M’Cheyne Bible Reading Plan
25 எனவே, பாபிலோன் அரசனும், அவனது படைகளும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். இது சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளில் நடந்தது. நேபுகாத்நேச்சார் தன் படையை நிறுத்தி நகரத்திற்குள் யாரும் போகாமலும் வெளியேறாமலும் தடுத்துவிட்டான். பின் நகரத்தைச்சுற்றி கொத்தளச்சுவரைக் கட்டினான். 2 யூத நாட்டின் அரசனாகிய சிதேக்கியாவின் 11ஆம் ஆட்சியாண்டுவரை நேபுகாத்நேச்சாரின் படை எருசலேமைச் சுற்றிலும் தங்கியிருந்தது. 3 நகரத்தின் நிலையைப் பஞ்சம் மேலும் மோசமாக்கிற்று. நாலாவது மாதத்தின் ஒன்பதாம் நாளில் பொது ஜனங்களுக்கு உண்ண உணவே இல்லை என்ற நிலை வந்தது.
4 நேபுகாத்நேச்சாரின் படை இறுதியில் நகரச் சுவரை உடைத்தது. அன்று இரவு சிதேக்கியாவும் அவனது ஆட்களும் வெளியே ஓடிப்போனார்கள். அவர்கள் இரகசிய கதவைப் பயன்படுத்தி அரசனின் தோட்டத்தின் வழியே இரு மதில்களுக்கு நடுவே ஓடிப்போயினர். பகைவரின் படை நகரைச் சுற்றிலும் இருக்க பாலைவனத்திற்குச் செல்லும் வழியே தப்பிச் சென்றார்கள். 5 பாபிலோன் படை அவர்களைத் துரத்திப் போய் எரிகோ சமவெளியில் பிடித்துக்கொண்டது. சிதேக்கியாவை விட்டுவிட்டு அவனது வீரர்கள் தப்பித்துக்கொண்டனர்.
6 பாபிலோனியர்கள் சிதேக்கியாவைப் பிடித்து ரிப்லாவிலிருந்த பாபிலோனிய அரசனிடம் கொண்டு சென்றார்கள். அவர்கள் அவனைத் தண்டிக்க விரும்பினார்கள். 7 சிதேக்கியாவின் மகன்களை அவன் கண் முன்னாலேயே கொன்றனர். பின் இவனது கண்களைப் பிடுங்கினார்கள். பிறகு சங்கிலியால் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.
எருசலேம் அழிக்கப்படுகிறது
8 நேபுகாத்நேச்சாரின் 19வது ஆட்சியாண்டின் ஐந்தாம் மாதத்தின் ஏழாவது நாளில் நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நெபுசராதான் பாபிலோனிய அரசனது பெரிய படையின் ஆணை அதிகாரியாக இருந்தான். 9 இவன் கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மணையையும் பெரிய வீடுகளையும் கட்டிடங்களையும் எரித்தான். 10 எருசலேமை சுற்றியிருந்த சுவரையும் நெபுசராதானின் பாபிலோனிய படை உடைத்து தள்ளியது. 11 பாபிலோனிய படையின் ஆணை அதிகாரியான நெபுசராதான் நகரத்தில் மேலும் மீதியாக இருந்த ஜனங்களையும் பாபிலோனிய அரசனுக்கு வெளியே விழுந்து அழிந்தவர்களையும்கூட (ஆள முயன்றவர்களையும்) இவன் கைது செய்து நாடு கடத்திவிட்டான். 12 அவன் மிக எளிய ஜனங்களையே அங்கே தங்கும்படிவிட்டான். இவர்கள் இங்குள்ள திராட்சைத் தோட்டங்களையும் பயிர்களையும் பார்த்துக்கொண்டனர்.
13 பாபிலேனிய வீரர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள வெண்கல தூண்களை எல்லாம் உடைத்துப்போட்டனர். அதோடு வெண்கல அடிப்பகுதிகளையும், வண்டிகள், தொட்டிகள் போன்றவற்றையும் உடைத்தனர். பின் அவற்றைப் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர். 14 பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த செப்புச் சட்டிகள், சாம்பல் பாத்திரங்கள், கத்திகள், தூபகலசங்கள், ஆராதனைக்கு பயன்படும் சகலக் கருவிகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர். 15 நெபுசராதானும் படைத்தலைவனும் சுத்தப் பொன்னிலும் வெள்ளியிலுமான தூபகலசங்களை எடுத்துக்கொண்டனர். 16-17 எனவே இவர்கள் எடுத்துக்கொண்டவை: இரண்டு தூண்கள் ஒவ்வொன்றும் 27 அடி உயரமும் 4 1/2 அடி உயரமுள்ள வெண்கலத்தலைப்பும் உடையவை. இவை வெண்கலத்தால் பின்னலும் மாதுளம் பழங்களுமான மாதிரியில் செய்யப்பட்டிருந்தன. இரண்டும் ஒரே மாதிரியாய் இருந்தன. ஒரு பெரிய வெண்கலத்தொட்டி கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோனால் செய்துவைக்கப்பட்ட வண்டிகள். இவ்வெண்கலத்தின் எடையானது அளந்து காணமுடியாத அளவிற்கு இருந்தது.
யூத ஜனங்கள் கைதிகளாதல்
18 நெபுசராதான், தலைமை ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாயில் காப்பாளர் மூவரையும் ஆலயத்திலிருந்து கைப்பற்றினான்.
19 நகரத்திலிருந்து நெபுசராதான் படைக்குப் பொறுப்பான 1 அதிகாரியையும், நகரத்திலேயிருந்த 5 அரச ஆலோசகர்களையும், 1 படைத்தளபதியினுடைய செயலாளர். அவன்தான் பொது ஜனங்களின் ஜனத்தொகையை கணக்கெடுத்து அவர்களில் சிலரைப் படைவீரர்களாகத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்த 1 படைத்தளபதியினுடைய செயலாளரையும், நகரத்தில் அகப்பட்ட 60 பேர்களையும் எடுத்துக்கொண்டான்.
20-21 பிறகு நெபுசராதான் அவர்கள் அனைவரையும் பாபிலோனுக்கு அழைத்துச் சென்று ரிப்லாவில் இருந்த பாபிலோனிய அரசனிடம் கொண்டு போனான். அவர்களைப் பாபிலோன் அரசன் ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லா என்னும் இடத்தில் வெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறே யூத ஜனங்களும் தங்கள் தேசத்திலிருந்து சிறைக்கு கொண்டுப்போகப்பட்டனர்.
யூத நாட்டின் ஆளுநரான கெதலியா
22 யூத நாட்டிலே சிலரை மட்டுமே பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் விட்டு வைத்தான், அங்கு சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனாகிய கெதலியா இருந்தான். யூத ஜனங்களுக்கு ஆளுநராக நெபுசராதான் கெதலியாவை ஆக்கினான்.
23 நெத்தானியாவின் மகனான இஸ்மவேலும், கரேயாவின் மகனான யோகனானும் நெத்தோப் பாத்தியனாகிய தன்கூமேத்தின் மகன் செராயாவும் மாகாத்தியன் ஒருவனது மகன் யசனியாவும் படை அதிகாரிகளாவார்கள். இவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் கெதலியாவை யூத ஆளுநராக ஆக்கியதுபற்றி கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மிஸ்பாவிற்குப் போய் கெதலியாவை சந்தித்தனர். 24 கெதலியா அவர்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தான். அவன், “பாபிலோனிய அதிகாரிகளுக்குப் பயப்படவேண்டாம். இங்கிருந்து அரசருக்கு சேவைச் செய்க. பிறகு உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கும்” என்றான்.
25 எலிசாமாவின் மகனாகிய நெத்தானியாவின் மகன் இஸ்மவேல் அரச குடும்பத்திலிருந்து வந்தவன். ஏழாவது மாதத்தில் அவன் பத்து பேரோடு மிஸ்பாவுக்கு வந்து கெதலியாவையும் அவனோடு இருந்த யூதர்களையும் பாபிலேனியர்களையும் கொன்றுபோட்டான். 26 பிறகு படை அதிகாரிகளும் ஜனங்களும் எகிப்துக்கு ஓடிப்போனார்கள். அப்போது முக்கியமுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று அனைவரும் ஓடிப்போனார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பாபிலோனியர்களிடம் பயம் அதிகம்.
27 பிறகு பாபிலோனின் அரசனாக ஏவில் மெரொதாக் ஆனான். இவன் யூத அரசனான யோயாக்கீனை விடுதலை செய்தான். இது இவன் சிறைப்பட்ட 37வது ஆண்டு. தான் ஆட்சிக்கு வந்த 12வது மாதத்தின் 27வது நாளில் செய்தான். 28 ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் கருணையோடு இருந்தான். அவன், பாபிலோனில் (கைது செய்யப்பட்டு) இருந்த மற்ற அரசர்களைவிட யோயாக்கீனுக்கு நல்ல இருக்கை அளித்தான். 29 யோயாக்கீன் கைதியின் ஆடை அணிவதை அரசன் தடுத்துவிட்டான். அவன் அரசனோடு சமமாக ஒரே மேஜையில் அமர்ந்து தனது மீதியான காலம் முழுவதும் உணவு உண்டான். 30 ஏவில்மெரொதாக், யோயாக்கீனுக்கு அவனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உணவளித்து வந்தான்.
ஆசாரியன் மெல்கிசேதேக்
7 மெல்கிசேதேக் சாலேமின் அரசன். அவன் மிக உயர்ந்த தேவனுடைய ஆசாரியனுமாகவும் இருந்தான். அரசர்களை வென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை மெல்கிசேதேக் சந்தித்து ஆசிவழங்கினான். 2 அதன் பிறகு, பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் அவனுக்குக் கொடுத்தான்.
(சாலேமின் அரசனான மெல்கிசேதேக் என்ற பெயருக்கு இரு பொருள் உண்டு. மெல்கிசேதேக் என்பதற்கு “நன்மையின் அரசன்” என்ற பொருளும் “சலேமின் அரசன்” என்பதற்கு “சமாதானத்தின் அரசன்” என்ற பொருளும் உண்டு.) 3 இவனது தாய் தந்தையரைப் பற்றி எவருக்கும் தெரியாது. எங்கிருந்து வந்தான் என்றும் தெரியாது. எங்கே பிறந்தான், எப்போது இறந்தான் என்றும் ஒருவருக்கும் தெரியாது. இவன் தேவனுடைய குமாரனைப் போன்றவன். அவன் என்றென்றைக்கும் ஆசாரியனாகவே இருக்கிறான்.
4 போரில் கைப்பற்றிய பொருள்களில் பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் இவனுக்குக் கொடுத்ததின் மூலம் இவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். 5 இப்போது லேவியின் வாரிசுதாரர்களாக உள்ள ஆசாரியர்கள் இஸ்ரவேலைச் சேர்ந்த மக்களிடமிருந்து பத்தில் ஒருபாகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்டம் கூறுகிறது. அதாவது ஆபிரகாமின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் கூட மக்களிடமிருந்து இந்த பத்தில் ஒரு பங்கை அவர்கள் வசூலிக்கிறார்கள். 6 இப்பொழுது மெல்கிசேதேக் ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு தேவனுடைய விசேஷ வாக்குறுதிகளை பெற்ற ஆபிரகாமை ஆசீர்வதித்தான். 7 மிகப் பெரிய மனிதர்களே சிறியவர்களை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
8 ஒரு புறத்தில் வாழ்ந்து மடிகிற ஆசாரியர்களால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. இன்னொரு புறத்தில் இன்னும் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிற மெல்கிசேதேக்கால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. 9 உண்மையில், ஆபிரகாமின் மூலமாக லேவியே பத்தில் ஒரு பாகத்தை மெல்கிசேதேக்குக்கு கொடுத்தான் என்று கூட நீங்கள் சொல்லக் கூடும். 10 ஏன்? ஏனெனில் மெல்கிசேதேக் ஆபிரகாமைச் சந்தித்தபோது லேவி இன்னும் பிறந்திருக்கவில்லை. தன் முன்னோரான ஆபிரகாமின் சரீரத்திலேயே இன்னும் அவன் இருந்தான்.
11 லேவி பரம்பரை ஆசாரிய முறைமைகளை அடிப்படையாய்க் கொண்ட சட்டத்தை [a] இஸ்ரவேல் மக்கள் பெற்றார்கள். ஆனால் இம்முறைமையினால் மக்கள் ஆன்மீக முதிர்ச்சியை அடைய முடியவில்லை, ஆரோனைப் போல அல்லாமல் மெல்கிசேதேக் போன்ற வேறொரு ஆசாரியன் அவசியமானார். 12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டால் நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். 13 எப்போதும் ஒரு ஆசாரியனாக சேவை செய்திராத ஒரு குடும்பக் குழுவினைச் சேர்ந்த ஒரு மனிதரைப் பற்றி இப்பகுதிகள் பேசுகின்றன. 14 நமது கர்த்தர் யூதாவின் குடும்பக் குழுவிலிருந்து வந்தவர் என்பது தெளிவு. மோசேயும் இந்தக் குடும்பக் குழுவிலிருந்து வரும் ஆசாரியர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.
மெல்கிசேதேக்கைப் போன்று இயேசுவும் ஒரு ஆசாரியர்
15 மெல்கிசேதேக் போன்ற ஒரு வித்தியாசமான ஆசாரியர் வருவார் என்பதால் இது மேலும் தெளிவாகிறது. 16 மாம்சீகமான பரம்பரை பற்றிய சில சட்டங்களினால் ஆசாரியனாகாமல் அழிக்க முடியாத ஜீவனுக்குரிய வல்லமையால் அவர் ஆசாரியனாகிறார். 17 “நீர் மெல்கிசேதேக்கைப் போன்று என்றென்றைக்கும் உரிய ஆசாரியராக இருக்கிறீர்” [b]என்று வேதவாக்கியங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.
18 ஆகவே அந்தப் பழைய சட்டம் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில் பழைய சட்டம் பலவீனமானதும், பயனற்றதுமாய் இருந்தது. 19 மோசேயின் நியாயப்பிரமாணமானது எதையும் முழுமை ஆக்கவில்லை. எனவே சிறிதளவேனும் நல்ல நம்பிக்கை நமக்கு கொடுக்கப்பட்டது. மேலும் அதன் மூலமாகத்தான் தேவனுக்கு அருகில் வருகிறோம்.
20 இது மிக முக்கியமானது. மற்றவர்களை ஆசாரியர்களாக்கியபோது ஆணை எதுவும் கொடுக்கப்படவில்லை. 21 ஆனால் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக்கியபோது தேவன் பிரமாணம் கொடுத்தார்.
“‘நீரே என்றென்றைக்கும் ஆசாரியனாக இருக்கிறீர்’
என்று கர்த்தர் ஆணையிட்டுரைத்தார்.
மேலும் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்” (A)
என்றும் அவர் சொன்னார்.
22 மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு [c] இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.
23 ஏனைய ஆசாரியர்கள் இறந்தார்கள். எனவே நிறைய ஆசாரியர்கள் இருக்க வேண்டும். 24 இயேசுவே என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியவர். எனவே மாறா ஆசாரியத்துவம் கொண்டுள்ளார். 25 எனவே தன் மூலமாக தேவனிடம் வருகிறவர்களை இயேசுவால் முழுமையாக இரட்சிக்க முடியும். ஏனெனில் நமக்காகப் பரிந்து பேச இயேசு எப்பொழுதும் வாழ்கிறார்.
26 ஆகவே, இயேசுவே நமக்குத் தேவையான சிறந்த பிரதான ஆசாரியர். அவர் பரிசுத்தமானவர். அவரிடம் எவ்விதப் பாவங்களும் இல்லை. அவர் குற்றமில்லாதவர். பாவிகளால் பாதிக்கப்படாதவர். இவர் பரலோகத்தில் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார். 27 இவர் மற்ற ஆசாரியர்களைப் போன்றவரல்லர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பலிசெலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் முதலாவது தங்கள் பாவங்களுக்காகவும், பின்பு மக்களின் பாவங்களுக்காகவும் பலி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இவரோ அவ்வாறில்லை. அத்தகைய தேவையும் இவருக்கில்லை. இவர் தன்னையே பலிகொடுத்திருக்கிறார். அதுவே என்றென்றைக்கும் போதுமானது. 28 மோசேயின் சட்டம் மனிதர்களை ஆசாரியர்களாக நியமிக்கிறது. அம்மனிதர்களுக்கு பலவீனமிருந்தது. ஆனால் ஆணை அடங்கிய அந்தப் பகுதி சட்டத்திற்குப் பிறகு வருகிறது. மேலும் அது என்றென்றைக்குமாக பரிசுத்தமாக்கப்பட்ட தேவனுடைய குமாரனான இயேசுவைப் பிரதான ஆசாரியராக நியமித்தது.
முன்னுரை
1 இது ஆமோஸின் செய்தி, ஆமோஸ் தெக்கோவா நகரைச் சேர்ந்த மேய்ப்பர்களில் ஒருவன். ஆமோஸ் இஸ்ரவேலைப்பற்றி, யூதாவின் அரசனாக உசியா இருந்த காலத்திலும் இஸ்ரவேலின் அரசனாக யோவாசின் மகன் யெரொபெயாமின் காலத்திலும் தரிசனங்களைக் கண்டான். இது பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
சீரியாவிற்கு எதிரான தண்டனை
2 ஆமோஸ் சொன்னான்:
கர்த்தர் சீயோனில் ஒரு சிங்கத்தைப் போன்று சத்தமிடுவார்.
அவரது உரத்த சப்தம் எருசலேமிலிருந்து கெர்ச்சிக்கும்.
மேய்ப்பர்களின் பசுமையான மேய்ச்சல் இடம் வறண்டு மடியும்.
கர்மேல் மலையும் காய்ந்து போகும்.
3 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் தமஸ்குவின் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காக நிச்சயம் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கீலேயாத் ஜனங்களை இரும்பு ஆயுதங்களினால் நசுக்கினார்கள். 4 எனவே நான் ஆசகேலின் வீட்டில் நெருப்பை பற்றவைப்பேன். அந்த நெருப்பு பெனாதாதின் மிகப்பெரிய அரண்மனைகளை அழிக்கும்.
5 “நான் தமஸ்குவின் வாசலில் போடப்பட்டுள்ள தாழ்ப்பாளை உடைப்பேன். நான் ஆவேன் பள்ளதாக்கின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பவனை அழிப்பேன். நான் பெத்ஏதேனிலிருந்து வல்லமையின் சின்னத்தை விலக்கிப்போடுவேன். சீரியாவின் ஜனங்கள் தோற்றகடிக்கப்படுவார்கள். ஜனங்கள் அவர்களைக் கீர் நாட்டுக்குக் கொண்டு செல்வார்கள்” என்று கர்த்தர் கூறினார்.
பெலிஸ்தியர்களுக்கான தண்டனை
6 கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக காத்சா ஜனங்களை அவர்களின் பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் நாட்டு ஜனங்களையெல்லாம் சிறைபிடித்து ஏதோமுக்குக் கைதிகளாகக் கொண்டுபோனார்கள். 7 எனவே நான் காத்சாவின் மதிலுக்குள் நெருப்பை அனுப்புவேன். இந்த நெருப்பு காத்சாவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும். 8 நான் அஸ்தோத்தின் சிங்காசனத்தில் இருப்பவனை அழிப்பேன். நான் அஸ்கலோனின் செங்கோலைத் தாங்கியிருப்பவனை அழிப்பேன். நான் எக்ரோன் ஜனங்களைத் தண்டிப்பேன் பிறகு மீதமுள்ள பெலிஸ்தியர்களும் மரிப்பார்கள்” தேவனாகிய கர்த்தர் கூறினார்.
பொனிசியாவின் தண்டனை
9 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: “நான் நிச்சயமாக தீரு ஜனங்களை அவர்களது பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் ஒரு நாடு முழுவதையும் சிறைபிடித்து ஏதோமுக்கு அடிமைகளாக அனுப்பினார்கள். அவர்கள் தம் சகோதரர்களோடு (இஸ்ரவேல்) செய்த உடன்படிக்கையை நினைவு கொள்ளவில்லை. 10 எனவே நான் தீருவின் சுவர்களில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு தீருவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.”
ஏதோமியர்களுக்கான தண்டனை
11 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் ஏதோம் ஜனங்களை அவர்களின் பல குற்றங்களுக்காக நிச்சயம் தண்டிப்பேன். ஏனென்றால் ஏதோம் தன் சகோதரன் இஸ்ரவேலை வாளோடு துரத்தினான். ஏதோம் இரக்கம் காட்டவில்லை. ஏதோமின் கோபம் இடைவிடாமல் தொடர்ந்து காட்டு மிருகங்களைப்போல இஸ்ரவேலர்களைக் கிழித்துக் கொண்டிருந்தான். 12 எனவே, நான் தேமானில் நெருப்பைப் பற்ற வைப்பேன். அந்நெருப்பு போஸ்றாவின் உயர்ந்த கோபுரங்களை எரித்துப்போடும்.”
அம்மோனியர்களுக்கான தண்டனை
13 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக அம்மோன் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கீலேயாத் நாட்டில் கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றார்கள். அம்மோனியர்கள் இதனைச் செய்து தங்கள் நாட்டு எல்லைகளை விரித்தார்கள். 14 எனவே நான் ரப்பாவின் மதிலில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்நெருப்பு ரப்பாவின் உயர்ந்த கோபுரங்களை எரித்து அழிக்கும். அவர்களின் நாட்டிற்குள் துன்பமானது சுழல்காற்றைப்போன்று வரும். 15 பிறகு அவர்களின் அரசனும் தலைவர்களும் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாகப் பிடிக்கப்படுவார்கள்”. என்று கர்த்தர் கூறினார்.
தாவீதின் ஒரு பாடல்
144 கர்த்தர் என் கன்மலை.
கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தர் என்னைப் போருக்குப் பழக்கப்படுத்துகிறார்.
கர்த்தர் என்னை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
2 கர்த்தர் என்னை நேசித்து என்னைப் பாதுக்காக்கிறார்.
மலைகளின் உயரத்தில் கர்த்தரே என் பாதுகாப்பிடம்.
கர்த்தர் என்னை விடுவிக்கிறார்.
கர்த்தர் எனது கேடகம்.
நான் அவரை நம்புகிறேன்.
நான் என் ஜனங்களை ஆள்வதற்கு கர்த்தர் உதவுகிறார்.
3 கர்த்தாவே, நீர் ஏன் ஜனங்களை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்?
நீர் ஏன் அவர்களைக் கண்ணோக்கிக்கொண்டு இருக்கிறீர்?
4 ஊதும் காற்றைப்போன்று ஒருவனின் வாழ்க்கை உள்ளது.
மறையும் நிழலைப் போன்றது மனித வாழ்க்கை.
5 கர்த்தாவே, வானங்களைக் கிழித்துக் கீழே வாரும்.
மலைகளைத் தொடும், அவற்றிலிருந்து புகை எழும்பும்.
6 கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும்.
உமது “அம்புகளைச்” செலுத்தி அவர்கள் ஓடிப்போகச் செய்யும்.
7 கர்த்தாவே, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றும்!
பகைவர்களின் கடலில் நான் அமிழ்ந்துபோக விடாதேயும்.
இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 இப்பகைவர்கள் பொய்யர்கள்.
அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
9 கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன்.
நான் உம்மைத் துதிப்பேன். பத்து நரம்பு வீணையை நான் மீட்டுவேன்.
10 அரசர்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார்.
பகைவர்களின் வாள்களிலிருந்து கர்த்தர் அவரது ஊழியனாகிய தாவீதைக் காப்பாற்றினார்.
11 இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
இப்பகைவர்கள் பொய்யர்கள்.
அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
12 நம் இளமகன்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள்.
நம் இளமகள்கள் அரண்மனையின் அழகிய அலங்கார ஒப்பனைகளைப் போன்றிருக்கிறார்கள்.
13 நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன.
நம் வயல்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் உள்ளன.
14 நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
எந்தப் பகைவனும் உள்ளே நுழைய முயலவில்லை.
நாங்கள் போருக்குச் செல்லவில்லை.
ஜனங்கள் நம் தெருக்களில் கூக்குரல் எழுப்பவில்லை.
15 இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
கர்த்தர் அவர்கள் தேவனாக இருக்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
2008 by World Bible Translation Center