M’Cheyne Bible Reading Plan
சட்டங்களை ஜனங்கள் கேட்கிறார்கள்
23 தன்னை சந்திக்கும்படி யூதர் தலைவர்களையும் எருசலேம் தலைவர்களையும் அரசன் யோசியா அழைத்தான். 2 பிறகு அரசன் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். யூத ஜனங்களும் எருசலேமிலுள்ள ஜனங்களும் அவனோடு சென்றனர். ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களுள் முக்கியமானவர்களும் முக்கியம் இல்லாதவர்களும் அவனோடு சென்றனர். பிறகு அரசன் உடன்படிக்கைப் புத்தகத்தை வாசித்துக்காட்டினான். இந்த சட்டப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டது. அரசன் அதனை வாசித்தபோது ஜனங்களால் அதனைக் கேட்க முடிந்தது.
3 அரசன் (மேடை மேல்) தூண் அருகே நின்றுக் கொண்டு கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்துக்கொண்டான். கர்த்தரைப் பின்பற்றவும், அவரது கட்டளைகளுக்கும் உடன்படிக்கைக்கும் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். அவன் அதனை முழு மனதோடும் ஆத்துமாவோடும் செய்வதாக ஒப்புக்கொண்டான். இப்புத்தகத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். சுற்றி நின்ற ஜனங்களும் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்வதாக உறுதி கூறினார்கள்.
4 பிறகு அரசன் தலைமை ஆசாரியனான இல்க்கியாவுக்கும் மற்ற ஆசாரியர்களுக்கும் வாயில் காவலர்களுக்கும் பாகாலுக்கும் அசெரியாவிற்கும் வானுலக நட்சத்திரங்களுக்கும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த சகல வழிபாட்டுப் பொருட்களையும் நீக்கி வெளியே போடச் சொன்னான். பிறகு யோசியா அவற்றை எருசலேமிற்கு வெளியே கீதரோன் வெளிகளில் எரித்துப்போட்டான். பின் அவற்றின் சாம்பலை பெத்தேலுக்கு கொண்டுவந்தனர்.
5 யூத அரசன் ஆசாரியர்களாகப் பணி செய்ய மிகச் சாதாரண ஆட்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். இவர்கள் ஆரோன் வம்சத்தில் உள்ளவர்கள் அல்ல. அப்பொய் ஆசாரியர்கள் மேடையில் எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள யூத நகரங்களிலும் நறுமணப் பொருட்களை எரித்து வந்தனர். அவர்கள் பாகால், சூரியன், சந்திரன், கிரகங்கள், வானுலக நட்சத்திரங்கள் போன்றவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். ஆனால் இல்க்கியா அப்போலி ஆசாரியர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்.
6 யோசியா கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அசேரா என்னும் தேவதையின் விக்கிரகத்தை அகற்றினான். அதனை நகரத்திற்கு வெளியே கொண்டு போய் கீதரோன் வெளியில் எரித்துப்போட்டான். பின் அவன் எரிந்தவற்றை அடித்து சாம்பலாக்கி சாதாரண ஜனங்களின் கல்லறையில் தூவிவிட்டான்.
7 பின் அரசனான யோசியா கர்த்தருடைய ஆலயத்திற்குள் விபசாரம் செய்து கொண்டிருந்த ஆண்களின் வீடுகளை நொறுக்கினான். பெண்களும் அவ்வீடுகளைப் பயன்படுத்தி வந்தனர். அசேராவுக்காக என்றும் (பொய்த் தேவதைக்காக) அங்கே சிறு கூடாரங்களை அமைத்திருந்தனர். 8-9 அப்போது, ஆசாரியர்கள் எருசலேமிற்கு பலிகளைக் கொண்டு வந்து ஆலயத்திற்குள் பலியிடவில்லை. ஆசாரியர்கள் யூத நாடு முழுவதிலும் வாழ்ந்தனர். ஆனால் பொய்த் தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து பலியிட்டு வழிபாடு செய்துவந்தனர். இப்பொய் தெய்வங்களுக்கான மேடைகள் கேபா முதல் பெயெர்செபா மட்டும் நிறைந்திருந்தன. ஆசாரியர்கள் சாதாரண ஜனங்களோடு புளிப்பில்லாத அப்பங்களை உண்டு வந்தனர். எருசலேமின் ஆலயத்தில் ஆசாரியர்களுக்கென இருந்த சிறப்பு இடத்தில் அவர்கள் உண்ணவில்லை. ஆனால் அரசன் (யோசியா) அப்பொய்த் தெய்வங்களின் மேடைகளை அழித்து, அந்த ஆசாரியர்களை எருசலேமிற்கு அழைத்து வந்தான். இல்க்கியாவும் பட்டணத்து வாசலுக்குப் போகும் வழியின் இடது புறமிருந்த யோசுவாவினால் கட்டப்பட்ட மேடையை அழித்தான். (யோசுவா அந்நகரை ஆட்சி செய்தவன்).
10 தோப்பேத் இன்னோமின் மகனது பள்ளத்தாக்கிலுள்ள ஒரு இடம். அங்கே ஜனங்கள் தம் பிள்ளைகளைக் கொன்று பலிபீடத்தில் எரித்து மோளேகு என்ற பொய்த்தெய்வத்தை மகிமைப்படுத்தி வந்தனர். அரசன் இந்த இடத்தையும் ஜனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாதபடி அழித்துப்போட்டான். 11 முன்பு, யூத அரசன் கர்த்தரின் ஆலய வாசல் அருகில் குதிரைகளையும் இரதங்களையும் வைத்திருந்தான். இது நாத்தான்மெலெக் எனும் அதிகாரியின் அறையின் அருகில் இருந்தது. இவை சூரியத் தெய்வத்தை சிறப்பிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. அரசன் குதிரைகளை அப்புறப்படுத்திவிட்டு சூரியனின் இரதங்களை எரித்துவிட்டான்.
12 முன்பு, யூத அரசர்கள் ஆகாப் கட்டிடத்தின் கூரைமீது பலிபீடங்களைக் கட்டியிருந்தார்கள். மனாசேயும் கர்த்தருடைய இரு ஆலய முற்றத்திலும் பலிபீடங்களைக் கட்டியிருந்தான். யோசியா இப்பலிபீடங்கள் அனைத்தையும் அழித்து அவற்றின் துண்டுகளையும் தூளையும் கீதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தான்.
13 முன்பு, சாலொமோன் அரசன் எருசலேம் அருகிலுள்ள நாசமலையின் அருகில் பொய்த் தெய்வங்களுக்கான மேடைகளை அமைத்தான். அவை மலையின் தென்புறத்தில் இருந்தன. சீதோனியர்களால் தொழுதுகொள்ளப்பட்ட அருவருப்புமிக்க அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவெருப்பு தெய்வமான காமோசிற்கும், அம்மோனியரின் அருவெருப்பு தெய்வமான மில்கோமுக்கும் மேடைகளை சாலொமோன் அரசன் அமைத்திருந்தான். ஆனால் யோசியா அவையனைத்தையும் அழித்துப் போட்டான். 14 அதோடு யோசியா அரசன் ஞாபகக் கற்களையும் அசெரா என்னும் பெண் தேவதையின் விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கினான். பின் மரித்துப்போனவர்களின் எலும்புகளை அவற்றின் மீது தூவினான்.
15 இவன் பெத்தேலில் உள்ள பலிபீடத்தையும் மேடையையும் உடைத்தெறிந்தான். இப்பலிபீடத்தை நேபாத்தின் மகனான யெரொபெயாம் என்பவன் ஏற்படுத்தியிருந்தான். இவனே இஸ்ரவேலர்களின் பாவத்திற்கு காரணமாக இருந்தான். இவன் அமைத்த பலிபீடம், மேடை ஆகிய இரண்டையும் யோசியா அழித்தான். அவன் பலிபீடக் கல்லை துண்டுத் துண்டாக உடைத்தெறிந்தான். பின் அவற்றைத் தூளாக்கினான். அசேரா விக்கிரகத் தூணையும் எரித்தான். 16 யோசிய திரும்பிபார்த்தபோது மலையின் மீது கல்லறைகளை கண்டான். அவன் ஆட்களை அனுப்பி அவற்றிலுள்ள எலும்புகளை எடுத்துவரச் செய்தான். இப்படி நடக்கும் என்று தீர்க்கதரிசி சொன்னபடியே அவைகளை அந்தப் பலிபீடத்தின் மேல் எரித்தான்.
பின் யோசியா சுற்றிப்பார்த்து தேவமனிதனின் கல்லறையைக் கண்டான்.
17 யோசியா, “நான் பார்க்கும் அந்த நினைவு சின்னம் என்ன?” என்று கேட்டான்.
நகர ஜனங்கள் அவனிடம், “இது யூதாவிலிருந்து வந்த ஒரு தேவமனிதரின் (தீர்க்கதரிசியின்) கல்லறை. பெத்தேல் என்னும் பலிபீடத்தில் நீ செய்தவற்றைப் பற்றி இவர் முன்னரே கூறியுள்ளார்” என்றனர்.
18 யோசியா, “அவரது கல்லறையை விட்டுவிடுங்கள். அவரது எலும்புகளை எடுக்கவேண்டாம்” என்று கூறினான். எனவே அவனது எலும்புகளை சமாரியாவிலிருந்து வெளியே வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு அவர்கள் விட்டுவிட்டனர்.
19 யோசியா சமாரியாவிலுள்ள பொய்த் தெய்வங்களின் மேடைகளையும் அழித்துப்போட்டான். இஸ்ரவேல் அரசர்கள் அவற்றைக் கட்டியிருந்தனர். இதனால் கர்த்தருக்குப் பெருங்கோபம் உண்டாகி இருந்தது. பெத்தேலில் உள்ளவற்றை அழித்தது போலவே, யோசியா இவற்றையும் அழித்துவிட்டான்.
20 சமாரியாவின் பொய்த் தெய்வங்களுக்குத் தொழுகைச்செய்த ஆசாரியர்கள் அனைவரையும் யோசியா கொன்றான். பலிபீடங்களைக் கவனித்த ஆசாரியர்களையும் கொன்றான். மனித எலும்புகளை பலி பீடத்தின் மேல் எரித்தான். இவ்வாறு தொழுகைக்குரிய இடங்கள் எல்லாவற்றையும் கறைப்படுத்தினான். பின் எருசலேமிற்குத் திரும்பிச் சென்றான்.
யூத மக்கள் பஸ்காவைக் கொண்டாடியது
21 யோசியா அரசன் ஜனங்களுக்கு ஒரு கட்டளையிட்டான். அவன், “உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவைக் கொண்டாடுங்கள். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே செய்யுங்கள்” என்றான்.
22 நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆளத் தொடங்கிய நாள் முதல் ஜனங்கள் பஸ்கா பண்டிகையை இந்த விதத்தில் கொண்டாடியதில்லை. இஸ்ரவேல் அரசர்களோ யூத அரசர்களோ இதுபோல் சிறப்பாகப் பஸ்காவை கொண்டாடவில்லை. 23 யோசியாவின் 18வது ஆட்சியாண்டில் அவர்கள் எருசலேமில் கர்த்தருக்காக பஸ்கா பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
24 யோசியா, இஸ்ரவேலிலும் யூதாவிலும் ஜனங்களால் தொழுதுகொண்டு வந்த சிறு தெய்வங்களையும் மற்ற மந்திரவாதிகளையும் குறிச்சொல்லுகிறவர்களையும் விக்கிரகங்களையும் அழித்துவிட்டான். இவன், அதனை இல்க்கியாவால் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சட்டத்திற்குக் கீழ்ப்படியவே இவ்வாறு நடந்துக்கொண்டான்.
25 யோசியாவைப்போன்ற ஒரு அரசன் இதற்கு முன்னால் எப்போதும் இருந்ததில்லை. இவனுக்குப் பின்னும் இருந்ததில்லை. யோசியா தன் முழு மனதோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் கர்த்தருடைய பக்கம் திரும்பினான். வேறு எந்த அரசனும் யோசியாவைப் போன்று மோசேயின் சட்டத்தைப் பின்பற்றவில்லை.
26 ஆனாலும் கர்த்தர் யூத ஜனங்கள் மீது தான் கொண்டக் கோபத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. மனாசே செய்த அனைத்து செயல்களுக்காக கர்த்தர் அவர்கள் மீது இன்னமும் கோபங்கொண்டிருந்தார். 27 கர்த்தர், “நான் இந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலர்களை அகற்றிவிட்டேன். இதையே யூதர்களுக்கும் செய்வேன். அவர்களை என் பார்வையிலிருந்து அப்புறப்படுத்துவேன். என்னால் எருசலேமை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆம் நான் எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அங்குள்ள ஆலயத்தை நான் அழிப்பேன். ‘என் பெயர் அங்கு இருக்கவேண்டும்’ என்று நான் சொன்ன போது குறிபிட்டது இந்த இடத்தை தான்” என்றார்.
28 யோசியா செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
யோசியாவின் மரணம்
29 யோசியாவின் காலத்தில், எகிப்திய அரசனான பார்வோன்நேகோ ஐபிராத்து ஆற்றுக்கு அசீரியாவின் அரசனுக்கு எதிராக போரிடச்சென்றான். யோசியா பார்வோனுக்கு எதிராகப் போரிடப்போனான். ஆனால் மெகிதோ என்ற இடத்தில் யோசியாவை பார்வோன்நேகோ கண்டதும் கொன்றுவிட்டான். 30 மரித்துப்போன யோசியாவின் உடலை அவனது வேலைக்காரர்கள் மெகிதோவிலிருந்து எருசலேமிற்குத் இரதத்தில் எடுத்துச் சென்றனர். அவனது சொந்தக் கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர்.
பிறகு பொது ஜனங்கள் யோசியாவின் மகனான யோவாகாசை அரசனாக அபிஷேகம் செய்து அவனைப் புதிய அரசனாக்கினர்.
யோவாகாஸ் யூதாவின் அரசனாகிறான்
31 யோவாகாஸ் அரசனானபோது, அவனுக்கு 23 வயது. இவன் எருசலேமை மூன்று மாதங்கள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் அமுத்தாள் ஆகும். இவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள் ஆவாள். 32 தவறானவை என்று கர்த்தரால் சொல்லப்பட்டக் காரியங்களையே யோவாகாஸ் செய்துவந்தான். தன் முற்பிதாக்கள் செய்த அதேப் பாவங்களையே அவனும் செய்து வந்தான்.
33 பார்வோன் நேகோ, ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் யோவாகாசைப் பிடித்துக்கட்டினான். இதனால் அவனால் எருசலேமை ஆள முடியவில்லை. பார்வோன் நேகோ யூதாவை வற்புறுத்தி 100 தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாக பெற்றான்.
34 பார்வோன் நேகோ யோவாகாசின் மகனான எலியாக்கீமை புதிய அரசனாக்கினான். எலியாக்கீம் தன் தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். பார்வோன் நேகோ எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். பார்வோன் யோவாகாசை எகிப்துக்கு கொண்டுபோனான். அங்கேயே அவன் மரணமடைந்தான். 35 யோயாக்கீம் பார்வோன் நேகோவிற்கு வெள்ளியும் பொன்னும் அபராதமாக செலுத்தி வந்தான். இவன் இந்த அபராதத்தை ஜனங்கள் மீது வரியாகச் சுமத்தினான். எனவே நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் பொன்னும் வெள்ளியும் கொடுக்க வேண்டிவந்தது. இவற்றைத் தொகுத்து அதை அவன் பார்வோன் நேகோவிற்கு செலுத்தினான்.
36 யோயாக்கீம் அரசனானபோது அவனுக்கு 25 வயது. அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் செபுதாள் ஆகும். அவள் ரூமாவைச் சேர்ந்த பெதாயாமின் மகள் ஆவாள். 37 தவறானவையென்று கர்த்தரால் குறிக்கப்பட்ட காரியங்களையே அவனும் செய்து வந்தான். தன் முற்பிதாக்களைப் போலவே அதே செயல்களைச் செய்தான்.
5 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் ஏனைய மனிதர்களுக்கு உதவும் பொருட்டு மனிதரின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதனே ஆவான். காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும், மற்றும் மக்கள் தேவனுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் அவன் செலுத்துகிறான். 2 அறியாமை உடையவர்களிடமும், தவறு செய்கிறவர்களிடமும் அந்தப் பிராதான ஆசாரியனால் மென்மையாக இருக்க முடிகிறது. ஏனெனில் அவனும் பலவீனத்துக்குட்பட்டவனே ஆவான். 3 இதனால் தான், மற்றவர்களுக்காகக் காணிக்கைகளைச் செலுத்துவதற்கு முன்னால், தன் சொந்தப் பாவங்களுக்காக அவன் காணிக்கை செலுத்த வேண்டும்.
4 பிரதான ஆசாரியனாக இருப்பது ஒரு கௌரவமாகும். ஆனால் தன்னைத் தானே யாரும் பிரதான ஆசாரியனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லை. தேவன் ஆரோனைத் [a] தேர்ந்தெடுத்ததைப் போல், தேவனே அவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும். 5 கிறிஸ்துவின் செயலும் அப்படித்தான். பிரதான ஆசாரியன் ஆகும் பெருமைக்கு அவர் தன்னைத்தானே தேர்ந்தெடுக்கவில்லை. தேவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். அவர் கிறிஸ்துவிடம்,
“நீர் எனது மகன்.
இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்” என்று கூறினார். (A)
6 இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்,
“நீர் எப்பொழுதும் மெல்கிசேதேக்கைப்
போன்று ஆசாரியராக இருப்பீர்” (B)
7 கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, அவர் தேவனிடம் உரத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் பிரார்த்தனை செய்தார். மரணத்திலிருந்து அவரைக் காப்பாற்ற வல்ல ஒருவரிடம் அவர் பிரார்த்தனை செய்தார். தேவன் மீது இயேசுவுக்கு இருந்த மிகுந்த மரியாதையின் காரணமாக தேவன் அப்பிரார்த்தனையை பின்னர் கேட்டார். 8 அவர் தேவனுடைய குமாரனாக இருந்தாலும் கூட அவர் துன்பங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 9 இயேசு முழுமையானவரான பின்னர் தமக்குக் கீழ்ப்படிகிற எல்லாருக்கும் நிரந்தர இட்சிப்பின் காரணரானார். 10 இயேசு, மெல்கிசேதேக்கைப் போன்றே பிரதான ஆசாரியராக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழாதிருக்க எச்சரிக்கை
11 இதுபற்றிச் சொல்ல எங்களிடம் நிறைய காரியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் உங்களுக்கு விளக்கிச் சொல்வது கடினம். ஏனெனில் புரிந்துகொள்ள முயல்வதையே நீங்கள் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள். 12 இப்போதைக்கு, நீங்கள் போதகராக ஆகி இருக்க வேண்டும். ஆனால் இன்னும் தேவனுடைய போதனைகள் என்னும் அடிப்படைப் பாடங்களை உங்களுக்கே யாராவது போதிக்கத் தேவையாய் இருக்கிறது. இன்னும் உங்களுக்குப் பால் உணவே தேவைப்படுகிறது. திட உணவுக்கு நீங்கள் தயாராயில்லை. (அதாவது இன்னும் கடினமான போதனைகள் அல்ல, எளிய போதனைகளே உங்களுக்குத் தேவைப்படுகிறது). 13 இன்னும் பால் தேவையாய் இருக்கிற குழந்தையைப்போல் அடிப்படைப் போதனை தேவையாய் இருக்கிற ஒருவன் சரியாக வாழ்வது பற்றிய சிரமமான போதனைகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவன் இன்னும் ஒரு குழந்தையே! 14 திட உணவானது குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களுக்கு உரியது. நன்மை மற்றும் தீமை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை அனுபவத்தின் வாயிலாக அடையாளம் கண்டுகொள்ள அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது.
வந்துகொண்டிருக்கும் கர்த்தருடைய நாள்
2 சீயோனில் எக்காளம் ஊதுங்கள்.
என் பரிசுத்தமான மலையின் மேல் எச்சரிக்கை சத்தமிடுங்கள்.
இந்நாட்டில் வாழ்கிற எல்லா ஜனங்களும் பயத்தால் நடுங்கட்டும்.
கர்த்தருடைய சிறப்பான நாள் வந்துகொண்டிருக்கிறது.
கர்த்தருடைய சிறப்பு நாள்
அருகில் உள்ளது.
2 அது இருண்ட அந்தகாரமான நாளாக இருக்கும்.
அது இருளும் மந்தாரமுமான நாளாக இருக்கும்.
சூரிய உதயத்தின்போது நீங்கள் மலை முழுவதும் படை பரவியிருப்பதைப் பார்ப்பீர்கள்.
அப்படை சிறந்ததாகவும் வல்லமையுடையதாகவும் இருக்கும்.
இதற்கு முன்னால் எதுவும் இதுபோல் இருந்ததில்லை.
இதற்கு பிறகு எதுவும் இதுபோல் இருப்பதில்லை.
3 படையானது எரியும் நெருப்பைப் போன்று
நாட்டை அழிக்கும்.
அவைகளின் முன்னால் அந்நாடு ஏதேன் தோட்டம் போன்றிருக்கும்.
அதற்குப் பிறகு நாடானது
வெற்று வனாந்தரம் போன்றிருக்கும்.
அவைகளிடமிருந்து எதுவும் தப்பமுடியாது.
4 வெட்டுக்கிளிகள் குதிரைகளைப் போன்று தோன்றும்.
அவை போர்க் குதிரைகளைப்போன்று ஓடும்.
5 அவைகளுக்குச் செவிகொடுங்கள்.
இது மலைகளின் மேல்வரும் இரதங்களின் ஒலி போல் உள்ளது.
இது பதரை எரிக்கும் நெருப்பின் ஒலிபோல் உள்ளது.
அவர்கள் வல்லமை வாய்ந்த ஜனங்கள்.
அவர்கள் போருக்குத் தயாராக இருக்கிறார்கள்.
6 இந்தப் படைக்கு முன்னால் ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள்.
அவர்களின் முகங்கள் அச்சத்தால் வெளுத்தன.
7 வீரர்கள் விரைவாக ஓடுகிறார்கள்.
வீரர்கள் சுவர்களின் ஏறுகிறார்கள்.
ஒவ்வொரு வீரனும் நேராகக் செல்கிறான்.
அவர்கள் தம் பாதையில் இருந்து விலகமாட்டார்கள்.
8 அவர்கள் ஒருவரை ஒருவர் விழச்செய்யமாட்டார்கள்.
ஒவ்வொரு வீரனும் தன் சொந்தப் பாதையில் நடக்கிறான்.
வீரர்களில் ஒருவன் மோதிக் கீழே விழுந்தாலும்
மற்றவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பார்கள்.
9 அவர்கள் நகரத்திற்கு ஓடுகிறார்கள்.
அவர்கள் விரைவாகச் சுவர்மேல் ஏறுகிறார்கள்.
அவர்கள் வீடுகளுக்குள் ஏறுகிறார்கள்.
அவர்கள் ஜன்னல் வழியாகத் திருடர்களைப்போல் ஏறுகின்றனர்.
10 அவர்களுக்கு முன்பு, பூமியும் வானமும் நடுங்குகிறது.
சூரியனும் சந்திரனும் இருளாகிவிடுகின்றன. நட்சத்திரங்கள் ஒளிவீசுவதை நிறுத்துகின்றன.
11 கர்த்தர் தனது படையை உரக்க அழைக்கிறார்.
அவரது பாளையம் மிகப்பெரியது.
அப்படை அவரது கட்டளைக்கு அடிபணிகிறது.
அப்படை மிகவும் வல்லமையுடையது.
கர்த்தருடைய சிறப்பு நாள் உயர்வானதாகவும் பயங்கரமானதாகவும் உள்ளது.
ஒருவரும் இதை நிறுத்த முடியாது.
கர்த்தர் ஜனங்களிடம் மாறும்படிக் கூறுகிறார்
12 இது கர்த்தருடைய செய்தி.
“உங்கள் முழுமனதோடு இப்பொழுது என்னிடம் திரும்பி வாருங்கள்.
நீங்கள் தீமை செய்தீர்கள்.
அழுங்கள், உணவு உண்ணவேண்டாம்.
13 உங்கள் ஆடைகளையல்ல,
இதயத்தைக் கிழியுங்கள்.”
உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வாருங்கள்.
அவர் இரக்கமும் கருணையும் உள்ளவர்.
அவர் விரைவாகக் கோபப்படமாட்டார்.
அவரிடம் மிகுந்த அன்பு உண்டு.
ஒருவேளை அவர் தனது மனதை,
திட்டமிட்டிருந்த பயங்கரமான தண்டனையிலிருந்து மாற்றிக்கொள்ளலாம்.
14 யாருக்குத் தெரியும். கர்த்தர் தனது மனதை மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவேளை அவர் உங்களுக்காக ஆசீர்வாதத்தை விட்டு வைத்திருக்கலாம்.
பிறகு நீங்கள் உங்கள் தேவானாகிய கர்த்தருக்கு தானியக் காணிக்கைகளும்
பானங்களின் காணிக்கைகளும் தரலாம்.
கர்த்தரிடம் ஜெபியுங்கள்
15 சீயோனில் எக்காளம் ஊதுங்கள்.
சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள்.
ஒரு உபவாச காலத்துக்காகக் கூப்பிடுங்கள்.
16 ஜனங்களைக் கூட்டிச் சேருங்கள்.
சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள்.
வயதானவர்களைக் கூட்டிச் சேருங்கள்.
குழந்தைகளையும் கூட்டிச் சேருங்கள் இன்னும் தாயின் மார்பில் பால்குடிக்கும் சிறுகுழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு வாருங்கள்.
தங்களது படுக்கை அறையிலிருந்து
புதிதாய்த் திருமணமான மணமகனும் மணமகளும் வரட்டும்.
17 மண்டபத்துக்கும் பலிபீடத்திற்கும் இடையில் நின்று ஆசாரியர்களும்,
கர்த்தருடைய பணியாளர்களும் அழுது புலம்பட்டும்.
அந்த ஜனங்கள் அனைவரும் இவற்றைச் சொல்லவேண்டும்.
“கர்த்தாவே, உமது ஜனங்கள் மீது இரக்கம் காட்டும்.
உமது ஜனங்களை அவமானப்பட விடாதிரும்.
மற்ற ஜனங்கள் உமது ஜனங்களைக் கேலிச்செய்யும்படி விடாதிரும்.
மற்ற நாடுகளின் ஜனங்கள் ‘அவர்கள் தேவன் எங்கே இருக்கிறார்?’
என்று கேட்டுச் சிரிக்கும்படிச் செய்யாதிரும்.”
கர்த்தர் நாட்டை பழைய நிலைக்குக் கொண்டு வருவார்
18 பிறகு கர்த்தர் தனது நாட்டைப்பற்றி பரவசம் கொண்டார்.
அவர் ஜனங்களுக்காக வருத்தப்பட்டார்.
19 கர்த்தர் தமது ஜனங்களிடம்,
“நான் உங்களுக்குத் தானியம், திராட்சைரசம். எண்ணெய் இவற்றை அனுப்புவேன்.
உங்களுக்கு ஏராளமாக இருக்கும்.
நான் உங்களை மற்ற நாடுகளுக்கிடையில் இனிமேல் அவமானம் அடையவிடமாட்டேன்.
20 இல்லை. வடக்கிலுள்ள ஜனங்களை உங்கள் நாட்டைவிட்டு போகும்படி வற்புறுத்துவேன்.
நான் அவர்களை வறண்ட வெறுமையான நாட்டுக்குப் போகச்செய்வேன்.
அவர்களில் சிலர் கீழ்க்கடலுக்குப் போவார்கள்.
அவர்களில் சிலர் மேற்கடலுக்குப் போவார்கள் அந்த ஜனங்கள் இத்தகைய பயங்கரச் செயல்களைச் செய்தார்கள்.
ஆனால் அவர்கள் மரித்து அழுகிப்போனவற்றைப் போலாவார்கள்.
அங்கே பயங்கரமான துர்வாசனை இருக்கும்!”
என்று சொன்னார்.
இந்த நாடு மீண்டும் புதிதாக்கப்படும்
21 தேசமே, பயப்படாதே.
சந்தோஷமாக இரு.
முழுமையாகக் களிகூரு.
கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
22 வெளியின் மிருகங்களே, பயப்படவேண்டாம்.
வனாந்திரத்தில் மேய்ச்சல்கள் உண்டாகும்.
மரங்கள் கனிகளைத் தரும்,
அத்தி மரங்களும் திராட்சைக் கொடிகளும் மிகுதியான பழங்களைத் தரும்.
23 எனவே மகிழ்ச்சியாய் இருங்கள்.
சீயோன் ஜனங்களே உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷமாய் இருங்கள்,
அவர் நல்லவர், அவர் உங்களுக்கு மழையைத் தருவார்.
அவர் உங்களுக்கு முன்போலவே முன்மாரியையும் பின்மாரியையும் அனுப்புவார்.
24 களங்கள் தானியத்தால் நிரம்பும்.
குடங்கள் திராட்சைரசத்தாலும், என்ணெயாலும் நிரம்பி வழியும்.
25 “கர்த்தராகிய நான் உங்களுக்கு எதிராக எனது படையை அனுப்பினேன்.
உங்களுக்குரிய எல்லாவற்றையும் வெட்டுக்கிளிகளும்,
பச்சைக்கிளிகளும்
முசுக்கட்டைப் பூச்சிகளும்,
பச்சைப் புழுக்களும் தின்றுவிட்டன.
ஆனால் கர்த்தராகிய நான்,
அத்துன்பக் காலத்துக்கானவற்றைத் திருப்பிக் கொடுப்பேன்.
26 பிறகு உங்களுக்கு உண்ண ஏராளம் இருக்கும்.
நீங்கள் நிறைவு அடைவீர்கள்.
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் போற்றுவீர்கள்.
அவர் உங்களுக்காக அற்புதமானவற்றைச் செய்திருக்கிறார்.
எனது ஜனங்கள் இனி ஒருபோதும் வெட்டகப்பட்டுப்போவதில்லை.
27 நான் இஸ்ரவேலோடு இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
வேறு தேவன் இல்லை.
எனது ஜனங்கள் மீண்டும் அவமானம் அடையமாட்டார்கள்.”
அனைத்து ஜனங்களுக்கும் தேவன் தனது ஆவியை கொடுப்பார்
28 “இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன்.
உங்கள் மகன்களும், மகள்களும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்.
உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்.
29 அப்போது, நான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும்
என் ஆவியை ஊற்றுவேன்.
30 நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம், நெருப்பு,
அடர்ந்த புகைபோன்ற அதிசயங்களைக் காட்டுவேன்.
31 சூரியன் இருட்டாக மாற்றப்படும்.
சந்திரன் இரத்தமாக மாற்றப்படும்.
பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும்.
32 பிறகு, கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப்படுவார்கள்.”
சீயோன் மலையின் மேலும், எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள்.
இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும்.
ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள்.
தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம்
142 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன்.
நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
2 நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன்.
நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.
3 என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்.
நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன்.
ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.
4 நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை.
எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.
5 எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன்.
கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம்.
கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.
6 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர்.
என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.
7 இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும்.
அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.
2008 by World Bible Translation Center