றங்களுக்கு நியாயத்தைக் கொண்டு வாருங்கள்.
பிறகு சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்
    யோசேப்பு குடும்பத்தில் மீதியிருப்பவர்களிடம் இரக்கமாயிருப்பார்.

பெருந்துக்க காலம் வந்து கொண்டிருக்கிறது

16 என் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள தேவன் கூறுகிறார்.
“ஜனங்கள் பொது இடங்களில், அழுதுகொண்டிருப்பார்கள்.
    ஜனங்கள் தெருக்களில் அழுதுகொண்டிருப்பார்கள்.
    ஜனங்கள் ஒப்பாரி வைப்பவர்களை வாடகைக்கு அமர்த்துவார்கள்.
17 ஜனங்கள் திராட்சைத் தோட்டங்களில் அழுதுகொண்டிருப்பார்கள்.
    ஏனென்றால் நான் அவ்வழியே கடந்துபோய் உன்னைத் தண்டிப்பேன்” என்று கர்த்தர் கூறினார்.
18 உங்களில் சிலர்
    கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய நாளைப்பார்க்க விரும்புகிறீர்கள்.
நீங்கள் அந்நாளை ஏன் பார்க்க விரும்புகிறீர்கள்?
    கர்த்தருடைய அந்தச் சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தையே கொண்டு வரும்.
19 நீங்கள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடி வந்த ஒருவன்,
    கரடியால் தாக்கப்பட்டது போன்று ஆவீர்கள்.
நீங்கள், ஒருவன் பாதுகாப்பிற்காகத்
    தன் வீட்டிற்குள் நுழைந்து சுவற்றில் சர்ய்ந்தபோது.
    பாம்பால் கடிக்கப்பட்டவனைப் போன்று இருப்பீர்கள்.
20 கர்த்தருடைய சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தைக் கொண்டு வரும்.
    அந்நாள் மகிழ்ச்சியை கொண்டு வராது ஆனால் துக்கத்தைக் கொண்டு வரும்.
    அந்நாள் கொஞ்சமும் ஒளி இல்லாத அந்தகாரமான நாளாயிருக்கும்.

இஸ்ரவேலின் தொழுதுகெள்ளுதலை கர்த்தர் ஏற்க மறுக்கிறார்

21 “நான் உங்கள் விடுமுறை நாட்களை வெறுக்கிறேன்.
    நான் அவற்றை ஏற்கமாட்டேன்.
    நான் உங்கள் ஆன்மீகக் கூட்டங்களால் மகிழவில்லை.
22 நீங்கள் தகனபலியையும் தானியக் காணிக்கையையும் எனக்குக் கொடுத்தாலும்
    நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
நீங்கள் தரும் சமாதான பலியில் உள்ள
    கொழுத்த மிருகங்களைப் பார்க்கக்கூடமாட்டேன்.
23 நீங்கள் இங்கிருந்து உங்கள் இரைச்சலான பாடல்களை அகற்றுங்கள்.
    நான் உங்கள் வீணைகளில் வரும் இசையைக் கேட்கமாட்டேன்.
24 நீங்கள் உங்கள் நாட்டில் நியாயத்தை ஆற்றைப்போன்று ஓடவிடவேண்டும்.
    நன்மையானது ஓடையைப் போன்று உங்கள் நாட்டில் வற்றாமல் ஓடட்டும்.
25 இஸ்ரவேலே, நீங்கள் எனக்கு பலிகளையும்
    காணிக்கைகளையும் வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாகக் கொடுத்தீர்கள்.
26 ஆனால் நீங்கள் உங்கள் அரசனான சக்கூத், கைவான் சிலைகளையும் சுமந்தீர்கள்.
    நீங்களாக நட்சத்திரத்தை உங்கள் தெய்வமாக்கினீர்கள்.
27 எனவே நான் உங்களை தமஸ்குவுக்கு அப்பால்
    சிறையாகச் செல்லச் செய்வேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள தேவன்.

லூக்கா 1:1-38

லூக்காவின் நோக்கம்

அன்பான தெயோப்பிலுவே,

நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர். வேறு சில மக்களிடமிருந்து நாம் கேட்டறிந்த செய்திகளையே அவர்கள் எழுதியிருந்தார்கள். இம்மக்கள் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கண்டவர்களும், தேவனுடைய நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்துகொண்டிருந்தவர்களும் ஆவார்கள். மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாகக் கற்று அறிந்தேன். அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன். எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன். உங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிற அனைத்தும் உண்மையே என்பதை நீங்கள் அறியும்பொருட்டு இவற்றை எழுதுகிறேன்.

சகரியாவும் எலிசபெத்தும்

ஏரோது யூதேயாவை ஆண்ட காலத்தில் சகரியா என்னும் ஆசாரியன் வாழ்ந்து வந்தான். சகரியா அபியாவின் பிரிவினரைச் [a] சார்ந்தவன். ஆரோனின் குடும்பத்தாரைச் சார்ந்தவள் சகரியாவின் மனைவி. அவள் பெயர் எலிசபெத். தேவனுக்கு முன்பாக சகரியாவும், எலிசபெத்தும் உண்மையாகவே நல்லவர்களாக வாழ்ந்தார்கள். தேவன் கட்டளையிட்டவற்றையும், மக்கள் செய்யும்படியாகக் கூறியவற்றையும் அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் குற்றமற்றவர்களாகக் காணப்பட்டனர். ஆனால், சகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் குழந்தைகள் இல்லை. எலிசபெத் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லை. அதோடு இருவரும் முதியோராக இருந்தனர்.

தன் மக்களுக்காக தேவனுக்கு முன்னர் ஒரு ஆசாரியனாக சகரியா பணியாற்றி வந்தான். தேவனின் பணியை அவனது பிரிவினர் செய்ய வேண்டிய காலம் அது. நறுமணப் புகையைக் காட்டுவதற்காக ஆசாரியர் தங்களுக்குள் ஒருவரை எப்போதும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். சகரியா அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். எனவே சகரியா தேவாலயத்திற்குள் நறுமணப்புகை காட்டுவதற்காகச் சென்றான். 10 ஏராளமான மக்கள் வெளியே இருந்தனர். நறுமணப்புகை காட்டும்போது அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.

11 அப்போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான். 12 தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான். 13 ஆனால் தூதன் அவனைப் பார்த்து, “சகரியாவே, பயப்படாதே. உனது பிரார்த்தனையை தேவன் கேட்டார். உனது மனைவியாகிய எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. 14 நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர். 15 கர்த்தருக்காகப் பெரிய மனிதனாக யோவான் விளங்குவான். அவன் திராட்சை இரசமோ, மதுபானமோ பருகுவதில்லை. பிறக்கிறபோதே பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக யோவான் காணப்படுவான்.

16 “நம் தேவனாகிய கர்த்தரிடம் பல யூதர்கள் திரும்புவதற்கு யோவான் உதவுபவன். 17 கர்த்தருக்கு முன்பாக யோவான் முன்னோடியாகச் செல்வான். எலியாவைப் போல் யோவானும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பான். எலியாவின் ஆவியை உடையவனாக அவன் இருப்பான். தந்தையருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே அமைதி நிலவும்படியாகச் செய்வான். பல மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் சரியானதென்று மக்கள் எண்ணவேண்டிய பாதைக்கு யோவான் அழைத்து வருவான். கர்த்தரின் வருகைக்கு மக்களை யோவான் தயார் செய்வான்” என்றான்.

18 சகரியா தூதனை நோக்கி, “நீங்கள் சொல்வது உண்மையென்று நான் எவ்வாறு அறிய முடியும்? நான் வயது முதிர்ந்தவன். என் மனைவியும் வயதானவள்” என்றான்.

19 தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். 20 இப்போது கேட்பாயாக! இந்தக் காரியங்கள் நடக்கும் நாள்வரைக்கும் நீ பேச முடியாதிருப்பாய். உனது பேசும் சக்தியை நீ இழப்பாய், ஏன்? நான் கூறியதை நீ நம்பாததாலேயே இப்படி ஆகும். ஆனால் இவை அனைத்தும் அதனதன் சரியான சமயத்தில் உண்மையாகவே நடக்கும்” என்றான்.

21 வெளியே சகரியாவுக்காக மக்கள் காத்திருந்தனர். அவன் ஆலயத்தின் உள்ளே வெகு நேரம் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். 22 அப்போது சகரியா வெளியே வந்தான். ஆனால் அவர்களோடு பேச முடியவில்லை. அவன் ஆலயத்திற்குள் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். சகரியாவால் பேச முடியவில்லை. மக்களுக்குச் சைகைகளையே காட்ட முடிந்தது. 23 சகரியா, ஆலயப் பணி முடிந்ததும் தன் வீட்டுக்குச் சென்றான்.

24 பின்னர் சகரியாவின் மனைவி எலிசபெத் கருவுற்றாள். ஆகவே, அவள் ஐந்து மாதங்கள் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. பின் எலிசபெத், 25 “தேவன் எனக்குச் செய்திருப்பதைப் பாருங்கள். எனது மக்கள் என் நிலையை எண்ணி வெட்கி இருந்தனர். ஆனால் கர்த்தர் அந்த அவமானத்தைப் போக்கி விட்டார்” என்று கூறினாள்.

கன்னி மரியாள்

26-27 எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதத்தில் தேவன் காபிரியேல் என்னும் தூதனை கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் பட்டணத்தில் வாழ்ந்த ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு என்ற மனிதனை மணம் புரிவதற்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பெயர் மரியாள். 28 தூதன் அவளிடம் வந்து, “கர்த்தர் உன்னோடிருக்கிறார். அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார்” என்றான்.

29 தூதன் கூறியவற்றைக் கேட்டு மரியாள் மிகவும் குழப்பம் அடைந்தாள். “இதன் பொருள் என்ன?” என்று மரியாள் அதிசயித்தாள்.

30 தூதன் அவளிடம், “பயப்படாதே மரியாளே. தேவன், உன்னிடம் பிரியமாயிருக்கிறார். 31 கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. 32 அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். 33 சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒருபோதும் முடிவுறுவதில்லை” என்றான்.

34 மரியாள் தூதனை நோக்கி, “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள்.

35 தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். 36 உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு மகனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம். 37 தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்” என்றான்.

38 மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center