M’Cheyne Bible Reading Plan
யூதாவில் யோசியா ஆளத்தொடங்கியது
22 யோசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எதிதாள் ஆகும். இவள் போஸ்காத்திலுள்ள அதாயாவின் மகள் ஆவாள். 2 கர்த்தர் நல்லதென்று சொன்னதன்படியே இவன் வாழ்ந்து வந்தான். தன் முற்பிதாவான தாவீது போலவே தேவனை பின்பற்றினான். யோசியா தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தான். தேவன் விரும்பியவற்றைக் கொஞ்சம் கூட மாற்றவில்லை.
யோசியா ஆலயத்தைப் பழுது பார்க்க கட்டளையிட்டது
3 தனது 18வது ஆட்சியாண்டில் யோசியா, மெசுல்லாமின் மகனாகிய அத்சலியாவின் மகனாகிய சாப்பான் என்னும் செயலாளனை கர்த்தருடைய ஆலயத்திற்கு அனுப்பினான். 4 அவனிடம், “நீ தலைமை ஆசாரியனாகிய இல்க்கியாவினிடம் போ. கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் கொண்டு வந்த பணம் அவனிடம் இருக்கும். அது வாயில் காவலர்கள் ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு சேகரித்துக் கொடுத்த பணம். அதனை கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வரவேண்டும். 5 பிறகு அப்பணத்தை கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும் வேலை செய்கிறவர்களைக் கண்காணிப்பவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அக்கண்காணிப்பாளர்கள் அப்பணத்தை ஆலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். 6 அங்கு தச்சுவேலை செய்பவர்களும், கட்டுபவர்களும், கல் உடைப்பவர்களும் உள்ளனர். அப்பணத்தால் ஆலயத்தைச் செப்பனிட மரமும் கல்லும் வாங்க வேண்டும். 7 வேலைக்காரர்களுக்குக் கொடுக்கும் பணத்துக்குக் கணக்கு கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சொல்” என்றான்.
சட்டங்களின் புத்தகம் ஆலயத்தில் கண்டெடுக்கப்படல்
8 செயலாளராகிய சாப்பானிடம் தலைமை ஆசாரியர் இல்க்கியா, “கர்த்தருடைய ஆலயத்தில் சட்டங்களின் புத்தகத்தை கண்டெடுத்தேன்!” என்று கூறினான். அவன் சாப்பானிடம் அதனைக் கொடுத்தான். சாப்பான் அதனை வாசித்தான்.
9 செயலாளராகிய சாப்பான் அரசனான யோசியாவிடம் வந்து, “உங்கள் வேலைக்காரர்கள் ஆலயத்திலுள்ள பணத்தையெல்லாம் சேகரித்துவிட்டார்கள். அதனை அவர்கள் வேலையைக் கண்காணிப்பவர்களிடம் கொடுத்துவிட்டார்கள்” என்றான். 10 பிறகு சாப்பான் அரசனிடம், “ஆசாரியனான இல்க்கியா என்னிடம் இந்த புத்தகத்தைக் கொடுத்தான்” என்று கூறி அரசனுக்கு அதனை வாசித்துக்காட்டினான்.
11 அச் சட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்டதும் (துக்கத்தின் மிகுதியால்) அரசன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். 12 பிறகு ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகனான அகீக்காமுக்கும், மிகாயாவின் மகனான அக்போருக்கும் செயலாளரான சாப்பானுக்கும் அரசனின் வேலைக்காரனான அசாயாவுக்கும் அரசன் ஆணைகள் இட்டான். 13 அரசன் இவர்களிடம், “சென்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேளுங்கள். எனக்காகக், கர்த்தரிடம் இந்த ஜனங்களுக்காகவும் யூத நாட்டிற்காகவும் கேளுங்கள். இப்புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப்பற்றி கேளுங்கள். கர்த்தர் நம்மீது கோபமாக இருக்கிறார். ஏனென்றால் நமது முற்பிதாக்கள் இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றை கவனிக்காமல் போனார்கள். நமக்காக எழுதப்பட்ட இதன்படி அவர்கள் செய்யவில்லை!” என்றான்.
யோசியாவும் உல்தாள் எனும் பெண் தீர்க்கதரிசியும்
14 எனவே இல்க்கியா எனும் ஆசாரியனும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும் அசாயாவும், பெண் தீர்க்கதரிசி உல்தாவிடம் சென்றனர். அவள் அர்காசின் மகனான திக்வாவின் மகனான சல்லூம் என்பவனின் மனைவி. அவன் ஆசாரியர்களின் துணிகளுக்குப் பொறுப்பானவன். அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள். அவர்கள் போய் அவளோடு பேசினார்கள்.
15 பிறகு உல்தாள் அவர்களிடம், “என்னிடம் உங்களை அனுப்பியவனிடம் போய், இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறதாவது: 16 ‘இந்த இடத்திற்குத் துன்பத்தைக் கொண்டு வருவேன். இங்குள்ள ஜனங்களுக்கும் துன்பத்தைக் கொண்டு வருவேன். யூத அரசனால் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள துன்பங்கள் இவையே. 17 யூத ஜனங்கள் என்னை விட்டுவிட்டு அந்நியத் தெய்வங்களுக்கு நறுமணப்பொருட்களை எரிக்கின்றனர். அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை உண்டாக்குகிறார்கள். அவர்கள் ஏராளமான விக்கிரகங்களை ஏற்படுத்தியுள்ளனர். அதனால்தான் நான் இவர்களுக்கு எதிராக என் கோபத்தைக் காட்டுகிறேன். என் கோபம் தடுக்க முடியாத நெருப்பைப் போன்று விளங்கும்!’
18-19 “யூதாவின் அரசனாகிய யோசியா, உங்களை அனுப்பி கர்த்தருடைய ஆலோசனைகளைக் கேட்கிறான். அவனிடம் இவற்றைக் கூறுங்கள்: ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நீங்கள் கேள்விப்பட்ட செய்திகளைக் கூறுகிறார். இந்த நாட்டைப் பற்றியும், இங்கு வசிப்பவர்களைப்பற்றியும் நான் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் இதயம் மென்மையாக ஆயிற்று. எனவே, அதைக் கேட்டதும் நீங்கள் மிகவும் வருத்தம் கொண்டீர்கள். இந்த இடத்தில் (எருசலேமில்) பயங்கரமான சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்று சொல்லி இருக்கிறேன். உன் துக்கத்தைப் புலப்படுத்த உன் ஆடையைக் கிழித்துக்கொண்டு அழத்தொடங்கினாய். அதற்காகத் தான் நீ சொன்னதைக் கேட்டேன்’. கர்த்தர் இதைச் சொன்னார். 20 ‘எனவே, இப்போது உன்னை உனது முற்பிதாக்களிடம் சேர்ப்பேன். நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய், நான் எருசலேமிற்குத் தரப்போகும் துன்பங்கள் எல்லாவற்றையும் உன் கண்கள் பார்க்காது’ என்று சொல்லுங்கள்” என்றாள்.
பிறகு இதனை அரசனிடம் போய் ஆசாரியனாகிய இல்க்கியா, அகீக்கா, அக்போர், சாப்பான், அசாயா ஆகியோர் சொன்னார்கள்.
4 தேவன் அந்த மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இன்றும் நம்மிடம் உள்ளது. தேவனுடைய இளைப்பாறுதலில் நாம் பிரவேசிக்க முடியும் என்பதே அந்த வாக்குறுதி. ஆகையால் உங்களில் யாரும் இவ்வாக்குறுதியைப் பெறுவதில் தவறக் கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். 2 இரட்சிக்கப்படும் வழி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே நமக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன்படாமல் போயிற்று. ஏன்? ஏனென்றால் அவர்கள் அதனை விசுவாசமில்லாமல் கேட்டனர். 3 விசுவாசித்த நம்மால் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியும். தேவன் சொன்னதுபோல,
“எனவே நான் கோபத்தோடு,
‘அவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது’ என்று ஆணையிட்டேன்” (A)
தேவன் இதைச் சொன்னார். ஆனால் இவ்வுலகத்தை உருவாக்கின நேரமுதல் தம் வேலையை தேவன் முடித்தார். 4 வாரத்தின் ஏழாவது நாளைப் பற்றி தேவன் பேசினார் என்று எழுதப்பட்டிருக்கிறது, “ஏழாவது நாளில் தேவன் அனைத்து வேலைகளில் இருந்தும் ஓய்வு எடுத்தார்.” 5 மேலும் அதே பகுதியில், மீண்டும், “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியாது” என்றும் தேவன் கூறியிருக்கிறார்.
6 சிலர் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையப் போகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முதலில் நற்செய்தியைக் கேட்டவர்கள் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையவில்லை. அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பது தான் காரணம். 7 எனவே தேவன் இன்னொரு நாளைத் திட்டமிட்டார். அது “இன்று” என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாளைக் குறித்து தாவீதின் மூலமாக ஏற்கெனவே மேற்கோள் காட்டிய பகுதியில் தேவன் பேசுகிறார்,
“இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால்,
தேவனுக்கு எதிராக நீங்கள் கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்.” (B)
8 தேவனுடைய வாக்குறுதிப்படி அவரது இளைப்பாறுதலுக்குள் யோசுவா மக்களை வழி நடத்தவில்லை என்பது தெரியும். ஏனென்றால் பின்னர் இளைப்பாறுதலுக்கு தேவன் “இன்று” என இன்னொரு நாளைப் பற்றிக் கூறியிருக்கிறாரே. 9 தேவனுடைய பிள்ளைகளுக்கு இளைப்பாறுதலுக்குரிய நாள் வர இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. 10 தேவன் தனது வேலைகளை முடித்த பிறகு ஓய்வெடுத்தார். தேவனைப் போன்று தம் பணிகளை முடித்தவர்களே தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைந்து ஓய்வெடுக்க முடியும். 11 எனவே தேவனுக்குக் கீழ்ப்படியாததற்காகப் பாலைவனத்தில் விழுந்து இறந்த உதாரணங்களைப் பின்பற்றி நம்மில் யாரும் விழுந்து விடாதபடி நாம் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழையக் கடினமாக முயற்சிப்போம்.
12 தேவனுடைய வார்த்தையானது எப்பொழுதும் உயிரோடு இருப்பதும், செயல்படுவதுமாகும். அது இரு புறமும் கூரான வாளைவிட மிகவும் கூர்மையானது. அது ஆன்மாவையும், ஆவியையும், எலும்புகளையும், கணுக்களையும் வெட்டிப் பிரிக்கிறது. அது நம் உள்ளான மனதின் எண்ணங்களையும், நம் இதயம் கொண்டுள்ள கருத்துக்களையும் நியாயம் தீர்க்கிறது. 13 தேவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை. அனைத்தையும் அவரால் தெளிவாகக் காணமுடியும். அவருக்கு முன் எல்லாமே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழ்ந்த முறையை அவரிடம் விவரிக்க வேண்டும்.
தேவனுக்கு முன் வர நமக்கு இயேசு உதவுகிறார்
14 நமக்கென்று ஒரு பெரிய பிரதான ஆசாரியர் உண்டு. அவர் பரலோகத்தில் தேவனோடு இருக்கப் போயிருக்கிறார். அவரே தேவனுடைய குமாரனாகிய இயேசு. எனவே நாம் நமது விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் இருப்போமாக. 15 பிரதான ஆசாரியராகிய இயேசுவால் நமது பலவீனங்களைப் புரிந்துகொள்ள முடியும். பூமியில் வாழ்ந்தபோது அனைத்து வகைகளிலும், நம்மைப் போலவே அவரும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் பாவமே செய்யவில்லை. 16 எனவே, நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவனுடைய கிருபையும் இரக்கமும் நமக்குக் கிடைக்கும் வகையில் கிருபை உள்ள சிம்மாசனத்தை நாம் அணுகலாம்.
வெட்டுக்கிளிகள் விளைச்சலை அழிக்கும்
1 பெத்துவேலின் மகனாகிய யோவேல் கர்த்தரிடமிருந்து இந்த செய்தியைப் பெற்றான்.
2 தலைவர்களே, இந்தச் செய்தியைக் கேளுங்கள்.
இந்த நாட்டில் வாழ்கின்ற ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
உங்கள் வாழ்நாளில் இதற்கு முன்பு இது போல் நடந்திருக்கிறதா? இல்லை.
உங்கள் தந்தைகளின் வாழ்நாளில் இதுபோல் நடந்திருக்கிறதா? இல்லை.
3 நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் இவற்றைக் கூறுங்கள்.
உங்கள் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகளிடம் சொல்லட்டும். உங்கள் பேரக்குழந்தைகள் அதற்கு அடுத்தத் தலைமுறையிடம் சொல்வார்கள்.
4 பச்சைப்புழு விட்டதை
வெட்டுக்கிளி தின்றது.
வெட்டுக்கிளி விட்டதைப்
பச்சைக் கிளி தின்றது.
பச்சைக்கிளி விட்டதை
முசுக்கட்டைப் பூச்சி தின்றது.
வெட்டுக்கிளிகளின் வருகை
5 குடியர்களே, விழித்து எழுந்து அழுங்கள்.
திராட்சைரசத்தைக் குடிக்கும் ஜனங்களே அழுங்கள்.
ஏனென்றால் உங்கள் இனிமையான திரட்சைரசம் முடிந்தது.
நீங்கள் இனி அந்தத் திராட்சைரசத்தின் சுவையைப் பெறமாட்டீர்கள்.
6 எனது தேசத்திற்கு எதிராகப் போரிட ஒரு பெரிய வல்லமை வாய்ந்த நாடு வந்தது.
அதன் வீரர்கள் எண்ணமுடியாத அளவிற்கு அநேகராக இருந்தார்கள்.
அவர்களது ஆயுதங்கள் சிங்கத்தின் பற்களைப் போன்று கூர்மையுள்ளதாகவும்,
சிங்கத்தின் தாடையைப்போன்று வல்லமையுள்ளதாகவும் இருந்தது.
7 அது என் திராட்சைச் செடியை அழித்தது.
அதன் நல்ல கொடிகள் வாடி அழிந்தது.
அது என் அத்திமரத்தை அழித்தது.
பட்டைகளை உரித்து எறிந்துவிட்டது.
ஜனங்களின் அழுகை
8 மணமுடிப்பதற்குத் தயாராக இருந்த இளம் பெண்
மரித்துப்போன தன் மணவாளனுக்காக அழுவது போன்று அழுங்கள்.
9 ஆசாரியர்களே, கர்த்தருடைய பணியாளர்களே, அழுங்கள்.
ஏனென்றால், கர்த்தருடைய ஆலயத்தில் இனிமேல் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையும் இருக்கப்போவதில்லை.
10 வயல்வெளிகள் பாழாயின. பூமி கூட அழுதுகொண்டிருக்கிறது.
ஏனென்றால் தானியம் அழிக்கப்பட்டிருக்கிறது.
புதிய திராட்சைரசம் வறண்டிருக்கிறது.
ஒலிவ எண்ணெய் போய்விட்டது.
11 உழவர்களே, துக்கமாயிருங்கள்.
திராட்சை விவசாயிகளே சத்தமாக அழுங்கள்.
கோதுமைக்காகவும் பார்லிக்காகவும் அழுங்கள்.
ஏனென்றால் வயல்வெளியில் அறுவடை இல்லாமல் போனது.
12 திராட்சைக்கொடிகள் காய்ந்துவிட்டன.
அத்திமரம் அழிந்துகொண்டிருக்கிறது.
மாதுளை, பேரீச்சை, கிச்சிலி
மற்றும் அனைத்து மரங்களும் வாடிவிட்டன.
ஜனங்களின் மகிழ்ச்சி மரித்துப்போயிற்று.
13 ஆசாரியர்களே, உங்களது துக்கத்திற்குரிய ஆடையை அணிந்துகொண்டு உரக்க அழுங்கள்.
பலிபீடத்தின் பணியாளர்களே, உரக்க அழுங்கள். எனது தேவனுடைய பணியாளர்களே,
நீங்கள் துக்கத்தின் ஆடைகளோடு தூங்குவீர்கள்.
ஏனென்றால் தேவனுடைய ஆலயத்தில் இனிமேல் தானிய காணிக்கையும் பானங்களின் காணிக்கையும் இருப்பதில்லை.
வெட்டுக்கிளிகளின் பேரழிவு
14 உபவாசமிருக்க வேண்டிய சிறப்பு நேரம் இருக்குமென்று ஜனங்களுக்கு அறிவியுங்கள் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஜனங்களைக் கூட்டுங்கள். தலைவர்களைக் கூப்பிடுங்கள். நாட்டில் வாழ்கிற எல்லா ஜனங்களையும் சேர்த்துக் கூப்பிடுங்கள். அவர்கள் அனைவரையும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்கு வரவழைத்து கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள்.
15 துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் அருகில் இருக்கிறது. அப்போது, தண்டனையானது சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து ஒரு சங்காரம் போன்று வரும். 16 நமது உணவு போய்விட்டது. நமது தேவனுடைய ஆலயத்திலிருந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் போய்விட்டன. 17 நாங்கள் விதைகளை விதைத்தோம். ஆனால் விதைகள் மண்ணில் காய்ந்து மரித்துக்கிடக்கின்றன. நமது செடிகள் எல்லாம் காய்ந்து மரித்துப்போயின. நமது களஞ்சியங்கள் வெறுமையாகவும் விழுந்தும் கிடக்கின்றன.
18 மிருகங்கள் பசியோடு தவிக்கின்றன. மாட்டு மந்தைகள், அலைந்து திரிந்து கலங்குகின்றன. அவற்றுக்கு மேய்வதற்கு புல் இல்லை. ஆட்டு மந்தைகளும் மரித்துக்கொண்டிருக்கின்றன. 19 கர்த்தாவே நான் உம்மை உதவிக்காக அழைக்கின்றேன். நெருப்பானது நமது பசுமையான வயல்களை வனாந்தரமாக்கிவிட்டது. வயல்வெளிகளில் உள்ள மரங்களை எல்லாம் நெருப்புச் ஜுவாலைகள் எரித்துவிட்டன. 20 காட்டுமிருங்கள் கூட உமது உதவியை நாடுகின்றன. ஓடைகள் வற்றிவிட்டன. அங்கு தண்ணீரில்லை. நெருப்பானது நமது பச்சை வயல்வெளிகளை வனாந்தரமாக்கிவிட்டது.
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்
140 கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும்.
கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
2 அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.
3 அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை.
அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும்.
4 கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள்.
5 அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள்.
என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள்.
அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள்.
6 கர்த்தாவே, நீரே என் தேவன்.
கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
7 கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர்.
நீரே என் மீட்பர்.
போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர்.
8 கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும்.
அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும்.
9 கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும்.
அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும்.
10 நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும்.
என் பகைவர்களை நெருப்பில் வீசும்.
அவர்களைக் குழியில் தள்ளும்,
அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும்.
11 கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும்.
அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும்.
12 கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன்.
தேவன் திக்கற்றோருக்கு உதவுவார்.
13 கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று
141 கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன்.
நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும்.
விரைவாக எனக்கு உதவும்!
2 கர்த்தாவே, என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும்.
எரியும் நறுமணப் பொருள்களின் பரிசைப் போலவும், மாலையின் பலியாகவும் அது இருக்கட்டும்.
3 கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப்பாட்டோடிருக்க எனக்கு உதவும்.
நான் கூறுபவற்றில் கவனமாக இருக்க எனக்கு உதவும்.
4 தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும்.
தீயோர் தவறுகளைச் செய்யும்போது அவர்களோடு சேராதிருக்குமாறு என்னைத் தடுத்துவிடும்.
தீயோர் களிப்போடு செய்யும் காரியங்களில் நான் பங்குகொள்ளாதிருக்கும்படி செய்யும்.
5 நல்லவன் ஒருவன் என்னைத் திருத்த முடியும்.
அது அவன் நற்செயலாகும்.
உம்மைப் பின்பற்றுவோர் என்னை விமர்சிக்கட்டும்.
அது அவர்கள் செய்யத்தக்க நல்ல காரியமாகும்.
நான் அதை ஏற்றுக்கொள்வேன்.
ஆனால் தீயோர் செய்யும் தீயவற்றிற்கெதிராக நான் எப்போதும் ஜெபம் செய்கிறேன்.
6 அவர்களின் அரசர்கள் தண்டிக்கப்படட்டும்.
அப்போது நான் உண்மை பேசினேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
7 ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள்.
அவ்வாறே கல்லறையில் எங்கள் எலும்புகளும் எங்கும் பரந்து கிடக்கும்.
8 என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன்.
நான் உம்மை நம்புகிறேன்.
தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும்.
9 தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள்.
அவர்கள் கண்ணிகளில் நான் விழாதபடி செய்யும்.
அவர்கள் என்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தாதபடி பாரும்.
10 நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட
ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும்.
2008 by World Bible Translation Center